Friday 27 March 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --3.

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --2  படிக்க இங்கே க்ளிக்கவும்.

தொடர்ந்து  படிக்க:  
இதோ  ட்ராலி  ட்ரபிள் ?
 
google images

" என்னடா ராஜேஷ் இது? தரையெல்லாம் மரமா? " கேட்டுக் கொண்டே மகன்  வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்  ராசி.

" தரை மட்டுமில்லைம்மா,  வீடே  மரம் தான் ." என்று மகன் சொல்லி முடிப்பதற்குள்,  பேரன் அர்ஜுன்,  ராசியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவனுடைய  பொம்மைகளை  காட்ட அழைத்து சென்று விட்டான்.

மருமகள் ஆர்த்தி, காபிப் போட்டு விஷ்ணுவிடம் கொடுத்து ," மாமா காபி சூடாக இருக்கிறது  சாப்பிடுங்கள்." என்று சொல்லவும் விஷ்ணு  காபியை வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தார்.  

" அப்பாடி  ... இந்தக் காபி குடித்து இரண்டு முழு நாட்களாகி விட்டன ."என்று சொல்லவும்,

ஆர்த்தி  ," ஆமாம் மாமா.  ப்ளைட்டில் காபி, வாயில் வைக்க வழங்காது " என்று சொன்னாள் .
ராஜேஷ் அவர்களின் பயண  சௌகர்யங்களைப் பற்றிக் கேட்கவும் ,

விஷ்ணு மகனிடம்," ஏண்டா  இங்கே ஏர்போர்ட்டில்  ட்ராலிகளுக்கு  பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல மாட்டியோ? " கேட்டார். 

" ஏன் என்ன ஆச்சு? "

" அதை ஏன் கேட்கிறாய்? உன்  அம்மா அடித்த லூட்டி இருக்கிறதே .....  

" என்ன ஆச்சு மாமா "என்று ஆர்த்தி கேட்டுக் கொண்டே   சோபாவில் அமர ....

" கன்வேயர் பெல்ட்டில் மௌன ஊர்வலமாய்  நகர்ந்த பெட்டிகளிலிருந்து எங்களுடையதைப் பார்த்து எடுத்து தரையில் வைத்து விட்டு ட்ராலி  தேடினோமா...."

ஒரு ஓரமாய் ட்ராலிகள், நான்கைந்து தான், அதிகமில்லை  கைகோர்த்துக் கொண்டு  ஜாலியாய்  நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

உடனே  ராசி ," நீங்கள் பெட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள் நான் போய் எடுத்து  வருகிறேன் " சொல்லி விட்டு  ட்ராலியை  எடுக்கப் போனாள் .

அங்கே போய் ட்ராலியை இழுத்தால்  வர மாட்டேன் என்று அடம் பிடித்தது  ட்ராலி.

அதற்குள் ," ஐயையோ, $5 /- நோட்டைப் போட்டால் தானே வரும் . செக்யுரிட்டி  பார்த்திருந்தால் வம்பாயிருக்குமே."  ராஜேஷ் இடை மறிக்க..

" ஆமாம்......அதையெல்லாம் இப்போ வந்து சொல்லு, எல்லாம் முடிந்த பிறகு. " என்றார் விஷ்ணு.

" கேளு முழு கதையையும் ... " தொடர்ந்தார்  விஷ்ணு. 

" ராசி ட்ராலியை இழுக்க, அதுவோ  தன்  நண்பர்களை விட்டு விட்டு வர மாட்டேன் என்பது போல்  அசைந்து கொடுக்காமல் இருக்க , உன் அம்மா விடுவாளா ? இன்னும் வேகமாய் இழுக்க , அப்போ நீ பார்த்திருக்கணும். உன் அம்மாவுக்கும்  ட்ராலிக்கும்,அங்கே  ஒரு " டக் ஆஃப்  வார் "  நடந்துக் கொண்டிருந்ததை .

 (மாமனாரின் நகைச்சுவை  சிரிப்பை  வரவழைக்க ... , ஆனாலும் ஆர்த்தி   சற்று அடக்கியே  சிரித்தாள்.)

 அந்த சமயம் பார்த்து , ஆஜானுபாகுவாக  இடுப்பில் ஒட்டியாணம் போல் வாக்கி டாக்கி, துப்பாக்கி , சகிதமாய்  போலீஸ்  என்று நினைக்கிறேன் வந்து ," மே ..........ம் " என்று  கத்தினாரே பாக்கணும்  உன் அம்மா வெலவெலத்துப் போய்  விட்டாள் . 

