Saturday 30 March 2013

பொதிகை மலை உச்சியிலே..........

மாலை ஆறு மணிக்கு ' பொதிகை மலை உச்சியிலே  புறப்படும் தென்றல் 'என்று  திருமதி   தேவிகா  அழகாய் அபினயத்துடன் ஜில்லென்று   குளித்துக் கொண்டிருக்க  , அதைப் பார்த்துக் கொண்டிருந்த நான்   வியர்வையில்  நனைந்து  கொண்டிருந்தேன் . சரி, கொஞ்சம் காலாற  நடப்போம் , காற்றும் கொஞ்சம்  வாங்கி வருவோம்  என்று  செருப்பை மாட்டிக் கொண்டு  வெளியில் வந்தேன்.

கேட்டைப் போட்டுவிட்டு  தெருவில்   நடக்க   ஆரம்பித்தேன். " சர் " என்று ஒரு ஆட்டோ என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. பயந்து போய்  பின் வாங்கினால்  ஒரு  குடும்பத்தையே  சுமந்து கொண்டிருந்த  ஸ்கூட்டர்  மேல் விழ இருந்தேன்.
நல்ல வேளை   அந்த மகானுபவர்  "பிரேக் "  அடித்தாரோ  பிழைத்தேன். நான் மட்டுமா, ஸ்கூட்டர் குடும்பமும் தான் .

இந்த  டிராபிக் ,    வீடுகள் , பிளாட்கள்   நிறைந்த தெருவில் தான். மெயின் ரோட்டிற்கு சென்றால்  நீங்கள் பார்க்கும் வண்டிகள் தான் எத்தனை, எத்தனை ?
சைக்கிளை மிதித்துக் கொண்டு செல்லும்  கொரியர்கள் , ஸ்கூட்டரில்  செல்லும் மத்திம வயதை எட்டிப்பிடிக்கும் ஆண்கள்,
ஸ்கூட்டியில்   துப்பட்டாவால்,  கண்களை மட்டும் விட்டு விட்டு முகத்தை மூடிக்கொண்டு செல்லும் இளம் பெண்கள். அவர்களைப் பார்க்க முடிய வில்லையே  என்ற கோபத்தில்  பைக்கின்  ஆக்சிலேரடரை  ஒரு திருகு திருகும்  இளம் வாலிபர்கள்,  ஹுண்டாய் , மாருதி, இன்னோவா , ஹோண்டா ,நிசான் , இண்டிகா, சுமோ  ,நானோ  , என்று கார்கள் கூட்டம். இதனிடையே   பாவமாய் அங்கங்கே நகரும் அம்பாசிடர்கள்.
பல்லவனின் பெரும் குடும்பத்துடன்  போட்டிப் போடும் தண்ணீர் லாரிகள் ,மீன் பாடி வண்டிகள், சிலிண்டர் சுமக்கும்  மூன்று சக்கர வாகனங்கள் ,டெம்போக்கள் ...........இத்யாதி இத்யாதி.......ஹப்பா,  மூச்சு வாங்குதே  சொல்லி முடிப்பதற்குள்.......

இது எல்லாவற்றையும்  ஒரு ஓரமாக  நிற்கவைத்துவிட்டு  முன்னேறும் கொண்டை வைத்த  கார்கள் , 108 வண்டி ..........

நினைத்துப்   பார்த்தால்  ஒரு முப்பது வருடங்கள் முன்பாக இத்தனை வண்டிகள்   இந்தியத் தெருக்களில் ஓடும் என்று யாராவது சொல்லியிருந்தால்  கண்ண்டிப்பாக வாய் விட்டு சிரித்திருப்போம்.

நம் தெருக்களில்  இத்தனை  கார்களா?  அதெல்லாம் சாத்தியமேயில்லை  என்று  அடித்து சத்தியமே செய்திருப்போம்.

ஆனால் இன்று ..........
உலகுக்கே  சவால் விட்டுக் கொண்டு,  குதித்து , உயரும்  பொருளாதாரத்தினால்   மக்களின் வாழ்க்கைத் தரம்  முன்பை விட உயரத்தில் தான்  இருக்கிறது.
நடுத்தர  வர்க்கம்  மெதுவாக  கார், விமானப் பயணம்  என்று   முன்னேறிக் கொண்டே தான் இருக்கிறது.
எல்லா தட்டு மக்களும்  முன்பை விடவும் ஓரளவு வசதியாகவே உள்ளார்கள்.
அங்கொன்றும், இங்கொன்றும்  தப்புகள் நடக்கலாம். பெருவாரியாகப் பார்த்தால்  இந்தியா முன்னேற்றப்  பாதையில் போய் கொண்டிருப்பதை  யாராலும் மறுக்க முடியாத உண்மை.

சரி போதும்'" பிறந்த வீட்டுப்  பெருமையை  உடன் பிறந்தான் கிட்டேயே என்ன பீற்றல்" என்று நீங்கள் சொல்வது  கேட்கிறது.ஏதோ  காற்று வாங்க.......... என்று ஆரம்பித்து  விட்டு  கேள்விக்கு பதில் தெரியாத மாணவன் மாதிரி எதோ டிராபிக்  ஜாம்  என்று இழுக்கிறாளே   என்று  உங்களின் பொறுமையை சோதிக்கிறேனோ?

இந்த டிராபிக்கிற்கு நடுவே நீங்கள் கொஞ்சம் நடந்து வாங்களேன். ஒவ்வொரு வண்டியும் விடும் புகை ,அதில் கலந்திருக்கும் lead எத்தனை  விஷமானது  என்று உங்களுக்கே தெரியும். என்ன தான்  pollution certificate  எல்லாம் வாங்கிக் கொண்டு செல்லும் வண்டிகள் தான் என்றாலும்   இந்தப் புகை  இல்லாமல் நம் தெருக்களை  நினைக்க முடிகிறதா? இந்தப் புகைக்கு நடுவில்  நிஜமாகவே புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் கொசு மருந்து வண்டிகள் . இதில் எங்கே நல்ல காற்று  கிடைக்கப் போகிறது.? காற்றே வேண்டாம் என்று முகத்தை கர்சீப்பினால்  மூடிக்  கொண்டு செல்பவர்கள் ஏராளம்.

எல்லா வித  சங்கடங்களையும், சவால்கலிலும்  எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு  வளரும்   தொழிற்சாலைகள்  அருகில் இருக்கும்  குடியிருப்புகளில்   கேட்டால் அவர்கள் சொல்வார்கள்   சுற்றுச்சூழலினால் அவர்கள் படும் அவஸ்தையை .

இந்தப் பிரச்சினை  நம்  நாட்டில்  மட்டும்  என்றெண்ணிக்  கவலை  வேண்டாம்.
நம்  பொருளாதாரத்தோடு  போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கும்  சீனாவில்
இந்தச் சுற்றுச்சூழல்    இன்னும்  மோசமாக இருக்கிறதாம்.
நாளிதழ்  ஒன்று சொல்கிறது.அங்கு , குறிப்பாக  தலைநகர் பெய்ஜிங்கில்  எப்போதும்  புகை  பனிமூட்டம்  போலவே இருக்கிறதாம்.இதனால்  மக்கள்  அங்கு  முகமூடி அணிந்து  நடமாடத்ட்  தொடங்கியிருக்கிறார்கள்.

சீன அரசு  எத்தனையோ  நடவடிக்கைகளை  எடுத்தும் கூட  இந்தப்   புகை மூட்டத்திலிருந்து  பெரிய  விடுதலை எதுவும் கிடைத்தபாடில்லை.

இந்த  நிலையை  உபயோகபடுத்திக்  கொண்டு  44 வயதாகும் " சென் குவாங்பியோ "  என்ற   தொழிலதிபர்  காசு  பார்க்கிறார் .. எப்படி என்கிறீர்களா?
ஆக்சிஜனைக்   கேனில்  அடைத்து  விற்கறார். ஒரு  கேனின் விலை  நம்மூர்  மதிப்பில் ரூ .40/  . இது வரை 80 லட்சம்  கேன்கள்  விற்றுத்  தீர்ந்து  விட்டன.
" காற்றுள்ள போதே  தூற்றிக் கொள் " என்பதை  உண்மையாக்கி  விட்டார் இந்த தொழிலதிபர்.

தண்ணீர்தான்  காசு கொடுத்து  வாங்குகிறோம்  என்றால் இனிமேல் காற்றையும்  காசு கொடுத்து வாங்கும் நாள் வெகு  தூரத்தில் இல்லை.image courtesy---google.

Wednesday 27 March 2013

வர்ணத் திருவிழா
இன்று   ஹோலி  ! வண்ணங்களின்  திருவிழா,
நம் எண்ணங்களுக்கும்   திருவிழா  !

ஹோலி என்று சொல்லும்போதே   எத்தனை  வண்ணங்கள் நம் மனதில் தோன்றுகின்றன.இப்பொழுது போல்  அப்பொழுதெல்லாம் ஹோலி நம் தென்னிந்தியாவில்  பிரபலமாகவில்லை  என்றே நினைக்கிறேன்.

