Monday 28 April 2014

மாமியாரும், ஜாடியும்




















ஒரு நாள் பத்து பதினைந்து வருடம் முன்பாக  அதிகாலை நேரம்  ,வாசல் தெளித்து  கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தேன்.  அன்று வெள்ளிக் கிழமை . கையில் வைத்திருந்த செம்மண் டப்பியை எடுத்து, தண்ணீர் விட்டுக் குழைத்து, கோலத்திற்கு செம்மண் இட்டு முடிக்கவும்,  உப்பு விற்பவன் கைவண்டியில் உப்பு மூட்டையை பாதித் திறந்த வண்ணம்  சாய்த்து  , எங்கள் தெருவுக்குள் நுழையவும்  சரியாயிருந்தது  .  " உப்பு ! உப்பு ! " என்று கூவிக் கொண்டே வந்தார் .

பக்கத்து வீ ட்டு மாமி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து உப்பு வாங்கிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டே , நான் உள்ளே நுழைந்து கேட்டை மூடி விட்டு உள்ளே போகத் திரும்பினேன்.

உப்பு விற்பவர் என்னைப் பார்த்து, " உப்பு வாங்கலையா தாயி? வெள்ளிக் கிழமை உப்பு   வாங்கும்மா. மஹாலக்ஷ்மி  வீட்டிற்கு  வருவாள் ." என்று சொல்ல, நானோ, " இதெல்லாம் வியாபார உத்தி ."  என்று மனதில் சொல்லிக் கொண்டே  " இன்றைக்கு வேண்டாம் " என்று உள்ளே நுழைந்து  அடுத்த வேலைகளை ஆரம்பித்தேன்.  இன்று  பள்ளிக்கு சீக்கிரமே வேறு செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே குளிக்கக் கிளம்பினேன்.

குளித்து விட்டு வந்து குக்கரை அடுப்பில் வைத்து விட்டு  நறுக்கி வைத்திருந்த பீன்ஸைப் போட்டு  தாளித்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் போட்டு  கேசை சிம்மில் வைத்து விட்டு  தட்டை போட்டு மூடினேன் . உப்புப் போடவில்லை என்பது  நினைவிற்கு வர  ,உப்பு  ஜாடிக்குள்  கையை விட  , அதென்னவோ கை உள்ளே  போய்க் கொண்டே இருந்தது. உப்பு தட்டுப் படவேயில்லை. கையால் துழாவி, கொஞ்சமாயிருந்த உப்பைப்போட்டு விட்டு  மேலும் தேவைப்பட,  டேபிள் சாலட்டை  போட்டு அன்றைய சமையலை முடித்தேன்.

உப்பு விற்பவரிடம் வேண்டாம் என்று சொன்னோமே. வாங்கியிருக்கலாம் . சரி , ஆனது ஆச்சு. மாலை  வீட்டிற்கு வரும்போது உப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து  அவசரவசரமாக பள்ளிக்கு நடையைக் கட்டினேன்.

பள்ளி  வேலையில் ,உப்பு வாங்க வேண்டியதை அடியோடு மறந்தே போனேன் என்று தான் சொல்ல வேண்டும். மாலை  வீட்டிற்குள் நுழைந்ததுமே  , " உப்பு ஜாடியில் உப்பே இல்லை. இப்படியா உப்ப காலியாகும்  வரை  வாங்காமல் இருப்பார்கள். நல்லா குடித்தனம் செய்கிறாய் போ "  என்று மாமியாரிடம் பாட்டு வாங்கினேன். அன்று அவர் மேல் எனக்குக் கோபம் வந்தாலும், அதில் இருக்கும் உண்மை பின்னர் புரிந்தது.  என் மருமகளிடம்  நானும் இப்பொழுது இதை அறிவுறுத்தத் தவறுவதில்லை.

விஷயத்திற்கு வருகிறேன்.  உப்பு வாங்கப் போக வேண்டுமா? அலுப்பாக இருந்தது. என் பெண் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் , "கொஞ்சம் உப்பு வாங்க வேண்டுமடி  .ப்ளீ ஸ்.......  கொஞ்சம் வாங்கி வருகிறாயா? " என்று அவளிடம் கெஞ்சினேன்.