" மாமா , நீங்கள்  மாமியின் உதவிக்குப் போயிருக்கலாமே " சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு  கேட்டாள்  ஆர்த்தி.

" என்னைத் தான்  அவள் பெட்டிக்குக் காவலாக  நிறுத்தி வைத்து விட்டாளே . இங்கேருந்து என்னால் பார்க்க மட்டுமே முடிந்தது."

" அப்புறம் என்ன ஆச்சு? " கதை கேட்கும் ஆர்வத்துடன் சிரித்துக் கொண்டே ஆர்த்தி  கேட்க,

" உன் மாமி வெல  வெலத்துப் போனாள்  என்பது நிஜம் தான்.  ஆனால் மிரட்டின போலீசிடம் தைரியமாக  " ட்ராலி  .... " என்று இழுக்க ,

அவர் " யு வாண்ட் ட்ராலி ? கிவ்  5 டாலர் ." என்று சொல்ல இவள் கொடுக்க வேண்டியது தானே . அதை  விட்டு விட்டு
அவரிடம்  போய் " வை ?"(why) என்று கேட்டாளே  பார்க்கனும்.

" என்னென்ன கேஸ் இவள் மேல் பாயப் போகிறதோ? எந்த ஜெயிலில் களி........ இல்லையில்லை சீரியல் திங்கப் போகிறாளோ " என்று நான்  பயந்த நேரத்தில்

ஆபத் பாந்தவனாய் அங்கு வந்த நம் சென்னை வாசி ஒருவர்  உன் அம்மாவிடம்  எல்லாம் விளக்கி உன் அம்மாவைக் காப்பாற்றினார்னா  பாத்துக்கோ  என்று சொல்லி முடிக்கவும் 

ஆர்த்தி  தன சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு போவதை  விஷ்ணு கவனித்தார்.  

" எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். நீங்க என் புகழ் பாடியது இருக்கட்டும்....." என்று ராசி சொல்லிக் கொண்டே வந்தாள் .
,
ராஜேஷ் ," ஏம்மா...ட்ராலிக்குப்   பணம் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே. அதை விட்டு விட்டு  அவரிடம் என்ன வாக்குவாதம் ? என்று கேட்க ..

"நான் கண்டேனாடா  இங்கேயெல்லாம் ட்ராலிக்குப்  பணம் கட்ட வேண்டும் என்று .அவர் லஞ்சம்  கேட்கிறார் என்று நினைத்தேன் ."

" ட்ராலிக்கு லஞ்சமா ......." ராஜேஷ், ஆர்த்தி, விஷ்ணு எல்லோருமே அசந்து நிற்க விஷ்ணு சொன்னார்," ஆக போலிசிடமிருந்து இன்று  நீ   தப்பியது , நிஜமாவே உன் பூர்வ ஜென்ம புண்ணிய   பலன் என்று சொல்லு. "

உடனே ராசி, " நீங்கள் மட்டும் என்னவாம்?  காரில் உட்கார்ந்துக் கொண்டு   அலறவில்லை.... " 

விஷ்ணு அலறினாரா.......... ?அவர் எதற்கு அலறினார்? .................(நீங்கள் நினைப்பது புரிகிறது)
இந்த ஜோடி  பயங்கர லூட்டி அடிக்கிறதே  என்றும்  தோன்றுகிறதா ?
தொடர்ந்து வாருங்கள்........                               ( சொல்கிறேன் )

Monday 16 March 2015

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை !

இந்தக் கதையை நான் எழுதி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருக்கும். இதை வெளியிடாமல்  தூங்கினாயா என்று கேட்காதீர்கள் . இந்தக் கதையைப் போட்டி ஒன்றிற்கு அனுப்பியிருந்தேன். கதைத்  தேர்வாகவில்லை.
அதனால் என்ன  ? நாமே வெளியிட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது sirukathaigal.com தளத்தைப் பற்றித்  தெரிய வந்தது.அவர்களுக்கு அனுப்பி வைத்ததில் அவர்கள் தளத்தில் என் கதையை குடும்பக் கதை என்கிறப் பிரிவில்   வெளியிட்டுள்ளார்கள் .
sirukathaigal.com தளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்களும் படித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன்.
இதோ

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை   


  
google image


மைதிலி  கோலத்தைப்போட்டு விட்டுத் திரும்பினாள் . மைதிலியின் வயது என்னவோ ஐம்பது தான்.. ஆனாலும் வாழ்க்கையின் பாடங்கள் அவளுடைய வயதை அறுபதைத் தாண்டி சொல்லத் தோன்றியது.

