Thursday 31 October 2013

"You Tube"ல் ராசி.





வலையுலகம் எங்கே திரும்பினாலும்   தீபாவளிப்  பற்றிய பதிவுகள் தான்.
சுப்பு  தாத்தா வலைக்கு சென்றால்  அவர் எந்தெந்த பதிவில் என்னென்ன பலகாரங்கள் கிடைக்குமென்கிறார். உஷாவோ  பலகாரப் போட்டி ஒன்று வைத்து  பலகாரம் சுடும் வழி  சொல்லித் தருகிறார். இப்படி எல்லோரும் எதையாவது பற்றி தீபாவளிக்கு  எழுத நாம் மட்டும் விடுவதா  . 

 ராசி  தீபாவளிக்கு  " மைசூர்  பாக் " செய்ததைப் பற்றி எழுதுகிறேன். படித்துப்  பாருங்கள்.

இரண்டு  நாட்களுக்கு முன்பு  விஷ்ணுவிற்கு  பல் வலி இருந்தது.மைலாப்பூரில்   இருக்கும்  பல் டாக்டரிடம்  போய்  ஆலோசனைக் கேட்டதில்,"உங்கள் பல் , " பள்ளிக்  கொண்ட ரங்கநாதரைப்  போல்  கிடக்கிறது."
இப்போதைக்கு  வலி குறைய  மருந்து தருகிறேன். ஆனால் ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு  வாங்க , பல்லை எடுத்து விடுகிறேன் " என்று சொல்லியிருந்தார்,
உடனே  மைசூர்பாக்கினால்  பல் உடைந்து விட்டதா என்று குறுக்கு கேள்வி  கேட்காமல் தொடர்ந்து படியுங்கள் .
கன்னத்தில் கையை வைத்து பல்லைத் தாங்கிக் கொண்டே விஷ்ணு   ,"ராசி ,உனக்குத் தெரியமா. ? இப்பொழுதெல்லாம்  பலகாரம் செய்யும்  முறை  You Tubeஇல்  பதிவேற்றுகிறார்கள். நீ தீபாவளிக்குப்  பலகாரம் செய்வதை நானும்  You Tube இல்  போடுகிறேன். அதனால் செய்முறையை  சொல்லிக் கொண்டே   "மைசூர்  பாக்"  செய் " என்று  சொல்ல

ராசிக்கு  உற்சாகம் தொற்றிக் கொள்ள ,  டிவியில்  ஒளிபரப்புவதாக நினைத்துக் கொண்டாள் . ' நாளைக்கு செய்யட்டுமா 'என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.

மறு நாள் வெண்டைக்காய் சாம்பார்,  சேனைக்கிழங்கு ரோஸ்ட் , சாலட் எல்லாம் டேபிளில் வைத்தாள் .பின் விஷ்ணுவைப் பார்த்து, ' டைனிங்  டேபிள் மேல் எல்லாம் இருக்கிறது .நீங்களே போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுங்கள்.. மைசூர்பாக்  செய்ய வேண்டுமில்லையா ? அதற்காக நான் பியூட்டி பார்லர் போய் வருகிறேன் . "
என்று சொல்லவும் விஷ்ணு  குழப்பதில் ...

' பார்லருக்கா ? '

"ஆமாம். நீங்கள் தான்  You tube இல் போடுவதாக சொன்னீர்களே. அதற்காகத்  தான்."

பல்வலியுடன் சும்மா இல்லாமல் ,தானே எதையோ சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டதாகப் பட்டது விஷ்ணுவிற்கு.

' ஆனால் இனி மேல் செய்வதற்கு ஒன்றுமில்லை '  நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

கிட்டத்தட்ட  மூன்று மணி நேரத்திற்குப் பிறகு வந்தாள் ராசி. அவளைப் பார்த்தால் ஏதோ கல்யாண ரிசப்ஷ்னிற்கு  செல்பவள்
 போல் இருந்தாள்.  நல்ல கரு நீலத்தில் பட்டுப் புடைவை, மேட்சிங்  ப்ளவுஸ், கைகளில் நீல வளையல், கழுத்தில் நீலக்  கல் பதித்த அட்டிகை சகிதமாக வந்து நின்றாள் .

' அழகாகத் தானிருக்கிறாள் . ' நினைத்துக்  கொண்டார்  விஷ்ணு. " ஆனால் 'You Tube" என்று தானே சொன்னேன். அதுவும் மைசூர் பாக்  செய்வதைப் பற்றித் தானே ."

விஷ்ணு  நினைத்துக் கொண்டிருக்கும் போதே .......

டைனிங் டேபிள்  அலங்காரமானது. அதன் மேல்   கடலை  மாவு , சர்க்கரை, நெய் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள்.

இப்பொழுது  விஷ்ணு  வீடியோ ரெக்கார்டிங் ஆரம்பித்தார். 'கிளாப்  'செய்யாதது தான் பாக்கி.
ராசி  கடலை மாவை ,சர்க்கரைப்  பாகில் போட்டு ,நெய்யையும், விட்டு கிளறிக் கொண்டிருக்க விஷ்ணு டைரக்டர் ஆனார் .
அவள் மைசூர்பாக்  செய்வதை விடவும் அட்டிகையை சரி செய்வதற்கும், புடைவைத் தலைப்பு  அழகாய்  தெரிவதற்கும் பிரயத்தனப் பட்டாள் .
' இதில் எங்கே  மைசூர்  பாக்  நன்றாக வரப் போகிறது. இதை எதற்கு அப்லோட் செய்வது ? 'நினைத்துக் கொண்டார். ஆனால் ராசி விட மாட்டாளே .

Ipad உடன் இங்குமங்கும் அலைந்து பல கோணங்களில் "  மைசூர் பாக் " செய்வதைப்  படமாக்க முயற்சி  செய்யலானார்.

மைசூர் பாக் கிளறி, தட்டில் கொட்டி, துண்டு போட்டாகிவிட்டது.அதை ருசி பார்ப்பதையும் வீ டியோ  எடுத்தே ஆக வேண்டும்  என்று ராசி அடம்பிடிக்க  .

ஒரு துண்டை எடுத்து விஷ்ணு கையில் கொடுத்து  வாயில் போடச் சொன்னாள்  ராசி. அவரை  " Guninea Pig "  ஆக்கியதோடு  நிற்கவில்லை ராசி.விஷ்ணு  ருசி பார்ப்பதை இப்பொழுது  ராசி படமாக்கிக் கொண்டிருந்தாள் .
விஷ்ணு மைசூர்பாக்கை  வாயில் வைத்துக் கடிக்க  'கடக்' என்று சத்தம்.

