Thursday, 9 June 2016

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 7.

ராசிக்கு ஆங்கிலம் தெரியுமே!

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --6 படிக்க இங்கே க்ளிக்கவும்.

image courtesy-wikkimedia commons.


ராசியும், விஷ்ணுவும்  அமெரிக்கா வந்தது,அவர்கள் மகன் ராஜேஷ், மருமகள் ஆர்த்தி  இருவருக்குமே, மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை விடவும் பேரன் அர்ஜுன்,  தாத்தா-பாட்டி பாச மழையில் நனைந்துக் கொண்டிருந்தான் .

ராஜேஷ் இருவரையும் வாராவாரம் எங்காவது  அழைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான் . அங்கிருக்கும் சுத்தம், ஒழுங்கு, விண்ணை முட்டும் கட்டடங்கள்,  ஹாரன் சத்தமே இல்லாமல் ஓடும் வண்டிகள், முக்கியமாக போக்குவரத்தில், வண்டிகளுக்கிடையே இருக்கும் நான்கைந்து அடி இடைவெளி  ......ஆகிய விஷயங்கள் அவர்களை மலைக்க வைத்தன.

சில விஷயங்கள் அவர்களை சற்றே பயமுறுத்தவும் செய்தன. இல்லை என்று சொல்ல முடியாது. அதிலொன்று 911. அந்தப் பயத்தை  அவர்களிடையே உண்டு பண்ணியதில் பெரும் பங்கு அவர்கள் பேரன் அர்ஜுனையே சாரும் . அவன் பள்ளியில் சொல்வதை  இவர்களுக்கும் சொல்லிக் கொண்டிருந்தான் எனலாம்.

எப்பொழுது நடைப் பயிற்சிக்கு ராசியும் விஷ்ணுவும் கிளம்பினாலும், " பாட்டி 911 மறக்காதே. என்ன பிரச்சினையானாலும் 911 கூப்பிட்டு விடு . நீயும் எந்தப் பிரச்சினையிலும் போய்   மாட்டிக் கொள்ளாதே அப்புறம் அவர்கள் 911ற்கு போன் செய்து விடுவார்கள் .  என்று பயமுறுத்தி வைத்திருந்தான்.

பள்ளியில் தற்காப்பிற்காக சின்ன குழந்தைகளுக்கு,  சொல்லிக் கொடுப்பதைப் பற்றி   ஆச்சர்யப்படாமல் இருக்க முடிவில்லை .
அன்றொரு  நாள் இப்படித்தான் அக்டோபர் மாதம் முதல் வாரம்.. "யார் இந்த மரங்களுக்கு மருதாணி வைத்துவிட்டது?  எல்லா மரங்களும் இப்படி  அரக்கு சிவப்பாக மாறியிருக்கிறதே!" என்று நினைத்துக் கொண்டே  அவற்றை 'ஆ' வென்றுப் பார்த்தபடி  நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாள் ராசி. மகன் ராஜேஷ் குடியிருக்கும் வளாகத்திற்குள் தான் நடப்பாள். விஷ்ணு வரவில்லை என்று சொல்லி விட்டதால் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாள் .

சட்டென்று எதிரே பார்த்தால்  பக்கத்து  வீட்டுப் பெண்மணி. தன்  இரண்டு வயதுப் பெண்ணை  அழைத்துக் கொண்டு நடந்து வந்துக் கொண்டிருந்தாள் . அப்பெண்மணியின் பெயர் லூசி என்று தெரியும். ஆனால் அதற்கு மேல் அவளிடம் ராசி பேசியது இல்லை.

ராசிக்கோ ஆங்கிலமே தகராறு. அதிலும் அமெரிக்கர்கள்  பேசுவது புரிவதேயில்லை என்று புலம்புவாள். அது ஏன்  பல்லிடுக்காலேயே பேசுகிறார்கள். இவர்கள் பேசும் போது கரண்டிக் காம்பினை விட்டு நெம்பினால்  சற்றுப் புரியுமோ என்னமோ என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வாள்.   வெளியே சொல்வதில்லை.. எதற்கு வம்பு சொல்லுங்கள். எதையெடுத்தாலும் 911 என்று பயமுறுத்துகிறார்கள்.

