Thursday 26 March 2020

கம்பனும், வளையலும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-21)



கம்பனும், நழுவிய கோப்பையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.


ஒரு சின்ன ப்ளாஷ் பேக்...

மணமேடையில் குனிந்த தலை நிமிராமல் உட்கார்ந்திருந்தேன்.

அவர் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பாரா? இல்லை கண்டுக்காதது போல் உட்கார்ந்திருக்கிறாரா? தெரிந்து கொள்ள ஆவலாயிருந்தாலும் ....

அவரை திரும்பிப் பார்க்க முடியவில்லை.   லேசாக சற்றே தலையைத் திருப்பியிருந்தாலும்,  பக்கத்திலிருந்த கல்லூரி தோழிகள் என் மானத்தை வாங்கி விடுவார்களே!

ஆனால் கம்பராமாயண சீதையைப் பாருங்கள்....என்னா டெக்னிக் ? பக்கத்திலிருந்த ராமனை எப்படி கள்ளத்தனமாகப் பார்க்கிறாள் என்று கவனியுங்கள்..

ஜனகனின் சபைக்கு திருமகளின் வடிவமான அழகு சீதையை, மேலும் அலங்கரித்து அழைத்து வருகிறார்கள்.

நாணத்தால் தலைக் கவிழ்ந்திருக்க, 
'தொம் தொம்' என்று சத்தம்.
 சீதையின் இதயத் துடிப்பு 'ஸ்டெத்' எதுவுமில்லாமல் அவளுக்கே கேட்க...

அவள் மனம் விரும்பிய ராமனே வில்லை முறித்து , அவள் கரம் பற்றப் போகிறான். அப்புறம் எதற்கு இத்தனைப் பதட்டம்??
சீதையின் எண்ண ஓட்டத்தைக் கவனிப்போமா?
அருகிலிருக்கும் தோழி நீல மாலையைப் பார்க்கிறாள் சீதை..

"என்ன?" என்பது போல் நீல மாலை புருவத்தை உயர்த்த...

" அவர் தானே?" சீதை கண்களால் கேட்க...
"எவர்?" நீலமாலை கண்களில் குறும்பு கொப்பளிக்க பார்க்க..
" ஏய்! சும்மா இருடி. சரியாகப் பார்த்து சொல் அவர் தானே." மீண்டும் கண்களால் சீதை ஆனையிட..
நீல மாலை சபையை ஒரு முறை கண்களால் ஸ்கேன் செய்து விட்டு...
" ஆமாம்... ஏன் என்னைக் கேட்கிறாய்? நீயே பார்க்க வேண்டியது தானே. பாத்துக்க." என்பது போல் கண்களால் சொல்ல...

"போடி! வெட்கமாயிருக்குடி. ப்ளீஸ்...கொஞ்சம் சரியாய் பாத்து சொல்லேன்.."

" சரி. சொல்றேன்..ரொம்பவும் அவஸ்தைப் படாதே.... இரு ...இரு... அவர் போலத் தான் இருக்கு. அவரே தான் என்று நினைக்கிறேன்.."

இப்ப சீதை, "எவரே தான்?" கண்களால் பேச 

"ம்ம்ம்ம்......"நீலமாலை பொய்க் கோபம் காட்ட..

"ஓகே...ஓகே..ப்ளீஸ்...ப்ளீஸ்" சீதை கண்களால் கெஞ்ச..

"அப்படி வா வழிக்கு. சொல்றேன்...நீ எறிந்த பூப்பந்து விழுந்த தோளுக்கு சொந்தக் காரர் தான். அந்தக் கரிய செம்மல் தான். போதுமா?" கண்களால் சொல்ல...

"அப்பாடி.." என்றிருந்தது சீதைக்கு.

ஒரே ஒரு கணம் தான். 
"நீலமாலை சரியாகத் தான் சொல்கிறாளா" மீண்டும் சீதைக்குக் குழப்பம்.

தாமரையாய் மலர்ந்திருந்த அவள் முகம், குழப்பத்தில் தவிப்பதைப் பார்க்க முடிந்தது.