எனக்கு முதன் முதலில் 70களில்  தான் ஹோலி என்ற பண்டிகை பரிச்சியமானது. திருமணத்திற்குப்   பிறகு வடஇந்தியாவில்   சில காலம் வசிக்க நேர்ந்தபோது  தான்  இந்த வண்ணத் திருவிழாவை ரசிக்க நேர்ந்தது..

வண்ணச் சிதறலால்  உருவானது  ஒரு  நட்பு வட்டம் . அது,  சாதி,மதம்,மொழி, இனம், தாண்டி அறிமுகமான  நட்பு   வட்டம், இன்று  வரை தொடர்கிறது.

வண்ணங்கள்  என்று சொன்னவுடன்     அழகாய்  வண்ண ஓவியங்களுடன்    படபடக்கும்  பட்டாம்பூச்சிகள்   , வானவில் இவையிரண்டும்  என்  நினைவில் வந்து மோதும்.

வானத்தில் நடக்கும்"  ஹோலி "த்திருவிழா வா இது? என்று நினைக்கத் தோன்றும்   வானவில்லை  பார்க்கும்போது 


 "யாரது  இவ்வளவு அழகாக Asian Paints அடித்திருக்கிறார்கள்.  
அதுவும் ஈர வானில்.......  என்றும்  யோசித்திருக்கிறேன்.

வானவில்லை    சிறுவர் முதல்  பெரியவர் வரை   வயது வித்தியாசம் இல்லாமல்  கண்டு    திளைக்கிறோம்.  இங்கே  .... தெரிகிறதா, அங்கே.......என்று  ஒடி, ஓடிப்  பார்க்கும் ஆவல்   உண்டு.

 மழைத்  துளிகள்  முத்து முத்தாய்  காற்றில் ஊஞ்சலாடும்.
"நானும்  இந்த  சாரல்  மழையில் சற்றே  நனைகிறேனே " என்பது போல் சமயங்களில் எட்டிப் பார்ப்பான்  கதிரவன்.

இந்த மழைத் துளிகளை  ஊடுருவும்  சூரிய ஒளி  வெளியே வரும் போது
ஏழு   வர்ணங்களாக  வெளிவரும்  மாயாஜாலம்  நிகழ்கிறது.இது  அறிவியல்.

அறிவியல்  சொல்லும் இன்னொரு  உண்மை.....
நாம் காண்பது   வெறும்  ஏழு  வர்ணங்களே.  ஆனால்  நம்   கண்களுக்குத் தெரியாத வர்ணங்கள் இன்னும் இருக்கின்றன .(infra red, ultra violet  etc...)

அறிவியல்   இதையும்  சொல்கிறது.....
நாம்  ஒவ்வொருவர்  பார்ப்பதும்  தனித்தனி   வானவில்லாம்.
ஒரே வானவில் இல்லையாம்.
விந்தையாய் இல்லை.

அறிவியலை கொஞ்சம்   நகர்த்தி விட்டு , சில விஷயங்களைப்   பார்ப்பது  நம்மில் பலருக்கு  மிகவும்   பிடிக்கும்.  

மழையும் வெயிலும்  சேர்ந்திருக்கும் போது  "இன்று  காக்காய்க்கும்  நரிக்கும் கல்யாணம்  " என்று சிறு   வயதில்   சொல்லியிருக்கிறோம்.  எதற்கு? தெரியவில்லை.  ஆனால் இன்றும் கூட  அதை  சொல்கிறேன்  என் பேரனிடம் ........
என்னவோ தெரியவில்லை  ! பிடித்திருக்கிறது அப்படிச் சொல்ல ...

இதையும் நாம் கேள்விப் பட்டிருப்போம்.
வானவில் வானிற்கும் பூமிகும்  நடுவில்  இருக்கும் வர்ணப் பாலம்.
சில நிமிடங்கள் வரை  வானவில்லை விட்டு கண்ணை நகர்த்தாமல் இருந்திருக்கிறேன்.தேவர்களும், கடவுளும்  இறங்கி வரப் போவதைப்  பார்ப்பதை நழுவ விடலாமா ? என்று தான். 

ஆனால் இன்று வரை யாரும் இறங்கி வரக் காணோம்.


வானவில்  முடியும் இடத்தில்  ஒரு பானை நிறையத்  தங்கம் இருக்கும் என்பது   ஒரு நம்பிக்கை தான். அப்படியிருந்தால் தங்கம் விற்கும்  விலையில்......நாம் எல்லோரும் ஒரு பெரிய  ஏணியில்  ஏறிக்  கொண்டு இருப்போம். பானையில்  இருக்கும்  தங்கத்தை  எடுக்கத்தான்.

ஆனால் உண்மை என்னவென்றால்  வானவில்  நாம் பார்ப்பது போல் வண்ணப்  பாலமாயில்லை.  அது ஒரு முழுவட்டமோ ?
விமானத்தில்   பயணிக்கும் போது  பார்த்தால் அப்படித் தான் தெரியும்
நம் வாழ்க்கை போல் தான் போலிருக்கிறது. 


இன்றும்  இந்த வயதிலும்   வானவில்  தெரிந்தால்  ஓடுகிறேன்.........
தேவர்களின்    ஹோலியைப்  பார்க்கத்தான்.

image courtesy--google

Saturday 23 March 2013

நூல் விடத் தெரியுமா?
" இனி மேல்  உன்னிடம் நான் கெஞ்சப் போவதில்லை .
நீ  தைத்துக்கொடுத்தால்இந்த"கர்டனை"ப்  போடுவோம்.இல்லையென்றால்  விடு"  என்று  சற்றுக்  கோபமாகவே  குரல்  வர  ,  கொஞ்சம்   அசந்து  தான் போனேன்.

சரி  வேறு வழியில்லை  என்று   டேபிளடியில்  இருந்த   உஷாவை (தையல்  மெஷின்) இழுத்து   வைத்து    நூலெல்லாம்   கோர்த்து   தைக்க உட்கார்ந்தேன்.

பல   நாட்களாக   நான் கண்டு கொள்ளாததன்  கோபமோ, என்னவோ    உஷா   சரியாக  வேலை செய்யவில்லை.  என்ன செய்வது?  திரு திரு என முழித்தேன். பார்த்தார்   என் கணவர். ' என் இப்படி  முழிக்கிறாய்?  மெஷின்  வேலை செய்யவில்லியா?'   என்று கேட்டதற்கு  பரிதாபமாக         " ஆமாம்  ".  என்றேன்.

"உன்னைப் பற்றித்  தெரியாதா? ப்ளாக்  எழுத  சொன்னால்    நீ பாட்டிற்கு   லாப்டாப்பே   கதி என்று இருப்பாய்.  நான் ஒரு வேலை சொன்னால் செய்ய மாட்டாய் "  என்று அவருடைய  கோபத்தின்   டிகிரி  எகிற  செய்வதறியாது   திணறினேன்.

சரி பக்கத்திலிருக்கும்    டெய்லர்   ஒருவரைக்   கெஞ்சோ கெஞ்சென்று  கெஞ்சி  கூப்பிட்டு   வந்து   மெஷினில் என்ன  ரிப்பேர்  என்று கேட்டதற்கு
ஏதோ    ICU வில்  இருக்கும்  பேஷண்டைப்  பற்றிக்   கேட்டது போல்
உதட்டைப் பிதுக்கி, " ஊஹூம்....  இனிமேல் ஒன்றும்  செய்வதற்கில்லை "  என்று கூறி   என்னை இன்னும்  திகலடையச்  செய்தார்.

வேறு வழியில்லாமல்   அதே தையற்காரரிடம்  என்  "கர்டனை"  தைத்து  முடித்தேன். ஆனாலும்  தையல் மெஷின் ?  அவரிடமே  வந்த விலைக்கு  விற்று விட்டேன்.  சரி,  ஒரு வழியாக  எதாவது தைக்க வேண்டுமென்றால்  இனிமேல்  யாரும்   என் பிராணனை  வாங்க மாட்டார்கள்  என்று திருப்தியடைந்தேன்.

"அப்படியெல்லாம்   உன்னை  விட்டு விடுவேனா " என்று  விதி  மறு   நாள்   பேப்பரில்   வந்த விளம்பரம்   மூலமாக  விளையாட ஆரம்பித்தது.

on line shopping இல் silai  mini sewing machine  என்று விளம்பரம்  இருந்தது.
உடனே பார்வையை  அதன் மேலே ஓட்டினேன். விலை  shipping charges  எல்லாம் சேர்த்து  ரூ.2000  என்றிருந்தது.

நம் உஷாவிற்கு  தான் பிரியா விடை  கொடுத்து விட்டோமே என்று  இதையாவது      வாங்கலாம்  என்று  நினைத்தேன்.(சொந்த செலவில் சூன்யம்  வைத்து கொள்வது  என்பது இது தானோ?) 

