Wednesday, 28 November 2012

ஆணிற்கு பெண் சரி நிகர் சமம்

மூன்று வருடத்திற்கு ஒரு முறை மாற்றலாகும் வங்கி மேலாளரின்    மனைவி நான்.  மாற்றலாகிப் போகும் ஊர்களின் பாஷை புரிந்து,கலாச்சாரம் தெரிந்து   நாங்கள் அவ்வூருடன் ஒன்றுவதற்குள் திரும்பவும் மூட்டைக் கட்டத்
தொடங்கிவிடுவோம் .

எங்கேயா?

அடுத்த ஊருக்குத்தான்.

அப்படித்தான் ,கர்நாடகாவில் ' தாவண்கெரெ ' என்ற ஊருக்கு வந்தோம்.

அங்கு 'அவுட் அன்ட் அவுட்' கன்னடா தான் பேசியாக வேண்டும்.பெங்களூரில் சில வருடங்கள் குப்பைக் கொட்டி விட்டுத் தான் இங்கு வந்தோம்.அங்கு நாங்கள் குடியிருந்தது 'அல்சூர்'க்கு மிக அருகில்.அதனால்  தமிழை வைத்தே ஓட்டி விட்டேன்.இப்பொழுது மாட்டிக் கொண்டேன்.

ஒரு வாரம் சத்தமில்லாமல் போனது.யாரிடமாவது பேசினால் தானே!
அட்டைப் பெட்டியைப் பிரிக்கவும் சாமான்களை அடுக்கவும் சரியாயிருந்தது.

அன்று என் கணவர் ஆபிஸ் சென்றதும்  வீட்டு பெல் அடித்தது.   பார்த்தால் பக்கத்து வீட்டுப் பெண்மணி.   கதவைத் திறந்ததும் சினேகமாக சிரித்தார்.
நானும் சிரித்து வைத்தேன்.  அதற்குப் பிறகு என்னமோ கன்னடாவில் "பட பட" வென்று மூச்சு விடாமல் பொரிந்து தள்ளினார்.
எல்லாவற்றிற்கும் என் பதில் ஒரு தலையாட்டல் ,அசட்டுத்தனமாய் ஒரு
ஹி........ஹி........ஹி.........தான்.(ஏதாவது புரிந்தால் தானே)

நடுவில்" எஜமானரு", ஆபிஸ் என்று சொன்னது புரிந்தது.
பயந்து போனேன்.நம்மை வீட்டில் சமையல் வேலை செய்பவர் என்று புரிந்துகொண்டாரோ. எஜமானர் ஆபிஸ் போய் விட்டாரா? என்று கேட்கிறார் என்று மட்டும் புரிந்தது.
என் மாமியார் என்னை விட அதிர்ந்து போய்விட்டார் போலிருக்கிறது.
என்னைக் காட்டி "என் மருமகள்" என்று ஜாடையால் புரிய வைக்க முயன்றார்.
புரிந்தது மாதிரி அப்பெண்மணி சிரித்து வைத்தார்.

இரண்டு நாட்கள் சென்றிருக்கும். அந்தப் பெண்மணி மட்டுமல்ல எதிர் வீட்டினரும்  "நிம் எஜமானரு எல்லி?" என்று கேட்க
நான் அதிகமாக குழம்பினேன்.

யாரிடமாவது என் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனம் நிலை கொள்ளாமல் அலைந்தது.

என் மகள் ,"உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்பவர்க்கு நீ ஆயிரம் பொன் பரிசு என்று அறிவித்து விடு" என்று கிண்டலடித்தாள்.

நல்லவேளையாக சீக்கிரமே ஒரு தமிழ் குடும்பத்துடன் நட்பானோம்.
ஆரம்பக்கட்ட  குசல விசாரிப்புகளுக்குப் பிறகு என் மில்லியன் டாலர்
சந்தேகத்தை கேட்டேன்.

அதற்கு அவர்கள் பெரிதாக சிரித்து விட்டு,"எனக்கும், வந்த புதிதில், உங்களைப்
போல் தான் சிறிது குழப்பமாக இருந்து.  நமது வீட்டுக்காரரைத் தான் கன்னடாவில்'எஜமானர்' என்று குறிப்பிடுவார்கள் " என்றார்.

