Monday 28 April 2014

மாமியாரும், ஜாடியும்




















ஒரு நாள் பத்து பதினைந்து வருடம் முன்பாக  அதிகாலை நேரம்  ,வாசல் தெளித்து  கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தேன்.  அன்று வெள்ளிக் கிழமை . கையில் வைத்திருந்த செம்மண் டப்பியை எடுத்து, தண்ணீர் விட்டுக் குழைத்து, கோலத்திற்கு செம்மண் இட்டு முடிக்கவும்,  உப்பு விற்பவன் கைவண்டியில் உப்பு மூட்டையை பாதித் திறந்த வண்ணம்  சாய்த்து  , எங்கள் தெருவுக்குள் நுழையவும்  சரியாயிருந்தது  .  " உப்பு ! உப்பு ! " என்று கூவிக் கொண்டே வந்தார் .

பக்கத்து வீ ட்டு மாமி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து உப்பு வாங்கிக் கொண்டு போனார். பார்த்துக் கொண்டே , நான் உள்ளே நுழைந்து கேட்டை மூடி விட்டு உள்ளே போகத் திரும்பினேன்.

உப்பு விற்பவர் என்னைப் பார்த்து, " உப்பு வாங்கலையா தாயி? வெள்ளிக் கிழமை உப்பு   வாங்கும்மா. மஹாலக்ஷ்மி  வீட்டிற்கு  வருவாள் ." என்று சொல்ல, நானோ, " இதெல்லாம் வியாபார உத்தி ."  என்று மனதில் சொல்லிக் கொண்டே  " இன்றைக்கு வேண்டாம் " என்று உள்ளே நுழைந்து  அடுத்த வேலைகளை ஆரம்பித்தேன்.  இன்று  பள்ளிக்கு சீக்கிரமே வேறு செல்ல வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே குளிக்கக் கிளம்பினேன்.

குளித்து விட்டு வந்து குக்கரை அடுப்பில் வைத்து விட்டு  நறுக்கி வைத்திருந்த பீன்ஸைப் போட்டு  தாளித்து, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் போட்டு  கேசை சிம்மில் வைத்து விட்டு  தட்டை போட்டு மூடினேன் . உப்புப் போடவில்லை என்பது  நினைவிற்கு வர  ,உப்பு  ஜாடிக்குள்  கையை விட  , அதென்னவோ கை உள்ளே  போய்க் கொண்டே இருந்தது. உப்பு தட்டுப் படவேயில்லை. கையால் துழாவி, கொஞ்சமாயிருந்த உப்பைப்போட்டு விட்டு  மேலும் தேவைப்பட,  டேபிள் சாலட்டை  போட்டு அன்றைய சமையலை முடித்தேன்.

உப்பு விற்பவரிடம் வேண்டாம் என்று சொன்னோமே. வாங்கியிருக்கலாம் . சரி , ஆனது ஆச்சு. மாலை  வீட்டிற்கு வரும்போது உப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து  அவசரவசரமாக பள்ளிக்கு நடையைக் கட்டினேன்.

பள்ளி  வேலையில் ,உப்பு வாங்க வேண்டியதை அடியோடு மறந்தே போனேன் என்று தான் சொல்ல வேண்டும். மாலை  வீட்டிற்குள் நுழைந்ததுமே  , " உப்பு ஜாடியில் உப்பே இல்லை. இப்படியா உப்ப காலியாகும்  வரை  வாங்காமல் இருப்பார்கள். நல்லா குடித்தனம் செய்கிறாய் போ "  என்று மாமியாரிடம் பாட்டு வாங்கினேன். அன்று அவர் மேல் எனக்குக் கோபம் வந்தாலும், அதில் இருக்கும் உண்மை பின்னர் புரிந்தது.  என் மருமகளிடம்  நானும் இப்பொழுது இதை அறிவுறுத்தத் தவறுவதில்லை.

விஷயத்திற்கு வருகிறேன்.  உப்பு வாங்கப் போக வேண்டுமா? அலுப்பாக இருந்தது. என் பெண் கல்லூரியிலிருந்து திரும்பியவுடன் , "கொஞ்சம் உப்பு வாங்க வேண்டுமடி  .ப்ளீ ஸ்.......  கொஞ்சம் வாங்கி வருகிறாயா? " என்று அவளிடம் கெஞ்சினேன்.

" எனக்கு செமஸ்டர் பரீட்சை  வருகிறது படிக்கப் போகிறேன் " என்று அவள் மறுத்தாள் .

பின்னாலேயே  என் பையன் வீட்டிற்கு வர , அவனிடமும் உப்பு வாங்க கெஞ்சினேன்.  அவனும் ஏதோ  ஒரு காரணம் சொல்லி வாங்கிவர  முடியாது  என்பதை சொல்லி விட,

என்னவரை விடுவேனா? அவரிடமும்  சொல்லிப் பார்த்தேன். அவரோ," நாளை ஒரு நாள்  உப்பு இல்லாமல் சாப்பிடுவோம்  என்று  ஒரு தீர்வு சொல்லி விட்டு அவர் வேலையைப் பார்க்க சென்று விட்டார்.

இத்தனை பேரை கெஞ்சியதற்கு, நாமே  சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு கிளம்ப , அப்பொழுது பார்த்து பக்கத்து வீட்டிலிருந்து சுபா மாமி தன பெண்ணின் வளை காப்பிற்கு  வரச்  சொல்லி  குங்குமச் சிமிழுடன் வர, அவருடன் உட்கார்ந்து அளவளாவினேன். அவர் கிளம்பும் போது மணியைப் பார்த்தால் எட்டு. இந்த ராத்திரியில்  எங்கே கடைக்குப் போவது? நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டேபிள் சாலட்டை வைத்து  நாளை  சமையலை முடிக்க தீர்மானித்து, இரவு சாப்பாட்டுக் கடையை   ஆரம்பித்தேன். என் மாமியாருக்கு  மட்டும் என் மேல் சரியானக் கோபம்.  ஒன்றும் செய்ய முடியாமல் இரவு உணவை முடித்து விட்டு படுத்தாகி விட்டது.