"நானே பார்த்தால் தான் எனக்குத் திருப்தியாய் இருக்கும். பார்க்கலாம் என்றால் நாணம் தடுக்கிறது. எப்படிப் பார்க்கலாம்?" நிலைக் கொள்ளாமல் தவிக்கிறாள் சீதை.

அவள் தன் தந்தை ஜனகன் அருகில் அமர வைக்கப் படுகிறாள்.

ஜனகன் ஒரு தந்தையின் பெருமிதத்துடன், சீதையைப் பார்க்கிறான்.
"என் செல்லப் பெண், இந்தப் பொற் சித்திரம் என்னை விட்டு அயோத்திக்கு போய் விடுவாளே." மனம் லேசா விசனப் பட...

சீதையோ , அப்பாவின் மன ஓட்டத்தை அறியாமல் ராமனை எப்படிப் பார்க்கலாம் என்று அலை பாய்கிறாள்.
(பெண் குழந்தைகளே இப்படித் தான். காதலனும், கரம் பற்றியவனும் தான் எல்லாம் அவர்களுக்கு)

சட்டென்று அவள்  "மைண்ட் வாய்ஸ்",
"சீதை ! ஒரு ஐடியாடி."
"என்ன?"
"கைகளில் எத்தனை எத்தனை பொன், வைர, வைடூரிய வளையல்களைப் போட்டிருக்கே."
"ஆமாம். அதுக்கென்ன?"
"அதை சரி செய்யறாப் போல...." சொல்லி முடிக்கவில்லை மைண்ட் வாய்ஸ்....
"நல்ல ஐடியாவா சொல்றியே! வெரி குட்!"
சந்தோஷமாக செயல் படுத்துகிறாள் சீதை.
கைவளையலை பார்த்து சரி செய்வது போல், தலையை மிக மிக லேசாகத் திருப்பி, கடைக் கண்ணால் தன் கரம் பற்றப் போகும் ஶ்ரீராமனை ஆசைத் தீரப் பார்த்து விடுகிறாள். "அன்று என்னைப் பார்த்து என் இதயத்தைத் திருடிக் கொண்டு சென்றவன் தான்" என்று உறுதி செய்து மகிழ்கிறாள்.

சீதை கள்ளத்தனமாகப் பார்ப்பதை, ராமனும் கவனித்து விடுகிறான்.சட்டென்று மின்னலாய் ஒரு புன்னகை அவன் முகத்தில் தோன்றி மறைய...

நீல மாலை இந்த கண நேர காதல் நாடகத்தைக் கவனித்து, சீதையை லேசாக கைகளால் இடிக்க..

'அட..இத்தனையும் நடந்ததா ஜனகனின் சபையில்? '

கம்பனின் பாடலைப் படித்ததில் கற்பனையில் நான்  கண்ட காட்சி தான் மேலே சொன்னது..

இதோ அந்தக் கம்பராமாயணப் பாடல்
பால காண்டம். கோலங்கான் படலம் .எண் 1238

எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்.

மெய் விளைவு இடத்துமுதல் ஐயம் விடலுற்றாள்.

ஐயனைஅகத்து வடிவே அலபுறத்தும்.

கைவளை திருத்துபுகடைக் கணின் உணர்ந்தாள்

இலக்கையுடைய வில்லை வளைத்ததையும், அதனை முறித்ததையும், (பலர் வாயிலாக) உரைக்கக் கேட்டு விட்டாள். உண்மை முடிவாகத் தெரிதலால் கன்னி மாடத்தில் கண்டவனோ வேறு  ஒருவனோ வில் முறித்தவன் என்று தெருவிற் கண்ட முதற் காட்சி காரணமாக எழுந்த ஐயத்தை ஓரளவு நீக்கி விட்ட பிராட்டி,தலைவனாகிய இராமனை அன்று முதல் தன் அகமாகிய மனத்திலே நிலை நிறுத்திய வடிவத்தால் கண்டு களித்து வந்தவள், வெளியேயும்(அவன் வடிவத்தைக் கண்னாரக் காண) பெண்மையின் இயல்பான நாணம் தடுத்தலால், நேராக நோக்காது கை வளையல்களை சரி செய்வது போல் கடைக் கண்ணால் ரசித்து ,  அவன் தான் இவன் என்று அறிந்து மகிழ்ந்தாள்.