கோலத்தின் அழகைப் பார்த்ததும்  தன்னைப் பிரிந்த  கணவனின் நினைவு ,மைதிலியை  அழுத்தியது.அவனுக்கு இவள் கோலத்தையும் பிடிக்கும், இவள் கோலம் போடும் அழகும் படிக்கும். மைதிலிக்குத் திருமணம் ஆன போது அவளுக்கு வயது பத்தொன்பதைத் தாண்டவில்லை. இயற்கை அவளுக்கு அழகை வாரி வழங்கியிருந்தது. எழுதி வைத்தாற்  போலிருந்த கண்ணும், ஒற்றைக்கல் ஜொலிக்கும் மூக்குத்தியும்  அவள்  அழகை இன்னும் கூட்டிக் காட்டின. கணவன்  ராமனுக்கு, அவன் மனைவி மேல் தாங்கொணாக் காதல், மற்றும் பெருமை என்றே சொல்ல வேண்டும். ராமன் மிகப் பெரிய வேலையில் இல்லை என்றாலும், கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். அந்தச் சம்பளத்தில் சிக்கனமாய் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள்  மைதிலி. மைதிலியின் மாமியாரும் கூடவே தான் இருந்தாள். மைதிலியின் அழகு  அவள் கண்ணை உறுத்தினாலும், தான் பார்த்து வைத்த பெண்  என்பதால்  சகித்துக் கொண்டாள். ராமனுக்கு  ஒரு தங்கை . அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தாள் . அவளுக்கு தன அண்ணியின் அழகும் , கைவேலை நேர்த்தியும் , கண்ணை உறுத்தி அவளைப் பொறாமைத் தீயில் தள்ளியது.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் , " அழகாக இருந்தாலே ஆபத்து தான் " என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். அவள் தன்னைத் தான் சொல்கிறாள் என்று மைதிலிக்குப் புரிந்தாலும்  , சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள் மைதிலி. அழகில் மட்டுமல்ல வாய் பாட்டிலும்  வித்தகி மைதிலி. " தாரமர் கொன்றையும் " என்று அபிராமி அந்தாதி பாட ஆரம்பித்தாளானால்,  வீடே  அந்த சங்கீதத்தில் லயித்து விடும். மைதிலி மேல் ராமன் பெருமை கொள்வதில்  ஒன்றும் அதிசயமில்லை.அவ்வப்பொழுது அவளை இழுத்து அணைத்துக் கொள்வதிலும், சட்டென்று சமயலறைக்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவள் கன்னத்தில் இதழ் பதிப்பதுமாக  இருப்பான். நாணத்தினால் மைதிலி  முகம் சிவந்து  அவள் அழகைப்  பல மடங்குக் கூட்டும்.

அன்று, காலை எழுந்ததிலிருந்து  தலை  சுற்றுவது போலிருந்தது. கோலம்போட்டு விட்டு உள்ளே நுழையும் போது அப்படியே  வாசற்கதவில் தலையை   சாய்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டாள் . உடனே அவளை  டாக்டரிடம் அழைத்து சென்றதில்  அவள்  தாயாகப் போகிறாள் என்கிற மகிழ்ச்சி செய்தி கிடைத்தது.  ஆனால்.....அதற்குப் பிறகு நடந்தவை எல்லாமே  கசப்பான நிகழ்வுகள்  தான். இந்த  அன்யோன்யமானத்  தம்பதிகள் மேல் யார் கண் பட்டதோ?

மைதிலி வாந்தியும், மயக்குமுமாய் இருந்த நாளில், ஒரு நாள் ராமன் ஆபீசிற்கு சென்று விட்டான். அவள் மாமியாரோ  கோவிலுக்கு.இவள் அப்பாடா என்று சற்றே கண்ணை  மூடிப்   படுத்திருந்தாள் .

" டிங் டாங் " காலிங் பெல் அடித்தது.