பாதி ராத்திரி இருக்கும், குளிர ஆரம்பித்தது. இடி, மழை, மின்னல், அறை  ஜில்லென்று இருக்க, எழுந்து பேனை  நிறுத்தி  விட்டுப் படுத்தேன். காலை  ஐந்து மணிக்கு அடித்த அலாரத்தை தலையில் தட்டி  சமாதானப் படுத்தி  விட்டு எழுந்தேன்.

காலை சமையலுக்கு   கல் உப்பு  எடுக்கப் போன கையை  , டேபிள் சால்ட்  இருக்கும் ஜாடி பக்கம் திருப்பினேன்.  உள்ளே கிடந்த ஸ்பூனால் மெதுவாக உப்பு அள்ளலாம் என்று பார்த்தால் ஸ்பூன் " டங் " என்று ஜாடியின்  அடியில் போய் விழுந்தது. உப்பு எங்கே போச்சு? நேற்று  இரவு படுக்கப் போகு முன் கூட  கால் ஜாடிக்கு மேலிருந்ததே.  என்று நினைத்துக் கொண்டே  ஜாடிக்குள் எட்டிப் பார்த்தேன்.

" ஜாடி காலி " . இது எப்படி ?..குழம்பினேன்.

உப்புத் திருட்டு போனது பற்றி   அப்புறம் தீர விசாரித்துக் கொள்ளலாம் . இப்ப சமையலுக்கு என்ன செய்வது?  கடைக்குப் போகலாம் என்றால் மழை  ஆசை தீரக் கொட்டிக் கொண்டிருந்தது.

என் பையன் , " அம்மா, காபி கொடுக்கிறாயா ? " என்று கேட்டுக் கொண்டே வர,, அவன் மேல் எரிந்து விழுந்தேன். நீயாகட்டும் உன் அக்காவாகட்டும், உங்கப்பாவாகட்டும் , எனக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்  "என்று திட்ட  கண்ணைக் கசக்கிக் கொண்டே(தூக்க கலக்கம் தான்) என் பெண்ணும் வந்து சேர்ந்தாள் .

" உப்பு இருந்ததே  அம்மா? நேற்று  சட்னிக்கு  போதவில்லை என்று  நான் தானே இன்னும் கொஞ்சம்போட்டேன். அப்ப இருந்ததே " என்று  என் பெண் சொல்ல, அவளிடம், " இதோ பார் ஜாடியை, " என்று ஜாடியை காட்டினேன். அவள், என் பையன் என்று மாறி மாறி   ஜாடிக்குள்  பார்க்க,  என்னவரும் அங்கே ஆஜர். "

" ஏன் எல்லோரும் ஜாடிக்குள் தலையை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். யார் தலையாவது மாட்டிக் கொள்ளப் போகிறது என்று சமய சந்தர்ப்பம் தெரியாமல் ஜோக்கடிக்க "  எனக்கோ பயங்கர எரிச்சல். (பின்னாளில்  அழகான ராட்சசியே பாட்டு டிவியில் வரும் போதெல்லாம் எனக்கு இவர் அடித்த இந்த ஜோக் சரியாய் நினைவிற்கு வரும்.)

அவரும் ஜாடிக்குள் பார்த்து  விட்டு ஸ்பூனால்  அவரும் துழாவ , "வெறும் தண்ணி தான் வருது "  என்று கமல்ஹாசன் பாட்டு மாறி சொல்ல ,

இதற்காகவே காத்திருந்தாற். போல் என் மாமியாரும் , " சொன்னால் கேட்கலை என்றால் இப்படித்தான். " என்று பழி தீர்த்துக் கொள்ள , என் கண்ணில் நீர் தளும்பி , கீழே இறங்கத்  தயாரானது.
திடீரென்று எனக்கு உரைத்தது, அட......உப்பு ஜாடியில் இருந்ததால்  அதுவும் தூள்  உப்பானதால், சீதோஷ்ண  உபயத்தில்  கரைந்து உப்புத்தண்ணீர. ஆகி இருக்கிறது என்பது புரிய உப்பிற்குப் பதிலாக உப்புத் தண்ணீரை வைத்து  சுமாராய் சமையல் முடித்தேன்.

அடுத்த நாளே உப்பை மூட்டையில் வாங்காத குறையாய் வாங்கி வைத்தேன். ஜாடியில் கொட்டினேன்  என்று தானே நினைத்தார்கள். அது தான் இல்லை.இந்த ஜாடியினால் தான் இப்படி சங்கடத்தில் மாட்டிக் கொண்டேன் என்று அழகான பிளாஸ்டிக் டப்பாக்களில் கொட்டி வைத்தேன்.

இதற்கும் என் மாமியார், உப்பை ஜாடியில் தான் வைக்க வேண்டும் என்று புலம்ப ஆரம்பிக்க , வயதானாலே ஏதாவது தப்பு கண்டு பிடிப்பார்கள் என்று அவர் வார்த்தையை காதில்  வாங்க மறுத்தேன்.

பிறகு,உப்பு மட்டுமா பிளாஸ்டிக் டப்பாவில் உட்கார்ந்து கொண்டது. சமையலறையில் அழகழகாய் பல பிளாஸ்டிக் டப்பாக்கள்  வரிசைக்  கட்டி நின்றன..பருப்பு வகைகள் , காபிப்பொடி,புளி,பொடி  வகைகள், சர்க்கரை  என்று எல்லாமே பிளாஸ்டிக்கில் தஞ்சமடைந்தன. ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டின கதையாய், மண் ஜாடிகளும், எவர்சில்வர் டப்பாக்களும் பாவமாய் பரணில் அடைக்கலமாயின.

இது நிறைய வீடுகளில் நடந்த கதை தான் என்று நினைக்கிறேன்.
ஒரு சில வருடங்கள் பிளாஸ்டிக் மேல் தாங்கொணாக் காதல் இருந்தது உண்மையே!

சில வருடங்களுக்குப் பிறகு ..............
அங்கங்கே பிளாஸ்டிக்கை வில்லன் மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள். சற்றே குழம்பினேன். கொஞ்சம் கொஞ்சமாய், மார்கெட் போன ஹீரோவானார் பிளாஸ்டிக். கொஞ்சம் கொஞ்சமாய் பரணில் இருந்த எவர்சில்வர் டப்பாக்கள்
என்னைப் பார்த்து கிண்டலாய் சிரித்தபடி , மீண்டும் அலமாரியில் தங்கள் தங்கள் இடங்களில் வந்து அமர்ந்து கொண்டன.

