Sunday 25 August 2013

ஒரு உஷார் ரிப்போர்ட்!!! நமக்கு ஏதாவது இலவசமாக கிடைத்தால்  வேண்டாமென்று சொல்லி விடுவோமா என்ன? எதைப்  பற்றியும் யோசிக்காமல்  வாங்கிக் கொள்கிறோம். யாருமே, எதுவும், இலவசமாகக் கொடுப்பதில்லை என்பதை நாம் மறந்து விடுகிறோம் .இலவசங்களுக்கு , கண்டிப்பாக ஒரு மறை முக விலை இல்லாமலே போகாது  என்பது தான் உண்மை.

 வெளி நாட்டுக்கு செல்பவர்களுக்கு  அந்தந்த விமான நிலையங்களில் இருக்கும் " duty free shops" பற்றித் தெரிந்திருக்கும்.

இரண்டும் ,அதற்கு மேலும் ஃ ப்ளைட் மாறுபவர்களை  ,  இந்தக் கடைகள் சுண்டியிழுக்கும். .நேரத்தை செலவிட  நுழைவார்கள். முதலில் எதையும் வாங்கத் தயங்கும்  நாம்,  நம் சக பயணி ,அதுவும் இந்தியர் ஒருவர் வாங்கிவிட்டால்  நம்மையறியாமலே ,நம் கை, நம் பர்சைத் தேடும்.
எதையாவது வாங்கிக்  கொண்டு, ஊருக்குப் போய் பெருமையடிக்க. 

எனக்கு ,இன்று வந்த மெயில்   duty free shops இல் பொருட்கள் வாங்கும் போது  நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சிரிக்கையைப் பற்றிக் கூறியது.

விஷயத்தைப் படித்த எனக்கு பகீரென்றது.சிலருக்குத் தெரிந்திருக்கலாம்..
தெரியாதவர்களுக்காக...............

" உண்மைச் செய்தி " என்கிறது மெயிலில் வந்த விவரம்.

இந்தியர் ஒருவர் Bangkok விமான நிலையத்திலுள்ள duty free shopற்கு சென்று சாக்லேட்டுகளும், ஒரு பாக்கெட் சிகரெட்டும்  வாங்கியிருக்கிறார். கடை ச்சிப்பந்தி  ஒரு பாக்கெட் சிகரெட்டுடன் இன்னொரு பாக்கெட் சிகரெட்டும் 
போட்டிருக்கிறார்(வேண்டுமென்றே).  நம் நண்பரோ  ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினால், இன்னொரு பாக்கெட்  சிகரெட்  இலவசம் போலிருக்கிறது என்றெண்ணிக் கொண்டு சந்தோஷத்துடன்  கடையை  விட்டு வெளியே வருகிறார். 

அங்கே ,ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது அவருக்கு . போலீஸ்காரர் ஒருவர் அவருடைய கையில் இருந்த பொருட்கள் நிறைந்த பையையும் , அவர் கையில் வைத்திருந்த ரசீதையும் செக் செய்து விட்டு,  பில்லாகாத   ஒரு சிகரெட் பாக்கெட்டைத்   திருடி விட்டார் என்று சொல்லி " shop lifting "குற்றத்துக்காக   அவரைக் கைது செய்து விடுகின்றார்..அவர்  பாங்காக் சிறையில்  ,கிட்டத்தட்ட ஒரு வாரகாலம் இருக்க நேரிடுகிறது. நிறைய பணம்(அந்த ஊர் பணம்) ,செலவழித்தபின் தான் விடுதலை ஆகிறார்..

பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் புகார் கொடுத்திருக்கலாமே என்று தான் தோன்றும். நம் தூதரகத்தை ,நண்பரின் உறவினர் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு  கிடைத்த பதில்,"இதைப் போல் நிறைய இந்தியர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். பொருட்கள் வாங்கும் போது  நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கை விரித்து விட்டது .

" Duty Free Shopsஐ  விட்டு வெளியே வரும் போது நாம் வாங்கியிருக்கும் அத்தனை பொருட்களுக்கும் ,பில்லில் பணம் கட்டியதற்கான அத்தாட்சி இருக்கிறதா என்பதையும் , இதைத் தவிர வேறு பொருட்கள் எதுவும்  நம்மிடம் இல்லை என்பதையும்  உறுதி செய்து கொள்ள  வேண்டும் " என்று அறிவுறுத்துகிறது  இந்தியத் தூதரகம்.

உண்மை தானே!