மெதுவாக  என்னவரிடம்  விளம்பரத்தைக்  காட்டினேன்.அவரோ  கண்ணாடியை  சரி செய்து கொண்டே" அதுக்கென்ன இப்போ?" என்றார்.

எப்படி இவரை   சம்மதிக்க வைப்பது  என்று  மண்டையைப் போட்டு உடைத்தேன். இரண்டு நாட்கள்  முழுதாக ஆனது. அவரோ   அசைய மறுத்தார்.

ஒரு" ட்ரம்ப்   கார்ட்" ஒன்றை  வீசினேன்.  "உங்கள் லுங்கியெல்லாம்   தைக்க   இருக்கிறது  இல்லியா? இது கையடக்க சைசில்  இருக்கிறது. தைக்க எளிதாக இருக்கும் என்று தோன்றுகிறது. "  என்று  ஐஸ் வைத்த பிறகு    இந்த மினி மெஷினை வாங்க சம்மதித்தார்.

உடனே   onlineஇல் ஆர்டர் செய்து விட்டேன்.
புக் செய்து விட்டேனே தவிர கொஞ்சம்  உள்ளுக்குள் உதறல் தான் . 
இது ஒழுங்காக வர வேண்டுமே !
 நான்  உடம்பு   வளைந்து  தைக்க வேண்டுமே!

மூன்று  நாட்கள் கழித்து   சிலை(mini silai sewing machine)  வீட்டிற்கு வந்தாள்.
உஷாவின்    குழந்தை போலிருந்தாள்   சிலை.

பக்காவாக பேக்  செய்திருந்த சிலை மெஷினை   மெதுவாக  பாக்கெட்டிலிருந்து   பிரித்து எடுத்தேன். 
சுடச்சுட  தைக்க ஆரம்பித்தேன்.
நன்றாகவே வேலை செய்தது.
" கட கட" வென்று    போனது வந்தது  எல்லாம்   தைத்து முடித்தாயிற்று.

பட்டனை  தட்டினால்  (இட்லியோ  காபியோ இல்லை )   
நாம் தைக்க வேண்டிய  இடத்தில்  லைட்  வருகிறது.
சாளேஸ்வரம்  இருப்பவர்கள்   எளிதாக  தைக்கலாம்.
தூக்குவது எளிது. வெறும் 1 கிலோ  தான் வெய்ட் . 
எந்த இடத்திற்கு வேண்டுமானாலும்   எடுத்து  வைத்துக் கொண்டு தைக்கலாம்.  காலால் மிதிப்பதற்கு   பெடல் ஒன்று கொடுத்திருக்கிறார்கள்.  பேட்டரி/கரண்ட்
என்று   எதிலும் வேலை செய்கிறது. 
 ஒரே சந்தோஷம் தான்   எனக்கு,

அவருடைய    லுங்கியை   எடுத்து வைத்து தைக்க ஆரம்பித்தேன். நன்றாகவே தைத்துக் கொண்டிருந்த மெஷின்  சத்தம் ஒரு மாதிரியாக  வந்தது
மெஷினை நிறுத்தி விட்டுப்  பார்த்தேன். 
ஓ....... " பாபினி"ல்  நூலில்லை.

பாபினை வெளியே எடுத்தேன்.  நூல் சுற்றலாம்  என்று   மெஷினைப் பார்த்தேன்.  அதற்கு  எங்கே  வசதி?
 மெஷினை திருப்பி  திருப்பி  பார்த்தேன்.

ஊஹூம்  ...... ........தெரிய வில்லை.
சரி  அதனுடன் வந்த புத்தகத்தை  அட்டை   to   அட்டை   படித்து  முடித்து விட்டேன்.  ஒரு தடவை இல்லை , இரண்டு தடவை இல்லை.....பலமுறைப்  படித்து  மணப்பாடமாகவே  ஆகிவிட்டது.

அந்தப் புத்தகத்தில்   " இடம் சுட்டிப் பொருள் விளக்கு " எழுதும் அளவிற்கு படித்தாகி விட்டது.  ஒன்றும் பலன் இல்லை.  

மெஷினில் லைட், நூல்  கட் செய்ய ,கரண்டில்  வேலை செய்ய, பெடல்  என்று எல்லாம் இருக்க  பாபின்  நூல்  சுற்ற  வசதியில்லாமலா  இருக்கும்.?

என்  சிற்றறிவிற்கு  " டேக்கா "  கொடுத்துக்  கொண்டிருக்கிறாள்  சிலை.

என்னவரிடம்  உதவி கேட்டால்  அவர் சொல்கிறார்," ஒரு வேலை செய். உனக்குப் பழக்கமான   உஷாவை   வாங்கி   அதில்   பாபினில்  நூல் சுற்றிக் கொள்  ,அப்புறம்  இதில் தைத்துக் கொள்" என்று நக்கலடித்து விட்டு  " பேப்பரில்  அரசியல் நிலவரம் படிக்கிறேன்....தொந்தரவு  செய்யாதே..........."  என்று மிரட்டல் வேறு.

எனக்கு உதவி செய்யாமல்  என்ன  அரசியல்  வேண்டியிருக்கிறது  சொல்லுங்கள். ஏதோ   அரசியல் வாதிகள் எல்லாம்  இவருடைய  ஆலோசனையை  எதிர்பார்த்து  காத்திருப்பது போல்...............ம்க்கும்.

சரி, என் பிரச்சினை  என்னவாயிற்று என்கிறீர்களா?
இன்னும்  அப்படியே தான் இருக்கிறது .......

"சிலை" சோபாவில்  சிலையாகி  இருக்கிறாள். நீங்களே பார்த்துக் கொள்ளலாம் .போட்டோ போட்டிருக்கிறேன்.
என் பிரச்சினையின்   தீவிரம் புரிகிறதா?
யாரிடமாவது   தீர்வு  இருக்கிறதா?...........

   என்  அருமை " சிலை"யின்   பலவித போஸ்கள்   கீழே  .........


என் சிலையை அப்படியே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்காவது  , என் பிரச்சினைக்குத்  தீர்வு  தெரியுமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.  ..................ப்ளீஸ் ...

smiley image courtesy----google.

Friday 22 March 2013

''சிட்டுக்குருவி சேதி" தெரியுமா?

                                  
                                                             அறிவிப்பு
 
 மேலே படத்தில் உள்ளவர்களை  காணவில்லை.

கண்டு பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.


உயரம்     சுமார்  இரண்டு அங்குலம்.


நிறம்        லைட் பிரவுன்


 பார்க்க மிக அழகான கண்களுடன், சின்ன அலகு
ம் கூட.

 இங்குமங்கும் 'பட பட ' என்று 'பறக்கும் படை'.


இந்தக் குருவியார் தன் குடும்பம், தாயாதி பங்காளிகள், உற்றார் .உறவினர்,எல்லோருமாக என் வீட்டு முற்றத்தில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.இதெல்லாம் ஒரு பத்து பதினைந்து வருடம் முன்பாகத் தான் .பின்பு ஒவ்வொருவராக  வெளியே சென்றவர்கள்  திரும்ப வில்லை.

இப்பொழுது  பார்த்தால் ஒருவரையும் காணோம்.


இவ்வளவு  நாளாக என்ன  செய்து   கொண்டிருந்தேன் என்கிறீர்களா?


தேடி தேடி தவித்தது தான் மிச்சம்.அதனால் தான் இந்த அறிவிப்பு.


என்னால் மறக்க முடியவில்லை,


குருவிகள் என் வீட்டு முற்றத்தில்,வீட்டுப் பரணில் ,போட்டோக்களுக்கும்,

சுவற்றுக்கும் இடையில் கூடு கட்டி,முட்டையிட்டு,குடும்ப விருத்தி செய்து, 


குட்டி குருவிகளை தாய் அன்புடன் ,பார்த்து பார்த்து உணவூட்டியது எல்லாம் 

அப்படியே கண்ணில் நிற்கிறது.


கீச்,கீச் என்று நாள் பூராவும் கத்தி கும்மாளமிட்டு ,வீடே உயிரோட்டமாயிருக்கும்.


குருவிகள் வீ ட்டில் விளையாடுவது ,மங்களகரம் என்று என் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.


தன் துணையுடன் கொஞ்சி விளையாடும்.


திடீரென்று இரண்டும் ஊடல் கொண்டாடும்.


பார்க்க ரம்யமாக இருக்கும்


'படக், படக்' என்று  தலையை திருப்பி என் மழலைக் குழந்தைகளை வித்தியாசமாக பார்க்கும்..


குழந்தைகள்  குருவியை பிடிக்கிறேன் பேர்வழி என்று துரத்திக் கொண்டு


 ஓடினால் 'விர்' ரென்று பறந்து துணி உலர்த்தும் கொடியில், அமர்ந்து

வெற்றிக் களிப்புடன் உற்சாக  ஊஞ்சலாடும்.


என்  குழந்தைகளுக்கு நான் பருப்பு சாதம் ஊட்டும் போது,எங்களுக்கு கிடையாதா? என்று ஏக்கமாக பார்க்கும்.


