Wednesday 30 January 2013

மறந்து போச்சே!!















TV  பார்த்துக்  கொண்டிருந்த நான்   அவசரமாக   சமையலறை  சென்றேன்.

அங்கு போன பின்   அப்படியே  சிலையாக    நின்றேன். கேஸ்  ஸ்டவையே  பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருசிலவினாடிகள். ஆனால்   எதற்கு  சமையலறை வந்தேன். சுத்தமாக    மறந்து போனேன்.

வந்ததற்கு  தண்ணீராவது   குடிப்போம்  என்று  குடித்து விட்டு மீண்டும்   ஹாலிற்கு   சென்றேன்.

என்   கணவர்   "என்ன  ஆச்சு  ?"  என்று  கேட்க

வடிவேலு    பாணியில்   "என்ன  ,....      என்ன  ஆச்சு"  என்று திருப்பிக்   கேட்டேன்.

"காபி   கேட்டேனே...........   என்ன ஆச்சு   ?"  என்று   அழுத்தம்   திருத்தமாக   அவர் திருப்பிக்   கேட்ட பின்  தான்   புரிந்தது.   நான்  என்ன மறந்தேன்   என்று.

சில சமயங்களில்   பிரபல   சினிமா நடிகர்  நடிகையர்   பெயர்  சட்டென்று  
மறந்து  போகிறது.

எதாவது    முக்கியமான    டாகுமென்ட்ஸ்   எதையாவது    உள்ளேயிருந்து  எடுத்துக்  கொடு  என்று    என்னிடம்  கேட்டால்  வீட்டையே  தலைகிழாக  கவிழ்த்துப்   போட்டு   அதிலிருந்து  தேடி  கொடுக்கிறேனாம்.  இதை சொல்வது என் கணவர்.

அதனால் இப்பொழுது எல்லாம்  நான்   search time என்று  ஒரு நாள் வாங்கிக்  கொள்கிறேன்.

சரி    இது   எதனால்    இப்படி  மறக்கிறேன்?  ஒரு வேளை    இது dementia,  Alzheimer's disease   ஏதாவதாக   இருக்குமோ,   என்னவோ   என்று  கலங்கிப்  போனேன்.(இதற்குத்  தான்  எதையும்   அரை குறையாகத்  தெரிந்து  வைத்துக் கொள்ளக்  கூடாது  என்கிறது)

ஆரம்பித்திலேயே   சிகிச்சை   ஆரம்பித்துவிடலாம்,(சிகிச்சை  செய்யும் அளவிற்கு   வியாதி முற்றிவிட்டது )    என்றெண்ணிக்  கொண்டு  எங்கள்   குடும்ப  மருத்துவரை   அனுகினேன்.    அவரிடம்  என் பயத்தை   எடுத்துக்   கூறினேன்.

'எப்படி உனக்கு இந்த வியாதிகள்   பற்றித்தெரியும் ?' என்று  கேட்க  பெருமையாக  சொன்னேன்   சென்ற மாதம்  படித்த   ஒரு   ஆங்கில  வாரப்  பத்திரிக்கையின்  பெயரை.

'அப்புறம்  என்ன கவலை உனக்கு?    நீதான்   போன    மாதம்  படித்ததை   அழகாக பேர்  மறக்காமல்    சொல்கிறாயே   ?  நீயாக   கற்பனை  செய்யாதே  எதையும் ?
சினிமா நடிக நடிகையர்   பெயர் மறந்தால் என்ன ? ஒன்றும்  கெட்டு   விட வில்லை '. ,  என்று திட்டி விட்டு   வாங்கிய    பீஸிற்கு     வைட்டமின்  மாத்திரை  எழுதி  கொடுத்து விட்டு   ,ஒரு  துண்டு அறிக்கை  ஒன்றும்  கொடுத்தார்.

 வயதாவதால்  ஏற்படும் சாதாரண   மறதிக்கும்,  பெரிய  மறதி  வியாதிக்கும்   இருக்கும்  மிகப்  பெரிய  வித்தியாசங்களை  அது   எடுத்துக்  கூறியது.

வயதானால்   மறதி    ஏற்படுவது  உண்டு.
எல்லா மறதிகளும்  Alzheimer's disease   என்று பயப்பட வேண்டாம்  என்று   கூறியது  அறிக்கை.

சாதாரண  மறதியினால்   ஏற்படும்   தொல்லைகளோ   ஏராளம்.

மறதிக்கு   ஏதாவது    தீர்வு  இருக்கிறதா  என்று  அந்த அறிக்கையில்   தேடினேன்.

கிடைத்தது.

உடற்பயிற்சி  உடல் நலத்திற்கு மட்டுமல்ல  மன  நலத்திற்கும்  நல்லது  .
டையாபிடிஸ் ,இதய நோய்  ,மன அழுத்தம்   மட்டுமல்ல  இவற்றோடு  
இலவச  இணைப்பாக   வரும் மறதியையும் , உடற் பயிற்சி   கட்டுப்படுத்தும் என்கிறது.
 