எதிரே  இரண்டு வயது பெண்னுடன் நடந்து வரும் லூசி, ராசியைப் பார்த்து 'ஹாய்' என்று சொல்லவும், ராசியும் பதிலுக்கு  'ஹாய்'
 என்று சொல்லி வைத்தாள் . லூசியின்  பெண்ணைப் பார்த்தாள் ராசி.  எதற்காகவோ  அழுதுக் கொண்டிருந்தது அக்குழந்தை.

அரை குறை ஆங்கிலத்தில்   " ஒய்  க்ரை? " ராசி கேட்கவும், லூசி  படபடவென்று  ஆங்கிலத்தில் சொன்னதில்  கொஞ்சமே, கொஞ்சம் புரிந்தது  ராசிக்கு.

" அட.ப்  பாவமே!" நினைத்துக் கொண்டே  நகர்ந்தாள்  ராசி.

ஒரு மணிநேர நடைப்  பயிற்சியை முடித்து விட்டு , வீட்டிற்குத் திரும்பினாள்  ராசி.

ஹாலில், ராசியின் கணவர் விஷ்ணு, ராஜேஷ், ஆர்த்தி,  டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். பேரன் அர்ஜுன், மட்டும் கையில் ஒரு கார் பொம்மையை வைத்துக் கொண்டு  டர் .......டர் என்று கார் ஓட்டிக் கொண்டிருந்தான்.

ராசி உள்ளே வந்து ஆசுவாசபடுத்திக் கொண்டாள் .

ஆர்த்தி  "மாமி ஜூஸ் குடிக்கிறீர்களா?" என்று கேட்கவும் ,

"ஒரு டம்ளர் கொடேன்."  என்று ராசி சொல்ல

விஷ்ணுவோ நமுட்டுச்  சிரிப்பு சிரித்தார்.

" இப்ப எதற்கு  சிரிப்பு ?" ராசி கோபமாக கேட்டாள் .

" இல்லை நினைத்துப் பார்த்தேன். ஒரு மணி நேரம் நடந்து குறைத்ததை  , இரண்டு நிமிடத்தில் சரி செய்து விடுவாயே என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது."

"ஆனாலும் ராசி நீ பத்திரமாகத் திரும்பி வரவேண்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா?"

" ஏன்?  என்ன ஆகிவிடும் எனக்கு. இந்த வளாகத்தைத் தாண்டுவதேயில்லையே நான் "  என்று புருவம் நெரித்தாள் ராசி.

"அதற்கில்லை.  உன்னால் பேசாமலே இருக்க முடியாதே . யாரிடமாவது எதையாவது உளறி வம்பில் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணுமே என்று தான் , " இது விஷ்ணு.

"ஆமாம் . உங்களுக்கு எப்பவுமே நக்கல் தான் ." சலித்துக் கொண்டே ராசி ஜுஸ் குடித்து விட்டு டம்ளர் வைக்க உள்ளே கிளம்பினாள் .

அதற்குள் அவளுக்கு லூசி நினைவு வரவே ." ஆர்த்தி இன்று லூசியைப் பார்த்தேன்  "

"அப்படியா?   பக்கத்து வீட்டு லூசி அங்கே  எங்கே வந்தாள் ? "ஆர்த்தி  விசாரிக்க ,

விஷ்ணுவோ, " அதானே பார்த்தேன்.  பேசாமல் இருக்க மாட்டாயே என்று நினைத்தேன். எதிலேயும் மாட்டிக் கொள்ள வில்லையே   ," பாதி கிண்டலுடன், பாதி நிஜமான அக்கறையுடன்   கேட்க ஆர்வமானார்.

ராசி விஷ்ணுவைப் பார்த்து  ஒரு முறைப்புடன், கழுத்தை வெட்டிக் கொண்டாள் .

ராசி , "லூசி , அவளுடைய இரண்டு வயதுப் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தாள் ."

