Wednesday 17 May 2017

பிருந்தாவிடமிருந்து வந்த மிரட்டல்!



நான் பதவியேற்றுக் கொண்ட இரண்டாவது நாளே பிருந்தாவிடமிருந்து  மிரட்டல் வந்தது.

என் எதிரே அமர்ந்திருந்த பிருந்தா,  குனிவதும், நிமிர்வதுமாகவே இருந்தாள். நான் சொல்வது எதையும் அவள் லட்சியம் செய்வதாகத் தெரியவில்லை.நானோ பேசிக் கொண்டேயிருந்தேன்.ஆனால் அவளோ குனிவதும், நிமிர்வதுமாகவே இருந்தாள்.

'ஒன்று நான்  சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையா  எழுந்து போக  வேண்டும்.யார் தடுத்தார்கள் ? ' என்று கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன்.

பதவி ஏற்றுக் கொண்ட இரண்டாவது  நாளே இப்படியா?.. சற்றே மலைப்பாக இருந்தது. எப்படி பணியைத் தொடரப் போகிறேனோ  என்கிற கவலைப் பெரிய பெருமூச்சாய்  வெளியேறியது.

"பிருந்தாவைத்  தவிர்த்து விடு.இரண்டாம் நாளே ஏதாவது பிரச்சினையில் மாட்டிக் கொள்ளாதே  " என்று என் மூளைக் கட்டளையிட்டது.

ஆனால் கண்கள், மூளை சொல்வதைக்  கேட்டால் தானே!"கண் முன்னே அமர்ந்திருப்பவளை எப்படித் தவிர்ப்பது?"  கண்கள் கேட்டன.

மூளைக்கும் , கண்ணிற்கும் நடந்து கொண்டிருந்த போராட்டம் சில நிமிடம் கழித்து ஒரு முடிவிற்கு வந்தது.
ஆம். போராட்டத்தில்  கண்கள் வென்றன.

இதற்கு மேல் அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது என்று என் உள்ளமும் இப்பொழுது கொடிப் பிடிக்க ஆரம்பிக்க,,
" பிருந்தா ! எழுந்திரு."  என்று கட்டளையிட்டேன்.

யாரையோ  நான் சொல்வது போல் பிருந்தா அமர்த்தலாக உட்கார்ந்திருக்க, கோபத்துடன்
" பிருந்த உன்னைத் தான் சொல்கிறேன் . எழுந்து வெளியே போ." குரலை உயர்த்தி பிருந்தாவைப் பார்த்து சொன்னேன்.

இதற்காகவே  காத்திருந்தாற் போல் , பிருந்தா  எழுந்து வெளியேறினார். ஆனால் போவதற்கு முன்பாக , என்னைப்  பார்த்து  ஒரு மிரட்டல் பார்வையை வீசத் தவறவில்லை.
அவள் வெளியே போகும் போது தான் அவள் கையை கவனித்தேன்.
கையில் அவள் வைத்திருந்தைப் பார்த்ததில்  என் அதிர்ச்சி பல மடங்காகியது.

அது என்ன கையில்? கோபத்துடன் கேட்டதற்கு., பிருந்தா ," நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் "என்று என் கையில் திணித்தாள்.

நல்ல வேளையாக  அவ்வழியே வந்த என் உயரதிகாரி  , என் கையில் இருப்பதைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால்.....என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?  என் மானம் அல்லவா கப்பலேறியிருக்கும்.

அவர் பிருந்தாவை விசாரிக்க ஆரம்பிக்க, அவள் ஓவென்று  அழ ஆரம்பிக்க அங்கிருந்த  எல்லோரும் என்னைக் குற்றவாளிக் கூண்டில்  நிற்க வைத்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அட... இப்படியெல்லாம் கூட செய்வார்களா? என்ன தைரியம் வேண்டும்  ! என்று ஆதங்கப்ட்டுக் கொண்டே நான்  இருக்க,  பிருந்தாவின் அழுகை ஓய்வதாயில்லை.

அவளைத் திட்டிய உயரதிகாரியோ போய் விட்டார். நானும் பிருந்தாவும் அறைக்கு வெளியே தனியே விடப்பட்டோம். எனக்கு இது புது அனுபவம். என் கையில் அவள் கொடுத்தது.  என் கைகளில்  நடுக்கத்தை ஏற்படுத்தியது . அதை  நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லையே!

ஆனால் பிருந்தாவிற்கோ .....இது பழக்கம் போலும்.  சட்டென்று அழுகை நின்று  போனது.  பிறகு 'நான் என்ன செய்ய' என்பது போல் என்னைப் பார்க்க  ஒன்றும் சொல்லத் தெரியாதவளாய்  நின்று கொண்டிருந்தேன்.

ஒரு சில வினாடிகள் தான். பிறகு சுதாரித்துக் கொண்டேன். அவள் என் கையில் திணித்த பாக்கெட் நாவலைக் காட்டி ,'இது முதல் முறை என்பதால் மன்னிக்கிறேன். .இனி ஒரு முறை நீ இப்படி நடந்து கொண்டால்....நீ  வரவே வேண்டாம்...........என் வகுப்பிற்கு'  என்று நான் கோபத்துடன் பொரிந்து தள்ளவும்,.

"சாரி....".அதையும் ஒரு மிரட்டல் தொனியில் சொல்லி விட்டு, ஒன்றுமே  நடவாதது போல் வகுப்பில் போயமர்ந்தாள் பிருந்தா.

அதே பிருந்தா ஒரு மாதத்திற்குள்  என் ஆதர்ச மாணவியானது தனிக் கதை.

இரண்டாம் நாள் விவகாரம் இப்படியென்றால் முதல் நாள் என் பதவி ஏற்பு  வைபவம்  எப்படி நடந்திருக்கும் என்று  தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்..


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்