'ஆணிற்கு பெண் சரி நிகர் சமம் ' என்று நினைக்கும் பாரதி படைத்த புதுமைப்பெண்ணாய் இருக்க நினைக்கும் எனக்கு அவர் சொன்ன பதில் ஒரு ஆறுதலாய் இருந்தது.

ஒரு வார்த்தை,
வேறு வேறு மொழி,
வெவ்வேறு அர்த்தம்.

அனைத்தும் புதுமை,
அவ்வளவும் இனிமை.







Sunday, 25 November 2012

பிராட்பேண்ட் ரிப்பேர்


ஒரு சின்ன கற்பனை.

ஒரே ஒரு நாள் நம் இன்டர்னெட் ரிப்பேர்.
கூடவே,செல்போனும்,டிவி யும் வேலை செய்யவில்லை.
நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது.
ஒரே ஒரு நாள் தான்.அதுவும் கற்பனை தானே
என்ன ஆகும்?

 கட்ட வேண்டிய பில்கள் எல்லாம் பெண்டிங்.(EB பில் உட்பட)

போக வேண்டிய புது இடத்திற்கு வழி தேட முடியாது.(இன்டர்னெட்  map இருக்காதே)

புது மனைவி சமைக்கவில்லை.('யு ட்யூப்'  இல்லையே, எப்படி  சமைப்பதாம் என்கிறாள்).
 கணவனுக்கு ஜாலி.(இன்றைக்காவது நல்ல ஹோட்டல் சாப்பாடு சாப்பிடலாம்)

குழந்தைகள் ஹோம் வொர்க் அம்பேல்.(சில பள்ளிகளில் சில வற்றை நெட்டில் தேடியாகவேண்டும் என்கிறார்கள்)
குழந்தைகளுக்கு குஷி.

பெண் / மாப்பிள்ளை தேடுவதில் தாமதம்.
(பல வாலிபர்கள் தப்பிப்பார்கள்.)

ஈ மெயில்,  கொசு மெயில் எதுவும் இருக்காது.
(கை ஒடிந்தாற் போல)

ஆன் லைன் ஷாப்பிங் ஆஃப்

இப்படி பல சிரமங்கள்.

ஆனால்,

இன்று கணவனும், மனைவியும் மனம் விட்டு பேசிக் கொள்கிறார்கள்.ஆசைத் தீர. ஈ மெயில் கொசு மெயில் எதையும் செக் செய்ய வேண்டாம்.

குழந்தைகள் அப்பா முதுகில் 'உப்பு மூட்டை' ஏறிக் கொண்டு அம்மாவிடம்  'பஜ்ஜி செய்'  என்று அடம் பிடிக்கலாம்.

சாப்பிட்டுக்கொண்டே தாத்தா, பாட்டியிடம் ராமர் கதை கேட்கலாம்.(அதான் டிவி  இல்லையே)

தாத்தா, பாட்டியிடம் பழங்கதைகள் பேசலாம்.

நடந்து போய் பில் கட்டலாம்(தினமும் நடந்தால் டயபிடிஸ் கட்டுப்பாட்டில் இருக்கும்.இதய நோய் வராது.டாக்டர்கள் பாடு திண்டாட்டம்)

 வாக்கிங் என்று தனியாக போக வேண்டாம்(பூங்காவிற்கு வரும் காதலர்களுக்காவது  கொஞ்சம்   பிரைவசி கிடைக்கட்டுமே).

பெண்ணிற்கு மாப்பிள்ளை தேட  தூரத்து அத்தை/ மாமாவிற்கு  போன் செய்து பேசி அந்த சாக்கில் அவர்களை குஷிப்படுத்தி நாமும் குஷியாகலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் இல்லை.ஆட்டோ பிடித்து டிரைவரிடம் ஒரு ஐந்து ரூபாய்க்காக பதினைந்து நிமிடம் பேரம் பேசி புடவைக் கடைக்கு சென்று
கணவனை வெளியே இருக்கும் சேரில் உட்கார வைத்து,அழும் குழந்தையை
கையில் கொடுத்துவிட்டு நாம் மணிக் கணக்காய் புடவை செலக்ட் செய்யலாம்.

முக்கியமாக நம் கணினிக்கும், கண்ணிற்கும்,கைக்கும் ரெஸ்ட்.

