Monday 31 December 2012
Saturday 29 December 2012
உபவாசமா? (உப்புமா)வாசமா?
அன்று என் தோழியை அவள் கணவருடன் கோவிலில் சந்தித்தேன்.
அநியாயத்திற்கு குண்டாகியிருந்தாள்.
எப்படியிருக்கிறாய் என்றதற்கு குரலில் சுரத்தேயில்லாமல்
"எப்படியிருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் பார் ".
அவளைப் பார்த்து நான்கைந்து வருடங்கள் ஆகியிருக்கும்.
அப்பொழுதெல்லாம் ரொம்பவும் ஸ்லிம் இல்லை . ஆனால் இத்தனைப் பெருத்துமில்லை
அளவான , அழகான, அமைதியான , வசதியான குடும்பம்.
பெண்ணும் , பிள்ளையும் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.
பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்வி.
அந்த கவலையில் தான் இப்படியாகி விட்டாளோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன்.
கவலையில் இளைக்கத் தானே செய்வார்கள்.என்று நான் திகைக்கும் போதே அவள் கணவர் ஆரம்பித்தார்,.
உங்கள் தோழியிடம் நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்களேன்.
மாதத்தில் பாதிநாட்கள் உபவாசத்திலேயே கழிக்கிறாள்.என்ன சொன்னாலும் கேட்பதேயில்லை.
உபவாசம் இருந்தால் இளைக்கத் தானே செய்வார்கள்.என்று ஒன்றும் புரியாமல் விழிக்க
அவர் தொடர்ந்தார்.
ஒவ்வொரு மாதமும் ,கிருத்திகை, பௌர்ணமி, சஷ்டி, என்று ஒன்றையும் விடுவதில்லை.
நான் அசந்து போய் ஆ............என்றதும், அவர் தொடர்ந்தார்,
'நான் இன்னும் முடிக்கவில்லை.
வாரா வாரம் செவ்வாய் வெள்ளியும் கூட உபவாச நாட்களே."
எப்படி இவ்வளவு நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடிகிறது? என்று நான் வியந்தேன்.
அதை விட பெரிய வியப்பு இத்தனை உபவாச்த்திற்கு பிறகும் அவள் உடம்பு சைஸ் எப்படி இப்படியானது என்று வினவினேன்.
அதற்கு அவள் மௌனம் சாதிக்க அவள் கணவர் உபவாசம் என்றால் அவள் என்ன ' அன்னா ஹஸாரே 'போலவா இருக்கிறாள்?
உப வாசத்தை உப்புமாவாசமாக அல்லவா இருக்கிறாள்..
அரிசியை பின்னப் படுத்தி விட்டால் விரதத்திற்கு தோஷமில்லை என்று கூறி நிறைய எண்ணெயை ஊற்றி அரிசி உப்புமா சாப்பிடுகிறாள்.
கூடவே சர்க்கரைப் போட்டு பழ ஜூஸ் வேறு நிறைய குடிக்கிறாள்.
பழமாக சாப்பிட்டால் நல்லது.ஆனால் இப்படி சர்க்கரை ஜூஸாகக் குடித்தால்............
இது போதாது என்று உபவாசத்தன்று பாயசம், கேசரி என்று ஏதாவது
இனிப்பு வகை கண்டிப்பாக உண்டு நைவேத்யத்திற்கு மட்டுமல்ல
இவளுக்கும் தான்.
அதனால் இவள் பச்சை காய்கறி சாப்பிடுவது வெகுவாக குறைந்து விட்டது.
அதனுடைய பலன் இவள் உடல்நிலை பாதிக்கப் பட்டதுடன் எங்களிடமும் ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் எரிந்து விழுகிறாள்.
இப்பொழுது இவள் டயாபெடிக் என்று வருந்தினார்.
இதையெல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த தோழியோ
எனக்கு ஒன்றுமில்லை இவர் இப்படித்தான் என்று சர்வ சாதரணமாக
சொன்னாள்
அவளுக்கு புரிய வைக்க முயற்சித்தேன்.
உபவாசம் அளவோடு இருந்தால் உடலுக்கும் மனதிற்கும் அளவில்லா நற்பலன்களைக் கொடுக்கும் .
அளவை மிஞ்சினால் அமிர்தமே நஞ்சு தான்.
உபவாசம் மட்டும் விதிவிலக்கா என்ன?
நான் கூறியதற்கெல்லாம் மண்டையை மண்டையை ஆட்டி விட்டுச் சென்றாள்.
ஆனால் நான் சொன்னதை சீரியசாக எடுத்துக் கொண்டாற் போல் தெரியவில்லை.
நானும் ஒரு ஐந்து ஆறு வருடத்திற்கு முன்பு வரை சஷ்டி விரதம் இருந்தவள் தான்.
தலை சுற்றல் என்று டாக்டரிடம் சென்ற போது ,
'NO FEASTING , NO FASTING' என்று கூறி விட்டார்.
அதையும் அவளிடம் கூறி விட்டேன்.
டாக்டர் சொன்னதை அவள் சரியாக புரிந்து கொள்ள வேண்டுமே!
பி.கு. பட உதவி கூகுள்
Subscribe to:
Posts (Atom)