அம்மாவோ,பாட்டியோ, அரிசியில் கல் நெல் பொறுக்கும் போது,

குடும்பத்துடன் வந்திருந்து  கொஞ்ச தூரத்தில் நின்று கொண்டு, தத்தி தத்தி குதித்து கொண்டு' கீச் கீச் 'என்று மாநாடு போடும்.


இது அத்தனையையும்,  இதற்கு மேலும் அவை செய்யும் அட்டகாசங்களை ரசித்திருக்கிறேன்.கடைசியாக கிடைத்த தகவலின்படி,

நாம் தேடும் சிட்டுக் குருவியை இனிமேல் நம்மிடையே பார்க்கவே முடியாது என்று தோன்றுகிறது.அவைகள் நாடு கடந்து போயிருக்கலாமோ என்று சந்தேகமாயிருக்கிறது.


சிட்டுக்குருவிக்கு என்ன கோபம் நம்மேல் என்று விசாரித்த போது கிடைத்த தகவல்


நம் செல்போன் டவர்களிலிருந்து வெளிவவரும் கதிர்வீச்சின்ஆபத்தில் சிக்கியிருக்கலாம்.


நம் சிறுவர் சிறுமிகள்(சமயத்தில் பெரியவர்களும் தான்) கண்டகண்ட இடங்களில் மென்று ,மென்று துப்பும்  சூயிங்கம் அவர்கள் உயிரை குடித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.


அதோடு


மக்களிடையே குறைந்து கொண்டே வரும் தோட்ட ஆர்வமும்,


மலிந்து வரும் சுய நலமும்(எச்சிற்கையால் கூட காக்காய் விரட்டுவதில்லையே.) காரணமோ.?


இப்படி பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.......


சரி,எப்படி தான் சிட்டுக் குருவிப் பஞ்சம் தீர்ப்பது.


என்  எண்ணங்கள்  இதோ


நம் வீட்டு பால்கனியில்,ஜன்னலில்,குருவிக்கும் ஒரு பறவை வீடு


கட்டிக்கொடுக்கலாம்(இப்பொழுது bird house விற்கிறார்கள்).


சின்ன தட்டுகளில் தானியம்,தண்ணீர் வைக்கலாம்.


மரம்,செடி கொடி வளர்ப்போம்.


சுற்று சூழலைப் பாதுகாப்போம்.


நம் குழந்தைகளுக்கும் ,சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துவோம்.


இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ  அதையெல்லாம் செய்து,சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகளுக்காக


வழி மீது விழி வைத்து காத்திருப்போம்.நன்றி   கூகுள் (பட உதவி)

Tuesday 19 March 2013

ஜொலிக்கும் வைரம்.
" உங்கள்  மருமகள்   காதில்  போட்டிருப்பது  வைரமா   இல்லையா  ? " என்று  கேட்கும்  வம்பிகள்  நிறைந்த உலகம் இது.
வைரம் என்றதுமே அதன்  ஜொலிஜொலிப்பும் ,  அதைபோட்டிருப்பதால்  கிடைக்கும்   அந்தஸ்தும்,   மரியாதையும்   நமக்குத்  தோன்றுவதில்  வியப்பில்லை.

வைர  ஆபரணத்தைப்     பார்க்கும்  போது   அதன்   அழகில்  , பளபளப்பில்  மயங்குகிறோமே ஒழிய ,     நம் கைகளில்  தவழும்    வைரம்  எங்கிருந்து , எப்படி  , யாரால் , ............  என்று     யோசிப்பதேயில்லை     யாரும்.

நம்   கைகளையோ , காதுகளையோ, விரல்களையோ    பளபளக்க வைக்கும்  வைர   ஆபரணங்களில்    இருக்கும்  வைரங்கள்   யார் கண்டது, " blood diamonds"  ஆக   இருந்துவிட   கூட  வாய்ப்புண்டு.

இது   என்ன   "blood   diamonds"?

வைரங்கள்   ஆப்ரிகாவிலிருந்து   கிடைக்கிறது   என்று  நாம் நன்றாகவே  அறிவோம்.  காங்கோ    ஆற்றுப்  படுகைப் பற்றி  நாம் வரலாறு  பாடத்தில்  படித்தது   நினைவிற்கு  வருகிறது.அங்கே  இருந்தும், அங்கோலா, சியெர்ரா  லியோன்,போட்ஸ்வனா , நமீபியா,  சவுத் ஆப்பிரிக்கா  போன்ற  இடங்களிலிருந்தும்  நமக்கு வைரம் கிடைக்கிறது.  

ஆனால்  அதே  ஆப்ரிக்காவை  நாம் " இருண்ட கண்டம் "என்றும்    படித்ததும்  நினைவில்   இருக்கிறது. இன்றும் அந்த நிலையிலிருந்து சற்றும் மாறவில்லை. கொஞ்சம்  புரியாத  அரசியல் தான் இது.

அது எப்படி   உலகத்தின்  வைரக்  கிடங்கு போலிருக்கும்  ஆப்பிரிக்காவில்  வறுமை  ருத்ர தாண்டவமாடுகிறது.? வறுமை   என்றால்  நாம் நினைத்து பார்க்க முடியாத  அளவிற்கு   ஏழ்மையில்   வாடுகிறார்கள்   மக்கள்  .
அவர்கள் தான்  இந்த வைரங்களை  தோண்டும்  சுரங்கப்  பணியில்  ஈடு பட்டிருக்கிறார்கள் .

  அங்கு நிலவும் அடிமைத்தனம் , கொலை  செய்யவும் தயங்காத முதலாளிகள் , கல்வி  இல்லாமை,  குழந்தைத்  தொழிலாளர், சின்ன சின்ன  தீப்பெட்டி போன்ற குடியிருப்புகள்   என்று   தொடரும் கொடுமை...... 

நான்   இணையத்தில்லிருந்த  New York Times பத்திரிக்கையில்  படித்த ஒரு விஷயம்  மனதை வெகுவாக பாதித்தது. 
வைரம் தோண்டும் என்பதைவிட  வைரம் தேடும் தொழிலில் இருக்கும் ஒருவர்  முழங்காளளவு சேற்றில் நின்று கொண்டு கைகளால் அளைந்து  தேட வேண்டும் .  
இதுபோல்  நிறைய பேர் நின்று கொண்டு தேடிக் கொண்டிருக்க இவர்களுக்கு கிடைக்கும் வைரத்தை இவர்கள் எடுத்து சென்று விடாதபடி  கண்காணிக்க துப்பாக்கி ஏந்திய வீரர்  நின்று கொண்டிருப்பார்கள்.  

வைரக்கல் கையில் கிடைத்தவுடன் உடனே  அந்த வீரர்  அதை வாங்கிப் பத்திரப்படுத்தி விடுகிறார். 

இதில் ஏதாவது தகராறு   வந்தால் உடனே  சுட்டு விடவும்  தயங்குவதில்லை . கொலை சர்வ சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருக்கிறது.

கைகளை   வெட்டி விடுவதும்   சர்வ சாதாரணம். 
தேடும் வேலையில் சிறிது சுணங்கினாலும்  வயது வித்தியாசம் பாராமல் 
கசையடியும்  கிடைக்கும். 

வெயில் மழை  எதுவும் பாராமல் வைரம் தேடும் இந்தத்  தொழிலாளிகளுக்கு   கிடைக்கும்  வருமானம் மிக மிக சொற்பமே!

கைக்கும் வாய்க்கும்  எட்டாத ஜீவனம்  தான் நடத்துகிறார்கள்  பாவப்பட்ட இந்தத்  தொழிலாளிகள். 

இதில்   மிகவும் பரிதாபமான விஷயம் என்னவென்றால்  பல மாதங்கள் கஷ்டப்பட்டு  எடுக்கும்   ஒரு காரட்   வைரத்தின் மதிப்பு  கூட  இவர்களுக்குத் தெரியாது.விலையுயர்ந்தது   என்பது மட்டும் தெரியுமாம்.அவ்வளவு  அறியாமையிலேயே   இருக்க வைக்கப் படுகிறார்கள்  இவர்கள்.

இத்தனை மோசமான சூழ்நிலையிலிருந்து  எடுக்கப் படும் வைரம் தான் 
"blood dimonds/conflict diamonds/war diamonds" என்று கூறப்படுவது.

இப்படியெல்லாம்   பல மனிதர்களின் உயிரை விலையாகக் கொடுத்து ,பல பேருடைய  கையைக்  காவு வாங்கி    விற்பனைக்கு   வரும்  Blood Diamonds யா    நாம்  லாக்கரில்   வைத்து   பத்திரப் படுத்துகிறோம்.


பயந்து விட வேண்டாம்.  எல்லா வைரங்களும்  இப்படி ரத்தக் கரை 
படிந்த  கற்களில்லை.நமீபியா, போட்ஸ்வானா , சவுத்  ஆப்பிரிக்கா  போன்ற  இடங்களிலிருந்து  இருக்கும்  வைரசுரங்கங்கள்  சட்ட  திட்டங்களுக்கு உட்பட்டவையே !

