Friday 20 February 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு - 2

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு ---1 படிக்க இங்கே க்ளிக்கவும்


வேஜார் ....?




 விசா  கிடைத்த மகிழ்ச்சியை  ராசி  தன் தோழிகளுடன்  பகிர்ந்து கொண்டாயிற்று.  போன்  பில் எவ்வளவு வரப் போகிறதோ என்று யோசிக்கத் தொடங்கியிருந்தார் விஷ்ணு." பேசாமல் விசா கிடைச்சாச்சு  என்று கொட்டை எழுத்துக்களில் பிட் நோட்டீஸ் அடித்து தினசரி பேப்பருக்குள் வைத்துக்  கொடுத்து விடலாம் போலிருக்கிறதே ராசி". என்று ராசியிடம்  சொன்னதற்கு,  அவள் கழுத்தை நொடித்துக் கொண்டுப் போய்  விட்டாள் .
ஆனால் விமான டிக்கெட் வாங்கியப் பிறகு ராசிக்கும் விஷ்ணுவிற்கும் வேலை பெண்டு கழட்டியது. இருவரும்  ஓடி ஓடி துணிமணிகள், அமெரிக்காவில் கிடைக்காத சாமான்கள் என்று வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.

ராசி வாங்கி பெட்டியில் அடைத்து , வெயிட் பார்க்க ஒரு மெஷினும் வாங்கிக் கொண்டு விட்டாள் . வெயிட் பார்த்து , வெயிட் பார்த்து  அவள் வெயிட்டே ஒரு இரண்டு கிலோ குறைந்திருக்கும். ஆனால் குரங்கு  அப்பம் கதையாய் ஒரு பெட்டியிலிருந்து இன்னொன்றிக்கு பிய்த்து, பிய்த்து வைத்து , திரும்பவும் வெயிட் செக் செய்து........... , நெற்றி வியர்வை, நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்தார்கள் ராசி விஷ்ணு தம்பதி.ஒருவழியாய் நான்கு பெட்டிகளில்  எல்லாவற்றையும் அடைத்து வைத்தனர்.

அந்த நாளும் வந்தது. ஆமாம் ராசி விஷ்ணு, அமெரிக்கா கிளம்ப வேண்டிய நாள் தான். சென்னை ஏர்போர்ட்டிற்கு  வந்து சேர்ந்தனர் இருவரும். உள்ளே சென்று  "செக் இன்" செய்ய வேண்டிய அனைத்தையும் செக்கின் செய்து விட்டு, விமானம் ஏற கேட்டருகே காத்திருந்தனர். இருவர் முகத்தைப் பார்த்தாலுமே ஒரு பதட்டத்தைக்காண முடிந்தது. சிலர் ஒரு மாதிரியாய் இவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றனர். . அந்த அளவிற்குப் பதட்ட நிலையில் இருந்தது இவர்கள் முகம். எதையோ கடத்தி செல்பவர்கள் போல்  கண்கள் இங்குமங்கும் அலை பாய அமர்ந்திருந்தனர்.

நம் போலீஸ் ஒருவரும் இவர்களை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டே நகர்ந்தார் . ராசிக்கு என்ன பதட்டம் என்றால்  அவள் பெட்டிக்குள் வைத்திருக்கும் சாம்பார்பொடியை யாராவதுக் கண்டுபிடித்தது விடுவார்களோ என்று. விஷ்ணுவிற்கோ, ராசி இவ்வளவுப் பதட்டமாயிருக்கிறாளே  . எதை பெட்டிக்குள் நமக்குத் தெரியாமல் வைத்திருக்கிறாளோ என்கிறக் கவலை . நியுயார்க்  விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டு விடுவோமோ என்கிற பதட்டம் .

இந்தப் பதட்டத்தின் நடுவே விமானத்திற்குள்  அமர்ந்தார்கள். நேரம் ஆகஆக இவர்கள் இருவருக்கும் சற்றே பதட்டம் குறைந்து சகஜ நிலைக்கு வர ஆரம்பித்தனர். தங்களுக்கு எதிரே நடமாடுபவர்களை ஆர்வத்துடன் பார்க்க ... வெள்ளை வெளேரென்ற ஆஜானுபாகு   வெளிநாட்டினரும்,   அங்கங்கே   இருக்கைப் பார்த்து அமர , வெண்ணிற அன்னங்களாய்  அழகு நடைப் பயிலும் ஏர் ஹோஸ்டேசும்  எல்லோரும் அமர உதவிக் கொண்டிருந்தனர். விமான பணிப்பெண்களின் குட்டைப் பாவாடை தான் சற்றே ராசியை முகம் சுளிக்க வைத்தது.


