Sunday, 20 July 2014

பாராட்டு நூறு!

பதிவுகள் எழுதத் தொடங்கி சுமார் ஒன்றரை வருடம் ஆகிறது. எப்படியோ தட்டுத் தடுமாறி  நூறாவதுப் பதிவை  எட்டி விட்டேன். பெரிய மலை ஏறிய  மாதிரி உணர்ந்ததில்   சற்றே ஆசுவாசப் படுத்திக் கொள்ள அமர்ந்தேன். "என்ன பெரிதாக எழுதிக்கிழித்தாய் என்று ஆசுவாசப்படுத்திக் கொள்கிறாய் ?"  கேட்ட மனசாட்சியை ".  உன் வேலையைப் பார். எல்லாம் எனக்குத் தெரியும். " என்று அடக்கி விட்டு  என் ,  .நூறாவது பதிவை எப்படி   ஸ்பெஷலாக்குவது.?...........சிந்தனையை  செலவு செய்ய ஆரம்பித்த  நேரத்தில்  முதல் பரிசு செய்தி  வந்தது. பரிசே நூறாக இருக்கட்டும் என்று முடிவுடன்  பரிசுச் செய்தியைப்  படித்துக் கொண்டே வந்ததில்  அதில் நடுவரின் பாராட்டு  என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது .
 ஆக  பாராட்டே நூறாகிவிட்டது.
திரு. வை .கோபாலகிருஷ்ணன்  அவர்களின்"  தேடி வந்த தேவதை "என்னும் கதையின் விமரிசனப் போட்டியில் நான் எழுதிய  விமரிசனம் முதல் பரிசினைப் பெற்றுத் தந்தது  எனக்கு மிக்க மகிழ்ச்சியளித்தது.இந்தப் பரிசினை நான் திருமதி கீதா மதிவாணன்  அவர்களுடன் பகிர்ந்துக்  கொள்வதில் உவகை அடைகிறேன்.
 மகிழ்ச்சிக்கு  கிரீடம் வைத்தாற்போல் இருந்தது நடுவரின் பாராட்டுரைகள். அந்தப் பாராட்டு என்னை மகிழ்ச்சிக் கடலிலேயே தள்ளியது என்று சொல்லலாம். 
 அதை  உங்களுடன்  பகிர்ந்து கொள்கிறேன்.
 'நடுவரின் பாராட்டு'

முதல் பரிசு பெற்ற இருவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.

எல்லா விமரிசனங்களும் இவை மாதிரி தேர்ந்த விமரிசனங்களாக அமைந்து விட்டால், பரிசுக்குரிய விமரிசனங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வகைப்படுத்துவதற்குள் என் பாடு திணறிப் போய் விடும் என்பதும் உண்மை.

அதை விட பெரிய உண்மை இன்னும் கொஞ்சம் அதிகமாக எழுதியிருக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது தான்.

உண்மையிலேயே இது தான் அவர்கள் பெற்ற வெற்றியின் முத்திரை பதியலும் ஆகும்..

                                                                                                                                                                                                                                                                               -- நடுவர்
இந்தப் பாராட்டுக்கு உரிய என் விமரிசனத்தை இங்கே கொடுக்கிறேன்.

கதாபாத்திரங்கள்  என்ன நினைக்கிறது என்பதின் மூலமாக என் விமரிசனத்தை முன் வைக்கிறேன்.