வயதானவர்களுக்கு   உடற் பயிற்சியா?  என்று நினைப்பது  புரிகிறது.
நடை   பயிற்சியும்    உடற்  பயிற்சியே !
இதை    நான்   சொல்லவில்லை.     நடை  பயிற்சி,   மறதி  நோய்  வராமல்   தடுக்கிறது  என்று அமெரிக்காவின்  ஆராய்ச்சி  ஒன்று சான்றுகளுடன்  விளக்குகிறது..

நண்பர்கள்   உறவினர்கள்   சூழ  இருப்பதும்,   மறதி வராமல்   தடுக்கும்..

வலை  பதிவாளர்கள்   எல்லோரும்   மறதி  நோயை  சுலபமாக  விரட்டி  அடித்து    விடலாம்  போலிருக்கிறது.

பச்சை  காய்கறிகள்,  பழங்கள் ,   நிம்மதியான   நல்ல  தூக்கம், படிப்பது ,   sudoku   போடுவது   ,  செஸ்   விளையாடுவது  ,  எழுதுவது   எல்லாமே  மறதி   வருமுன் ,   காக்கும்.

இதைப்  போல்  நிறைய  சொல்கிறது   அந்த அறிக்கை

சரிஇதெல்லாம் கிடக்கட்டும்.  என்   கணவர்  திருமண   நாளை    மறந்து  விடுகிறாரே  .   .என்ன செய்வது ?    யோசித்தேன்.................

 ஹாலில்  தொங்கும்      காலண்டரில்   தேதியைக்    நல்ல  கலர்  மார்க்கரால்  கலர்  செய்து,,   அவரிடமும்  சொன்னேன்.
  
 ஊஹூம்  ............ அப்படி   செய்தும்......திருமண  நாளன்று   அவர்   என்ன  சொன்னார்    தெரியுமா ,  காலண்டரைப்   பார்த்துக்கொண்டே ,  ".ஓ...மறந்து   போச்சே ".




படித்தீர்களா   paatti  stories   ?  . படித்து   நிறை  ,குறை   எழுதுங்களேன்.

image courtesy--google.


Sunday 27 January 2013

மீன் பிடிக்கக் கற்றுக் கொடுக்கிறேன் !!!










நேற்றுக்   காலை  பெங்களுரிலிருந்து  என் மருமகள்  போன்.
ஒன்றரை  வயது  பேரனிற்கு  ஜுரம்.  3  நாட்களாகி  விட்டதே  ஜுரம்  இன்னும் விட வில்லையே.
என்று வருந்தினாள்.  ஒரு தாயின்   பதைபதைப்பு   அவள்  குரலில்   தொனித்தது.

"கவலைப்படாதே.  எல்லாம் சரியாகிவிடும்"  என்று கூறி விட்டு"  நான் வேண்டுமானால்   துணைக்கு   வரட்டுமா?"  என்று கேட்டேன்.
"நானே பார்த்துக்  கொள்கிறேன்  .உதவி தேவை  என்றால்  உங்களிடமோ   அம்மாவிடமோ   சொல்கிறேன்  .யாராவது  ஒருவர் வாங்க  ". என்றாள்.

போனை வைத்து   விட்டேன். ஆனால் மனம்  ஒரு நிலையில் இல்லை.
இரண்டு பேரும் சிறியவர்கள்  ஆயிற்றே. . பயந்து போய்  விடுமே  இரண்டும்.
என்று துடித்த மனதிற்கு  கடிவாளம்  போட்டபடி   எழுந்தேன்.

பூனைக்  குட்டியாய்   படுத்திருந்த போன்  மீண்டும்  சினுங்கத்  தொடங்கியது.

இது   மகளிடமிருந்து.

"அம்மா,என்ன  அபினவிற்கு    உடம்பு சரியில்லை  போல  தெரிகிறதே  .
நீ  பெங்களுர்   போகவில்லையா? "  என்று கேட்டாள்.

" இல்லை  அவர்களே  பார்த்துக்   கொள்வார்கள்"   என்று  கூறினேன்.

"ஏன்  சென்னையில்  என்ன வெட்டி  முறிக்கிறாய்?  போக வேண்டியது தானே " ".இது மகள்.

அவள் கவலை  அவளுக்கு.
தன தம்பி,அவன்   மனைவி, மருமகன்  கஷ்டப்படப்  போகிறார்களே   என்று.

"மஞ்சு     naturopathy ல்   டாக்டர்   தானே . அவளுக்கு எல்லாம் தெரியும்  .
அதவும் இல்லாமல் இளம்   தம்பதிகள்  தனியாக,   இந்த மாதிரி   சவால்களை   சந்திக்கும்  போது , நிறைய விஷயங்களைக்  கற்றுக்  கொள்வார்கள் ."