இதைப் போலவே இன்னொருவர் துபாய்  விமான நிலையத்திலும் ,மாட்டிக் கொண்டு விட்டு,  இரண்டு நாட்கள் போல் விமான நிலையத்திலிருக்கும் சிறையில் கழித்து விட்டு , டாலரில்............கொடுக்க வேண்டியவர்களுக்கு,   கொடுத்து விட்டு பின் வீடு திரும்பியிருக்கிறார்.

இவர்கள் சிறையில் இருக்கும் பொழுது அவர்கள் குடும்பத்தினரின் மனநிலையை நினைத்துப் பாருங்கள்........உங்களுக்கு  பதட்டமாக இல்லை!

சிறிய எச்சரிக்கை உணர்வுடனும் , இலவசங்களுக்கு  ஆசைப் படாமலும் இருந்தாலே  போதும். பிரயாணம் சுகமாகும்.

நாட்டிற்கு நாடு  சட்டங்களும் வேறுபடும். நாம் வேறு நாட்டில் இருக்கும் பொழுது, அந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கு  உட்பட்டவர்களாகிறோம்  என்ற நினைவுடன்  நாம் நடந்து கொண்டாலே,  இது போன்ற உபத்திரவங்களிளிருந்து தப்பித்து விடலாம்.

இப்பொழுதெல்லாம், வெளிநாட்டுப் பயணம் செய்வது சர்வ சாதாரணமாகி விட்டது .நம் உறவினர், நண்பர்களுடன் இந்த செய்தியை பகிர்ந்து  அவர்களும் எச்சரிக்கையடைய  வழி செய்வோம்.

நானும் இந்த செய்தியை என் முக நூலில் பகிரப் போகிறேன்.

ஆசையே துன்பத்திற்கு காரணம்  என்பது போல் இருக்கிறது இந்த இரண்டு நிகழ்வுகளும்.

நண்பர்களே  .....எச்சரிக்கையுடன் பயணம் செய்வோம்.பயணத்தை இனிதாக்குவோம்.


                                                  SHUBH YATRA!!!!
செய்தி உதவி : திரு.லக்ஷ்மிநாராயணன்.
image courtesy----google.

Tuesday 20 August 2013

கணவரின் கனவுக் கன்னி!" நான் காபி போடப் போகிறேன்.உங்களுக்கும் காபி போடவா? "
" ம் "


" டிகாக்ஷன்  போதுமா?"
" உனக்குத் தெரியாதா? "


" சரி மெயில் செக் செய்தீர்களா? "
" ம் "


" கிரெடிட் கார்ட் பணம் கட்டியாச்சா? "
" ம் "


" கணேஷ்  போன் செய்தான்.
அடுத்த வாரம் வருகிறானாம். "
" ஓ "


" பக்கத்து வீட்டில் மாடியில் ஏதோ கட்டுகிறார்கள்? "
" ஓ "


" நான்  டி. நகர் போய் வருகிறேன்."
"சரி."


" பால் பாக்கெட்  வந்தால் பிரிட்ஜில்  வைத்து விடுங்கள் ."
"ஓ. கே. "


இந்த நீள நீள  கேள்விகள் எல்லாம்  என்னுடையவை.

ஒரு எழுத்து , மிஞ்சி மிஞ்சிப்  போனால், இரண்டு எழுத்து வரை நீண்டிருக்கும் பதில்கள் என்னவருடையது.

இந்த ஒற்றை எழுத்து பதில்கள் கிடைக்கவே  நான் தவமிருந்த நாட்களும் உண்டு.

ஒன்று, பேப்பரில் அவர் தலை அமுங்கியிருக்கும்,இல்லை டிவியில் நடக்கும் சண்டைகளில், (NDTV, HT, Times Now களி ல் நடக்கும் விவாதங்கள் ) தன் மனதைப் பறிகொடுத்தபடி அமர்ந்திருப்பார்.

திருமணமான இத்தனை வருடத்தில்  என் கணவர் பற்றி நான் தெரிந்து கொண்டது இது.

" Man of very few words " என்ற  பட்டம் கூட பெற்றிருக்கிறார்.

இந்தப் பட்டத்தை அவருக்கு வாங்கிக் கொடுத்த பெருமையெல்லாம்  என்னைத் தான் சேரும் என்று...... நான் பெருமைபட்டுக் கொள்ளவில்லை.
 அவர் தான் சொல்கிறார்.  அவருக்குப் பேசவே நேரம் கொடுக்காமல் நானே பேசிக் கொண்டிருக்கிறேன்  என்று .

