Saturday, 22 February 2020

கம்பனும், காதலும்-3.(கம்பன் என்ன சொல்கிறான்?-18)






கவிதை என்றாலே நயம் தான்... அதில் சந்தேகம் வேண்டியதே இல்லை... அதிலும் கம்பன் பாடல் என்றால் கேட்கவே வேண்டியதில்லை .

சொல்ல மறந்து விட்டேனே....
 மிதிலையை விட்டு வர மனமில்லாமல் அங்கே தான் இருக்கிறேன். எப்ப நீ மிதிலைக்குப் போனே என்று கேட்பவர்கள்  "அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்!" க்ளிக் செய்து பார்க்கவும்.

என்னவரோ,"போகலாம் வா! ஃப்ளைட்டிற்கு நேரமாச்சு. கிளம்பு...கிளம்பு " சொல்வதைக் காதிலேயே வாங்கிக்காமல் வைத்த கண்ணை எடுக்காமல் ராமனையும், சீதையையுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன காதில் விழுகிறதா? மீண்டும் அவர் கோபத்துடன் கேட்க...

"இதயம் இடம் மாறுகிறதே! அங்க பாருங்க.." நான் சொல்லவும்...

அவர் என்னைப் பார்த்தப் பார்வை இருக்கிறதே ! "இவளுக்கு சுத்தமாக மறை கழண்டு விட்டதோ" மாதிரி இருந்தது.

"நான் லட்சியம் செய்யவில்லையே!"
எத்தனை அருமையான காட்சி..
'Let us first enjoy this divine love scene.' மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

ராமன் சீதையைப் பார்க்க ...சீதை ராமனை வைத்த கண் வாங்காமல பார்க்க ... 

இவர் வேறு." போகலாம்" என்று மீண்டும் மீண்டும் நச்சரிக்க....

அங்கே பாருங்கள்...."இருவரும் அவர்கள் படை பலத்தைக் காட்டி ஒருவரை ஒருவர் கொள்ளையடிக்கிறார்கள்" நான் சொல்ல 

"படை பலமா?" இவர் என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு," எனக்குத் தெரிந்து இங்கே போர் ஒன்றும் நடக்கவில்லையே. உனக்கு ஏதோ ஆகி விட்டது ராஜி. உனக்கு  further damage ஆகாமல் இருக்க வேண்டுமென்றால் இப்பவே  பெங்களூருக்குப் போக வேண்டும்." சற்றுக் கண்டிப்புடன் அவர் கூற....

அட... நான் சொல்லும் போர். வேறெதுவுமில்லைங்க.....காதல் போர்.. கம்பரின் வார்த்தைகளிலேயே சொல்கிறேனே...

"ராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நாழிகையிலேயே....இருவரின் உள்ளமும்  ஒன்றி விட்டது. " நான் சொல்ல..

அவர் கவனிப்பது போல் பாவனைக் காட்ட...

அலட்சியம் செய்த நான் தொடர்ந்தேன்...
"வரி சிலை அண்ணலும் வாள் கண்
 நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்."
நான் சொல்லவில்லை. கம்பரின் வேலை இது...

அண்ணலின் கையில் வில்லைக் கொடுத்த கம்பர், சீதைக்கும் எதாவது ஆயுதம் கொடுக்கணுமே." யோசித்திருப்பர்.... அதன் விளைவு....சீதைக்கு வாளைக் கொடுத்து விட்டார். கையில் இல்லை...கண்ணில் ...' வாள் கண் நங்கை ' ஆக்கி ரசிக்கிறார் . 

என்ன ஒரு நயம்.  !

ராமனுடைய வில்லைப் பார்ப்பதா? 
சீதையின் வாளழகைப் பார்ப்பதா? 
ஒன்றுடன் ஒன்று போட்டிப் போடுகிறதே!

படிக்க படிக்க சுவையாய் இருக்கிறது கம்பர் காட்டும் காதல் கதை....சினிமா டைரக்டர்கள் கம்பரிடம் கொஞ்ச நாள் அஸிஸ்டண்ட் ஆக இருந்திருந்தால் நமக்கும் நல்ல காதல் படங்கள் கிடைத்திருக்கும். ம்ம்ம்.....நமக்குக் குடுத்து வைக்கல... What can we do?

கம்பர் டைரக்ட் செய்த காட்சியைப் பார்ப்போமா...

  பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.