"அவர்களிடையே    நெருக்கம், புரிதல்  எல்லாம் கிடைக்கும்.
சவால்களை   தனியாக  சமாளிக்கும்  திறன்   வரும்."

"அதுவும் இல்லாமல்  ஆங்கிலத்தில்   ஒரு பழமொழி உண்டு.

"ஒருவன் பசியோடிருக்கும்   போது  அவனுக்கு   மீன்   கொடுத்து  பசி  தீர்ப்பது   அந்த நேரத்துப்   பசியை  கண்டிப்பாக  தீர்க்கும். அது     உபகாரமே.

அதை   விட   அவனுக்கு   மீன்  பிடிக்கக்   கற்றுக்   கொடுப்பது   தான்   பேருபகாரம்.

அதைத்  தான் செய்கிறேன் ."  என்றேன்.

"நான் ஒன்று கேட்டால் நீ ஒன்று சொல்கிறாய்  " என்று அலுத்துக் கொண்டு  போனை  வைத்து விட்டாள்.ஆனால் அவளுக்கு  நான் சொல்ல வந்தது  புரித்து  போல்   தெரிந்தது.

இந்த   மீன் பிடிக்க     கற்றுக்கொடுக்கும்  விஷயத்தை   என்  மகளும்  மருமகளும்   அவர்கள்  மகளுக்கும், மருமகளுக்கும்   கொண்டு போய்  சேர்க்க  வேண்டும்   என்று  ஆசைப் படுகிறேன்.

இருவரும்  செய்வார்கள்  என்றும்   நம்புகிறேன்.

image courtesy--google.

Friday 25 January 2013

கோலம்........... ஒரு மந்திர ஜாலம்.



கோலங்கள்    நகரங்களில்     மறைந்துக்   கொண்டிருக்கும்    ஒரு கலையாகி விட்டதென்றே  நினைக்கிறேன்.

மிக  அதி காலையில்  எழுந்து  வீட்டு  வாசலில்  ,பசுஞ்சாணி  நீரால்   வாசல்  தெளித்து   அரிசி மாவினால்   புள்ளி  வைத்து  கோலம்  போடுவதை  இக்கால நவநாகரீகப்   பெண்கள்    பலர் அறிய   மாட்டார்கள்  என்றே   நினைக்கிறேன்.

வீட்டு வாசலைக்   குனிந்து  பார்க்கவே   நேரமில்லை.
கழுத்தை  நெறிக்கும்  வேலை.

அது மட்டுமா?
வெளியே  நடந்து போகும் போதும்  , ICU  விலிருந்து  தப்பித்து வந்தவர்கள்   போல்   காதுகளிளிருந்தும்   கைக்கும்   ஒயர் ராக   தோ    தொங்கிக்  கொண்டிருக்க    (ஆண்கள், பெண்கள்  இருவரும்  இதே மாதிரி)   எங்கேயோ   பார்த்து  பேசிக்கொண்டே    நடக்கிறார்கள்.
 இதில்    கோலம்   போடுவதாவது............

வீடுகள்  எல்லாம்   அடுக்கு மாடிக்  குடியிருப்புகளாதால்  கோலத்திற்கு  தான்  கேடு.

சரி,    தனி    வீடுகளிலாவது    கோலம்  இருக்கிறதா என்றால்   அங்கும்   அதனுடைய    முக்கியத்துவத்தை   இந்து   வெகு நாட்களாகி விட்டன.    


அங்கெல்லாம் கோலம் இருக்கிறது   ஆனால்  ஒரு சில வீடுகளைத் தவிர  பெரும்பாலான   வீடுகளில்        பெயிண்ட்  அல்லது   ஸ்டிக்கர்   கோலம்  தான்  நம்மைப்  பார்த்து  சிரிக்கும்.


ஆனால்,  மறைந்த  கோலத்தில்  தான்     எத்தனை  எத்தனை   விஷயங்கள்  அடக்கம். .

மார்கழி   மாதத்தில்   முன்பெல்லாம்    பெரிய பெரிய   கோங்கள்   வீட்டு
வாசலை   அடைத்திருக்கும். 

நீ முந்தி,   நான் முந்தி   ,  உன் கோலம் பெரிதா , என் கோலம்   பெரிதா  என்று விட்டிற்கு   வீடு   ,   அறிவிக்கப்படாத   கோலப்போட்டியே  நடக்கும்.

கோலம் போடும் பெண்களுக்குத் துணையாக அந்தப் பெண்ணின்    கணவரோ,

சகோதரரோ   அந்த அதிகாலை   நேரத்தில்    தலையில்   மப்ருடன்    அவரும்     தூய்மையான    ozone  காற்றை   சுவாசிப்பார்.   

கணவர் ,  மனைவி   கோலம் போடும் அழகையும் ,  கோலத்தின்   அழகையும்   சேர்ந்தே    ரசிக்கலாம்.

புத்துணர்ச்சி  கிடைக்கும்.