மெதுவாக மைதிலி நடந்து  போய் கதவைத் திறந்தாள். வெளியே நின்றிருந்தது  அவள் நாத்தனார், ஜெயாவின்  கணவன்  விஜய் .

" வாங்க " என்று கூப்பிட்டு விட்டு உள்ளே சென்றாள் . தலை  " கிறு  கிறு "  என்று சுற்றியது. தள்ளாடியபடியே சேரை இழுத்துப் போட்டு,  அவரை   உட்காரச் சொன்னாள் . விஜய்  கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தான். மைதிலி  " சாத்த வேண்டாங்க.  அத்தை கோவிலுக்குப் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் " என்று சொல்ல , அதற்கு விஜய் ," எனக்குத் தெரியும். அத்தை  அங்கே என் வீட்டில் தான் இருக்கிறார்கள்.அவர்களை அங்கேயே இருக்க சொல்லி விட்டுத் தான் வந்தேன் .ஜெயாவிற்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அவர்கள் அங்கு தான்  இருப்பார்கள். " என்று சொல்லி விட்டு," " உன் துணைக்கு நான் ".......என்று சொல்லும் போது தான் விஜய் இங்கு வந்தது, வேறு நோக்கத்தில்  இருக்குமோ  என்கிற சந்தேகம் தோன்றியது மைதிலிக்கு. அரண்டு போய்  விட்டாள்  மைதிலி. எதை சாக்கு வைத்தாவது, வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்து  , " காபிப் போட  பால் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து பால் வாங்க வேண்டும், கொஞ்சம் நகருங்கள் " என்று சொல்ல, விஜய் அவள் கையை அழுத்தமாகப் பிடித்து," இந்த சந்தர்ப்பத்திற்காக  எவ்வளவு நாட்கள் காத்திருப்பேன், இப்பொழுது பாலும், காபியும் முக்கியமா? வா... உன் கணவன் வர எப்படியும் மாலை ஆகும் " என்று சொன்னவுடன் மைதிலி, தான் நன்றாக அவனிடம் அகப்பட்டுக் கொண்டது புரிந்தது.

பக்கத்து வீட்டிலிருப்பவர்களை கத்தி அழைக்கலாம் என்று நினைத்தால்,
 " கூப்பாடுப் போட்டுத்  தகராறு செய்தால், நீ தான் என்னை இங்கே  வரச் சொன்னாய் " என்று உன் மேலேயே பழி போடுவேன் என்று சொல்ல  மைதிலி செய்வதறியாது திகைக்க,  விஜய் அவளை நோக்கி நகர்ந்தான்.

மைதிலி சட்டென்று கையை உதறி விட்டுச்  சமையலறை நோக்கி ஓட , விஜய்  பின்னாடியே சிரித்துக் கொண்டே வர, அவள் கையில் கிடைத்தக் காய்கறிக் கத்தியால்  அவனைக் குத்துவது போல்  கையைக் கொண்டு போகவும், மீண்டும் அழைப்பு மணியின் சத்தம். மைதிலிக்கு  அது அழைப்பு மணியாக ஒலிக்கவில்லை.கோவில் மணியாகவே இருந்தது  . விஜய்யும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கதவைத் திறக்கவும், வெளியே அவள் மாமியாரும், ஜெயாவும், நின்றிருக்க  , மைதிலி ஓவென்று   மாமியாரைப் பார்த்து அழுது கொண்டே சொல்ல ஆரம்பிக்கவும் , விஜய் முந்திக் கொண்டான்.

" உங்களை  எல்லாம்  பார்த்ததும் அழுது புலம்புகிறாள் . இவள் தான்  என்னை யாரும் இல்லாத சமயத்தில் வரச் சொன்னாள்  " என்று பழி சொல்ல , அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று  உங்களால் யூகிக்க முடியும்.  ராமன் அவசரமாக ஆபிசிலிருந்து வரவழைக்கப் பட , மைதிலிக்கு  எதையும்  சொல்ல சந்தர்ப்பம் அளிக்காமல் , வேசி என்று தீர்மானித்து , ராமனைக்  கொண்டே மைதிலியை அவள் அண்ணன் ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டாள் .கணவன்  ராமன்  தன்னை சந்தேகப்படுவது தான் மைதிலியை மிகவும்  பாதித்தது.

