Image Courtesy : Raja Ravi Press (Public Domain) |
கம்பனும், ஆன்லைனும் படிக்க இங்கே க்ளிக்கவும்.
சூடான நெய்யில் ஜீரகம் போட்டு ரசத்திற்கு தாளித்து விட்டு கேசை ஆஃப் செய்யவும்,
"காச் ......மூச்" என்று சத்தம் காதில் விழவும் சரியாயிருந்தது.
'யாரது சண்டை போடுவது?' .... என்று ஹாலுக்குள் எட்டிப் பார்த்தேன்.
என்னவரோ டிவியை விட்டு கண்ணையே எடுக்கவில்லை.
அட...சண்டை மண்டை உடைந்து கொண்டிருந்தது டிவியில் தான்.
சாதரணமாகவே அரசியல் எனக்குப் புரிபடாத ஒன்று. அதிலும் இந்த டிவி சண்டைகளில் எல்லாம் ஆர்வமே இருப்பதில்லை எனக்கு.
இவருக்கு மட்டும் எப்படி இந்த சண்டை புரிகிறது? இல்லை வெட்டி சீன் போடுகிறாரா? ...பார்த்து விடவோம் என்று நானும் சண்டையை கவனிக்க ஆரம்பித்தேன்.
"கருத்து சுதந்திரம் இல்லை.... கருத்து சுதந்திரம் இல்லை.... "என்று விடாமல் ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். வேறு யார் பேசுவதும் காதில் விழ விடாமல் மீண்டும் மீண்டும் " கருத்து சுதந்திரம் போயே போச்சு. நாட்டில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. யாருக்கும் எந்த சுதந்திரமும் கிடையாது ." என்று உச்ச ஸ்தாயில் கத்திக் கொண்டிருந்தார்.
எனக்கு சுத்தமாக புரியவேயில்லை. "மஹானுபவரே!இப்படி உச்சஸ்தாயில், கருத்து சுதந்திரம் இல்லை என்று கத்தும் அளவுக்கு உங்களுக்கு நாடு சுதந்திரம் கொடுத்திருக்கே.வேறென்ன கருத்து சுதந்திரம் போச்சு என்கிறீர்கள்? இந்தியாவுக்கே கேட்கிறார் போல கத்துகிறார். பிறகு என்ன சுதந்திரம் இல்லை என்கிறார்? ஒன்றுமே புரியவில்லை
சரி ..போ... அரசியலாவது ஒன்றாவது....என்று தோன்றியது எனக்கு. என்னவோ கத்திக் கொண்டு போகட்டும். நமக்கும் அரசியலுக்கும் எட்டாத தூரம் என்று விட்டு விட்டேன்.
ஆனால் இந்த சமயத்தில் கம்பனை நினைக்காமல் இருக்க முடியவில்லை....
விசுவாமித்திரர் ராம லக்ஷமணர்களை அழைத்துக் கொண்டு காட்டு வழியே நடந்து செல்கிறார்.
நாமும் காட்டு வழியே அவர்களைப் பின் தொடர்ந்த்து செல்வோம் வாங்க...
(கற்பனையிலாவது பரந்தாமனை காண்போம் வாங்க..)
சுவாரஸ்யமான உரையாடல் ...
"தசரத குமாரர்களே ! இங்கு தான் அருகே என் பர்ண சாலை இருக்கிறது. அங்கு தான் நாங்கள் யாகம் செய்கிறோம். அந்த யாகத்திற்கு இடையூறு வராமல் காக்கவே உங்களை அழைத்து வந்தேன்." விசுவாமித்திரர் சொல்ல..
பணிவுடன் ராம லக்ஷ்மணர்கள் " அப்படியே செய்கிறோம்." என்று சொல்ல
விசுவமித்திரர் மேலே தொடர்ந்தார்...
" அரக்கர்கள் மாமிசங்களையும், ரத்தத்தையும் மழையெனப் பொழிந்து எங்கள் யாகத்தை கெடுக்கிறார்கள்.அதிலும் அந்தத் தாடகை இருக்கிறாளே....அப்பப்பா....என்ன கொடூரம்! ....என்ன கொடூரம்! பார்ப்பதற்கு பெரிய எரிமலை ஒன்று நடந்து வருவது போலத் தோன்றும்..அவளைப் பார்த்தால் எமனே நடுங்கி ஒளிந்து கொள்வான் என்றால் பார்த்துக் கொள் ...ராமா"
"அவள் செய்யும் அட்டகாசம் தாங்கவே முடியாது..அவளைத் தான் முதலில் நீ அழிக்க வேண்டும் ராமா." என்று சொல்லி முடிக்கவும்
ராமனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. "போரில் பெண்ணைக் கொல்வது தர்மம் இல்லையே.அதிலும் நான் செய்யப் போகும் கன்னிப் போர் இது... ஒரு பெண்ணைக் கொன்று தர்மத்தை மீறுவதா?