கோலத்தைப்   போட்டுவிட்டு   கையில்   கோலப்பொடி   டப்பியுடன்  அப்படி நின்று,   இப்படி நின்று   தான் போட்ட கோலத்தை   பெருமிதத்துடன்   பார்க்கும் போதே   தன்னம்பிக்கை   அவளுக்குள் ஊற்றெடுப்பதை   கண் கூடா  காணலாம்.

கோலம் போடுவதும்   ஒரு யோகப் பயிற்சி   என்று தான் கூறுகிரார்கள் .
சரியான இடைவெளி  விட்டு  , புள்ளி   வைத்து   ,அதை   லாவகமாக   வளைத்து  , வளைத்து,  இழைகள்   இடும்போது    அந்தப்   பெண்மணி   தானும்   அல்லவா  குனிந்து, வளைந்து, கைகளை  நீட்டி   , மடக்கி,  கால்களை  அங்கு மிங்கும்   கோலத்தின்   மேல்  படாமல்   நேர்த்தியாக  நகரும்  போது   பார்த்தால்   ,  நமக்கு ஒரு  யோகா  செண்டர்  நினைவிற்கு    வருவதைத்   தடுக்க  முடியாது.

  
குழந்தை   பிறந்து   காப்பிடும்    வைபவத்தில்    ஆரம்பித்து   நூற்றாண்டு   விழா  வரை    ,வாழ்வின்  ஒவ்வொரு  மகிழ்ச்சியான   விழாக்களை  அமர்க்களமாய்   நாம்   கொண்டாடுவதை,   வெளியுலகிற்கு   அறிவிக்கும்   அறிவிப்புப்  பலகை   என்றே கொள்ளலாம். 


கோவில்  திருவிழாக்களிலோ,  கல்யாண  வீடுகளிலோ   ,   தீபாவளி   பொங்கல்  போன்ற பண்டிகை  நாட்களிலோ   கோலத்தின்   முக்கியத்துவத்தை     சொல்லவே வேண்டியதில்லை.

அரிசி மாவினால்  கோலமிடும் போது   எறும்பிற்கும்   உணவளித்து 
  food pyramid  ஐ    ம்மை    றியாமலே   காப்பாற்ற முனைகிறோம்.  அதை சுற்றி இடும்   செம்மண்,  தீய சக்திகள்   வீட்டிற்குள்   வர விடாமல்   தடுக்கும்   என்று   பெரியவர்கள்    சொல்லக்  கேட்டிருக்கிறேன்.

 கோலத்தைப்   பற்றியெல்லாம்   ஆய்வுகள்   மேற்கொள்ளப்   படுவது   சற்றே நம்  புருவத்தை  உயர்த்துகின்றன.

கோலம் போடும்   பெண்கள்  கணிதப்  பாடத்தில்   சிறந்து  விளங்குவதற்கான  சாத்தியக் கூறுகள்  ஏராளம்  என்கிறார்,.ஒருகணிதப்   பேராசிரியை.

கோலப்பொடியை   வில்களிற்கு  இடையே   எடுத்து இடும் போது  மூளைக்கு
செல்லும்  நரம்புகள்    தூண்ப்படுவதால்   ,மண வளர்ச்சிக்   குன்றிய  குந்தைகளுக்கு   ஒரு தெரபியாகக்  கொடுக்கிறார்கள்   என்று   தகவல்.


நம் கோலத்தின்   அருமை  புரிந்த  அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும்  கூ   இதில்   ஆர்வம்  காட்டுவதாக   பிரெஞ்சு  ஆய்வாளர்   ஒருவர் கூறுகிறார்.
 அதற்காகவே   இந்த ஆய்வாளர்   வருடா வருடம்   மார்கழி   மாதத்தில்   சென்னை  மைலாப்பூர்   வந்து   தங்கி   விடியோவும்   மைலாப்பூர்  மாமிகளை  பேட்டியும் ,   எடுத்து  செல்வதாக  பத்திரிகை   செய்தி  கூறுகிறது.  

இத்தனை  இருந்து என்ன..........

நம்   மாறி  வரும்  வாழ்க்கை   முறை,   அடுக்கு   மாடிக்    கட்டடங்களின்
 ஆக்கிரமிப்பு,     போன்ற  காரணங்களால்   கோலமிடும்   கலை   நம்மிடையே   மெல்ல  மெல்ல    அழிவது   தெரியாமல்   அழிந்து  கொண்டிருக்கிறது

எல்லாமே    காலத்தின்    கோலம்!!!!


image courtesy- google.

Wednesday 23 January 2013

தன்னம்பிக்கை.











 இணையத்தில்   படித்த கதை.

சுதந்திர தினத்தை ஒட்டி   நடந்த கதை.

குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிற வேளையில்   நினைவிற்கு  வந்தது.

கதைக்குப் போவோம்..


