Tuesday 30 July 2013

நானும் Raj Kates தான்!!!என்னை, திரு தமிழ் இளங்கோ , என்  முதல் கணினி அனுபவம்  பற்றி எழுதச்  சொல்லி போஸ்டர்  அடித்து விட்டார். அவர் நம்பிக்கை வீண் போகாமல் எழுத  ஆரம்பிக்கிறேன்.

( வீண் போச்சா இல்லையா என்பதை நாங்களல்லவா  சொல்ல வேண்டும் என்கிற   முனகல்  கேட்கிறது)

இதோ நான்  Raj Kates  (Bill Gates  மாதிரி  Raj Kates ) ஆன கதை.  
என மகளும், மகனும்,   பொறியியல் கல்லூரியில்  படித்துக் கொண்டிருந்த போது  கணினி வாங்கத் தீர்மானித்தோம்.

விலையைக்  கேட்டோம்.  மயக்கம் வராத குறைதான்.இருந்தாலும் வாங்குவது என்பது முடிவானது.

மறு நாளே என் சக ஆசிரியைகளுடன்  மதிய உணவு நேரத்தில்  இதைப் பற்றி விவாதம்  .ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு  யோசனை. அப்பொழுது தான் PC க்கள் வீடுகளுக்குள்  நுழைய  ஆரம்பித்த  நேரம்.  விவாதத்தில்  வீட்டில் AC ரூமில் தான் கணினி இருக்க வேண்டும்( இல்லையென்றால் கோபித்துக் கொண்டு  போய் விடும்) என்று பரவலாக சொல்லப்பட   நான் அதை ....

அன்று மாலை  ஆபிசிலிருந்து திரும்பிய கணவரிடம்  எடுத்து  சொல்ல.....
அவரோ........." ஏன் ........  ஆர்கெஸ்ட்ரா  , ஆர்ச் ,என்று எதுவும் அரேஞ்  செய்ய வேண்டாமா? "என்று  கிண்டலாக கேட்க நானோ," நீங்கள் என்னவோ செய்யுங்கள் "என்று  முகத்தை திருப்பிக் கொண்டேன்.

அந்த நாளும் வந்தது.  கம்ப்யுட்டரை அன்று தான் மிக நெருக்கத்தில்  பார்த்தேன் என்று சொல்ல வேண்டும்.  அதை இன்ஸ்டால்  செய்பவர் என் மகளிடமும், மகனிடமும்   விண்டோஸ்,  லினக்ஸ் , கேட்ஸ்  என்று என்னென்னமோ  சொல்ல எனக்குத் தெரிந்தது என்னவோ ,எங்கள் வீட்டு ஜன்னலும், கதவும் தான்.

மறு நாளிலிருந்து எனக்கும் கணினிக்கும் ஒரு பெரிய போராட்டமே ஆரம்பித்தது.ஸ்விட்சைப் போட்டால்  என்னென்னவோ திரையில் தெரிய ஒன்றும் புரியாமல்,  பயந்து போய் சட்டென்று ஸ்விட்ச்சை ஃஆப்  செய்து  விட்டு ,ஒன்றும் தெரியாதவளாய்  கமுக்கமாக உட்கார்ந்து கொண்டே ன்.

அடுத்து வீட்டிற்குள் நுழைந்தது என் மகள் . அவள் ஸ்விட்சை ஆன்  செய்ததும்   " அம்மா, இங்கே வா? எதற்கு கம்ப்யுட்டரை ஆன்  செய்துவிட்டு ஆப் செய்திருக்கிறாய். ஷட் ...டவுன்  அல்லவா  செய்ய வேண்டும் ."என்று  கோபப்பட

 அவளிடம் என் பால பாடத்தை ஆரம்பித்தேன். "உனக்கு மவுஸ்  கோ-ஆர்டினேஷனே வரவேயில்லை "என்று அவள்  எரிச்சலாக ,

"கண்ணா, கண்ணா  " என  அபயக் குரல்  நான் கொடுக்க என் மகன்  ஆஜரானானான். 

அவன்  " மவுஸ்  வசப்பட    " solitaire" விளையாடு, பிறகு மற்றதெல்லாம் கற்றுக் கொள்ளலாம். "  என்று தகப்பன் சாமியானான்

மறு நாளிலிருந்து விளையாட ஆரம்பித்தேன். இரண்டொரு நாளில்  எலி என் வசமானது  (அதாங்க மவுஸ் ) .