ஜாடிகள் மட்டும் பரணில் மூலையோடு மூலையாய்......அதிலிரண்டு உடைந்தும் விட்டன.

ஒரு நாள் ,சுந்தரி , என் தோழி வீட்டிற்கு வந்திருந்தாள். நான் காபிப் போட உள்ளே போனேன். அவளும் என்னோடேயே உள்ளே வந்து டைனிங்டேபிளில் அமர்ந்து கொண்டாள். காபி குடித்துக்கொண்டே இருவரும் வம்படித்துக் கொண்டிருந்தோம்.

என்னோடு பேசிக் கொண்டே அவள் அலமாரியைப் பார்த்து எழுந்து போனாள்.நேராக, உப்பு டப்பாவைத் திறந்தாள்.

அதைப் பார்த்துக் கொண்டே , " இது என்னதிது? உப்பா ....."

" ஆமாம்."

" நீ, படித்தவள் தானே! உன் குடும்பத்தினர் உடல் நலன் மேல் உனக்கு அக்கறையே இல்லையா? புற்று நோய்க்கு பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாயிருக்கலாம் என்கிற சர்ச்சை கிளம்பியிருக்கிறதே. அந்த விவரங்களை நீ படிக்கிறாயா இல்லையா? " என்று சுந்தரி சரமாறியாகத் திட்ட ,

நானோ," அதெல்லாம் வெறும் சர்ச்சைகள் தானே சுந்தரி.  பிளாஸ்டிக் டப்பாவில் வைத்தால் தான் மழை நாட்களில்   உப்பு கரையாது. " என்று சொல்லவும் அவளுடைய கோபத்தின் டிகிரி  கூடியது.

" நான் அடுத்த முறை வரும் போது, உப்பை இப்படியே வச்சிருந்தே நான் உன்னுடன் பேசவே மாட்டேன் . ஆமாம் ஜாடியே உன்னிடம் கிடை யாதா ? இல்லையென்றால் கண்ணாடி பாட்டிலிலாவது வை. " என்று கோபப்படவும்,

நான் ரிஸ்க் எடுக்கிறேன் என்பது புரிய ,  புதிய ஜாடியில்  மீண்டும் உப்பு கொட்டப்பட்டது.மழைக் காலத்தில் உப்பு  கரைந்தாலும் பரவாயில்லை ,உப்பே விஷமாகி விடக் கூடாதே ! நம்முன்னோர்கள் எல்லாம் மூடர்களல்லர் என்று நினைத்துக்கொண்டே  நிமிர்ந்தேன்.சுவற்றில் படமாயிருந்த என் மாமியார் ," அன்றைக்கே  சொன்னேன் கேட்டியா? "என்று கேட்பது போலிருந்தது.

பிறகு, வீட்டிற்கு வந்த என் தம்பியின் மனைவி, " அக்கா ஜாடி எங்கே கிடைக்கும்? எனக்கும் உப்பு வைத்துக் கொள்ள வேணும் என்று சொல்ல , " அரசனை நம்பி புருஷனை கைவிட்டு விட்டால் இப்படித்தான் தேடி அலைய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு கடையின் பெயரை சொன்னேன்.

இந்த பிளாஸ்டிக் அரக்கனை  வீட்டை விட்டு  விரட்ட  நினைக்கிறேன். முடியவேயில்லையே!.  சமையலறையிலிருந்தாவது   அரக்கனை விரட்ட  தீவிர  முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.
அதற்கு முதல் படியாய்  கடைக்குப் போகும் போது மஞ்சள் பை எடுத்து செல்கிறேன் .

அது சரி , நீங்கள் உங்கள் வீட்டு சமையலறையிலிருந்து  பிளாஸ்டிக்  அரக்கனை  விரட்டி விட்டீர்களா.............?


பி.கு :
" மாமியாரும் ஜாடியும் "  பதிவில், ஜாடி  படத்திற்கு,  என் மருமகள், அவளுடைய   உப்பு ஜாடி , கொடுத்து  உதவினாள் .
அவளுக்கு என் ஸ்பெஷல் நன்றி.

Saturday 26 April 2014

வல்லமை கொடுத்த ஊக்கம்.


                                           














வல்லமைக்  கடிதப் போட்டியில் நடுவர் இசைக்கவி திரு. இரமணன் அவர்களின்  சிறப்புப் பரிசு பெற்ற

" என் தோழி  மணி மொழிக்கு " நான் எழுதிய மடல்  இதோ ,

அன்புள்ள தோழி  மணிமொழிக்கு,

நீயும் உன் வீட்டினரும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இப்பொழுது கடிதம் எழுத என்ன அவசியம் என்று தோன்றலாம்.மேலே படி உனக்கே புரியும்.  

 எனக்கு மிகவும் தெரிந்த ஒருவருடைய மகள்  , நன்கு படித்தவள், நல்ல உத்தியோகம், சம்பளம், கண் நிறைந்த கணவன், அழகான குழந்தை  என்று வாழ்ந்து கொண்டிருந்தவள்  சட்டென்று  விவாகரத்து செய்வதாக  சொன்னவுடன், என் மனம்  தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தது.  என் ஆதங்கக்த்தை யாரிடமாவது சொல்ல  நினைத்தேன்.அதனால் தான் இக்கடிதம் எழுதுகிறேன். இப்பொழுதெல்லாம் விவாகரத்து என்பது சர்வ சாதாரணமாகி விட்டதே  என்கிற  ஆதங்கம் தான் மேலோங்கியது. எங்கே தவறு செய்கிறோம்  என்று யோசித்தேன். என் மனதில் தோன்றியதை  இதோ கொட்டி விட்டேன்.

