Wednesday 26 February 2014

புலியும் நானும்


.
அன்று நல்ல தூக்கத்திலிருந்தேன்.........,யாரோ  கதவைத் தட்டுவது போல் சத்தம்  கேட்க, உற்றுக் கவனிக்க ஆரம்பித்தேன். ம்ஹூம் ..........பிராண்டுவது போலிருந்தது . ரஜாய்க்குள்ளிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி , கடிகாரத்தைப் பார்த்தேன்.  மணி  6 ஐத் தாண்டி விறுவிறுப்பாக  ஓடிக் கொண்டிருந்தது கடிகார முள்.   விடிந்து விட்டதே கட்டிலை விட்டு இறங்க, செருப்பைத் துழாவினேன்.போட்டுக் கொண்டேன். "பிப்ரவரியிலும் இப்படிக் குளிருகிறதே  .காலைக் கீழே வைக்க முடியவில்லையே." நினைத்துக் கொண்டேன்.

அப்பொழுது நாங்கள் இருந்தது 'மோதி நகரில்'. பிரதம் வேட்பாளர் திரு. நரேந்திர மோடி  அவர்களுக்கும் , நாங்கள் இருந்த மோதி நகருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது "மீரட்' நகர்  அருகிலிருக்கும் ஊர். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் , திரு.ஆர்னப்  கோஸ்வாமி போன்ற டிவி மக்கள்  வாயில் விழுந்து புரளும் முசாபர் நகர் அருகிலிருக்கும் ஊர்.

விஷயத்திற்கு வருகிறேன்.

ஸ்வெட்டரை சரி செய்து கொண்டே   கதவருகில் போவதற்குள் திரும்பவும் யாரோ பிராண்டுவது போலிருக்க, இப்பொழுது இன்னும் பலமாக  , கோபமாக கதவை உடைப்பது போல் சத்தம் வர,தாழ்ப்பாள் உடைத்துப் பிய்த்துக் கொண்டு வர  " கோன் ஹை " கேட்டுக் கொண்டே வர,  கதவுத்   தானாகத்   திறக்கவும், என் மாமியாரும்" யாரு "என்று கேட்டுக் கொண்டே வரவும் சரியாயிருந்தது.

கதவுத் திறந்தவுடன், முதலில் ஒரு நாற்றத்தை உணர்ந்தேன். பார்த்தால் வரி வரியாக கோடுகளுடன் புலி ஒன்று நின்றுகொண்டிருக்க .
நான் ,    புலி .........புலி ....   ஆ..................என்று கத்த  ஆரம்பிக்க,  கத்தல் பாதியிலேயே  தொண்டையுள் மாட்டிக் கொள்ள , என் மாமியாரோ அதிர்ச்சியில் அருகிலிருக்கும்  சேரில் மயக்கமாய் விழ, என்ன செய்வது என்று நான் முழிக்க, புலி சுதாரித்துக் கொண்டு உள்ளே சர சரவென்று தன் வாலை ஸ்டைலாக ஆட்டியவாறு உள்ளே நுழைந்தது.  உறுமல் சத்தம் இல்லாமல் பூனை போல் நுழைந்தது.

தூக்கம்  இன்னும் முழுதுமாக கலையாமல் , என் கணவர் ' அங்கே கிச்சனில் என்ன செய்கிறாய்? என்ன சத்தம்?  என்னமோ வாசனை  அடிக்குதே! ' என்று சொல்ல, நானோ புலியைப் பார்த்த அதிர்ச்சியில்  சிலையாய்..............

திரும்பவும் பதட்டத்துடன்  அவர் " ராஜி ராஜி "  என்று குரல் கொடுக்க , உடனே புலி  என்னமோ அவர் ,அதைத் தான் கூப்பிட்டது போல்,  குரல் வந்த திசையை நோக்கி  மெதுவாக நகர ஆரம்பித்தது.

