Friday, 24 April 2020

குலசேகராழ்வாரும், பாரிஜாதமும்.






திருவேங்கடன், குலசேகராழ்வாருக்குத் தரிசனம் தந்தால் எப்படியிருக்கும் என்று ஒரு சிறு கற்பனை.

இருவருக்கும் நடக்கும் உரையாடல் இப்படி இருந்திருக்குமோ?

பெருமாளைக் கண்டவுடன், குலசேகராழ்வார் அடித்துப் பிரண்டு எழுந்து, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறார். 

திருமலையின் திவ்யமான அமைதியில், இருவரும் அளவளாவது நன்றாகவே கேட்கிறது.

பெருமாளே ! என்ன பாக்கியம் செய்தேன்.!  பெருமாளே! பெருமாளே! கண்களிலிருந்து நீர்  தரை தாரையாக வர புளகாங்கிதம் அடைகிறார் ஆழ்வார்.

என்னப்பா செய்யறே இங்க உட்கார்ந்து? பெருமாள் கேட்க..

பேச நா எழாமல் அப்படியே ஆழ்வார் இருக்க...

சரி... விஷயத்திற்கு வருகிறேன்...குலசேகரா.

"இது வேண்டாம்....அது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டே வந்தாயே. இப்பவாவது ஒரு முடிவுக்கு வந்தாயா இல்லையா?சீக்கிரம் சொல்லு. கேட்கும் பிறவியைக் கொடுக்கிறேன்." வேங்கடவன் சொல்ல..

யோசிக்க ஆரம்பிக்கிறார் ஆழ்வார்..

"இன்னும் ஒரு முடிவுக்கு வரலையா குலசேகரா? நானே ஒரு ஐடியா கொடுக்கட்டுமா?" சொல்லி விட்டுத் தொடர்கிறார் வேங்கடன்.

"நான் போட்டிருக்கும் மாலையைப் பார் குலசேகரா. எத்தனை மலர்கள்? என்ன வாசனையா இருக்கு பார். அதிலும் இந்த சண்பக வாசனை இருக்கே... எனக்கு அந்த மலர் ரொம்ப பிடிக்குமப்பா."

சொல்லி முடிப்பதற்குள் ஆழ்வார்," கரெக்ட் பெருமாளே. நான் உன் மலையிலேயே சண்பக மரமாய் இருந்து விடுகிறேனே. அந்தப் பிறவி கொடுத்து விடேன் வேங்கடவா.  உன் பாதத்திலும் என் செண்பக மலர் இருக்கும். நானும் இங்கேயே இருப்பேன்." 

வினாடி நேரம் தான்," எனக்கு வேண்டாம். செண்பக மரம் பிறவி வேண்டாம்." என்று அவசர அவசரமாக மறுக்கிறார்.

"ஏன் ? என்ன ஆச்சுப்பா? "

"உனக்குத் தெரியாதா பெருமாளே? யாராவது மரத்தைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு போய் விட்டால்?"

ஹா...ஹா...மரத்தை யாராவது பெயர்ப்பார்களா குல சேகரா? பெருமாள் வெடிச் சிரிப்புடன் கேட்க...

"ஏன் நீ பெயர்க்கவில்லையா வேங்கடவா?"

"நானா....மரத்தைப் பெயர்த்தேனா? அது எப்ப? புதுக் கதை சொகிறாய்."

"புதுக் கதை இல்லை பெருமாளே. எல்லாம் திரேதாயுகப் பழசு தான். கிருஷ்ணாவதாரத்தில் உன் மனைவி சத்யபாமா கேட்டார்னு,  பாரிஜாத மரத்தையே பெயர்த்தவன் தானே நீ. இல்லைன்னு சொல்ல முடியுமா உன்னால்?"
சொல்லி விட்டு,"சரியான பெண்டாட்டி தாசன்" என்று செல்லமாக முணுமுணுக்கிறார் ஆழ்வார்.

"என்ன? என்ன சொல்கிறாய் குலசேகரா?"

"ஒண்ணுமில்லையே...." குலசேகரர் தயங்க..

"என்னமோ முணுமுணுத்தாயே? பெண்டாட்டி....தாசன் என்று காதில் விழுந்ததே அதைக் கேட்டேன்.."-இது வேங்கடவன்.

"ஒண்ணுமில்ல. நீ பாரிஜாத மரத்தைப் பெயர்த்ததைத் தான்  சொன்னேன். மறுக்க முடியுமா?" குலசேகராழ்வார் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சொல்ல....