கையால் கன்னத்தைப் பிடித்துக் கொண்டே வாயில் என்னவோ கடிபட்டதே என்று எடுத்துப் பார்க்க , ரத்த வெள்ளத்தில்  பல். வாய் கொப்பளித்து விட்டு  வந்தார் விஷ்ணு.  பல் எடுக்க  மைலாப்பூர்  போக அவசியமில்லாமல் போய் விட்டது .

" மைசூர்பாக் " வில்லனாகி விட்டது பல்டாக்டருக்கு.

ஆனால் அதுவும் பதிவாகி விட்டதே .இதை எப்படி எடிட் செய்வது?  கீழ் வீட்டில் இருக்கும் மணி(software engineer) நினைவிற்கு வர  அவனிடம் ipad ஐக் கொடுத்து ,  எடிட் செய்து அப்லோட் செய்ய சொன்னாள்  ராசி.

சிறிது நேரத்திற்கெல்லாம்  'டிங் டாங்"

பார்த்தால் மணி. " எடிட் செய்து
அப்லோடும் செய்து விட்டேன் " என்று சொல்லிவிட்டு , எப்படி பார்க்க வேண்டும் என்றும்  சொல்லி சென்று விட்டான்.

அதற்குப் பிறகு ராசியை  கையில் பிடிக்க  முடியுமா.தீபாவளி வேலையுடன் அவ்வப்போது  You Tube ஐயும்  பார்த்துக் கொண்டேயிருந்தாள் .

அன்று முழுக்க  ஐம்பது பேர்  பார்த்திருந்தார்கள் என்று  ஹிட்ஸ்  சொல்லியது. அதில் நாற்பத்தி எட்டு முறை  ராசியே பார்த்தது தானிருக்கும்.
வெறுத்துப் போனாள்  ராசி. அதைப் பற்றி  மறந்தும் விட்டாள் .

இரண்டு நாட்களானது. அவளுடைய மெயிலைப் பார்க்கும் போது ஒரு விளம்பர நிறுவனத்திடமிருந்து  "எங்கள்   விளம்பரத்தை  உங்கள் வீடியோவில்  போட்டுக் கொள்கிறோம்  .அதற்கு  சன்மானமும் தரப்படும்.  விருப்பமிருந்தால் தொடர்பு  கொள்ளவும்" என்று எழுதியிருந்தார்கள் 
இதை விஷ்ணுவிடம் சொல்ல இருவரும் திரும்பவும்  youtube பக்கம் செல்ல ,
பார்த்தால்  லட்சோப லட்சம் ஹிட்ஸ். அதில் கமெண்ட்ஸ் வேறு வந்திருந்தது.
"இது என்ன கலாட்டா "  நினைத்தார் விஷ்ணு.
("Gangnam  Style " டான்ஸிற்கு  போட்டியாகிவிடுமோ?)

ஷாலினி என்பவர்," உங்கள் புடைவை  மிகவும் அழகாக இருக்கிறது " என்று கமெண்ட் எழுதியிருந்தார்.

சரோஜா என்பவர்,"இந்த அட்டிகை நன்றாக இருக்கிறது. எந்தக் கடையில் இந்த டிசைன் கிடைக்கும் ? என்று கேட்டிருந்தார்.

லலிதா  என்பவர்  , உங்கள் தோடுகள்  கலர்   சரியில்லை  என்று நக்கீரராய்  மாறியிருந்தார்.

கணேஷ் என்பவர் " உங்கள் கணவர் பல் எப்படி இருக்கிறது "என்று  விசாரிக்க .

பல் டாக்டர் இந்த வீடியோவைத் தடை செய்ய கோர்ட் படி ஏறியிருக்கிறார்.  

திரும்பவும்  வீடியோவைப் பார்த்தால் ,குறும்புக்கார மணி ,எடிட் செய்யாமலே  அப்லோட் செய்தது தெரிய வந்தது.

இது எதைப் பற்றியும் கவலைப் படாத ராசி,  போனை எடுத்து தெரிந்தவர்களுக்கு எல்லாம்   தன்  வீடியோவிற்கு வந்த ஹிட்ஸ் பற்றி  தமுக்கு அடித்ததோடு , விளம்பரக் கம்பனிக்கு வேறு  மெயிலடித்துக் கொண்டிருக்கிறாள்.

" இது எப்படி  இவ்வளவு ஹிட்ஸ் ? " ராசிக்கே  ஆச்சர்யம்  தான்.

ஆனால் விஷ்ணுவிற்கோ  பயம் பிடித்துக்  கொண்டது.
இது  எங்கே போய் முடியப் போகிறதோ  ?  ராசி தன்னை  "வீடியோகிராஃ பராக்கி "விடுவாளே   என்கிற பயத்துடன் இருக்கிறார் விஷ்ணு.

அவர் பயத்தைப் போக்குவீர்களா யாராவது?

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்  எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

image courtesy---google.

Thursday 24 October 2013

டெடியும் வெங்காயமும்


நேற்று  சூப்பர்  மார்கெட் சென்றிருந்தேன். .மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டே, காய்கறி செக்ஷனில் சில காய்கறிகளை எடுத்துத்  தள்ளு வண்டியில் வைக்கும் போது "வீட்டில் வெங்காயம் தீர்ந்து விட்டதே"நினைவிற்கு வர  வெங்காயம் எடுத்து கவருக்குள் போடப்போனேன் .

தடுத்த என் கணவர்," எதற்கு வெங்காயம்?"என்றார்.

" சட்னிக்குத் தான் "

" சட்னிக்கு வெ......ங்........கா........யமா? . "

" சாப்பாட்டின் விலையே  ஐந்து ரூபாய் தான் .  ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார்.  அந்த சாப்பாடு எந்த ஹோட்டலில்  என்று விசாரித்து  சாப்பாடே ,   சாப்பிட்டு விடலாம். வெங்காயம் மட்டும் வேண்டாம்."என்று  என் கணவர் சொல்ல

" கால் கிலோ வாங்கிக் கொள்கிறேனே ."  நான் கெஞ்ச

"நீயென்ன அம்பானியின்  உறவு என்கிற நினைப்போ?
பேசாமல் ' பாதாம் பருப்பு 'வாங்கி சட்னி செய். அது போதும் " என்று அதட்ட நானும் வெங்காயத்தைப் பிரிய மனமில்லாமல் (கண்ணில் நீருடன்) நகர்ந்தேன்.

அப்பொழுது  " மிஸ் ,,,எப்படி இருக்கிறீர்கள் ? " பின்னாலிருந்து வந்த  குரல்  என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
என்னிடம் படித்த மாணவி கல்யாணி. தான்  என்னைக் கூப்பிட்டாள் .

