Monday 28 October 2019

கம்பனும், Award ம் (கம்பன் என்ன சொல்கிறான்?-8)


Image by Ramachandra Madhwa Mahishi, Illustrated by Balasaheb Pandit Pant Pratinidhi [Public domain]

"கம்பனும் தையல் மெஷினும்" படிக்க இங்கே க்ளிக்கவும்.
'டிங் டாங்'

கதவைத் திறந்தேன். கொரியர் வந்திருந்தது.

கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டு உள்ளே திரும்பப் போனேன்.

"ஹலோ மாமி" எதிர் வீட்டு விஜய் கையசைக்க நானும் ஒரு ஹலோ சொல்லவும்,

"யார் அது " இவர் கேட்டுக் கொண்டே வந்தார்.

"எதிர் வீட்டு விஜய் தான். ஆபீஸ் போறான் போலிருக்கு. எனக்கும் அப்படியே ஒரு ஹலோ...."
சொல்லி விட்டுத் தொடர்ந்தேன்....

" விஜயை ஸ்கூல் படிக்கிற காலத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரொம்பவும் நல்ல பையன். ஒரு கெட்டப் பழக்கம் இருக்கணுமே .... ம்ஹூம்... அவன் குணத்தில் ஒரு தப்பு சொல்ல முடியுமா பாருங்கள். இந்தக் காலத்தில் இவ்வளவு நல்ல பையன்! "

 "ராஜி! முதலில் எனக்கு ஒரு காபி போட்டுக் கொடுத்து விட்டு உன் 'விஜய் அவார்ட்' ஃபங்க்‌ஷனை வைத்துக் கொள். ஒரு ஹலோ சொல்லிட்டுப் போய்ட்டானாம். இவளுக்குத் தாங்க முடியல. அவார்ட் ஃபங்க்‌ஷனுக்கு தேதி குறித்து விட்டாள்." கிண்டலடித்தார் .

அந்த வார இறுதியில் 'Forum Mall' போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தோம். சிக்னலில் கார் நிற்க ...ஒரு வெற்றிலைப் பாக்குக் கடையில்

 "யார் அது? விஜய்யா?" 

அவரும் பார்க்க," ஆமாமாம்... நீஅவார்ட் குடுத்த ரொம்ப நல்ல பையன் தான்"


"ஆனா... உன் அவார்ட்டை அவனுக்குக் குடுக்க முடியுமான்னு தெரியலையே! என்ன செய்கிறான் பார்.."

"என்ன? " கேட்டுக் கொண்டே நான் அவனைப் பார்க்க, அவனோ"புஸ்....புஸ்....புஸ்.." வளையம் வளையமாக புகை விட்டுக் கொண்டிருந்தான்.

அதற்குள் சிக்னல் விழவும், நாங்கள் நகர்ந்தோம்.   
நான் அமைதியாய் உட்கார்ந்திருக்க,இவர் கண்ணை ரோட்டில் வைத்துக் கொண்டே," என்ன மேடம் அமைதியாகி விட்டீர்கள்? விஜய் அவார்ட் ஃபங்க்‌ஷன்  கேன்சல்ட்டா? " நக்கலாக சிரித்தார்.

"ராஜி ! அவன் ஹாஸ்டலில் படித்தவன் ....  இந்த பழக்கமெல்லாம் அவன் ஃபெரண்ட்ஸ் உபயமாகத் தான் இருக்கும் . அவன் இப்பவும் நல்ல பையன் தான் ராஜி.நீ உன் அவார்டைக் குடுக்கலாம்." இவர் என்னை சமாதானப் படுத்த ...

என்னால் ஒத்துக் கொள்ள் முடியவேயில்லை. "Fair Weatherஇல் Good Peopleஆக!"  இருப்பது என்ன பெரிசு...சொல்லுங்கள்...

ராமாயண கைகேயியும் இந்த ரகம் தான் போலிருக்கு.

ராமனுக்கு முடி சூட்டு விழா தீர்மானித்து விட்டு, கைகேயி மாளிகைக்குத் திரும்புகிறான் தசரதன்.

" கைகேயி...கைகேயி " என்று சந்தோஷமாகக் கூப்பிட்டுக் கொண்டே  நுழைகிறான் தசரதன்.