அது... வந்து, அது... வந்து.... என்று பெருமாள் அசடு வழிய...

"அதனால் தான் சொன்னேன்...பணக்காரப் பெண்டாட்டி யார் கண்ணிலாவது செண்பக மரம் கண்ணில் பட்டுத் தொலைத்தால்........
பெண்டாட்டி தாசனான பணக்காரன் யோசிக்காமல் என்னை ஆள் படை வைத்துப்  பெயர்த்து எடுத்துக் கோண்டு போய் விடுவானே என்கிற பயம் தான் காரணம்." ஆழ்வார் சொல்ல

பெருமாள்," உனக்கு உதவ வந்தால்...என்னையே பெண்டாட்டி தாசன் என்று சொல்கிறாய். எனக்கு எதுக்கு வம்பு?  நீயே யோசித்து சொல்....நீ எதைக் கேட்டாலும் தயங்காமல் அருள் பாலித்து விடுகிறேன்..

சொல்லி விட்டு வேங்கடவன் திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுகிறார்.


என்னை கற்பனை உலகத்தில் சஞ்சரிக்க விட்ட குலசேகர ஆழ்வாரின்  பாடல் இதோ...

ஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்
கண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே

ஒளியுள்ள பவழக் கொடிகளை கரையிலே கொணர்ந்து , கொழித்து, அலைகள் உலாவுகிற குளிர்ந்த திருப்பாற்கடலிலே யோக நித்திரை செய்தருள்கின்ற, மாயங்களைப் புரியும் எம்பெருமானுடைய திருவடிகளை சேவிக்கும்படியாக இசையையே பேசுகிற வண்டுகளின் கூட்டங்கள், பண்ணிசைப் பாடப் பெற்ற திருமலையிலே சண்பக மரமாய் நிற்கும் பாக்கியமுடையவனாவேனே.

சண்பக மரமாக வேணும் என்று வேண்டினவர், அதையும் அவரே வேண்டாமென்று மறுத்து விடுகிறார். 

ஏனாம்?

சண்பக மரத்தையே திருமலையை விட்டே பெயர்த்துக் கொண்டு போய் விட்டால்?...

ஆழ்வார் மீண்டும் யோசிக்க ஆரம்பிக்கிறார்...

எத்தனை வேண்டுதல்கள் முன் வைத்தாலும்,  சலிக்காமல் அருள் பாலிக்கிறான் வேங்கடவன் . அதனால் ஆழ்வாரும் சலிக்காமல் தன் விண்ணப்பங்களை வைத்த வண்ணம் இருக்கிறார்.

அடுத்து என்ன பிறவி கேட்கப் போகிறார்? ???.........
  
                                                                               (தொடரும்)



Saturday, 18 April 2020

குலசேகராழ்வாரும், பொன் வட்டிலும்.








போன முறை கோவிலுக்கு சென்றிருந்த போது,

பணக்கார வீட்டுப் பெண்மணி, அம்மனுக்கு சாத்தினாற் போல் நகை போட்டுக் கொண்டு வந்திருந்தார். இவ்வளவு நகையையா போட்டுக் கொண்டு வருவார்?
கோவில் தானே இது? கல்யாண ரிசெப்ஷனா? சந்தேகம் வந்தது.

எல்லோரின் கண்களும் அவர் நகை மேலேயே இருக்க....
இவர் பத்திரமாய் வீடு போய் சேர வேண்டுமே  என்று எனக்குக் கவலையாய் இருந்தது.

அருகிலிருந்த என்னவர் என் மனதைப் படித்தவராய்," உன் ஹேண்ட் பேகைப் பத்திரமாய் பார்த்துக் கொள். மற்றவர்களுக்காக அப்புறம் கவலைப்  படலாம்" சொன்னதும்,

ஹேண்ட்பேகை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேன்.

வேறென்ன செய்வது? எனக்கென்ன 4 தலைகளும், 8 கண்களுமா இருக்கு?

அப்படி இருக்கும் பிரம்மாவுக்கோ வேறு பிரச்சினை.

அவருக்கு என்ன?

அவர் திருப்பதிக்கு தரிசனம் செய்யப் போன போது, அலை மோதும் கூட்டத்தில் அவர் தலைகளினால் அவருக்குப் பெரும் வேதனையாம்.