பக்கத்து வீட்டு மாமியிடம் வம்பளக்கலாம்.புது ரெசிபி தெரிந்து கொண்டு
வீட்டினர்க்கு செய்து கொடுத்து அவர்கள் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் தவிப்பதை ரசிக்கலாம்.

நிறைய படிக்க ,எழுத நேரம் இருக்கும்

சுருக்கமாக சொன்னால் தனித்தீவாக இல்லாமல் சமுதாயமாக வாழலாம்.

ஆனால்,

என்னுடைய இந்த பதிவு அச்சில் வர இன்டர்னெட் வேண்டுமே.இல்லையென்றால்
பத்திரிக்கைகளுக்கு எழுதிவிட்டு இந்த வாரம் வருமா?அடுத்த வாரம் வருமா?
அல்லது......
இன்னும் நிறைய கஷ்டங்கள்


இது போல் எத்தனை பேருக்கு என்னென்ன  முடியாதோ?

பி.கு: பட உதவி கூகுள்
           வியாபாரத்திற்கோ,லாப நோக்கிற்கோ உபயோகப்படுத்தவில்லை.
கூகுளிற்கும்(பட உதவிக்கு), என் கணவருக்கும்(எடிட்டிங்கில் உதவியதற்காக)
நன்றி.

Saturday, 24 November 2012

வேண்டுமே--மோர்

நாங்கள் பள்ளி ஆசிரியைகள் எட்டு பேர் சேர்ந்து ஒரு ஆன்மீக சுற்றுலா கிளம்பினோம்.ஐந்துநாட்கள் தான்.எங்கள் பள்ளி மைலாப்பூரில் மிகப் பிரபலமான ஒன்று.கபாலீஸ்வரர் கோவிலருகில். கோவிலின் உற்சவத்தின் போது மயிலையே கயிலை போல்தானிருக்கும்.எங்களுக்கும்லோக்கல் ஹாலிடே.ஒவ்வொரு வருடமும் நாங்கள் அந்தத் திருவிழாவை தவறாமல் அனுபவித்து இறைவன் அருள் பெறுவோம்.ஒரு வருடம்  சுற்றுலா கிளம்பினோம்.முதலில் பெங்களூர் செல்வதாகப் பிளான்.ஒவ்வொருத்தியாக சென்ட்ரல் ஸ்டேஷனை வந்தடடைந்தோம்.s2  கோச்சில் ஏறி அமர்ந்து அவள் வந்து விட்டாளா ? இவள்? என்று பதைபதைப்புடன் காத்திருந்தோம்.எங்களில் ஒருத்தி வர மிக லேட்.ஒரே படபடப்பு.பெரும் முயற்சிக்குப் பிறகே (எட்டு குடும்பங்களின் தலைவிகளை ஒரே சமயத்தில்  வீட்டுப் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பது லேசா? ) இந்த ட்ரிப் சென்ட்ரல் வரை வந்திருக்கிற்து.எந்த வில்லங்கமும் இல்லாமல் தொடரவேண்டுமே என்ற பயம் தான்.ஒரு வழியாக தோழியும் வந்துசேர்ந்தாள்.ஒரு குலுக்கலுடன் மெயிலும் கிளம்பியது.
காலை பெங்களூர் வந்து அங்கிருந்து பஸ் மூலம் தர்மஸ்தலா வந்து சேர்ந்தோம்.பசி வயிற்றை கிள்ள ஆரம்பித்தது.அருகிலிருந்த ஓட்டலிற்குச் சென்றோம்.சூடான தோசை கமகம சாம்பார்,சட்னியுடன்வேக வேகமாக உள்ளேச் சென்று கொண்டிருந்தது.ஒருத்தி கொஞ்சமாக மோர் குடிக்க வேண்டும்.என்றாள்.அங்கே ஆரம்பித்தது கலாட்டா.இது வரை கன்னடா மொழி தெரியாதது ஒரு பெரிய கஷ்டமாக தெரியவில்லை.சர்வரைக் கூப்பிட்டு 'மோர்' என்றோம்.அவர் அப்படி என்றால் என்ன என்பது போல் எங்களைப் பார்க்க, நாங்கள் பந்தாவாக 'பட்டர் மில்க்' என்றோம்.ஊஹூம்...... அவருக்கு சுத்தமாகப் புரியவில்லை.