உலகமே நம்மைப் பார்த்து  மூக்கில் விரல் வைக்கும் ஒரு விஷயம் உண்டென்றால்,  அது நம் குடும்ப அமைப்பு தான். அந்தக் குடும்ப அமைப்பை போற்றிப் பாது காத்து  , சிறிதளவும் சிதையாமல் அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்வதில், நம் பெண்களுக்கு மாபெரும் பங்கு இருக்கிறது  என்பதை யாருமே  மறுக்க முடியாது.அதை  நம் பெண்களும் லாவகமாக , நேர்த்தியாக  கொண்டு சென்றார்கள்.
ஆனால் இப்பொழுது அந்தக் குடும்ப அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டிருக்கிறது. நான் சொல்லவில்லை. குடும்ப நல நீதி மன்றத்தில் மலையாய்  குவிந்திருக்கும் விவாகரத்து வழக்குகள்  வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

நம் பாட்டித் தலைமுறைப் பெண்கள்   வீட்டிற்குள்ளேயே தன்  ராஜாங்கத்தை அடக்கி வாழ பழக்கப் பட்டவர்கள்.பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாசிகள் இவர்கள். அவர்களுக்கு  கருத்து சுதந்திரம் கிடையாது.அவர்களுக்கு அடுத்தத்  தலைமுறைப் பெண்கள்  வீட்டையும்,  அலுவலகப்  பணியையும் ஒருங்கே செய்து இரட்டைக் குதிரை  சவாரி  செய்தவர்கள். அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம்  இருந்தது  என்று சொல்லலாம். அதற்கும் அடுத்த தலைமுறைப் பெண்கள் , இக்கால இளம் மங்கையர், பெயருக்குப் பின்னால் பல பட்டம் தாங்கியவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அலுவலகத்தில்  பணி புரிகிறவர்கள்..  இவர்களுக்கு இன்னும் கூடுதல் சுதந்திரம் இருக்கிறது. இவர்களுக்கு அவர்கள் கணவர்களுடைய   உதவி பெரிய அளவில் கிடைக்கவே  செய்கிறது.சமையலாகட்டும், குழந்தை  வளர்ப்பிலாகட்டும் எல்லாவற்றிலும் கணவன்  உதவிக் கரம் நீட்டுகிறான். .  பொருளாதாரத்திலும்  பெண்களின் நிலைமை முன்னேறியிருகிறது. இக்காலப் பெண் பொருளாதாரத்திற்காக  கணவனை  நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தமில்லை.. இது அத்தனையும் பாராட்டுக்குரியதே. ஆனால் விவாகரத்தும்  அதிகமாகிக் கொண்து வருகிறது. ஏன் ? மிகப் பெரிய கேள்வி இது.

 இந்தத் தன்னிறைவுத் தன்மையை சில பெண்கள் தவறாகப்  பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தினால் அவர்களின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை , சகிப்புத் தன்மை எல்லாவற்றையும்  தொலைத்து  விட்டார்களோ என்கிற அச்சம் எழுகின்றது. விட்டுக்கொடுத்துப் போவது    என்பது அடங்கி  வாழ்வது  என்று தவறாகப் புரிந்து  கொள்வதன்  விளைவு , விவாகரத்தில்  முடிகிறது.நான் எல்லா பெண்களையும்  சொல்லவில்லை.  அற்பக் காரணங்களுக்காக விவாகரத்து  செய்து ,வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று பெருமைப்படும் பெண்களை என்ன சொல்வது.?இப்படிக்  கண்ணை விற்று ஓவியம் வாங்கத் துணியும்  பெண்களைப் பற்றி தான் குறிப்பிடுகிறேன்.

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் திருமணத்திற்கு முன் கனவுகளையும், கற்பனைக் கோட்டைகளையும் கட்டி வைத்திருப்பார்கள் . சந்தேகமில்லை. அந்த எதிர்பார்ப்புகள் நடக்கவில்லையென்றால், அந்தக்  கனவுக் கோட்டை தகர்ந்து நொறுங்கிப் போவதை அவர்களால்  எதிர்கொள்ள முடியாமல்  போய் ,
ஒரு கால கட்டத்தில் தம்பதிகள் கோர்ட் படியேறி விடுகிறார்கள் .

சரி. விவாகரத்தும் ஆகிவிடுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதற்குப் பிறகு.....? தம்பதிகள் இருவருக்கும் வாழ்க்கை ஒரு பெரிய கேள்விக்குறி  தானே! குழந்தைகள்   இருந்தால் அவர்களும் உள  ரீதியாக அலைகழிக்கப்படுவது நிஜம்.

அப்படிஎன்றால் என்ன சொல்ல வருகிறாய்? விட்டுக் கொடுப்பது எப்பொழுதும் மனைவியாகத்  தான்  இருக்க வேண்டும்  என்று சொல்கிறாயா? ஏன் கணவன் விட்டுக் கொடுத்தால்  குறைந்து போய் விடுமா?  என்று  விவாதம் செய்ய வேண்டாம். தம்பதிகளுக்குள் யார் விட்டுக் கொடுப்பது என்பதில் சர்ச்சையே இருக்க வேண்டாமே.  தொலை நோக்கில் பார்த்தோமானால் , யார் விட்டுக் கொடுப்பது என்கிற வீர  விளையாட்டில் இன்று தோற்பவர்  தான் , பின்பு வெற்றி காண்கிறார்..

எங்கோ  படித்தது நினைவிற்கு வருகிறது. திருமணம் என்பது வங்கி சேமிப்பு  கணக்குப் போன்றது. நாம் எவ்வளவு அன்பை செலுத்துகிறோமோ, கண்டிப்பாக  அது வட்டி போட்டு  பலமடங்காகி  நமக்கு திருப்பி வரும்.. அன்பு மட்டும் தான் பலமடங்காக வருமா என்ன?  வெறுப்பை உமிழ்ந்தால்,  அதுவும் பலமடங்காகி விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த  சமயத்தில்   ' O Henry '   ன்  கதை  ஒன்று   நினைவிற்கு  வருகிறது.
நிறைய  பேருக்கு  இது  தெரிந்திருக்கலாம்.

