" அடடா சட்னி தாளிக்கவில்லையே! " கவனித்தேன்.
கேஸில், இருப்புக் கரண்டி ,போட்டு விட்டு ,கடுகு பாட்டிலை அலமாரியிலிருந்து எடுக்க கையை உயர்த்த வலது முழங்கையில் ' பளிச் ' வலி.
கண்ணை மூடி வலியைப் பொறுத்துக் கொண்டேன்.
' எங்கேயாவது இடித்துக் கொண்டோமோ ' நினைத்துப் பார்த்ததில் ஒன்றும் புலப்படவில்லை.
அன்றைய பொழுது கழிந்தது. ஆனால் வலி அதிகமாகிக் கொண்டே போனது மட்டும் புரிந்தது. இரவு படுக்கும் முன் ஒரு வலி நிவாரணி மாத்திரை முழுங்கி விட்டுப் படுத்துக் கொண்டேன்.
காலை எழுந்ததும் ,பல் விளக்கும் போதே முழங்கை வலி,"நீ வலி நிவாரணி சாப்பிட்டால்.......நான் போய் விடுவேனா என்ன " என்பது போல் , அதிகமாயிருந்தது.
சரி, இனிமேல் சும்மா இருப்பது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம் ,என்பதை உணர்ந்து எங்கள் குடும்ப நல மருத்துவரை
அணுகினேன்.
இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவரிடம் என்னை அனுப்பினார்.
போனில் மாலை ஏழு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு சென்றேன்.
டாணென்று ஆறேமுக்காலுக்கு அவருடைய கிளினிக்கிற்குப் போனால் மிகப் பெரிய கும்பல்.
இது என்னதிது? கிளினிக் தானே. இதென்ன இவ்வளவுக் கும்பல்.
சரி. நமக்கென்ன நாம் தான் அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்கியிருக்கோமே! இவர்களெல்லாம் வாங்காமல் வந்திருப்பார்கள் என்று சவுடாலாக நினைத்துக் கொண்டு ரிசப்ஷனிஸ்ட் அருகே போய் நான் வந்திருப்பதை சொல்லி ஏழு மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் என்று சொன்னவுடன்.
ரிஷப்ஷனிஸ்ட் கடுகடுவென்று ." இவங்களைப் பாருங்கள் இவங்களுக்கு மாலை 3 மணி அப்பாயின்ட்மென்ட் . இன்னும் டாக்டரைப் பார்க்கவில்லை என்றதும் கொஞ்சம் மலைத்துப் போனேன்.
அந்தக் கும்பலில் நானும் ஐக்கியமானேன். நான் டாக்டரைப் பார்க்கும் போது மணி ஒன்பது.
நல்ல சிரித்த முகத்துடன், 'என்ன பிராப்ளம் " என்றார்.
நான் என் வலது முழங்கையில் வலியிருப்பதை சொன்னதும்.
அருகில் வைத்திருந்த ஸ்டீல் சுத்தி போல் இருந்த ஒன்றை எடுத்து மெதுவாக என் கை விரல்களைத் தட்ட ஆரம்பித்தார்.
" டாக்டர், எனக்கு முழங்கையில் தான் வலி " என்று சத்தமாக சொன்னதும் ,
தட்டுவதை நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார்.
" நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா ? " என்பது போல் இருந்தது பார்வை.
முழங்கை வலி என்று வந்தால் இவர் விரலையும் உடைத்து விடுவார் போல் தெரிகிறதே என்று நினைத்தேன்.
எத்தனை மாணவிகளுக்கு இம்போசிஷன் கொடுத்தேனோ !
தெரியவில்லையே. அந்தப் பாவம் தான் டாக்டர் ரூபத்தில் வந்து பழி தீர்த்துக் கொள்கிறதோ என்று தோன்றியது
ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. பத்திரமாக நம் கையையும் விரல்களையும் விடுவித்துக் கொண்டு சென்று விடுவோம்.என்று முடிவெடுத்தேன்.
எல்லா விரல்களையும் தட்டிப் பார்த்து சப்த ஸ்வரங்கள் கேட்கிறதா என்று பார்க்கிறாரோ என்று நினைத்தேன்.
(இதைத் தான்" இடுக்கண் வருங்கால் நகுக " "என்று வள்ளுவர் சொன்னாரோ!)
ஒருவழியாக சுத்தியலை கீழே வைத்து விட்டு மருந்து எழுத ஆரம்பித்தார்.
நான் டாக்டருக்குப் படிக்கவில்லை . ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால் அதுக்காக என் கைவலியைப் பற்றி கொஞ்சமாவது என்னிடம் சொல்ல மாட்டேனேன்கிறாரே என்று யோசிக்கும் போது டாக்டர் திருவாய் மலர்ந்தார்.
"" உங்கள் வலி வந்து............. "
" ஆயர்பாடி மாளிகையில்........" செல்போன் இடை மறித்தது.
போனிற்கு முதலுரிமை., காதருகில் கொண்டு போய் . ஹலோ என்று சொல்லிக் கொண்டே ..என்னைப் பார்த்து " Denniss ........" என்று சொல்ல
Deniss என்பவர் பேசுகிறார் போலிருக்கிறது என்று நான் நினைக்கும் போதே.