இன்னொருத்தி அவரிடம் தன்னீரைக் காட்டி இது 'வைட்' கலரில் வேண்டும் என்று கூற உடனே அவர் 'மில்க்?' என்றார். மோரே  வேண்டாம் என்று தீர்மானித்து 'கர்ட்' வேண்டும் என்றோம்.நல்ல வேளையாக புரிந்தது சர்வருக்கு.தயிர் வந்தது.தயிரில்  கொஞ்சம் நீர் ஊற்றி மோராக்கிக் கொண்டிருந்தோம்.இப்பொழுது அவருக்கு புரிந்து விட்டது.பெரிதாக சிரித்துக் கொண்டே 'மஜ்ஜிகே பேக்காயித்தா' என்றுக் கேட்டு க்கொண்டு வந்த மோரைக் குடித்துவைத்தோம்.பின் ஓட்டல் ரூமிற்குச் சென்று சரியான  தூக்கம்.
மறு நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து  காபி குடித்துவிட்டு மஞ்சுநாதனை தரிசிக்க சென்றோம்.நல்ல கூட்டம்.க்யுவில் நின்று 'காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி 'சிவனிடம் வேண்டிக்கொண்டுஅவன் தாள் பணிந்து பிரகாரம் சுற்றினோம். அகிலத்திற்கே அன்னமளிப்பவன் எங்களை மட்டும் பசியோடு போக விடுவானா என்ன?பக்தர்கள் அனைவருக்கும் தரமான உணவு அளிக்கிறார்கள்.உண்டுவிட்டு 'சுப்பிரமணியா' சென்று வள்ளிக் கணவன் அருள் பெற்று அங்கிருந்து உடுப்பி சென்றோம் குழந்தை கண்ணனை சேவிக்க.அப்பப்பா.......என்ன ஒரு அழகு ? அந்த வெண்ணெய் திருடனை காணக் கண் கோடி வேண்டும்.சாளரம் வழியாக 'யசோதை மைந்தனை,நீல நிறத்து பாலகனை ' பார்த்துக்கொண்டே இருக்கலாம் .இன்னமும் அந்த கிருஷ்ணன் உருவம் மனதிலேயே நிற்கிறான்..எங்கிருந்திருந்தோ   காற்றிலே மிதந்து வந்த 'மாணிக்கம் கட்டி 'என்ற திவ்யப்பிரபந்த பாடல் சன்னதியிலேயே எங்களை கட்டிப் போட்டது.பிறகு பூசைக்கு உடுப்பி மத்து வாங்கிக் கொண்டு இரண்டு ஆட்டோ பிடித்தோம் பஸ் ஸ்டாண்ட் செல்ல.திரும்பவும் மொழிப் பிரச்சினை. ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டோக்கள் பறந்தன. திடீரென்று திரும்பிப் பார்த்தால் எங்கள் பின்னால் வந்தஆட்டோவை காணவில்லை.டிரைவரிடம் நிறுத்த சொன்னோம்.டிரைவரோ காதில் வாங்காமல் ஓட்டிக்கொண்டிருந்தார்.
தமிழ் புரியவில்லை என்பது அப்பொழுது தான் உரைத்தது.'ஸ்டாப் ஸ்டாப் ' என்று கத்தினோம்.அதல்லாம் டிரைவர் காதில் விழவேயில்லை.வேகமாக போய்க் கொண்டே இருந்தது. ஆபத்திற்கு பாவமில்லை என்று பின்னாலிருந்துஅவர் சட்டையை இழுத்தோம்.கோபமாக திரும்பி பார்த்தவுடன் 'ஆயுஷ்மான் பவ' என்பதுபோல் கையால் சைகை செய்த பின்னரே ஆட்டோ நின்றது.வேறு ரூட் எடுத்திருந்த ஆட்டோ ஒருவழியாக வந்து சேர்ந்தது.பின்னர் பஸ் ஸ்டாண்ட் வந்தோம்.பஸ்ஸில் பெங்களூர் வந்து ,ரயிலில் சென்னை வந்து சேர்ந்தோம்.
எங்கள்அனுபவங்களை சக ஆசிரியைகளுடன் பகிர்ந்து கொண்டோம்.மஞ்சுநாதன் ,வள்ளி மனாளன்,கீதை கொடுத்த கிருஷ்ணன் தரிசனம் பற்றி மட்டுமா சொன்னோம்.மோர் ரகளை, ஆட்டோ அட்டகாசம்,பற்றியும் தான்!!!

