ஹூ ஆர் யு?
courtesy--google images |
ராசி அடிக்கும் லூட்டிகளும் ,, அதில் மாட்டிக் கொண்டு முழிக்கும் விஷ்ணுவைப் பற்றியும் " அப்பாவி விஷ்ணு " மின்னூலில் படித்திருப்பீர்கள்.
இங்கு மட்டுமல்ல அமெரிக்காவிலும் ராசியிடம் விஷ்ணு மாட்டிக் கொண்டு முழிப் பிதுங்கிப் போனார். அதைப்பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டாமா நீங்கள்?
விசா வாங்கப் போனதிலிருந்து ஆரம்பிக்கிறது ராசியின் லூட்டி. அங்கிருந்து ஆரம்பிக்கிறேன்.
ராசி அமெரிக்காவில் , அவள் மகன் வீட்டிற்குத் போகப் போகிறாள். விசாவிற்கு வேண்டிய எல்லா ஆவணங்களையும் அவன் அனுப்பி விட்டான். மேலே நடக்க வேண்டியவைகளைப் பற்றி ராசி ஆலோசிக்க ஆரம்பித்தாள். யாரிடம் தெரியுமா? விஷ்ணுவிடம்...என்று நினைத்தால் அது உங்கள் தவறு. அவருக்கு என்ன தெரியும் ? அங்குப் பேசும் ஆங்கிலம் இவருக்கும் தெரியும். அதைத் தவிர வேறென்னத் தெரியும் என்பது போல் விஷ்ணுவை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, ஹால் மூலையில் சாதுவாய் சுருண்டிருந்த போனை நோக்கிப் போனாள். இதற்கு முன்பாக அமெரிக்கா சென்று வந்திருந்தத் தன் தோழிகளுக்குப் போன் செய்து, விசாரிக்கத் தான். .
ஒவ்வொருத்தியும் முதலில் ராசியைக் கேட்டது ," விசா கிடச்சாச்சா ? "
அதற்குத் தானே அவர்களிடம் பேசுகிறாள் ராசி. எல்லோரிடமும் விசாரித்து ஏஜண்ட் பேரை
பேப்பரில் எழுதிக் கொண்டே வந்தாள் . பத்து விசா ஏஜண்சி பேராவது அவள் கையில் இருக்கும். பக்கத்திலேயே எந்த ஏஜண்ட் யார் பரிந்துரைத்தது என்கிறக் குறிப்புடன் எழுதி .... போனை வைத்தாள் .
பிறகு லல்லி, ஜானகி, ஸ்ரீதேவி, இவர்கள் சொன்ன ஏஜண்ட் எல்லோரும் கட் .
"ஏன் ? எதுக்கு எல்லோரிடமும் ஏஜண்ட் பேர் கேட்டு , அப்புறம் எதுக்கு வேண்டாம்னு அடிக்கிறே ராசி. " விஷ்ணு கேட்டார்.
வேலையத்தவன் பூனையைக் கட்டி என்னமோ செய்தது போலேல்ல இருக்கு ராசி செய்யற வேலை என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு. சொல்லவில்லை. சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளுவதற்கு விஷ்ணு முட்டாளா என்ன?
" நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது.அவங்க எல்லாம் வயித்தெரிச்சல் பிடித்தவர்கள். நமக்கு விசா கிடைக்காம போகனுங்கறதுக்காகவே சதி செய்தாலும் செய்வாங்க. அதனால் தான் வேண்டாம்னு விட்டுத்தள்ளத் தான் அவங்க சொன்ன பேரையெல்லாம் எழுதிகிட்டேன். "
" உன்னோட பிரண்ட்ஸ் தானே அவங்க எல்லாம். அவங்க எப்படி சதி......" இழுத்தார் விஷ்ணு.
" பிரண்ட்ஸா இருந்தா..................... பொறாமைப்பட மாட்டாங்களா?" புருவத்தை உயர்த்தி திருப்பிக் கேள்வி கேட்டாள் ராசி.
" என்னவோ போ. எனக்கு உங்கள் ஃபிரண்ட்ஷிப் பற்றி ஒன்றும் புரியல. யாராவது ஒரு ஏஜண்ட் கெடச்சா சரி. "
அப்படி இப்படி யோசித்து கடைசியாக ,சுருதி சொன்ன ஏஜெண்சியை நாடினாள் . ஏஜண்ட் ராசியிடமிருந்தும் , விஷ்ணுவிடமிருந்தும் பாஸ்போர்ட் விவரங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு இரண்டொரு நாட்களில் தொடர்பு கொள்வதாக சொல்லி விட்டு நகர்ந்தார்.
அப்பொழுதிலிருந்து ராசிக்கு நிலைக் கொள்ளவேயில்லை. சமையலறைக்கும், போனிற்கும் ஒரு ஆயிரம் தடவை நடைப் போட்டிருப்பாள். வரும் போன் எல்லாம் ஏஜெண்ட் என்றே நினைத்துப் பாய்ந்து எடுத்துக் கொண்டிருந்தாள் .