" எனக்கு செமஸ்டர் பரீட்சை  வருகிறது படிக்கப் போகிறேன் " என்று அவள் மறுத்தாள் .

பின்னாலேயே  என் பையன் வீட்டிற்கு வர , அவனிடமும் உப்பு வாங்க கெஞ்சினேன்.  அவனும் ஏதோ  ஒரு காரணம் சொல்லி வாங்கிவர  முடியாது  என்பதை சொல்லி விட,

என்னவரை விடுவேனா? அவரிடமும்  சொல்லிப் பார்த்தேன். அவரோ," நாளை ஒரு நாள்  உப்பு இல்லாமல் சாப்பிடுவோம்  என்று  ஒரு தீர்வு சொல்லி விட்டு அவர் வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

இத்தனை பேரை கெஞ்சியதற்கு, நாமே  சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு கிளம்ப , அப்பொழுது பார்த்து பக்கத்து வீட்டிலிருந்து சுபா மாமி தன பெண்ணின் வளை காப்பிற்கு  வரச்  சொல்லி  குங்குமச் சிமிழுடன் வர, அவருடன் உட்கார்ந்து அளவளாவினேன். அவர் கிளம்பும் போது மணியைப் பார்த்தால் எட்டு. இந்த ராத்திரியில்  எங்கே கடைக்குப் போவது? நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டேபிள் சாலட்டை வைத்து  நாளை  சமையலை முடிக்க தீர்மானித்து, இரவு சாப்பாட்டுக் கடையை   ஆரம்பித்தேன். என் மாமியாருக்கு  மட்டும் என் மேல் சரியானக் கோபம்.  ஒன்றும் செய்ய முடியாமல் இரவு உணவை முடித்து விட்டு படுத்தாகி விட்டது.

பாதி ராத்திரி இருக்கும், குளிர ஆரம்பித்தது. இடி, மழை, மின்னல், அறை  ஜில்லென்று இருக்க, எழுந்து பேனை  நிறுத்தி  விட்டுப் படுத்தேன். காலை  ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தை தலையில் தட்டி  சமாதானப் படுத்தி  விட்டு எழுந்தேன்.

காலை சமையலுக்கு   கல் உப்பு  எடுக்கப் போன கையை  , டேபிள் சால்ட்  இருக்கும் ஜாடி பக்கம் திருப்பினேன்.  உள்ளே கிடந்த ஸ்பூனால் மெதுவாக உப்பு அள்ளலாம் என்று பார்த்தால் ஸ்பூன் " டங் " என்று ஜாடியின்  அடியில் போய் விழுந்தது. உப்பு எங்கே போச்சு? நேற்று  இரவு படுக்கப் போகு முன் கூட  கால் ஜாடிக்கு மேலிருந்ததே.  என்று நினைத்துக் கொண்டே  ஜாடிக்குள் எட்டிப் பார்த்தேன்.

" ஜாடி காலி " . இது எப்படி ?..குழம்பினேன்.

உப்புத் திருட்டு போனது பற்றி   அப்புறம் தீர விசாரித்துக் கொள்ளலாம் . இப்ப சமையலுக்கு என்ன செய்வது?  கடைக்குப் போகலாம் என்றால் மழை  ஆசை தீரக் கொட்டிக் கொண்டிருந்தது.

என் பையன் , " அம்மா, காபி கொடுக்கிறாயா ? " என்று கேட்டுக் கொண்டே வர,, அவன் மேல் எரிந்து விழுந்தேன். நீயாகட்டும் உன் அக்காவாகட்டும், உங்கப்பாவாகட்டும் , எனக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்  "என்று திட்ட  கண்ணைக் கசக்கிக் கொண்டே(தூக்க கலக்கம் தான்) என் பெண்ணும் வந்து சேர்ந்தாள் .