இதோ முதலில் மரகதம் சொல்வதைக் கேட்போமா

," என்னைக் கதாசிரியர் ஏன் இவ்வளவு கொடுமையானவளாகக் காட்டி விட்டார் என்று எனக்குப் புரியவில்லை. என் மேல் அவருக்கென்ன கோபம். நான் வரதட்சினை எதிர்பார்ப்பவளாக, மகனைத் திருமணத்தின் விலை பொருளாக  நினைக்கும் ஒரு சராசரிக்கும் கீழான மாமியாராக சித்தரித்து விட்டார். அது தான் போகட்டும். என் மகனுக்கு உயிர் கொல்லி நோய் என்று தெரிந்த பின்னால்  ஒரு சராசரி தாயாக மனம் பதைக்க, புலம்புவளாக , கவலையின் உருவமாகக் காட்டியிருக்கலாமே. அதைபற்றிய சிந்தனையையே இல்லாத கல் மனம் கொண்ட தாயாக அல்லவா  சித்தரிக்கப் பட்டிருக்கிறேன். அந்த விதத்தில் உங்கள் மேல் எனக்கு மிகவும் வருத்தம் கோபு சார். என்  பையன் உயிருக்கு என்னவானாலும் பரவாயில்லை, மருமகள் கொண்டு வரும் சீர் செனத்தி தான் முக்கியம் என்று நினைப்பவளா நான். என்மேல் கொஞ்சம் கருணை காட்டியிருக்கக் கூடாதா?

ஆனால் இறுதியில் என்னை மனம் மாறியவளாகவும். என் மகனுக்கு  உயிர்கொல்லி நோய் எதுவும் இல்லை என்று சொல்லி பெற்ற வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள் கோபு சார். அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் பல.  சுமதியை  அவள் மாமியார் போலில்லாமல்  அவளை என் மகளாகத் தான் நினைக்கப் போகிறேன்.

ஒரு சின்ன விண்ணப்பம், வேறு கதைகளில் மரகதம் என்கிற கதாபாத்திரம்  தாயாக சித்தரிக்கப் பட்டால் தயவு செய்து  மகனின்  நலம் ஒன்று தான் குறிக்கோள் அவளுக்கு என்று சித்தரித்தால் நான்  நன்றியுடையவளாக இருப்பேன்."

சுந்தர்  என்ன சொல்கிறான் பார்ப்போமா?

" எல்லோரும் அவ்வப்பொழுது சின்ன சின்ன பொய் சொல்பவர்கள் தாம் . என் தாயின் குணத்தை மாற்றுவதற்காக நானே எனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக சொல்ல வைத்து விட்டீர்களே! பயந்தே போய் விட்டேன். நல்ல வேளை இறுதியில் அது எல்லாம் ஒரு நாடகமே என்று சொல்லி என் உயிரை எனக்குத் திருப்பி தந்து விட்டீர்கள். அதற்காக உங்களுக்கு என் நன்றிகள் கோபு சார். ஆனால் நான் சொன்னது இமாலயப் பொய்யல்லவா? இனி  வாழ்வில் சுமதி என்னை நம்ப வேண்டுமே என்கிற அச்சம் என் மனதுள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி சுமதிக்கும் எனக்கும் பிணக்கு வந்தால் நான் உங்களைத் தான் மத்தியஸ்தம் செய்யக் கூ'ப்பிடப் போகிறேன்.

 என் மூலமாக மாமியார்களின் அகங்காரத்தினால், பெற்ற பிள்ளைகள் படும் மனவேதனையை அழகாக  சொல்லி விட்டீர்கள்.  எப்படியாவது என் அம்மாவின் மனநிலையை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் நான் இருப்பதை உணர்ந்து தான் எய்ட்ஸ்  என் வாழ்க்கையில் விளையாடுமாறு செய்திருக்கிறீர்கள்.என்பது புரிகிறது. எப்படியோ எனக்கும், என் மனதைக் கவர்ந்த சுமதிக்கும் திருமணம் முடித்து வைத்த புண்ணியம் உங்களயே சேரும்.

பாராட்டுக்கள் கோபு சார்!


டாக்டரின் எண்ணத்தைத் தெரிந்துக் கொள்ளலாமா ?