ஆனால் ,  அதற்குப் பிறகு solitaire   என்னை விடுவதாயில்லை. வீட்டிற்கு வந்தவுடன் கம்ப்யுட்டரை  ஆன் செய்ததும், நான்  செய்வது கார்ட்ஸ் விளையாட்டு விளையாடுவது தான்.  எல்லோரும்  வீட்டில் திட்ட,  திட்ட  விளையாடியிருக்கிறேன் .

என் மாமியாரோ, " இதென்ன கூத்தால்ல இருக்கு!  அம்மாவே சீட்டாடிக் கொண்டிருந்தால் குடும்பம் உருப்பட்டு விடும் "என்று முனக  , இது  சரிப்படாது என்று விட்டு தொலைத்தேன்.

இதற்குள் எங்கள் பள்ளியில் சில ஆசிரியைகளை  கம்ப்யுட்டர் பயிற்சிக்கு அனுப்பி வைத்தார்கள்.  அதில் அடியேனும் ஒருத்தி.

அங்கு போய்   excel, power ponit presentation  எல்லாம் கற்றுக் கொண்டு வந்தேனா?
வீட்டில்  இதை பற்றி  ஒரேயடியாக  " பீட்டர் "விட்டுக் கொண்டிருக்க, என் அம்மா அப்பொழுது,  " நீ என்ன தான் கற்றுக் கொள்கிறாய் சொல்லேன் ?" என்றார்.


உடனே நான் என் கம்ப்யுட்டர் அறிவை வெளிப்படுத்தினேன்.
என்னவோ ஒரு பாடத்திற்கே slides  தயாரித்தேன்  என்று நீங்கள்  நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல .

நான் " WELCOME "  என்று ஒரேயொரு வார்த்தையில் என் திறமையெல்லாம் கொட்டினேன்.

வார்த்தையிலிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு மூலையிலிருந்து குதித்தோடி,  பல்டியடித்து , சர்ரென்று சறுக்கி  வரவைத்து  மியுசிக்குடன்   கணினியில் சர்க்கஸ் காட்டினேன்.

ஒரு பதிலும் வரவில்லை என் அம்மாவிடமிருந்து. என்னவென்று பார்த்தால் என் அம்மாவினால்  பேசவே முடியவில்லை.  ஆனந்தக் கண்ணீர், அருவியாய் கொட்டி, ஆறாகப் பெருகி ஓடிக்கொண்டிருந்தது.
ஈன்ற பொழிதுனும்   பெரிதாக  உவந்திருப்பார் போலிருக்கிறது.

இந்த அருமையான சந்தர்ப்பத்தில் என் மகளுக்கு மூக்கின் மேல் வியர்க்குமே! வந்து விட்டாள் . "என்ன பாட்டி? ஒரே  ஃ பீலிங்க்ஸ் தான் போ ! 
எனக்கு கொஞ்சமே கொஞ்சம்  விஷயம் தெரியும் என்று யாராவது சொன்னால்  என் மகனிற்கு பொறுக்குமா . வந்து விட்டான் அவனும்."  இது ஒரு பெரிய விஷயமில்லை பாட்டி. நீ கூட செய்யலாம் " என்று என்  மானத்திற்கு பங்கம் விளைவிக்க இருவரும்  முயற்சி செய்தனர்.

ஆனால் என் அம்மாவோ ." பரவாயில்லைடி  ! இஞ்சினீயர்  படிக்காமலே நீ இஞ்சினியர் ஆகிவிட்டாய். " என்று பெருமையோ பெருமை.

(எனக்குத் தானே தெரியும் நான் இஞ்சி நீரா , வெந்நீரா  என்று )

கொஞ்ச நாளில் அதில் ,CD போட்டு படம் பார்ப்பது, ஆடியோ CD போட்டு சினிமா பாட்டு கேட்பது  என்று ஓரளவிற்குக்  கற்று கொண்டேன்.
(என்னவெல்லாம்  செய்கிறேன்.........என்று என்மேலேயே எனக்கு  பொறாமை ஏற்பட்டது  என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்)

பின் இணைய உலகம்  புரிய  ஆரம்பித்தது.  அப்பொழுதெல்லாம் dial up  connection தான். அந்தப் பெருமை பற்றியெல்லாம் சொல்லப்  போவதில்லை.