விமானம் மெல்ல மெல்ல மேலேறி  பறக்கத் தொடங்கியது. பல நாள் வேலையும், ஓய்வின்மையும், விமானத்தில் அமர்ந்ததும் , லேசான விமானக் குலுங்கலும் சேர்ந்து , அவர்களைத் தாலாட்ட , மெல்ல உறங்க ஆரம்பித்தனர் இந்தத் தம்பதி.

சற்று நேரத்தில் முழிப்புத் தட்ட  ராசி நிமிர்ந்துப் பார்க்க,  அங்கே விமானப் பணிப்பெண் எல்லோருக்கும் சாப்பிட உணவுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் . இவர்கள் இருக்கை  நோக்கி வர ஆரம்பித்திருந்தார் . ஆனால் என்னவோ சொல்லி, சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தப் பெண் பேசுவது ஆங்கிலம் தான் என்றாலும் அவர்கள் பேசும் விதம்(accent), ராசிக்கு  சுத்தமாய் புரியவில்லை.  அவர் வாயசவையே பார்த்துக்  கொண்டிருந்தாள்  ராசி.

என்னவோ  வார்....வார்..... என்று சொல்லிக் கொண்டே குனிந்து தட்டை எடுப்பதும் , மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு  எதையோ கொடுப்பதுமாக  இருந்தார்.

என்னவாயிருக்கும் " வார்.... வார்......(War) என்கிறாரே அந்தப் பெண்மணி , நாம் இந்தப்பக்கம்  நகர்ந்ததும், இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டு விட்டதோ. அதைத் தான்  அறிவித்துக் கொண்டிருக்கிறாரோ ? " என்று விஷ்ணுவைப் பார்த்துக் கேட்க ,
அவரோ ," ஆமாமாம் இருந்தாலும் இருக்கும். நீ வேறு இந்தியாவை விட்டு வந்து விட்டாய் அல்லவா. பாகிஸ்தான் காரர்களுக்கு  தைரியம் பிறந்திருக்கும் பார் ." என்று நக்கலடித்து விட்டு. , " கொஞ்சம் இரு நான் கவனிக்கிறேன் " என்று விஷ்ணு விமானப் பணிபெண்னைப் பார்க்க  மீண்டும் வார் ... வார் ,,... என்று அவர் சொல்லிக் கொண்டே இவர்கள்  இருக்கைகள் முன்பாகவே அவர் வந்து விட  , இப்பொழுது  காதில் விழுந்தது ," வேஜ் வார் ......" என்று. ராசிக்கு  கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. போர் வந்தால் இவர்கள் எப்படி  இந்தியா திரும்புவது. பீரோவில் எத்தனைப் பட்டுப் புடைவைகள் , நகைகள் எல்லாம் லாக்கரில்......... எல்லாம் என்ன ஆவது ........என்கிற கவலை  கண்ணில் நீரானது "

பக்கத்து சீட்டில் இருப்பவர் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். தீடீரென்று இந்தப் பெண்மணிக்கு என்ன ஆனது? நாட்டை விட்டுப் போகிறோம் என்கிற ஆதங்கமோ? அது தான் கண்ணீருக்குக் காரணமோ ? என்று நினைத்துக் கொண்டார் போலும் .விமானப்  பணிப்பெண் இவர்கள் அருகில் வந்ததும், இவர்களைப் பார்த்து மீண்டும் " வேஜார் சிக்கன் ? " என்று கேட்க,

ராசிக்கு அப்பாடி என்றிருந்தது.  போர் எதுவுமில்லை .இவர் வேறு ஏதோ சொல்கிறார். என்பதுப் புரிய ஆனாலும் ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து, " வாட் வார் ? இந்தியா பாகிஸ்தான்? " என்று திரும்பி அவரைப் பார்த்து  ராசி கேட்க. பணிப்பெண் சற்றே குழம்பித் தான் போனார். ஆனாலும் அந்த உரையாடலை  நீட்டிக்க விரும்பாமல் .......