" உப்பு இருந்ததே  அம்மா? நேற்று  சட்னிக்கு  போதவில்லை என்று  நான் தானே இன்னும் கொஞ்சம்போட்டேன். அப்ப இருந்ததே " என்று  என் பெண் சொல்ல, அவளிடம், " இதோ பார் ஜாடியை, " என்று ஜாடியை காட்டினேன். அவள், என் பையன் என்று மாறி மாறி   ஜாடிக்குள்  பார்க்க,  என்னவரும் அங்கே ஆஜர். "

" ஏன் எல்லோரும் ஜாடிக்குள் தலையை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். யார் தலையாவது மாட்டிக் கொள்ளப் போகிறது என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஜோக்கடிக்க "  எனக்கோ பயங்கர எரிச்சல். (பின்னாளில்  அழகான ராட்சசியே பாட்டு டிவியில் வரும் போதெல்லாம் எனக்கு இவர் அடித்த இந்த ஜோக் சரியாய் நினைவிற்கு வரும்.)

அவரும் ஜாடிக்குள் பார்த்து  விட்டு ஸ்பூனால்  அவரும் துழாவ , "வெறும் தண்ணி தான் வருது "  என்று கமல்ஹாசன் பாட்டு மாறி சொல்ல ,

இதற்காகவே காத்திருந்தாற். போல் என் மாமியாரும் , " சொன்னால் கேட்கலை என்றால் இப்படித்தான். " என்று பழி தீர்த்துக் கொள்ள , என் கண்ணில் நீர் தளும்பி , கீழே இறங்கத்  தயாரானது.
திடீரென்று எனக்கு உரைத்தது, அட......உப்பு ஜாடியில் இருந்ததால்  அதுவும் தூள்  உப்பானதால், சீதோஷ்ண  உபயத்தில்  கரைந்து உப்புத்தண்ணீர. ஆகி இருக்கிறது என்பது புரிய உப்பிற்குப் பதிலாக உப்புத் தண்ணீரை வைத்து  சுமாராய் சமையல் முடித்தேன்.

அடுத்த நாளே உப்பை மூட்டையில் வாங்காத குறையாய் வாங்கி வைத்தேன். ஜாடியில் கொட்டினேன்  என்று தானே நினைத்தார்கள். அது தான் இல்லை.இந்த ஜாடியினால் தான் இப்படி சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன் என்று அழகான பிளாஸ்டிக் டப்பாக்களில் கொட்டி வைத்தேன்.

இதற்கும் என் மாமியார், உப்பை ஜாடியில் தான் வைக்க வேண்டும் என்று புலம்ப ஆரம்பிக்க , வயதானாலே ஏதாவது தப்பு கண்டு பிடிப்பார்கள் என்று அவர் வார்த்தையை காதில்  வாங்க மறுத்தேன்.

பிறகு,உப்பு மட்டுமா பிளாஸ்டிக் டப்பாவில் உட்கார்ந்து கொண்டது. சமையலறையில் அழகழகாய் பல பிளாஸ்டிக் டப்பாக்கள்  வரிசைக்  கட்டி நின்றன..பருப்பு வகைகள் , காபிப்பொடி,புளி,பொடி  வகைகள், சர்க்கரை  என்று எல்லாமே பிளாஸ்டிக்கில் தஞ்சமடைந்தன. ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டின கதையாய், மண் ஜாடிகளும், எவர்சில்வர் டப்பாக்களும் பாவமாய் பரணில் அடைக்கலமாயின.

இது நிறைய வீடுகளில் நடந்த கதை தான் என்று நினைக்கிறேன்.
ஒரு சில வருடங்கள் பிளாஸ்டிக் மேல் தாங்கொணாக் காதல் இருந்தது உண்மையே!

சில வருடங்களுக்குப் பிறகு ..............
அங்கங்கே பிளாஸ்டிக்கை வில்லன் மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். சற்றே குழம்பினேன். கொஞ்சம் கொஞ்சமாய், மார்கெட் போன ஹீரோவானார் பிளாஸ்டிக். கொஞ்சம் கொஞ்சமாய் பரணில் இருந்த எவர்சில்வர் டப்பாக்கள்
என்னைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி , மீண்டும் அலமாரியில் தங்கள் தங்கள் இடங்களில் வந்து அமர்ந்து கொண்டன.