ஆனால் பேரமைதியாக இருக்கிறது மாளிகை.

என்னமோ தப்பாக இருக்கே! நினைத்துக் கொண்டே  கைகேயியைத் தேடுகிறான் தசரதன். 

படுக்கையறையில் அவனுடைய இனிய ராணி கீழே விழுந்துக் கிடக்கிறாள். உடல் நலக் குறைவோ ...இல்லை யாராவது இவளை அவமதித்திருப்பார்களோ...

பதறிப் போய் கூப்பிட்டுப் பர்க்கிறான்... பதில் வரவில்லை. 

அவள் தான் கை தேர்ந்த நடிகையாச்சே! சொல்லியா தர வேண்டும்... கிட்டே வந்து, தட்டி எழுப்புகிறான். அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும், கிளசரின் போட்டாற் போல் கண்ணீர் மாலை மாலையாக வருகிறது.

அவள் சந்தோஷப் படுவாள் என்று நினைத்து," உன் ராமனுக்கு நாளை பட்டாபிஷேகம்" என்று சொல்லவும்...
இன்னும் வேகமாகத் தேம்புகிறாள் கைகேயி...

'எதுக்கு இப்ப அழற...?'   கெஞ்சிப் பார்க்கிறான்.

"மானே! தேனே! கைகேயிக் கண்ணே " கொஞ்சிப் பார்க்கிறான்.

பல கெஞ்சல் , கொஞ்சல்களுக்குப் பிறகுத் தன்னுடைய விருப்பத்தை சொல்கிறாள் கைகேயி...

எப்படி இருந்திருக்கும் தசரதனுக்கு," இவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ? "
"ராமா! ராமா! " என்று இவள் கொஞ்சும் ராமனையா காட்டுக்குப் போக வேண்டும் என்று இவளே  சொல்கிறாள்?

"என்ன ஆச்சு இவளுக்கு ?" 

"கைகேயி ! நீ தானே ராமனுக்கு விற் பயிற்சி, போர் பயிற்சி என்று சொல்லிக் குடுத்தவள்.. என் ராமன்! என் ராமன் ! என்று கொண்டாடியவள். நானும், கொசல்யாவும் ராமனிடம் காட்டியப் பாசத்தைப் போல் பன்மடங்கு காட்டியவள் ஆச்சே நீ. நீயா இப்படி சொல்வது? நம்ப முடியவில்லையே!"

கைகேயிற்கு இன்னும் ராமனை வளர்த்தப் பாசம் மேலோங்கி தான் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் ராமன் காடு போக வேண்டும் என்று தானே அவள் வரம் கேட்க வேண்டும். அப்படி அவளால் கேக்க  முடியல. ராமன் காடு போக வேண்டும் என்று சொல்லாமல்  ,"சீதைக் கேள்வன்(சீதையின் கணவன்) " காடு போக வேண்டும் என்று சொல்கிறாளாம்.

கைகேயி கொஞ்சம் சொல்லேன்," நீ நல்லவளா? கெட்டவளா?" 

கைகேயின் பதில் இதுவாகத்தான் இருக்கணும்," நான் 'Fair Weather-Good People' ரகத்தை சேர்ந்தவள் .

கம்பருக்கும் நம்மைப் போலவே கைகேயி மேல் சரியான கோபம் வந்திருக்கும். 
அவரும் "இந்தா உனக்கு ஒரு அவார்ட் "என்று கைகேயிற்கு  கோபத்துடன்  அவார்ட் குடுக்கிறார் பாருங்கள்... 
"தீயவை யாவினும் சிறந்த தீயாள்" என்று பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அவார்ட் .
'கெட்டவளிலேயே சிறந்த கெட்டவள்' விருது. சிம்பிளா சொல்லனும்னா 'சிறந்த வில்லி' அவார்ட்.
(மிக சரியான அவார்ட் தான் கொடுத்திருக்கிறார்.)

கம்பர் எப்படி சொல்கிறார் பார்ப்போமா...
அயோத்தியா காண்டம் . கைகேயி சூழ்வினைப் படலம். பாடல் எண் 1593

ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது:சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; எனப் புகன்று நின்றாள்;

தீயவை யாவையினும் சிறந்த தீயாள்.