போனை கைகளால் மூடிக் கொண்டே . என்னைப் பார்த்து அழுத்தந்திருத்தமாக இது " டென்னிஸ் எல்போ "என்று சொல்லி விட்டு போனில் பேசத்தொடங்க நான் குழம்பினேன்.
அது என்ன" டென்னிஸ் எல்போ ?"
டென்னிஸ் விளையாட சொல்கிறாரோ என்று தான் முதலில் நினைத்தேன்.
இந்த வயதிற்கு மேல் டென்னிஸ் ஆட முடியுமா? இது என்ன தொல்லை என்று நினைக்கும் போதே அவர் அவ்ருடைய லெட்டர் பேடில் எதையோ எழுதிக் கொடுத்து போனை விட்டுக் கொடுக்காமலே வேறு ஒரு அறையைக் காட்டி சைகையாலேயே போகச் சொன்னார்.
கொஞ்சம் என்னிடம் விளக்கமாக சொன்னால் தான் என்ன என்று ஒரு சின்ன கோபம் வந்தது டாக்டர் மேல்..
சரி. உரலுக்குள் தலையை விட்டாகி விட்டது. ரொம்பவும் இடிபடாமல் எடுத்துக் கொண்டு போய் விடுவோம் என்றெண்ணி அடுத்த அறைக்கு சென்றேன்.
அங்கே ஒரு இளம்பெண் வெள்ளைக் கோட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். என் பேப்பரை கையில் வாங்கிப் பார்த்து விட்டு ,
ஒரு கனத்தத் துப்பாக்கி வடிவில் ஒன்றை எடுத்து அதில் பேஸ்ட் போல் எதுவோ ஒன்றை அப்பி என் கையில் வைத்து சர் சர் என்று சுத்தி மசாஜ் செய்ய வலி கொஞ்சம் குறைந்தது.
மெதுவாக அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன்.
" இந்த வலி எனக்கு எதனால் வந்தது?"
" இதற்குப் பெயர் டென்னிஸ் எல்போ" .
"அப்படின்னா....... "இது நான்.
"டென்னிஸ் வீரர்களுக்கு வரும் வலி."
" டென்னிஸ் வீரரா... நானா..........."( நினைக்கும் போதே சிரிப்பு வந்தது)
"நான் ஒன்றும் டென்னிஸ் விளையாடுவதில்லையே ."
"டென்னிஸ் வீரர்களுக்கு மட்டுமல்ல, இப்பொழுது நிறைய பேருக்கு வருகிறது "என்று சொல்லி விட்டு தன வேலையைத் தொடர்ந்தார்.
நான் விடுவேனா?
"இது எதனால் வருகிறது? " மீண்டும் நான்.
நல்ல வேளை அந்தப் பெண்ணிற்கு கோபம் எதுவும் வரவில்லை.
முழங்கைக்கு அதிக பளு கொடுத்தாலும் வரும். " நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் " என்று அவள் கேட்க.
நான் என்ன செய்கிறேன்?
" எல்லோரும்செய்வது தான். வீட்டில் எல்லோருக்கும் சமைப்பது , காபி போடுவது........மிச்ச நேரத்தில் நெட் வலம் வருவது ."
"அதனால் கூட வந்திருக்கும்."
" எதனால் ...."ஆர்வமானேன்.
"உங்கள் கம்ப்யுட்டரை சரியான உயரத்தில் , கைக்கும் சௌகர்யமான இடத்தில் இல்லையானால் கூட வரும்" என்று அவர் சொல்ல புரிந்தது.
சமைக்கும் நேரம் தவிர, மற்ற நேரம் பூராவும் லேப்டாப்பும் கையுமாக அலைந்தால் இப்படித் தான் வலிக்கும் போலிருக்கிறது என்று தோன்றியது.
வீட்டிற்கு வந்து, இனிமேல் நம் வலை உலாவை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.
முடியுமா ?
சாப்பிடாமல் கூட இருந்து விடலாம்.
இன்டர்நெட் வலையில் மாட்டிக் கொண்ட நான் அதிலிருந்து விடுபடுவது மிகவும் கஷ்டமாச்சே !
ஆனந்த விகடனில் படித்தது நினைவில் மோதியது.
சென்ற மாதத்தில் ஒரு வாரம் ஜப்பானில் " நெட் ஃபாஸ்டிங் " என்று செய்திருக்கிறார்கள். அவர்கள் செய்தது இளம் தலைமுறையினர் இணையத்தை விட்டு வெளியே வந்து ,நண்பர்கள் உறவினர்கள் என்று பழக வேண்டும் என்பதற்காக.
நம்மால் முடியுமா? முடியாது என்றே தோன்றுகிறது.
நண்பர்களை சந்தித்து உரையாடுவதே வலையில் தானே.
அதெல்லாம் சரி. கைவலிக்கு என்னதான் தீர்வு என்கிறீர்களா? தினம் சிறிது நேரம் கணினியைத் தனிமையில் இனிமை காண விடுவது தான்.
என்னால் அப்படி விட முடியுமா?
முயன்று பார்க்க வேண்டும்.
image courtesy----google.