" அவள் பெண் குழ்நதை என்ன அழகு தெரியுமா?  அந்தப் பெண் குழந்தையின் பேர் "ரோஸ்" என்று  வைத்திருக்கிரார்களாம்.. சரியான பேர் தான் . ரோஜாப்பூ  கலரில் இருக்கிறது. , பிங்க் கலரில்  கவுன் மாட்டிக் கொண்டு.......  ஹ ....ப்பா ....... என்ன அழகு ?  கை விரல்கள் எல்லாம் நம் ஊட்டிக் கேரட் மாதிரில்ல  இருக்கு". ."."

"அவளிடம் பேசினாயா " ராஜேஷ் அவசரமாகக்  கேட்டான். அவன் பயம் அவனுக்கு. குழந்தைகளுக்கு அமெரிக்கர்கள்  கொடுக்கும் முக்கியத்துவம்  சொல்லி மாளாது. விளையாட்டாக ஏதாவது சொன்னாலே , உடனே என் குழந்தை மன  நிலையில் மாற்றம் தெரிகிறது . அது நீ சொன்ன ஒரு வார்த்தையால் தான் என்று கோர்ட்டிற்கு நம்மை இழுத்து விடுவார்கள்.  ராசி  எதையாவது விளையாட்டாக  சொல்லி,  வம்பாகி விடப் போகிறதே என்று ராஜேஷ் பயந்தான்.

" நான் ஒரு வம்பையும் விலைக்கு வாங்கவில்லை. ஒரு ஹாய் சொன்னேன் அவ்வளவு தான்."

"கடவுளுக்குக் கண்ணில்லையோ என்னமோ? எல்லாம் அவரவர் விதிப்பயன் "....என்று  ராசி அங்கலாய்க்க......

 குழம்பிய எல்லோரும் ராசியையே பார்க்க  அவள் தொடர்ந்தாள் ,

" ஆனால்  பாருடா ராஜேஷ் அவ்வளவு அழகானப் பெண் குழந்தைக்கு....."

"ஏன்  ? என்னாச்சு? " விஷ்ணு நிஜ அக்கறையுடன் வினவ

" அந்தப் பெண் லூஸாம் . "

" லூஸா  " கோரசாக  கத்தினர் ராஜேஷும் ஆர்த்தியும்.

" யாரு லூஸூ ?" ராஜேஷ் குரலில் பயம்  தொனித்தது .

" லூசி  பெண் தான். " ராசி சொன்னாள் .

" அப்படியெல்லாம் ஒண்ணுமிருக்காது அம்மா .அதுவுமில்லாமல் இரண்டு வயதுக் குழந்தைக்குப் பைத்தியம் என்று சொன்னால் நம்ப முடியுமா . நீயே சொல்லு." என்று  ராஜேஷ் சொல்லவும்.

'பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லைடா ராஜேஷ். "

"பின்னே எப்படி சொல்கிறாய் அது லூஸு  என்று....."

"நான் சொல்லலைடா.. லூசி  தான் சொன்னாள்  ."

" என்ன சொன்னாள் ? நடந்து போகும் உன்னை நிறுத்தி என் பொண்ணு லூஸு ன்னு  உன்கிட்டே வந்து  சொன்னாளா ?   யாரிடம் கதை விடுறே? நீ ஏதாவது அந்த மாதிரி கேட்டு விட்டு என்னையும் சேர்த்து வம்பில் மாட்டி விடப்போறே போலிருக்கு ." என்று தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தான்.

" நான் ஏண்டா பொய் சொல்லப் போகிறேன்.  அவள் தான் சொன்னாள் . சொல்லாமல் எனக்கெப்படித் தெரியும் சொல்லு."

"நீ ஏதோ வம்பில் மாட்டாமல் இந்தியா திரும்ப மாட்டேன்னு நினைக்கிறேன் ." ராஜேஷ் கோபமாகக் கத்த

இப்பொழுது விஷ்ணு, முன்னாடி வந்து கரகாட்டக் காரனில் வரும் திருமதி கோவை சரளா போல்  கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தார் .