அவர் திருப்பதி சென்று கூட்டத்தில் இடிபட்டதை நேரில் பார்த்தாயோ?

நான் சொல்லலைங்க...குலசேகராழ்வார் சொல்கிறார்.

அவர் கொக்கு, மீன் பிறப்பும் வேண்டாம் என்றாரா?  வேறென்ன பிறவி கேக்கலாம் என்று நினைத்துக் கொண்டே வேங்கடவன் சன்னிதிக்கே வந்து விட்டார். 

அவர் கண்ட காட்சியை அவராலேயே நம்ப முடியவில்லை.

வேங்கடவனை தரிசிக்க ஒரே தள்ளு முள்ளு .

(அதென்ன  புதுசா?)

ஆனால் தள்ளு முள்ளு செய்து கொண்டிருந்தது யார் தெரியுமா?

சாட்சாத் சிவன் , பிரம்மா, தேவேந்திரன் ,மற்றும் கோடானு கோடி தேவர்கள்.... எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு நின்றிருந்தார்களாம்.

சிவனுக்குக் கவலையே இல்லை.  பணமா, நகையா, நட்டா எதையும் அவர் பார்த்துக் கொள்ள வேண்டாமே. 
ஆனால் அவர் ஜடா முடி? கூட்டத்தில் சிக்கிக் கொள்ள, அதை சரி செய்ய பாடாய் பட்டுக் கொண்டிருக்க.. 

பிரம்மாவுக்கோ  வேறு தொல்லை..

ஒரு தலையை வைத்துக் கொண்டே , கூட்டத்தில் நாம் படாத பாடு படுகிறோம்.. பிரம்மாவின் நிலை எப்படியிருக்கும் ? நான்கு தலைகளும் இடிபட, பயங்கரத் தலைவலி.
(நான்கு க்ரோசினை முழுங்கி விட்டு) வேங்கடனின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கி நின்று கொண்டிருக்கிறார். 

இரு மூர்த்திகளோடு, தேவாதி தேவர்களும் முண்டியடிக்க...

"வழி விடுங்க...வழி விடுங்க..."  ஆனை  வர....எல்லோரும் திரும்பிப் பார்க்க...ஆழ்வாரும் பார்க்கிறார்.

வழி கேட்டவரைப் பார்த்ததும், சிவன், பிரம்மா உட்பட.... எல்லோரும் இரு பக்கமும் விலகி, வழி விட...

குலசேகராழ்வார் ,"சிவன், பிரம்மாவுமே வழி விடும் அளவிற்கு யாரந்த வி.ஐ.பி.? " ஆச்சர்யமாகப் பார்க்கிறார்.

கையில் ஒரு பொன் வட்டிலுடன் பிரமுகர் ஒருவர், கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு வேங்கடனின் அருகில் செல்கிறார்.

இவருக்கா இந்த ராஜ மரியாதை.?

இருக்காதா பின்னே! வேங்கடன் தாம்பூலம் தரித்த பின் உமிழும்,  உமிழ் நீரைத் தாங்கும் பொன் வட்டிலை ஏந்தும் பணியாளருக்குத் தான் இந்த ராஜ மரியாதை.

பார்த்த உடனே குலசேகராழ்வாருக்குக் குஷியாகி விடுகிறது. இந்தப் பணியாளைப் போல் நாமும் வேங்கடவனின் அருகே செல்ல முடிந்தால்... ?

ஆஹா...உடனே வேங்கடவனுக்கு ஒரு அப்ளிகேஷன் இ மெயிலில் தட்டி விடுகிறார்.
"அந்தரங்க கைங்கர்யம் வேங்கடவனுக்கு செய்யும் பாக்கியம் கிடைக்குமானால் .... " எனக்கு அந்தரங்கப் பணியாளர் பிறவி வேண்டும்" 
எப்படி என்று பாருங்களேன்..

பின்னிட்ட சடையானும் பிரமனு மிந்திரனும்
துன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்
பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே

திரித்து விட்ட சடையை உடையவனான  சிவனும், பிரமனும், தேவேந்திரனும், நெருக்கி உள்ளே புகுவதற்கு வழியில்லாத பூலோக வைகுண்டமாகிய திருமலையிலுள்ள திருக்கோயிலின் நீண்ட திருவாசலிலே  மின்னலை வளைத்தாற்போல சோதிமயமாய் விளங்குகின்ற வட்ட வடிவமான சக்ராயுதத்தையுடைய, திருவேங்கடமுடையான், வாய் நீருமிழ்கின்ற தங்க வட்டிலை கையிலேந்திக் கொண்டு, அந்தரங்க பணியாளர்களுடன் நானும், உள்ளே புகும், பாக்கியத்தைப் பெறக் கடவேன்.