மெயில்  வந்த புதிது.  நானே தட்டுத் தடுமாறி ஒரு மெயில் ஐடி  ஆரம்பித்துக் கொண்டேன்.

அதிலிருந்து என் தம்பியின்  மனைவி  லதாவிற்கு  மெயில் அனுப்பி வைத்தேன். அரை மணி நேரமானது.... பதில் வந்திருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு  ஒரு 15 நிமிட இடைவெளியில் பதில் வந்திருக்கா,பதில் வந்திருக்கா .... என்று  பார்க்க ஆரம்பித்தேன். பதில் வரும் வரை விடவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு  ஒரு ISD கால் செய்து " மெயில் அனுப்பியிருக்கிறேன் " என்று சொல்லிவிடலாமா என்று கூட யோசித்தேன்.
(இப்பொழுதும் , ஒரு பதிவு எழுதிவிட்டு  5 நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது கருத்து இட்டிருக்கிறீர்களா என்று பார்க்கிறேன்.)

லதா பார்த்தால் தானே! இரண்டு நாட்களுக்குப் பிறகு பதில் வந்திருந்தது.
ஒரே எதிர்பார்ப்புடன் திறந்தால் "உங்களுக்கு மெயில் ஐடி இருக்கிறது என்று புரிகிறது. ஆனால் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. எல்லாம் HTML இல்  இருக்கிறது. என்று என் மெயில் செட்டிங்க்ஸ்  மாற்ற   சொல்லிக கொடுத்து எனக்கு மெயில் அனுப்பினாள்.

எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்து விட வேண்டாம்.
இப்பொழுதெல்லாம் ஆன்லைனில்  ஷாப்பிங்,  டிக்கெட் வாங்குவது, பில்லிற்கு பணம் கட்டுவது, முக்கியமாக சினிமா பார்ப்பது  என்று  எல்லாமே இணையத்தில்  நானே பார்த்துக் கொள்கிறேன்.

எவ்வளவு  வளர்ந்து விட்டேன்  பாருங்கள் .
எப்படி என்றால்,

" இனிமேல் உன் பெயரென்ன என்று கேட்டால் கூட  கூகுலைப்  பார்த்து தான் சொல்வாய் . அது மட்டுமா , வங்கியிலிருக்கும் பணத்திற்கு வீட்டிலிருந்தபடியே  அருமையாய் உலை வைக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாய்  ' என்று   கணவர் சலிக்கும்  அளவிற்கு..

 " கம்ப்யுட்டரிலேயே கதையெல்லாம் எழுதுகிறேன் என்று எல்லோருக்கும்  என் வீட்டில் ஒரே பெருமை "
 என்று சொல்லிக் கொள்ள ஆசை தான்.
ஆனால் ஒருவரும் சொல்வதில்லை.
அதனால் நானே அவர்கள் சொன்னதாக  ஒரு சின்ன பொய்........அவ்வளவே தான்.

நான்  கம்ப்யுட்டரில்   Raj Kates .. ..........Raj Kates  .......... ஆகிவிட்டேன்  தானே !!

நீங்கள்...................? 

 விருப்பமுள்ளவர்கள்  உங்கள் அனுபவங்களையும்  பகிர்ந்து கொள்ளுமாறு  அழைப்பு விடுக்கிறேன்.IMAGE COURTESY-----GOOGLE.

Wednesday 24 July 2013

சுவரும் ஒரு கப் காபியும்.
தலைப்பைப் பார்த்து ஏதோ இவள்  வீட்டு சுவற்றில்  கிறுக்கியதைப்  பற்றி  எழுதி  இம்சை செய்வாள் என்று  நினைத்து விட வேண்டாம்.

இது  கொஞ்சம் சீரியஸ்  .
யார் சீரியஸா..........அதானே  வேணாம்கிறது .      சீரியசான  பதிவு என்று சொல்ல வருகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்.

 " இங்கே பார், , சரவணபவன் ஹோட்டல் . ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றாள்தோழி.

