Friday 20 February 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 2

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு ---1 படிக்க இங்கே க்ளிக்கவும்


வேஜார் ....?




 விசா  கிடைத்த மகிழ்ச்சியை  ராசி  தன் தோழிகளுடன்  பகிர்ந்து கொண்டாயிற்று.  போன்  பில் எவ்வளவு வரப் போகிறதோ என்று யோசிக்கத் தொடங்கியிருந்தார் விஷ்ணு." பேசாமல் விசா கிடைச்சாச்சு  என்று கொட்டை எழுத்துக்களில் பிட் நோட்டீஸ் அடித்து தினசரி பேப்பருக்குள் வைத்துக்  கொடுத்து விடலாம் போலிருக்கிறதே ராசி". என்று ராசியிடம்  சொன்னதற்கு,  அவள் கழுத்தை நொடித்துக் கொண்டுப் போய்  விட்டாள் .
ஆனால் விமான டிக்கெட் வாங்கியப் பிறகு ராசிக்கும் விஷ்ணுவிற்கும் வேலை பெண்டு கழட்டியது. இருவரும்  ஓடி ஓடி துணிமணிகள், அமெரிக்காவில் கிடைக்காத சாமான்கள் என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.

ராசி வாங்கி பெட்டியில் அடைத்து , வெயிட் பார்க்க ஒரு மெஷினும் வாங்கிக் கொண்டு விட்டாள் . வெயிட் பார்த்து , வெயிட் பார்த்து  அவள் வெயிட்டே ஒரு இரண்டு கிலோ குறைந்திருக்கும். ஆனால் குரங்கு  அப்பம் கதையாய் ஒரு பெட்டியிலிருந்து இன்னொன்றிக்கு பிய்த்து, பிய்த்து வைத்து , திரும்பவும் வெயிட் செக் செய்து........... , நெற்றி வியர்வை, நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்தார்கள் ராசி விஷ்ணு தம்பதி.ஒருவழியாய் நான்கு பெட்டிகளில்  எல்லாவற்றையும் அடைத்து வைத்தனர்.

அந்த நாளும் வந்தது. ஆமாம் ராசி விஷ்ணு, அமெரிக்கா கிளம்ப வேண்டிய நாள் தான். சென்னை ஏர்போர்ட்டிற்கு  வந்து சேர்ந்தனர் இருவரும். உள்ளே சென்று  "செக் இன்" செய்ய வேண்டிய அனைத்தையும் செக்கின் செய்து விட்டு, விமானம் ஏற கேட்டருகே காத்திருந்தனர். இருவர் முகத்தைப் பார்த்தாலுமே ஒரு பதட்டத்தைக்காண முடிந்தது. சிலர் ஒரு மாதிரியாய் இவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர். . அந்த அளவிற்குப் பதட்ட நிலையில் இருந்தது இவர்கள் முகம். எதையோ கடத்தி செல்பவர்கள் போல்  கண்கள் இங்குமங்கும் அலை பாய அமர்ந்திருந்தனர்.

நம் போலீஸ் ஒருவரும் இவர்களை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே நகர்ந்தார் . ராசிக்கு என்ன பதட்டம் என்றால்  அவள் பெட்டிக்குள் வைத்திருக்கும் சாம்பார்பொடியை யாராவதுக் கண்டுபிடித்தது விடுவார்களோ என்று. விஷ்ணுவிற்கோ, ராசி இவ்வளவுப் பதட்டமாயிருக்கிறாளே  . எதை பெட்டிக்குள் நமக்குத் தெரியாமல் வைத்திருக்கிறாளோ என்கிறக் கவலை . நியுயார்க்  விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்கிற பதட்டம் .

இந்தப் பதட்டத்தின் நடுவே விமானத்திற்குள்  அமர்ந்தார்கள். நேரம் ஆகஆக இவர்கள் இருவருக்கும் சற்றே பதட்டம் குறைந்து சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தனர். தங்களுக்கு எதிரே நடமாடுபவர்களை ஆர்வத்துடன் பார்க்க ... வெள்ளை வெளேரென்ற ஆஜானுபாகு   வெளிநாட்டினரும்,   அங்கங்கே   இருக்கைப் பார்த்து அமர , வெண்ணிற அன்னங்களாய்  அழகு நடைப் பயிலும் ஏர் ஹோஸ்டேசும்  எல்லோரும் அமர உதவிக் கொண்டிருந்தனர். விமான பணிப்பெண்களின் குட்டைப் பாவாடை தான் சற்றே ராசியை முகம் சுளிக்க வைத்தது.


விமானம் மெல்ல மெல்ல மேலேறி  பறக்கத் தொடங்கியது. பல நாள் வேலையும், ஓய்வின்மையும், விமானத்தில் அமர்ந்ததும் , லேசான விமானக் குலுங்கலும் சேர்ந்து , அவர்களைத் தாலாட்ட , மெல்ல உறங்க ஆரம்பித்தனர் இந்தத் தம்பதி.