Friday 13 March 2020

கம்பனும், நழுவிய கோப்பையும். ( கம்பன் என்ன சொல்கிறான்?-20)




கம்பனுக்கும் சண்டைக்கும் என்ன சம்பந்தம்? இங்கே க்ளிக் செய்து பாருங்கள்.

ஹாலில் டிவி உச்சஸ்தாயில் அலறிக் கொண்டிருந்தது.

நாலு ballல் , இரண்டு run எடுத்தால் வெற்றிக் கோப்பை 'விராட்' கையில் இருக்கும் என்கிற நிலையில் , இந்தியாவே டிவிக்குள் மூழ்கிக் கிடந்திருந்தது.

 'விராட்' பதட்ட நிலையில் பெவிலியனில் நின்றுக் கொண்டிருந்தார்.

இப்ப...2 balls 2 runs.
இந்தியாவே மயான அமைதி.


Bowler வேகமாக ஓடி வந்து பந்தை வீசவும்,  அது நேராக 'மிடில் ஸ்டம்ப்'ஐ  இடித்துத் தள்ளி விட்டு, விக்கெட் கீப்பர் கையில் சமர்த்தாய் போய் செட்டில் ஆனது.

போச்சு... 

இப்ப 1 பால், 2 ரன்..

கடைசி ball.
புது பேட்ஸ்மேன்.
இரண்டு ரன். 

எல்லோரும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்க bowler ம் மேலே வானத்தை ஒரு முறை பார்த்து (கடவுளிடம் வேண்டிக் கொண்டு)  பந்து வீசவும், பந்தை அடிப்பதாய் நினைத்துக் கொண்டு, பேட்ஸ்மேன் காற்றைக் கிழிக்கவும், பால் இப்ப லெஃப்ட் ஸ்டம்பை பேர்த்து வீசி எறிந்தது.

போச்சு... 'கப்' போயே போச்.....

இப்படியா கடைசி நிமிடத்தில் வெற்றிக் கோப்பைக் கை நழுவும்?

There is many a slip between the cup and the lip  என்று சும்மாவா சொன்னார்கள்.

ராமாயணக் கைகேயியும் இது போன்ற ஒரு தருணத்தை எதிர் கொண்டாள்.

அது அவளை அவள் மைந்தனிடம் இருந்தே பிரித்து விட்டது எனலாம்.

வாருங்கள்  கைகேயி மாளிகைக்கு செல்வோம்...(கற்பனையில்)

கைகேயியும் மந்தரையும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

" மந்தரை! நீ சொன்னபடி ராமனைக் காட்டுக்கு அனுப்பியாகி விட்டது. இனிமேல் சிம்மாசனம் பரதனுக்குத் தான். ஆனால்..."

'ஆனால்...என்ன ராணி?'

" என் ஆருயிர்க் கணவன் மறைந்து விட்டாரே! கண்களிலிருந்து கண்ணீர் மடை திறந்தார் போல் கொட்ட ஆரம்பித்தது."

" அழுவதை நிறுத்துங்கள் ராணி.இப்ப என்ன ஆச்சு? நீங்களா அவரைக் கொன்றீர்கள்?  கொடுத்த வரத்தை கேட்டதால் உயிரை விட்டு  விட்டார். ஊர் என்ன வேண்டுமானாலும் பேசும். வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். உங்கள் மகனுக்காக நீங்கள் செய்த மிகப் பெரிய தியாகம் இது. நீங்கள் தான் இனிமேல் ராஜ மாதா." மந்தரை சொல்லி முடிப்பதற்குள்..

" ராஜகுமாரர்கள் பரத, சத்ருக்ணர்கள் வந்து விட்டார்கள்" செய்தி வந்து சேர்ந்தது. 

"மந்தரை! பரதன் வரவில்லையடி. சிம்மாசனமே என்னை நோக்கி வருகிறது. என் வார்த்தையே இனி கட்டளை. என் கட்டளையே சாசனம்." புளகாங்கிததுடன் பேசுகிறாள் கைகேயி.(தசரதன் இறப்பை மறந்து விட்டு)

"ஜாக்கிரதை மஹாராணி ! ஜாக்கிரதையாக பரதனிடம் பேசுங்கள்." என்று மந்தரை எச்சரிக்கவும்....