இவர்களை விட்டு விட்டு  அடுத்த சீட் காரரைப் பார்த்து கேட்க அவர் சிக்கன் என்று சொல்ல ,விஷ்ணுவிற்கு சட்டென்றுப் புரிந்தது.  : " வெஜ் ...வெஜ் ".....என்று  இவரும் சொல்லி  உணவை வாங்கிக் கொண்டார் தங்கள் இருவருக்கும்.
Veg or Non veg என்பதைத் தான் veg or chicken  என்று கேட்க, அரண்டிருந்த ராசியின்   காதிற்குப் ' போர் '  என்று விழுந்திருக்கிறது.

சாப்ப்பாட்டு தட்டைப் பார்த்ததும் , பசி வயிற்றைக் கிள்ள , ஆவலுடன் விஷ்ணு சாப்பாடு என்னவாயிருக்கும் என்று பார்த்தார். ஒரு சின்ன பாக்கெட்டில் உப்பு, மிளகு, கொஞ்சமாய் சாதம், அப்புறம் நிறைய இலைத் தழை , சின்ன டப்பாவில் தயிர், ஒரு சிலப் பழத் துண்டுகள் என்று அலங்காரமாய் அமர்ந்திருந்தன.

ஆமாம் அலங்காரமாய் தான் வேறென்ன  சொல்வது. விஷ்ணு நினைத்துக் கொண்டார். " இத்தனை இலைத் தழைகளாய்  தட்டில் வைப்பதற்குப் பதில், பிளேனை ஓரமாய்  புல்  தரையாய் பார்த்து நிறுத்தி, யார் யாருக்கு வேண்டுமோ போய் மேய்ந்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாம் என்று மனதில் தோன்ற  அவரையும் அறியாமல்  அவர் முகத்தில் புன்னகை பூத்தது.

முடிந்த வரை சாப்பிட்டு விட்டு, ஜூஸ் ஏதாவதுக் குடித்து வயிற்றை நிரப்பிக் கொள்ளலாம் என்று தீர்மானித்தனர் . சிறிது நேரத்திற்கெல்லாம் கிராமத்துப் பக்கம் " கலர்"என்று தள்ளு வண்டியில்  விற்பார்களே அதைப் போல் கலர் கலர் பாட்டில் நிறைய  அடுக்கிக் கொண்டு  மீண்டும் தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தனர் அழகு சீமாட்டிகள்.

எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று ராசி,  கண்ணில் தெரிந்த அரஞ்சு ஜூஸ்  டப்பாவை சைகையால் காட்டி வாங்கிக் கொள்ள , விஷ்ணுவோ காபி என்று சொன்னார். பாலைப் பொங்கப் பொங்கக் காய்ச்சி அளவாய் சர்க்கரைப் போட்டு,  நல்ல திக் டிகாக்ஷன்  விட்டு நுரைப் பொங்க ஆற்றி, குடித்துப்  பழக்கப்பட்டவருக்கு    கொஞ்சம் ....இல்லையில்லை.....நிறையவே ஏமாற்றம்.

காபிக் கேட்டவுடன், விமான பணிப்பெண் வாய் கொள்ளாப் புன்னகையுடன் ஒரு கப் நிறைய  டிகாக்ஷன், அதுவும் வெளுத்தக் கலரில்,
வெதுவெதுவென்று  தண்ணீராய்  டிகாக்ஷன். ...  இதையெல்லாம் கூட விஷ்ணு  சமாளித்தார்,ஆனால் பால் என்று ஒன்றுக்   கொடுத்தாரே  பார்க்க வேண்டும்  அதை..... ஐந்தே ஐந்து மிலி தான்  இருக்கும்.  அதை டிகாக்ஷனில் கொட்டினால் எங்கோ கடலில் கரைத்தப் பெருங்காயமாய் பால் காணாமல் போனது. அதைக் குடிக்க ஆரம்பிக்க விஷ்ணுவிற்கு வயிற்றைப்  பிரட்டிக் கொண்டு வந்தது. ராசியைப் பரிதாபமாகப் பார்க்க, அவளோ கையில் இருக்கும் ஜூஸைக் குடித்துக் கொண்டே, எங்கோ வைத்தக் கண் வாங்காமல்  பார்த்துக் கொண்டிருந்தாள் .

அவள் பார்க்கும் திசையில், ஒருவர் , விமானப் பணிப்பெண்னிடம்  இருந்து மதுவைக்  கேட்டு வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அதைத் தான் ராசி மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தாள் .