சற்று நேரத்தில் முழிப்புத் தட்ட  ராசி நிமிர்ந்துப் பார்க்க,  அங்கே விமானப் பணிப்பெண் எல்லோருக்கும் சாப்பிட உணவுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . இவர்கள் இருக்கை  நோக்கி வர ஆரம்பித்திருந்தார் . ஆனால் என்னவோ சொல்லி, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் பேசுவது ஆங்கிலம் தான் என்றாலும் அவர்கள் பேசும் விதம்(accent), ராசிக்கு  சுத்தமாய் புரியவில்லை.  அவர் வாயசவையே பார்த்துக்  கொண்டிருந்தாள்  ராசி.

என்னவோ  வார்....வார்..... என்று சொல்லிக் கொண்டே குனிந்து தட்டை எடுப்பதும் , மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு  எதையோ கொடுப்பதுமாக  இருந்தார்.

என்னவாயிருக்கும் " வார்.... வார்......(War) என்கிறாரே அந்தப் பெண்மணி , நாம் இந்தப்பக்கம்  நகர்ந்ததும், இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டு விட்டதோ. அதைத் தான்  அறிவித்துக் கொண்டிருக்கிறாரோ ? " என்று விஷ்ணுவைப் பார்த்துக் கேட்க ,
அவரோ ," ஆமாமாம் இருந்தாலும் இருக்கும். நீ வேறு இந்தியாவை விட்டு வந்து விட்டாய் அல்லவா. பாகிஸ்தான் காரர்களுக்கு  தைரியம் பிறந்திருக்கும் பார் ." என்று நக்கலடித்து விட்டு. , " கொஞ்சம் இரு நான் கவனிக்கிறேன் " என்று விஷ்ணு விமானப் பணிபெண்னைப் பார்க்க  மீண்டும் வார் ... வார் ,,... என்று அவர் சொல்லிக் கொண்டே இவர்கள்  இருக்கைகள் முன்பாகவே அவர் வந்து விட  , இப்பொழுது  காதில் விழுந்தது ," வேஜ் வார் ......" என்று. ராசிக்கு  கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. போர் வந்தால் இவர்கள் எப்படி  இந்தியா திரும்புவது. பீரோவில் எத்தனைப் பட்டுப் புடைவைகள் , நகைகள் எல்லாம் லாக்கரில்......... எல்லாம் என்ன ஆவது ........என்கிற கவலை  கண்ணில் நீரானது "

பக்கத்து சீட்டில் இருப்பவர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். தீடீரென்று இந்தப் பெண்மணிக்கு என்ன ஆனது? நாட்டை விட்டுப் போகிறோம் என்கிற ஆதங்கமோ? அது தான் கண்ணீருக்குக் காரணமோ ? என்று நினைத்துக் கொண்டார் போலும் .விமானப்  பணிப்பெண் இவர்கள் அருகில் வந்ததும், இவர்களைப் பார்த்து மீண்டும் " வேஜார் சிக்கன் ? " என்று கேட்க,

ராசிக்கு அப்பாடி என்றிருந்தது.  போர் எதுவுமில்லை .இவர் வேறு ஏதோ சொல்கிறார். என்பதுப் புரிய ஆனாலும் ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து, " வாட் வார் ? இந்தியா பாகிஸ்தான்? " என்று திரும்பி அவரைப் பார்த்து  ராசி கேட்க. பணிப்பெண் சற்றே குழம்பித் தான் போனார். ஆனாலும் அந்த உரையாடலை  நீட்டிக்க விரும்பாமல் .......

இவர்களை விட்டு விட்டு  அடுத்த சீட் காரரைப் பார்த்து கேட்க அவர் சிக்கன் என்று சொல்ல ,விஷ்ணுவிற்கு சட்டென்றுப் புரிந்தது.  : " வெஜ் ...வெஜ் ".....என்று  இவரும் சொல்லி  உணவை வாங்கிக் கொண்டார் தங்கள் இருவருக்கும்.
Veg or Non veg என்பதைத் தான் veg or chicken  என்று கேட்க, அரண்டிருந்த ராசியின்   காதிற்குப் ' போர் '  என்று விழுந்திருக்கிறது.

சாப்ப்பாட்டு தட்டைப் பார்த்ததும் , பசி வயிற்றைக் கிள்ள , ஆவலுடன் விஷ்ணு சாப்பாடு என்னவாயிருக்கும் என்று பார்த்தார். ஒரு சின்ன பாக்கெட்டில் உப்பு, மிளகு, கொஞ்சமாய் சாதம், அப்புறம் நிறைய இலைத் தழை , சின்ன டப்பாவில் தயிர், ஒரு சிலப் பழத் துண்டுகள் என்று அலங்காரமாய் அமர்ந்திருந்தன.