' கல்யாணி  எப்படி இருக்கிறாய் ' குசலம் விசாரித்தேன்.
இரு குழந்தைகளின்  தாய் அவள்.. அவள் கணவருக்கு  என்னை அறிமுகப் படுத்தி வைக்கும் போது ," இவர்கள் என் டீச்சர். கொஞ்சம்  ஸ்டிரிக்ட்
தான். "
பின் என்னைப் பார்த்து , " ஆனால் அது தான்  நல்வழிப் படுத்தும்   என்னும்  பெரிய உண்மை  நான் தாயான பின் தான் எனக்குப் புரிந்தது ." என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேச  கடையிலிருந்த ஓரிருவர் என்னையும்,என் மாணவியையும்   ஒரு சில நிமிடங்கள் கவனிக்க  ,எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு ,என் மாணவி  போய் விட்டாள்.ஆனால்  நான்  பழைய நினைவுகளில்  ஆழ்ந்து கொண்டிருப்பதை கவனித்த என் கணவர்  என்னைத் தோளில் தட்டி  சுயநினைவிற்குத் திருப்பினார்.

என் மனதிற்குள் நான்  ஆசிரியையாய்  பணியாற்றிய  நினைவுகள் மட்டுமல்ல என் ஆசிரியர்களும்  நினைவில் வந்து போனார்கள்.

'A Teacher is a Second Mother ' ஒவ்வொரு  ஆசிரியையும் தாய்க்கு சமமானவள்  தான் . மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.


இது சம்பந்தமான ' Mom At School 'காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பாருங்கள் . கேளுங்கள் .
உங்களுக்கு பிரியமான உங்கள் ஆசிரியர் கண்டிப்பாக நினைவிற்கு வருவார்.
நினைவிற்கு வரும் ஆசிரியர் பெயரைப் பின்னூட்டத்தில்  குறிப்பிட மறக்க வேண்டாம். அத்துணை  ஆசிரியர்களுக்கும்  என் வணக்கங்கள்.
காணொளி  இங்கே


அது என்ன " டெடியும் வெங்காயமும் " என்று தலைப்பு என்று கேட்கிறீர்களா.?
கானொளியில்  நீங்கள் கேட்ட டெடியைப்பற்றியும் சூப்பர் மார்கெட்டில்  நான் பார்த்த  (வாங்காத)   வெங்காயத்தைப்  பற்றியும்  தானே எழுதியிருக்கிறேன்.
இரண்டுமே  கண்களைக்  குளமாக்கின.
அதனால் தான் இது " டெடியும்  வெங்காயமும்."

image courtesy--google.
video  courtesy-- you tube.

Sunday 20 October 2013

குடைக்குள்..................




குடைக்குள்  குழல்.

இது என்ன குழல் ?.........

கோவர்த்தனகிரி  பற்றியோ?

 இல்லை

மாயக் கண்ணனின் புல்லாங்குழலா?  வேய்ங்குழலா?.....என்று யோசிக்க  வேண்டாம்.

நானே....நானே சொல்லி விடுகிறேன்.......

தேங்குழல் .

என்னவர் கொஞ்சம் " நொறுக்ஸ் " பிரியர்  . அவருக்காக  என்ன முறுக்கு செய்யலாம், என்று யோசித்ததில்  சட்டென்று  மின்னலடித்தது ,போன வாரம் தேங்குழல்  மாவு  மெஷினில் அரைத்து வைத்தது  பற்றிய  நினைவு .

காலரைக்காபடி  மாவு எடுத்து , கச்சிதமாய் எள்ளு சேர்த்து , பெருங்காயம், உப்பு, சேர்த்து   பிசைந்து  முறுக்கு அச்சில்  போட்டு  எண்ணெயில் பிழிய  ஆரம்பித்தேன். ஒவ்வொரு தேங்குழலும்  என்னை எடுத்து விடேன் என்று கெஞ்சுவது போல்  குதித்து,குதித்து  மேலே வந்து   வந்து  தான் வெந்து விட்டதை பறை  சாற்றியது. அதை எடுத்துக் கொண்டிருக்கும் போதே  என்னவர் வந்து  ஒரு முறுக்கு  சுடச்சுட  எடுத்து வாயில் போட்டு "தேங்குழலென்றால்  அது நீ செய்தால் தான்  சுவை....... கர கரவென்று  என்று  வாயில் போட்டவுடன்  கரைகிறது "எனக்கு    பட்டம்  அளித்து விட்டு சென்றார்.

இது இன்றைய நிலைமை.
சில பல  வருடங்களுக்கு முன்பாக ...........இருங்கள்......... உடனே பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  என்று நினைத்துக் கொண்டு என்னை வயதானவளாக்கி விடப் போகிறீர்கள். முன்பே  ஒரு பதிவில் சொன்னது போல் , இளமையின் வாயிற்படியில்  நிற்கும் பாட்டி நான்.

ஜஸ்ட் , முப்பத்தைந்து  வருடங்கள் முன்பு நடந்தது  நினைவிற்கு வந்து முகத்தில் புன்னகையை வரவழைத்தது.
திருமணமாகி  இரண்டு வருடமிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித் தான்  தேங்குழல்  செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தேன்
அப்பவே என்னவர் " எதற்கு ரிஸ்க்  எடுக்கிறாய். நான் வேண்டுமானால் கடையிலிருந்து  வாங்கி வந்து விடுகிறேனே" என்று  சொல்ல ,

எனக்கும்  சரி  என்று சொல்ல ஆசையிருந்தாலும் , என் சுயமரியாதை  என்னாவது  " எல்லாம் எனக்கு செய்யத் தெரியும்.நான் செய்து கொடுக்கிறேன் பாருங்கள் " என்று வீறு கொண்டு எழுந்தேன்
"எப்படியோ போய்த் தொலை "  என்று சொல்லி விட்டு  அவர் ஆபிசிற்கு சென்று விட  ,அன்று மாலையே  .........(விதி  சமையலறையில் புள்ளி வைத்து கோலம் போட்டு  விளையாடப் போவது   தெரியாமல்)  தேங்குழல்  பிழிய  ஆரம்பித்தேன்.

அதன்  விளைவு......அவர்  மட்டும் தான் மாட்டிக் கொண்டார் என்று இது நாள் வரை  நினைத்திருந்தேன்.இப்பொழுது  தான் புரிகிறது . நீங்களும்    கூட  என்னிடமிருந்து தப்பிக்க வில்லை என்று.(பதிவாக்கி விட்டேனே அதை சொல்கிறேன்.)

