Thursday, 2 April 2020

குலசேகராழ்வாரும், கொக்கும்.



By Karsolene - Own work, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=24491874

"ஜருகண்டி...ஜருகண்டி"
இந்த  சத்தமே இல்லாமல் அமைதியாய் நின்று கொண்டிருக்கிறான் வேங்கடவன்.

கொரோனாவின் தாக்கத்தை முன்னிட்டு திருப்பதியில் வேங்கடவன் யாரையும் பார்க்க மாட்டாராம். 

பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்குமென்றாலும், அவரே கோயில் நடையை சாத்திக் கொண்டு உள்ளே இருக்கும் போது , நாம் எம்மாத்திரம். 

ஆங்கிலத்தில் சொல்வதுண்டு, " Blindly Follow the leader." அதை நாமும் செய்வோம்.

கம்பனல்லவா உன்னிடம் மாட்டிக் கொண்டிருந்தான்? இப்ப....திருப்பதியா?

இப்ப திருப்பதியுடன்....குலசேகர ஆழ்வாரும் மாட்டிக் கொண்டார்.
திருப்பதியிலேயே இருப்பதற்கு ஆழ்வார் சொல்லும் ஐடியா அசர அடிக்கிறது. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் சொல்லியிருக்கிறார்.
எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும், என் ஸ்டைலில் சொல்லலாமே என்று தான்....

"ஜருகண்டி ....ஜருகண்டி.." 
ஓரிரு வினாடிகள் தான் பெருமாளை நாம் பார்க்க முடியும். அதற்குள், பெண் கல்யாணம், பிள்ளையின் வேலை, வீடு கட்டி முடிய...என்று எத்தனை விண்ணப்பங்கள் நம் கையில். ஆனால் அவனைப் பார்க்கும் அந்த நொடி இருக்கே..அவன் பாத தரிசனத்திலோ, நேத்ர தரிசனத்திலோ மனதைப் பறிக் கொடுத்து விட்டு, வெளியே வந்த பின்பு பார்த்தால் விண்ணப்பங்கள் அப்படியே நம் கையிலேயே தான் இருக்கின்றன.
அட... மறந்து விட்டோமே.
சரி...அவனையாவது மனதில் சிறையெடுத்தோமா என்றால் அதுவும் இல்லை. எட்டுபவர்களுக்கெல்லாம் எட்டாதவன் ஆயிற்றே அவன். நமக்கு மட்டும் சிக்கி விடுவானா என்ன?

இந்த விசனங்கள் சில நிமிடங்கள் தான் நமக்கு.. பிறகு, பஸ் கிடைக்குமா? எந்த ஹோட்டலில் இட்லி கிடைக்கும்? நாளைக் காலை ஆபீசுக்கு போகணுமே! .

சம்சார சாகரத்துள் மனம் மூழ்கி விடும்

குல சேகர ஆழ்வாருக்கோ திருப்பதியிலேயே இருக்க வேண்டுமாம். ஆனால் ஒரு சந்தேகம் அவரைத் துளைத்தெடுக்கிறது. என்னது அது?

திருப்பதியிலேயே இருந்தோமானால் "இங்கே என்ன செய்கிறாய்?" போலீசாரின் கண்ணில் பட்டால் மிரட்டி, விரட்டி விடுவார்களே. 

அதனால் " வேங்கடவா!  நீ இருக்கும் இடத்திலேயே நானும் இருக்க வேண்டுமே. என்ன செய்யலாம்?" குலசேகர ஆழ்வார் யோசிக்கிறார்.

"மனிதனாக இருந்தால் தானே என்னை விரட்டி அடிப்பார்கள். வேறு பிறவி எடுத்தால்? என்ன பிறவி எடுத்தால் இங்கேயே இருக்கலாம்." யோசித்தார்...

"நீ கேட்கும் பிறவி உனக்குக் கிடைத்து விடுமா? " ஆழ்வாரின் மைண்ட் வாய்ஸ் அவரிடம் கேட்டிருக்கும்.