வெளிநாட்டு இளைஞன்  ஒருவன்  பட்டப்படிப்பு   படித்து முடித்து  விட்டு

வேலைத் தேடி அலைகிறான்.  ஏற்கனவே நிறைய வேலையில் சேர்ந்து,    ஒத்து வராமல் ஒரு  வேலை விட்டு இன்னொரு  வேலை என்று தாவிக் கொண்டேயிருக்கிறான்.

காரணம்  வேலை   பிடிப்பதில்லை.(உண்மையில்,  வேலையில்  பிடிப்பில்லாமை,,  தன்னம்பிக்கை   இல்லாமை......இப்படி  ' இல்லாமை '  தான் நிறைய.....)

ஒரு நண்பனின் உதவியுடன்  ஒரு பத்திரிகையில்   நிருபராக  சேர்கிறான்.

சேர்ந்தவுடன், அந்தநாட்டின்  சுதந்திர தினம்   வருகிறது.இந்த இளைஞனிற்கு
அந்நாட்டின்   முக்கிய  அலுவலகத்தில்  நடக்கும் சுதந்திர விழாவைப்  பற்றிய   அறிக்கை   சமர்ப்பிக்க   வேண்டிய   பொறுப்பு   அளிக்கப்படுகிறது.

இது அவனுடைய  முதல்  சந்தர்ப்பம்.மிக சிறப்பாக  செய்ய   வேண்டும்.  இந்த வேலையிலாவது   நிலைக்க வேண்டும்  என்பது  அவனுடைய  விருப்பம்.

அதனால் இந்த சந்தர்ப்பம்   தனக்கு கிடைத்தது   அதிர்ஷ்டம்  என்று நினைக்கிறான்.எடுத்தவுடனே  எவ்வளவு பெரிய பொறுப்பு ?

 உற்சாகத்துடனேயே      சென்று   ,நிகழ்ச்சி   தொடங்க   காத்திருக்கிறான்.

நேரம்  ஆகிக் கொண்டேயிருக்கிறது.   விழா ஆரம்பித்த பாடில்லை.  தேசியக்  கொடி,     இன்னும்  ஏற்றப்படவில்லை.

சிறிது நேரம்  கழித்து , ஒரே  சலசலப்பு.   என்னவென்று   புரியவில்லை.  ஒவ்வொருவராய்  அரங்கை  விட்டு சென்று கொண்டிருந்த்தார்கள்  .ஒருவரிடமும் சரியான பதில் இல்லை.

வெகு நேரக்   காத்திருப்புக்கு பின்னர் இன்று விழா நடக்கும்   போல்  தெரியவில்லை.

அவனுடைய  உற்சாகம்  அனைத்தும்   ஆற்று  நீராய்  வடிந்தது.  கொஞ்சமாய்  ஊற்றெடுத்திருந்த.....   நம்பிக்கை   சொல்லாமல் கொள்ளாமல்  விடை பெற்றது.

நம் இளைஞன்  தன்  விதியை நொந்து  கொண்டே   பயங்கர சோகத்துடன்  ஆபீஸ்  செல்கிறான்.நடந்ததை   சொல்கிறான்.

அவனுடைய உயரதிகாரி  அவனை கோபித்துக் கொள்கிறார். எவ்வளவு  அருமையான   சந்தர்ப்பம் ? தவற விட்டு வந்து நிற்கிறாய். எத்தனை விஷயங்கள்.மிஸ்  பண்ணிஇருக்கிறோம்  தெரியுமா?.  யாரிடமாவது, நான்   'press ' என்று  சொல்லிக் கேட்டிருந்தால்    ஒரு முழு  பக்கமே நிரம்பும்   அளவிற்கு    செய்தி கிடைத்திருக்குமே ? கோட்டை  விட்டு விட்டாயே  என்று  வேலையை விட்டு  நீக்குகிறார்.

தன்னுடைய   எதிர்மறை  சிந்தனையால்,  ....மீண்டும் வேலைத்  தேடி அலைவதாக  முடிகிறது  கதை.
விவேகானந்தரின்   150 வது பிறந்த வருடம் கொண்டாடுகிறோம்.விவேகானந்தர் என்ற பெயர்  காதில் விழுந்ததுமே   ஒரு தன்னம்பிக்கை   ஊற்று   நம் எல்லோருக்குள்ளும்    கிளம்புவதை   யாருமே  மறுக்க மாட்டார்கள்.

ஆனால் அவரிடமிருந்த   தன்னம்பிக்கையில்  சிறிதாவது    நமக்கு   யாருக்காவது  இருக்கிறதா?  தெரியவில்லை.

(இல்லை  என்று   சொல்லும் தைரியம்  கூட  இல்லை  என்று தான் சொல்ல வேண்டும் )

தன்னம்பிக்கை   விடுங்கள்.  , தன்னிரக்கம், எதிர்மறை  சிந்தனை  இதெல்லாம் இல்லாமல்,   எத்தனை   பேர்  இருக்கிறோம். ?