அரிசியையும், உளுத்தம்பருப்பையும் சரியான  விகிதத்தில்  சேர்த்து ,அம்மா அரைத்து கொடுத்திருக்கிறார்களே.  இதில் என்ன பெரிய  டெக்னிக்  இருந்து விடப் போகிறது  என்ற அசால்ட்டுடன்   வேலையை ஆரம்பித்தேன்.
(இந்த  " நினைப்பு தான்  பிழைப்பைக் கெடுக்கும்  "என்று சும்மாவா  சொன்னார்கள்  ).

சுடச்சுட  காபி ஒன்றைக் குடித்து விட்டு , அரைப்படி மாவு   எடுத்து  பாத்திரத்தில் போட்டு விட்டு,  இதில் எவ்வளவு உப்பு போடலாம்  என்று  யோசனையான யோசனை செய்து ( what's app இல்லை,
skype இல்லை, இ  மெயில் இல்லை,  செல்போன்  இல்லை, ஏன்  வீட்டில்  டெலிபோன் வசதி  கூட  இல்லாத  காரணத்தால் )  நானே  முக்கியமான முடிவை எடுத்தேன்.(அதாங்க  எவ்வவளவு உப்பு என்கிற முடிவு)  கண்ணளவு  உப்பு ,பெருங்காயம்,  எள்ளு சேர்த்து  தண்ணீர் விட்டுப் பிசைந்து  முறுக்கு அச்சில் போட்டு  துளியூண்டு  மாவு எடுத்து , எண்ணெயில் போட்டு  காய்ந்திருக்கிறதா  என்று பார்த்தேன்.(இதெல்லாம் சரியாக செய்து விடுவேன்)

பின்  பிழிய  ஆரம்பித்தேன்........ம் ம் ம் ம் ம் ........அழுத்தினதில்   அச்சே உடைந்து விடும் போல் இருக்கிறது. ஆனால் தேங்குழல்  வரவில்லை.
 கொஞ்சமாய் சிறிது தண்ணீர் கலந்தேன்.   .
 ஆனால் மாவு  கொழ கொழ  என்றாகி விட்டது.
சரி, கொஞ்சம்  மாவு போட்டால் கெட்டியாக்கி விடலாம்  என்று கொஞ்சம் மாவு சேர்த்தேன்.
இப்படி குரங்கு,அப்பம் கதையாய் ,  ஒரு வழியாய்  மாவை சரி செய்து
பிழிய ஆரம்பித்தேன்.  நன்றாக அழகாய்  சிறு சிறு  முறுக்குகளாய் வந்தது.
பார்க்க மிக மிக அழகாய்  மேலெழும்பப் பார்த்தது.

திடீரென்று  "பட் "  என்று ஒரு சத்தம்.

என்னவென்று திரும்பிப் பார்ப்பதற்குள்  அடுத்த" பட்  ."

கொஞ்ச நேரத்தில் மீண்டும்" பட் ...... பட்........  பட் ".
தேன்குழல்  தான்  ஊசி பட்டாசாய்  வெடித்துக் கொண்டிருந்தது.

பயத்தில்  என்ன செய்வதேன்றே  தெரியவில்லை. சரி சட்டென்று  ஸ்டவ்வை குறைத்தேன்.
வீட்டில் வேறு யாருமில்லை. திரு.....திரு... முழியுடன்  சமையலறையில்   நான்.......
ஒரு வேளை மாவு ஊற   வேண்டுமோ?  . ஒரு பதினைந்து நிமிடம்  கழித்து  மீண்டும் இந்த  வேலைக்குத் திரும்பினேன்.

மீண்டும் "பட் ......பட் .......பட் .......".
இதற்குள் சமையலறை முழுவதும்  எண்ணெயில் புள்ளியாய் .(கோலம் தான் பாக்கி) எங்கே காலை
வைத்தாலும்   ஒரே" பிசுக் பிசுக் ".

எப்படியும் இத்தனை மாவையும்  முறுக்காக்கி தானே  ஆக வேண்டும்.
வீணாக்க  மனம் வரவில்லை/
என்ன தான் செய்வது?

யோசித்தேன்.
எண்ணெய்  தெளிக்காமல் இருந்தால் போதும். என்  மாமனாரின் ' மான் மார்க் ' குடை  நினைவிற்கு வந்தது.
சட்டென்று அதை எடுத்து பிரித்து  என்னருகே வைத்துக் கொண்டேன்.
பின்  முறுக்கு  பிழிந்தேன். என்னிடமா வேலை காட்டுகிறாய்.........தேன்குழலே ......என்று  குடையை வாணலிக்கு மேல் உயரத்தில்  பிடித்துக் கொண்டேன். இப்பொழுது சுளீரென்று  என்கையில் ஒரு சொட்டு . ஆனால்  சமையலறை  சுவர், தரை  எல்லாம்  ஓரளவிற்கு தப்பியது.(மான் மார்க் குடை காரர்களுக்கு இது தெரிந்தால்  தேங்குழல்  செய்யப் போகிறீர்களா? வாங்குங்கள் எங்கள் மான் மார்க் குடையை என்று  விளம்பரப் படுத்தியிருப்பார்கள்).)
அப்புறம் கையில் ஒரு துணியை சுற்றிக் கொண்டு ,குடையைப் பிடித்துக் கொண்டு  ஒரு பாதி மாவை  முறுக்காக்கி விட்டேன்.

எனக்கே என்னைப் பார்க்க  பாவமாய் இருந்தது.

" டிங்...டாங் "

என்னவர் வருகை. 
" ஒரே வாசனை அடிக்கிறதே  தேங்குழல்  செய்து விட்டாயா?"என்று கேட்டுக் கொண்டே  சமையலறைப் பக்கம் எட்டிப் பார்த்து   "இதென்ன குடை  சமையலறைக்குள் " என்று கேட்க  நான் என் சாதனைப் பற்றி சொல்ல
அவர் விழுந்து  ,விழுந்து ,சிரித்தது இன்றும் பசுமையாய்  நினைவில் வந்து மோதுகிறது.

இன்னும் மாவு பாக்கியிருக்கிறதா  என்று எட்டிப் பார்த்து   விட்டு "நான் உனக்கு ஒரு ஐடியா  கொடுக்கிறேன். "என் ஸ்கூட்டர்  ஹெல்மெட்  போட்டுக் கொண்டு கையில் கிளவுஸ்  போட்டுக்கோ  குடையையும் பிடித்துக் கொள் ." நீ, சமையலறை, தேங்குழல் எல்லோருக்கும்  சேஃப்டி  , பார்க்கவும்  ராணி ஜான்ஸி மாதிரி வீராங்கனையாக இருப்பாய் . என்ன கேடயம் தான் இல்லை "என்று நக்கலடிக்க  எனக்கோ கண்ணீர்  முட்டிக் கொண்டு எட்டிப் பார்த்தது.

