google image |
சென்ற வாரத்தில் எனக்கு பல்லில் வலியான வலி. கைவைத்தியமாக கிராம்புத் தைலத்தை உபயோகித்ததில் சறறே நிவாரணம் தெரிந்தது. வலியை மறக்க டிவி பார்க்கலாம் என்று உட்கார்ந்தால்......
டிவியில் எனக்காகவே காத்திருந்தாற்போல், திருமதி காஜல் அகர்வால் வந்து "உங்கள் பற்பசையில் உப்பு இருக்கிறதா?" என்று கேட்டார்.
"என் பேஸ்ட்டில் உப்பு இல்லையோ. அது தான் வலியோ" என்கிற சந்தேகம் வந்தது.
ஒரு சில நாட்களுக்கு முன்பாக," உங்கள் பற்பசையில் கரி இருக்கிறதா என்று வேறு ஒரு நடிகை கேட்டதாக நினைவு.
மார்கெட் உத்தி எப்படியெல்லாம் இருக்கிறது பாருங்கள்.
நான் பள்ளியில் படிக்கும் போது பற்பசையை வீட்டிற்கு, சில விருந்தினர் ,வரும் போது அவர்கள் கையில் மட்டுமே பார்த்ததாக நினைவு.
"ஏன் நீங்கள் எல்லோரும் பல் விளக்கியதாக சரித்திரமே இல்லையா?"என்று கேட்காதீர்கள். நாங்கள் பல் விளக்கியது பற்பொடியில் அதுவும் 'ஹோம்மேட்' பற்பொடி .
"பற்பொடியை வீட்டில் தயாரிக்க முடியும் "என்கிற செய்தி இளம் தலைமுறையினருக்கு பெருத்த ஆச்சர்யமளிக்கும் விஷயம் என்பது உண்மை.
வீட்டுத் தயாரிப்பு மட்டுமே நாங்கள் உபயோகித்தது. எப்படி தயாரித்தோம் என்று சொல்கிறேன்.
பலருக்குத் தெரிந்த விஷயமாகத் தானிருக்கும்.
அருகிலிருக்கும் செட்டியார் கடையில் தான் மளிகை சாமான்கள் வாங்குவோம். (ஸூப்பர் மார்கெட், பிக் பாஸ்கெட் இல்லாத காலம் அது.) அங்கே 'உமி'யும் கிடைக்கும்.
'உமி' என்றால் என்ன ? என்று கேட்பவர்களுக்கு...... நெல்லில் இருந்து
அரிசியை எடுத்த பின்பு , மிச்சம் இருப்பது தான் உமி. அது எட்டணாவிற்கு (ஐம்பது பைசா) இரண்டு அல்லது மூன்று படி கிடைக்கும்.
உமி இரண்டு படி வாங்கி வந்து, ஒரு பெரிய இரும்பு வாணலியில் கொட்டி , நெருப்பாய் கணன்று கொண்டிருக்கும் கரித்துண்டு , ஒன்றிரண்டை உமியின் நடுவில் வைத்து வாணலியைக் காலையில் கொல்லையில் வைத்து விட்டு மறந்து விடலாம். கொஞ்சம் கொஞ்சமாக உமி புகைந்து , கருகும்.
மாலையில் பார்க்கும் போது , எல்லா உமியும் கருகி விட்டிருக்கும். சூடு ஆறின பிறகு அதில் தேவையான அளவு உப்பு, கொஞ்சம் கிராம்பு, எல்லாவற்றையும் கலந்து கல்லுரலில் போட்டு, உலக்கையால் இடித்து பொடியாக்கி ,வாசனைக்கு சிறிது பச்சை கற்பூரம் சேர்த்து, ஒரு பெரிய டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்வோம்.
இது தான் 'ஹோம்மேட்' பற்பொடி. அப்போதெல்லாம் பல வீடுகளில் 'ஹோம் மேட், பற்பொடி தான் இருக்கும் .
எல்லாமாக சேர்ந்து,செலவு ஐந்து ருபாய்க்குள் அடங்கும்.
எட்டு பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்திற்கு , இது இரண்டு, மூன்று மாதத்திற்கு மேல் தாராளமாய் வரும்.
பல்லாண்டு ஆரோக்கியமாய் இருந்தன பற்கள்.
பல்லிற்கும்,பர்சிற்கும் நண்பனானது 'ஹோம்மேட்' பற்பொடி.
பல், பர்ஸ், பற்பொடி மூவரும் நண்பர்களாய் இருந்தால் பொறுக்குமா? பலரின் கண்ணை உறுத்தியது. பிரிவினை செயல்பாடுகள் ஆரம்பித்தன.
ஆகவே, மெதுவாக 'பேஸ்ட்' பக்கம் நம்மை இழுக்கும் மார்க்கெட் உத்தி நடந்தது.
பல் விளக்குவதற்கு உப்பும், கறியும்,சாம்பலுமா? அவை எல்லாம் பற்களைக் கெடுத்து விடும் என்று பிரெயின் வாஷ் செய்து, நம் கையில் "பேஸ்ட்டைத் திணித்தனர் பெரும் தொழிலதிபர்கள்.
நம் உடல் நலத்தில் தான் அவர்களுக்கு எவ்வளவு அக்கறை!
பேஸ்ட்டின் விலை நம் பர்சைப் பதம் பார்க்க ஆரம்பித்தது.
வருடங்கள் உருண்டோடி விட்டன. மளிகை சாமான் லிஸ்ட்டில் டூத்பேஸ்ட் இன்றியமையாத இடத்தை பிடிக்க ஆரம்பித்து விட்டன.
நாம் நம் பழைய பழக்க வழக்கங்களிளிருந்து வெகு தூரம் வந்த பின்பு, இப்பொழுது பிரபல நடிகைகள் கையில் ஒரு மைக்கைக் கொடுத்து
" உங்கள் பேஸ்ட்டில், உப்பு இருக்கிறதா? கரி இருக்கிறதா? . இந்தப் பேஸ்ட்டை உபயோகியுங்கள். அதில் கூடுதலாக வேம்பும் இருக்கிறது ." என்று விளம்பரப் படுத்துகிறார்கள். ..
எதையெல்லாம் பல்லிற்குக் கேடு என்று அன்று அவர்கள் சொன்னார்களோ, அதே உமி சாம்பல், உப்பு, வேம்பு, கூடவே உடல் நலத்திற்குக் கேடு செய்யும் ரசாயணத்தை சேர்த்து, பிளாஸ்டிக் ட்யூபில் அடைத்து டூத்பேஸ்ட் என்று விற்று, நம் பர்சில் இருக்கும் பணத்தைப் பிதுக்கி எடுத்து விடுகிறார்கள்.
அட... இதைத்தான் அப்பவே செய்தோமே பெரிய பொருட் செலவில்லாமல்! என்று சொன்னால் பழைய பஞ்சாங்கம் என்கிற பெயர் தான் மிஞ்சும்.