  பஸ்   நிலையத்தில்  ஒருவர் அன்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்."என் அதிர்ஷ்டம்  பற்றி உங்களுக்குத் தெரியாது சார்.  நான் உப்பு  விற்கப்  போனால்  மழை பெய்யும்.  மாவு விற்கப் போனால்  காற்றடிக்கும். பஸ்   கிடைக்காததற்கே    இப்படி என்றால்  மற்ற விஷயங்களில்.........

இந்த எதிர்மறை   சிந்தனை இல்லாமல்  இருந்தாலே நலமாயிருக்கும்.

  நம்  குழந்தைகளுக்கு    சாதத்துடன்   தன்னம்பிக்கையை   ஊட்டி  வளர்ப்போம்

தன்னிரக்கத்தை,எதிர்மறை  சிந்தனையை       இரக்கமின்றி    விரட்டி அடிக்கக்  கற்றுக் கொடுப்போம்..

image courtesy--google

Sunday 20 January 2013

இன்று வலைசரத்தில் நான்........

 காலை  காபியுடன்   பேப்பர் ஐ    படித்து முடித்து விட்டு  லேப்டாப் ஐ  திறந்தேன்.

முதல்  பின்னூட்டமாய்  திரு. ரூபன்  அவர்களிடமிருந்து      வந்திருந்த  மின்னஞ்சல்  நான் வலை சரத்தில்   அறிமுகமாயிருப்பதை   பறைசாற்றியது.

அவரைத்   தொடர்ந்து   பல நண்பர்களின் வாழ்த்து   பறந்து வந்தது.

எனக்கு மகிழ்ச்சி  கரை  புரண்டோடியது. நம் எழுத்துக்கு   கிடைக்கும்   அங்கீகாரம்  தானே   நமக்கு மிகப் பெரிய  பரிசு.

இன்றைய  நாளைக்  கொண்டாடிட வேண்டியது   தான்.  எப்படி கொண்டாடுவது என்று யோசித்த போது  சரி என்னைப்  பற்றி  நானே
முரசடித்துக்  கொள்ளவேண்டியதுதான்   என்று  முடிவெடுத்தேன்.

பல பேர்   பல முறை   அறிமுகமாகியிருக்கலாம்..
 ஆனால்  எனக்கு  முதன் முறை  அறிமுகம்  கிடைத்திருக்கிறது.
 என்னாலும் எழுத முடியும்  என்பது  எனக்கே  நிரூபணம்  ஆனது.

நீண்ட  நெடு நாட்களாக   எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது.  ஆனால்  குடும்ப  பொறுப்புகள்  எழுத  எனக்கு   அவகாசம் கொடுக்கவில்லை.. யோசித்து எழுதுவதற்கு   மனமும்  அத்தனை  சுதந்திரமாக   இல்லை  என்று  தான்  சொல்லவேண்டும்

கடமைகள்  சரியாக நிறைவேறியது.  சரி,  எழுத   ஆரம்பிக்கலாம்   என்று   நினைக்க ஆரம்பித்தேன்.

  நான்  செய்ய நினைக்கும்  எந்த காரியத்திற்கும்   மிகப் பெரிய  தூண்டுகோலாக  இருக்கும்  என் கணவரே   இந்த முயற்சிக்கும்   ஒரு  பெரிய கிரியாஊக்கி(catalyst).

என்னுடைய  எழுத்துக்களை   மதித்து,  படித்து  ,   பின்னூட்டங்கள்  இட்டு வரும்   அனைத்து   வலைப்பதிவு   நண்பர்கள்   கொடுக்கும்   ஊக்கங்கள்   தான்    அடுத்தப்  பதிவு,  அடுத்தது என்ன ,எதைப் பற்றி    .....என்று என்னை அடுத்தடுத்து   யோசிக்கத்   தூண்டும்..தூண்டுகோல்கள்.நன்றி.

வலைசரத்தில்  என்னை அறிமுகப்படுத்திய  மனோ சாமிநாதன்  அவர்களுக்கும்   , வலைப்பதிவாளர்களை  தன்  தளத்தில்   ஊக்கு விக்கும்
சகோதரர்   சீனா   அவர்களுக்கும். நன்றி.

image courtesy--google.

Wednesday 16 January 2013

' லடாய் '


 எனக்குத்       திருமணமான   புதிது.
சென்னையில்  வங்கி  அதிகாரியா  என் கணவருக்கு  டில்லி  மாற்றல் .
அதுவரை   நான்   சென்னை   எல்லையை   அதிகம்    தாண்டியதில்லை.  தில்லி என்றதும்  மனம்    துள்ளலாட்டம்    போட்டது.  புது ஊர்,  புது  மக்கள் ,  புது  விடு,  புது மொழியும் கூட....மனம்  இறக்கை கட்டிப்  பறந்தது.பெற்றோர்கள் ,சித்தப்பா,சித்தி,  தம்பி, தங்கை   எல்லோரையும்   விட்டு  விட்டு  
 இவ்வளவு      தூரமா............?   பயம்   கலந்த   மகிழ்ச்சியை  அனுபவித்தேன் .