புயலெனப் பரதன் உள்ளே நுழையவும் சரியாயிருந்தது.

வந்து தாயை வணங்கிய பின்னர், "அயோத்தி நகரம் எதையோ இழந்தாற் போல் தோன்றுகிறது தாயே."

கைகேயி அமைதிக் காக்க...
பரதன் தொடர்ந்தான்," தாயே! தந்தையும், தனயனும் கண்ணில் தென்படவில்லையே!! அவர்களையும் போய் நான் வணங்க வேண்டுமே!" 

கைகேயி இப்பொழுது தான் வாய் திறந்தாள்."இருவரும் இங்கில்லை மகனே!"

"அப்படியென்றால்....."

"உன் தந்தை வானுலகம் சென்று விட்டார்."

அதிர்ச்சியில் உறைந்தான் பரதன்.

அந்த அதிர்ச்சியிலிருந்து பரதன் மீள்வதற்குள் அடுத்த குண்டை போடுகிறாள் கைகேயி.

"உன் தமையன் ராமன் வனத்திற்கு சென்று விட்டான். அவனுடன் சீதையும், இலக்குவனும் சென்று விட்டார்கள்."

"ஏன் இப்படி அடுக்கடுக்கான துன்பம் ஏற்பட்டது? " பரதன் குரல் உடைந்து கேட்க...

"தானாக ஏற்படவில்லை . நான் தான் ஏற்படுத்தினேன்." வெற்றிக் களிப்புடன் சொல்கிறாள்  கைகேயி.

"என்ன? நீங்கள் காரணமா?"

"ஆமாம் . அதுவும் ..உனக்காகவே செய்தேன்.
 உன் தந்தை எனக்குக் கொடுத்த இரண்டு வரங்களை உனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்டேன். 
ஒரு வரம்- நீ நாடாள
இன்னொன்று - ராமன் காடாள..
உன் தந்தை வானுலகம் சென்றது நம் துர்பாக்கியம்."

கைகேயி என்ன செய்திருக்கிறாள் என்பது புரிய பரதனுக்கு , கோபம் தலைக்கேறியது . கோபத்தின் டிகிரி உச்சத்தை எட்டியது.

கைகேயியைப் பார்த்து, பரதன் கண்ணும், முகமும் கோபத்தில் ஜிவு... ஜிவுக்க,  " தந்தை வான் புக... தமையன் வனம் புக.... உன் மகன் பரதன் நாடாளுவான்  என்று கனவு கண்டாயோ? " 

"நீ செய்த அநியாயங்களுக்கு நான் துனை வருவேன் என்று எப்படி உன்னால் நினைக்க முடிந்தது? கெடுதல் எல்லாம் செய்து விட்டு, அதைப் பெருமையாக சொல்லும் உன் வாயைக் கிழிக்க விடாமல் என்னை எது தடுக்கிறது என்று தெரியவில்லையே " தன்னையே நொந்து கொள்கிறான்.

தாய் என்றும் பாராமல் அவளைத் திட்டி விட்டு ,"நான் கோசலைத் தாயைப் பார்த்து வணங்கி, மன்னிப்புக் கேட்கப் போகிறேன். பிறகு நான் வனம் சென்று ராமன் அண்ணாவை பார்த்து வணங்கி, அவர் திருவடிகளை பணிந்து அழைத்து வரப் போகிறேன். உன்னால் நின்ற ராம பட்டாபிஷேகம், என்னால் நிறைவு பெறப் போகிறது. " கோபத்தில் சொல்லி விட்டு வேகமாக கோசலை மாளிகையை நோக்கி சென்றான்.

யோசித்துப் பாருங்கள் ....கைகேயிற்கும், மந்தரைக்கும் எப்படி இருந்திருக்கும். கைகேயி கண்ட ராஜமாதா கனவு என்ன? நிமிட நேரத்தில் அந்தக் கனவு தகர்ந்து பொடிப் பொடியாய் உதிர்ந்து போயிற்றே. 

A slip between the cup & lip. Absolutely True.

நம் எல்லோருக்குமே கைகேயி மேல் கோபம் கொஞ்சமில்லை, நஞ்சமில்லை. கம்பர் தன் கோபம் எல்லாவற்றையும், பரதன் வழியாக தீர்த்துக் கொள்கிறார் பாருங்கள்.