நோய் இருப்பவர்களிடம் ," உங்களுக்கு ஒன்றுமில்லை . நீங்கள் நன்றாயிருக்கிறீர்கள் " என்று ஒரு நாளைக்கு பல  முறை சொல்லிப் பழக்கப்பட்ட நான் இன்று ஒரு நல்ல  விஷயத்திற்காக சுந்தருடன் சேர்ந்து ஒரு பொய் சொல்லியிருக்கிறேன். Mrs, மரகதமும் அவள் கணவரும் என்னை எப்படியெல்லாம் திட்டப் போகிறார்கள்  என்பதை நினைத்தால் கொஞ்சம் வெலவெலத்து  தான் போகிறது. ஆனாலும், இது ஒரு நன்மைக்காகத் தான் என்று நினைக்கும் போது, வரப்போவதை அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியம் உண்டாகிறது. ஒரு எளிய குடுமப்த்துப் பெண்ணிற்கு திருமணம் நடக்க என்னையும் ஒரு கதா பாத்திரமாகப் படைத்த கோபு சாருக்கு என் நன்றிகள் பல.

ஒரு டாக்டராக  நான் சொல்ல வேண்டியது இன்னும் இருக்கிறது. சுமதியின் வாயிலாக எய்ட்ஸ் பற்றி ஒரு சின்ன பிரசங்கமே செய்து விட்டாரே ஆசிரியர். அவருடைய சமுதாய விழிப்புணர்வு சிந்தனைக்கு நான் தலை வணங்குகிறேன். ஒழுக்கம்  தவறுவது  குற்றமே!. அது பெரிய  தவறில்லை என்று பொருள்படுவது போல் சுமதி பேசுவதில் மட்டும்  எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும் எய்ட்ஸ் நோயாளிகள் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற சிந்தனை வரவேற்கப்பட வேண்டியதே.


சுமதி சொல்வதைக் கேட்போமா?


தியாகத்தின் உருவமாகத் தான் நான் வாசகர்களுக்கு அறிமுகமாகிறேன்.. ஆனால்  நான்  செய்வது தியாகமா, அசட்டுத்தனமா என்பதை என் மனம் பட்டி மன்றமே நடத்திப் பார்த்து விட்டது. ஒரு ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்த பெண் தான் நான் . இந்தத் திருமண பந்தத்தினால் பெரிதாக என் குடும்பத்தின் பொருளாதாரம் ஒன்றும் உயர்ந்து விடப் போவதில்லை. "ஒரு வேளைகுடும்பத்தினருக்கு  நல்லது நடக்கலாமோ" என்கிற  எதிர்பார்ப்பு மட்டுமே என் மனதில் இருப்பதை யூகிக்க  முடிகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில்  சுந்தருக்கு  எய்ட்ஸ்  என்று தெரிந்திருந்தும் மணக்க சம்மதிப்பது அவ்வளவு உசிதமாகப் படவில்லைதான் .ஆனாலும் அதை செய்கிறேன்.
 பிறகு சுந்தர் எய்ட்ஸ் என்று பொய் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்ததும் திருமணம் வேண்டாமா என்கிற நல்ல முடிவை  எடுத்து  விட்டேன் என்று நிம்மதி பெருமூச்சுடன் இருந்தால், அவன் அம்மா மரகதம் மூலமாக கதாசிரியர் என் திருமணத்தை முடித்து விட்டார். அதற்காகப் பெரிதாக  வருந்தவில்லை நான். பணக்கார  வீட்டிற்குப் போகிறேன் என்கிற ஒரு சின்ன பயம் என் மனதுள் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.

என் குடும்பத்திற்கு என்னாலான  ஒரு சின்ன உதவி என்னுடைய  திருமணம் .என் திருமணத்தை முடித்து உதவியதற்காக  என் நன்றிகள் கோபு சாருக்கு. நர்ஸ் என்கிற புனிதத் தொழிலில் இருக்கும் நான் எய்ட்ஸ் நோயாளியை திருமணம் செய்ய சம்மதித்து, சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாகி விட்டேன் என்பதில் எனக்குப் பெருமை தான் . என்னை அப்படி சித்தரித்த கதாசிரியருக்கு  என் பாராட்டுக்கள்.