அதன்   தமிழாக்கம்   இதோ.........
வறுமையில்     வாடும்    கணவன்   மனைவி  .ஒருவருக்கு  ஒருவர்   கொடுத்துக்     கொள்வதற்கு     அன்பைத்     தவிர     வேறெதுவும்  பெரிதாக  எதுவும்     இல்லை.மனைவி     தன்     நீண்ட   அழகிய      கூந்தலை    சீவி  முடித்து  கொண்டையிடும்போது    ஒரு       " ப்ரூச் "    இருந்தால்    அழகாக   இருக்குமே  என்று  நினைக்கிறாள்  .    அவள்  நினைப்பது    அவள்  கணவனுக்குத்  தெரியும்  .
ஆனால்  வாங்குவதற்கு  கணவனிடம் வசதியில்லை.  கிறிஸ்துமஸ்   பரிசாகவாவது    குடுக்க   முயல்வோம்  என்று    நினைக்கிறான்  கணவன் .
கிறிஸ்துமஸ்    வருகிறது...........
 மனைவிக்கு  ,  அவள்    கணவனிடம்    இருக்கும்  பாரம்பர்யமான   வாட்ச்   பற்றித்  தெரியும்.       அதற்கு    தங்க  ஸ்ட்ராப்   வாங்கி    கொடுக்க    நினைக்கிறாள்.  கிளம்புகிறாள்.கணவனோ     இவள்   கூந்தலிற்கு  ' ப்ரூச்  '   வாங்கக்   கிளம்புகிறான்.

இருவரும்    பணத்திற்காக    அலையோ     அலை   என்று    அலைகிறார்கள்.
கிடைக்கவில்லை.மாலை  இருவரும்   வீடு   திரும்புகிறார்கள்.   மனைவி    வாட்ச்   ஸ்ட்ராப்புடனும்,   கணவன்   'ப்ரூச்'சுடன் .

வீடு   திரும்பிய   இருவருமே     அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.
கணவன்    தன்னுடைய     பாரம்பர்ய     வாட்சை   விற்று     ப்ரூச்   வாங்கியிருக்கிறான்.

மனைவியோ     தன்     கணவருக்காக    அழகிய    நீண்ட   கூந்தலை   ' விக்'  செய்யும்    கடைக்கு    விற்று விட்டு  வாட்ச் ஸ்ட்ராப்  வாங்கி வந்து விடுவாள்.


இருவருக்கும்  புரிகிறது   தாங்கள்    வாங்கி   வந்தது     இனிமேல்    உபயோகப்படாது    என்று   .கண்கள்   குளமாகின்றன  .
 காதலோடு   மனைவியை   இழுத்து   அணைத்துக்   கொள்கிறான்.    
அங்கு    வார்த்தைகளே   இல்லாமல்        காதல்    உணரப்பட்டது.
வறுமையின்    உச்சத்திலும்    காதல்    வளமாக  இருக்கிறது   இல்லையா?

 உண்மைக்    காதல் ,  துணையை     அவர்களின்     குறைகளோடு  ஏற்றுக்கொள்ளச்    செய்யும்  என்பதில்  சந்தேகமேயில்லை . இதை சகோதரிகள் உணர்ந்து கொள்வார்களா?குறையில்லாத  மனிதர் யார்? ஒருவரை சுட்டிக்காட்ட முடியுமா நம்மால்?
இதை மனதில் வைத்தால் கண்ணை விற்று ஓவியம் வாங்க முயல மாட்டோம்.

நீ என்ன நினைக்கிறாய் இதைப் பற்றி..........சொல்லேன்.  நான் நினைப்பது சரி தானே ? 

அன்புடன்,
உன் தோழி ,
ராஜலக்ஷ்மி பரமசிவம்.

போட்டியில்  பங்கு பெற வாய்ப்பளித்து  ஊக்குவித்த  வல்லமை ஆசிரியர் குழுவினருக்கும், நடுவர் இசைக்கவி திரு. இரமணன்  அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல.

image courtesy--https://www.flickr.com/photos/raselased/

Monday 7 April 2014

நாங்களும் இந்தியர்கள் தானே!




டிவி சேனலைத் திறந்தால்  தேர்தல்,  பேப்பரைத் திறந்தால்  தேர்தல்,  இந்தக் கட்சியின்  அலை வீசுகிறது,  அந்தக் கட்சியின் அலை வீசுகிறது என்று சுனாமி வருவது போல்  உரையாடுகிறார்களே என்று   என்னவரிடம்  "எதுக்கு இப்படியெல்லாம் வாதாடுகிறார்கள் . என்ன விஷயம்? " என்று கேட்க,
அவரோ,"  அதான் தேர்தல் வருகிறதே , அதற்காகத் தான் ." என்று  அசட்டையாய் சொல்லி விட்டு , தினசரி நாளிதழுக்குள் நுழைந்து கொண்டார் .

" எங்கே எலெக்ஷன் " இது நான்.

சற்றே எரிச்சலுடன் ," இப்ப நிறுத்தப் போறியா இல்லையா? ஒண்ணுமே தெரியாத மாதிரி  நீயும் கேக்கற, நானும் சொல்றேன்." என்று அவர் சொன்னால்,......... நான் விட்டு விடுவேனா என்ன?

திரும்பவும், "இது ஸ்டேட் எலெக்ஷனா, பார்லிமென்ட் எலெக்ஷனா ?" என்று அடுத்த கேள்வி  கேட்டேன்.

இப்ப அவருக்கு சரியானக் கோபம் வந்தே விட்டது.  படித்துக் கொண்டிருந்த நியுஸ் பேப்பரை  நாலாய் மடித்து வைத்து விட்டு என்னைப் பார்த்து ," உன்னுடைய பிரச்சினை தான் என்ன ? எதுக்கு என்னைப் படிக்க விடாமல்  கேள்வி கேட்கிறாய்?. " என்று கோபப் பட்டார்.

" டிவியில் , ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் சொல்லி,  அவரவர் பெறப் போகும் சீட்டைப் பற்றிய கருத்துக் கணிப்பு வருகிறது . தினசரிகள் பார்த்தால் அதிலும் அதுவே தான் வருகிறது. முக நூலைத் திறந்தால் அங்கும்  கோப முகத்துடன் இருக்கும் தலைவர்கள், வெற்றிக் களிப்பில் மிதக்கும் அரசியல் தலைவர்கள் என்று  போட்டு அசத்துகிறார்கள்."

 "ஆனால்............. யாருங்க ஓட்டுப் போடப் போவது? "என்று திரும்பக் கேட்டேன். நான்.

நான் கேட்டதில் என்ன தப்பு சொல்லுங்கள்?
என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து  விட்டு அவர்," வெயில் ஜாஸ்தியானதில் உனக்கு ஒன்றும் ஆகவில்லையே "   என்று கேட்கிறார். வெயிலின் தாக்கத்தில் எனக்கு எதுவும்  ஆகிவிட்டதாக நீங்களும் தப்புக் கணக்குப் போட வேண்டாம்.