டில்லி  மாற்றல்   என்றதும்   நான் முதலில்   செய்தது   "முப்பது  நாளில் ஹிந்தி  " என்ற    புத்தகத்தை   வாங்கியது   தான் .படித்தும்   வைத்தேன்.

அதனால்   ஹிந்தியில்  M.A.,, பட்டம்    வாங்கியது   போல்    நினைத்துக் கொண்டு  G.T.  Express  ஏறினேன் . ஜன்னலோர  சீட்  கிடைத்திருந்தது.  எல்லோரும்    தூங்கிய  பிறகும் ,   பிடிவாதமாய்  இருட்டில்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். கூடவே  என்கணவரும்   அமர்ந்திருந்தார்.
 வேறு   வழி ?.
(ரயில்   பயணம்   எனக்கு   மிகவும்   பிடித்தமான   ஒன்று,    இன்றும்   கூட)

யில்    எல்லாவற்றையும்   பின்னோக்கி  தள்ளியபடி     போய்க்    கொண்டே ...................இருந்தது. 36  மணிநேரத்திற்குப்  பிறகு  தள்ளாடியபடி ,  ஒரு பெரிய பெருமூச்சை   விட்டபடி,   களைத்துப்போய்     நியு டெல்லி   வந்தடைந்தது .

இப்பொழுது  போல்  ,செக்யுரிட்டி  ,போலீஸ்  என்று  எந்த தேவையுமில்லாத   நகரமாயிருந்தது    டெல்லி   அப்பொழுது.  மெதுவாக   சாமான்களை   எடுத்துக் கொண்டு " கரோல்  பாக்" கிற்கு  எங்கள் புது  வீட்டிற்கு(வாடகை   தான்   )  வந்தோம்  .

வந்தவுடன்   குளித்து   அஜ்மல்கான்   ரோடில்  உள்ள   மதராசி   ஹோட்டலில்  தோசையும்    காபியும்    சாப்பிட்டு    விட்டு ,    வீ ட்டிற்குத்    தேவையானதை
  வாங்க  சென்றோம்.

அங்கே  தான்   ஏட்டு  சுரைக்காய் கறிக்கு   உதவாது   என்பதை   புரிந்து  கொண்டேன்.

மளிகை  சாமான்    வாங்க , மேடையே   இல்லாமல்  ,  நட்டுவாங்கம்   இல்லாமல்   பரத நாட்டியம்,  குச்சுப்பிடி   என்று    பல வகை  நடனங்கள்   ஆட   வேண்டியதாயிற்று. 
என்னுடைய    முப்பது   நாட்களில்  ஹிந்தி  படிப்பு , சுத்தமாய்   பலனளிக்கவில்லை.     
அப்பொழுது    மட்டுமில்லை  பின்னரும்   பல  மாதங்கள் வரை   என்னிடம்    ஹிந்தி   மாட்டிக்   கொண்டு   படாத   பாடு   பட்டது.  


எல்லா  உரையாடல்களுக்கும்    முடிவில்  '  ஹை   ஹை '  என்று   குதிரை   ஒட்டிக்  கொண்டிருந்தேன்.  அப்பொழுது    தானே   அது    ஹிந்தி ?

" பனீர்  "  என்பதை    பன்னீர்  ஆக்கி   எல்லோரையும்    ஒரு முறை   திரும்பி   பார்க்க     வைத்தேன் .


டில்லியில்    இருக்கும்   காய்கறிகாரருக்கும்      ஆங்கிலம்   தெரியும்   என்பது என்னுடைய   நினைப்பு.  ஏன்   அப்படி    நினைத்தேன் ?  தெரியவில்லை.

அதனால்    என்னுடைய   ஹிந்தி   எடுபடாத   இடங்களில்   எல்லாம்   உடனே    ஆங்கிலத்திற்கு    சடாரென்று    தாவி    விடுவேன்.     
எல்லோரிடமும்    இதே   அடாவடி       தான்.
(கல்லூரி    மாணவர்கள்    பாஷையில்    சொல்வாதானால்  ' பீட்டர்'  'விட்டிருக்கிறேன் ) 

அதுவும்   சரிவரவில்லை   பல சமயங்களில்   சைகை  பாஷையை   உபயோகிக்க    வேண்டியதாயிற்று


சந்த்ரா (ஆரஞ்சு), விற்பவரும்    மாட்டிக்கொண்டார்.  .அங்கே   பேரம்   கூட பேசினேன்.  மகாகவி   காளிதாஸ்  படத்தில்   சிவாஜி கணேசனும்    சௌகார் 
ஜானகியும்    சைகை பாஷையில்    பேசிக்கொள்வது போல்   சைகையிலேயே   பேரம்  பேசினேன்.  அங்கங்கே    தோ  ,தீன்   என்று   
 ஹிந்தியில்    அலட்டல்   வேறு.