அதற்குள்  LKG  படித்துக் கொண்டிருந்த என் பையன்  குதித்தெழுந்து , " தீதி தீதி  டைகர் பாரு " என்று குரல் கொடுக்க UKG படிக்கும் என்   பெண்ணும்   " ஹையா  , டைகர்  நம்மைப் பார்க்க வந்திருக்குடா"  என்று குதிக்க  எனக்கு  சகலமும் அடங்கிப் போனது.என் பெண்ணும், பையனும் பேசுவதைக் கேட்டு , அவரும் ரஜாயை  விட்டுத் தலையை நீட்டிப் பார்க்க , செய்வதறியாமல்  முழிக்க , எனக்கோ இந்தக் குழந்தைகள்  இருவரும்  கீழே இறங்கி விடப் போகிறதே என்று பதைபதைப்பு.

புலி இரண்டு  குழந்தைகளையும்  பார்த்து விட்டு, டைனிங் டேபிளை  நோக்கி  அசைந்தது. என்னவர் அதற்குள் இந்த  இரண்டு குழந்தைகளையும், இழுத்து ரஜாய்க்குள் திணித்து விட்டார். நான் சுவரோடு சுவராக, என் மாமியாரோ மயக்கமாய் சேரில்.புலியோ  டைனிங் டேபிளில் குதித்து ஏறியது.  நேற்றிரவு சாப்பிட்டு விட்டு  மிச்சமிருந்த சப்பாத்தி , கொஞ்சமாய் ராஜ்மா  எல்லாவற்றையும்   கீழே தள்ளி விட்டு  மெதுவாக முகர்ந்து பார்த்து விட்டு  என்னை நோக்கி ஒரு பார்வைப் பார்த்தது.(இதெல்லாம் ஒரு சமையலா? என்பது போல் தான்.)

பின் மெதுவாக  ஹாலில்  நின்றிருந்த என் பக்கம்  பார்வை ஓட்டிக் கொண்டே , என்னை  நோக்கி அடியெடுத்து வைத்ததது.ஒரு உறுமல் உறுமியது பாருங்கள்.இப்ப நினைத்தாலும் உடம்பல்லாம் நடுங்குகிறது.
பின்வீட்டில்  இருப்பவர்கள் இப்பொழுது தான்  எட்டிப் பார்த்தார்கள்."  பாக்....பாக்..." என்று அவர்கள் கத்த எனக்குக் கொஞ்சம்  ஆறுதலாயிருந்தது. அவர்கள் போலீசுக்கு சொல்லி விடுவார்கள் என்கிற ஆறுதல் தான்.செல்போன், இல்லாத நாட்கள் அவை. சாதரன லேண்ட்லைன் போன்  கூட கிடையாது அந்தக் காலத்தில். எங்களைக் காப்பாற்ற வேண்டுமானால்  வெளியாட்கள் யாராவது மனம் வைத்தால் தான் முடியும்.

உறுமலுடன் வந்தப் புலி வாயைத் திறந்து தன் பற்கள் எல்லாம் சிங்கப் பல்(?) உட்பட  ஒரு முறைக் காட்டி பயமுறுத்தி விட்டு வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தது. அப்பாடி.... வெளியே போய் விடும் என்று மெதுவாக மூச்சு விட ஆரம்பித்தேன்.  என் நினைப்பில் ஒரு வண்டி மண். நேராக போய் வாயிற்படியில், வாசற்படியின்  குறுக்காக, ஏதோ எங்கள் வளர்ப்பு நாய் போல் ,குறுக்கே படுத்துக் கொண்டு  தலையை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டது.இப்போதைக்கு இங்கிருந்து நான் நகரப் போவதில்லை என்று சொல்லாமல் சொல்லியது.


எங்கள் வீட்டின் முன் கூட்டம் சேர ஆரம்பித்தது. எல்லோரும் நல்ல தூரத்தில் நின்று கொண்டு பார்ப்பதோடு  இல்லாமல், அதை பூர்... பூர்... என்று சீண்ட வேறு ஆரம்பித்து விட்டார்கள்.  எப்படி இதை விரட்டுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன். அதற்குள் என் கணவர், குழந்தைகள் மெதுவாக எட்டிப் பார்க்க , நானோ புலியின் கைக்கெட்டிய தூரத்தில்., சுவரோடு சுவராக..

