Wednesday, 28 August 2019

கம்பனும் செல்போனும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-1)

Image courtesy : Wikkimedia Commons
நேற்று  காலை, அப்பொழுதுதான் வந்து அமர்ந்தேன். ஒரு கையில் நியூஸ் பேப்பரும், இன்னொரு கையில் என் செல் போனுமாய்....

என்னவர் அவருடைய செல்போனைப் பார்த்துக் கொண்டே...."இன்று இட்லியும், சாம்பாரும் சூப்பர் ராஜி." என்றாரே பார்க்கலாம்.

எனக்கு நிஜமாகவே "கனவா? நிஜமா?" என்கிற சந்தேகம் வந்தது.  என்னாச்சு இவருக்கு? நானாக அவரிடம் வலிந்து வலிந்துக் கேட்டாலும், ஒற்றை வார்த்தையில்  " நன்றாக இருந்தது" என்பாரே தவிர ... வேறு ஒரு பாராட்டும் வராது. இன்றென்ன ஒரு நாளும் இல்லாத திருநாளாய் பாராட்டித் தள்ளுகிறாரே நினைத்துக் கொண்டே அவரையே பார்த்தேன்.

என் சிந்தனையைக் கலைப்பது போல் ,

" டிங் டாங்"  வாசல் மணி .

அந்தப் பாராட்டிலிருந்து மனதை திசைத் திருப்ப மனமில்லாமல் ,
"கொஞ்சம் யாரென்று பார்க்கிறீர்களா?" அவரிடமே கேட்டேன்.

அவரோ," உனக்குத் தான் இருக்கும். அமேசானில் ஏதாவது ஆர்டர் செய்திருப்பாய்." என்று விட்டேத்தியாய்  சொல்ல..
சரி. இவர் எழுந்திருக்க மாட்டார் என்று புரிய... அவசர அவசரமாக எழுந்தேன் பாருங்கள்...

"டொப்" சத்தம்.

பார்த்தால் என் செல்போன் கீழே அனாதையாய் கிடந்தது.

அதற்குள் இன்னொரு "டிங் டாங்"

இப்பொழுது என்னவர் " செல் போனைப் பார்" சொல்லிக் கொண்டே கதவைத் திறக்க எழுந்தார். (முதலிலேயே செய்திருந்தால் என் செல் போனாவது பிழைத்திருக்கும். நினைத்துக் கொண்டே என் போனை நாடிப் பிடித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

" பரவாயில்லை பிழைத்தது." நான் சொல்லி முடிப்பதற்குள் என்னவர் என்னை பார்த்து ," கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு" என்று சொல்லவும் காத்திருந்தாற் போல் நான், " இப்ப எழுந்து கதவைத் திறந்ததை அப்பொழுதே செய்திருந்தால் ...."
நான் முடிப்பதற்குள்,"ஆக நான் தான் காரணம்னு  சொல்லு...நீ செல் போனை கீழே போட்டதற்கு?" அவர் கோபத்துடன் சொல்ல,

நானோ," இல்லை....இல்லை....நீங்கள் இல்லை அந்த டெலிவரி மனிதர் தான் காரணம்"

என்னவர்," எல்லோரையும் சொல்வாய். ஆனால் நீ கீழே போட்டாய் என்று ஒத்துக் கொண்டால் தான் என்ன?" சொல்லி விட்டு நகர்ந்தார்.

"சரி. ஒத்துக் கொள்கிறேன். என் விதி தான் காரணம் "

" ஒத்துக் கொள்ல மாட்டாயே." இப்பொழுதும் உன் விதி தான்.. நீயில்லை." என்று நக்கலடித்து விட்டு போனில் எதையோ படிக்க ஆரம்பித்து விட்டார்.

எனக்கு சட்டென்று கம்பன் பாட்டு ஒன்று நினைவில் வந்து மோதியது.

ராமன் பதினான்கு ஆண்டுகள் காடு போக வேண்டும். பரதன் நாடாள்வது என்கிற முடிவு அரண்மனையில் எல்லோர் காதுகளையும் எட்டியது. இளைய பெருமாளான லக்‌ஷ்மணன் காதை எட்டியது தான் தாமதம்,  கைகேயி மீதும், பரதன் மீதும் கோபம் கொப்பளித்துக் கொண்டு வருகிறதாம் லக்ஷ்மணனுக்கு.

ஆனால், ராமன் அவன் கோபத்தை அடக்கி விடுகிறார். எப்படி?

கம்பன் சொல்கிறான் எப்படி என்று....

"நதியின் பிழையன்று நறும்புனலின்மை; அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று, மகன் பிழையன்று மைந்த!
விதியின் பிழை! நீ இதற்கென்னை வெகுண்டதென்றான்!"

என்றும் நீர் உள்ள ஆற்றிலே சில சமயங்களில்  நீர் இல்லாமல் வற்றிப் போகலாம்.. அது ஆற்றின் பிழையில்லையே! அது போல் தான்  என்னைக் காடு போக சொன்னது, தந்தை குற்றம் இல்லை..நம் தாயாகிய கைகேயின் குற்றமும் இல்லை... என்கிறானாம் ராமன்.

லஷ்மணன் மனதில் இப்படித் தோன்றியிருக்கலாம்." ஒரு வேளை ராமன் அண்ணா பரதன் தான் குற்றவாளி  என்கிறாரோ" என்று சிந்திப்பதற்குள் , "கைகேயின் மகனாகிய பரதன்  மேலும் குற்றம் இல்லை" என்று ராமன் சொல்லி விடுகிறார்.

(அப்ப ராமன் அண்ணா என்ன தான் சொல்ல வருகிறார்? என்று லஷ்மணன் குழம்பி நின்றிருப்பானோ)

"விதியால் விளைந்த குற்றமேயாகும். அதனால் நீ யார் மேலும் கோபம் கொள்ளாதே  " என்று ராமன் சொன்னதாக நம் கம்பன் முடிக்கிறார்.

காடு போகச் சொன்னாலும், ராமன் யாரையும் குற்றம் சொல்லாமல் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாரே!  என்று லஷ்மணனுக்கு மட்டுமில்லை நமக்கும் கூடத்தான் தோன்றுகிறது .இல்லையா!

ஆமாம். எங்கே நீ கம்பன் பக்கமெல்லாம் போகிறாய் என்று ஆச்சர்யப் படுகிறீர்களா? கம்பனின் ராமாயணம் தித்திக்கும் தமிழில் மனதைக் கொள்ளையடிக்கிறது. அதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.. நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

எதையாவது தவறாக சொல்லியிருந்தால்...தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்..  திருத்திக் கொள்கிறேன். சரியா?

மீண்டும், இன்னொரு கம்பன் பாடலுடன் சந்திப்போமா?(விடுவதாக இல்லை, உங்கள் எல்லோரையும்)

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்