அன்று  ரசத்திற்கு  நெய்  விட்டு   சீரகம்   போட்டேன்   தாளிக்க  
.வெளியே  'சிக்கு  சிக்கு'
என்று  யாரோ   அலறுவது    கேட்டது.  அவ்வளவு தான்   ஸ்டவை  குறைத்து விட்டு   பால்கனிக்கு   ஓடினேன்.
 (அப்பொழுது கேஸ்  கிடையாது.நிறைய  விடுகளில்    Nutan
ஸ்டவ்  தான் இருக்கும். அப்பொழுதெல்லாம்   , சென்னை   சென்ட்ரலில்    G.T.  Express லிருந்து   இறங்குபவர்கள்  கையில்  இந்த ஸ்டவ்,  மோடா,  கண்டிப்பாய்   இருக்கும்     )

என் கணவர் எங்கே ஓடுகிறாய்   என்றதற்கு   பதிலே சொல்லவில்லை.  தெருவில்   பார்த்தால்  ,  வண்டியில் சப்போட்டா .

உனக்கு வேண்டுமா என்றார். இல்லை    
'சீக்கு  சீக்கு '  என்று கேட்டது  என்றேன்  நான்.  

அதற்குள்    பக்கத்து வீட்டுப்   பெண்மணிக்கு நான் மொழி புரியாமல்  விழிப்பது   புரிந்து விட்டது.  சிரித்துக் கொண்டார். பின்     என்னிடம்   விட்டிற்கு வாருங்களேன்      என்று   ஹிந்தியில்    சொல்ல    அது   புரிந்தது   எனக்கு.
" மே   ஆரஹா   ஹும் " என்று  நானும்  ஹிந்தியிலேயே  பெருமையாக     பதிலுரைத்தேன்.   இன்னும்  சத்தமாக  சிரித்தார். 

சில  நாட்களுக்கு   பின்னர்   தான்   தெரிய வந்தது     நான்  " ஜெண்டர் "  மாற்றிப்   பேசியிருக்கிறேன்.  என்று.  வெட்கமாக  இருந்தது.  ஆனால் நடந்து முடிந்து விட்ட  நிகழ்ச்சிக்காக    வருத்தப்பட்டு என்ன புண்ணியம்.  அதற்காகவெல்லாம்     ஹிந்தி பேசுவதை   நிறுத்த முடியுமா  என்ன?
நிறுத்திவிட்டால்  டெல்லியில் எப்படி  குப்பைக் கொட்டுவது?


பிரிதொரு    நாள்  பக்கத்து  வீட்டுப் பெண்மணியிடம்   என்ன சமையல்   என்று   நான்   அரைகுறை   ஹிந்தியில்   கேட்க   அந்தப்   பெண்ணோ  '  ரொட்டியும், 
மட்டர்  பனீர் ,' ம்  என்றார்.

ரொம்ப  நாள்   அவர்கள்   சொன்னதை  மட்டன்   என்றும்  ,ரொட்டி   என்பதை   பிரெட்    என்றும்       நினைத்துக்  கொண்டிருந்தேன்.
அப்புறம் தான் தெரிந்தது   பச்சை  பட்டாணி  ,  சப்பாத்தி   என்று.

 தீவிரமாக  ஹிந்தியை   கொன்றிருக்கிறேன்.

மக்கன் (வெண்ணெய்)   மக்கான்(வீடு)   இரண்டுக்கும்   வித்தியாசம் தெரியாமல்   'மகன்'    என்று சொல்வதைக்  கேட்டு    நிறைய பேர்  குழம்பியிருக்கிரார்கள் .

மளிகைக்  கடைக் காரர்   '  நமக்'  என்று சொன்னதை  புரிந்து  கொள்ள முடியாமல்   திண்டாடி   உப்பு   பாக்கெட்டை  காட்டிய  பின்  புரிந்து கொண்டேன்.

ஹிந்தியுடன்   நான்   போட்டுக் கொண்ட  'லடாய் '  கொஞ்சமில்லை   நஞ்சமில்லை.

  நான்கு    வருடம்  டெல்லியில்  இருந்திருப்போம்  என்று நினைக்கிறேன்.
ஓரளவு   ஹிந்தி  பேச  ஆரம்பித்தேன்  .கணவரின்   வங்கியில்   பொறுக்குமா?

உடனே   பெங்களூர்    மாற்றல்.   
மூட்டை  கட்ட   ஆரம்பித்தேன் .ப்பொழுது  முப்பது   நாட்களில்   கன்னடா  பேசலாம் புஸ்தகம்   என் கையில் இருக்க,  என்னவரோ   என்னைப்  பார்த்து  நமட்டு  சிரிப்பு  சிரித்தார்.  அதற்காக     முயற்சியை   கைவிவில்லை.

இதெல்லாம்  நடந்தது   முப்பத்தைந்து   வருடங்களுக்கு  முன்பாகத்தான்.

image courtesy   -  google

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்