Tuesday 21 July 2020

கம்பனும், 'சென்னைக்கு மிக மிக அருகே'யும்.(கம்பன் என்ன சொல்கிறான் - 23)

https://commons.wikimedia.org/wiki/File:Waking_up_Kumbhakarna.jpg

" அட.. கீதா  என்னது? அதுக்குள்ள ஆபீஸ் வந்துட்டே?" ஆச்சர்யத்துடன் கேட்டது பவானி. .

"ப்ச்......" இது கீதா.

" என்ன இந்த இடமும் முடியலையா?"

" ஆமாம் .போ..என்னத்த சொல்ல...அதான் ஒரு நாள் லீவை கேன்சல் செய்துட்டு வந்துட்டேன்" நொந்து கொண்டாள் கீதா.

உனக்குப் பிடித்து, கணவர் மாமியார் எல்லோருக்கும் பிடிக்கப் போய் தானே ஆரம்பித்தாய். அப்புறம் என்ன?

"விலை அதிகமோ?"

"விலையை விடு... இடம் எங்கே இருக்குத் தெரியுமா?"

பவானி கீதாவையே பார்க்க கீதா தொடர்ந்தாள்...

"இடம் பார்க்க...வீட்டு புரோக்கர்,  எங்களைக் காரில் தான் அழைத்துக் கொண்டு போனார். "

'ஆனால் கார் போச்சு.....போச்சு....போய் கொண்டேயிருந்தது. சென்னைக்கு மிக அருகில் என்பதை விடவும் , திண்டிவனத்துக்கு அருகில் என்று சொன்னால் சரியாக இருந்திருக்கும் பவானி."

என் மாமியார் ப்ரோக்கரிடம் " என்னப்பா ? பக்கத்துல தான்னு சொன்னே?" எங்கேயோ போயிட்டே  இருக்கோமே." கேட்க...

"அம்மா ... தோ வந்துட்டோம். " சொல்லிக் கொண்டே டிரைவரிடம்.," டிரைவர்... லெப்ட்டில் போ" சொன்னாரா..

" ஆஹா... வந்துட்டோம் போலிருக்கு" நான் நினைத்தது எவ்வளவு பெரிய தப்பு என்று எனக்குப் புரிய சிறிது நேரமானது.

அதற்குப் பிறகு," லெப்ட் எடு...அதோ..அந்த வேப்ப மரம் தெரியுது இல்லையா...அங்க ரைட் எடு."

இப்படியே லெப்ட்..ரைட்... குட்டி சந்து என்று போறோம் போறோம்.....போய்க் கொண்டே இருக்கோம்."

"நிலத்தைப் பார்த்தீர்களா இல்லையா? "  பவானி கேட்க...

பார்த்தோம்.. பார்த்தோம்.... கும்பகர்ணனை எழுப்ப இராவணனை எழுப்பக் குதிரைகளை இலக்கில்லாமல் அவன் மார்பில் ஓட விட்டானாமே . அது போல் தான் நாங்களும் காரில் இலக்கில்லாமல் போய் ஒருவழியாய் பார்த்த்தோம்.

அது என்ன கும்பகர்ணன், குதிரை என்று என்ன தான் சொல்ல வருகிறாய்?  என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார்...

போர் புரிய, ஆறு மாதமாய் தூங்கும் கும்பகர்ணனை எழுப்ப இராவணன்  ஆட் படைகளை அனுப்புகிறானாம்.

தாரைத் தப்பட்டை எல்லாம் பெருத்த ஒலி செய்தும், அவன் உறக்கம் கலையவில்லையாம். அப்படியொரு தூக்கம் தூங்குகிறானாம் கும்பகர்ணன்.

என்ன செய்யலாம்? என்று ராவணன் யோசித்து...

குதிரைப் படை ஒன்றை அனுப்பி ...அவன் கும்பகர்ணன் மார்பின் மேல் ஓட விடுகிறானாம் ராவணன்.

குதிரைப் படை அவன் மார்பின் மேல் நாலு கால் பாய்ச்சலில் ஓட வேண்டுமென்றால் ...எத்தனைப் பெரிய உருவமாய் கும்பகர்ணன் இருந்திருக்க வேண்டும். 

அதுவும் எத்தனை குதிரைகள் என்கிறீர்கள்? ஆயிரம் குதிரைகளை அவன் மேல் ஓட விட்டானாம்.

கம்பன் கற்பனைக்கு அளவேயில்லையோ?  அப்படி ஆயிரம் குதிரைகளை  ஓட  விட்டும், கும்பகர்ணன் எழுந்திருக்கவில்லையாம்.

அப்பவும் எழுந்திருக்கலையா? குதிரை ஓடினால் வலிக்காதோ?

"வலிக்கவில்லையாம். அவனுக்கு உடம்பைப் பிடித்து விட்டாற் போல் இருந்ததாம்..அதனால் அவன் உறக்கம் அதிகமாயிற்றாம்." கம்பனின் கற்பனையை யாரால் மிஞ்ச் முடியும்.?..சொல்லுங்கள்.

என்னது குதிரை அவன் மேல் ஓடுவது அவனுக்கு உணக்கையாக இருக்கிறதோ ?

எனக்கும் அதேதான் சந்தேகம். ஆனால் கம்பர் அடித்து சொல்கிறாரே.. அவருடைய பாடலை ரசிப்போமா.....

கும்பகருணன் வதைப் படலம் 7324


கட்டுறு கவன மா ஓர் ஆயிரம் கடிதின் வந்து,
மட்டு அற உறங்குவான்தன் மார்பிடை, மாலை மான
விட்டு உற நடத்தி, ஓட்டி, விரைவு உள சாரி வந்தார்;
தட்டுறு குறங்கு போலத் தடந் துயில் கொள்வதானான்.

இராவணன் ஆணைப் பெற்ற வீரர்கள் அளவு மீறி அதிகமாக உறங்குபவனான கும்பகருணனது மார்பில், ஓராயிரம் கடிவாளம் பூட்டப் பெற்ற விரைவாகச் செல்லும் குதிரைகளுடன் விரைந்து வந்து, அவற்றை மார்பில் நடத்தி ஓட்டி, அவனுடைய மார்புக்கு மாலை போல விரைவாக சுற்றி வந்தார்கள். அவ்வாறு அவர்கள் செய்த செயலால் துடையைத் தட்டுவது போல அவன் பெருந்துயில் கொள்ளலானான்.

கம்பன் கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது இல்லையா? 
வியப்பில் இருந்து வெளி வருவதற்குள் , கம்பன் கடலில் இருந்து வேறொரு முத்துடன் உங்களை சந்திக்கிறேன். 

நன்றி.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்