ஜாடிகள் மட்டும் பரணில் மூலையோடு மூலையாய்......அதிலிரண்டு உடைந்தும் விட்டன.

ஒரு நாள் ,சுந்தரி , என் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். நான் காபிப் போட உள்ளே போனேன். அவளும் என்னோடேயே உள்ளே வந்து டைனிங்டேபிளில் அமர்ந்து கொண்டாள். காபி குடித்துக்கொண்டே இருவரும் வம்படித்துக் கொண்டிருந்தோம்.

என்னோடு பேசிக் கொண்டே அவள் அலமாரியைப் பார்த்து எழுந்து போனாள்.நேராக, உப்பு டப்பாவைத் திறந்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டே , " இது என்னதிது? உப்பா ....."

" ஆமாம்."

" நீ, படித்தவள் தானே! உன் குடும்பத்தினர் உடல் நலன் மேல் உனக்கு அக்கறையே இல்லையா? புற்று நோய்க்கு பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாயிருக்கலாம் என்கிற சர்ச்சை கிளம்பியிருக்கிறதே. அந்த விவரங்களை நீ படிக்கிறாயா இல்லையா? " என்று சுந்தரி சரமாறியாகத் திட்ட ,

நானோ," அதெல்லாம் வெறும் சர்ச்சைகள் தானே சுந்தரி.  பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் தான் மழை நாட்களில்   உப்பு கரையாது. " என்று சொல்லவும் அவளுடைய கோபத்தின் டிகிரி  கூடியது.

" நான் அடுத்த முறை வரும் போது, உப்பை இப்படியே வச்சிருந்தே நான் உன்னுடன் பேசவே மாட்டேன் . ஆமாம் ஜாடியே உன்னிடம் கிடை யாதா ? இல்லையென்றால் கண்ணாடி பாட்டிலிலாவது வை. " என்று கோபப்படவும்,

நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பது புரிய ,  புதிய ஜாடியில்  மீண்டும் உப்பு கொட்டப்பட்டது.மழைக் காலத்தில் உப்பு  கரைந்தாலும் பரவாயில்லை ,உப்பே விஷமாகி விடக் கூடாதே ! நம்முன்னோர்கள் எல்லாம் மூடர்களல்லர் என்று நினைத்துக்கொண்டே  நிமிர்ந்தேன்.சுவற்றில் படமாயிருந்த என் மாமியார் ," அன்றைக்கே  சொன்னேன் கேட்டியா? "என்று கேட்பது போலிருந்தது.

பிறகு, வீட்டிற்கு வந்த என் தம்பியின் மனைவி, " அக்கா ஜாடி எங்கே கிடைக்கும்? எனக்கும் உப்பு வைத்துக் கொள்ள வேணும் என்று சொல்ல , " அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டால் இப்படித்தான் தேடி அலைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கடையின் பெயரை சொன்னேன்.

இந்த பிளாஸ்டிக் அரக்கனை  வீட்டை விட்டு  விரட்ட  நினைக்கிறேன். முடியவேயில்லையே!.  சமையலறையிலிருந்தாவது   அரக்கனை விரட்ட  தீவிர  முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
அதற்கு முதல் படியாய்  கடைக்குப் போகும் போது மஞ்சள் பை எடுத்து செல்கிறேன் .

அது சரி , நீங்கள் உங்கள் வீட்டு சமையலறையிலிருந்து  பிளாஸ்டிக்  அரக்கனை  விரட்டி விட்டீர்களா.............?


பி.கு :
" மாமியாரும் ஜாடியும் "  பதிவில், ஜாடி  படத்திற்கு,  என் மருமகள், அவளுடைய   உப்பு ஜாடி , கொடுத்து  உதவினாள் .
அவளுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

49 comments:

  1. நல்ல தகவல்களுடன் ஸ்வாரஸ்யமான பதிவு.