அப்பாடி... ஆழ்வார் தனக்கு விருப்பமான பிறவியை தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார் என்று வேங்கடவன் நினைத்து முடிப்பதற்குள்.... 

மனம் மாறி விட்டார் ஆழ்வார். அவசர அவசரமாக 
"வேங்கடவா! வேண்டாமப்பா வேண்டாம்."

"ஏனாம்?" 

"பொன் வட்டில் பணியாளர் பிறவி மிகவும் தற்காலிகமானது பெருமாளே. பொன் வட்டிலை யாராவது திருடி விட்டால்...?அப்புறம் நான் எப்படி உள்ளே வர முடியும். உனக்கு அருகே எப்படி நிற்க முடியும். அதனால் எனக்கு இந்தப் பிறவி வேண்டாம்."

"வேறு என்ன பிறவிக் கேக்கலாம்? யோசிக்க ஆரம்பித்து விட்டார். ஆழ்வார்.."

கொக்கு, மீன், அந்தரங்கப் பணியாளர் ஆகிய மூன்று பிறவியையும் veto செய்தாச்சு...

அடுத்து என்ன? பார்ப்போம்...

Thursday, 9 April 2020

குலசேகராழ்வாரும், மீனும்.




"டிங் டாங்"


பக்கது வீட்டு காலிங் பெல்லை அழுத்தினேன்.

கதவைத் திறந்ததும் ," ராஜியா....வா ..வா..  நல்ல தரிசனம் கிடச்சுதா?"

"ஆமாம் மாமி. இந்தாங்கோ லட்டு. " கொடுத்தேன்.

" ஆனால் இன்னும் கொஞ்ச நாழி பெருமாளை கண் குளிர பாக்க விட்டிருக்கலாம். ஆனால் ஜருகண்டி ஜருகண்டின்னு விரட்டி விடறாளே."

அதனால் தான் குலசேகராழ்வார் அங்கேயே தங்கிடனும்னு ஐடியா பண்ணி பெருமாளை வேண்டிக்கிறார்.

முதலில் கொக்காய் பிறவி வேணும்னு வேண்டிக் கொள்கிறார். 


நல்ல வேளை. கொக்குப் பிறவி  வேணாம்னு அவரே தீர்மானித்து விட்டார். 

'அப்ஸரஸ் எல்லாம் அவரைச் சுற்றி இருக்கும்படியான ,  மேலுலகத்துத்  தலைவன் பதவியைக் கேட்பாரோ"  

சீக்கிரம் சொல்லுங்கள் ஆழ்வாரே.... 

மாட்டாரோ?

அப்படியென்றால் அட்லீஸ்ட் 'நாட்டுக்கு ராஜா' பதவியையாவது கேளுங்கள் ஐயா. ப்ளீஸ்..

ஆனால் அதையும் அவர் கேட்க மாட்டார் போல் தெரிகிறது. அவர் தான் ராஜா பதவியை தோளில் கிடக்கும் துண்டை எறிவது போல் எறிந்து விட்டு வந்தவராயிற்றே.

பிழைக்கத் தெரியாதவராய் இருக்கிறாரே.  நம்மூர் அரசியல் வாதிகளுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் ......நினைக்கவே முடியாததெல்லாம் கேட்டிருப்பார்கள்.

சரி... இவர் என்ன தான் கேட்கிறார் பார்ப்போம்.

அவர் கண்களில் திருவேங்கட மலையில் இருக்கும் சுனை கண்ணில் படுகிறது. அதில் துள்ளி விளையாடும் மீன்களும் கண்ணில் படுகின்றன.

இந்த மீனாய் பிறவி எடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும். இங்கேயே திருப்பதி மலையிலேயே துள்ளி விளையாடிக் கொண்டு இருக்கலாம். 

அதனால்..." வேங்கடவா! எனக்கு உன் மலையில் இருக்கும் சுனையில் வாழும் மீனாய் பிறவிக் கொடேன்." வேண்டுகிறர்.


ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே

அழியாத செல்வமும், அப்ஸரஸ்கள் சூழ்ந்து நிற்க மேலுலகத்தை அரசாளுகின்ற  ஐஸ்வர்யத்தையும், இப்பூலோகத்தை அரசாளுகின்ற ஆட்சியையும், வருத்தமின்றி கிடைப்பதாயினும் எனக்கு வேண்டாம். தேன் மிக்க மலர்களுள்ள சோலைகளுடைய திருவேங்கட மலையிலிருக்கின்ற சுனைகளிலே  ஒரு மீனாக பிறக்கக் கூடிய பாக்கியம் உடையவனாவேன்.


ராஜ பதவி எங்கே? மீன் பிறவி எங்கே? மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

ஆனால் இந்த வேண்டுதலும் ஒரு வினாடிக்கும் மேல் நீடிக்கவில்லை.
" அச்சச்சோ! வேண்டாமப்பா! வேண்டாம் ! மீனாய்  பிறவி எடுக்க வேண்டாம்." அவரே மறுதலித்துக் கொள்கிறார்.

ஏனாம்?

மீனாய் பிறவி எடுத்தால் திருவேங்கடத்து சுனையில் இருக்கலாம். ஆனால் பெருமாள் அருகில் இருக்க முடியாது . அதோடு சுனை நீர், கோடை காலத்தில் வற்றி விடும் அபாயம் உண்டு. அப்ப மீனுக்கு என்ன ஆகும் ? சொல்லுங்கள்...

அதனால் வேறு பிறவி கேட்போம் என்று யோசிக்க ஆரம்பிக்கிறார்.

கொக்கு பிறவியா ம்ஹூம்..
மீனாய் பிறக்க வேண்டாம்..

அப்ப வேறு என்ன பிறவி தான் கேட்கப் போகிறார்? 

பொறுத்திருந்து பார்ப்போமா?



Thursday, 2 April 2020

குலசேகராழ்வாரும், கொக்கும்.



By Karsolene - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=24491874

"ஜருகண்டி...ஜருகண்டி"
இந்த  சத்தமே இல்லாமல் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான் வேங்கடவன்.

கொரோனாவின் தாக்கத்தை முன்னிட்டு திருப்பதியில் வேங்கடவன் யாரையும் பார்க்க மாட்டாராம். 

பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்குமென்றாலும், அவரே கோயில் நடையை சாத்திக் கொண்டு உள்ளே இருக்கும் போது , நாம் எம்மாத்திரம். 

ஆங்கிலத்தில் சொல்வதுண்டு, " Blindly Follow the leader." அதை நாமும் செய்வோம்.

கம்பனல்லவா உன்னிடம் மாட்டிக் கொண்டிருந்தான்? இப்ப....திருப்பதியா?

இப்ப திருப்பதியுடன்....குலசேகர ஆழ்வாரும் மாட்டிக் கொண்டார்.
திருப்பதியிலேயே இருப்பதற்கு ஆழ்வார் சொல்லும் ஐடியா அசர அடிக்கிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சொல்லியிருக்கிறார்.
எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என் ஸ்டைலில் சொல்லலாமே என்று தான்....

"ஜருகண்டி ....ஜருகண்டி.." 
ஓரிரு வினாடிகள் தான் பெருமாளை நாம் பார்க்க முடியும். அதற்குள், பெண் கல்யாணம், பிள்ளையின் வேலை, வீடு கட்டி முடிய...என்று எத்தனை விண்ணப்பங்கள் நம் கையில். ஆனால் அவனைப் பார்க்கும் அந்த நொடி இருக்கே..அவன் பாத தரிசனத்திலோ, நேத்ர தரிசனத்திலோ மனதைப் பறிக் கொடுத்து விட்டு, வெளியே வந்த பின்பு பார்த்தால் விண்ணப்பங்கள் அப்படியே நம் கையிலேயே தான் இருக்கின்றன.
அட... மறந்து விட்டோமே.
சரி...அவனையாவது மனதில் சிறையெடுத்தோமா என்றால் அதுவும் இல்லை. எட்டுபவர்களுக்கெல்லாம் எட்டாதவன் ஆயிற்றே அவன். நமக்கு மட்டும் சிக்கி விடுவானா என்ன?

இந்த விசனங்கள் சில நிமிடங்கள் தான் நமக்கு.. பிறகு, பஸ் கிடைக்குமா? எந்த ஹோட்டலில் இட்லி கிடைக்கும்? நாளைக் காலை ஆபீசுக்கு போகணுமே! .