என் கணவர் ,என்னை அசையாமலிருக்க சைகை செய்து  பூனை  மாதிரி நடந்து சென்று கிச்சனில் கீழே வைத்திருந்த பக்கெட் அடுப்பு. ( வட இந்தியாவில் மிகவும் பிரபலமான கரியடுப்பு)  பற்ற வைத்திருப்பது, புகை வாசனையில் புரிய ஆரம்பித்தது. கிச்சனில் இருக்கும் புகைபோக்கி க்கருகில்  அதை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வளவு நேரம்  வீடு முழுவதும்  புகையாயிருக்குமெ. " ஏன் ஸ்டவ் என்னாயிற்று? " என்று கேட்காதீர்கள். கெரொசின் தட்டுப் பாடு காலம் அது. கொய்லா அடுப்பு தான்  சமையலுக்கு.. கொஞ்ச நேரத்தில் அடுப்பு பிடிக்க ஆரம்பித்து கரியெல்லாம் ' கண கண ' வென்று நல்ல சிவப்பாக  ஜொலிக்க , அந்த பக்கெட்டை எடுத்து வந்து மெதுவாக(இருக்கும் தைரியத்தையெல்லாம் திரட்டிக் கொண்டு)  புலியின் முன் வைக்க , அது  எழுந்து ஒரே ஓட்டமாய் , வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு மூன்று பேரை ஒரு தள்ளு தள்ளி விட்டு  ஓடிப் போய்விட்டது. நாலு கால் பாய்ச்சல் என்பதைக் கன்கூடாகப் பார்த்தேன்.நெருப்பைக் கண்டால் மிருகங்களுக்கு பயம் என்கிற  உபாயத்தின் மூலம்  உயிர் பிழைத்தோம்.  இங்கே பிடித்த ஓடடத்தை "மீரட்"டில் தான் போய்  திரும்பிப் பார்த்திருக்கும் என்று நினைக்கிறேன்.(அரை மணி நேரப் பிரயாண தூரம் தான்).

அட...... பாருங்கள் அந்தப் புலி மீரட்டில் தான்  மிரட்டிக் கொண்டிருக்கிறதாம்.
நேற்றைய செய்தித் தாளில்  செய்தி வந்திருக்கிறது பாருங்கள்.....


செய்தியைப படித்தவுடன் ," மீரட் "டிற்கு வெகு அருகாமையில்  ஒரு காலத்தில் வசித்திருக்கிறோமே என்று நினைத்துப் பார்த்தேன்.  கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு  புலியை  விருந்தினராக்கி மகிழ்ந்தேன். அவ்வளவே!

      SAVE OUR TIGERS. SAVE OUR NATION'S PRIDE

image courtesy---google.


Saturday 22 February 2014

மழையில் நனைகிறேன்.(பரிசு-2)மழையா? இப்பொழுது எங்கே மழை பெய்கிறது என்கிற சந்தேகம்  வருகிறதா?
இது வெறும் மழை இல்லை . பரிசு மழையில் நனைகிறேன் .

திரு. வை. கோபாலகிருஷ்ணன்  அவர்கள் நடத்தும் கதை விமரிசனப் போட்டி அனைவரும் அறிந்ததே.  ஓரிரு வாரங்களுக்கு முன்பு  என் விமரிசனத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. 

இதோ  என்னுடைய  மற்றொரு விமரிசனம் (காதல் வங்கி என்கிற சிறு கதைக்கு எழுதியது )   இரண்டாம் பரிசை  தட்டிச் சென்றுள்ளது. இரண்டாம் பரிசை  திருமதி கீதா மதிவாணன் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

' காதல் வங்கி ' என்கிற சிறு கதை  இந்த இணைப்பில்(http://gopu1949.blogspot.com/2014/02/vgk-04.html) . அதற்கு  நான் எழுதிய இரண்டாம் பரிசுப்  பெற்ற விமரிசனம்  கீழே ........

                                      -----------------------------------------------------

காதல்  என்பதே ஒரு மேஜிக் தானே!   மனிதர்களுக்குள்  எத்தனை, எத்தனை ஜாலங்கள் செய்யக் கூடியது இந்த  உணர்வு. அதைக் கருவாய் எடுத்துக் கொண்டு  அற்புதமாய் கதை சொல்லியிருக்கிறார் கோபு சார். இளம் வயதினர்  அனைவரும் படிக்க வேண்டிய காதல் கதை தான் இது. 