தேர்தலைப் பற்றி நான் கேட்டதற்கு  காரணம் இருக்கிறது.. சொல்கிறேன்......

இன்னும் சுமார்   இரண்டு  வாரத்தில் ஓ ட்டுப் போடப் போகிறோம் தானே! ஆனால் எங்கள் தொகுதி வேட்பாளர்கள்   யாரென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு ஊர்வலம் போக வேண்டுமே......... எங்கள் தெரு வழியாக.  ......இல்லையே! லவுட் ஸ்பீக்கரில் சினிமா பாட்டு ராகத்தில்  வேட்பாளர்களைப் பற்றிய பாட்டு அலறுமே.  அதுவும் இல்லை. பேப்பரில் இடையே வைத்து  பிட் நோட்டீஸ்  அனுப்புவார்களே. அது கூட இல்லையென்றால் எனக்கு வருத்தமாக இருக்காதா.


வீ டு வீடாக ஓட்டுக் கேட்க வருவார்களே . அப்படி யாரும் எங்கள் தெரு வழியாக வரவே காணோம்/.  அவர்கள் நமக்கு இப்ப தானே வணக்கம் எல்லாம் சொல்வார்கள். ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த திருவிழாவெல்லாம் நடக்கும். இந்த  முறை ஏனோ  எங்கள்  தெருவை வேட்பாளர்கள் புறக்கணித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது?

ஏன் ! நாங்களும் இந்தியர்கள் தானே! எங்களுக்கும் இந்தத் தேர்தல் கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் உரிமை உண்டா இல்லையா சொல்லுங்கள். தெரு மயான அமைதியில் இருக்கிறது. பிறகு இந்தக் கொண்டாட்டங்களெல்லாம் பார்ப்பதற்கு மினிமம் இன்னும் இரண்டு வருடம் காத்திருக்க வேண்டுமே! அது தான் என் கவலை .

அதனால் இதைப் படிப்பவர்கள்  யாராக இருந்தாலும், தயவு செய்து , உங்கள் ஏரியாவிற்கு வரும்  ஊர்வலங்களை எங்கள்  தெருவிற்கும் அனுப்பி வையுங்கள். நான் உங்களுக்கு நன்றியுடைவளாய் இருப்பேன்.எங்கள் தெருவாசிகள், கட்சிப்  பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும், பதில் வணக்கமும்  செய்வார்கள். அதற்கு நான் கியாரண்டி.


(அரசியல் பதிவெல்லாம் பெண் பதிவர்கள போடுவதில்லை என்கிறக் குறை
வேண்டாமே என்று தான் இந்தப் பதிவு.)

image courtesy----google.

Tuesday 1 April 2014

ராசியின் வேட்டை.













அன்று இரவு ராசி நல்ல உறக்கத்திலிருந்தாள் . கணவர் விஷ்ணு,   டிவியில்  திரு.அர்னப் கோஸ்வாமி , வீட்டிற்குப் போய்  விட்டாரா என்பதை உறுதி செய்து கொண்டு   விட்டுப் படுத்தார். சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டார் .

ராசிக்குத் தீடீரென்று  முழிப்பு வந்தது. கணுக்காலில் ஏதோ  அரிப்பது போலிருக்க,  ராசி, கொசு கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டு காலை இழுத்து, போர்வைக்குள் பத்திரமாக  வைத்துக் கொள்ள முயற்சிக்க, 'குறு குறு 'வென்று  ஊர்வது ராசிக்குப்  புரிந்தது. சட்டென்று எழுந்து, லைட்டைப் போடவும், கரப்பான் பூச்சி ஒன்று  அவசரமாக  கட்டிலடியில் ஓடி ஒளிந்து கொண்டது.அதை ராசிப் பார்த்து விட்டாள் . ராசிக்கு  உடம்பெல்லாம் நடுங்கியது. கரப்பான் பூச்சி என்றால் அவ்வளவு பயம் அவளுக்கு. கார்கிலிற்கு போகச் சொன்னால்  கூடப்  போய்    போரிட ரெடி.. ஆனால் இந்தக் கரப்பான் பூச்சி , அவளை  நடுங்க வைத்து விடும்.

விஷ்ணுவைப் பார்த்தாள் ராசி. அயர்ந்த உறக்கத்திலிருந்தார் விஷ்ணு. இந்த கரப்பான் பூச்சியை  அடித்து நொறுக்கா விட்டால் கண்டிப்பாகத் தூக்கம் வரப் போவதில்லை  ராசிக்கு. என்ன செய்வது? அறையின் கதவிற்குப் பின்னால் சாத்தியிருந்த துடைப்பம் கண்ணில் பட அதை எடுத்து  கட்டிலடியில் விட்டு ,"மடார்,மடார் " என்று அடித்ததில், கட்டிலின்   தூக்கத்திலிருந்த விஷ்ணு முழித்துக் கொண்டார். அவர் கண் விழித்துப் பார்க்கவும், ராசி கையில் ,துடைப்பத்தை செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழவும் சரியாக இருந்தது.

விஷ்ணுவிற்கு இந்தக் காட்சி பிடிபடவில்லை. அதுவும் சற்று நேரத்திற்கு முன்பாகத் தான் டிவியில் தேர்தல் செய்திகள் பார்த்திருந்தார். அதனால் ஒருவேளை தேர்தல் சின்னத்துடன் யாரோ ஓட்டு சேகரிக்க வந்திருக்கிறார்கள் என்று தான் முதலில் நினைத்தார். நன்கு கண்ணைக் முழித்துப் பார்க்கும் போது தான் புரிந்தது  ராசி தான் இப்படி துடைப்பமும் , கையுமாக நிற்கிறாள் என்பது.

"எதற்கு, இந்த நேரத்தில் பெருக்குகிராய். காலையில் பார்த்துக் கொள்ளலாமே "
என்று விஷ்ணு சொல்ல,

" உங்களுக்கு என்னைப்  பார்த்தால்,கிண்டலாக இருக்கிறதா? இந்த நேரத்தில் பெருக்க நான் என்ன பைத்தியமா? கரப்பான் பூச்சியை அடிக்கிறேன் ." என்று ராசி எரிச்சலாகச் சொன்னாள் .