 சுந்தர் இனிமேலாவது பொய் எதுவும் என்னிடம் சொல்லாமல் என் மகிழ்ச்சிக்கு  பங்கம் எதுவும் வராமலிருக்கவும்  ஆனடவனை வேண்டிக்கொள்கிறேன்.

-                             

               ---------------------------------------------------------------
சுமதியும் சுந்தரும்  எல்லா வகை செல்வமும் பெற்று நீடுழி வாழ  என் வாழ்த்துக்களும் ஆசிகளும்.


image courtesy---google

Thursday, 10 July 2014

இதுவல்லவோ உண்மையான வெற்றி!












உலகம் முழுதும் கால் பந்து ஜுரம் அடித்துக் கொண்டிருக்கிறது.  எத்தனை எத்தனைப போட்டிகள் ! சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது  அத்தனைப் போட்டிகளும். இந்தப் போட்டிகளால் என்ன லாபம் என்று தோன்றலாம்.

 விளையாட்டின்  மூலமாக நாடுகளிடையே நட்புறவு வளரும் என்றே பெரும்பான்மையாக சொல்லப்படுகிறது.  ஆனால் அது  உண்மையில்லை என்பது  போல் தான் இப்பொழுது நடக்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.


நம்மில் பலர் ஆவலுடன் பார்க்கும் கிரிக்கெட்டையே  எடுத்துக் கொள்வோமே! இந்தியா பாகிஸ்தான் போட்டி நடந்தால் அதை  விளையாட்டாகவா நாம் பார்க்கிறோம்.  அறிவிக்கப்படாத  போர்  அல்லவா அந்த விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது?  விளையாடுபவர்கள் மட்டுமல்ல   பார்க்கும் நாமும் தான்  பிபி  எகிற நகம் கடித்துத துப்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற  உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, இலங்கையை வென்ற அன்று நம் மீனவர்கள் பலர்   இலங்கை ராணுவத்தினரால்  கைது செய்யப் பட்டார்கள் என்ற செய்தி அப்பொழுது பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.

ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகளின் போதும் விரும்பத்தகாத சமபவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்பொழுது நடக்கும் கால்பந்தாட்டப் போட்டிகள் மட்டும் இதற்கு  விதிவிலக்கா ?  போட்டிகளைப் பார்க்கும் போது "இது கால் பந்தாட்டப் போட்டியா? அல்லது காலால் மனிதர்களையே பந்தாடும் போட்டியா என்கிற சந்தேகம்   வருகிறது . போட்டிகள் நடக்கும் போதே ஸ்டரெச்சரில் வீரர்களை தூக்கிக் கொண்டு செல்வது வேதனை அளிக்கிறது.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் பிரேசில் நாட்டு வீரர் ஒருவரின் முதுகெலும்பு  அப்பளம் நொறுக்கியது போல் நொறுங்கியிருப்பது  எத்தனை வேதனைக்குரியது.

இப்படிப்பட்ட  நிகழ்வுகளை  காணும் இளைய தலைமுறையினர்   சக விளையாட்டு வீரர்களை  காயப்படுத்துவது  விளையாட்டின் ஓர் அங்கமே என்று கணிப்பதற்கு  வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமேயல்லாமல் ,    வெற்றிக் கோப்பையை கைப்பற்றி விட எந்த எல்லைக்கும் போகலாம்  என்கிற மனோபாவமும் வளரலாம். இந்த  பயம் நம் எல்லோர் மனதிலும்  இருப்பது உறுதி.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் , கடுங்கோடையில்  மழை பெய்வது போல் ஜில்லென்று ஒரு செய்தி படித்தேன். அதைப் பகிர்கிறேன். பலருக்கு இது தெரிந்திருக்கலாம் .