Killing a woman is a crime in war protocols.That too in my maiden ordeal.... OMG!
ஆனால் ஆசானையும் அவமதிக்க முடியாது.என்ன செய்வது....மனம் பிசைகிறது ராமனுக்கு.
(பெண்ணென்றால் பேயும் இரங்கும். கருணையின் வடிவமான பரந்தாமனுக்கு சொல்லவும் வேண்டுமா.?)
முனிவரிடம் பெண் கொலைப் பாவம் இல்லையா? கேட்டுப் பார்ப்போமா? நினைத்துக் கொண்டான். உடனே மனதை மாற்றிக் கொண்டு விட்டான் ராமன்.
பிறகு, வேறு வினையே வேண்டாம். .அடுத்த கணமே ," எனக்குத் தெரியாத தர்மம், பாவ புண்ணியம் எல்லாம் சிறுவர்களாகிய, உங்களுக்குத் தெரிந்து விட்டதோ என்று முகம் 'ஜிவுஜிவுக்கக்' கோபப் படுவாரே...அதோடு விடுவாரா?. இந்தாப் பிடி... 'சாபம்' என்று சபித்து விடுவாரே" நினைத்துக் கொண்டு அமைதி காத்தான் ராமன்.
ராமனுடைய பேரமைதியை வைத்தே புரிந்து கொண்டு விட்டார் விசுவாமித்திரர். பரந்தாமனுக்கே பாடம் எடுக்கும் ஆசான் ஆயிற்றே! அவருக்குத் தெரியாதா?
ராமனைப் பார்த்து," ராமா அவளை நீ பெண்ணென்று நினைக்கிறாய். ஆனால் அவள் ஒரு அரக்கி ... என்று அவளுடைய History, Geography எல்லாம் சொல்கிறார்."
மேலும் தொடர்கிறார்...." அவள் இந்தக் கானகத்தில் ஒருத்தரை விடவில்லை. தரையெல்லாம் பார். மண் சிவப்பாக இருப்பது இவள் உபயம் தான். எல்லோரையும், அடித்து சாப்பிடுவதே அவள் பழக்கம்." என்று சொல்லி விட்டு ராமனைப் பார்த்தார் முனிவர்.
இவ்வளவு சொல்லியும், ராமன் வில்லில் நாணேற்றாமல் அமைதியாய் இருந்தான்.
புரிந்து விட்டது விசுவாமித்திரற்கு,"ராமா நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்று புரிந்து விட்டது ராமா. ஒருத்தரை விடாமல் கொல்கிறாள் என்று சொல்வதற்கு என்னையும், மற்ற ரிஷிகளையும் உயிரோடு விட்டு தானே வைத்திருக்கிறாள். அப்படி முனிவர் சொல்வது போல் ஒன்றும் கொடூரமானவள் இல்லை போலிருக்கிறது." என்று தானே நினைக்கிறாய்.
ராமா ! நானும் மற்ற ரிஷிகளும் அவளுக்கு "Noodles" போல் தெரிகிறோம் என்று நினைக்கிறேன். அவளுடைய பசிக்கு நாங்கள் அவள் கடை வாய் பற்களுக்குக் கூட காண மாட்டோம். அதனால் தான் எங்களை விட்டு வைத்திருக்கிறாள். நானே இன்னும் சற்று புஷ்டியாக இருந்திருந்தால் இன்னேரம் என்னையும் கொன்று முடித்திருப்பாள். அவளை பெண் என்றே எடுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தயங்காமல் வில்லை எடு.. நாணேற்று...தாடகையை வதம் செய்! என்று விசுவாமித்திரர் முடித்தார்.
கம்பர் இதை எப்படி நான்கே வரிகளில் சொல்கிறார் என்று பார்ப்போமா?...
‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக் |
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை : |
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும் |
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! |
தீமை என்று இருப்பவையாகிய எல்லாச் செயல்களையும் செய்துமுடித்து, எம்மைப் போன்ற முனிவர்களைச் (சாரமில்லாத) சக்கை என்று உண்ணாது விட்டாள். அவள் செய்த தீய செயல்களில் இதுவே குறை. இத்தகையவளை என்னவென்று நினைப்பது? மணிகளாலான அணிகலன்களை அணிந்திருக்கும் ராம பிரானே!இத்தகைய கொடுஞ்செயல் உடையவளைப் பெண் என்று நினைத்தல் கூடாது .
அருமையாக இல்லை கம்பனின் படைப்பு...! ரசித்துக் கொண்டிருங்கள்...
மற்றொரு கம்பராமாயணப் பாடலுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.
நன்றி.