எனக்கும் ஒரே பசி. தோழியின்  மகளுடைய  திருமணத்திற்கு  ஷாப்பிங்  செய்து கொண்டிருந்தோம்(இரண்டு மாதங்களுக்கு முன்பாக). இந்த சென்னை வெயிலில்  அலைவது கொஞ்சம் .......இல்லை..........இல்லை   ......நிறையவே ,கஷ்டமாயிருந்தது.
சரி... சரவண பவன்  ஏ.சி. ரூமிலாவது அடக்கலாமாவோம் என்று தோழியைத் தொடர்ந்தேன். இந்த ஜன சமுத்திரத்தில்  ஒருவழியாக நீந்தி  சரவண பவனை அடைந்தோம்.  வெளியே வாயிலை அடைத்துக் கொண்டு ஒரு கூட்டம் நின்றிருக்க  , ஒரு வயதான  பிச்சைக் காரர்   அவர்களையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதாவது சாப்பிடத் தர மாட்டார்களா என்று தான்.
ஆனால் யாருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை .

நானும் என் தோழியும்  கூட  , அந்தப் பிச்சைக் காரரை  அலட்சியம் செய்தபடி உள்ளே சென்று அமர்ந்தோம்.
எதிர் டேபிளில்  இருந்தவர்களிடம் ஆர்டர் பெற்றுக் கொண்டு எங்களிடம் வந்தார்  பேரர்.

ஆளுக்கு ஒரு ரவா தோசை சாப்பிட்டு விட்டு ஏதோ  நினைவில்  3 காபி என்றேன் சர்வரிடம்.
 இல்லை.. இல்லை...
இரண்டு போதும் என்று திருத்தினேன்.

அப்பொழுது தான்  இணையத்தில் உலா வந்து கொண்டிருந்த  " cup of coffee for the wall" நினைவிற்கு வந்தது.

அதைப் பற்றியே நினைத்துக்  கொண்டிருக்க  என் தோழி "ராஜி, என்ன ஒரே பலத்த யோசனை ! காபியைக் குடி " என்று என்னை திசை திருப்பினாள்.

" ஒன்றுமில்லை,  இன்று காலையில்  முக நூலில்  யாரிடமிருந்தோ  வ்ந்திருந்தக்  கதை  பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். '

" கதையா?  சொல்லேன் கேட்கிறேன் " என்று  ஆர்வமாக  சொல்லிக் கொண்டே காபியை டம்ளரிலிருந்து   டபராவிற்கு ஆற்றினாள்.

சரி சொல்கிறேன் கேள்

யாரோ ஒரு முகம் தெரியாத நண்பர்  "வெனிஸ்" நகரத்தில் உள்ள ஒரு ஹோட்டலிற்கு   காபி சாப்பிட சென்றிருக்கிறார்.

"யார் அவர்  ? இத்தாலியில் தானே வெனிஸ் இருக்கிறது? அங்கே  காபியெல்லாம் கிடைக்குமா?   ஃபில்டர் காபியா?"
என்று கேள்விக்  கணையாகத்  தொடுத்தாள்.

" இதோ பார், பேசாமல் கேட்பதானால் சொல்கிறேன் "என்று சொல்ல உதட்டை சுழித்து  " சரி, சரி, நான் வாயையே திறக்க வில்லை  என்றாள் பவ்யமாக .

" சரி எங்கே விட்டேன்? இது நான்.

"வெனிசில் ஒரு ஹோட்டலில் நண்பரை விட்டிருக்கிறாய் " என்றாள்  பயந்தது போல் நடித்துக் கொண்டே.

ஆமாம்...... வெனிஸீல்  ஹோட்டலில் காபி குடிக்க உட்கார்ந்த நண்பர்  எதிர் டேபிளில்  பேரர்  ஆர்டர் எடுக்கக் கண்டார். 

இரண்டு காபி  என்றார் அந்த டேபிளில்  அமர்ந்திருந்தவர். "ஒன்று சுவருக்கு "
முடித்தார்.

இது என்ன ! . ஆச்சர்யப்பட்டு கொண்டிருக்கும் போதே 
இன்னொரு டேபிளில் அமர்ந்திருந்த இருவர்   " 3 காபி  ஒன்று சுவரில்  "என்று குரல்  கொடுத்தனர்.