ஏதோ .....இந்தப் பெருமையாவது என்னை சேர்ந்ததே! அதுவே போதும்.

அது எப்படித் தான் அவரால் இப்படி இருக்க முடிகிறதோ  என்று தோன்றும் எனக்கு.சாப்பிடாமல் கூட இருந்து விடலாம். பேசாமலா......?(மயக்கம் வரும் போலிருக்கிறதே)

இந்த Man ம்  பேசும் சந்தர்ப்பங்கள் உண்டு.

அன்றும்  அப்படித் தான் இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒற்றை எழுத்து பதில் பறந்து வந்து கொண்டிருந்த நேரம், .......

நான் " எங்கள் ப்ளாக் "கில்  திரு .ஸ்ரீராம் அவர்களின்  பதிவைப் படித்துக் கொண்டிருந்தேன்.
அதில் வந்திருந்த  " குவாட்ரி சைக்கிள் " பற்றிய விஷயம் படித்தபின் அவரிடம்,

"இங்கே பாருங்கள் ஒரு புது வண்டிக்கு நம் மத்திய அரசு ஒப்புதலளித்திருக்கிறது.இதோ முக நூலிலும், பதிவிலும் வந்திருக்கு" என்று சொன்னது தான் தாமதம்.

சட்டென்று என்கையிலிருந்து  ipad மின்னல் வேகத்தில் மாறி அவர்கையிலிருந்தது.
ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டார்.
அதற்குப்பிறகு ,

" இது Reva கார் மாதிரியே இருக்கு.
எவ்வவளவு  கி.மி. கொடுக்குமோ தெரியலையே
வண்டி பெட்ரோலில்  ஓடுமா அல்லது  டீசலில் ஓடுமா?
பார்த்தால்  rear என்ஜின் போல்  தெரிகிறது.
எத்தனை பேர் உட்காரலாம்.  என்று சரமாரியாய் கேள்விகளைத்  தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்."

என்னிடம் கேட்டுப் பிரயோசனமில்லை என்று தெரியும்.
 எனக்கு வண்டிகள் பற்றிய அறிவு   கொஞ்சம் ( கொஞ்சம் தான் )கம்மி.உடனே எனக்கு வண்டி பற்றிய அறிவேயில்லை என்று தப்பாகப்  புரிந்து கொள்ள வேண்டாம்.

என்னவருக்கு இந்த வண்டிஎன்று இல்லை , எந்த வண்டியானாலும் இதே போல் ஆர்வம் பிய்த்துக் கொண்டு போகும். அன்று சைக்கிள் ஓட்டும் போதும் இந்த ஆர்வத்தைப் பார்த்திருக்கிரேன் ,. இன்று கார் ஓட்டும் போதும் துளி கூட ஆர்வம் குறைந்த பாடில்லை.

எனக்கும்  தெரியும்............ இரண்டு சக்கரம், என்ஜினுடன் இருந்தால்  ஸ்கூட்டர்.
நாலு சக்கரம் சின்ன சைசில் இருந்தால் கார். (உடனே லாரிக்கு எவ்வளவு சக்கரம் என்று  யாரும் கேட்க வேண்டாம் )


ஹோண்டா என்பார், ஹுண்டாய் என்பார் (யாரையாவது திட்டுகிறாரோ என்று தான் முதலில் நினைத்தேன்).

Audi  கார் என்று பேசுவார். (ஆடியோ, ஆடாமலோ  கார் போனால் சரி )

BMW கார் என்றால் இது என்ன காருக்கு கூட இனிஷியலா என்று தோன்றும்.

பஜாஜ்  என்று சொல்லும் போதெல்லாம் எனக்கு  பஜ்ஜி நினைவுக்கு  வந்து தொலைக்கும்.

வெஸ்பா  என்றால் யாருப்பா என்பேன்.....

அவ்வளவு விசாலமான அறிவு  வண்டிகளைப் பற்றி எனக்கு.

 இவர் நண்பர்களும் இவரைப் போலவே வண்டிகள் விஷயத்தில் மிகுந்த  ஆர்வம் காட்டி உரையாடக் கேட்டிருக்கிறேன்.

எங்கோ படித்திருக்கிறேன்,
" ஒரு ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும்  பொம்மை கடைக்கு அழைத்து சென்றால்  ஆண் குழந்தை கார் ஸ்கூட்டர் என்று வண்டிகளையே   விரும்பும் , பெண் குழந்தை  அந்த வண்டி பொம்மைகள்  பக்கம் கூடத் திரும்பாது "
இது உண்மையா ?