தமக்குள் ஒருவரது அழகை ஒருவர் விழுங்கிய கண் பார்வை என்னும் கயிற்றால் கட்டி ஒருவரை மற்றொருவரது மனம இழுத்து நின்றதால் , கட்டமைந்த வில்லுடைய இராமனும்,வாள் போன்ற கண்களையுடைய ,பெண்களில் சிறந்த சீதையும் ஆகிய இருவரும் ஒருவர் மனத்துள் ஒருவர் மாறிப் புகுந்து அடைந்தார்கள்.

உங்கள் மனக்கண்ணிலும்  இந்தக் காதல் காட்சி விரிந்திருக்குமே...இருவருடைய படை பலத்தைப் பார்த்துக் கொண்டிருங்கள்

இருவரிடமும் இருக்கும் குணங்கள் ஒன்றை பார்த்தோம்.

இருவரிடமும் இல்லாத charecteristics பற்றிப் பார்க்க வேண்டாமா?
 பரம் பொருளிடம் இல்லாத நலங்களா? திருமகளிடம் காணாத குணங்களா? இருக்கே...
கம்பர் சொல்கிறாரே! 
அடுத்தப் பதிவில் பார்ப்போமா?


நன்றி.
















Friday, 7 February 2020

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்! ( கம்பன் என்ன சொல்கிறான் -17)


Image Courtesy : Google.
கம்பனும், கருத்து சுதந்திரமும் படிக்க இங்கே க்ளிக்கவும்.



பண்டிகை நாட்கள் என்றால் டி.வி. காரர்களுக்குக் கொண்டாட்டமோ கொண்டாட்டம்.

"10 மணிக்கு, 1 மணிக்கு, மாலை 5 மணிக்கு, இரவு 11 மணிக்கு என்று  சினிமாவாய் போட்டுத் தள்ளி விடுவார்கள்.

அதிலும் அந்த சினிமாக்களுக்கு அவர்கள் கொடுக்கும் 'ஹைப் இருக்கே' .... அருமையான காதல் கதை.....காதலையே ஓவியமாய் தீட்டிய படம் என்று.... காதைக் கிழிக்கும்  ம்யூசிக்குடன் ....சொல்லி மாளாது.

காதலை உருகி உருகி எடுக்கப்பட்டதாய் சொல்லிய படம் ஒன்றைப் பார்க்க நேர்ந்தது..
அப்படியொன்றும்  அசத்தலாய் இல்லை படம். என்ன இருந்தாலும் நடிப்புதானே அது..

ஆனால் கம்பர் எழுதிய காவியத்தில், ராமனும், சீதையும் உண்மையில் காதல் வயப்படுகிறார்கள். அதனால் தானோ என்னவோ அந்தத் திவ்யக் காதல் நம் மனதில் ஆழமாய் பதிந்து விடுகிறது.

கம்பனின் கைவண்ணத்தைப் படித்த பின் இவரையும், அழைத்துக் கொண்டு  மிதிலைக்கே சென்று விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உன்னுடன் அவரும் வந்து விட்டாரா என்று யாரும் கேட்க வேண்டாம்."அண்ணலும் நோக்க அவளும் நோக்கியக் " காட்சியைக் காண என்னுடன் அவரில்லாமலா?

மிதிலைத் திருவிழாக் கோலம் பூண்டிருக்கிறது. மக்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது.

" அறுபத்து மூவர் திருவிழா போலல்லவா இருக்கிறது கூட்டம்." அவரிடம் நான் சொல்ல...

எப்பவும் போல்," தொணத் தொணன்னு பேசாமல் அங்கே பார்.." அவர் காட்டியத் திசையில் பார்த்தேன்.

ஒரே மக்கள் வெள்ளம்.. "எதைப் பார்க்க சொல்கிறீர்கள்? "

அங்கே பார்," ராமன் தெரியவில்லை . அருகில் இளைய பெருமாள் ." 

மக்கள் கூட்டத்தின் நடுவில் நான் கண்களால் துழாவிப் பார்க்க, ராம தரிசனம் கிடைக்க ,சொல்லி மாளா மகிழ்ச்சி...கைகளால் உடனே கண்ணத்தில் போட்டுக் கொண்டேன்." யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு தரிசனம்." மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

திடீரென்று ஒரே சலசலப்பு ...

"என்ன ஆச்சு? "

 பக்கதில் இருந்த ஒருத்தர் " அரண்மனை உப்பரிகையிலிருந்து  பூப்பந்து விழுந்து விட்டதாம். ராஜகுமாரி சீதை விளையாடிக் கொண்டிருந்த பந்தாகத் தான் இருக்க வேண்டும்." சொன்னார்.