"நீ பார்த்தது லூசி  தானா?"

"ஆமாம்."

"அவள் பெண்ணையும் பார்த்தியா ?

"ஆமாம் ஹாய் சொன்னேன்."

"பிறகு என்ன நடந்தது ராசி....சொல்லேன்."

" அந்தச் சின்னக் குழந்தை அழுதுக் கொண்டேயிருந்தது."

 பிறகு.....

"எதற்கு அழுகிறாள் " என்றுக் கேட்டேன். அதற்குத் தான் அவள் சொன்னாள்

"அவள் பைத்தியம் "  என்று.

" அவள் சொன்னதை அப்படியே சொல் ராசி" என்று விஷ்ணு  வக்கீல் போன்று குறுக்கு கேள்வி கேட்க ,

"படபடவென்று எதையோ லூசி சொன்னாள் . எதுவும் புரியவில்லை. ஆனால் கடைசியில் குழந்தையைக் காண்பித்து " ஷி இஸ் மேட்(mad) அட் மீ " என்று சொன்னாள் . " மேட்(mad) "  என்று சொன்னால் பைத்தியம் தானே. அதான் சொன்னேன்.

பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ,ஆர்த்தி,' "  மாமி அவள்  ரோஸ் பைத்தியம் என்று சொல்லவில்லை. கோபமாயிருக்கிறாள்  என்று சொல்லியிருக்கிறாள்."

" இப்பொழுது  ராசிக்குக் கோபம் வந்தது. எனக்கு அவ்வளவா ஆங்கிலம் வராது தான் ஆர்த்தி.. அதற்காக  "மேட்"  என்றால் கோபம் என்று சொல்கிறாயே. என்னை வைத்துக் காமெடி செய்யறே இல்ல. நான் உன் மாமியார் நினைவில் வைத்துக் கொள். நான் வேண்டுமானால்  டிக்ஷனரியைக்  காட்டட்டுமா? " என்று ராசி கோபமாகக் கத்த ,

விஷ்ணு வந்து ராசி தோளைத் தொட்டு " கத்தாதே ராசி . ஆர்த்தி சொல்வது சரி." இந்த ஊர் சொல்வடை  இது. "

"நான் விளக்குகிறேன் வா."

ஆனால் ராசிக்கு மட்டும் இது விளங்கவேயில்லை. " எனக்கு ஆங்கிலம்அவ்வளவா  தெரியாது என்பதால் தானே  எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள் . . அடுத்த  வருடம் இங்கே வருவதற்குள்  ஆங்கிலம்  பேசக் கற்றுக்  கொண்டு ,எப்படி ஆங்கிலத்தில் விளாசிக் காட்டுகிறேன் பார் " என்று சொல்லிக் கொண்டாள் .

ஆர்த்தி அந்த இடத்திலேயே இருக்கவில்லை. வரும் சிரிப்பை அடக்க முடியாமல் நகர்ந்தாள் .

"  ஷி இஸ் மேட் அட் மீ( she is mad at me) " என்பதற்கு என்ன அர்த்தம் என்று ராசிக்கு நீங்களே சொல்லுங்களேன்.

பி.கு : சொல்ல மறந்து விட்டேனே . இந்தக்  கட்டுரையை பத்திரிகை ஒன்றிற்கு அனுப்பி வைத்தேன் . அவர்கள் வெளியிட்டதாகத் தெரியவில்லை.
"பரவாயில்லை  விடு ராஜி. அவர்கள் வெளியிடவில்லை  என்றால் இழப்பு அவர்களுக்குத் தானே  தவிர உனக்கில்லை. பத்திரிக்கையின் விற்பனையை பலமடங்காக்கியிருப்பாய். தவற விட்டு விட்டார்கள்.
நீ அதை வைத்து அரட்டை அடித்து விடு" என்று என்னவர் ( கின்டலாக) சொல்ல, அதை நானும் சிரமேற்கொண்டு விட்டேன்.
 கணவர் சொல்லைத் தட்டலாமா? என்ன ?




உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்