கொடியவை என்று சொல்லப்படும் எல்லாவற்றிலும் மேம்பட்ட கொடியவளான கைகேயி,"நீ கொடுத்த இரு வரங்களுள், ஒரு வரத்தினால் என் மகன் பரதன் நாட்டை ஆளுதல் வேண்டும். மற்றொன்றினால் சீதைக்குக் கணவனாகிய இராமன் (இந்நாட்டை விட்டுச்) சென்று காட்டை ஆளுதல் வேண்டும்" என்று  சொல்லி மனங் கலங்காமல் உறுதியாக நின்றாள்.

இந்த ட்விஸ்டை சற்றும் எதிர்பார்க்காத தசரதன் எப்படி எதிர் கொண்டான்?
அடுத்தப் பதிவில் பார்ப்போம்...


Friday 18 October 2019

கம்பனும், தையல் மெஷினும்.(கம்பன் என்ன சொல்கிறான் -7)Image courtesy: Wikkimedia Commonsகம்பனும் Hidden Agendaவும் படிக்க இங்கே க்ளிக்கவும்.


"விநாச காலே விபரீத புத்தி " என்று சும்மாவா சொன்னார்கள்.  கையடக்கமான தையல் மெஷினை, கையடக்கமான விலையில் ஆன்லைனில் வங்கியாச்சு.

உடனே 'கட கட' வென்று போனது வந்தது என்று எல்லாம் தைத்துக் கொண்டிருந்தேன்.

"இப்ப என் புது புடைவை ஓரம் அடிக்கப் போகிறேன்" சொல்லிக் கொண்டே மெஷினில் புடைவையை ஓரம் மடித்து தைக்க ஆரம்பித்தேன்..

சில வினாடிகள் தான்.... சத்தம் ஒரு மாதிரியாக வர..பார்த்தால் தையல் விழவில்லை. பதறிப் போய் என்னவென்று பார்த்ததில்....பாபினில் நூல் காலி.

மெஷினிலும் பாபினில் நூல் சுத்தும் வசதி வைக்கவில்லை என்பது எனக்குப் புரிய ஒரு மணி நேரம் ஆச்சு.

மெஷினை வாங்கும் முன்பு இந்த பாபின் விஷயத்தை நான் கவனித்திருக்க வேண்டாமோ?  விட்டு விட்டேனே.என் மூளைக்குக்கு எட்டவில்லையே! என்னை நானே திட்டிக் கொண்டேன்...

கைகேயியும், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டாள் என்பதை மந்தரை எடுத்து சொன்ன பிறகு தான் புரிந்திருக்கிறது அவளுக்கு.

எப்படின்னு பாக்கலாம் வாங்க...

ராமனுக்கு முடி சூட்டு விழா என்று மந்தரை சொன்னது கைகேயிடம் எந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.மாறாக சந்தோஷப் படுகிறாள். (அவள் தான் ஒரு Hidden Agenda வைத்திருந்தாளே. அது என்ன? என்று கேட்பவர்கள் இங்கே க்ளிக் செய்து படிக்கவும்.)

மந்தரைக்கு கைகேயின் மகிழ்ச்சி எரிச்சலை ஏற்படுத்தியது. அவளும் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறாள்...

பரதன் உனக்கு மகன் தானே! அவன் நலனில் உனக்கு அக்கறை இல்லையா? கௌசல்யாவிற்கு ஏவல் செய்யப் போகிறாயா? 
மூத்தவனுக்குத் தான் மணி முடி என்றால் , தசரதன் இருக்கும் போதே எதற்கு ராமனுக்கு மணி முடி? - இப்படி அடுக்கடுக்காய் கேள்விகள் தொடுத்து கைகேயியை அசைக்கப் பார்க்கிறாள் மந்தரை.

கைகேயி மசியவில்லையே!

மந்தரைக்குப் புரிந்து விட்டது. இவள் இப்படியெல்லாம் சொன்னால்  மசிய மாட்டாள். என் முதுகைக் காயப்படுத்திய ராமனுக்கு மணி முடியா? எப்படியாவது தடுக்க வேண்டுமே...யோசித்தாள் மந்தரை...