ஸ்பெயினில்  புர்லாடா (Burlada)  என்னும் ஊரில்  நடந்த  cross country ஓட்டப் பந்தயத்தில் இவான் Iván Fernández Anaya என்கிற ஸ்பெயின் நாட்டு வீரரும்     Abel Mutai   என்கிற கென்யா  வீரரும்  கலந்து கொண்ட போட்டி அது.கென்யா நாட்டு வீரர் முதலாவதாக   வந்து வெற்றி பெறப் போகிறார் என்பது உறுதியானது.  தீடீரென்று  அவர் ஓட்டம் தடை பட ஆரம்பித்தவுடன்  சுற்றி நின்ற கூட்டம்  சற்றே குழம்பி  பார்த்துக் கொண்டிருந்தது. தான் வெற்றிக்  கோட்டைத் தாண்டி வெற்றிப் பெற்று விட்டதாக  தவறுதலாக எண்ணிய திரு. Mutai   தன் ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் . கூடியிருந்த  மக்களுக்குப் புரிய  ,அவர்கள்   அவருடையத் தவறை ஸ்பானிஷ் மொழியில்  அவரைப் பார்த்து சொல்லி யும் மொழிப் புரியாததால்   அவருக்குப் புரியவில்லை.

பின்னாலேயே  இரண்டாவதாக வந்துக் கொண்டருந்த திரு. இவான் அந்த சந்தர்ப்பத்தை  உபயோகித்து   ஓடி  வெற்றி  பெற  அருமையான வாய்ப்பு இருந்தது. ஆனால் அதை அவர் உபயோகிக்கவில்லை. கென்யா வீரருக்கு சைகை மூலமாகவே அவர் தவறை உணர்த்தி தன வேகத்தைக் குறைத்து கென்யா வீரர் வெற்றி பெற செய்திருக்கிறார்.

இப்படியும் விளையாட்டு வீரர் இருக்கிறார்கள் . என்னை ஆச்சர்யபடுத்திய செய்தி இது.இது நடந்தது 2012இல்.
அவரை நம் செய்தியாளர்கள் விட்டு விடுவார்களா என்ன?அவரகள்  அவரை இது பற்றிக் கேட்டதற்கு,

"I didn't deserve to win it. I did what I had to do. He was the rightful winner. He created a gap that I couldn't have closed if he hadn't made a mistake. As soon as I saw he was stopping, I knew I wasn't going to pass him."  என்று சொல்லியிருக்கிறார்.

அதன் தமிழாக்கம் ," கென்யா வீரருக்கும்  எனக்கும் நல்ல இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. அவர் தவறுதலாக தான் வெற்றி இலக்கை தொட்டு விட்டதாக எண்ணிய காரணத்தால் தான் நான் அவரை எட்டிப் பிடித்தேன். உண்மையான வெற்றியாளர் அவர் தானே. நான் என்ன செய்திருக்க வேண்டுமோ அதைத்தான் செய்தேன். " என்கிறார திரு.இவான்  தன்னடக்கத்தோடு.

அவருடைய செய்கை அவரை உலகறிய செய்து விட்டது.உண்மையின் மகிமையே அது தானே!. முதல் பரிசை , போட்டியை நடத்தியவர்கள்  கென்யா வீரருக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால் உலகமே அவரைப் புகழ்ந்து தள்ளி விட்டது. இதுவல்லவோ உண்மை வெற்றி.

 அந்த அற்புதக் காட்சி   இதோ





வெற்றி முக்கியமே ஆனால் உண்மையாக இருப்பது  அதை விட முக்கியம்.
 உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு இந்த செய்தியைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..

image courtesy--google.
video courtesy--youtube.

Wednesday, 2 July 2014

நான் பாஸா........?