ராசி அமெரிக்கா போக வேண்டும் என்று நினைத்திருந்தால் என்றைக்கோ போயிருக்கலாம்.
அவள் மகன் பல முறை அழைத்தும், , மருமகளுடன் சுமுகமான உறவில்லாததால் ,இவ்வளவு நாள் அமெரிக்கா போவதையே தவிர்த்து வந்தாள் . "பெரிய அமெரிக்கா' என்று தோளில் முகவாய்க்கட்டையை இடித்துக் கொள்வாள். இப்ப மட்டும் என்ன இவள் மருமகள் சமாதானப் புறா பறக்க விட்டாளா என்று யாரும் கேட்காதீர்கள். தீடீரென்று அவளுக்குத் தோன்றிவிட்டது,," குழந்தைகள் அப்படி, இப்படி தான் இருப்பார்கள் . நாம் தான் விட்டுக் கொடுத்தால் என்ன ?" என்று சொல்லிக் கொண்டு விசா வாங்க , விழாவிற்குப் போவது போல் நினைத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள் .பிள்ளைப் பாசமோ என்னவோ?
ஏஜண்டும் , எல்லா பார்மாலிடீஸ்சும் முடித்து விட்டு , அவர்கள் விசா வாங்குவதற்கானத் தேதியைக் குறிப்பிட்டு , அவர்கள் எடுத்துக் கொண்டுப் போக வேண்டியதையும், அவர்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு அனுப்பி வைத்தார். சும்மா இல்லை. அவர் ஃபீசை வாங்கிக் கொண்டு தான்.கணிசமாகக் கறந்துவிட்டார். பின்னே ராசி அமெரிக்கா அமெரிக்கா என்று பறந்ததால் , அவரும் அதை
சரியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டார்.
விசா வாங்க வேண்டிய நாளும் வந்தது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரம் மதியம் இரண்டு மணி.
காலையிலிருந்து ராசியும் விஷ்ணுவும் ஒரு பதட்ட நிலையிலேயே இருந்தார்கள். காலை எழுந்ததும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் ஒரு சிதறு காய் உடைத்தாயிற்று . விசா கிடைத்ததும் அடுத்த காய் உடைப்பதாகஅம்மனிடம் பேரம் பேசி முடித்தாள் ராசி.
இரண்டு மணி விசா நேர்காணலிற்கு ஆகாரத்தை பத்து மணிக்கே முடித்துக் கொண்டுப் பதினோரு மணிக்கே விஷ்ணுவை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள். விஷ்ணு , " இப்பவே போகணுமா? " என்று கேட்டதற்கு, " இங்கே இருப்பதை எம்பசி வாசலில் காத்திருப்போம் " என்று அடித்து சொல்லிவிட்டாள்.,
ஆட்டோவைப் பிடித்து அண்ணா சாலை எம்பசி வாசலில் மண்டை வெடிக்கும் வெயிலில் வந்து இறங்கி, அங்கு நிற்கும் பெரிய வரிசையில் தங்களையும் ஐக்கியப் படுத்திக் கொண்டார்கள் .
வரிசை நகர ஆரம்பித்தது.இவர்கள் முறை வந்ததும்,
செக்யுரிடி ," உங்கள் இன்டர்வியு லெட்டர் எங்கே ? " என்று கேட்க,
ராசி, பவய்மாக எடுத்து நீட்டினாள். உடனே செக்யுரிட்டி," இரண்டு மணிக்கு ஏன் இப்பவே வந்தீர்கள் ? போய் அப்படி நில்லுங்கள் " என்று டீச்சர் மாணவனை கிளாசுக்கு வெளியே போகச் சொல்வது போல் சொல்ல , செக்யுரிட்டி கை காட்டிய இடத்தில் ஒரு பெரியக் கும்பலே இருந்தது. நம்மைப் போல் இத்தனை பேரா என்று நினைத்துக் கொண்டே இவர்களும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டனர்.
விஷ்ணு அதிக நேரம் நிற்க முடியாமல் ஓரமாய் கீழே உட்கார்ந்துக் கொண்டார்.பிளாட்பாரத்தில் தான் . பிறகென்ன " சேரா " போடுவார்கள்? ராசியையும் உட்கார சொல்லிப் பார்த்தார். அவள் காதிலேயே வாங்காமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து, " ஏன் ராசி அப்படி டெண்ஷானாக இருக்கே? அங்கு நிற்பவர் ஜனாதிபதி ஒபாமா இல்லையே " என்று நக்கலாக சொல்லவும், அருகிலிருந்தவர்கள் சிலர் " களுக் ' என்று சிரித்து விட, ராசியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ஒரு முறை முறைத்தாள் விஷ்ணுவைப் பார்த்து.......