    இப்பல்லாம் ஜாடி (க்ரீம் கலரில் ஜாடியும், ப்ரவுன் கலர் மூடியுமாய் விற்பார்கள்)யைப் பார்க்கவே முடியலையே! படத்திலிருக்க மாதிரி ஃபேன்ஸி ஜாடிகளைத்தான் பார்க்க முடியுது ராஜி மேடம்! என்னிடம் கூட இப்படி ஒரு ஜாடி இருக்கு, ஆனால் அதில உப்பு இல்லை! ஹிஹி..
    இங்கே உப்பு அட்டை டப்பாக்களில் வருவதால் அப்படியே உபயோகித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஹி! பாப்பா எப்படி இருக்கா? அவள் பசிக்கு அழுவதே சுருதியும் லயமுமாய் இருக்கிறது இல்லையா!
      பாப்பாவையும் பார்ஹ்த்டுக் கொண்டு என் உப்பு ஜாடியையும் பார்த்து, படித்து, கருத்திட்டமைக்கு நன்றி மஹி

      Delete
  2. 'ப்ளாஸ்டிக்'கை விடுக்க, அதை நகைச்சுவையுடன் எடுத்துக்கூறிய‌ பதிவு அருமைங்க. ஹ்ம்....உப்பு ஜாரை ஃபோட்டோ எடுத்துக்க(மட்டும்) கொடுத்ததுக்கே நன்றின்னா ......... !! ஜார் நல்லா கலர்ஃபுல்லா இருக்குங்க‌.

    ஆமாங்க‌, எங்க ஊரிலும் வெள்ளிக் கிழமைதான் இருக்கிறதோ, இல்லையோ உப்பும், கோலமாவும் வாங்கிடுவாங்க.

    இங்கு நாங்கள் இருக்கும் ஊரிலும் ப்ளாஸ்டிக் பைகள் போய் எல்லாவற்றிற்கும் 'பேப்பர் பேக்'தான். நானும் கண்ணாடிப் பாத்திர‌ங்களைத்தான் உபயோகிக்கிறேன். அவசரத்துக்கு உதவுமே என(உண்மையில் மனம் வராமல்தான்) ப்ளாஸ்டிக் டப்பாக்கள் பத்திரமாக உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. உப்பு ஜாடியை ரசிப்பதற்கும், பதிவை ரசித்துப் படித்து, கருத்திட்டமைக்கும் நன்றி
      சித்ரா. இப்பொழுது தான் இந்த விழிப்புணர்வு மெல்ல இங்கே சூடு படிக்கிறது.சீக்கிரமே பிளாஸ்டிக்கை விட்டால் தான் நல்லது. பார்ப்போம்.....
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சித்ரா.

      Delete
  3. அருமை. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பார்கள். உப்பிட்ட இந்தப் பதிவரையும் அப்படியே தான் நினைக்க வேண்டும்.நகைச்சுவையுடன் விழிப்புணர்வும் கலந்து சுவை தூக்கலாக உள்ளது. பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
    Replies
    1. என் பதிவைப் படித்து பாராட்டி கருத்திட்டமைக்கு நன்றி கோபுசார்.

      Delete
  4. WILL COME ONCE MORE ANOTHER STORY BY RAJALAKSHMI PARAMASIVAM (TEACHER) . PLEASE TELL ME UR'S MAIL ID

    ReplyDelete
  5. PLEASE MAAMI ,TELL UR;S MAIL ID

    ReplyDelete
    Replies
    1. என் பதிவை படித்து பாராட்டுவதற்கு நன்றி சார்.

      Delete
  6. படத்தைப் பார்த்தால் ரொம்பச் சின்ன ஜாடியை இருக்கிறதே.... இதில் வாங்கி வைத்தால் உடனே உடனே தீர்ந்து விடுமே! :)))))

    எங்கள் வீட்டில் டப்பர்வேர் டப்பாவில் வைத்துள்ளோம். ஒன்றும் ஆபத்தில்லையே? ஹிஹிஹி... ஒரு பயந்தேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார்! என் மாமியார் சொன்ன மாதிரியே நீங்களும் சொல்கிறீர்களே! வேறு ஒரு பெரிய ஜாடியும் வைத்திருக்கிறாள் என் மருமகள் . அதனால் சீக்கிரமே தீர்ந்து விடும் அபாயம் இல்லை.