 
 
 திருநெல்வேலிக்கே  அல்வா கொடுப்பது போல், டீச்சரிடமே கேள்விகளா? ஆனாலும் கேட்டு விட்டாரே திருமதி கீதா மதிவாணன் . பதில் சொல்லிப் பாஸாக முயற்சிக்கிறேன். எனக்குக் கேள்விகள் கேட்டு மட்டுமே பழக்கம். முதன் முறையாக பதில் எழுதுகிறேன். அதனால் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் ,என்னைப் பாஸாக்குமாறு  வாசகர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ' பிட் ' எதுவும் அடிக்கவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
 
இதோ கேள்விகளும், பதில்களும்.
 
 
 1..உங்களுடைய 100-வது பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
  நூறாவது பிறந்தாநாளா............ ஆசி வழங்கிக் கொண்டு ,போட்டோவிலிருந்து தான்.

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
 பாட்டுப் பாடக் கற்றுக் கொண்டு" சிங்கார வேலனே , தேவா " என்கிற பாடலை  நான் பாட வேண்டும்.  என்னுடைய  இசை என்னும் இன்ப  வெள்ளத்தில் மிதக்க என் கணவர் ஓடோடி வர வேண்டும் என்பது என் பேரவா.. ஆனால் என்னவோ  தெரியவில்லை என்னவர் அதற்கு முட்டுக் கட்டைப் போட்டுக் கொண்டேயிருக்கிறார். எதற்கு என்று கேட்டால் பதிலே சொல்வதில்லை. புரியவேயில்லை...........
 
 3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக
எப்பொழுதும்  சிரித்துக் கொண்டே தான் இருக்கிறேன். (பைத்தியமோ என்கிற சந்தேகம் வருகிறதா?) வாழ்க்கை  சிரித்து மகிழ்வதற்கே என்று எண்ணுபவள் நான். அதனால் தான். 

4. 24 மணி  நேரம் பவர்கட். ஆனால் நீங்கள் செய்வது என்ன?
 நிமிடத்திற்கு ஒரு முறை வீட்டின் ஒவ்வொரு ஜன்னலிலும்  எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். பக்கத்து வீடுகளிலும் கரண்ட் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளத்தான்.
 
5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன
  " விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்  போவதில்லை " என்கிற அறிவுரை தான். பஸ்சில், அலுவலகத்தில் என்று யார்யாரிடமோ அட்ஜஸ்ட் செய்யும் நாம் வாழ்க்கைத் துணையிடமும் அதை  செய்தால் வாழ்க்கை இனிக்கும். என்பதைப் புரிய வைக்க முயற்சிப்பேன்.

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 குழந்தைத் தொழிலாளர்கள்  முறை முற்றிலும் நீங்க வேண்டும். அது தான்  தீர்ந்து கொண்டே வருகிறதே  என்று சொல்பவர்களுக்கு,  டிவியில் பார்க்கும் பல விளம்பரங்களில், நிகழ்ச்சிகளில்  நான் இன்னும்  குழந்தைத்  தொழிலாளர்களைப் பார்க்கிறேன்.

7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
உற்ற தோழனாய் இருக்கும் என்னவரிடமிருந்து தான்.

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?
 " காய்க்கிற மரம் தான் கல்லடி படும் " என்று  நினைத்துக் கொண்டு காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளவேண்டியது தான்.

9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
ஆறுதல் சொல்ல நானா.... நானே அந்தத் துயரத்திலிருந்து மீளப்  பல நாட்களாகும். 
 
10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
உலாவ ஆரம்பிக்க வேண்டியது தான் . மொட்டை மடியில் இல்லை......இணையத்தில்.  அதைவிட்டால் வேறு எதுவும் தெரியாதே.
 
 
 
 என்னை எப்படியாவது பாஸாக்கி விடுங்களேன்.....ப்ளீஸ்..........

திருமதி ரஞ்சனி  " எங்கள் ஊர் " பற்றி எழுத அழைத்திருந்தார் . இன்னும் பெண்டிங். விரைவில் எழுதி விடுகிறேன் ரஞ்சனி.

image courtesy----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்