ஒரு வழியாய்  தேங்குழல் ப்ராஜெக்ட்  முடித்தேன்.
இந்த கலாட்டாவில் ஒன்று சொல்ல மறந்து விட்டேன். கண்ணளவு உப்பு போட்டிருந்தேன்..அது  கண்ணளவு இல்லை ,இம்மியளவு  தான் என்று  பரிந்தது. ஆனால்  ரொம்ப லேட்டாகத் தான் தெரிந்தது.அவர் தானே சாப்பிடப் போகிறார். நான் ஏன் சாப்பிடுகிறேன்?எனக்கென்ன தலையெழுத்தா?

அதற்குப் பிறகு தான் கிளைமாக்ஸ் வருகிறது.  . என்  கணவர்  சும்மாவா இருப்பார். அடுத்த வாரமே  ஒரு விசேஷத்திற்காக  ஊருக்குப் போகும் போது.
குடைக்குள் தேங்குழல் பிழிந்த கதை  எல்லோருக்கும்  நோட்டீஸ் அடிக்காத  குறை தான்.

எல்லோரும் என்னைப் பார்த்ததாலே,  தேங்குழல் பற்றி விசாரிக்க  ஆரம்பித்தார்கள்.

" இப்ப எப்படி ராஜி? தேங்குழல் வெடிக்குதாடி  இன்னும் ? " இது  இந்து  சித்தி 

"  தேங்குழல் பிழிவதாக  இருந்தால் என் தம்பி  ஆபிசிற்கு  சென்ற பிறகு செய் . " இது.......தம்பி மேல் கரிசனம் காட்டும்  அக்காவின்  குரல்.( ம்க்கும்......)

" அக்கா .....எனக்கும் சொல்லிக் கொடேன் . என்ன குடையெல்லாம்  உபயோகிக்கலாம்" இது என் மாமா  பெண்,  குழலியின்   கிண்டல்.

 பல வருடங்களுக்குத் தொடர்ந்தது..
நல விசாரிப்புடன்.  தேங்குழல்   விசாரணையையும்   முடுக்கி விடுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

இப்பவும்  சுமார் ஐந்து  வருடங்கள் , முன்பாக அறுபது  வயதான உறவுப் பெண்மணி தன்  மருமகளிடம் என்னை அறிமுகப் படுத்தும் போது ,"நான் சொன்னேனில்லை சமயோசிதமாக  யோசித்து வேலை செய்வாள். தேங்குழல்  எண்ணெயில் பிழிந்தவுடன் வெடித்தது  என்று     குடை பிடித்தாள் ."என்று சொல்ல ,

அந்தப் பெண்ணோ  ,"தேங்குழலிற்குக்.................குடையா ..............." என்று  கேட்க    நான் அந்த இடத்தில்  ஏன்  நிற்கிறேன் சொல்லுங்கள்.


யாருக்காவது  தேங்குழல் செய்வதில்  சந்தேகமா  ?என்ன குடை உபயோகிக்கலாம்  என்பதற்கு  ஆலோசனை  வேண்டுமா?
rajalakshmiparamasivam.blogspot.com என்கிற லிங்கில்  தொடர்பு  கொள்ளவும்.

image courtesy----google.



Friday 11 October 2013

' பிங்க் ' மாதம்







இப்பொழுது ,நம் வாழ்நாட்களை  மருத்துவம்  நீட்டித்து வைத்திருக்கிறது. மகிழச்சியான விஷயம் தான். முதியோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  அதனால் வியாதிகளே  இல்லையென்றோ , எல்லா வியாதிகளையும்,மருத்துவம் சரி செய்து விடுமோ , என்றால்........  இல்லை, முற்றிலும் சரி செய்து விட முடியாத வியாதிகள்,  இன்னும் இருக்கத் தான் செய்கின்றன.

மருத்துவம் மண்டியிடும்  வியாதிகளில், ஒன்று புற்று நோய். குணப்படுத்தவே முடியாது  என்று பரவலாக  பேசப்படுவது அறிந்தது தான். ஆனால் ஆரம்ப காலக் கட்டத்தில்,  நாம்  சிகிச்சைக்கு சென்றோமானால் பூரணமாக குணமடைந்து விடலாம் என்பதையும் மறுக்க முடியாது.


ஆனால் நம்மில் பெரும்பாலோர்  சொல்வது ," ஓ ....கேன்சரா.......நமக்கெல்லாம் வராது " என்பது தான்.


வராவிட்டால் நல்லது தான். 

ஆனால் வந்து விட்டால் நாம் செய்ய வேண்டியது  முதலில் ஒரு கண நேரமும் வீணாக்காமல்  சிகிச்சையை  ஆரம்பிக்க வேண்டும் என்பது தான்.

சென்னை கேன்சர்  ஹாஸ்பிடலில்  நம்மை வரவேற்கும்  பதாகையும்   ,

இதைத் தான் சொல்கிறது,
" புற்று நோயைப்  பார்த்து பயப்பட வேண்டாம். ஆரம்ப காலக் கட்டத்தில் வந்தால்  முற்றிலும் குணப்படுத்த முடியும்  " என்ற செய்தி  பெரும் ஆறுதலளிக்கும் விஷயமல்லவா?

பல  வருடங்களுக்கு  முன்பாக இது சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.ஆனால் இப்பொழுது நிலைமை மாறி விட்டது.புற்று நோயிலிருந்து மீண்டவர்கள்  எண்ணிக்கை அதிகமாகிக்  கொண்டே இருக்கிறது  என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தியல்லவா.


நம் நாட்டில் பெண்களை அதிகம் பாதிக்கும்  புற்று நோய் எதுவென்று பார்த்தால்  மார்பகப்புற்று நோய்,,சினைப்பை  புற்று நோய், கர்ப்பப்பை  வாய் புற்று நோய்  என்று  புள்ளி விவரம் சொல்கிறது.


இது யாரை எல்லாம் பாதிக்கும் என்று பார்த்தால்  , புற்று நோய் ஜாதி மதம், ஏழை\, பணக்காரன்,  என்று  எந்த  வித்தியாசத்தையும்  பார்ப்பதில்லை.


யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அதற்காக பயம் கொள்ளத் தேவையில்லை.