ஆமாம் அலங்காரமாய் தான் வேறென்ன  சொல்வது. விஷ்ணு நினைத்துக் கொண்டார். " இத்தனை இலைத் தழைகளாய்  தட்டில் வைப்பதற்குப் பதில், பிளேனை ஓரமாய்  புல்  தரையாய் பார்த்து நிறுத்தி, யார் யாருக்கு வேண்டுமோ போய் மேய்ந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம் என்று மனதில் தோன்ற  அவரையும் அறியாமல்  அவர் முகத்தில் புன்னகை பூத்தது.

முடிந்த வரை சாப்பிட்டு விட்டு, ஜூஸ் ஏதாவதுக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தனர் . சிறிது நேரத்திற்கெல்லாம் கிராமத்துப் பக்கம் " கலர்"என்று தள்ளு வண்டியில்  விற்பார்களே அதைப் போல் கலர் கலர் பாட்டில் நிறைய  அடுக்கிக் கொண்டு  மீண்டும் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தனர் அழகு சீமாட்டிகள்.

எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று ராசி,  கண்ணில் தெரிந்த அரஞ்சு ஜூஸ்  டப்பாவை சைகையால் காட்டி வாங்கிக் கொள்ள , விஷ்ணுவோ காபி என்று சொன்னார். பாலைப் பொங்கப் பொங்கக் காய்ச்சி அளவாய் சர்க்கரைப் போட்டு,  நல்ல திக் டிகாக்ஷன்  விட்டு நுரைப் பொங்க ஆற்றி, குடித்துப்  பழக்கப்பட்டவருக்கு    கொஞ்சம் ....இல்லையில்லை.....நிறையவே ஏமாற்றம்.

காபிக் கேட்டவுடன், விமான பணிப்பெண் வாய் கொள்ளாப் புன்னகையுடன் ஒரு கப் நிறைய  டிகாக்ஷன், அதுவும் வெளுத்தக் கலரில்,
வெதுவெதுவென்று  தண்ணீராய்  டிகாக்ஷன். ...  இதையெல்லாம் கூட விஷ்ணு  சமாளித்தார்,ஆனால் பால் என்று ஒன்றுக்   கொடுத்தாரே  பார்க்க வேண்டும்  அதை..... ஐந்தே ஐந்து மிலி தான்  இருக்கும்.  அதை டிகாக்ஷனில் கொட்டினால் எங்கோ கடலில் கரைத்தப் பெருங்காயமாய் பால் காணாமல் போனது. அதைக் குடிக்க ஆரம்பிக்க விஷ்ணுவிற்கு வயிற்றைப்  பிரட்டிக் கொண்டு வந்தது. ராசியைப் பரிதாபமாகப் பார்க்க, அவளோ கையில் இருக்கும் ஜூஸைக் குடித்துக் கொண்டே, எங்கோ வைத்தக் கண் வாங்காமல்  பார்த்துக் கொண்டிருந்தாள் .

அவள் பார்க்கும் திசையில், ஒருவர் , விமானப் பணிப்பெண்னிடம்  இருந்து மதுவைக்  கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அதைத் தான் ராசி மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள் .

அந்த அதிர்ச்சியில் இருந்து ராசி மீள்வதற்குள் , இவர்கள் இருக்கைக்கு முன்பாக இருந்த ஒரு வெளி நாட்டவர் சட்டென்று எழுந்து மேலே இருக்கும் கேபினெட்டில் இருந்து எதையோ எடுத்துத் தன்  மனைவியிடம்  கொடுக்கவும்
அவர் மனைவி(?)   அவருக்கு நன்றி சொல்வதோடு நிற்காமல்......அவரைக்  கட்டிப் பிடித்து சென்சார் செய்ய வேண்டிய காட்சிகளை  அரங்கேற்றிக் கொண்டிருந்தார். பொது இடங்களிலா ........!என்று ஆச்சரய்ப்பட்ட  ராசி தன்  பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

சர்வதேச விமானப் பயணம்  சற்று வித்தியாசமாகத்  தான் பட்டது ராசிக்கு.அமெரிக்காவில் இன்னும் என்னென்ன  இருக்கோ....... என்று நினைத்துக் கொண்டே  இருக்கும் போதே  .........விமானம்  ஒரு  பெரிய  பெருமூச்சுடன்  ஓடு தரையில் வழுக்கிக் கொண்டே சென்றது.

அது நின்ற இடம் " John F. Kennedy Airport. New York ."
ராசியின் சாம்பார் பொடிப்   பற்றிய அவளது பதட்டம் தீர்ந்ததா .......
அல்லதுத் தொடர்ந்ததா....................?  
                                                                  (தொடரும்)

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-1 படிக்க இங்கே கிளிக்கவும்


image courtesy--google.




உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்