Friday, 23 November 2012

என் ரயில் பயணம்

ஒரு முறை எனக்கு ரயிலில் எற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அப்பொழுது நான் ஹைதராபாதிலிருந்த எனபெண்ணின் வீட்டிலிருந்து சென்னை திரும்பிகொண்டிருந்தேன்.ஹைதராபாத் ஸ்டேஷன் வந்து சார்மினார் எக்ஸ்ப்ர்ஸில் ஏறி ,வழியனுப்ப வந்திருந்த என் பெண்,மாப்பிள்ளை,பேரன் எல்லோரிடமும் பிரியா விடை பெற்றுக் கொள்ளவும்,சார்மினார் ஒரு பெரிய பெருமூச்சை விட்டபடி கிளம்பவும் சரியாக இருந்தது.என் பேரனை பிரியும் வருத்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள கையில் வைத்திருந்த குமுதத்தில் ஆழ்ந்தேன்.அரை  மணியில் செக்ந்திராபாத் ஸ்டேஷன் வந்தது.நிறைய பேர் இந்த ஸ்டேஷனில் தான் ஏறினார்கள்.எல்லோரும் அவரவர் பர்த்தைத் தேடிப் பிடித்து அமர என் எதிரில் ஒரு கர்ப்பிணிப் பெண் தன் குடும்பத்துடன் அமர்ந்தாள்.
நான் ஜன்னலோர சீட்டில் அமர்ந்து மரங்களும், வீடுகளும்,மனிதர்களும்வேகமாக பின்னோக்கி நகர்வதை ரசித்து விட்டுத் திரும்பிய போது என்னருகில் 18வ்யது மதிக்கத்தக்க பெண்னும் அவள் தாயும்(என் வயதிருக்கும்)அமர்ந்திருந்தனர்.ஒரு சில நிமிடங்களில் எல்லோரும் உண்ண ஆரம்பித்திருந்தனர்.கம்பார்ட்மெண்ட்டே'கம்' என்று பல வகையான உணவின் மணம் வீசி, பசியைத் தூன்டியது.நானும் என்னுடைய தயிர் சாதத்தை உண்டுவிட்டு உறங்கத் தயரானேன்.கோச் அட்டெண்ட்டர் வைத்துவிட்டுப் போன கம்பளியைக் கையில்எடுத்துக் கொண்டே அருகில் அமர்ந்த பெண்கள் சாப்பிட்டு விட்டார்கள் என்று உறுதி செய்து கொண்டு 'படுக்கலாமா? பர்த்தைப் போடலாமா? என்றுக் கேட்டேன்.அந்தப் பெண் அதற்கு சில நொடிகள் தயங்கினாள்பிறகு என்னைப் பார்த்து,'ஒரு சின்ன உதவி' என்றாள்.என்ன என்பது போல் அவளை நான் பார்க்க,அவள்,'என் அம்மாவிற்கு லோயர் பர்த் இருந்தால் நன்றாக இருக்கும் .உங்களால்  உதவ முடியுமா?என்று மிகவும் தயங்கிக்கொண்டே கேட்டாள்.நான் கர்வத்தோடு (திமிராக என்றும் கூறலாம்)'என்னால் மேலேயெல்லாம் படுக்க முடியாது. என்று பட்டென்று கூறினேன்.(ட்ரெயின் டிக்கெட் வாங்கிவிட்டால் ஏதோ ட்ரெயினையே விலைக்குவாங்கி விட்டதாக எனக்கு நினைப்பு.).உடனே பர்த்தைப் போட்டேன்.படுத்துக் கொண்டேன்.படுத்துக் கொண்டதும் தூங்கினாற்போல் கண்களை மூடிக்கொண்டேன்.நடிப்பு தான்.எங்கேயாவது திரும்பவும் என் பர்த்தைக் கேட்டுவிடப் போகிறாளே என்ற பயம் தான் என் நடிப்புக்கு காரணம்.ஆனால காதுகளை மட்டும்திறந்து வைத்துக்கொண்டேன்,என்னைச் சுற்றி நடப்பதைக் கேட்பதற்காகஅந்தப் பெண் தன் தாயாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்,"யாரிடம் கேட்பது தெரியவில்லை? இங்கே வயதானவர்,அங்கே கர்ப்பினிஒன்று செய்யலாம்.உன்னால் மிடில் பர்த்தில் ஏற முடியாது அல்லவா?நீ தரையில் படுத்துக் கொள்கிறாயா?என்று கேட்க அந்தத் தாயோ,'சரி வேறென்ன செய்வது? என்று சம்மதித்தாள்.
அப்பொழுது தான் எனக்கு லேசாக  சந்தேகம் தட்டியது.நம் வயது தானே இருக்கும்.ஏன் இத்த்னை ஸீன் போடுகிறாள்? என்று நினைத்துக் கொண்டே க்ண்ணைத் திறந்துப் பார்த்தேன்..மகள் போர்வயை கீழே விரிக்கஅவள் தாய் ஒரு கையால் ஸீட்டைப் பிடித்துக் கொண்டே மற்றொரு கையால் மகள் தோளில் கைவைத்துஸீட்டிலிருந்து மெதுவாக ஒரு குதி குதித்து இற்ங்கினாள். அப்பொழுது தான் பார்த்தேன் அவள் ஒரு மாற்றுத்திறனாளி.அதிர்ந்து போனேன்.என்ன ஒரு மனிதாபிமானமற்ற செயல் செய்ய இருந்தேன்?என்ன ஒரு நெஞ்சழுத்தம் எனக்கு? எப்படி வந்தது இந்த நெஞ்சழுத்தம்? என் மிடில் ஏஜினாலா? என் வசதியா? எதுவோ ஒன்று.ஆனால் அதற்காக வெட்கப்பட்டேன்(வெட்கப்படுகிறேன்) என் செய்கைக்கு வருந்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்களை லோயர் பர்த்தை எடுத்துக் கொள்ள்ச் சொல்லிவிட்டு மேலே ஏறி படுத்தேன்.
ஆனால் என் செய்கை என்னைத் தூங்கவிடாமல் தடுத்தது.சென்னை வரை புரண்டு புரண்டு படுத்தேன்.தூக்கம் மட்டும் வரவேயில்லை.அப்பொழுது நான் ஒரு பள்ளி ஆசிரியை வேறு.என் சக ஆசிரியர்களிடம் இதைப் பற்றிபுலம்பித் தீர்த்தேன்.
இன்றும் என் ரயில் பயனங்களின் போது இந்த நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்து என் நெஞ்சில் நெருடும். ஆனால்,இப்பொழுது மாறிவிட்டேன். அந்த மாதிரியெல்லாம் நான் கண் மூடித்தனமாக நடந்து கொள்வதில்லை.