அந்த அதிர்ச்சியில் இருந்து ராசி மீள்வதற்குள் , இவர்கள் இருக்கைக்கு முன்பாக இருந்த ஒரு வெளி நாட்டவர் சட்டென்று எழுந்து மேலே இருக்கும் கேபினெட்டில் இருந்து எதையோ எடுத்துத் தன்  மனைவியிடம்  கொடுக்கவும்
அவர் மனைவி(?)   அவருக்கு நன்றி சொல்வதோடு நிற்காமல்......அவரைக்  கட்டிப் பிடித்து சென்சார் செய்ய வேண்டிய காட்சிகளை  அரங்கேற்றிக் கொண்டிருந்தார். பொது இடங்களிலா ........!என்று ஆச்சரய்ப்பட்ட  ராசி தன்  பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

சர்வதேச விமானப் பயணம்  சற்று வித்தியாசமாகத்  தான் பட்டது ராசிக்கு.அமெரிக்காவில் இன்னும் என்னென்ன  இருக்கோ....... என்று நினைத்துக் கொண்டே  இருக்கும் போதே  .........விமானம்  ஒரு  பெரிய  பெருமூச்சுடன்  ஓடு தரையில் வழுக்கிக் கொண்டே சென்றது.

அது நின்ற இடம் " John F. Kennedy Airport. New York ."
ராசியின் சாம்பார் பொடிப்   பற்றிய அவளது பதட்டம் தீர்ந்ததா .......
அல்லதுத் தொடர்ந்ததா....................?  
                                                                  (தொடரும்)

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-1 படிக்க இங்கே கிளிக்கவும்


image courtesy--google.




28 comments:

  1. வீட்டிற்குள் -
    வெயிட் பார்த்து , வெயிட் பார்த்து அவள் வெயிட்டே இரண்டு கிலோ குறைந்து !?..

    விமானத்திற்குள் -
    கிராமத்தின் - தள்ளு வண்டி கலர் (!) ..
    வாய் கொள்ளாப் புன்னகையுடன் வழங்கப்பட்ட காபி (!) ..

    அருமை.. அருமை!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார். உங்கள் வருகைக்கும், ரசித்துப் படித்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி சார்.

      Delete
  2. தொடரா?? சூப்பர்! சாம்பார் பொடி பத்திரமாய் வீடு போய் சேர்ந்ததா என்று இப்பவே எனக்கு டென்ஷனில் பக் பக் என்று இருக்கிறது! ராசி நிஜமாவே ஆரஞ்ச் ஜூஸ் தான் குடித்தாளா?? பாவம் விஷ்ணு , கடுங்காப்பி குடிக்க வெச்சுடீங்களே! அடுத்து என்னென்ன நடக்கும் என்று ஆவல் பத்தி கொண்டு விட்டது :)

    ReplyDelete
    Replies
    1. தொடர் ஆரம்பித்தது ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது மஹா. பற்பல காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. மீண்டும் இப்பொழுது தான் தொடர்கிறேன். முந்தையப் பகுதிக்கு லிங்க் கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி மஹா. தொடர்ந்து நகைச்சுவையாக கொண்டு செல்ல எண்ணியிருக்கிறேன். எண்ணிய முடிதல் இறைவன் ஆசி வேண்டும்.

      Delete
  3. Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  4. பயணம் என்றால் இப்படி அனுபவிக்கணும்! ஸூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. ராசியின் பயணத்தை ஸூப்பராய் ரசித்துப் படித்ததற்கும், பாராட்டியதற்கும் நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  5. இந்தப் பயணக் குறிப்பில் கண்டது வரை ராசிதான் அப்பாவி மட்டுமல்லாமல் அசடுமாகத் தெரிகிறாள்.

    ReplyDelete
    Replies
    1. அசட்டு ராசியா? இது கூட நன்றாக இருக்கிறதே. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  6. ராசியின் விமான பயண வர்ணணை அருமை! அமெரிக்காவில் என்ன நடந்தது என அறிய ஆவல் இப்போதே பிறக்கிறது! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், ஊக்குவிக்கும் பாராட்டிற்கும் நன்றி சுரேஷ்.

      Delete
  7. ரசிக்க வைத்த பகிர்வு அம்மா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.