பரதன் தாயைத் திட்டுவதாக நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் ஒன்றை இப்ப பார்ப்போமா?

நோயீர் அல்லீர்; நும் கணவன்தன் உயிர் உண்டீர்;
பேயீரே நீர்! இன்னம் இருக்கப் பெறுவீரே?
மாயீர்! மாயா வன் பழி தந்தீர்! முலை தந்தீர்!
தாயீரே நீர்! இன்னும் எனக்கு என் தருவீரே!



 உம் கணவனது உயிரைக் குடித்தீர். நோய் போன்று நின்று நிதானமாக உயிரைப் போக்கவில்லை. சட்டென்று தந்தையின் உயிரை வாங்கி விட்டீர். ஆகையால் நீர் பேய் போன்றவரே.  இத்தகைய நீர்கணவன் இறந்த பிறகும் இன்னமும் உயிருடன் வாழ்வதற்குரியவர் ஆவீரோ? (உரியரல்லீர்). இறந்து போக மாட்டீரோ.குழந்தையாய் இருந்தபொழுது பால் கொடுத்து வளர்த்தீர். ஆகையால் நீர் என் தாயார்தான். இளைஞனாய் இருக்கின்றேன். இப்பொழுது, அழியாத கொடும்பழி கொடுத்து என்னைக் கெடுத்தீர். எதிர்காலத்தில் என்னவெல்லாம்  தரப்போகின்றீரோ?’

நாம் கைகேயியை என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைக் கம்பன் செய்கிறார் பாருங்கள்.

பரதனின் Character நம்மை அசர அடிக்கிறது அல்லவா? 
அதனால் தான், கம்பர் வேறொர் சமயத்தில் அவனைக் கோடி ராமர்க்கு நிகர் என்று சொல்கிறார்..

வேறொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.
நன்றி.


Tuesday 3 March 2020

கம்பனும், சண்டையும்.(கம்பன் என்ன சொல்கிறான்-19)





"ஷட் அப்." வேகமாக நான் கத்த..

ஒரு பத்து செகண்ட் மயான அமைதி.

பிறகு " நான் சும்மா உன்னுடன் ஆர்க்யூ செய்யவில்லை."  மீண்டும் ஆரம்பிக்க...

ஒரு முறை முறைத்து ," நான் என்ன செய்கிறேன்  என்பது எனக்குப் புரிகிறது." அழுத்தமாக ஆணித்தரமாக சொன்னேன்.

தலை வலி மண்டையே உடைந்து விடும் போலிருந்தது.
இப்படி சண்டை போட்டால், பின் தலை மட்டுமா வலிக்கும்.?மூளையே உடைந்து சிதறும்.

போய் சூடாக ஃபில்டர் காபி போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்து, " இப்ப சொல்...என்ன சொல்லணுமோ சொல்லு. ஆனால் குரல் உசத்தக் கூடாது. அதுக்கு சரின்னா...." சொன்னேன்.

ராஜி...கொஞ்சம் காது கொடுத்து கேளு ராஜி. நீ என்ன சொல்ற?  " ராமனிடத்திலும், சீதையிடத்திலும் குறை இருப்பதாக சொல்கிறாயே. அதைத் தான் கண்டிக்கிறேன். ராமனையும், சீதையையும் பற்றி குறை சொல்லலாமா? பரந்தாமனையும், திருமகளையும் குறை சொன்னால் அடுக்குமா? 
அதை சொன்னால் நீ என்னமோ குதி, குதி, குதின்னு குதிக்கிறாய்? "

"நான் உன்னை ஒன்று கேட்கட்டுமா?" இது நான்.

"கேளு"

"நீ மனசாட்சியா இல்லை மட சாட்சியா?அதை மட்டும் எனக்கு விளக்கு."

என்னவோ போ. அலுத்துக் கொண்டது மனசாட்சி...

"நான் எங்கே சொன்னேன்...கம்பர் சொல்கிறார் என்றல்லவா சொன்னேன்.
நானும் நீயும் பேசிக் கொண்டே இருந்தால் இதுக்கு ஒரு தீர்வு கிடைக்காது. பஞ்சாயத்திற்கு நாலு பேரைக் கூப்பிடுவோம்."