கண்டதும் காதல் என்று சொல்லிக் கொண்டு, புறத் தோற்றத்தையும்,  நுனி நாக்கு ஆங்கிலத்தையும், வங்கி கணக்கையும்  பார்த்து வருவதல்ல காதல் என்பதையே 'வங்கிக் காதல் ' விளக்குகிறது... அது எங்கு எப்பொழுது வரும் என்றே தெரியாது என்பது ஜானகி, ரகுராமன் காதல்  சொல்கிறது.  முதலில், இது என்ன பொருந்தாக் காதல் போல் தெரிகிறதே என்று நினைக்கத் தோன்றுகிறது. படிக்க படிக்க 
ரகுராமனின் உயர்ந்த குணங்கள் மட்டுமல்ல, அதைவிட உயர்ந்த குணங்கள் உடைய  ஜானகியே அவருக்கு உற்ற துணையாக வர வேண்டும் என்று தோன்ற  ஆரம்பித்து விடுகிறது. 


ஜானகியின் நடை, உடை, பாவனைகளை ஆசிரியர் விவரிக்கும் போதே  , ஜானகியுடன், நம் வீட்டுப் பெண்களை  ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. மனித இயல்பு தானே. அத்தனை உயர்ந்த, அழகுள்ள, கை நிறைய சம்பாதிக்கும்,  கலக்கலவெனப் பழகும்   ஜானகியை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும். ரகுராமன்  ஜானகியிடம் தன உள்ளத்தைப் பறி கொடுத்ததில் ஆச்சர்யமென்ன! 

ரகுராமனும், ஜானகியின் குணநலன்களுக்கு, சற்றும் குறைந்தவரில்லை.  ஆனாலும் அவர்  படிப்பு  சற்றே  நம்மை யோசிக்க வைக்கிறது. 
ஜானகிக்கு   வேண்டுமானால் அவர் மேல் காதல் என்று சொல்லலாம். அவள் தாய் , தன மகள்  படிப்பிற்கு ஏற்ற  , நல்ல படித்த  கை நிறைய சம்பாதிக்கும்  மாப்பிள்ளை வேண்டும் என்று நினைத்திருந்தால்  அது சகஜமே.  

இதையெல்லாம் தாண்டி ஜானகியின் தாய், கலாசாரத்திற்கும், ஆன்மீகத்திற்கும், கொடுக்கும் மரியாதை, தாய், மகள் உரையாடலில் நன்கு விளங்குகிறது. இப்படிப்பட்ட  ஒரு நல்ல தோழியே தாயாய் அமைந்த விதத்தில், ஜானகி  கொடுத்து வைத்தவள் தான். 

கண்டதும் காதல்,  உடனே ரெஜிஸ்தர்  திருமணம் என்று பதை பதைக்காமல், நன்கு யோசித்து, தங்கள் பொருளாதார நிலைமை சீராக்கிக் கொண்டு திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிகள், பல காதலர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம்  என்று சொன்னால்  மிகையாகாது என்றே நினைக்கிறேன். 

திருமணம்  முடிந்ததும், இருவரும் தங்கள், தங்கள் தொழிலை,  ஆரவமாய் கவனிப்பது அவர்களுடைய  முதிர்ச்சியைக் காட்டுகிறது.

 வில்லன் யாரும் வங்கிக் காதலுக்கு குறுக்கே வந்து நம்  இதயத்தை  படபடக்க வைத்து, பிபியை எகிற வைத்து ,  விடுவார்களோ என்ற பயம்  பாதிவரை இருந்தது.ஜானகியின் தாயின் உணர்வுகளை  ஆசிரியர் வில்லனாக்கி விடுவாரோ என்ற அச்சமிருந்தது உண்மை தான்,ஆனால்  அந்தத் தடையும் சட சட வென்று  முறித்த காதாசிரியருக்கு நன்றி.  பின் பாதியில், இந்தத்  தம்பதிகள்  திருமணம்  தடையில்லாமல் நடக்க வேண்டுமே என்ற வேண்டுதல்  மட்டுமே மிச்சம்  இருந்தது என்று சொல்ல, வேண்டும். 