" அப்படியா " என்று கேட்டு விட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டே விஷ்ணு ," அதான் அடிச்சாச்சு இல்லையா ?  படுத்துத்  தூங்கு  "   என்று அசால்டாக சொல்ல ராசி  கோபத்தையடக்கிக் கொண்டு கட்டிலடியில் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தாள் . எதுவும் வெளியே தலை நீட்டவில்லை.சரி.செத்துத் தொலைந்திருக்கும்  என்று நினைத்துக் கொண்டு லைட்டை அனைத்து விட்டுப் படுத்தாள் . கண்ணயரத் தொடங்கினாள் ராசி. எதற்கு வம்பு என்று தலையோடு கால் வரைப் போர்த்திக் கொண்டிருந்தாள்  ராசி.

" விர் " என்று சத்தம் வந்தது.மெதுவாகப்  போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தாள் ராசி. நைட் லேம்ப்  வெளிச்சத்தில் ஒன்றும் புரியவில்லை  அவளுக்கு. திரும்பவும் உறங்கத் தொடங்கினாள் . திரும்பவும் " விர் "  சத்தம். ஃபேன்  சத்தத்தைத் தாண்டிக் கேட்டது.

இன்றைக்கு நம் தூக்கம் போச்சு  என்று நினை த்துக் கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தாள்  ராசி. இப்பொழுது  எந்த சத்தமும் கேட்கவில்லை ராசிக்கு. லைட்டை அணைக்க  சுவிட்ச்  அருகே கையைக் கொண்டு போகும்போது தான் பார்த்தாள் ராசி, தான் அடித்துக் கொன்றதாக நினைத்த கரப்பான் பூச்சி கரெக்டாக சுவிட்ச் மேல் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தது. இவள்  " ஆ "வென்று அலற  விஷ்ணு அலறியடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார்.

" இப்ப என்ன ஆச்சு " விஷ்ணு கேட்க,

"க ,,,,,க,,,,,,,கரப்பான் .நான் அடித்தது ,சாகவில்லை . இதோ இருக்கு " என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சுவிட்ச் போர்டைக் காட்டினாள்  ராசி.

" அதே கரப்பு  என்று உனக்குத் தெரியுமா? " விஷ்ணு விசாரிக்க, ராசிக்கு வந்ததே கோபம்.

" ரொம்ப முக்கியம் இந்த ஆராய்ச்சி இப்ப " என்று கடுகடுத்தாள்  ராசி.

" நான் அதற்கு சொல்லவில்லை. அதோ பார் அங்கே "என்று சுவற்றில்  மாட்டியிருந்த, இவர்களுடைய  போட்டோவைக் காட்ட , அங்கே இன்னொரு கரப்பான் பூச்சி  அட்டகாசமாய் அமர்ந்திருக்க, அதை அடிக்க வேகமாய் துடைப்பத்தை  எடுக்க ராசி நகர , 'போட்டோ கரப்பான் பூச்சி'  விமானம் போல் சர்ரென்று  " டேக் ஆப் " ஆனது. அதைப் பார்த்த உற்சாகமோ என்னவோ ,அதனுடைய சகாவும்  தன்  இறக்கையை விரித்துக் கொண்டு,  கிளம்பியது.

ராசி அப்படியே தரையோடு தரையாக ( குண்டு ஏதோ விழப் போவது மாதிரி நினைத்துக் கொண்டு ) அமர, கரப்பான்களும்,  அவளை எப்படி "கேரோ " செய்யலாம் என்று மாநாடு போடுவது போல்  தரையில் அவளருகில்  அமர்ந்தது. கிடு கிடு என்று கரப்பான்  கூட்டம்  சேர்ந்தது.  இரண்டு, நான்கு , எட்டு,   என்று  பெருகிக் கொண்டே  போனது.  ராசி  பயந்தது போதும் , பொங்கி எழுவோம்  என்று நினைத்தாளோ  என்னவோ தைரியம் எல்லாம் திரட்டிக் கொண்டு ,  கையில் கிடைக்கும் தினசரிகள் , புக், டிவி ரிமோட், என்று எல்லாம் வைத்து அவள் அடிக்க ஆரம்பிக்கவும், இப்பொழுது எல்லா  கரப்பான்களும்,   பட படவென்று பட்டம்  போல் பறக்க ஆரம்பித்தன. செய்வதறியாது, ராசி, விஷ்ணு இருவரும் திகைத்து, இருவரும் கையில் கிடைத்தைஎல்லாம் வைத்துக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒன்று கூட  இவர்களுடைய அடிக்குக் கிடைக்காமல்  இவர்களுக்குப் போக்குக் காட்டி தப்பித்துக்  கொண்டிருந்தன.

அடுத்து என்ன செய்யலாம் என்று போர் வியூகம் அமைப்பது மாதிரி, தலையில் கை வைத்துக் கொண்டு  குனிந்தபடியே ராசி அமர்ந்திருக்க , விஷ்ணுவோ , நின்ற இடத்திலேயே ,  கையில் அன்றைய தினசரியை நீளமாய் சுருட்டிக் கொண்டு, தட்டாமாலை  சுற்றிக் கொண்டிருந்தார். தீடீரென்று ராசி தலையில்  இடியாய் விழுந்தது ஒரு அடி. விஷ்ணு தான் பேப்பரால் தான் அடித்தார். ராசி கோபத்துடன் சட்டென்று நிமிரவும் , அவள் தலையிலிருந்து செத்த கரப்பான்  ஒன்று நச்சென்று விழுந்தது.   " என்னா அடி! " என்று புலம்பினாள் .


இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல். இருவரும் அறையை விட்டு ஹாலுக்கு வந்து , ஆளுக்கு ஒரு சோபாவில் படுத்துக் கொண்டனர். நீங்கள் இங்கே வந்தால் விட்டு விடுவோமா என்பது போல் இங்கே  சில கரப்பான்கள் காத்திருந்தன. இவர்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இவர்களை நோக்கி நகர , விஷ்ணு ஒரு அற்புதக் காரியம் செய்தார்.  சமையலறைக்கு சென்று கையில் கிடைக்கும், கின்னம், டப்பா, டம்ளர் என்று எல்லாவற்றையும் கொண்டு வந்து ஒவ்வொரு கரப்பானையும் தனித்தனியாக சிறைப் பிடித்தார். கவுத்து ,கவுத்து  வைத்து  விட்டு அப்படியே தூங்கிப்  போனார்.ராசி தான் பாவம் இமையோடு, இமை மூடவில்லை. பாவம் பயத்தில் உறைந்து  விட்டாள் .