அதுவும் இந்த மார்பகப் புற்று  நோய்  மிகவும் வேகமாக பரவி வருவதாக பத்திரிகை செய்தி ஒன்று சொல்கிறது.


இருபது வருடத்திற்கு முன்பாக 70%  மார்பக புற்று நோயாளிகள் ஐம்பது வயதிற்கு மேற்பட்ட  பெண்கள். ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழ்.

50%  மார்பக புற்று நோயாளிகள்  ஐம்பதை எட்டிப் பிடிக்காத பெண்கள்  தான்,
அதிர்ச்சி தரும் விஷயமாய் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று பார்த்தால்  மாறி  வரும்  வாழ்க்கை  முறை , உணவுப் பழக்கங்களில் மாற்றம், உடல் பருமன், முதல் குழந்தையை  தள்ளிப் போடுதல், மாசுபட்டுள்ள  சுற்றுசூழல் , அதிகமான  பூச்சி மருந்துகளை உபயோகித்தல்........ என்று அடுக்கிக்  கொண்டே போகலாம்.


ஆனால் மருத்துவர்களும், சேவை நிறுவனங்களும் புற்று  நோய் விழிப்புணர்வு  முகாம்  நடத்துகிறார்கள். ஆனால் எத்தனைப் பெண்கள்  பரிசோதித்துக் கொள்ள  முன் வருகிறார்கள்? நூறு பெண்கள் இருக்குமிடத்தில்  ,இருபத்தைந்து பெண்கள்  பரிசோதனை செய்து கொண்டாலே  பெரிய  விஷயமாக சொல்லலாம் என்று  அடையாறு கேன்சர்  மையத்தின்  " வருமுன் தடுப்போம் "  துறையின் பொறுப்பாளர் வருத்தத்துடன் சொல்கிறார்.


பரிசோதனை செய்து  ,புற்று நோய் இருக்கிறது என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான்  இதற்குக்  காரணம்  என்று சொல்லலாம்.

எத்தனையோ வழிகளில்  மார்பகப் பரிசோதனை  வலியுறுத்தப் படுகிறது.

டிவியில் , ஒரு ஸ்கேன்  நிறுவனத்தினரால்  ஒரு விளம்பரம் காட்டப் படுகிறது. திருமதி ராதிகா , மேமோகிராம் பற்றி  சொல்கிறார்.

அது விளம்பரம் தான் இருந்தாலும் , இதையே நமக்கு சொல்லும் அறிவுரையாக  நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது.?

அவர் டிவி தொடரில்,  உபயோகிக்கும் புடைவை, நகை, கைப்பை, செருப்பு என்று பார்த்து   அதைப்போலவே வாங்கி உபயோகிக்க  விரும்பும்  நாம் ,  " மேமோகிராம் செய்து கொள்ளுங்கள் "என்று சொல்வதையும் ஏன் கேட்கக் கூடாது. ?அருகிலிருக்கும் ஸ்கேன்  சென்டருக்கு சென்று  செய்து கொள்ளலாமே!.


சரி, வந்தே விட்டது ,புற்று என்னும் அரக்கன் எனறால் பயப்பட வேண்டாம்.

ஆரம்பக் கட்டத்திலிருந்தால் முற்றிலும் குன்மாக்கப்படக் கூடியதே!

நான் சொல்லவில்லை.....

கேன்சரால்  பாதிக்கப் பட்டு  அதிலிருந்து மீண்ட சிலர்  சொல்வது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.அக்டோபர் 9ந்தேதி   'ஹிந்து ' பத்திரிகையில்  வந்திருக்கும்
" WE CAN SURVIVE " என்ற  செய்திக்குறிப்பில்
திருமதி ஜெயசித்ரா,திருமதி கிரேசி  வர்கீஸ் ,திருமதி அருள்மொழி குமார்
மூவரும்  சொல்வது எவ்வளவு நம்பிக்கை தருகிறது பாருங்கள்.
இவர்கள் மூவரும்  புற்று நோயிலிருந்து  மீண்டவர்கள் . அதிலிருந்து மீண்டு பல வருடங்களாகி விட்டது. ஆரோக்கியமாக வாழ்கிறார்கள்.

இவர்  C. ஜெயசித்ரா , வயது 44

(' " I Listen " என்ற பேட்ஜூடன்  கும்பலான அடையாறு கேன்சர்  ஹாஸ்பிடலின்  அறையில் , அவரிடம்  கேட்கப்படும் கேள்விகளுக்கு,   பொறுமையாக ,ஆனால் நம்பிக்கைத் தரும்விதமாக பதில் சொல்கிறார்..அவர் சொல்வதை அங்கிருக்கும் நோயாளிகள், அவர்களுடைய  உறவினர்கள்  எல்லோரும் ஆவலுடன்  கேட்கிறார்கள்.
அவர் என்ன சொல்கிறார் நாமும் அவர் வாயிலாகவே கேட்போம்.

"2006இல் எனக்கு மார்பகப் புற்று நோய் என்று தெரிய வந்தபோது, நான் நொறுங்கிப்போனது உண்மை. என் குடும்பத்தினருக்கே கூட  நான்  பலமணி நேரம் கழித்தே தான் சொன்னேன் .   இந்த செய்தியை நானும் என் குடும்பத்தினரும்  ஜீரணிப்பதற்குள்

, நோய் என் எலும்புகளையும்  உருக்க ஆரம்பித்து விட்டது . 
இது என்னை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது..

ஆனால், கீமோ தேரபியிலும், ஆபரேஷனிலும்  நான் முழுமையாக குணமடைந்தேன்..

ஆரம்பத்தில்  என் தோற்றத்தில் நோயின் பாதிப்பும், சிகிச்சையின் பாதிப்பும் தெரியத் தான் செய்தது. என் தலை முடி மொத்தத்தையும்  நான் இழக்க நேர்ந்தது.
ஆனால் இப்பொழுது பாருங்கள். என் உடல் நிலை பழைய நிலையை அடைந்துள்ளது. .நான் தினமும் இங்கே வந்து நோயாளிகளுடன் உரையாடி  அவர்கள் இழந்த  நம்பிக்கையைத் திருமபப்   பெற உதவுகிறேன்."

இப்போழுது அவர் சல்வார்  டிசைன்  செய்யும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.


தற்பொழுது 55 வயதாகும்  திருமதி கிரேசி  வர்கீஸ்  2002 ம் ஆண்டு ,அதாவது 

அவர்  44 வயதிலிருக்கும் போது மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.  முதலில் இந்த  செய்தியை அவர் மனம் நம்ப மறுத்திருக்கிறது. எனக்கா......கேன்சரா  என்பது தான்  முதலில் வந்த நினைப்பு.