திருமணத்தை  நடத்தி வைத்த கோபு சாருக்கு பாராட்டுக்கள்.  ஜானகி-ரகுராமன் தம்பதிக்கு வாழ்த்துக்களும், ஆசிகளும்.
 ஒரு காதல் கதையை, எங்கும் முகம் சுளிக்கும்படியாக இல்லாமல், மிகவும் நாசுக்காக, அதே சமயத்தில், காதலின் சாரம்  முழுவதும்  இருக்கும்படியான கதையை சொல்லியிருப்பதற்கு,  நன்றிகள்  ஆசிரியருக்கு.

பாராட்டுக்கள் கோபு சார்.

                                     -----------------------------------------------------------

பரிசளித்த நடுவருக்கும், வாய்ப்பளித்த திரு. வை.கோபாலகிருஷ்ணன்  அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.Tuesday 18 February 2014

உங்களுக்குத் தெரியுமா?
1. நீங்கள் வெளியில்  அழகாக உடையுடுத்தி செல்லும் போது , மக்கள் உங்களை  கவனிக்கிறார்கள் என்பது உங்களுக்குத்  தெரியும். அவர்கள் அவர்களையுமறியாமல் உங்கள் காலணிகளைத் தான் முதலில்  பார்க்கிறார்கள் என்று தெரியுமா? 
( இது " Bata "கடை விளம்பரம் இல்லை. உளவியல் உண்மை . நம்புங்கள்)

2.  நீங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து  பணி  புரிபவரா? ஒரு நாளைக்குப்  பதினோரு மணி நேரம் இப்படியே  உட்கார்ந்திருந்தால்  கண்டிப்பாக இன்னும்  மூன்று வருடங்களில்  உங்களுக்கு  ஏதாவது  வியாதி வந்தே தீரும் .
(நான் சொல்லவில்லை. ஆய்வறிக்கை சொல்கிறது. )

3.உங்களைப் போல் அச்சு அசலாக  இன்னும் ஆறு பேர் உலகில் உள்ளனர். 
( போதும் நீ விடும் ரீல்  என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது.) ஆனால் நீங்கள்  ஆறுபேரில் ஒருவரையாவது  உங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக  சந்திக்கப் போகிறீர்கள். சந்தித்தால்  என்னிடம் சொல்லுங்கள். இது சாத்தியம் தானா என்று அறிய எனக்கும் ஆவல்.

4." முதுகெலும்பில்லாத கோழையா? "  என்று யாரும் உங்களைப் பார்த்து கேட்கக் கூடாதென்றால் , தூங்கும் போது தலையனை  வைத்துக் கொள்ளாதீர்கள்.  முதுகுவலியும் வராது, முதுகெலும்பும் உறுதி படுமாம்.

5. ஒருவரின் உயரத்திற்கு  அவர் தந்தையும், அவருடைய  எடைக்குத் தாயும் காரணம்.
( சான்றோனாக்கி உயர்த்துதல்   தந்தையும், ருசியான உணவளிப்பதும் தாய் தானே)

6.அலுவலக மீட்டிங்கில்  இருக்கும் போதே கண்ணை செருகிக்கொண்டு  தூக்கம் வருகிறதா? கவலை வேண்டாம். தலையை  இடமும் வலமுமாக ஆட்டுங்கள் . தூக்கம் கலைந்து விடும். 
(ஆனால்  தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தால் , உங்கள் பாஸ் , கண்டு பிடித்து விடுவார். ஜாக்கிரதை)

7. நம் மூளை நம்மை ஏமாற்றாது . நல்ல உணவு, கவர்ச்சியான, அழகான மனிதர்கள்,  ஆபத்து நெருங்குதல்.  இவை  மூன்றையும் உங்களுக்கு கண்டுபிடித்துக்  காட்டிக் கொடுத்து  விடும்.