பொழுது விடிந்தது. இவர் கவிழ்த்து வைத்திருந்த  ஒவ்வொரு பாத்திரத்தையும் எடுத்து எல்லாவற்றையும் சம்ஹாரம் செய்வது பெரிய காரியமாக  இருந்தது விஷ்ணுவுக்கு.. டிவி ஸ்டான்ட் அடியில், சோபாவிற்குப் ப் பின்னால் என்று ஓடி ,ஓடி ஒளிந்து கொண்ட கரப்பான்களை , தேடி தேடிப் பிடித்து அசந்து தான் போனார்.

ராசியோ இந்த டம்ளர், கிண்ணம், தப்பா எல்லாவறையும், டெட்டால் போட்டு அலம்பி வைத்துக் கொண்டிருந்தாள் . அறையில் இருந்த கரப்பான்களும்  காணமல் போய் விட்டன. எல்லாம் ஒழிந்தது என்று இருவரும் தீர்மானித்து ,
இரவு படுக்கப் போனார்கள்.லைட்டை அனைத்ததும், திரும்பவும்  எல்லா கரப்பான்களும், நைட் டூட்டி க்கு வருவது போல் வந்து சேர்ந்தன. திரும்பவும் எல்லா ஆக்ஷன்க்ளும் ரிபீட் . இரண்டு நாட்களாக ராசிக்கு சரியான உறக்கமில்லை.

தீடீரென்று எங்கிருந்து இவ்வளவு கரப்பான்கள் படையெடுக்கின்றன. இவ்வளவு நாட்களாக இல்லையே ! என்று இருவரும் குழம்பித் தவித்தார்கள்.

மறு நாள் விடிந்ததும், ஹிட் , ரோச்  ஜெல், லக்ஸ்மன் ரேகா  என்று விதம் விதமாக மருந்துகள் வீட்டில் வந்து குவித்தார் விஷ்ணு . அவருக்கும் ராசியைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது.. பயப்படாமல்  தூங்கு என்று அவர் சொன்னாலும், அவள் தூங்குவதாயில்லை.

இந்தக் கரப்பான்களும் , விஷ்ணுவின் மருந்துக்கு எல்லாம் அசையவேயில்லை.  நீ என்னவேனாலும் செய்து கொள் என்று இறக்கையை தூக்கி, மீசையை  ஆட்டிப்  பயமுறுத்திக் கொண்டிருந்தன. மறு நாள் எதேச்சையாய்  , கீழ் வீ ட்டில்  புதிதாக வந்திருப்பவர்களை  மாடிப்படிகளில் கையில் குப்பைக்  கூடையுடன்   பார்த்து சிநேகமாய் சிரித்து வைத்தாள்  ராசி. குப்பைக் கூடையில் அதென்ன  குவியலாய். "அய்யய்யோ  கரப்பான் பூச்சி யல்லவா இது.". இவர்கள் தான் நம் வீட்டிற்கும் கரப்பான பூச்சி சப்ளை செய்பவர்களா? ராசிக்குப் புரிந்தது. இவர்கள் சாமானுடன் சாமானாக வந்திருக்கின்றன.ஆனால் இவ்வளவா இருக்கும்? .....

யோசித்துக் கொண்டே மாடி ஏறினாள்  ராசி. விஷ்ணுவிடமும் சொன்னாள் . யார் சப்ளை செய்தால் என்ன  ? அதை எப்படி விரட்டுவது? அதைச்  சொல் என்றபடி  , " பெஸ்ட் கன்ட்ரோலிற்கு "  போன் செய்யத் தீர்மானித்தார்கள். " எவ்வளவு செலவாகுமோ தெரியவில்லையே "என்று நொந்து கொண்டாள் ராசி.அதோடு எப்போது அவர்கள் வருவது , நம் தொல்லை தீர்வது......அலுப்பாக இருந்தது ராசிக்கு.

தனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் என்று  போன் செய்து, கரப்பான்களை ஒழிக்க யோசனை கேட்டுக் கொண்டிருந்தாள் .

என்னிடம் கேட்டிருந்தால் ...............................................................................
அருமையாய் ஒரு உபாயம் சொல்லியிருப்பேன்.
உங்களுக்கும்  சொல்கிறேன் கேளுங்கள்.

பார்மசியில் " Boric Acid powder " என்று கேளுங்கள். , கேரம் போர்டுக்குப் போடுவோமே அதே  boring powder தான் . அதை ஒரு 10அல்லது 20 கிராம் எடுத்துக் கொண்டு ஒருகைப்பிடியளவு கோதுமை மாவுடன் சப்பாத்தி மாவு போல் பிசைந்து ,எங்கெல்லாம் கரப்பான் பூச்சி வரும் என்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் சின்ன சின்னதாய் சீடை   மாதிரி உருட்டிப்  போட்டு வையுங்கள். பாருங்கள் அந்த மேஜிக்கை. உங்கள் வீட்டிலிருந்து  அத்தனை கரப்புகளும் ஓடி விடும். அப்புறம் பக்கத்து வீட்டைத்தான்  அதகளம் பண்ணிக் கொண்டிருக்கும் கரப்பான்கள்.. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆறு மாதம் ஒரு வருடம் வரை தாங்கும் அதற்குப் பிறகு திரும்பவும் புதிதாக இந்த சீடையை செய்து கொள்ளுங்கள். நல்ல பலன்.ஆனால் வீட்டில் குழந்தைகள்  இருந்தால்  ஜாக்கிரதையாக உபயோகிக்கவும்.

நான் சொன்னால் கேட்பாளா ராசி.
 " உனக்கு ரொம்பத் தெரியும்போ "என்று சலித்துக் கொள்வாள்  செலவு செய்தே கரப்பான்  பூச்சியை  விரட்டட்டும். நமக்கென்ன ......

image courtesy---google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்