"வேண்டுபவர்க்கு வேண்டியதை வாரிக் கொடுக்கும் கருணா மூர்த்தி  என் வேங்கடவன். நான் கேட்கும் பிறவி எனக்குக் கிடைக்கும்." தீர்க்கமாய் முடிவெடுக்கிறார்.

திரு வேங்கட மலையைப் பார்த்துக் கொண்டே யோசித்திருப்பார் போல..

கோவில் புஷ்கரணியில் நின்றுக் கொண்டிருந்த கொக்கு அவர் கண்ணில் படுகிறது.
" இந்தக் கொக்கு தான் எத்தனைப் புண்ணியம் செய்ததோ. சுவாமி புஷ்கரணியில் இருக்கும் பாக்கியம் செய்திருக்கிறதே." நினைத்தவுடன். 
கண் மூடி , வேங்கடவனிடம், " பெருமாளே! எனக்கு இந்த மனிதப் பிறவி வேண்டாம். என்னை  உன் புஷ்கரணியில் வாழும் கொக்காய் பிறவி எடுக்கும் பாக்கியம் கொடுத்து விடு என்று மனதார வேண்டிக் கொள்கிறார்.

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்
ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்
கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே


நப்பின்னை பிராட்டிக்காக  ஏழு எருதுகளை வென்றவனான  எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்வதையே வேண்டுவதல்லாமல் நாளுக்கு நாள்  வளர்கின்ற இம்மனித உடம்பெடுத்துப் பிறத்தலை நான் இனி விரும்ப மாட்டேன். அதுவுமல்லாமல் வளைந்திருக்கின்ற  ஶ்ரீபாஞ்சஜன்யத்தை இடத்திருக்கையிலே உடையவனான எம்பெருமானுடைய திருவேங்கட மலையில்,  திருக்கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற நாரை(கொக்கு)யாகவாவது பிறக்கக் கடவேன்.


அதோடு விட்டாரா ஆழ்வார் என்றால் இல்லை...

"அப்படியே ஆக...." என்று மலையப்பன் அருள்வதற்குள்.ஆழ்வார் மனதை மாற்றிக் கொண்டுவேண்டாம்... வேண்டாம் வேங்கடவா.... எனக்குக் கொக்குப் பிறவி வேண்டாம்." என்று அவசரமாக கைகூப்பி  மறுக்கிறார்.

ஏனாம்?

"கொக்காய் பிறவி எடுத்த பின்பு என்னை மறந்து திருமலையை விட்டுப் பறந்து விட்டேனானால்...
பெருமாளே! உன்னைப் பிரிவதா? ம்ஹூம்...அப்படி எதுவும் நடந்து விடக் கூடாதே. அதனால் கொக்குப் பிறவி எனக்கு வேண்டாம்... வேண்டவே வேண்டாம். "


புன் சிரிப்புடன் ஏழுமலை வாசன் "வேறு என்ன பிறவி வேண்டும் கேள்" என்று வரமளிக்கத் தயாராக ...மீண்டும் யோசிக்க ஆரம்பித்து விட்டார் ஆழ்வார்..
என்ன பிறவி கேட்டிருப்பார்? அடுத்தப் பதிவில்.


6 comments:

  1. நல்ல கதை. உங்கள் பாணியில் படிக்க, நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டிற்கு நன்றி வெங்கட்ஜி. பாசுரங்க்ளை படிக்க படிக்க திகட்டவேயில்லை.
      அவரின் பாசுரங்கள் சிலவற்றை பதிவிடலாம் என்று ஆசை வேங்கடவனின் அருளோடு.
      இந்தக் கடினமான காலத்தில் நம் எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிக்க வேங்கடவனை வேண்டிக் கொள்வோம்.

      Delete
  2. திரு சின்மயாநந்தா கூறுவார் கால் கடுக்க காத்திருந்து ஆவனை தரிசனம்செய்யும் நேரத்தில் கண்களைமூடிக்கொண்டு கடவுளே காப்பாற்றுஎன்போமாம் வேண்டுதலாவது ஒன்றாவது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  3. பக்தி என்றும் மனதிற்கு இனிமை தருபவை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்