      டப்பர்வேர் இன்னும் எந்த சர்ச்சையிலும் மாட்டவில்லை தான். ஆனால் அதையும் தவிர்த்து விடுவது நலம் என்பது என் எண்ணம்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
    2. ஶ்ரீராமோட கமென்டை இப்போத் தான் பார்க்கிறேன். டப்பர்வேரிலும் சூடாக வைக்கக் கூடாது என்கின்றனர். அதோடு நிறையப்பெண்கள் தோசை மாவை டப்பர்வேர் டப்பாவில் போட்டு ஒரு வாரம் வரை வைத்திருப்பதும் கெடுதல் எனச் சொல்கின்றனர். ஆயிரம் ரூபாய் போட்டு டப்பர் வேர் காரியர் வாங்கி இன்னும் எடுக்கவே இல்லை. ரங்க்ஸ் 144 தடை உத்தரவு போட்டுட்டார். :)))))))

      Delete
  7. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  8. எங்க வீட்டில் இந்தப் பழைய சமாசாரங்களை இன்னமும் விடவில்லை. உப்பு, புளி எல்லாம் இப்போவும் மண்ஜாடியில் தான். அதுக்கு எனத் தனி ஜாடியே வைத்திருக்கேன். அதே போல் ஊறுகாய்களும் பாட்டில் அல்லது ஜாடியில் தான். குளிர்சாதனப் பெட்டியில் ஊறுகாய்களை வைக்கும் வழக்கமே இல்லை. கல்சட்டி சமையல், வெண்கலப்பானையில் சாதம் வடித்தல், உருளியில் அரிசி உப்புமா பண்ணுதல் என இப்போவும் இனி எப்போவுமே உண்டு. நல்ல தேவையான பதிவுக்கு நன்றி. எங்க வீட்டுப் பழைமையைப் படம் எடுத்துப் பதிவாய்ப் போட்டு விடுகிறேன். எனக்குத் தெரிஞ்சு ப்ளாஸ்டிக்கில் உப்பை ஒரு நாளும் வைத்தது இல்லை. :))))

    ReplyDelete
    Replies
    1. கீதா மேடம், கல்சட்டியைப் பார்த்தே நாளாகி விட்டதே. அதில் நீங்கள் சமையல் செய்து அசத்துகிறீர்களே!.உங்கள் பழைமை ஆனால் பாராம்பர்ய சமையல் பாத்திரங்களை பார்க்க எனக்கும் ஆசை. பதிவிற்குக் காத்திருக்கிறேன்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete
    2. நாளைக்குள்ளாக எல்லாத்தையும் வரிசையா சமையல் அறை மேடையில் வைச்சுப் படம் எடுத்துடுவோம். :))))

      Delete
    3. கீரை மசியல் என்றால் கல்சட்டியில் தான் மசிப்பேன். :) இப்போவும், எப்போவும்.

      Delete
  9. உப்பை வைத்துக் கொண்டு இனிப்பாக அனுபவங்களைப் பகிர்ந்து விட்டீர்கள். எங்கம்மாவும் ஜாடியில உப்பைப் போட்டு வைக்கறதுதான் ரொம்ப காலமா பண்ணிட்டிருந்தாங்க, அடிக்கடி ஊர் மாறுகிற உத்தியோகம்ங்கறதால ஜாடிகள் உடைஞ்சிடுதேன்னு வேற வழியில்லாம டப்பாக்களுக்கு மாறியாச்சு. (எங்க வீட்டுல இருந்த ஜாடியோட மூடியத் தேய்ச்சா எதும் பூதம் வருமோன்னு புரியாத வயசுல பலமுறை தேய்ச்சுப் பாத்து ஏமாந்திருக்கேன், ஹி... ஹி... ஹி...)

    ReplyDelete
    Replies
    1. மூடியைத் தேய்த்தால் பூதமா........ (எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா!) ஊர் மாற்றினாலும், உப்பை மட்டும் ஜாடியிலேயே வைக்கும் யோசனையை மாற்றி விடாதீர்கள் ப்ளீஸ் ......
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கணேஷ் சார்.