அதனால் சில நாட்களை  வீணடித்து விட்டார். அதற்குள்   நோய்  இரண்டாம்  கட்டத்திற்கு  வந்து விட்டது. ஆனால் அதற்குப் பிறகு தீவிரமாக  சிகிச்சையை மேற்கொண்டார்.  பிறகு உடல் நலமடைந்து ஆரோக்கியமாக தன பணியினைத் தொடர்ந்து செய்து கொண்டு  வருகிறார். 


அவர்  சொல்வது,"  நம்மில் பெரும் பாலோர்  கேன்சர் என்பது, ஒரு மரணதண்டனை என்கிற  மனோபாவத்துடன்  எதிர் கொள்கிறோம். அந்த மனநிலையிலிருந்து  நாம் விடுபட்டு  சிகிச்சையை ஆரம்பிப்பதற்குள்  சில சமயங்களில்  கால விரயமாகி விடுகிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள். 

புற்று நோய் என்று தெரிந்தவுடன் சிகிச்சையை  ஆரம்பித்திருந்தால் என் ஒரு மார்பகத்தை  இழந்திருக்க மாட்டேன். அதனால் யாரும்  காலம் கடத்தாதீர்கள்"  என்பது தான் இவர் கூறும் அறிவுரை.

திருமதி அருள்மொழி குமாரும் இதே போன்று நம்பிக்கை தரும்படி பேசுகிறார். அவருக்கு நோய் வந்தபோது அவர் வயது 38 . சிகிச்சை எடுத்துக் கொண்டதால் ,51 வயதில்  ஆரோக்கியமாக இருக்கிறார். 


இவர்களைப் போன்று  சிகிச்சை மேற்கொண்டு  ஆரோக்கியமாக இருப்பவர்கள்  நம்க்கெல்லாம் பெரும் நம்பிக்கை அளிப்பவர்கள் தானே.


நாமும்  ஒரு சின்ன  அடி எடுத்து வைப்போமா. இனிமேல் நம் தோழியையோ ,

உறவுப் பெண்மனியையோ  நலம் விசாரிக்கும் பொது,
நலமா  என்கிற கேள்வியுடன். இந்த வருடத்து " மேமோகிராம் " மற்றும் " பேப் ஸ்மீயர்  " டெஸ்ட்  எல்லாம் செய்தாகி விட்டதா என்கிற ஒரு கேள்வியையும் கேட்டு , நம்மால் முடிந்த விழிப்புணர்வை  ஏற்படுத்துவோம்., ராமருக்கு  அணில் உதவியது போல்.!!

image courtesy----google.



Thursday 3 October 2013

நானும் டென்னிஸும்


அன்று காலை எப்பொழுதும் போல் காலை டிபனிற்கு இட்லியும், கொத்தமல்லி சட்னியும் செய்து டேபிளில் வைக்கும் போது , 
" அடடா சட்னி தாளிக்கவில்லையே! " கவனித்தேன்.

கேஸில்,  இருப்புக் கரண்டி ,போட்டு விட்டு  ,கடுகு பாட்டிலை அலமாரியிலிருந்து எடுக்க கையை உயர்த்த  வலது முழங்கையில்  ' பளிச் ' வலி.

கண்ணை மூடி வலியைப் பொறுத்துக் கொண்டேன்.
' எங்கேயாவது இடித்துக் கொண்டோமோ ' நினைத்துப் பார்த்ததில் ஒன்றும் புலப்படவில்லை.

அன்றைய பொழுது கழிந்தது. ஆனால் வலி அதிகமாகிக் கொண்டே போனது மட்டும் புரிந்தது. இரவு படுக்கும் முன் ஒரு  வலி நிவாரணி மாத்திரை முழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டேன்.

காலை எழுந்ததும் ,பல் விளக்கும் போதே முழங்கை வலி,"நீ  வலி நிவாரணி சாப்பிட்டால்.......நான் போய் விடுவேனா  என்ன  " என்பது போல்  , அதிகமாயிருந்தது.

சரி, இனிமேல் சும்மா இருப்பது  சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம் ,என்பதை  உணர்ந்து எங்கள் குடும்ப நல மருத்துவரை
அணுகினேன்.
இதில்  நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவரிடம் என்னை அனுப்பினார்.

போனில் மாலை  ஏழு  மணிக்கு அப்பாயின்ட்மென்ட்  வாங்கிக் கொண்டு சென்றேன்.
டாணென்று ஆறேமுக்காலுக்கு  அவருடைய கிளினிக்கிற்குப் போனால்  மிகப் பெரிய கும்பல். 
இது என்னதிது?  கிளினிக் தானே. இதென்ன  இவ்வளவுக் கும்பல்.

சரி. நமக்கென்ன நாம் தான்  அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்கியிருக்கோமே! இவர்களெல்லாம் வாங்காமல் வந்திருப்பார்கள் என்று சவுடாலாக நினைத்துக் கொண்டு  ரிசப்ஷனிஸ்ட்  அருகே போய் நான் வந்திருப்பதை சொல்லி  ஏழு மணிக்கு  அப்பாயிண்ட்மென்ட்  என்று சொன்னவுடன்.

ரிஷப்ஷனிஸ்ட்  கடுகடுவென்று  ." இவங்களைப் பாருங்கள்  இவங்களுக்கு மாலை 3  மணி  அப்பாயின்ட்மென்ட்  . இன்னும் டாக்டரைப் பார்க்கவில்லை என்றதும் கொஞ்சம் மலைத்துப் போனேன்.

அந்தக் கும்பலில் நானும் ஐக்கியமானேன். நான் டாக்டரைப் பார்க்கும் போது மணி ஒன்பது.

நல்ல சிரித்த முகத்துடன், 'என்ன பிராப்ளம் " என்றார்.

நான் என் வலது முழங்கையில் வலியிருப்பதை  சொன்னதும்.

அருகில் வைத்திருந்த  ஸ்டீல் சுத்தி போல் இருந்த ஒன்றை  எடுத்து மெதுவாக  என் கை விரல்களைத் தட்ட ஆரம்பித்தார்.

" டாக்டர், எனக்கு  முழங்கையில் தான் வலி " என்று  சத்தமாக சொன்னதும் ,

தட்டுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார்.

" நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா ? " என்பது போல் இருந்தது பார்வை.

முழங்கை  வலி என்று வந்தால் இவர் விரலையும் உடைத்து விடுவார் போல் தெரிகிறதே என்று நினைத்தேன்.