இவருக்கு வண்டி ஆர்வம் மிகுந்த நண்பர்கள்  இருக்கிறார்களா ,இல்லை ஆண்கள் , பெருவாரியாக வண்டி பற்றியே பேசி  காரும் ஸ்கூட்டரும் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்களா ?

புரியவில்லை.
 என் கணவருக்கு மட்டும் தான்  வண்டிகள்  கனவுக் கன்னியா !

எனக்குக்  காரையும் , ஸ்கூட்டரையும் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.

image courtesy--google.

Thursday 15 August 2013

" சல்யூட்"நீங்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறீர்கள். எதிர்படும் எல்லோரிடமும் பேசுவீர்களா? இல்லை...... சிரிக்கவாவது செய்வீர்களா?

நீ என்ன லூசா? என்று கேட்காதீர்கள்.

ஆனால் அதை இங்கே வெளிநாட்டில் தினமும் கண் கூடாக பார்க்கிறேன்.

வாய் நிறைய சிரிப்பு !
" ஹாய் ! நலம் தானே! "

விசாரிப்புகள். எல்லோரும் எல்லோரிடமும்.
வெளிநாட்டவர் மட்டுமில்லை நம் இந்தியர்களிடமும் இந்தப் பாசத்தைப் பார்க்கிறேன்.

" ஆண்டி  எப்படியிருக்கிறீர்கள்? "என்று ஆங்கிலத்தில்  வினவ நாமும்  பதிலுக்கு அவர்களை நலம் விசாரிக்க  அங்கே மொழி, ஜாதி ,மதம் , மாநிலம் எல்லாம் மறந்து நாம் இந்தியர்கள் என்கிற ஒருமைப்பாட்டை  கண் குளிர காண முடிகிறது.

இது வரை இந்தியாவில் மட்டுமே நம்  சுதந்திர தின விழாவை  பார்த்திருந்த நான் , இம்முறை அமெரிக்காவில்  நம் சுதந்திர தின விழாவைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.

11.08.2013 அன்று நடந்த நமது  சுதந்திர நாளையொட்டிய  விழாவிற்கு சென்ற போது பார்த்த கூட்டம்  .அப்பப்பா!..... அலை மோதுகிறது.
( இங்கு 11ந்தேதியே  சுதந்திர தின விழா கொண்டாடி விட்டார்கள்.  18ந்தேதியன்றும் கொண்டாடவிருக்கிறார்கள்.)

மலைக்க வைக்கிறது அவர்களின் "வந்தே மாதரம் " முழக்கம்.
அமெரிக்கர்கள் சிலர் நின்று ,வைத்த கண் வாங்காமல் இதையெல்லாம் பார்க்கும் போது  நமக்கு கர்வமாக இருக்கிறது.

இந்தியன் என்று சொல்கிறோம் தலை நிமிர்ந்து நிற்கிறோம்  என்று  சொல்லாமல் சொன்னது  கூட்டம்.

தன் வீட்டை விட்டு, பெற்றோர், உற்றார் உறவினர்களை விட்டு , நாடு கடந்து  வந்து, சுதந்திர தின விழாவை கொண்டாடுவதைப் பார்த்தால்  நிஜமாகவே மெய் சிலிர்த்துப் போய் விடும்.

தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறந்திட , ' வந்தே மாதரம் ' விண்ணைப் பிளக்கிறது.

ஒருவருக்கு ஒருவர் சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது பார்க்கக் கண் கொள்ளாக்  காட்சி.

இளம் பெண்கள், ஆண்கள், சிறுவர் சிறுமியர்,  என எல்லோருமே நம் இந்திய உடைகளில் அனிவகுத்து  உலா வந்து கொண்டிருந்தனர்.

பலர் கைகளில்  நம் தேசியக் கொடி . பார்க்கப் பார்க்க பரவசமாகிறது நெஞ்சம் 

இங்கு இருக்கும் "Oak Tree Road " செல்லும் வழி எல்லாம் " ட்ராபிக் ஜாம் ".

ஏறத்தாழ மூன்று கிலோமீட்டர்  வரை இருந்த , டிராபிக் ஜாமில் மாட்டிக் கொண்டதற்கு  மகிழ்ந்தேன், நிஜமாகவே ஒரு இனிமையான அனுபவம் .
எல்லாக் கார்களிலும் இந்தியர்களே!