      Delete
  10. என்னவொரு தவிப்பு...

    // முதல் படியாய் கடைக்குப் போகும் போது மஞ்சள் பை // அனைவரும் தொடர வேண்டும்...

    நாங்கள் அரக்கனை எப்போதோ ஒழித்து விட்டோம்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  11. பிளாஸ்டிக் அரக்கன்.... சரியாகச் சொன்னீர்கள்.....

    உப்பு ஜாடி, ஊறுகாய் ஜாடி இதெல்லாம் பல வீடுகளில் காணாமல் போய்விட்டன. :((((

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி

      Delete
  12. நல்ல அருமையான பதிவு..
    பதிவு உப்பைப் பற்றியதாயினும் - வழக்கமான நகைச்சுவையுடன் -
    விழிப்புணர்வினையும் கூட்டி வழங்கிய தன்மையால் -
    நாட்டுச் சர்க்கரையாய் இனிக்கின்றது.
    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி துரை சார்.

      Delete
  13. Replies
    1. உங்கள் வருகைக்கும், அதைப் பதிவு செய்தமைக்கும் நன்றி ஜலீலா மேடம்.

      Delete
  14. உங்களுடைய உப்பும் உப்பு ஜாடியும் பற்றிய பதிவு இனிப்பாக இருந்தது.
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.

      Delete
  15. அஞ்சரை பெட்டி என்பது சரியா டீச்சர்?. வல்லின ர தானே வர வேண்டும் . Please look into.

    ReplyDelete
    Replies
    1. கவனிக்கிறேன் கணேசன் சார்.

      Delete
  16. எங்கள் வீட்டில் எப்போதும் என் அம்மா கொடுத்த ஜாடிதான் உப்புக்கும், புளிக்கும்.
    திருவெண்காட்டில் இருக்கும் போது வீட்டுப் புளி என்று கொண்டுவந்து விற்பார்கள் ஆண்டு ஒன்றுக்கு தான் கிடைக்கும். அப்போது வாங்கி வைத்துக் கொள்ள மண் பானை வைத்து இருந்தேன். அப்புறம் செலவு ஆவது இல்லை புளி நாள் பட்ட புளி கறுத்து விடுகிறது, அதனால் மாத மாதம் தேவையானது மட்டும் ஜாடிதான். அந்த க்கால ஜாடி இன்னும் புதிதாக அழகாய் இருக்கிறது. என் வீட்டுக்கு வருபவர்கள் எங்கு வாங்கிணீர்கள் என்று கேள்வியை கேட்காமல் போவது இல்லை.


    அம்மா வீட்டில் அந்தக் கால திருகு மூடி போட்ட ஜாடி பெரிது பெரிதாக இருக்கும், உப்பு, புளி, ஊறுகாய் நல்லெண்ணெய் வைத்துக் கொள்ள தம்பி, அண்ணன் மனைவிகள் அதை பின் புறம் வேண்டாதவைகள் போடும் பரண் அறையில் போட்டு விட்டார்கள். இப்போது அதன் பயன் தெரிந்த என் தங்கைகள் கேட்டு வாங்கி உப்பு போட்டு வைத்து இருக்கிறார்கள். அதில் நிறைய உப்பு போடலாம்.
    பிளாஸ்டிக் டப்பாக்களில் உப்பு, மற்றும் ஊறுகாய் , பொடிவகைகளை போடாமல் இருப்பது நல்லது.

    ReplyDelete
    Replies
    1. புளியை நீங்கள் ப்ரீசரில் வைத்தால் புதுசு போலவே இருக்கும் . இது என் அனுபவம். அந்தக் கால சாமான்கள் என்றாலே தனி மவுசு தான். அவை பிறர் பாராட்டை பெறாமலே போகாது. திருகு மூடி போட்ட ஜாடிகள் இப்பொழுது கிடைப்பதேயில்லை என்றே நினைக்கிறேன்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமதி.

      Delete
  17. அருமையான தகவலை
    சுவாரஸ்யமானப் பதிவாகத் தந்தது
    மனம் கவர்ந்தது
    பயனுள்ள பகிர்வுக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி ரமணி சார்.