அம்மா வீட்டு sentiment தான் இதற்கு சரியான வழி என்று தீர்மானித்து, " இதைக் கேள் ராணி... இத்தனை நாள் சீதையின் அப்பா ஜனகன் , உன் அப்பா கேகய மன்னனுடன் சண்டைக்குப் போகாமல் இருந்ததுக்கு யார் காரணம். தெரியுமா?"

"உன் ஆம்படையானுக்கு (தசரதனுக்கு) பயந்து தான்."

"ராமன் ராஜாராமன் ஆகி விட்டால்... . ...அவ்ளோதான்......ஜனகனுக்கு நல்லாவே குளிர் விட்டுடும். சொல்லிட்டேன். மாமனார் பின்னாடியே,  ராமனும் வில் அம்புடன் புறப்பட மாட்டான்னு என்ன நிச்சயம் சொல்லு?

ஆக... உன்னாலான உபயத்தை உன் பிறந்த வீட்டுக்கு செய்யப் போறே ! ஓகே! நான் யார் அதைத் தடுக்க.."

இதைக் கேட்டதும், கைகேயி சட்டென்று மந்தரையைப் பார்த்தாள்.

தன் செயலால்  தன் அம்மா வீட்டிற்கு ஒரு துண்பம் என்றால் எந்தப் பெண் தான் அதை செய்வாள்.

இந்த அம்மா வீட்டு செண்டிமெண்ட் 'பசக்' என்று பிடித்துக் கொண்டது .

இது தான் சமயம் என்று இன்னும் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் , " அது மட்டுமா ராணி. இன்னும் கேள்...ராமன் மன்னன் என்றால் லஷ்மணனுக்கு சரிசமமான மரியாதை கிடைக்கும். ஆனால் பரதனுக்கு அது கிடைக்குமா?" என்று கேட்டாள்.

இதை மட்டுமா கேட்டாள்? 

" நாளை ராமனுக்கு குழந்தைகள் பிறந்தால், கௌசிப் பாட்டி...கௌசிப் பாட்டி ன்னு கௌசல்யாவைக் கொண்டாடுமா?உன்னையா? யோசிச்சிக்கோ. சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். இனிமேல் உன் இஷ்டம்." என்று சொல்லியிருப்பாள். 
(கம்பன் சொல்லவில்லை இதை . என் யூகம் இது.)

அதனால் தான் கைகேயி மனம் மாறியிருக்க வேண்டும்.  
" ஆமாம் இல்ல... இதெல்லாம் விட்டு விட்டேனே.என் மூளைக்கு தோணவேயில்லையே! நல்ல வேளை இப்பவாவது மந்தரை சொன்னாளே" என்று மனம் மாறிய கைகேயி

மந்தரையிடமே இதற்குத் தீர்வும் கேட்கிறாள்.
 அதற்கு மந்தரை ," உன்னிடம் தான் தசரதன் குடுத்த இரண்டு வரம் இருக்கே  . அதை இப்ப கேட்காமல் அப்புறம் எப்ப கேட்க போறே ராணி."

"பரதன் நாடாள - ஒரு வரம்..
ராமன் காடு புக  - ரெண்டாம் வரம்.அவ்ளோ தானே.சகல பிரச்சினையும் முடிஞ்சுடும் .இல்லையா ராணி." 

நம்மைப் போலவே கைகேயியும் குழம்பியிருக்க வேண்டும்.

பரதன் நாடாளும் வரம் ஓகே...
ராமன் காடு புகும் வரம்- Why Mantharai? Why?

அங்க தான் மந்தரையின் சூழ்ச்சி தெரிகிறது. ராமன் அயோத்தியிலேயே இருக்க, பரதன் ஆட்சி செய்தால் என்ன ஆகும்?
மக்களின் "Sympathy wave" ராமனுக்குக் கிடைத்து விடுமே.அது பரதனுக்கு ஆபத்தாக முடியலாம்.
ராமன் காட்டிற்குப் போனாலும் 'sympathy wave' இருக்கத் தான் செய்யும். ஆனால் சில நாட்களில் மக்கள் ராமனை  மறந்து விடும் சாத்தியக் கூறுகள் அதிகம். மக்கள் ராமனை சுத்தமாக மறக்க ஓரிரு வருடங்கள் போதாது. நிறைய நாட்கள் தேவைப்படும். கேட்கறதுன்னு ஆச்சு..  பதினான்கு வருடங்கள் ராமனுக்கு வனவாசம் என்றால் சரியாயிருக்கும் என்று நினைத்திருப்பாள் மந்தரை..அதனால் தான் இந்த உபாயம் சொல்கிறாள் என்று நினைக்கிறேன்.
(என்னா வில்லத்தனம்! என்னா வில்லத்தனம்!)