சுதந்திர தினம் மட்டுமில்லை, எல்லா  விழாக்களுமே பெரிய அளவில் கொண்டாடி தாய் நாட்டை" மிஸ் " செய்யாமல் இருக்க பிரயத்தனப் படுகிறார்கள்.

நம் இந்தியக் கடைகளில் இந்த மாதிரி விழாக் காலங்களில்  நம்மஊரில் என்னென்ன கிடைக்குமோ அத்தனையும் கிடைக்கிறது.

திரைக்கடலோடி" டாலரில் சம்பாதிக்கிறார்கள் ". உண்மை தான்.
அவர்கள் படும் பாட்டைப் பார்த்தால்.....
அதுவும் குழந்தைகளை வைத்துக் கொண்டு , ,டே  கேரில்  குழந்தைகளை விட மனமில்லாமல் விட்டு விட்டு,வேலைக்கு செல்லும் இவர்கள் 
அக்குழந்தைகளுக்கு   நம் கலாசாரத்தை சொல்லிக் கொடுக்க ,டான்ஸ், பாட்டு, சுலோகம்  என்று எத்தனை கிளாஸ்,...............  அவர்களை அழைத்துக் கொண்டு சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையில்  வீட்டு வேலை, வெளி வேலை எல்லாவற்றையும் , உதவிக்கு யாரும் இல்லாமல் தானே செய்து கொண்டு நிர்வாகம் செய்வது  ஆச்சர்யப் பட  வைக்கும் ஒன்று.


Hindustan Timesஇல் வ்ந்திருக்கும் செய்தி ஆச்சர்யத்தில் என்னை ஆழ்த்தியது.
2012இல் 374080 கோடி ரூபாய் இந்தியாவிற்கு வெளி நாடு வாழ் இந்தியர்களால்  கிடைத்துள்ளது. அப்பொதைய டாலர்
மதிப்பு வெறும் 53 ரூபாய்கள் மட்டுமே.இப்போதோ அது 62 ரூபாய் ஒரு டாலர் எனில் , நம் நாட்டு முன்னேற்றத்தில்  இவர்கள் அனுப்பும்   அந்நிய செலாவணிக்கு முக்கிய  பங்கு இருக்கிறது தானே!

அதே பத்திரிக்கையில் ," தாய் நாட்டிற்கு இவ்வளவு பணம் அனுப்பியுள்ளவர்கல் இந்தியர்கள் மட்டுமே " என்று வெளியாகியிருக்கிறது.

இது இன்னும் பெருமை கொள்ளும் விஷயம் தானே!

தேசம் விட்டு, தேசம் வந்து,   வேற்று கலாசாரத்தில் தன்னை  ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல் , ஆனால் அதை மதித்து,  தன் கலாசாரத்தை விடாமல்  , வாழும் வெளி நாடு வாழ்  இந்தியர்களுக்கு என் சல்யூட்!!!

image courtesy-----google

Friday 9 August 2013

ராசி " சூப்பர் சிங்கர் "ஆகிறாள்.


                                                          

   பொறுப்புத் துறப்பு
இப்பதிவில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே!கற்பனையே!கற்பனையே!
இது மாதிரி யார் வாழ்விலாவது நிகழ்ந்திருந்தால் அது முழுக்க முழுக்க தற்செயலானது.
                                       ________________________________________


நல்ல தூக்கத்திலிருந்தார்  விஷ்ணு. திடீரென்று தூக்கம் கலைந்தது.
யாரோ அலறும் குரல் கேட்டது.

" ராசி, ராசி " கூ ப்பிட்டார் விஷ்ணு. பதிலையே காணோம்.
பார்த்தால் படுக்கையில் ராசியைக் காணோம்.

ராசிக்குத் தான் ஏதாவது ஆகிவிட்டதோ என்று அலறியடித்துக் கொண்டு  படுக்கையிலிருந்து , விழாத குறையாக எழுந்தார். லுங்கியை , கைகளால் இறுக்கிக் கொண்டே, அவசர அவசரமாக ரூமை விட்டு வெளியே வந்தார் விஷ்ணு.

ஹாலில் ராசி சம்மணக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு குனிந்து எதையோ கைகளால் திருகிவிட்டுக் கொண்டிருந்தாள்  ராசி..
என்ன என்று பார்த்தார் விஷ்ணு ...பார்த்தால் சுருதிப் பெட்டி.

" என்ன செய்கிறாய்  இந்த காலங்கார்த்தாலே. மணியைப் பார் நாலரை தான் ஆகிறது  "

"அதுவா........... நான் சாதகம் செய்கிறேன்."