அதற்குப் பிறகு மைதிலி, அவள் அண்ணன் வீட்டில் வேண்டாத விருந்தாளியானாள் . அக்ஷயா பிறந்தாள் .அக்ஷயாவிற்கு ஒரு வயது வரை பல்லைக் கடித்துக் கொண்டு  காலம் தள்ளிய   மைதிலி  தனக்கு அப்பா, அம்மா இல்லாத சங்கடத்தை பூரணமாக உணர்ந்தாள் .  சமையல் வேலைக்கு வக்கீல் வீட்டில் ஆள் வேண்டும் என்று கேட்கவும், அங்கே அக்ஷயாவுடன் சென்று விட்டாள் . அண்ணனிடம் தன் முடிவைப் பற்றி சொல்லிவிட்டுத்  தான் கிளம்பினாள் . அதிகம்  மறுப்புத் தெரிவிக்கவில்லை அவள் அண்ணன்.

" திக்கற்றவருக்குத் தெய்வமே துணை  ". அந்தத் தெய்வமே  வக்கீலின் மனைவி ரூபத்தில்  இருந்தது அவள் செய்த புண்ணியமே. அதுவும் அவர்களுக்கு குழந்தையில்லாதக் குறையை  அக்ஷயா  தீர்த்து வைக்க  இருவரையும் அவர்கள் வீட்டு  அவுட் ஹவுஸில்  தங்க வைத்துக் கொண்டார்கள். அக்ஷயா படிப்பு,  உடை என்று சகலமும்   வக்கீல் வீட்டு மாமி  உபயத்தில்  சிரமமில்லாத வகையில் முடிந்தது.ஆனால் அவ்வப்பொழுது " அப்பா எங்கே " என்கிற அக்ஷயாவின்  கேள்விக்கு மட்டும் மைதிலியால் விடையளிக்க முடியவில்லை.அப்பாவின் பாசத்திற்கு மிகவும் ஏங்கித் தான் போனாள்அக்ஷயா.பள்ளியில் பெற்றோர் தினம், பிறந்த நாள்  என்று அவள் அப்பாவை  நினைவு கொள்ளாத  நாளேயில்லை எனலாம்.   அவ்வப்போது அவள் அண்ணன் அவளை வந்து பார்த்துப்  போகவும், மைதிலி வாழ்நாள் கரைந்து கொண்டிருந்தது. ராமனின் நினைவு  வராமல் இருக்குமா என்ன?  சில  சமயம் அவள் அண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்கவும் செய்தாள் .ஆனால் ராமன் இவளை சுத்தமாக  மறந்தே விட்டான் போலும்.


சிறிது நாள் கழித்து , அவனுக்கு வேறு திருமணம் ஆன செய்தியும் கிடைத்தது. அவள் அண்ணனோ , "  வக்கீல்   நோட்டீஸ் அனுப்பலாமா? . அதெப்படி முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணமா? "என்று குதிக்க , மைதிலி  தான் இனிமேல் அவனுடன் வாழப்போவதில்லை என்று சொல்லி அவனை  அடக்கி விட்டாள் .

வருடங்கள் பல ஓடி மறந்தன....

சரியான வயது வந்தவுடன் அக்ஷயா தன் அப்பா யாரென்றும், தங்களுக்கு இந்த நிலைமை ஏன்  என்றும் ஒருவாறு புரிந்து கொண்டாள். 


இப்போது ,அக்ஷயா  அழகிய இளம் பெண்ணாக, அம்மாவின் அழகையெல்லாம்  பிரதி எடுத்தாற்  போலிருந்தாள் . பொறியியல் படிப்புப் படித்துக் கொண்டே  வக்கீலுக்கு கணினியில்  உதவி செய்வாள் . அப்படி  அவள் கணினியில்  உதவும் போது,  வக்கீலின்  நண்பர் கண்ணில் பட, அவருடைய மகனிற்கு , அமெரிக்காவில் இருப்பவனுக்கு திருமணம் செய்து கொள்ள அக்ஷயாவும்  அமெரிக்கா  சென்றாள்.நல்ல குடும்பத்தில் அவள் வாழ்க்கைப் பட்டத் திருப்தியில்   , மைதிலி நிம்மதியாக வக்கீல்  வீட்டில் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள் . அவ்வப்பொழுது போனில் மகளின் குரல் வயிற்றில் பால் வார்க்கும்.