8.நீங்கள் டீ  பேக்ஸ்  உபயோகித்து டீ  குடிப்பவரா?? அப்படியென்றால் உங்கள்  ஷூ வில்  துர்வாசனை  வராது. (டீக்கும்  ஷூக்கும் என்ன சமபந்தம்  என்று யோசிக்க வேண்டாம். டீ  குடித்த பின்பு, அந்த டீ பேகை ஷூவிற்குள்  போட்டு வைத்தால், துர்நாற்றத்தை அது உறிஞ்சிக் கொள்ளும்.

9.  தேனீக்களை  நம்பி தான் மனித இனமே இருக்கிறது. தேனீக்கள்  உலகை விட்டு  அழிந்து விடுமானால் நான்கு வருடங்களுக்குள்  மனித இனம் பூண்டோடு  அழிந்து போகும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்   நம்மை எச்சரித்து விட்டு சென்றிருக்கிறார்.  ஆனால் நாம் கேட்பதாயில்லை. தேனீக்கள் அழிந்து வரும் உயிரின வகையில்  சேர்ப்பதில் படு தீவிரமாக இருக்கிறோமே!

10. உலகில் எத்தனை வகை ஆப்பிள்கள் இருக்கின்றன  என்று தெரியுமா உங்களுக்கு?  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு  வகையான ஆப்பிளை  சாப்பிட்டுக் கொண்டே வந்தால்  எல்லா வகையான ஆப்பிள்களையும் சாப்பிட சுமார் இருபது வருடம் ஆகும்.

11. உண்ணா விரதம்  இருக்கப் போகிறீர்களா? பயம் வேண்டாம்.  உண்ணாமல்  பல வாரங்கள்  வரை நாம் உயிர் வாழலாம். சாப்பிட்டா விட்டாலும் பரவாயில்லை. தூங்காமல் இருக்க வேண்டாம்.   உறங்காமல் பதினோரு  நாட்களுக்கு மேல்  ஒருவரால்  உயிர்  வாழ முடியாது.

12. அதிகமாக சிரிப்பவர்கள்  அதிக நாட்கள்  உயிர்  வாழலாம் . அதனால் சிரித்துக் கொண்டேயிருங்கள்.  ( உங்களை " ஒரு மாதிரி " என்று  யாராவது நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல)

13. நம் மூளையின் சக்தி எவ்வளவு  என்று தெரியுமா? விக்கிபிடீயாவைப் போல் ஐந்து மடங்கு  விஷயங்களை  சேகரித்து வைத்துக் கொள்ளும் ,என்கிற செய்தி  ஆச்சர்யமளிக்கிறது  இல்லையா!

14.நம்  மூளைக்கும்  மின்சாரம் தேவைப்படுவது  தெரியுமா?  பத்து வாட் பல்ப்  எரிவதற்குத் தேவையான  மின்சாரத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறது. நம் மூளை . ரகசியமாக இருக்கட்டும் இந்த செய்தி. இல்லையென்றால் மின்சார வாரியம்  அந்த மின்சாரத்திற்கும்  கட்டணம்  கேட்கும் . .

15. மன உளைச்சலுக்கு ஒரு மாமருந்து இருக்கிறது. என்ன என்கிறீர்களா?
புன்னகை.  முடிந்தவரை  புன்னகைத்துக் கொண்டே இருங்கள்.  மன உளைச்சல் உங்களை விட்டு ஓடியே  போய்  விடும்.

எங்கேயிருந்து இத்தனை விஷயங்களை  எடுத்துப் போட்டு இம்சிக்கிறாய் என்று  கோபப்படாதீர்கள். முக நூலில்  வலம் வந்து கொண்டிருப்பவை தான்.
அதே முக நூலில் நாங்களும் இருக்கிறோமே என்று  கோபம் வேண்டாமே!
                 
                           SMILE ! It is the ultimate antidepressant.

image courtesy-----google.

Sunday 2 February 2014

முதல் பரிசு.(பரிசு-1)வலையுலகில்  மிகப் பிரபலமான பதிவர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறுகதை விமரிசனப் போட்டி  ஒன்றை நடத்திக் கொண்டிருக்கிறார்." தை வெள்ளிக்கிழமை " என்கிற  சிறுகதைக்கு நான்  எழுதிய  விமரிசனத்திற்கு  முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் பரிசை  திரு. ரமணி  சாருடன் பகிர்ந்து கொள்வதில்  எனக்குப் பெரு மகிழ்ச்சி.