" சாதகமா?"

"ஆமாம். சாதகம் செய்தால் தானே  மறந்து போன  பழைய சங்கீதம்  பிடிபடும்"
( பிடிபட்டது  விஷ்ணுவிற்கும்  , அலறல் சத்தத்தின் ரகசியம்)

"எதற்கு இப்ப போய் சாதகம் எல்லாம் . பேசாமல் படேன்"  என்றார் விஷ்ணு.

" அப்புறம் எப்படி  சூப்பர் சிங்கரில்  பாடுவது? என்றாளே பார்க்கலாம்.

தலையை சுற்றி கீழே விழாமல் இருக்க சுவற்றைப் பிடித்துக் கொண்டார் விஷ்ணு.
"இளம் வயதினர் தான்  பாட முடியம் என்று நினைக்கிறேன்" என்றார் விஷ்ணு
ஈனஸ்வரத்தில் .

" அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இப்ப கூட  நடுத்தர வயதினைக் கடந்த  ஒருவர் கலக்கிக் கொண்டிருக்கிறாரே " என்று கூறி விட்டு சுருதி கூட்ட ஆரம்பித்தாள் .

ஸ ...............ப ....................
(பயங்கர  அபஸ்வரம்  என்பது விஷ்ணுவிற்கு புரியவில்லை.
ஆனால் " நாராசமாக இருக்கிறது "    ,சொல்லவில்லை. நினைத்துக் கொண்டார்.)

தன் தலையெழுத்தை நொந்து கொண்டே மீண்டும் போய் படுத்தார் விஷ்ணு.
காதில் இந்த அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்க அப்படியே தூங்கியும் போனார்.

முழிப்பு வந்தபோது மணி ஏழு.

எழுந்து  போய்  தன்  வேலைகளை முடித்துக் கொண்டு, டிபன் சாப்பிட  டேபிளிற்கு வந்தார் .

அங்கே நீளமாய்  பள்ளிக் கொண்டிருந்தது பிரெட் .அதன்  காலடியில் ஜாம்.

 என்ன புதுசாக இருக்கு? என்று விஷ்ணு வினவ

"எனக்கு சாதக ம் செய்து முடிப்பதற்குள்,  நேரமாகிவிட்டது .அதனால் தான் பிரெட்..
கொஞ்ச நாள் பொறுத்துக்  கொள்ளுங்கள் " --ராசி .

"கொஞ்ச நா......ளா....."
மலைத்தார் விஷ்ணு.இது என்னடா கொடுமை என்று தோன்றியது .

ராசியோ  பூஜை செய்ய ஆரம்பித்தாள் . கையில் பூக்களுடன்  கந்த சஷ்டிக் கவசம்  மிக  சத்தமாக சொல்ல ஆரம்பித்தாள் .

" காக்க....காக்க  "
என்று நிறுத்தி விட்டு இவரைப் பார்த்து ,"  சூலமங்கலம்  சகோதரிகளின் பாட்டு போல் பாடுகிறேனா" என்றதும் நிஜமாகவே அதிர்ச்சியில் உறைந்தார்.

" ஆமாம் . எதற்கு உனக்கு இப்படி விபரீதமான ஆசையெல்லாம். எதற்கு திடீரென்று ஆரம்பித்தாய்? " என்றார் விஷ்ணு.

" அதுவா......புது  பிளாட் பரிசாகக் கிடைக்கும். எனக்கும் சினிமாவில் பாட வேண்டும் என்று ஆசையிருக்கிறது."

எனக்குக் கூடத்தான்  நீ பாடக் கூடாது என்று ஆசையாயிருக்கிறது,  என்று சொல்லமுடியாமல் திணறி, " அதற்காக........." என்று  இழுத்தார்.

" அதற்காகத் தான் ,விட்ட பாட்டைப்  பிடிக்கிறேன் "
என்று சொன்ன  ராசியைப் பார்த்து," ஏன் நாம் இப்ப இருக்கும் வீட்டிற்கு என்ன வந்தது. ?"  கேட்டார்  விஷ்ணு.

" வீட்டிற்கு ஒன்றுமில்லை. தானே வரும் ஸ்ரீதேவியை  யாராவது வேண்டாம் என்பார்களா? என்றாள் .