தீபாவளி 'ஆச்சா'

சென்ற வாரம் வெளுத்து வாங்கிய மழையில் குடும்பத்துடன் தீபாவளீ ஜவுளிஎடுக்க மாம்பலம் சென்றிருதோம்.ஆட்டோவில் நான், என் மருமகள்,என் அம்மா மற்றும் என் ஒன்றரை வயது பேரன் (இந்த ப்ளாக்கின் கதாநாயகன்),

என் மகன் மட்டும் பைக்கில்.என் கணவர் வரவில்லை என்று கூறி விட்டுNDTVல் ஐக்கியமாயிருந்தார்.மழை அப்பொழுதுதான் சற்றே விட்டிருந்தது.

முதலில் ஒரு பிரபலமான கடைக்கு  சென்றோம்.எங்கு பார்த்தாலும் கூட்டம்,ஒரே தலை மயம்.இதில் எப்படி ஜவுளி எடுக்கப் போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் பேரன் 'ஓ' என்று அழஆரம்பித்து விட்டான்.அதனால் அங்கிருந்து கிளம்பி RMKV சென்றோம்.

நாங்கள் ஆட்டோவில் சர்ரென்று போய் இறங்கி விட்டோம்.என் மகன் பைக்கை பார்க் செய்ய முடியாமல் தின்டாடிவிட்டு இதை ஒரு காரணமாக வைத்து மீண்டும் வீட்டிற்குதிரும்புகிறேன் என்று போனில் சொல்லி விட்டு அவனும் NDTV பார்க்க சென்று விட்டான்.என் மருமகளின் முகத்தில் சிறிய வருத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் எனக்காகவும் என் 72 வயது அம்மாவிற்காகவும் முகத்தில் புன்னகை மிளிற எங்களுடன் கடைக்குள் நுழைந்தாள்.