இப்பொழுது ஒரு மாதமாக முதுகு வலி, இடுப்பு வலியெல்லாம் தனக்கு வயதாவதை மைதிலிக்கு தெரியபடுத்துகிறது. அன்று எல்லா வேலையையும் முடித்து விட்டு, டிவியில் தனக்குப்ப் பிடித்த சீரியலைப் பார்க்க உட்காரும் போது, வாசலில் நிழலாடியது. யாரென்று பார்க்கப் போனாள் . தாடியும், மீசையுமாய், ஒட்டிய வயிறுமாய்,  ராமன் நின்றிருந்தான். மைதிலிக்கு, என்ன செய்வது, சொல்வது என்று புரியாமல்...திகைத்து நிற்க , மைதிலி ... என்று அவன் சொன்னவுடன் உருகித் தான்  விட்டாள்  மைதிலி. கண்களில் கண்ணீர்  ஆறாய்  பெருக அவனை உள்ளே உட்காரச்  சொல்லி, அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்து , விசாரிக்க ஆரம்பித்தாள்.

மைதிலியைத் துரத்திவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டதற்கு  நல்ல தண்டனை தனக்குக் கிடைத்து விட்டது என்றும், வந்தவளுடைய  நடத்தை சரியில்லாததால் , அவள் வேறு யாருடனோ சென்று விட்டதாகவும், அதற்குப் பிறகு தனக்கு, வாழ்க்கையில்  பிடிப்பு இல்லாமல் போகவும், வேலை  போய்,அவன் அம்மாவும் இறக்க இவன் அனாதையாயிருக்கிறான். 

மைதிலியின் இருப்பிடத்தை எப்படியோ தேடிக் கண்டு பிடித்து வந்து விட்டான். அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டு, பேனைப் போட்டு  தூங்கச் சொல்லி விட்டு  வக்கீல் வீட்டிற்கு சென்று விவரம் தெரிவிக்க சென்றாள் மைதிலி.


வக்கீலின்  மனைவி  அதற்குள் வந்து," மைதிலி, உனக்கு ஒரு நல்ல செய்தி. நீ அமெரிக்கா செல்ல விசா வந்து விட்டது. அக்ஷயா  அடுத்த  மாதத்திற்கு டிக்கெட் வாங்குவதாக சொல்லி  விட்டாள் . " என்று சொன்னதும், இவள் ராமனைப் பற்றிய விவரங்கள் சொல்லவும், அக்ஷ்யாவிற்கு உடனடியாகத் தெரிவிக்கப் பட்டது.

அக்ஷயா உடனே அவள் அம்மாவுடன் போனில் பேசி விவரம் அறிந்து கொண்டாள். " நீ தாய்மை அடைந்திருப்பதை கூட பொருட்படுத்தாமல்  உன்னை வெளியே அனுப்பியவரை என் அப்பா என்று சொல்லவே எனக்குப் பிடிக்கவில்லை..இவருக்காக நீ அமெரிக்கா வர மாட்டேன் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் டிக்கெட் வாங்கி அனுப்புவது உறுதி. நீ வந்து தான் தீர வேண்டும் " என்று முரண்டு பிடிக்க. , மைதிலி ராமனைப் பார்த்தாள் .

அவனோ அலமாரியில் இருந்த அக்ஷயா திருமண போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். போனில் மைதிலி பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தான். மகளுடன் பேச அவன் நினைத்தாலும் , அவள் அப்பா என்று ஏற்றுக் கொள்வாளா?இத்தனை நாட்கள் இவர்களைத் தவிக்க விட்டுவிட்டு  இப்பொழுது அவர்களுடன் வாழ்க்கையைக் கொண்டாட, அவன் மனது இடம் கொடுக்கவில்லை.என்ன  செய்வது? யோசித்தான்.

அன்றிரவு, சாப்பிட்டு முடித்தவுடன், மைதிலி உறங்கி விட்டாள்  என்று தெரிந்து கொண்டு  ஒரு பேப்பரை எடுத்து, " உன்னிடம்  நான் மன்னிப்பு கேட்கவே வந்தேன்,. இனி உன் வாழ்க்கையில் எந்த  சங்கடமும் என்னால் வர வேண்டாம்  ,அதனால் நான் முதியோர் இல்லம் ஒன்றிற்குப் போகிறேன்.  என்னைப் பார்க்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம். உன் மகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துக் கொண்டே என் மீதி நாட்களைக் கழிக்கப் போகிறேன். அது தான் நீ என்னை மன்னித்ததற்கு அடையாளம் என்று சொல்லி  கடித்தத்தை முடித்திருந்தான். " அவள் முகம் திருத்தும் கன்னாடிக்கும் சுவற்றிற்கும் நடுவில் செருகி ,வைத்து விட்டு  போய் விட்டான்.