'படிச்சிட்டிருக்கிற நீங்க தான் சொல்லுங்களேன்...'

"கம்பர் அவருடைய பாடலில் சொன்னதைத் தான் நான் சொன்னேன். அதைப் புரிந்து கொள்ளாமல் மடமையான என் மனசாட்சி என்னுடன் சண்டை போடுகிறது. என்ன செய்யலாம்?"

முந்தின பதிவில் கம்பர் ராமனின் படை பலத்தையும், சீதையின் வாள் வீச்சையும் பற்றி விவரமாக சொன்னதைப் பற்றி எழுதியிருந்தேனே, அதே போல் இருவரிடமும் இல்லாத ஒன்றைப் பற்றியும் ஒரு பாடல் இருக்கு.

"மருங்கு இலா நங்கையும், வசையில் ஐயனும்..."


இடையே இல்லாத சீதையும், ,குற்றமே இல்லாத ராமனும் .... என்று ஆரம்பிக்கிறார்...

அதைப் பற்றி எழுதப் போகிறேன்னு  சொன்னதுக்குத்  தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். 

மட சாட்சியே! முழுப் பாடலையும் சொல்கிறேன்...கேளு.....

வாசகர்களே...நீங்களும் படித்து ரசியுங்கள்...

சீதையும் ராமனும், ஒருவரையொருவர் பார்வையாலேயே கொள்ளையடித்துக் கொண்ட பின்னர்...ஈருடல் ஓருயிர் ஆகி விட்டனராம். 


பார்வைப் பரிமாற்றம் மட்டும் தானாம்.  ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவேயில்லையாம்.  


அப்புறம்?


கதையை நானா சொல்கிறேன்... கம்பர் அல்லவா?


ஏன் பேசிக் கொள்ளவேயில்லையாம் தெரியுமா?


பாற்கடலிலிருந்து பிரிந்து வந்த தம்பதியினர்.....பல காலத்திற்குப் பிறகு இப்ப தான் பார்த்துக் கொள்கிறார்களாம். நீண்ட பிரிவிற்குப் பிறகு பார்த்துக் கொள்ளும் காதலர்களுக்கிடையில்  பேச வேண்டிய அவசியமென்ன ? 

உங்கள் அனுபவத்திலிருந்து நீங்களே சொல்லுங்கள்.... பேசாமலே, கண்களாலேயே காதல் பரிமாற்றம் நடப்பது இயல்பு தானே.
அதைத் தான் கம்பரும் பாட்டில் சொல்கிறார்.
அம்பிகாபதி காதல் வயப்பட கம்பரின் பாடல்களே காரணமாயிருக்கலாம். இது என் கருத்து. 
கம்பர் காதலால் உருகி உருகி எழுதியிருக்கிறாரே. அதனால் சொன்னேன்.

மன(ட)சாட்சியே! இப்ப புரிந்ததா?


என்ன பதிலையே காணோம்?

ஓ ! எஸ்கேப் ஆயிட்டியா?  

அதானே பார்த்தேன்...

கம்பன் பாடலைப் பார்ப்போமா?
பால காண்டம். மிதிலைக் காட்சிப் படலம். பாடல் எண் 601

மருங்கு இலா நங்கையும்
      வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு 
    உயிர் ஒன்று ஆயினார்
கருங் கடல் பள்ளியில் 
  கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் 
   பேசல் வேண்டுமோ?


இடையே இல்லாத சீதையும், குற்றமே இல்லாத ராமனும், ஒருவர் மேல் ஒருவர் கொண்ட மிக்கக் காதலால் ஒன்று பட்ட உடல்களுக்கு ஓர் உயிர் என்று சொல்லுமாறு ஆனார்கள். மிகப்பெரிய பாற்கடலில் ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையிலே
ஒருவரோடு ஒருவர் கலந்திருந்தவர்கள்  பிரிந்து போய், மீண்டும் ஓரிடத்தில் சேர்ந்தால் ,அவர்களுக்குள் உண்டாகும் காதலை சொல்லவும் வேண்டுமோ?

மீண்டும் வேறொரு பாடலுடன் சந்திப்போமா?

நன்றி.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்