கம்பனின் கவியைப் பார்ப்போமா...
அயோத்யா காண்டம். மந்தரை சூழ்ச்சிப் படலம். பாடல் எண்:1577

இரு வரத்தினில் ஒன்றினால் அரசு கொண்டு இராமன் 
பெரு வனத்திடை ஏழிரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால், செழுநிலம் எல்லாம் 
ஒருவழிப் படும்உன்மகற்கு, உபாயம் ஈது என்றாள் 

அவ்விரண்டு வரங்களுள் ஒரு வரத்தால் அரசாட்சியை உன் மகனதாக ஆக்கிக் கொண்டு, மற்றொன்றினால் ராமன் பெரிய காட்டின் கண் பதினான்கு ஆண்டுகள், அயோத்தியிலிருந்து நீங்கி ஓரிடத்தில் இல்லாமல் சுற்றியலைய செய்வாயாக. அப்படி செய்தால், உன் மகனாகிய பரதனுக்கு வளப்பமான உலகம் முழுதும் அடங்கி நேர்படும். இதுவே உபாயமாகும்.

இதை கைகேயி எப்படி செயல் படுத்தினாள் என்று கம்பன் சொல்வதை அடுத்தப் பதிவில் பார்ப்போமே...

நன்றி.


Thursday 10 October 2019

கம்பனும்,Hidden Agenda வும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-6)

image courtesy : Wikkimedia Commons.

நானும், அவரும்,  பக்கத்து  வீட்டுப் பெண் ஜானுவின் திருமணத்திற்கு சென்றிருந்தோம்.

திருமணம் முடிந்த பின்பு, விருந்துண்ண டைனிங் ஹாலுக்கு சென்றோம்.
அத்தனையும் அருமையோ அருமை. அந்த பதர் பேணி..... ஆஹா....என்ன ருசி....என்ன ருசி....( இன்னும் பதர் பேணி ருசி நாவிலேயே இருக்கு)

நாக்கை சப்புக் கொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து இள நீர் பாயசம் பரிமாற ...
எனக்கு எதை சாப்பிடுவது... எதை விடுவது என்று தெரிய வில்லை. 

என் மனசாட்சி வேறு," ராஜி... சர்க்கரையாய் உள்ளே தள்ளுகிறாய்? ஜாக்கிரதை...நீ சுகர் பேஷண்ட் .நினைவிருக்கிறதா?" எச்சரிக்க...

"மட நெஞ்சே! நீ கொஞ்சம் சும்மாயிருக்கிறாயா? " என்று மனதிற்கு ஒரு அதட்டல் போட்டு விட்டு....

மனம் சொன்னது காதிலேயே விழாதது போல் அவரிடம்,
"இளநீர் பாயசம் என்ன அருமை." சொன்னேன் .

உடனே அவர், பரிமாறிய அன்பரிடம்," இங்கே பாருங்கள்....இந்த மேடமிற்கு இன்னும் கொஞ்சம் பாயசம் விடுங்கள்." என்று சொல்லவும்,..

பரிமாறுபவர் சட்டென்று முதலில் என் கணவர் இலையில் தாராளமாக பாயசத்தை பரிமாறினார். பின்னர் தான், என் இலைக்குப் பரிமாறினார்.

என்னவரிடம்," ஓ...இது தான் பகக்த்து இலைக்குப் பாயசம் என்பதோ! நல்ல Hidden Agenda!" என்று சொன்னேன்.

அப்படித் தான் கைகேயிக்கும் ஒரு hidden agenda இருந்திருக்கிறது.

விளக்கமாக சொல்கிறேனே .....
கைகேய நாட்டின் இளவரசி கைகேயி. அவள் வைத்தது தான் அங்கே சட்டமாயிருந்திருக்கிறது.

