Sunday 10 February 2019

கல்யாணத்திற்குப் பின் வந்த காதல் !













காதலர் தினத்தையொட்டி மகளிர்  பத்திரிகை ஒன்றிற்கு  நான் எழுதியனுப்பியக் கட்டுரை.   பத்திரிகையில் வெளியானதா என்பதுப் பற்றியத்  தகவல்  எதுவும் இல்லை.


 கட்டுரையை  தளத்தில் வெளியிட்டு விடுவோமே என்று தோன்றியதால் இதோ  
               என்னுடைய கல்யாணத்திற்குப் பின் வளர்ந்தக்  காதல்

சற்றே  திரும்பிப் பார்க்கிறேன்.  வருடங்கள் பல பறந்தோடியிருக்கின்றன. அத்தனையும் இனிமையானவை. கணவர்  கரம் பற்றிய போது ,எனக்கு பத்தொன்பது  வயது. கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த போது திருமணம்.  பெண் பார்க்கும் படலம்  எதுவும் வேண்டாம்  என்று கணவர்  மறுத்து விட்டதால் ,அவரை நானும் பார்க்க முடியாமல் போனதில் எனக்கும்  கொஞ்சம் ஏமாற்றமே . போட்டோ  பரிமாற்றமும் இல்லை.  எப்படியிருப்பாரோ  என்கிறத்  "த்ரில்" மண  நாள் வரை இருந்தது. மணமேடையில்  ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் இருவர் கண்களும்  மோதிக் கொண்டன. உடனே காதல் எல்லாம்  தோன்றவில்லை. நாங்களென்ன ஸ்ரீராமனும், சீதா தேவியுமா என்ன? இல்லையே! ஆனால் திரும்பப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் துளைத்தெடுத்தது. அவருடன் தனிமையில் இருக்க மனம் விரும்பியது.
இதற்குப் பெயர் காதலா? தெரியவில்லை அப்பொழுது.

 திருமணத்தால் பாதியில் விட்ட ,என் படிப்பைத் தொடர  அவர்  பெரிய கிரியா ஊக்கி . இரு குழந்தைகளுடன் நானும் படித்து  கொண்டிருப்பேன். எனக்கும்  சேர்த்து மூன்று பேருக்கும் அவர் தான் ஃபீஸ் கட்ட வேண்டும். பெரிய பொருளாதாரமெல்லாம் இல்லை அப்போது.  நாங்கள் நடுத்தர  வர்க்கம் தான் .ஒரு நாள் கூட  இதற்காக ஒரு சின்ன முக சுளிப்பு........ம்ஹும் .....கிடையவே கிடையாது.
இது அவருக்கு  என் மேலிருக்கும் பிரியத்தினால்  தானே!


வீடு என்றாலே வாசற்படியில்லாமல் இருக்குமா? எனக்கும், என் மாமியாருக்கும் ,ஏற்படும்  மாறுபட்ட கருத்துகளை   அவர் அழகாய்  களையும் விதமே அலாதி தான். சில உறவுகள் என்னை வார்த்தைகளால் காயப்படுத்திய  போது  அந்த வார்த்தகளை மட்டும் ,ஒதுக்கித் தள்ளுவதற்கு , சொல்லிக் கொடுத்து  ,எங்களிடையே  கருத்து  வேற்றுமை வராமல் பார்த்துக் கொண்டு , என் மேல் அன்பை வாரி வழங்கிய வள்ளல் அவர்.
.

வீட்டின் கடை மகனாய் இருந்தாலும், தலை மகனாய் பல பொறுப்புகளை அவர்  ஏற்க வேண்டியிருந்தது .அது எனக்கு கொஞ்சம் உறுத்தலாயிருந்தது. ஆனால்  கடமையிலிருந்து தவறக் கூடாது என்பதை அழகாய்  சொல்லியது  மட்டுமல்லாமல், இன்று நான் என் வயதான தாயைப் பார்த்துக் கொள்ள  அவர் கொடுக்கும்  ஆதரவுக்கரம்  என்னை நெகிழ வைக்கிறது.


எங்களுக்குள்  சண்டையே வராதா? என்று படிப்பவர்களுக்குத் தோன்றும்.
ஊறுகாய்  இல்லாமல் தயிர் சாதம் சுவைக்குமா? ஊடலும் உண்டு.ஆனால்  ஊடல்  எங்கள் வாழ்க்கையில் அன்பைப் பெருக்கத தான் உதவியது என்று சொல்ல வேண்டும்.


அவர் உடல் நிலை பாதிக்கப்பட்ட போது,என்னை சுற்றி என் உறவினர் கூட்டம், பெண், பிள்ளை, மாப்பிள்ளை, மருமகள், பேரன் பேத்தி என்று எல்லோரும் சூழ்ந்திருந்த போதும். நான் அனாதையாக்கப் பட்டது போல் உணர்ந்தேன். .அவரில்லாத உலகத்தை நினைத்துப் பார்த்த போது என் காலடியில் பூமி நழுவுவதை  போலிருந்தது.   கடவுளின்  கிருபையினால்  அவர்  விரைவில் நலம் பெற்றார்.

ஆனால்  அவர் உடல்நலக் குறைவு ஒரு பேருண்மையை எங்களுக்கு உணர்த்தியது. எங்களிடையே  நிலவிய   அன்பின்  ஆழம்    நாங்கள்  நினைத்திருந்ததை விடவும்  மிக மிக அதிகம் .ஏராளமோ ஏராளம்.

நாங்கள் ஒருவருக்கொருவர் " ஐ லவ் யு  " சொன்னதில்லை. காதலர் தினக் கொண்டாட்டங்கள் இல்லை. பரிசுப் பொருட்கள்  பரிமாறிக்கொண்டதில்லை..திருமண நாள் கூட வீட்டில் பாயசம்,கோவில் அர்ச்சனை என்று ஓசைப் படாமல் முடிந்து விடும்.ஆனால் என்ன ஆச்சர்யம். எங்களுக்கேத் தெரியாமல்  எங்களிடையே, நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக ,காதல் வளர்ந்திருக்கிறதே!

இத்தனை அருமையான  கணவரைக் கொடுத்த ஆணடவனிடம் ,நான் வேண்டிக் கொள்வதெல்லாம்  ,இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்தாலும்  அத்தனைப பிறவியிலும் , இவரே என் கணவராக வரவேண்டும்  என்பது தான்.
வேறொன்றும் வேண்டேன்!

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்