Tuesday, 31 July 2018

சாம்பார் ரகசியம்!


அது என்ன  சாம்பார்  ரகசியம்.. இது ஏதாவது  திரை உலகக்  கிசுகிசுவாக இருக்குமோ? என்று யோசிக்கிறீர்களோ ......


அட...நிஜ சாம்பார்  பற்றித் தான் சொல்லப் போகிறேன். தொடர்ந்து படியுங்கள்.....

இட்லிக்கு சரியான ஜோடி சட்னியா சாம்பாரா? என்கிற பட்டி மன்றம் நடந்தால்  வெற்றிக் கோப்பையைத் தட்டி செல்வது எதுவாக இருக்கும்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஒரு சிலர் சட்னிக்கு ஆதரவுத் தருவீர்கள் , வேறு சிலர் சாம்பாருக்கு  ஆதரவுத் தரலாம். வேறு சிலர் இட்லிக்கு இரண்டுமே அத்தியாவசியம்  என்று சொல்வார்கள்.

நம் முன்னோர்கள் பலவற்றை நமக்காக தேர்வு செய்து கொடுத்திருக்கின்றனர். "ஆனால் நாங்கள் அதையெல்லாம் நம்ப மாட்டோம்  ஆராய்ச்சி செய்து  முடிவுகளை  பார்த்த பின்பு  தான் ஒத்துக் கொள்வோம் " என்பது நாம்.

 காலத்தை வென்று நிற்கும் நம் உணவு முறைகளின்  நன்மைகளுக்கு  நம் முன்னோர்களின்  ஆரோக்கியமே சான்றாக நின்றது  என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல், திட்டமிட்டு நம் உணவு முறைகளை  தேர்வு செய்திருக்கின்றனர் முன்னோர்..காலை உணவையே எடுத்துக் கொள்ளுங்களேன்.ஆவியில் வேக வைத்த உணவு 'இட்லி '. அதற்குத்  துணை போக சட்னி,மிளகாய்ப்பொடி,சாம்பார் என்று வக்கணையாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

சட்னியில் சேர்க்கும் தேங்காய்க்கும், கடலைக்கும் மருத்துவ குணம் உள்ளதென்றால்,  உளுத்தம்பருப்பை வறுத்து சேர்த்து அரைக்கும்  மிளகாய்ப்பொடி எண்ணெய் , நம் மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்து என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதுவும் நாம் பணிக்கு செல்லும் முன்பாக  சாப்பிட்டு விட்டு செல்லும் போது மன அழுத்தம் இல்லாமல் செல்ல உதவும்.

சரி சாம்பார் பற்றி என்ன சொல்ல வருகிறாய்? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சாம்பார் புற்று நோய் தவிர்க்கும் மருத்துவக் குணம் உள்ளது என்று ஆராய்ச்சி சொல்கிறது.
என்ன.........................................? சாம்பார்....... புற்று நோயைத் தவிர்க்குமா?
கிண்டலடிக்கிறாயா? இல்லை வெகு நாள் கழித்து பதிவு எழுதுவதால் உளறுகிறாயா? என்று நீங்கள் நினைப்பதுப் புரிகிறது.

அப்படி என்ன  சாம்பாரில் மகத்துவம் இருக்கிறது ?

சாம்பாரில் நாம் சேர்க்கும் சாம்பார் பொடி தான் விந்தை புரிகிறது. அதில் நாம் சேர்க்கும்  மிளகாய், தனியா, மிளகு சீரகம்  அளவுகள் தான் காரணமாம். நான் சொல்லவில்லை.  ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது.

ஏற்கனவே  உணவில் சேர்த்துக் கொள்ளும் மஞ்சள் பொடியின்  மகிமையை  உலகமே அங்கீகரிக்கிறது .இப்பொழுது சாம்பார் பொடி அந்த லிஸ்டில் சேர்கிறது.

சாம்பார் பொடியில் சேர்க்கும்  பொருட்களின் விகிதாசாரம் , பருப்பு  புளியுடன் சேரும் போது,நம் உடலில் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணி புற்று நோய்  செல்கள்  உருவாகாமல் தடுக்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.


அசந்து போய் விட்டேன். எவ்வளவு பெரிய ரகசியத்தை நம் முன்னோர்கள் சாம்பாருக்குள் ஒளித்து வைத்து விட்டு போயிருக்கிறார்கள். அது தெரியாமல்......அஜினோமோட்டோ,  நூடில்ஸ் என்று தேடி தேடி   சாப்பிட்டு
  வியாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறோம்.

அதனால் சாம்பாரை இனி நீங்கள் டம்ளரில் ஊற்றிக் குடித்தாலும் நலமே.ஆமாம்!.... திடீரென்று  நீ ஏன் சாம்பார் ஆராய்ச்சியில் இறங்கினாய் என்று கேட்பவர்களுக்கு......

என் மருத்துவ மருமகள்  என்னிடம் " இந்த சாம்பார் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்." என்று என்னிடம் நீட்டிய போது படித்த நான் திறந்த வாயை மூட சிறிது நேரம் பிடித்தது.

ஆராய்சசிக்  கட்டுரைப் பற்றிப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

சாம்பார் ஆராய்ச்சியில் இறங்கி  நம் கண்களைத் திறந்து விட்ட முகம் தெரியாத ஆராய்ச்சியாளருக்கு நன்றிகள் பல.


ஆமாம் . நீங்கள் எங்கே போகிறீர்கள்?

இது யாருடைய தளம்? என்று பார்க்கத் தானே. அரட்டை யா இது? இப்படியெல்லாம் இவள் அரட்டை அடிக்க மாட்டாளே. வெட்டி அரட்டையாகவல்லவா இருக்கும். ஆராய்ச்சி...., கட்டுரை...... என்றெல்லாம் பேசுகிறாளே என்று ஆச்சர்யப் படுகிரீகளா?

உங்கள் எண்ண ஓட்டம் புரிகிறது.

எனக்கே சற்று ஆச்சர்யம் தான். .

"கவலைவேண்டாம் பழைய அரட்டைக் கச்சேரிக்கு மீண்டும் வந்துவிடுகிறேன். அடுத்தப் பதிவு ," 'Fortune' எண்ணெயில்  சமைத்தது   போல் தானிருக்கும்." என்று சொல்லி வைக்கிறேன்..

"என்ன........ திரும்பவும் உளறல்....?" என்று கேட்பவர்களுக்கு,

". லைட்டாத் தானிருக்கும்"   என்று சொல்ல வருகிறேன்.

என்னுடைய  சாம்பார் பொடி ரகசியம் இதோ இங்கே.....




 வீடியோவின் கீழே இருக்கும் 'subscribe' மற்றும் 'Like' பட்டனை த் தட்ட  மறக்க  வேண்டாமே!  ப்ளீஸ் ...        நன்றி !

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்