நம்   கைகளில்  தவழும்  வைரமும்   இந்த வகை சார்ந்தவையாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்வோம்.

இல்லையேல்  வைர நகைகளை அறவே   புறக்கணித்து   மனித  நேயத்தை வெளிப்படுத்துவோம்.


image courtesy-- google

Monday 11 March 2013

பல்லாங்குழி
இன்று    காலை   சமையல்  செய்யும்  போது   எங்கிருந்தோ  "பல்லாங்குழியின்   
வட்டம்     பார்த்தேன்  "  என்ற பாட்டு     மிதந்து   வந்தது. 

பல்லாங்குழியின்  விளையாட்டு   நினைவிற்கு  வந்தது.   டி .வி.யும் ,  இண்டர்நெட்டும்   ஆட்சிக்கு வராத  காலம்  அது.

 பெண்களும் இப்போது போல்  ஸ்கூட்டியிலும் , காரிலும்   பறக்காத     காலமும்    கூட .  அதுவும்   கிராமங்களில்    இருக்கும்,  பெண்கள்  வீட்டினுள்   பூட்டியே    வைக்கப்  பட்டிருந்த  போது ,   அவர்களுக்கு  பொழுது போக்குத்   துணையாக   இருந்தது,    இது  மாதிரி   விளையாட்டுக்கள்  தான்.

இந்தக்    காலத்தவர்களுக்குப்   புரியும்படியாக   சொல்ல  வேண்டுமென்றால்  
பல்லாங்குழி   ஒரு  " board game"   என்று   சொல்லலாம் .

கிராமங்களில்   பல்லாங்குழி,   இல்லாத   வீடே   இல்லை, என்று  கூட  சொல்லலாம்.

அப்போதெல்லாம்    ஒவ்வொரு  வருடமும்  கோடை  விடுமுறைக்கு  தாத்தா 
வீட்டிற்கு   செல்வது  வழக்கம் .
கம்பர்  பிறந்த,  தேரெழந்தூர்    அருகே,    காவிரி  (இனிமேல்   பெருக்கெடுத்து   ஓடப்  போகிறது )  பாயும்   ஒரு  சின்ன அழகான  கிராமம்  என்  தாத்தா ஊர் .

வீடு,      கூடம் , முற்றம், தாழ்வாரம், திண்ணையென்று இருக்கும்.   பெரிய நகரத்து  வசதிகள்   எதுவும்  இருக்காது.  ஆனால்  அந்தக்  கிராமமும்,   வீடும்   நெஞ்சை  அள்ளிக்  கொண்டு தான்  போகும்.   எழுத  ஆரம்பித்தால்  அது  ஒரு  தனி  பதிவாகி விடும்.  

கூடம்   தாழ்வாரம்   எல்லா இடத்திலும் ,   அழகழகாய்    தூண்கள்   உண்டு.  ஏதாவது   ஒரு   தூணின் ஓரமாக  ,   அமைதியாய்   இந்தப்   பல்லாங்குழியார்   அமர்ந்திருப்பார்.  

பதினான்கு   குழிகள்.  இந்தக்   குழிகளில்  12  சோழி  அல்லது  புளியங்கொட்டையோ     போட்டு    விளையாடுவது  வழக்கம்.   ஆனால்  ஒவ்வொரு  ஊரிலும்   ஒவ்வொரு  மாதிரி  விளையாடுவார்கள் .

இரண்டு  பேர்   எதிரெதிர்    அமர்ந்து கொண்டு   விளையாட  ஆரம்பிப்பார்கள் .ஒரு குழியில்   இருந்து    சோழிகளை    எடுத்து  
 " clockwise "  ஆகப்   போட்டுக்கொண்டே   வரவேண்டும் . முடிந்த  இடத்திலிருந்து  திரும்பவும்  சோழிகளை  எடுத்து  சுற்றி வர ஒரு  நேரத்தில் கையில்    இருக்கும் சோழியும்  தீர,  நம்  எதிரே   காலி  குழி இருக்கும்.  அதற்கு   அடுத்த குழியில்  இருக்கும்  சோழிகள்   எல்லாம்  நமதே.

இதுபோல்     இருவரும் விளையாடிக்  கொண்டே  பல  ரவுண்டுகள் 
வரை   போகும்.  ஒருவர்    " போண்டி"யாகும் வரை  ஆடிக் கொண்டேயிருக்கலாம்.நேரம்    போவதும் தெரியாது. 

வாழ்க்கையின்  பல   அற்புதமான  பாடங்களை  இந்த  விளையாட்டு   சொல்லித் தருவதாக   எனக்குத்  தோன்றும்.

நாம்   எத்தனை ஜாக்கிரதையாகக்   கையாண்டாலும்   , எவ்வளவு    அழகாக    எதிரில்   விளையாடுபவரின்  மன  ஓட்டத்தை  படித்தாலும்   நாம்  ஒரு  சமயத்தில்    தோற்றுத் தான்  போகிறோம்.

 எத்தனை சொல்லித்  தருகிறது  பாருங்கள்.

1.  ஒரு  உளவியல்  மருத்துவரைப்  போல்   எதிரில்  இருப்பவரின்   மன ஓட்டத்தை  படிக்க  கற்கிறோம் 

2. "calculated  risk " என்று    சொல்கிறார்களே அதைப்  புரிந்து    கொள்கிறார்கள் .தோல்வியை   ஏற்றுக்   கொள்ளும் மனப்பக்குவமும்  வந்துவிடும் .

3. மனக்   கணக்கு   மிக  மிக  எளிதாக  எந்த   முயற்சியுமின்றி   வந்துவிடுகிறது. 

4.  மிகச்  சிறிய  வயதில் ,  அதுவும்  5,  6,  வயதுப்   பெண்கள்  விளையாடும்  போது,  அவர்களுடைய   கண்ணும் கையும்   ஒருங்கிணைந்து   செயல் பட உதவுகிறதாம் .  (hand , eye  co.ordination).  

5. படிக்கும் வயதில்  பல்லாங்குழி  விளையாடும்  போது     கணிதமும் எளிதாக  வசமாகும்   என்று  படித்திருக்கிறேன்.

6. மன  அழுத்தம்   நீங்குவதற்கும்   இதை விளையாடுவது   ஒரு  உபாயம்.

  சிறுமிகளுக்கும்  ,  இளம்,  மற்றும்   நடுத்தர  வயதுப்   பெண்களுக்கும்   மட்டுமல்ல    மூட்டு வலிக்கும்   விளையாடுவது  நல்லது   என்கிறார்  மருத்துவர்.

அன்று  எனக்கு    கை கட்டை  விரலும்   ஆட்காட்டி  விரலும்   நல்ல  வலி.
எப்போழுதும்  , லேப்டாப்பே  கதியென்று  ,இருந்தால்  இப்படித்   தான்  வலிக்கும்   என்று  எல்லோரிடமும்   திட்டு  வாங்கிக்  கொண்டு,   குடும்ப  மருத்துவரை    அணுகினேன். 

அவர்    கால்சியம்    மாத்திரை    எழுதிக்  கொடுத்துவிட்டு   கைக்கு         
பயிற்சி  செய்யேன்   என்றார்.  என்ன  பயிற்சி  ?  என்று  யோசித்தேன். 

 பல்லாங்குழி விளையாடினால் என்ன   என்று  தோன்றியது.
விரல்  கை  மூட்டு  எல்லாவற்றிற்கும்   நல்ல  பயிற்சி. என்   மூளையும்(அப்படி ஒன்று இருந்தால்)   நல்ல   சுறுசுறுப்பாகும்.

சாதாரண   பல்லாங்குழியில்     இத்தனை  மருத்துவ குணமா !
நம்   முன்னோர்கள்   யாரும்   மூடர்   இல்லை .

இது  எதோ நம்மூர்   கிராமங்களில்   மட்டும்  தான்,  அதுவும்  பெண்கள்   தான்    விளையாடுகிறார்கள்    என்று  குறைத்து  மதிப்பிட  வேண்டாம். ஆண்களும்  விளையாடுவதுண்டு.  

நம்மூர்  திருமணங்களில்   கூட   நலங்கு  விளையாட்டின் போது  பல்லாங்குழி  இடம்  பெறும்.

உலகம்   பூராவும்  பல்வேறு   பெயர்களில்  "Manacala,  Warri,  Oware"  என்று
பல்லாங்குழி   விளையாடப் படுகிறது.

அமெரிக்கா ,ஐரோப்பா, ஆப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ்  என்று  அடுக்கிக்   கொண்டே போகலாம்   பல்லாங்குழியின்     ஆதிக்கத்தை.

நம்  சதுரங்க    வீரர்  திரு . விஸ்வநாத்  ஆனந்த்  தன்னை  இலகுவாக்கிக்   கொள்ள   கால் பந்து  விளையாடுவாராம்   . கேள்விப்  பட்டிருக்கிறேன்.