தசரதனை மணந்தாள். தசதரதனின் மனதிற்குப் பிடித்த இனிய ராணி. அவள் விருப்பதிற்கு அயோத்தியிலும் மறுப்பில்லை. ஆக...அயோத்தியிலும் அவள் வைத்தது தான் சட்டமாக இருந்தது.

எல்லாம் சரியகத் தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் ராமன் பிறந்ததும், முதல் மைந்தன் என்ற பாசத்தால்  தசரதன் சற்றே தடம் மாற ஆரம்பித்திருப்பான்.

"Power தன் கையிலிருந்து கௌசல்யாவின் கைக்கு மாற ராமன் காரணமாகி விடுவானோ?"
Smartஆன கைகேயி அதை உணர்ந்து விட்டாள்.

ராமன் தானே, தசரதனை கௌசல்யாவின் அந்தப்புரத்திற்கு இழுப்பது? 

ஓகே! இதுக்கு ஒரே வழி தான் இருக்கு. ராமனை நம் மாளிகையிலேயே வளர்ப்போம்.  தன் மகன் பரதன் வேண்டுமானால் கௌசல்யாவிடம் வளரட்டும். என்று தீர்மானித்தாள்.

உடனே செயல் படுத்தியும் விட்டாள். அவள் நினைத்தபடியே தசரதன் கைகேயியின் மாளிகையிலேயே தங்க ஆரம்பித்தான். 

மனதை மகிழ்விக்கும், ராணியும், பிரிய மகனும் இருக்கும் இடத்தில் தானே மன்னனும் இருப்பான். அதுவே நடந்தது.

கைகேயி தான் நினைத்ததை முடித்துக் கொண்டு விட்டாள்.

நாளை ராமனுக்கு முடி சூட்டு விழா !

ஆத்திரத்துடன் மேல் மூச்சு , கீழ் மூச்சு வாங்க... மந்தரை  ஓட்டமும், நடையுமாக கைகேயின் மாளிகைக்கு  வருகிறாள்.

கைகேயி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளாம். உலுக்கி எழுப்பி, கோபத்தில் சொல்கிறாள் மந்தரை ," உங்களுக்கு பெரிய அநீதி இழைக்கப் பட்டிருக்கிறதை அறியாமல் தூங்குகிறீர்களே ராணி ."

"எனக்கு அநீதியா? அதுவும் அயோத்தியிலா? என்னடி உளறுகிறாய்? "

"ஆமாம் ! நாளை ராமனுக்கு முடி சூட்டு விழாவாம். சொல்லிக் கொள்கிறார்கள். 
அப்படியென்றால்  உங்கள் மகன் பரதனுக்கு மன்னர் பட்டம் இல்லையா? ராமன் மன்னன் என்றால் கௌசல்யா தானே ராஜமாதா . அப்பொழுது உங்கள் நிலை என்ன?"


"ஹா...ஹா...ஹா... தாதியான உனக்குத் தெரிவது, ராணியான எனக்குத் தெரியாதா?அதற்குத் தானேடி  ராமனை  நான் வளர்த்தேன். என்னிடம் வளர்ந்த பாசத்தால், ராமன் என் பேச்சை எப்பவுமே மீற மாட்டான். 'Proxy' ஆட்சி செய்து விட்டுப் போகிறேன்.(அப்பவேவா?)ராமன் ஆட்சிப் புரிந்தாலும், கட்டளையிடுவது நானாகத் தானே இருப்பேன்.  என் கட்டளை தானே சாசனம்."

என்று மனதில் நினைத்துக் கொண்டே மந்தரையிடம்,"ராமனுக்கு முடி சூட்டு விழாவா! எத்தனை மகிழ்ச்சியான செய்தி சொல்கிறாய் மந்தரை! இந்தா ரத்தின  மாலை ." என்று கழுத்தில் கிடந்த விலையுர்ந்த ரத்தின மாலையை மந்தரைக்கு அளிக்கிறாளாம் கைகேயி.


(ஆமாம். நான் கம்ப ராமாயணம் முழுவதும் படித்து விட்டேன். இப்படியெல்லாம் எங்கேயும் கம்பர் சொல்லவில்லையே." என்கிறீர்களா?
நான் தான் hidden agenda என்று ஏற்கனவே சொல்லி விட்டேனே.  எல்லாவற்றையுமா  கம்பர் சொல்லிக் கொண்டிருப்பார்? நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். 
இதையும், நானாக சொல்லவில்லை.
கம்பன் சொல்வதை வைத்து,  இப்படி....இப்படி என்று புரிந்து கொண்டேன்.)


