Wednesday 5 October 2016

ஜெய் ஹிந்த் !

image courtesy-google.
இன்று காலை  என் கணவர் வெளியே சென்று நெடு நேரமாகியும் வரவில்லை செல்பேசியில்  தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ரிங் போனது .அவர்  எடுக்கவில்லை.  மீண்டும்  எண்களை அமுத்தினேன்  பதிலில்லை. இரண்டு மூன்று முறை முயன்ற பின் என் மனம் "Panic Button"ஐ  அழுத்தியது.

 சரியான நம்பர் தானா என்று சரி பார்த்து ,  மீண்டும் முயன்றேன். இப்பொழுது " சந்தாதாரர்  தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். சிறிது நேரத்திற்குப் பிறகு டயல் செய்யவும் "  என்கிற செய்தியை, தேனினும் இனிய குரலில் ஒரு  பெண்மணி  , கீறல் விழுந்த ரிக்கார்டாய்  சொல்லவும் , எரிச்சலானேன்.

சரி...... எஸ்.எம்.எஸ். .....அனுப்பி வைப்போம் என்று  " Where are you?
 " Are you ok?"  என்று ஒரு பத்து குறுஞ்செய்தி அனுப்பியாகி விட்டது .

இது  போதாது என்று  "வாட்ஸ் அப்" வழியாக  தொடர்பு கொள்ள முயலவும்,
"டிங் டாங்" என்று வாசல் மணியொலிக்கவும்  சரியாக இருந்தது.

வந்தவர் என்னவர் தான். அதற்குப் பிறகு எங்களுக்குள், என்ன மாதிரி சண்டை நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

சண்டை முடிந்து சமாதானபின் , கணவர் இணைய செய்தி ஒன்றை என்னிடம் கொடுத்து , " இரண்டு மணி நேரம் என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று  பதை பதைத்தாயே.   இதைப் படித்து விட்டு அப்புறம் சொல்." சொன்னார்.

ராணுவ அதிகாரியின் மனைவி ஒருவர்பற்றிய செய்தி அது.(பெயர் மட்டுமே கற்பனை)

ராணுவ அதிகாரியின் மனைவி ரேணுகாவும் அவர் கணவரும்  கல்லூரியில் படிக்கும் போது உருகி, உருகி  காதலித்துத் திருமணம் புரிந்தவர்கள்.  கணவர் ராணுவ அதிகாரியாகப் போகிறார் என்று தெரிந்தே, ரேணுகா காதல் திருமணம் புரிந்துக் கொண்டிருக்கிறார்.

திருமணமானப் புதிதில் ரேணுகாவும் ,கணவருடன் அவர் பணியிடங்களுக்குக் கூடவே பயணித்திருக்கிறார். அதெல்லாம் சிறிது காலத்திற்குத் தான். பிறகு ரேணுகா  தன் தொழிலிற்காகவும் , மகளின் படிப்பிற்காகவும்  மெட்ரோ நகரத்திலியே இருக்க முடிவெடுக்கிறார்.   கணவரோ காஷ்மீரப் பனிமலையில்  தேசப் பணியில் தவமாக இருக்க  நேரிடுகிறது.

ரேணுகா சொல்கிறார்,"நான்கு மாதத்திற்கு , ஒரு தடவை  , பதினைந்து  நாள் தான் என் கணவர், குடும்பத்துடன்  இருக்க நேரிடும். பதினைந்து நாளும் எனக்கும் என் மகளுக்கும் சொர்க்கம். அதற்குப் பிறகு அவர் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும்.. மிகவும்  துன்பம் விளைவிக்கும் பிரிவு அது. ஆனால் என்னைப் போலவே என் மகளுக்கும் அவள் தந்தையின் பிரிவு பழகி விட்டது போல் தெரிகிறது. அதற்குப் பிறகு தினம் தினம் நாங்கள் பேசிக் கொள்வது செல்பேசியில் தான். அது தான் எனக்கும் என் கணவருக்கும்  இடையே பாலமாய் அமையும்."

"அதற்கும் சில நேரம் வேட்டு தான்.  பணி நிமித்தமாக சில இடங்களுக்கு செல்லும் போது, அவர் தொடர்பு எல்லையில் இருக்க மாட்டார். அந்த நாட்கள் மிகக் கொடுமையானவை எனக்கு.  மீண்டும் அவரிடமிருந்து வரும்  போன் தான் என்னை சகஜமாக்கும் .பெருத்த   நிம்மதியளிக்கும் .

அந்த மாதிரி சமயங்களில் எல்லாம் என் மகள் தான் எனக்கு ஆறுதல் சொல்வாள்," அம்மா. கவலைப்படாதே. அப்பா பத்திரமாக இருப்பார். நம் தேசத்திற்காகத் தானே  சென்றிருக்கிறார். " என்று சமாதானப் படுத்துவாள்."

