![]() | |
google image |
தாத்தா ஊர் எங்கே என்று சொல்லவில்லையே! அழகிய சிறு கிராமம். மாயவரம் வரை ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து கோமல் வரை பஸ் பயணம். பிறகு அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணித்தால் அரை மணிநேரத்தில் கொத்தங்குடி என்கிற மிக சிறிய கிராமத்தை அடையலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரழந்தூரிலிருந்து பதினைந்து நிமிட பயணத்தில் கொத்தங்குடி சென்றடையலாம்.
ரயில் பயணம் என்று நினைத்தால் இப்பொழுதும், இந்த வயதிலும் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சிறு வயதில் சொல்லவா வேண்டும். அந்தக் கால ரயில் பயணம் சில சங்கடங்கள் இருந்தாலும், மிகவும் ரசிக்கத்தக்கதாய் இருக்கும்.
இரவு கிளம்பினால் மறு நாள் காலை மாயவரம் போய் சேரும் ரயில் வண்டி. .
அப்பொழுதெல்லாம் டீசல் வண்டி தான். அது போல் ஏசி பெட்டி எல்லாம் கிடையாது. அதனால் தனித்தனி தீவுகளாய் திரை சீலைக்குள் பயணிக்கும் பரிதாபம் கிடையாது.
ரயில் பயணம் என்றாலே எல்லோர் கையிலும், ஒரு தோல் பெட்டி, ஒரு டிரங்க் பெட்டி, ஹோல்டால், எல்லாம் உண்டு. கையில் கூஜா மிக மிக அவசியம். ரயிலில் குடி தண்ணீர் கிடைக்காது. ஸ்டேஷனில் இறங்கி இறங்கி கூஜாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
ரயிலில் கேட்டரிங் வேன் எதுவும் இருக்காது.அதனால் கையில் எல்லோருமே சாப்பாடு கொண்டு வந்து விடுவார்கள். எதிர் சீட்டில் சாப்பிடும் புளியோதரை நம் நாவில் நீர் வரவழைக்கும். நமக்கும் தாராளமாகக் கிடைக்கும் .நாமும் அச்சமின்றி சாப்பிடலாம். அந்த நாளில் பிஸ்கட் திருடர்கள் கிடையாதே!
சக பயணிகள் எல்லோருமே வாயாரப் பேசிக் கொண்டு , உறவினர் போல் ஒருவர் மேல் ஒருவர் அன்போடும், அக்கறையோடும் பயணிப்பார்கள். இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை இது போல் இனிமையான சம்பவங்களினால் தான் ரயில் பயணம் என்றதும் மனம் துள்ளலாட்டம் போடுகிறதோ !
ஆமாம் ! அந்த அன்பைக் கலந்து செய்த ரயில் பெட்டிகள் எல்லாம் எங்கே போச்சு ! காணாமல் போய் விட்டதோ!
கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப் படும்.
சரி, விஷயத்திற்கு வருகிறேன். இந்த இனிமையான ரயில் பயணத்தில், எனக்கும் என் தம்பிக்கும் அந்த ஜன்னலோர சீட்டிற்கு அடிதடியே நடக்கும்.
எதிர் சீட்டுப் பயணி," ஏம்மா இப்படி ரெண்டு பெரும் சண்டை போடுகிறீர்கள். இந்த இருட்டில் என்ன தெரியப் போகிறது. கண்ணில் கரி விழும். அது தான் நடக்கும்.' என்று சொன்னாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை.
வரும் ஸ்டேஷனில் எல்லாம் கண் கொட்ட கொட்டப் பார்த்துக் கொண்டு நீராவி எஞ்சின் புகையில் கலந்து வந்து , கண்ணில் விழும் கரித் துகளை தேய்த்து விட்டுக் கொண்டே பயணிப்போம்., அதிகாலையில் மாயவரத்தில் எங்களை இறக்கி விடும் ரயிலுக்கு பிரியாவிடை கொடுக்கத் தவற மாட்டோம்..
அதற்குப் பிறகு பஸ் பயணம் அத்தனை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது . குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டில் போகும் பஸ் போகும் போது , நம் இதயம் குதித்து , குதித்து வாய்க்குள் வந்து விடும் அபாயம் உண்டு.
கோமலில் பஸ் எங்களை இறக்கி விட்டவுடன், அடுத்து நாங்கள் மிகவும் ஆவலாய் எதிர் பார்த்திருந்த போக்குவரத்து மாட்டு வண்டி.
அதை வில்வண்டி என்று கிராமத்தில் சொல்லும் வழக்கம் உண்டு. வில்லைப் போன்று வளைந்து மூடியிருப்பதால் இந்தப் பெயரா தெரியவில்லை. கிராமத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பயணிப்பதற்கு ஒரு வண்டியும், மற்ற விவசாய பணிகளுக்கு வேறு வண்டியும் இருக்கும். சட்டென்று அடையாளமாக சொல்வதற்கு இந்தப் பெயரை உபயோகித்தார்களா தெரியவில்லை.
இந்த வில் வண்டி பயணம் முடியம் போது , அங்கு எங்களுக்கு முன்பாக எங்கள் சித்தியின் பெண், பிள்ளை, மாமா வீட்டுப் பெண் பிள்ளை என்று பலரக வயதில் காத்திருக்கப் போகிறார்கள்.
ஆகா ஒரு பெரிய கூட்டம் கொட்டமடிக்கக் காத்திருக்கிறது.
இதோ அந்த வண்டி ஓட்டுபவர் எங்கள் பெட்டி, பைகள் எல்லாம் உள்ளே அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். வில் வண்டியில் நாங்கள் ஏறி உட்கார்ந்தால் அந்த இரட்டை மாட்டு வண்டி "ஜல் ஜல்" என்று கிளம்பப் போகிறது ....
வண்டி ஓட்டுபவர் மாடுகளை அவிழ்க்கப் போயிருக்கிறார்.
அந்த "ஜல், ஜல்" மாட்டு வண்டிப் பயணத்திற்கு சற்றே காத்திருப்போம்........