காலை எழுந்ததும், மைதிலியின் கண்ணில் இந்தக் கடிதம் தென்பட்டது. படிக்க, படிக்க  கண்ணீர் தரை தாரையாக  வழிந்துக் கொண்டிருந்தது. கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டேயிருந்தாள் . போன் மணியடித்து அவள் கவனத்தைத் திருப்பியது. போனில் அக்ஷயா," என்ன டிக்கெட் வாங்கிடலாமா ?"
என்று கேட்க, இவள் நடந்ததை சொன்னாள் . " அம்மா கவலைப் படாதே,நானும் ,அங்கு வரும் போது இருவருமாக அவரைப் போய் பார்க்கலாம்." என்று சொன்னாள் . அப்பா என்று சொல்வதை அவள் தவிர்த்தது மைதிலிக்குப் புரிந்தது. அக்ஷயா , அப்பா இல்லாததால்  பட்ட சிறு வயது அவமானங்கள் ,சங்கடங்கள் எல்லாம் தான் , அப்பா என்கிற வார்த்தையையே   அவள் வெறுக்கக் காரணம்,என்று மைதிலிக்குத் தெரியும்.   இந்தளவாவது இங்கு வரும் போது அவரைப் பார்க்கலாம் என்று சொல்கிறாளே என்று  சமாதானப் பட்டுக் கொண்டாள்.  

ஆனால் அக்ஷயா  அவள் அப்பாவை இந்தியா வரும் போது பார்ப்பாளா?

அக்ஷயா "அப்பா அப்பா "என்று ஏங்கும் போது ,அக்ஷயா எட்டி பிடிக்க  முடியாதத் தூரத்திலிருந்தான் ராமன். இப்போது அக்ஷயா,  ராமனின் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறாள். ஆனாலும் அவளிடம் பேசக் கூட முடியாத நிலைமை அவனுக்கு.  

ஒரு அப்பாவிற்கு  இதை விடப் பெரிய தண்டனை இருக்க முடியுமா?

Tuesday 3 March 2015

காக்காக் கூட்டத்தைப் பாருங்க.........
அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க....

இந்தப்  பதிவைப் படித்து முடிக்கும் போது  உங்கள் மனதிலும்  மேற்கண்ட  கேள்வி  எழாமல் போகாது.

நான்கைந்து நாட்களுக்கு முன்பாக  முக நூலில்  காக்கையைப் பற்றிய ஒரு குட்டி விவாதம்  படிக்க நேர்ந்தது.
காகம்  ஏமாற்றுமா ?......... இல்லை  ஏமாறுமா  என்பதைப் பற்றித் தான் அந்த விவாதம் .

சின்ன வயதில் நாம் கேட்ட காக்கா கதையில் பாட்டியை  ஏமாற்றி விட்டு வடையைத்  திருடிய காக்கை , நரியிடம் ஏமாந்து விடுகிறது.  அதன் குணம் என்ன? ஏமாற்றுமா?....இல்லை ...... ஏமாறுமா? இதில் சற்றுக் குழம்பினேன் . இருக்கவே இருக்கிறாரே  நம் கூகுள் ...அவரிடம் கேட்போம் என்று பஞ்சாயத்திற்கு  அவரிடம் சென்று கேட்டதில்  எனக்குப் பதில் கிடைத்தது. ஆனால் அதைவிட  ஆச்சர்யங்கள் நிறைந்ததாய் இருந்தது நான் படித்த காகத்தின் உலகம். ஏழெட்டு வருடங்களே வாழும் காகங்கள்  எத்தனை புத்திசாலிகள்  என்பது வியக்க வைக்கும் விஷயம்.

காகத்தைப் பற்றி நான் அறிந்து அதிசயித்த சில விவரங்கள் இதோ :
எங்களுக்குத் தெரியாததா நீ எழுதி விடப் போகிறாய்  என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது. ஆனாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால் பொறுத்தருளுங்கள்.