      Delete
  19. நானும் பிளாஸ்டிக் டப்பாவில் தான் (உப்பு வரும் கவரிலேயே) வைத்திருக்கிறேன். எல்லா சாமான்களும் இப்படித்தான். மாற்றிவிடவேண்டுமோ? சரி சரி, உங்கள் கோவம் அதிகமாகும் முன்பு மாற்றிவிடுகிறேன். டீச்சர் சொன்னால் கேட்கவேண்டுமில்லையா?

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி, சீக்கிரமே உப்பை பிளாஸ்டிக்கிலிருந்து மாற்றி விடுங்களேன். கொஞ்சம் கொஞ்சமாய் பிளாஸ்டிக்கை ஒழித்தால் நமக்கு நலம் உண்டாகும் என்றே நினைக்கிறேன். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி ரஞ்சனி.

      Delete
  20. எங்க வீட்டிலும் உப்பும் இன்னும் சிலவகைகளும் பிளாஸ்டிக் அரக்கனில்தான்.மற்ற எல்லாமும் எவர்சில்வரில். நானும் ஒரு நான்கைந்து வருடமாகவே மஞ்சள் பைதான் மளிகைக்கடைக்கு.. ஆனாலும் எப்படியாவது பிளாஸ்டிக் பைகள் வீடு தேடி வரவே செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் சீக்கிரமாவே உப்பை பிளாஸ்டிக்கிலிருந்து மாற்றி விடுங்களேன். எவர்சில்வர் ட்ப்பாவிலவது வைத்துக் கொள்ளுங்கள்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி எழில்

      Delete
  21. வெள்ளிக்கிழமைகளிலும் அட்சய திருதியை பூஜை பொருள்கள் வாங்குவதிலும் முதலிடம் கல் உப்புக்குத்தான்..

    வெள்ளிக்கிழமைகளில் உப்பு வண்டிக்காரரிடம் படியை எடுத்துக்கொண்டுபோய் நிறைபடி உப்பு பேரம் பேசாமல் வாங்குவது வழக்கம்..!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  22. மாமியாரும் ஜாடியும் " பதிவில், ஜாடி படத்திற்கு, என் மருமகள், அவளுடைய உப்பு ஜாடி , கொடுத்து உதவினாள் .
    >>
    மெசேஜ்லாம் ஓக்கே! இப்பவும் உப்புக்கு ஜாடி வாங்கமாத்தான் இருக்கீங்களா!? உங்கக்கிட்ட ஜாடி இருந்தா மருமக ஜாடி எதுக்கு படமெடுத்துப் போடனும்!!??

    ReplyDelete
    Replies
    1. உங்களை உப்பை ஜாடியில் வைப்பது பற்றி படிக்க சொன்னால், ஜாடி ஆராய்ச்சியில் இறங்கி விட்டீர்களே! அவள் என்னோட மருமகளாக்கும் என்கிற பெருமை தான் ராஜி.
      நான் ஜாடி வைத்திருப்பது இருக்கட்டும். உங்கள் வீட்டில் நீங்கள் உப்பை ஜாடியில் தானே வைத்திருக்கிறீர்கள்.
      வருகைக்கும், ஜாடி ஆராய்ச்சிக்கும் நன்றி ராஜி.

      Delete
  23. எங்கள் வீட்டில் உப்பு கண்ணாடி ஜாடியில். ஊறுகாய்கள் மண்ஜாடியில்/

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலு சார்.

      Delete
  24. http://sivamgss.blogspot.in/2014/04/blog-post_8259.html

    ராஜலக்ஷ்மி, பாரம்பரியப் பாத்திரங்கள் அணி வகுத்து நிற்கின்றன, மேற்கண்ட சுட்டியில். நேரம் இருக்கையில் வருகை தரவும். நன்றி.

    ReplyDelete
  25. தகவல்களுடன் சுவாரஸ்யமான பதிவு...

    ReplyDelete
  26. நகைச்சுவையாகக் கூறியவிதம் அருமை

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்