அதற்குள் ஆபத்பாந்தவனாய் , வந்தது ஒரு குரல் . ஆமாம் , இவர்கள் நேர்காணல் நேரம் வந்ததாக செக்யுரிட்டி சொல்லவும் , ராசி பாய்ந்துக் கொண்டு வரிசையில் நின்றுக் கொண்டாள்.
விலை உயர்ந்த கைப்பை முதற் கொண்டு, கையிலிருந்த எல்லாவற்றையும் அனாதையாய் வெளியே எறிந்து விட்டு, வெறும் பேப்பர்களுடன் உள்ளே சென்றனர். விஷ்ணுவிற்கு, இப்படிஎல்லாம் அந்த ஊருக்குப் போக வேண்டுமா என்றிருந்தது. ராசி விட்டு விடுவாளா என்ன?
உள்ளே சென்று, விஷ்ணுவிற்கு வேறு பயம் பிடித்துக் கொண்டது. தனக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் அமெரிக்கர்களின் ஆங்கிலம்(accent) சட்டென்றுப் புரியாதே.
சமீபக் காலமாக Star Movies, HBO, AXN...... என்று எல்லா சேனல்களையும் ராசி பார்த்துக் கொண்டிருந்தாள். ஆங்கிலம் புரிய வேண்டுமே ! அதற்காகத்தான். அவளுக்கு ஆங்கில சினிமாவில் புரிந்தது என்னவோ ஷ் .... ஷ் .....ஷ் என்ற ஒலி தான். இருந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று தான் வந்திருந்தாள்.ஆனாலும் இவர்கள் பேசும் போது பல்லிடுக்கில் அல்லவா பேசுகிறார்கள். என்கிறப் பயம் இருந்தது..வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
அதிகாரி இவர்களிடம்,
" ஹாய் ஹௌ ஆர் யு?"
ராசி முந்திக் கொண்டு
" ஃ பைன் ..தாங்க் யு " என்று சொன்னதோடு நிற்காமல் , பதட்டத்தில் என்ன சொல்கிறோம் என்றுப் புரியாமல வாய் குழற.......
( ஹௌ ஆர் யு ? என்று திருப்பிக் கேட்பதாக நினைத்துக் கொண்டு ),
" ஹூ ஆர் யு ? " என்று கேட்டு விட்டாள் .
அந்த ஆறடி உயர அமெரிக்க அதிகாரி அரண்டு போயிருக்க வேண்டும்.
கோபம் கொப்பளிக்க, சிவந்த முகம் மேலும் ஜிவுஜிவுக்க , " வா....ட்......?" என்றுக் கேட்க
பதறின விஷ்ணு , அதிகாரியிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு ராசியின் தவறை திருத்தினார் .
விசா ஆபிசருக்கு கோபம் சட்டென வந்தாலும் ராசியின் பதட்டத்தைப் பார்த்து மன்னித்து விட்டு ,
" ...............விசிட் ? " என்றுக் கேட்டார்.
விசிட் என்கிற வார்த்தை மட்டுமேப் புரிந்தது இருவருக்கும் .
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு " எஸ் ..எஸ் ...விசிட் " என்றுத் திருப்பி சொல்லினர்
அதிகாரி இப்பொழுது ,
" ஹூம் ...ஆர்....யூ ...கோயிங்...டு... விசிட் ? " என்று அழுத்தம் திருத்தமாகக் கேட்கவும்.
ராசியும் விஷ்ணுவும் கோரசாக " சன் " என்று சொல்லவும் .
" ஓ...கை "( O.K)
அதிகாரி " இதென்னடா நமக்கு இன்று வந்த சோதனை " என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ , இவர்களை முதலில் அனுப்பி விடலாம் என்று தீர்மானித்து , அவர்களுக்கு ஆறு மாத விசாவைக் கொடுத்தனுப்பி விட்டார். இருவரும் வெளியே வந்தார்கள்.
விஷ்ணு ராசியிடம், " சொன்னால் கேட்டால் தானே. ஆங்கிலம் தெரியாது என்றால் தமிழ் பேசும் ஒருவரை வைத்துக் கொண்டு நேர்காணல் செய்திருப்பார்கள். நீதான் நமக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர் நினைத்தால் அதற்காகவே விசா கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்று சொன்னாய்"
ராசி சொன்னது தான் டாப்,"அதையெல்லாம் விடுங்கள்.... நான் என்ன தப்பாய் பேசி விட்டேன். " ஹு ஆர் யு ?" என்று கேட்டால் அது ஒரு தப்பா...அதற்குப் போய் அவருக்கு இவ்வளவு கோபம் வருவானேன்."
நீங்களே சொல்லுங்க.....
அமெரிக்க எம்பசியில் , அமெரிக்க இம்மிக்ரேஷன் ஆபிசரைப் பார்த்து "ஹூ ஆர் யு?" என்று கேட்டால் தப்பில்லையாம். தெரிஞ்சிக்கோங்க.
அமெரிக்காவில் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் ராசி அடிக்கப் போகிறாளோ...........
பார்ப்போம்.......