நம்   கிரிக்கெட்  வீரர்  திரு .  ஹர்பஜன்   சிங்   என்ன   விளையாடுகிறார் ?  பாருங்கள்.....

வீட்டில்    இருந்த   பல்லாங்குழியைத்   தேடிப்   பார்த்தேன்  .  கிடைக்கவில்லை. 

மைலாப்பூர்     சென்று ஒன்று  வாங்கி   வந்து விட்டேன். விளையாட  யாருமில்லைஎன்றால்     சீதாப்   பாண்டி (பல்லாஙகுழியில் தனி ஒருவராக அடுவது)!     விளையாட  வேண்டியது   தான்.

image courtesy--www.indianetzone.com
                          google.
 

         

Thursday 7 March 2013

" அக்னி புத்ரி "


19th  April  2012  Agni -V  Launched  successfully- இது  செய்தி.


"  ஒவ்வொரு    ஆணின்  பின்பும்    ஒரு   பெண்     இருக்கிறாள் . "    என்பது   ஆங்கிலப்     பழமொழி  .  நம்  நாட்டில்     ஒரு    ஏவுகணையின்  பின்பும்   ஒரு  பெண்   இருக்கிறார்.

" அக்னி புத்ரி  "    என்றும்   " Missile  Woman "   என்றும்    அன்புடன்  அழைக்கப்படும்
திருமதி.  Tessy Thomas    என்ற     பெண்மணி     தான்  ,    Agni V  ஏவுகணையின்    Project  Director .

நம்முடைய   ராணுவத்திற்கு   அது   ஒரு  மிகப்பெரிய   அணிகலனாக   அமையும்   என்பதில்    அணுவளவும்   சந்தேகமில்லை.  தேசத்தின்  பாதுகாப்புக்கு   இன்னுமோர்    அரணாக     இந்த    ஏவுகணை   இருக்கப்  போகிறது  என்பது  மகிழ்ச்சியான   செய்தி.


  Big 5  நாடுகள்  மட்டுமே  வைத்திருந்த    இந்த  ஏவுகணை   நம்   நாட்டிற்கும்    சாத்தியமானது        இந்தப்   பெண்மணியால்  தான்.
உலக  அரங்கில்   இந்தியா  Big 5  நாடுகளுக்கு  இணையாக   உள்ளது   பெருமைக்குரிய  விஷயம்  தானே !  

திருமதி  Tessy Thomas  கேரளாவில்  ஆலப்புழாவில்,   ஒரு  சாதாரண  குடும்பத்தில்   பிறந்து  வளர்ந்தவர். இன்ஜினியரிங்கில்  M.Tech   முடித்த கையோடு   DRDO வில்   பணியில்  அமர்ந்தார்.
இவர்   வளர்ந்தது  ஒரு  ராக்கெட்  ஏவும்  தளம்  அருகில்   தான் . அதனால் தான் இவருக்கு  ஏவுகணை  மீது   காதல்  இருந்திருக்கிறது.  

இவருடைய    கணவர்  சரோஜ் குமார்.  இந்திய   கடற்படை  அதிகாரி.  ஒரே  மகன்   பெயர்  Tejas  .  மகன்  பெயரும்  ஏவுகணையின்   பெயரைத்  தான்    நமக்கு  நினவு  படுத்துகிறது.
ஆனால்   அப்படிஎல்லாம்   இல்லை   என்கிறார்  நம்  அக்னி புத்ரி

 கணவரோ  காடாறு  மாதம்   , நாடாறு  மாதம்  என்கிற  ரீதியில்    தான்  இருப்பார்  என்று  புரிகிறது.   தனியொரு    மனுஷியாய் 
" இரண்டு  குதிரை  மேல்   ஒரே சமயத்தில்  சவாரி  செய்திருக்கிறார். "  அது  அப்படி    ஒன்றும்   ' கேக்  வாக் '  இல்லை  என்பது   நம்  எல்லோருக்கும்  தெரியும்.

இதை  எல்லாம்  ஒரு  சவாலாக ஏற்றுக்  கொண்டு     வந்திருக்கிறார்.
மகனும்   இன்ஜினியரிங்   படிக்கிறார்.

இவரை    இவருடைய    வீட்டில்   சந்தித்த   போது    ஒரு  சாதாரண   குடும்பப்
பெண்ணாகத்    தான்   இருக்கிறார் . Agni project Director   என்கிற  பந்தா   எதுவும்
 இல்லாமல்.  என்கிறார்  India  Today  நிருபர்.

இவ ருடைய  வீட்டு   ஷோ கேசில்   இவர்  படித்த  காலத்தில்    வாங்கிய    Badminton    மெடல்கள்   அலங்கரிக்கின்றவாம்.
எந்தத்   துறையும்    விட்டு   வைக்கவில்லை  போலிருக்கிறது  நம்  சகோதரி.

" எடுத்த  காரியம்  யாவினும்   வெற்றி  "  என்று  தான்  இருந்திருக்கிறார் .

  இவருடன் பணிபுரியும்   விஞ்ஞானிகளும்   , ஒரு  பெண் மணியாக    வீட்டையும் ,    ஏவுகணையும்   நிர்வகிக்கும்  திறன்  கண்டு   அதிசயக்கிறார்கள்  .

இவரை   இந்த  Agni project  இல்   அமர்த்தியது   நம்மால்     பெரிதும்   மதிக்கப்படும்   திரு.  அப்துல்  கலாம்.
தன்னை    Agni Putri  , missile  woman   என்றும்   அழைப்பது   என்னை  பெருமை  கொள்ள ச்  செய்கிறது   என்கிறார்.

இத்தனைப்   பெரிய  பொறுப்பில்  இருப்பவர்    தன்னை   இலகுவாக்கிக்     கொள்ள   என்ன  செய்கிறாராம்   தெரியுமா?

மெகா  சீரியல்களின்    ரசிகையாம் இவர். இவரை  இந்தியாவே    மூக்கின்  மேல்  விரல்  வைத்து பார்க்கிறது .ஆனால் இவரோ  சீரியல் நடிக நடிகைகளைப் பார்த்து  அவர்கள்  நடை, உடை, எல்லாம்   பார்த்து  அதிசயக்கிராராம்.


நம்   பிரதமர்  மன்மோகன் சிங்க்   இவரைப் பற்றிப்   பெருமையாக"  ஒரு   ஆணாதிக்கத்     துறையில்   ஒரு  பெண்மணியாக
பணியாற்றி  தனக்கும்,  நாட்டிற்கும்   பெருமை  சேர்த்திருக்கிறார்.  "
என்று   கூறுகிறார் .

பாரதியார்  படைத்த  புதுமைப்  பெண்ணாகத்  தான்  திகழ்கிறார்.
இன்னும்  இது   போல்   எத்தனைப்  பெண்கள்  இருக்கிறார்களோ?
இன்னும்    எத்தனை  பேர்    வர   இருக்கிறார்களோ?
அவ்வளவு   பெண்களுக்கும்  என்  வணக்கங்கள்  . 

அனைவருக்கும்    மகளிர் தின   வாழ்த்துக்கள் .


image courtesy----google.


Tuesday 5 March 2013

ஜானகியின் கனவு


 அன்று   அதிகாலை   எழுந்திருக்கும் போதே   உடம்பு  மிகவும்     அசதியாக  இருந்தது    ஜானகிக்கு.    காலை    எழுந்தவுடன்      டிபனை  மட்டும்  செய்துவிட்டு    மீண்டும்   சுருண்டு    படுத்துக்   கொண்டாள்.

முதுகை  யாரோ   அமுக்குவது  போன்ற வலி . கொஞ்ச  நேரம்   தூங்கி  எழுந்தால்  சரியாகிவிடும்  என்று  நினைத்துக்  கொண்டு  படுத்தாள் ...........

ஜானகி   மெல்ல  யோசித்துப்   பார்த்தாள் .  தன  மகள்   கவிதாவை    நினைக்க நினைக்க  பெருமையாக  இருந்தது.  

  அன்று   காலை  எழுந்து   வாசல்  தெளித்து   ,  வாசலை  அடைத்துக்   கோலம்  போட்டு,    செம்மண்  இட்டு...........

காபி   போட்டு  தானும் குடித்து,  வீட்டில்  மாமனார்,  மாமியார், எல்லோருக்கும்  போட்டு   கொடுத்து விட்டு,  குளித்து   ,  பரபரவென்று   சமையலை   முடித்து   தனக்கும், கணவனுக்கும்,   டிபன் பாக்ஸ்  ரெடி செய்து ,  எல்லோருக்கும்  சுட சுட   டிபன்    ரெடி  பண்ணி  ,  மாமியாரிடம்   
இன்று  மாலை  வாங்கி  வர வேண்டிய  மருந்து  பிரிஸ்க்ரிபஷன்     வாங்கிக்    கொண்டு,  மொட மொடப்பான  காட்டன்   புடவை   மடிப்பை  சரி பார்த்தாள் .