      Delete
  8. ஓ, மீண்டு(ம்) வந்தாச்சா ! நல்ல நகைச்சுவை. பதிவைப் படிக்கும்போது என்னுடைய முதல் அனுபவமும் வந்து எட்டிப் பார்த்தது.

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவு உங்கள் முதல் அனுபவத்தைத் தொட்டு விட்டு சென்றது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் வருகைக்கும் ஊக்கமான கருத்துரைக்கும் மிக்க நன்றி சித்ரா

      Delete
  9. ஹா... ஹா... என்னவொரு பயம்...? ஆனாலும் பயணம் சுவாரஸ்யம்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், சுவாரஸ்யமாய் படித்து பாராட்டுவதற்கும் நன்றி தனபாலன் சார்.

      Delete
  10. அருமையான வர்ணனை
    சாம்பார் பொடிக்கு இப்படி ஒரு போராட்டமா
    அருமை சகோதரியாரே
    காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக
    தம +1

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயக்குமார் சார் உங்கள்வருகைக்கும் பின்னுட்டத்திற்கும்

      Delete
  11. ஆனால் குரங்கு அப்பம் கதையாய் ஒரு பெட்டியிலிருந்து இன்னொன்றிக்கு பிய்த்து, பிய்த்து வைத்து , திரும்பவும் வெயிட் செக் செய்து........... , நெற்றி வியர்வை, நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்தார்கள் ராசி//
    நாங்களும் ராசிபோல்தான் அமெரிக்காபோகும் போது வெயிட் வெயிட் பார்த்து அப்பா!

    நானும், சாம்பார்பொடி, இட்லிபொடி, புளிகாய்ச்சல், நார்த்தங்காய் ஊறுகாய். ஸ்வீட், காரம் எல்லாம் எடுத்து சென்றேன், சினிமாவில், கதையில் எல்லாம் உணவு பொருட்கள் அமெரிக்கா உள்ளே எடுத்து போக முடியாது எடுத்து குப்பையில் கொட்டிவிடுவார்கள் என்று காட்டியதைப்பார்த்து பயம் தான். ஆனால் வெற்றிகரமாய் மகன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டோம்.
    ராசியும் வீட்டுக்கு சாம்பார்பொடியை பத்திரமாய் எடுத்து சென்று இருப்பார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதை எடுத்துக் கொண்டு வெளியே வருவதற்குள் ஒரு பெரிய விஷயம் தான். ஆனாலும் இப்பொழுதெல்லாம் நம்மைப் பார்ஹ்த்தாலே அவர்களுக்குப் புரிந்து விடுகிறது. மிஞ்சி மிஞ்சிப் போனால் உள்ளே வெறும், மிளகாய் தூளும் அரிசி மாவும் இருக்கப் போகிறது என்று விட்டு விடுகிறார்கள்.

      உங்கள் வருகைக்கும், உந்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்துக் கொண்டதற்கும் நன்றி கோமதி

      Delete
  12. ரசித்து வாசிக்க வைக்கும் எழுத்து அம்மா...
    வெஜ் ஆர் நான் வேஜ் (வேஜார் ) ஹா.... ஹா...

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தை ரசித்து வாசித்துப் பாராட்டுவதற்கு நன்றி குமார்.

      Delete
  13. இதை எப்படியோ படிக்காமல் விட்டுப் போயிருக்கே! இதன் முதல் பாகம் சுட்டி எங்கே? ஊறுகாய் கூட இப்போக் கூரியர் மூலமாய் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பலாம். நாம் தான் எடுத்துப் போகக் கூடாது. மெம்பிஸ் விமான நிலையத்தில் பிரித்து மேய்ந்து விடுகிறார்கள். :) எங்களோட அனுபவங்களைக் கிட்டே இருந்து பார்த்தாப்போல் இருக்கு. ஆனால் கத்தார் ஏர்வேஸ், எமிரேட் ஏர்வேஸ் ஆகியவற்றின் சிப்பந்திகள் பேசுவதும், லுஃப்தான்ஸா ஏர்வேஸின் சிப்பந்திகள் பேசுவதும் ஓரளவுக்குப் புரியும். :)

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --1 பாகம் சுட்டி இதோ கீதா மேடம் http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/12/1.html.
      என் முதல் விமானப் பயணத்தில் நிஜமாகவே ஒன்றும் புரியத்தான் இல்லை. இவர்கள் பேசுவது ஆங்கிலம் தானா என்கிற சந்தேகமே வந்தது.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மேடம்.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்