இப்ப கம்பனின் கவியைப் பார்ப்போமா?

அயோத்யா காண்டம். மந்திரப் படலம். பாடல் எண் 1547.
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழ,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசுற,
தூயவள் உவகை போய் மிக, சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஒர் மாலை நல்கினாள்


தூய்மையான கைகேயிக்கு, பேரன்பு என்கின்ற கடல் ஆரவாரித்து மேல் கிளம்ப, களங்கமில்லாத முகமாகிய சந்திரன் பிரகாசித்து, மேலும் ஒளியடைய, மகிழ்ச்சி எல்லை கடக்க, மூன்று சுடர்களுக்கும் தலைமைப் பெற்றது போன்றதாகிய ரத்தின மாலையை மந்தரைக்குப் பரிசாக அளித்தாள்.

கைகேயிக்குத்  தான், தன் hidden agenda வேலை செய்யும் என்கிற நம்பிக்கை இருக்கே. அப்புறம் ஏன் அவள் ராமனைக் காட்டுக்கு  அனுப்ப வேண்டும் என்கிற சிந்தனை வருகிறதா?

அதற்கும் கம்பனிடம் பதில் இருக்கு...

அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்...


Thursday 3 October 2019

கம்பனும்,கஃப்தானும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-5)

Image Courtesy: Google.
கம்பனும், வி.ஐ.பி அத்தையும்.(கம்பன் என்ன சொல்கிறான்-4) படிக்க இங்கே க்ளிக்கவும்.

பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயனித்துக் கொண்டிருந்தோம்.சுமார் நாற்பத்தைந்து நிமிடப் பயணம். 

ஒரு முதிய தம்பதி என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்தனர்.

'மைக்'கில்  கஃப்தான் வினய் ( பைலட்) எந்த உயரத்தில் பறக்கிறோம்.... எப்ப போய் சேருவோம்.....இத்யாதி..இத்யாதி... 'கர கர' குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

நானோ"எங்களுக்கு இந்த சங்கதியெல்லாம் தேவையில்லை கஃப்தானே! சென்னையில் பத்திரமாகத் தரையிறக்குங்கள். போதும் ." என்று வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.(மனதில்).

சிறிது நேரத்தில் விமான பணிப் பெண் கொடுத்த ஒரு குட்டியூண்டு சோன்பப்டி, சமோசா, சாப்பிட்டு, காபி என்கிற பேரில் குடுத்ததை உள்ளே தள்ளி விட்டு, எல்லோருமே கண்ணயர ஆரம்பித்திருந்திருப்போம்.

மீண்டும் கஃதான் குரல் எங்களை எழுப்பி விட்டது.
" எல்லோரும் சீட் பெல்டை மாட்டுங்கள். தரையிறங்கப் போகிறோம்."

அதற்குள் சென்னை வந்து விட்டோமா .அப்பாடி...என்று நான் நினைக்க ஆரம்பிக்கவும்...முன் இருக்கை மாமி," சென்னை அதுக்குள்ள வந்துடுத்தா? தூக்கமா வருது " என்று சொல்லிக் கொண்டே பெரிய கொட்டாவி விட்டார்.

"ஆமாம்டி மதுரா ! ராமன் வில்லை ஒடித்த நேரத்தில் சென்னைக்கு  வந்துட்டோம் பாரேன். நீ மிச்ச தூக்கத்தை ஆத்துல போய் தூங்கிக்கலாம்."  என்று மாமா சொல்ல...

எனக்கு கம்பனின் வரிகள் நினைவில் வந்து மோதியது...

விசுவாமித்திரர் ராம லக்ஷ்மணர்களை ஜனகனின் அரண்மனைக்கு அழைத்து வந்து விட்டார். 

பிறகு, விசுவாமித்திரர்,ராம லஷ்மணர்களைப் பற்றி ஜனகனிடம் விரிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ராமனின் கை வண்ணம், கால் வண்ணம் என்று சொல்லிக் கொண்டே போகிறார்.