பின்   மொபெட்   சாவியை   விரலில்    சுற்றிய படியே   வண்டி   நிறுத்தியிருக்கும்   இடத்தை  நோக்கி  நடந்தாள் .

கருநாகமாய்   நீண்டு  இங்குமங்கும் ஊஞ்சலாடிக்    கொண்டிருக்கும்  நீள ஜடை ,   தாழம்பு நிறம்,  உயரம், உயரத்திற்கேற்ற  பருமன், வாழைத்தண்டாய்  கைகள்,  என்று  எவ்வளவு  அழகு  என் மனைவி  என்று  பெருமையுடன்  பார்த்தான்   அர்ஜுன் .

அழகுக்கு  போட்டிப்  போட்டுக்  கொண்டல்லவா இருக்கிறது,  இவள்   அறிவும்   சாமர்த்தியமும்.  

டிகிரி   முடித்த  கையோடு   பேங்க்   வேலையில்   அமர்ந்து கொண்டு   
முதுநிலை   பட்டப்  படிப்பு  முடித்ததோடு.....C A I I B  எல்லாம்   பாஸ் செய்து   கட கடவென்று   பிரமோஷனில்   இன்று   வங்கி  மேலாளராகி    இருக்கிறாள்.

ஆனால்   அந்தப்   பதவியின்   கர்வம்  எதுவும்  இல்லாமல்,  வீட்டில்  இவளால்   எப்படி   வளைய  வர  முடிகிறது  என்று   ஆச்சர்யமாக  இருக்கும்  அர்ஜுணிற்கு,.

அவனும்   ' பச்சை  இங்'கில்   கையொப்பமிடும்   ஒரு  அரசு  அதிகாரி. 
இருவருக்கும்   கை நிறைய  சம்பளம்.   

கணவன்  அர்ஜுன்   வைத்த  கண்  வாங்காமல்   தன்   மனைவி  கவிதாவை  பெருமையோடு    பார்த்தான்.

கவிதாவோ, " என்ன  அப்படி   பாக்கிறீங்க?  எனக்கு  பேங்க் கிற்கு லேட்டாகுது.  கொஞ்சம் வழி விடுங்கள் . நீங்கள்  என்ன  ஆபிசிற்கு 
கிளம்பு வில்லையா?  "  என்று  கேட்டுக்  கொண்டே  ஒரு  சின்ன துள்ளலுடன்   படிகளில்  இறங்கி  மொபெட்டை   ஸ்டார்ட்    செய்து கேட்டை   மூடி விட்டுப்  போனாள் .  


மாலை    6, 6.30   மணியளவில்   கவிதா   வீடு  திரும்புவாள்.
வீடு   திரும்பியவுடன்  இரவு  உணவை  தயார்  செய்து  விட்டு   தன  மாமனார்  மாமியாரிடம்    சிறிது  நேரம்  அளவளாவிவிட்டு   அர்ஜுன்  வந்தவுடன்   உணவருந்திவிட்டு    படுப்பது  வழக்கம்.

 திருமணமான   இந்த  ஒரு  வருடத்தில்  
மாதத்தில்  ஒரு முறை   தன  பெற்றோரையும்   வந்து  பார்க்கத்  தவறியதில்லை.


திடீரென்று   ஒரு  குரல் ,"  ஜானகி  ,ஜானகி,   இங்கே  பார்   உன்  குழந்தையை. சுவர்ண  விக்ரகமாய்   இருக்கிறாள்  பார் உன்  பெண்  "  என்று  யாரோ    சொல்வது  கேட்டு  ஜானகி  கண்  விழித்துத்  தன்  குழந்தையை  ஆவலோடு   வாங்கிக்  கொண்டாள்.

நமக்கு   குழந்தை   பிறந்து  விட்டதா  என்ன ? என்று  நினைக்கும்  போதே
லேடி  டாக்டர்  அங்கு  வந்தார்.

டாக்டர்   "ஜானகி    முதல் பிரசவமாயிருந்தும்     கூட   நல்ல  ஒத்துழைப்பு  தந்தாய்  . அதனால்  தான்  சிக்கலில்லாமல்  முடிந்தது   உன் பிரசவம் "
 என்றுக்  கூறி  விட்டுச்   சென்றார்.  

ஜானகி   நன்றியுடன்  தன  தாயைப்  பார்த்தால்  .  அவள்  அம்மா  டெலிவரி   நாள்  கிட்ட   நெருங்க நெருங்க  ," வலி   எடுக்கும் போது  அதையே  நினைத்துக்   கொண்டிராமல்   உனக்குப்  பிடித்த  எதையாவது  நினைத்துக்   கொள் "  என்று  கூறியிருந்தார் .

அந்த  உபாயத்தை  தான்   கடைபிடித்தாள் .  நல்ல  வலி  எடுக்கும்  வரை  தனக்குப்  பெண்  பிறந்தால்  எப்படியெல்லாம்   இருக்க வேண்டும்  என்று நினைத்துக்  கொண்டு   கவிதா என்று  பெயர்  கூட  சூட்டியிருந்தாள் .

தன்னால் படிக்க    முடியாத  படிப்பு,  போக முடியாத  அலுவலகம்  ,
தான்   ஓட்டாத  மொபெட்  எல்லாவற்றையும்   தன்   பெண்ணிற்கு     கொடுத்து   அழகு   பார்த்துக்  கொண்டிருந்தது  நினைவு  இருக்கிறது.
அதற்குப்  பிறகு  நினைவில்லை......

ஜானகியின்     கணவனும்    மாமியாரும்   உள்ளே   நுழைந்துக்   கொண்டிருந்தார்கள்.  ஜானகியின்  கணவனி ற்கும் ,  மாமியாருக்கும்   பெண்ணைப்   பெற்று விட்டாளே  என்ற   வருத்தம்.  

"ம்க்கும் "  என்று   முகத்தை    தோளில்   இடித்துக்  கொண்ட   மாமியாரையும்  ,  தன்  அம்மாவிற்கு   ஆமாம்  சாமி போடும்  கணவனையும்   சமாளித்து   தன  பெண்ணைப்  படிக்க வைத்து  ஆளாக்கி....................

அதற்கு  தன்னைத்   தயார்  செய்துக்   கொண்டாள்   ஜானகி.ஆனால்  கண்டிப்பாக செய்து  முடிப்பாள்.

இது  போல்   நிறைய   ஜானகிக்கள்    இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்   என்பதற்கு   இப்பொழுது   ஸ்கூட்டி யில்,  காரில்,  அலுவலகம்  பறக்கும்  பெண்கள் ,
வெளிநாட்டு  விமான  நிலையங்களில்   கேட்கும்   கொலுசு சத்தம்  எல்லாமே   சாட்சி . 

 image courtesy--- google

Saturday 2 March 2013

சிக்கிக் கொண்டேன்

தினம்      இட்லி , தோசை ,உப்புமா   என்றே  செய்கிறாயே  ? வேறு  எதாவது செய்யேன்   என்று  என்  வாழ்க்கைத்  துணைவர்  கேட்க  நானும்  அவரைப்  பார்த்து  வேறென்ன  செய்ய ?  என்று  திருப்பிக் கேட்டேன்.

"ஏன்  இடியாப்பம்  செய்யேன்  நாளைக்  காலை  டிபனிற்கு"   என்று  கூறினார்.

" ஒ.கே ."    சொன்னேன்.


இப்பொழுது   தான் ,  போன  வாரம்    இடியாப்ப  மாவு   தயார் செய்து  சேர்த்து  வைத்திருந்தேன்.
இடியாப்ப  மாவு  செய்வது  கொஞ்சம்  சிக்கலான வேலை. (ஒரு  நாள்  வேலை  இழுத்து  விடும்.)அரிசியை  ஊற  வைத்து  , அரை  ஈரமாக  இருக்கும்போதே அரிசியை  மெஷினில்  அரைத்து  பின்  வேக வைத்து, காய வைத்து   என்று   முதுகை  பெண்டு  கழட்டும்  வேலை.

அதற்குப்   பிறகு  இடியாப்பம்  செய்வது   மிகவும்    சுலபம்.

இதான்........ இதான்..........(செய்வது  சுலபம்  என்பது  நினைப்பு)
" நினைப்பு  தான்  பிழைப்பை  கெடுக்கும் " என்று    சும்மாவா   சொன்னார்கள்.

மறு  நாள்  காலை  எழுந்து   காபி  சாப்பிட்ட  பிறகு  ,காலை  நியுஸ்  பேப்பரை  ஒரு  ரஷ்  முடித்து ,   நேராக  லேப்டாப்  பக்கம்  வந்தேன்.
அப்பவே  என்  அம்மா, " இது  என்ன ?  இன்றைக்கு  காலையிலேயே   லேப்டாப்பை  திறக்கிறாய்?  டிபன்  எல்லாம்  உண்டா இல்லையா?  என்று கேட்க  ,

அதற்கு   நான், " இடியாப்பம்  தானே !  இதோ  ஒரு  அரை  மணியில்   செய்கிறேன்  ."  (இடியாப்ப சிக்கலில்  நான்  மாட்டிக்  கொள்ளப்   போவதை   அறியாமல் )  என்றேன்.