எத்தனை மாணவிகளுக்கு  இம்போசிஷன் கொடுத்தேனோ !
தெரியவில்லையே. அந்தப் பாவம் தான் டாக்டர் ரூபத்தில் வந்து பழி தீர்த்துக் கொள்கிறதோ  என்று  தோன்றியது
ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. பத்திரமாக நம் கையையும் விரல்களையும்  விடுவித்துக் கொண்டு சென்று விடுவோம்.என்று முடிவெடுத்தேன்.

எல்லா விரல்களையும் தட்டிப் பார்த்து சப்த ஸ்வரங்கள் கேட்கிறதா  என்று பார்க்கிறாரோ  என்று  நினைத்தேன்.

(இதைத் தான்"  இடுக்கண் வருங்கால் நகுக " "என்று வள்ளுவர் சொன்னாரோ!)

ஒருவழியாக சுத்தியலை கீழே வைத்து விட்டு  மருந்து எழுத  ஆரம்பித்தார்.

நான் டாக்டருக்குப் படிக்கவில்லை . ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதுக்காக என் கைவலியைப் பற்றி  கொஞ்சமாவது என்னிடம் சொல்ல மாட்டேனேன்கிறாரே என்று யோசிக்கும் போது  டாக்டர்  திருவாய் மலர்ந்தார்.

"" உங்கள் வலி வந்து............. "

 " ஆயர்பாடி மாளிகையில்........" செல்போன் இடை மறித்தது.

போனிற்கு  முதலுரிமை., காதருகில் கொண்டு போய்  . ஹலோ  என்று சொல்லிக் கொண்டே ..என்னைப் பார்த்து " Denniss ........" என்று சொல்ல 

Deniss என்பவர் பேசுகிறார் போலிருக்கிறது என்று நான் நினைக்கும் போதே.

போனை கைகளால் மூடிக் கொண்டே  . என்னைப் பார்த்து  அழுத்தந்திருத்தமாக  இது " டென்னிஸ்  எல்போ "என்று சொல்லி விட்டு போனில் பேசத்தொடங்க  நான் குழம்பினேன்.

அது என்ன" டென்னிஸ் எல்போ ?"

டென்னிஸ்  விளையாட சொல்கிறாரோ  என்று தான் முதலில் நினைத்தேன்.

இந்த  வயதிற்கு மேல் டென்னிஸ்  ஆட முடியுமா? இது என்ன தொல்லை  என்று நினைக்கும் போதே  அவர் அவ்ருடைய லெட்டர்  பேடில்  எதையோ எழுதிக் கொடுத்து  போனை விட்டுக் கொடுக்காமலே  வேறு ஒரு அறையைக் காட்டி சைகையாலேயே போகச் சொன்னார்.

கொஞ்சம் என்னிடம்  விளக்கமாக சொன்னால் தான் என்ன என்று ஒரு சின்ன கோபம் வந்தது டாக்டர் மேல்..

சரி. உரலுக்குள் தலையை விட்டாகி விட்டது. ரொம்பவும் இடிபடாமல்  எடுத்துக் கொண்டு போய் விடுவோம் என்றெண்ணி  அடுத்த அறைக்கு சென்றேன்.

அங்கே ஒரு இளம்பெண்  வெள்ளைக் கோட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். என் பேப்பரை கையில் வாங்கிப் பார்த்து விட்டு ,

ஒரு கனத்தத் துப்பாக்கி  வடிவில் ஒன்றை எடுத்து அதில்  பேஸ்ட் போல் எதுவோ ஒன்றை  அப்பி  என் கையில் வைத்து சர் சர் என்று சுத்தி  மசாஜ் செய்ய வலி கொஞ்சம் குறைந்தது.

மெதுவாக அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.

" இந்த வலி  எனக்கு எதனால் வந்தது?"

" இதற்குப் பெயர் டென்னிஸ்  எல்போ" .

"அப்படின்னா....... "இது நான்.

"டென்னிஸ்  வீரர்களுக்கு  வரும் வலி."

" டென்னிஸ்  வீரரா...    நானா..........."( நினைக்கும் போதே சிரிப்பு வந்தது)

"நான் ஒன்றும் டென்னிஸ் விளையாடுவதில்லையே  ."

"டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல,  இப்பொழுது நிறைய பேருக்கு வருகிறது "என்று சொல்லி விட்டு  தன வேலையைத் தொடர்ந்தார்.

நான் விடுவேனா? 

"இது எதனால் வருகிறது? " மீண்டும் நான்.

நல்ல வேளை அந்தப் பெண்ணிற்கு கோபம் எதுவும் வரவில்லை.

முழங்கைக்கு  அதிக  பளு கொடுத்தாலும் வரும். " நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் " என்று அவள் கேட்க.

நான் என்ன செய்கிறேன்?

" எல்லோரும்செய்வது தான். வீட்டில் எல்லோருக்கும்  சமைப்பது , காபி போடுவது........மிச்ச நேரத்தில்   நெட் வலம் வருவது ."

"அதனால் கூட   வந்திருக்கும்."

" எதனால்   ...."ஆர்வமானேன்.

"உங்கள்  கம்ப்யுட்டரை  சரியான உயரத்தில் , கைக்கும்  சௌகர்யமான இடத்தில்  இல்லையானால் கூட வரும்" என்று அவர் சொல்ல புரிந்தது.

சமைக்கும் நேரம் தவிர,  மற்ற நேரம் பூராவும்  லேப்டாப்பும் கையுமாக அலைந்தால்  இப்படித் தான்  வலிக்கும் போலிருக்கிறது  என்று தோன்றியது.

வீட்டிற்கு வந்து, இனிமேல்  நம் வலை  உலாவை  கொஞ்சம்  குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

முடியுமா  ? 

சாப்பிடாமல்  கூட இருந்து விடலாம்.
இன்டர்நெட் வலையில்  மாட்டிக்  கொண்ட  நான் அதிலிருந்து விடுபடுவது மிகவும்   கஷ்டமாச்சே  !
ஆனந்த விகடனில் படித்தது  நினைவில்  மோதியது.

சென்ற மாதத்தில்  ஒரு வாரம் ஜப்பானில் " நெட்  ஃபாஸ்டிங்  " என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர்  இணையத்தை விட்டு வெளியே வந்து  ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக.

நம்மால் முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது. 
நண்பர்களை சந்தித்து உரையாடுவதே  வலையில் தானே. 

அதெல்லாம்  சரி. கைவலிக்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? தினம் சிறிது நேரம் கணினியைத் தனிமையில் இனிமை காண  விடுவது தான். 

என்னால் அப்படி விட  முடியுமா? 

முயன்று பார்க்க வேண்டும்.  

image courtesy----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்