இந்த செய்தியைப் படித்து முடித்தவுடன்,  மனம் ஒரு நிலையில் இல்லை.
 ஒவ்வொரு ராணுவ வீரரின் மனைவியும், அவர்களின் தியாகமும்   என் மனதிற்குள் வானளாவ  உயர்ந்து நின்றது.

(இவ்வளவு நாளாக இது உனக்குத் தெரியாதா? என்று கேட்காதீர்கள். சம்பந்தப்பட்டவர்களே, அவர்கள் அனுபவங்களை, பகிரும் போது நம் உணர்ச்சிகள்  நம்மை  தோற்கடித்து விடும் .)

பெரும்பாலான ராணுவத்தினரின் வாழ்க்கை முறை இது போல் தான் என்றுணர முடிகிறது.

வருடத்தில் ஒரே ஒரு நாள் "ஆர்மி டே" என்று கொண்டாடி விட்டு  நம் வேலைகளைப் பார்க்கப் போகிறோம். நாம் நிம்மதியாக வாழ்வதற்கு,   காஷ்மீரப் பனி மலையில், உறைய வைக்கும் குளிரில் ,தன் உறவு, உறக்கத்தை மறந்து , தன் உயிரைத் துச்சமாக நினைத்து, தேச நலனை மட்டுமே முன்னிறுத்தி  பணியில் இருப்பவர்களை ஒவ்வொரு நாளும்  நாம் கொண்டாட வேண்டும் என்றே தோன்றியது.

"திடீரென்று எதற்கு இந்த ஆர்மிப் பதிவு?" என்று யாரும் கேட்க மாட்டீர்கள். தெரியும்.

யூரியில்  வீரமரணமடைந்த  நம் வீரர்களுக்கு,  வீர வணக்கங்களையும் , அதற்கு தக்கப்  பதிலடிக் கொடுத்த நம் ராணுவத்திற்கு, சல்யூட்களையும்  காணிக்கையாக்குவோம்  வாருங்கள்.!

                                                                ஜெய் ஹிந்த்!                        

11 comments:

  1. ஒவ்வொருவரையும் நன்கு யோசிக்க வைக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //யூரியில் வீரமரணமடைந்த நம் வீரர்களுக்கு, வீர வணக்கங்களையும், அதற்கு தக்கப் பதிலடிக் கொடுத்த நம் ராணுவத்திற்கு, சல்யூட்களையும் காணிக்கையாக்குவோம் வாருங்கள்.!

    ஜெய் ஹிந்த்!//

    அருமையான அசத்தலான முடிவு ! ஜெய் ஹிந்த் !!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கோபு சார்.
      ஜெய் ஹிந்த் !

      Delete
  2. யூரியில் நம் வீரர்கள் மரணமடைந்தார்கள். ஓக்கே. ஆனால் எதிர்பாராமல் தாக்கப்பட்டு உயிரிழப்பது வீரமரணமா.?இருந்தாலும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவே ஸௌகர்யமாய் உறங்கும் பொருட்டு, யூரியில் பணியில் இருந்து உயிர் துறந்திருக்கிறார்கள் நம் வீரர்கள்.
      அவர்களுக்கு வீர வணக்கங்கள் செளுத்துவோம்.
      ஜெய் ஹிந்த்!

      Delete
  3. ஒரு சிறுகதைக்கு உரித்தான முடிவு.... அருமை..

    ReplyDelete
    Replies
    1. இது கதையல்ல கார்த்திக் சரவணன் !

      நிஜம் சார் நிஜம்!

      Delete
  4. உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்.

    ReplyDelete
  5. அருமையான பகிர்வு...
    இராணுவ வீரர்களை எப்போதும் மனதில் உயர்ந்த இடத்தில் வைப்போம்...

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு.

    ராணுவப் பணியில் மரணமடைவது - எதிர்பாராத தாக்குதலில் மரணமடைந்தாலும் வீர மரணம் தான். நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரிழக்கும் ஒவ்வொரு ராணுவ வீரனும் தியாகி தான்.

    ஜெய்ஹிந்த்.....

    ReplyDelete
  7. இராஜலக்ஷ்மி,

    நம் இராணுவ வீரர்களுக்கு என்னுடைய வீர வணக்கங்கள் !

    நாட்டிற்காக‌ எப்போது, எப்படி ஏற்படினும் அவர்களின் மரணம், வீரமரணமே !

    என் தாய்மாமாவும் டில்லி, காஷ்மீர் என இராணுவ பணியில் இருந்தபோது உறவுகள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் அவரது மனைவி & குழந்தைகளை எங்கள் ஊரில் கொண்டுவந்து விட்டுச் சென்றிருக்கிறார். கடிதம் & தந்தி மூலம் மட்டுமே தொடர்பு. அவையெல்லாம் மிகக் கொடுமையான நாட்கள்.

    ReplyDelete
  8. i also come to know that the direct recruit army officers posts are not sought after by tamilnadu youths...
    though the bottom cadre in army posts ...tamil nadu youths join....that too out of poverty....
    girls parents also should change their outlook in marrying army boys...
    let us salute these REAL HEROES...

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்