ஏதோ அவள் சூப்பர் சிங்கர் ஆகிவிட்டது போலவும் ,பிளாட் ரிஜிஸ்டர் செய்ய கிளம்பும் போது , நான் ஏதோ வேண்டாம் ,என்று சொல்வது போலவும்,
( எல்லாம் நினைப்புத் தான்) நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

"அது  மட்டுமா?  A.R.Rahman  கூட என் பாட்டைக் கேட்டு  சினிமாவில் சான்ஸ் கொடுக்கலாம் " என்று மேலே ,மேலே , ராசி சொல்லிக் கொண்டே போக ,

சிரிப்பதா , அழுவதா என்று புரியவில்லை விஷ்ணுவிற்கு.

" பானை விற்பவன்  ராஜகுமாரியை கல்யாணம் பண்ணிக்கொண்டு ராஜாவான கனவுக் கதை போலல்லவா இருக்கு " என்று புலம்பிக்கொண்டே ஆபிசிற்கு கிளம்பினார் விஷ்ணு

மாலை வீட்டிற்கு வந்ததும் இன்னும் அதிர்ச்சி காத்திருந்தது,
சாதகம் செய்தாள் ராசி என்று நினைத்தீர்களா?

இல்லை. அது தான் இல்லை.

தன லேப்டாப்பில்,  ஏகப்பட்ட சினிமா பாடல்களை, டவுன்லோட் செய்து கொண்டிருந்தாள் ராசி.

எல்லாம் பிராக்டீஸ்  செய்யத்தான்.

அடுத்து, விஷ்ணுவிற்கு காபி போட்டுக் கொடுத்து விட்டு ,"jabong"
 வலைத் தளத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

என்ன வேணும் உனக்கு? --இது விஷ்ணு.

உடனே ராசி ," எனக்குக் கொஞ்சம்கொஞ்சம் டிரஸ் வாங்க வேண்டுமே?'

நீ குமரனிலோ , நல்லியிலோ தானே எடுப்பாய்?

இல்லை நான் சூடிதார், பேன்ட் எல்லாம் எடுக்க வேண்டும். பாடும் போது நானும் ஸ்டைலாக இருக்க வேண்டாமா? என்ற போது  நிஜமாகே அதிர்ந்தார்.

இவளுக்கு ஏதாவது  பைத்தியம்  பிடித்து விட்டதோ?இவள் பேண்ட்  போட்டால் யார் பார்ப்பது?

நான் தான்  மாட்டிக் கொண்டேன் என்றால்..... முகம் தெரியாத அந்த அப்பாவி ஜட்ஜ்களை நினைத்து   பரிதாபப்பட்டார்.

இனிமேல் chemistry,physics என்று அவர்கள் ஏதாவது நினைப்பார்கள்..........இல்லை நினைக்கத் தான் முடியுமா.
அதைவிடவும் இவள் குரலுடன் போராடப் போகும் வாய்ஸ்  ட்ரெய்னர் நிலையை நினைத்து ப்  பார்த்தார். படு பயங்கரமாயிருந்தது.

ஆனால் ,இதெல்லாம்  அவள் போட்டியில், பல படிகளைத் தாண்டினால் தானே ! ,(கொஞ்சம் நிம்மதியளித்தது விஷ்ணுவிற்கு.)

அவர்கள் தங்கள் விதியையல்லவா  நினைக்க வைத்து விடுவாள் போலிருக்கிறதே என்று நினைத்தார் விஷ்ணு.

மேலே  தொடர்ந்தாள் ராசி.
பாருங்களேன் மெலடி ரவுண்டிற்கு,  திருமதி  சாதனா சர்கம் பாடிய "அன்பே சுகமா?"  பாட்டு பிராக்டீஸ் செய்திருக்கிறேன் கேட்கிறீர்களா......என்றதும்
இதிலிருந்து எப்படி தப்பிப்பது  என்று யோசித்தார் விஷ்ணு.

"எனக்குக் கொஞ்சம் தலைவலியாய் இருக்கு. அப்புறம் கேட்கிறேன்." என்று விஷ்ணு முடிப்பதற்குள்  போன்   ரீங்காரித்தது.

ராசி எடுத்துப் பேச ஆரம்பித்தாள்.. அவளுக்குத் தான் போன் என்பது புரிய ,அவசரமாய் போய் படுத்துக் கொண்டு விட்டார்  விஷ்ணு.

போனில் ராசி, யாரிடமோ தான் இன்று பாதி பிராக்டீஸ் செய்த, பாட்டைப் பற்றி பிரதாபித்துக் கொண்டிருந்தாள் . மெலடி ரவுண்ட் , ஃபோக் ரவுண்ட்  என்று ரவுண்ட் ,ரவுண்டாக சொல்லிக் கொண்டே போனாள்.