எனக்கோ பதை பதைக்கிறது. இந்த விசுவாமித்திர முனிவருக்கு விவஸ்தையே இல்லையோ.
"கை வண்ணம் , கால் வண்ணம் எல்லாம் சொல்கின்ற நேரமாய்யா இது. ராமன், ஜனகனின் மாப்பிள்ளையானவுடன், சீதை தன் அப்பாவிடம் ஆத்துக் காரர் பெருமை சொல்லிக் கொள்ள மாட்டாளா என்ன? . ஆத்துக்காரர் பெருமையை 'டமாரம்' அடிக்க பெண்களுக்கு சொல்லித் தரனுமா ?
அதனால் நீங்கள், முதலில் ராமனை வில்லில் நாணேற்ற சொல்லுங்கள் முனிவரே. வேறு யாராவது முந்திக் கொண்டு விடப் போகிறார்கள்" என்று விசுவாமித்திரரிடம் கத்த வேண்டும் போல் தோன்றியது.

கம்பராமாயணம் படிப்போர் பலருக்கும்  இந்த அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.

ராமன் தானாகட்டும். வந்த வேலையைப் பார்ப்போம் என்று இல்லாமல் விசுவாமித்திரர் எப்பொழுது தலை அசைப்பார் என்று காத்து கிடக்கிறானாம்." ராமா! சீதை வேணுமா இல்லையா? எழுந்திரு. இப்படி உட்கார்ந்திருந்தால் ஆகாதப்பா." என்று சொல்லத் தோன்றியது.

ஒரு வழியாக விசுவாமித்திரர் 'பிசினஸ்'க்கு வந்தார்.
ஆமாம்....
 ராமனைப் பார்த்துக் கண்ணசைவாலேயே ," ராமா போ! போய் வில்லை எடுத்து நாணேற்று " ஏன்று சொன்னாராம். 

உடனே ராமன், 'விருட்'டென்று எழுந்து போய் சிவ தனுசை கையில் அனாயாசமாக எடுத்ததைத் தான் எல்லோரும் பார்த்தார்களாம்.

" டமால்....." என்று மிகப் பெரிய சத்தம். எல்லோரும் அலறிப் புடைத்திருப்பார்கள் .

எல்லாம் ராமன் கை வண்ணம் தானாம்.

சிவ தனுசு  முறிந்த ஓசை அது. எல்லோருக்கும் ராமன் வில்லை எடுத்தது தெரியும், பின் முறித்ததைத் தான் கேட்டனராம். நாண் ஏற்றுகிறேன் பேர்வழியென்று  வில்லை முறித்தே விட்டானாம். 
"ராமா...இரு...இரு.. சிவ தனுசை முறித்ததற்கு பரசுராமருடன் ஒரு தனிப் பஞ்சாயத்து காத்திருக்கு."

ஆக.... எல்லோரும் என்ன பார்த்தார்களாம்?

"எடுத்தது கண்டனர்.இற்றது கேட்டனர்."

இதைக் கம்பன் நான்கே வரிகளில் ஒரு வீடியோ பதிவாக்கி விட்டான் பாருங்கள்.

பால காண்டம். கார்முகப் படலம்.படல் எண்:783

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார் 
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால் 
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்.

ண் கொட்டுவதைத் தடுத்து இமையாதபடி, நிகழ்வதைப் பார்த்து நின்ற யாவரும், ராமன் தன் திருவடியால் அவ்வில்லின் நுணியை மிதித்ததையும், அதை வளைத்து மற்ற முனையில் நாணேற்றியதையும், ராமனின் செயலின் வேகத்தால், காண முடியாதவராயினர். அன்றியும் மனத்தாலும் இன்னது தான் நிகழும் என்று கருதவும் இயலாதவராயினர். ஆயினும் ராமன் தன் கையால் அவ்வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். பின் அந்த வில் முறிந்து விழுந்த பேரொலியைக் கேட்டார்கள்.

 பாருங்களேன்..கம்பனின் காவியம் நமக்கு ராமாயணத்தை கண் முன் கொண்டு நிறுத்தி விடுகிறது இல்லையா?

மீண்டும் ஒரு கம்பன் பாடலுடன் சந்திப்போம். உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்