அதற்குள் " அங்கே வா... ராம தரிசனம் நன்றாகக் கிடைக்கும்." என்று சற்று மேடானப் பகுதிக்கு என்னவர் அழைத்து சென்றார்.

ஆமாம்..இங்கிருந்து பார்த்தால் ராமன் கைகளில் பூப் பந்துடன் நிற்பது தெரிந்தது. மீண்டும் கை கூப்பி வணங்கிக் கொண்டேன். 

"உப்பரிகையில் பார் சீதை" இவர் சொல்ல...

பார்த்தால்...அருமையான் திவ்ய காதல் நாடக  அரங்கேற்றத்தைக் காணும் பேறு கிடைத்தது.


ராமன் தோள் மேல் தான் அந்தப் பூப் பந்து விழுந்திருக்கிறது. 

யார் போட்டிருப்பார்கள் என்று கையில் பந்துடன் சுற்று முற்றும் பார்க்கிறான் ராமன். யார் என்று புரிபடுவதற்குள்....

" நீல மாலை ....உன்னால் தானடி.. நீ சரியாகப் போட்டிருந்தால் இப்படி ஆகியிருக்குமா?" என்கிற குரல் வந்த திசையில் பார்க்கிறான்.

அரண்மனை உப்பரிகையிலிருந்து தான் இந்தப் பந்து விழுந்திருக்கிறது என்று ராமனுக்குப் புரிய ...அண்ணாந்து பார்க்க...

சீதையோ ," யார் மேல் பந்து விழுந்ததோ?" என்கிற அச்சத்துடன் கீழே பார்க்க...

இருவர் கண்களும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன.

(இதல்லவோ "கண்டவுடன் காதல்.")

அதோடு நிற்கவில்லை... இருவர் கண்களும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டன.இருவரும் பார்த்துக் கொண்டால் சட்டென்று பார்வை நகர சாத்தியக் கூறுகள்  அதிகம். அதனால் தான் கம்பர், இருவர் பார்வைகளும் கவ்விக் கொண்டன என்று சொல்லி விட்டார். பார்வைகள் விடுபடவேயில்லையே.
(ஆமாம்...நேரே பார்த்தாற் போல இப்படி விரிவாக சொல்கிறாயே? என்று கேட்க வேண்டாம். கம்பன் வரிகளைப் படித்தால் இந்தக் கற்பனை தானாய் உஙகள் மனக் கண்ணிலும் விரிந்து விடும்.அதற்கு நான் கியாரண்டி.)

அதற்குள் நீலமாலை," ராஜகுமாரி என்ன ஆச்சு ? ஏன் அங்கேயே நின்று கொண்டு பார்க்கிறீர்கள்?" கேட்க...

"ராஜகுமாரி......ராஜகுமாரி!" மீண்டும் மீண்டும், சீதையின் தோழிகள் கூப்பிட்டாலும் சீதை திரும்பவேயில்லையே. 

அவள் பார்வையைத் தான் ராமன் திருடிக் கொண்டு விட்டானே.பார்வையை மட்டுமல்ல சீதையின் இதயத்தையும் அல்லவா திருடி விட்டான். 

"அண்ணலும் நோக்க அவளும் நோக்கினாள் " காட்சியை என்னமாய் படமெடுத்திருக்கிறார் கம்பர் பாருங்கள்..

எண் அரும் நலத்தினாள்
    இனையள் நின்றுழி,
கண்ணொடு கண் இணை
    கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது
    உணர்வும் ஒன்றிட,
அண்ணலும் நோக்கினான்!
    அவளும் நோக்கினாள்.

அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய சீதை, நின்ற பொழுது, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கவர்ந்து உண்ணவும்,இருவரது அறிவும், நிலைப் பெற்று இருக்காமல்  ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், ராமனும், சீதையைப் பார்த்தான்.சீதையும், ராமனைப் பார்த்தாள்.

"எத்தனையோ தடவை இந்தக் காட்சியைப் பற்றி படித்தாகி விட்டதே " என்று நினைக்க வேண்டாம். எத்தனை முறைப் படித்தாலும், திகட்டாத தெள்ளமுது .  நிறைய முறைப் படிச்சாச்சு என்று சொல்லிக் கொண்டே படித்து விட்டீர்களே! அது தான் கம்பனின் கைவண்ணம்....

வேறொரு கம்பன் பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்...






உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்