முதலில் அம்மாவிற்கு புடவை எடுக்கச் சென்றோம்.வாங்கியும் விட்டோம்.அழகான சில்க் காட்டனில்  கட்டம் போட்ட புடவை.அது முடிந்த பின் தான் கூத்து ஆரம்பமானது. 

என் மருமகளிற்காக சூடிதார் பிரிவிற்குள் நுழைந்தோம்.என் பேரன் மெதுவாக 'ஆச்சா ஆச்சா' என்று ஆரம்பித்தான்.(இந்த 'ஆச்சா ' வார்த்தை அடிக்கடி அவன் கூறுவது ).நாங்கள்மும்மரமாக சூடிதார் செலக்‌ஷனில் ஈடுபட்டோம்.ஐந்து நிமிடம் பார்த்தான்,பெரிதாக அழ ஆரம்பிதான்.அழுகைக்கு நடுவே 'ஆச்சா? ஆச்சா?'என்ற கேள்வி வேறு.அவன் அழுகையை நாங்கள் அடக்க முடியாமல் திணறிக்கொன்டிருந்த போது,
பக்கத்திலிருந்தவரின் செல்போனில்'ஒய் திஸ்  கொலை வெறி' ரிங் டோன் ஒலிக்க ஆரம்பித்தது.தாரை தாரை யாகவந்த கண்ணீர்,கொழு கொழு கன்னத்தில் வழிய  வழிய அழுகையை பாதியில் நிறுத்தி விட்டு, அவர் சட்டைப் பாக்கெட்டையே பார்த்துக்கொன்டிருந்தான்.அவனுக்கு பிடித்த பாட்டு.அப்பாடி என்று பெருமூச்சு விட்டோம்.

அப்பொழுது பார்த்து அவர் செல் போனை எடுத்துப் பார்த்துபட்டனை அமுத்தி மீண்டும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.அவ்வளவு தான் என் பேரன் மீண்டும் முகாரி ராகத்தை விட்ட இடத்திலிருந்து பிடித்தான்.இப்பொழுது இன்னும் சற்றே உரத்த குரலில்.அந்த செல்போன் காரர் என்னவோ ஏதோ என்று திரும்பிப் பார்க்க அவரைப் பார்த்துக் கை நீட்டி 'கொல் வென்' 'கொல் வென்' என்று அதேப்  பாட்டைக்  மழலையில் கேட்க அவருக்கு புரியவில்லை.
ஆனால் மிரண்டு போய் 'இது என்னடா? துணிவாங்க வந்த இடத்தில் கொலைப் பழி விழும் போல் தெரிகிறதே என்று நினைத்திருப்பாரோ என்னவோ, குடும்பத்துடன் மெதுவாக அந்த இடத்தை விட்டு ஜனசமுத்திரத்தில் கரைந்தார்.

அதற்குள் இவன் கையில் டைரி மில்க்கைக் கொடுத்தோம்.சற்றே தணிந்தான்.ஒரு நிமிடம் தான்.மீண்டும்'ஆச்சா ஆச்சா' என்று அழுகை.என் மருமகளும்,நீங்களே எதை  எடுத்தாலும் எனக்கு ஓகே தான் .நீங்கள் தனியாக வந்து எடுத்துவிடுங்கள்.என்று கூறஒரு ஆட்டோ பிடித்து ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தோம்.வீட்டிற்கு வந்தவுடன் இயல்பாகி விளையாட ஆர்ம்பித்து விட்டான்.
என் கணவரும்,மகனும் ,'உங்களுக்கு அவன் தான் சரி.நாங்கள் சீக்கிரம் செலக்ட் செய்யச் சொன்னால் செய்வீர்களா?  இது தான் சமயம் என்றுபழி தீர்த்து கொண்டனர்.

என் கணவர் நக்கல் பார்ட்டி வேறு.இப்பொழுதெல்லாம் காபி கேட்கும்போது கூட என்ன  காபி 'ஆச்சா' இல்லை அபினவ்  வை (என் பேரனின் பெயர்) கூப்பிடவா? என்கிறார்.

ஒரு விஷயம்.இன்னும் நாங்கள் ஜவுளி எடுக்கவில்லை.இந்த வாரம் செல்கிறோம்.என் பேரனையும் தான் அழைத்துச் செல்கிறோம்.அவன் இல்லாமலா!

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்