சம்சார சாகரத்துள் மனம் மூழ்கி விடும்

குல சேகர ஆழ்வாருக்கோ திருப்பதியிலேயே இருக்க வேண்டுமாம். ஆனால் ஒரு சந்தேகம் அவரைத் துளைத்தெடுக்கிறது. என்னது அது?

திருப்பதியிலேயே இருந்தோமானால் "இங்கே என்ன செய்கிறாய்?" போலீசாரின் கண்ணில் பட்டால் மிரட்டி, விரட்டி விடுவார்களே. 

அதனால் " வேங்கடவா!  நீ இருக்கும் இடத்திலேயே நானும் இருக்க வேண்டுமே. என்ன செய்யலாம்?" குலசேகர ஆழ்வார் யோசிக்கிறார்.

"மனிதனாக இருந்தால் தானே என்னை விரட்டி அடிப்பார்கள். வேறு பிறவி எடுத்தால்? என்ன பிறவி எடுத்தால் இங்கேயே இருக்கலாம்." யோசித்தார்...

"நீ கேட்கும் பிறவி உனக்குக் கிடைத்து விடுமா? " ஆழ்வாரின் மைண்ட் வாய்ஸ் அவரிடம் கேட்டிருக்கும்.

"வேண்டுபவர்க்கு வேண்டியதை வாரிக் கொடுக்கும் கருணா மூர்த்தி  என் வேங்கடவன். நான் கேட்கும் பிறவி எனக்குக் கிடைக்கும்." தீர்க்கமாய் முடிவெடுக்கிறார்.

திரு வேங்கட மலையைப் பார்த்துக் கொண்டே யோசித்திருப்பார் போல..

கோவில் புஷ்கரணியில் நின்றுக் கொண்டிருந்த கொக்கு அவர் கண்ணில் படுகிறது.
" இந்தக் கொக்கு தான் எத்தனைப் புண்ணியம் செய்ததோ. சுவாமி புஷ்கரணியில் இருக்கும் பாக்கியம் செய்திருக்கிறதே." நினைத்தவுடன். 
கண் மூடி , வேங்கடவனிடம், " பெருமாளே! எனக்கு இந்த மனிதப் பிறவி வேண்டாம். என்னை  உன் புஷ்கரணியில் வாழும் கொக்காய் பிறவி எடுக்கும் பாக்கியம் கொடுத்து விடு என்று மனதார வேண்டிக் கொள்கிறார்.

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே


நப்பின்னை பிராட்டிக்காக  ஏழு எருதுகளை வென்றவனான  எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதையே வேண்டுவதல்லாமல் நாளுக்கு நாள்  வளர்கின்ற இம்மனித உடம்பெடுத்துப் பிறத்தலை நான் இனி விரும்ப மாட்டேன். அதுவுமல்லாமல் வளைந்திருக்கின்ற  ஶ்ரீபாஞ்சஜன்யத்தை இடத்திருக்கையிலே உடையவனான எம்பெருமானுடைய திருவேங்கட மலையில்,  திருக்கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற நாரை(கொக்கு)யாகவாவது பிறக்கக் கடவேன்.


அதோடு விட்டாரா ஆழ்வார் என்றால் இல்லை...

"அப்படியே ஆக...." என்று மலையப்பன் அருள்வதற்குள்.ஆழ்வார் மனதை மாற்றிக் கொண்டுவேண்டாம்... வேண்டாம் வேங்கடவா.... எனக்குக் கொக்குப் பிறவி வேண்டாம்." என்று அவசரமாக கைகூப்பி  மறுக்கிறார்.

ஏனாம்?

"கொக்காய் பிறவி எடுத்த பின்பு என்னை மறந்து திருமலையை விட்டுப் பறந்து விட்டேனானால்...
பெருமாளே! உன்னைப் பிரிவதா? ம்ஹூம்...அப்படி எதுவும் நடந்து விடக் கூடாதே. அதனால் கொக்குப் பிறவி எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம். "


புன் சிரிப்புடன் ஏழுமலை வாசன் "வேறு என்ன பிறவி வேண்டும் கேள்" என்று வரமளிக்கத் தயாராக ...மீண்டும் யோசிக்க ஆரம்பித்து விட்டார் ஆழ்வார்..
என்ன பிறவி கேட்டிருப்பார்? அடுத்தப் பதிவில்.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்