' தை வெள்ளிக்கிழமை '  சிறு கதைக்கான இணைப்பு இதோ
அந்த சிறு கதைக்கான என் விமரிசனம்  இதோ 

தை வெள்ளிக்கிழமை '  கதை தாய்மை பண்பு மிளிரும் கதை.

கதையில் ருக்குவும் அவள் கணவரும்  எடுக்கும் முடிவுக்கு  வறுமை  மட்டுமே காரணம் என்பதை அருமையாய் விளக்கியிருக்கிறார் கதாசிரியர்.

இந்தக் கதை திரு. வை. கோபாலகிருஷ்ணன்   எழுதும் போது வாடகைத் தாய்மார்கள் இவ்வளவு பிரசித்தம் இல்லையென்றே நினைக்கிறேன். ஆனால் இப்பொழுது நிறைய வாடகைத் தாய்மார்கள்  , நம் கண்ணெதிரே உலவிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் எல்லோருமே தாய், பிறகு தான் அவர்கள்  தத்துக் கொடுக்கும் தாய்  என்பதை அழகாக விள்ங்க வைத்துள்ளார் கதாசிரியர். 

ருக்கு தாய் தானே! எப்படி தத்துக் கொடுக்க ஒத்துக் கொண்டாள் என்று  தோன்றலாம். ஔவையார் சொல்வது போல், வறுமை கொடிது ஆயிற்றே! அந்த நேரத்தில்  வளமான தன நான்கு குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமல்ல பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்காலமும்  அவர்களை அந்த முடிவை நோக்கித் தள்ளி விட்டு விட்டது.

தத்து கொடுத்து விடுவார்களோ என்கிற பதை பதைப்பு படிக்கும் போது ஏற்படுவதை  தவிர்க்க முடியாது..

 நான்கு குழந்தைகளின் எதிர்காலம், கணவரின் தொழில், பிறக்கப் போகும் குழந்தையின், வளமான எதிர்காலம், என்று  ருக்குவும் அவள் கணவரும் தத்துக் கொடுக்க தீர்மானித்தாலும், எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர்களுக்கு குழ்நதை மேல் இருந்த பாசமே இறுதியில்  வெற்றி பெறுகிறது.அப்பாடி......என்று பெருமூச்சு விடத் தோன்றுகிறது. 

காரணம் சொல்ல வேண்டுமே மறுப்பதற்கு  என்பதற்காக " அஞ்சாம் பொண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது ,அதுவும் தைவெள்ளிக்கிழமை " என்று சொள்கிறார்கள் என்பதே என் கருத்து.  . அவர்கள்  பாசத்தின் முன் , வறுமை தோற்றோடிப் போனது . பணம் எவ்வளவு வலிமை வாய்ந்த ஆயுதம் என்றாலும் , இறுதியில் பாசம் தான் வெற்றி பெறும் என்று சொல்லி விட்டது கதை. பணமா,  பாசமா என்கிற  சவாலில் பாசத்தை வெற்றி பெற செய்ததற்கு  மிக்க நன்றி கோபு சார்.

தத்துக் கொடுக்கும் தாய் மார்களும், வாடகைத் தாய்களுக்கும் ஏற்படும் மனப் போராட்டத்தை விளக்கும் கதை. ஆயிரமாயிரம் ருக்குக்கள்  இன்னும் இந்த சமுதாயத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். ருக்கு தன முடிவை மாற்றிக் கொண்டதும் கோபப்படாமல் , அவர்கள் நிலைமையை புரிந்து கொண்ட டாக்டர் மரகதத்திற்கு பாராட்டுக்கள்.டாக்டர் மரகதம் போன்று எல்லா டாக்டர்களும் இருந்தால் மகிழ்ச்சி தான்.

மொத்தத்தில் தாய்மையின் உன்னதத்தை அழகாய் எடுத்துக் காட்டிய கதை.

                                   ------------------------------------------------------------------

இந்த அருமையான வாய்ப்பினை  தந்த திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும்,  என்  விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த  நடுவருக்கும்


                                                                  நன்றி!  நன்றி !images courtesy----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்