  • நம்முடைய இயற்கை அலாரம் டைம்பீஸ்  காக்கை தான் என்பதை எல்லோரும்  ஒத்துக் கொள்வீர்கள் தானே.
  • அதே போல் காலை  எழுந்தவுடன் அவசியம் ஒரு குளியலும் போட்டு விடும் காக்கை என்பது ஆராய்ச்சியாளரின்  கருத்து. காகமே, காக்காய்    குளியல் தான் குளிக்கும்  என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  • மூளை, உடல் விகிதாசாரம்  பறவையினங்களிலேயே காகத்திற்குத் தான் அதிகமாம்.  என்ன தான் சொல்ல  வருகிறாய்? கொஞ்சம் புரியும்படியாக சொன்னால் தான் என்ன  என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. காகத்தின் மூளையின் அளவு மற்ற எல்லாப் பறவையைக் காட்டிலும் சற்றே பெரிது  என்று தான் சொல்ல வருகிறேன்.
  • பன்றி இறைச்சியை விடவும் காகத்தின் இறைச்சி ஆரோக்கியமான உணவாகும். ( பலருக்கும் விவேக்கின் ஜோக் நினைவிற்கு வரலாம்.)
  • காகத்தின்  கரைதலுக்கு  அர்த்தம் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சில  மனிதர்களைப் பார்க்கும் போது  நம்மைக்  கண்டுக்கொண்டதற்கு அடையாளமாக    தனித் தன்மையுடன்  கா....கா..... என்று கரைகிறது என்று  சொல்வது சற்றே வியப்பளிக்கும்  விஷயமாகும் .
  • காக்கை மற்ற விலங்குகளின்  உடம்பில் இருக்கும் அழுக்கை நீக்கும் என்பதுத் தெரியும்.  அது  பேன்  போன்ற ஒட்டுண்ணிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள  என்ன செய்கிறது தெரியுமா? எறும்புகளைத் தன்  காலால் தேய்த்துக்  கொன்று, அதைத்  தன்  உடம்பு முழுதும்  சென்ட்டைப் போல் பூசிக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்கின்றன. .  
  • .ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காகங்கள்  மிகவும் அருமையாய் கடைப் படிக்கின்றன  என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.  விதி விலக்குகள் இருக்கலாம் .ஆனால் அது சொற்பமே. ஆக, அங்கே விவாகமும் இல்லை, விவாகரத்தும் இல்லை. குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லை. குழந்தைகள்  அனாதைகளாக ஆக்கப்படுவதில்லை. அத்தனை உன்னதமான ஒழுங்குக்குள் அவை வாழ்கின்றன.  குடும்ப ஒற்றுமை நம்மிடையே   சீர்குலைந்திருக்கும் இத்தருணத்தில் கண்டிப்பாக நாம் காகத்தைப் பார்த்துக்  கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று இது.  
  • அதே போல்  கருணைக் கொலைகளும் அவைகளிடையே சர்வ சகஜம் . என்ன ஒன்று.......... அது ஒரு கருணைக் கொலை என்று நமக்குப் புரிவதில்லை. அவ்வளவே. ஒரு காகம் அடிபட்டோ , அல்லது மரணிக்கும்  தருவாயில் இருக்கும் போதோ  நூற்றுக் கணக்கில் காகங்கள் அங்கே சூழ்ந்துக் கொள்வதைப் பார்த்திருப்போம். முதலில் காப்பாற்றவே முயல்கின்றன.  காப்பாற்ற முடியாத சமயத்தில், மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகத்தை மற்றக் காகங்கள் சேர்ந்து அலகாலேயே குத்திக் கொன்று சீக்கிரமே வைகுண்டத்திற்கு அனுப்பி  வைக்கின்றன.கருணைக் கொலைக்கு எந்த நீதிமன்றத்திலும் அவைகள் அனுமதி வாங்க வேண்டியதில்லை.

காகம் பானைக்குள் கல்லைப் போட்டு  நீர் மேலேழும்பியதும் தன் தாகம் தீர்த்துக் கொண்டக் கதை நமக்குத் தெரியும். 
இதை ஆராய்ச்சி செய்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் காகத்திற்குத்   தண்ணீர்,  புழு , கல் எல்லாம் கொடுத்து  என்ன செய்கிறது என்பதை  வீடியோ எடுத்திருக்கிறார்கள். என்ன தான் செய்கிறது என்று பாருங்களேன். 
இந்த வீடியோவைப் பார்த்ததும்  என்   மனதில் தோன்றிய  கேள்வி,
" அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க? "


image &video courtesy--google 

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்