பிறகு   மெயில்  செக்  செய்தேன்  . பின்  என்    டேஷ்போர்டிற்கு   வந்து   பின்னூட்டங்கள்   எதுவும்   வந்திருக்கிறதா என்று   பார்த்தேன்.பிறகு   சில  சமையல்   குறிப்பு   பதிவுகளைப்  படித்து  விட்டு   டிபன்   செய்யக்  கிளம்பினேன்.

இண்டக்ஷன்   ஸ்டவில்    தண்ணீர்  வைத்து  விட்டு   ஒன்றரை  டம்ளர்   மாவை   அளந்து   போட்டு  விட்டு    நன்கு  கொதித்த   தண்ணீரை    மாவின்   தலையில்  கொட்டி    கலந்தேன்.  

காலை  fm  இல்  "அன்பே ......... சுகமா.......'  என்று  பாடகி திருமதி . சாதனா  சர்கம்  உருகி  உருகி   பாட   ,அதைக்   கேட்டுக் கொண்டே.............. 

முறுக்கு    பிழியும்  நாழியில்   ஓமப்பொடி    அச்சைப்   போட்டு  , நன்கு  திருகி  மூடி  விட்டு,   மாவை  நாழியின்     வாயில்  போட்டு  அடைத்தேன்.

பிறகு  இட்லித்  தட்டில்  எண்ணெய்  தடவி    பிழிய   ஆரம்பித்தேன்..  எப்பொழுதும்,    சரம் ,சரமாய்  ,    ஓமப்பொடியாய்     இறங்கும்   இடியாப்பம்    இன்று    "  இர(ற)ங்கி  வர  மாட்டேன்  " என்று   அடம்  பிடிக்க  ஆரம்பித்தது.


நாழியில்   இருக்கும்  அச்சு  சரியாக   இருக்கிறதா   என்று  திருப்பிப்  பார்த்தால்  அது  சமர்த்தாகத்  தான்  உட்கார்ந்திருந்தது.

நேற்று  கொஞ்சம் கைவலி இருந்தது. அது தான் பிழிய முடியவில்லையோ ?   என்று  நினைத்துக்  கொண்டிருக்கும்போதே    என்  அம்மா   அங்கு   ஆஜரானார்.

" பிழிய     கஷ்டமாக     இருக்கிறதா? .  இங்கே கொடு,  நான் பிழிகிறேன் " என்று   நாழியை   வாங்கி   பிழிய  முயற்சி  செய்தார்.

அது  அசைந்து  கொடுத்தால்  தானே. !

உடனே    என்  அம்மா   மப்டியில்    இருக்கும்  போலீஸ்   மாதிரி  விசாரிக்க  ஆரம்பித்தார்.

"தண்ணீரை  கொதிக்க  வைத்தாயா?  எந்த  டப்பா  மாவை  எடுத்தாய்  ?.........."
இப்படி  சரமாறியாய்   கேள்விகள்  . நானும்  விசாரணை  கைதி  மாதிரி , பதிலளித்து  வந்தேன்.

பிறகு , இருவரும்  ஆளுக்கு  ஒரு  பக்கம்   பிடித்துக்   கொண்டு,   அமுக்கப்  பார்த்தோம்.  ஊஹூம்................    நீயெல்லாம்  எனக்கு  ஜுஜுபி   மாதிரி என்பதைப் போல்  அழுத்தமாக   அசையாமல்  இருந்தது.
   

இந்த  சந்தடிகளைக்  கேட்டுவிட்டு  என்னவரும்    சம்மன்  இல்லாமலே  சமயலறையில்    ஆஜர்.

சரி  அவரிடம்  உதவி  கேட்போம்  என்று  கேட்டு வைத்தேன்.  "சரி  கொடு " என்று  நாழியை   வாங்கிக்  கொண்டார். 


அவரும் முயற்சி  செய்தாயிற்று.  பலன்  பூஜ்யம்  தான்   .

உடனே    நாழியைத்   தூக்கி   bofors   பீரங்கி  மாதிரி  பிடித்துக்   கொண்டு
என்னைப்  பார்த்து,"ராஜி,  உண்மையைச்  சொல்.  உள்ளே    மாவு  வைத்திருக்கிறாயா,  இல்லை  "குண்டு "  வைத்திருக்கிறாயா?"என்று  சீரியசாக    ஜோக்  அடித்து  என்  எரிச்சலை  அதிகமாக்கினார்.

இந்த  மாவில்............  இடியாப்பம்  இல்லை ....... என்றாயிற்று.

சரி,    இத்தனை  மாவையும்    என்ன  செய்வது.  உடனே   பிடி கொழுக்
கட்டைகளாக்கி    வேக வைத்தேன்.  மாலை  ஸ்நாக்ஸ்   
வேலை  ஆச்சு   என்று திருப்தியானேன்.

அது  சரி.  இப்ப  டிபனுக்கு  என்ன?  மில்லியன்  டாலர்  கேள்வி  என்  முன்னே?

பிரிட்ஜைத்   திறந்தேன்.  ஆபத்பாந்தவனாய்   கைகொடுக்கும்   தோசைமாவிற்காகத்தான்.  தோசை  மாவு  அடுக்கை  காணோமே.
அழகாய்    அமரிக்கையாய்   அலமாரியில்  உட்கார்ந்திருந்தது.
தோசை  மாவு    காலி  !  உரைத்தது  எனக்கு.

சரி   என்ன  செய்வது? ஒழுங்காக    உப்புமாவைக்   கிண்டியிருக்கலாம்.
விதி  யாரை  விட்டது.?

அன்று  காலை  பதிவில்  படித்த  ஓட்ஸ்  கிச்சடி  செய்ய  உட்கார்ந்தேன்.
செய்து  முடிததாயிற்று. தட்டில்  எடுத்துப்  போடும்  போது  தான்  உரைத்தது.
ஓட்சை  வறுத்திருக்க வேண்டும்.  விட்டு  விட்டேனே!
ஒரே  கொழ  கொழ   கிச்சடி.  ஆனாலும்  சுமாராக இருந்தது.
'இதயத்திற்கு   இதமானது'   என்று  சாப்பிட்டு  முடித்தோம்.

உஸ்.......அப்பாடி.............டிபன்   கடை   ஒரு  வழியாய்  முடித்தாயிற்று.
இடியாப்ப   சிக்கலலிருந்து     மீண்டோம்   என்று  பெருமூச்செறிந்தேன்

இல்லை.இன்னும்  இந்த  இடியாப்ப  சிக்கலிலிருந்து   மீள வில்லை, என்பது    எனக்கு   வீட்டு  வேலையில்   உதவி   செய்யும்     " கல்பு "(  கல்பனாவின்  சுருக்கம்)  வந்த  பிறகு   நடந்தது , உணர்த்தியது.

கல்பு  வரும்  போதே  யாரையோ  வசை  பாடிக்  கொண்டே  வந்தார். அதைக்   காதில்   வாங்காமல்   எப்பவும்  போல்   " கல்பு   ,  இந்த  கிச்சடியை   சாப்பிட்டு  விட்டு   வேலையை  ஆரம்பி  'என்று     கிச்சடியைக்   கொடுத்தேன்.

ஏதோ   விசித்திர  ஜந்துவைப்    பார்ப்பது   போல்   அதை  பார்த்துக்  கொண்டே   ஒரு    வாய்   எடுத்துப்    போட்டு விட்டு,  "ஐயே   !   இன்னா இது?  கிச்சடியா?
எனக்கு   இன்னைக்கு   காபி   போதும்   "என்று வேலை     செய்ய  ஆரம்பித்து விட்டார்.

"குபீர்"  சிரிப்பலை  கிளம்பி வந்தது   ஹாலிலிருந்து.     என் கணவர்   தான் .
எல்லாம்  என்  நிலையை  பார்த்து    தான்!  வேறென்ன.......

ஹால் பக்கம்   நான்  ஏன்  போகிறேன்?

மத்தியான  சமையலை  வில்லங்கம்     இல்லாமல்   செய்து   முடித்து  விட்டுத்  தான்  ஹால்  பக்கம்   தலை  காட்டினேன். 


பி.கு :  பதிவைப்  படித்து விட்டு  நான்  சமையலில்  கத்துக்  குட்டி  என்றோ,  இடியாப்பமே  செய்ய வராதோ    என்று   குறைத்து   மதிப்பிட்டு  விடாதீர்கள்.

' ஆனைக்கும்   அடி  சறுக்குமாமே  "  அது  மாதிரி  தான்  இந்த   சம்பவமும்.

ஓஹோ..........அப்படியா...........என்று  நீங்கள்  சொல்வது  கேட்கிறது.image  courtesy  ---  google

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்