கடைசியாக அவள் சொன்னது தான் ஹை லைட் .
Dance attack ரவுண்டிற்கு ........(அதற்கு மேல் காதில் ஏறவில்லை விஷ்ணுவிற்கு.) Dance attack என்று கேட்டதுமே விஷ்ணுவிற்கு  heart attack வராதது தான் குறை.

யாரது இவளை இப்படி உசுப்பேத்திவிடுவது. தெரிந்தால்  அவரை ஆள் வைத்தாவது இரண்டு தட்டு தட்டி வைக்க சொல்லலாம் என்று  தாதா மாதிரி நினைக்க  ஆரம்பித்தார்.

இதை எப்படி நிறுத்துவது ,புரிய வில்லை. வேண்டாம் என்று சொன்னால் இவள் இன்றே  vijay tv ஆபிசிற்கு போனாலும்  ஆச்சர்யப் படுவதற்கில்லை.
யோசித்து,யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்.

ஆபிசிலிருந்து வீட்டிற்கு, ஒரு பயத்துடனேயே, சென்றார் விஷ்ணு. ( டான்ஸ்  பிராக்டீஸ் ஏதாவது  செய்திருந்தால்  அதை அப்படி தவிர்ப்பது என்று தான்).

உள்ளே நுழைந்ததும்  "தெரியுமா உங்களுக்கு.  அர்ஜுன்  வருகிறான்  நாளைக்கு ". என்றாள் .  அர்ஜுன் அவர்கள் பேரன்.

பையன் வருகிறான்.
விடுதலை கிடைக்கும் என்று நம்பியிருந்தவரின்  நம்பிக்கையில் ஒரு லாரி மண்.

அவர்களெல்லாம் வந்து போகும் வரை  சாதகத்திற்கு  ரெஸ்ட் கொடுத்து விட்டேன்.. தொண்டைக்கும் ரெஸ்ட், அதிகமாக பேச மாட்டேன்.
(மருமகளுக்கு  அடிக்கிற அதிர்ஷ்டத்தை  பார்.நினைத்தார். விஷ்ணு.)


மழலை கொஞ்ச ,கொஞ்ச மறுநாள் அர்ஜுன்  வந்தான். ஒருவாரம் வரை  ராசி ஒரு நிலையிலில்லை. ஒரே பாட்டு விவாதம் தான் மருமகளுடன். தொண்டைக்கு ரெஸ்டாவது ஒன்னாவது . சின்ன வயசுக்காரர்களிடம் கேட்டால் தான் நல்ல டிப்ஸ் கொடுப்பார்கள் என்று  அவள் மருமகள் ஆர்த்தியை  துளைத்துக் கொண்டிருந்தாள் .

கோபம் கோபமாய் வந்தது விஷ்ணுவிற்கு. ஏதாவது செய்து மகனும் மருமகளும்  தன்னைக் காப்பாற்றுவார்கள் என்றால் ஆர்த்தி இன்னும் மோசமாக்கி கொண்ர்டிருக்கிறாளே  என்று நினைத்தார்.

தன்  கோபத்தை ஆர்த்தியிடமே சொன்னார் விஷ்ணு.

அதற்கு ஆர்த்தியின்  பதிலென்ன  தெரியுமா?

" மாமி ' சூப்பர் சிங்கருக்கு 'த் தானே போகிறேன் என்று சொல்கிறார்கள்.
' மானாட மயிலாட 'விலா  ஆடப் போகிறார்கள்"  என்றாளே  பார்க்கலாம்.

இப்படிவேற  ஒரு ஆசையா ....இவளுக்கு .
ஏதாவது பழி தீர்த்துக் கொள்கிறாளோ  நம்மிடம்.  திறந்த வாயை மூடவில்லை விஷ்ணு.பி.கு.
சூப்பர் சிங்கரில் ராசி ஜெயித்தாளா  இல்லையா என்று தெரிந்து கொள்ள ஆசையா ? அதிக நாள் இல்லை. சுமார் இரண்டு வருடங்கள் தான் காத்திருங்கள். ஏனென்றால் சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்து தானே சீனியர்ஸ்  ஆரம்பிக்கும்.
அதற்குப் பிறகு முடிவு தெரியும்.

அதுவரை விஷ்ணுவின் கதி.............

அவருக்கு, உங்களால்  ஆனது , என்ன யோசனையாயிருந்தாலும் ..............சொல்லுங்கள்.
விஷ்ணு  வரவேற்பார்...
image courtesy-----google

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்