இந்த பேரர் என்ன தான் செய்கிறார் பார்க்கலாம்  என்று நண்பர் பார்க்கத் தொடங்கும் போதே பேரர்  காபியை டேபிளில் வைத்து விட்டு  ஒரு சின்ன ஸ்டிக்கர் பேப்பரில்  ஒரு காபி என்றெழுதி  எதிர் சுவற்றில் ஒட்டி வைத்து விட்டுப் போய் விட்டார்.

இதே போல்  நிறை ஸ்டிக்கர் இருப்பதை கவனிக்கிறார் நண்பர். இது எதற்கு வேண்டாத வேலை.  இரண்டு காபிக்கு பணம் செலுத்தி விட்டு ஒரு காபி தான் குடிக்கிறார்கள். என்ன பழக்கமோ இது என்று யோசிக்கும் போதே...

இந்த ஹோட்டல்  சூழ்நிலைக்கு சற்றும்  பொருந்தாத  வகையில்  ஏழ்மையான தோற்றத்தில் ஒரு நபர் வந்து அமர்கிறார்.

இப்பொழுது இன்னும் வியப்படையும் விஷயம் நடந்தது.

வந்த நபரிடம்  பேரர் ஆர்டர்  கேட்கிறார்  .

" ஒரு காபி சுவற்றிலிருந்து  " என்று ஆர்டர் வருகிறது..

பேரர்  எல்லோரிடமும் எப்படி  மரியாதையுடன் நடந்து கொள்கிறாரோ அதே மரியாதையுடன் தான்  இவரிடமும் நடந்து கொள்கிறார்.

காபி  குடித்து முடித்ததும்  பணம் எதுவும் கொடுக்காமல் சென்று விடுகிறார் அந்த நபர்.

பேரர்  சுவற்றில்  ஒட்டியிருந்த ஸ்டிக்கரை  பணத்திற்கு பதிலாக எடுத்துக் கொள்கிறார்.

இது தான்  "சுவருக்கு  காபி " விஷயம் புரிந்தது நண்பருக்கு.

ஆச்சர்யத்தில் உறைந்தே விடுகிறார் நம் நண்பர்.

யாரை  புகழ்வது என்று புரியவில்லை அவருக்கு.

சுவற்றில் காபி விஷயத்தை அறிமுகப்படுத்தி, தன்னம்பிக்கையை  விதைக்க முயலும்   சமூகத்தையா?,
பரோபகார சிந்தனையோடேயே  அங்கு சாப்பிட வருபவர்களையா?
அதை சிரமேற்கொள்ளும் ஹோட்டல்  நிர்வாகத்தியா?,
சரிவர நிறைவேற்றும்  பேரரையா?

இல்லை இது எல்லாவற்றையும் பிரதிபலித்துக் கொண்டு அமைதியாய்  நின்று கொண்டிருக்கும்   சுவர்  புகழ்ச்சிக்குரியதா ?

 புரியாதது  நண்பருக்கு மட்டுமல்ல நமக்கும் தான்" என்று கதை முடித்தேன்..

" இப்ப நீ காபியைக் குடி ஆறிவிட்டது " என்று தோழிக்கு நினவு படுத்தியதும் புரிந்தது   என் தோழிக்கும்  இந்தக் கதை பாதிப்பைக் கொடுத்தது என்பதை.

சாப்பிட்டதற்கான  பில் பணத்தைக்  கொடுத்து விட்டு வெளியே வந்தோம்.

அதே பிச்சைக் காரர்,  அதே இடத்தில்.... நம்மால் முடிந்தது அவருக்கு  ஒரு சில நாணயங்களை  கொடுப்பது தான் என்று நினைத்துக் கொண்டே  கொடுத்து விட்டு சென்றோம்.

வாழ்வில் தோற்றவர்களும்  தன்மானத்தை  இழக்காமல் இருக்க  உதவிய வெனிஸ்  நகர மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் அல்லவா !

" ஏற்பது இகழ்ச்சி!   ஐயமிட்டு உண்! "

என்ற ஆத்திச்சூடியின் வரிகள்  மனதில் ஓட , ஷாப்பிங்கைத் தொடர்ந்தோம்.


image courtesy---google.

Friday 12 July 2013

வீட்டில் விசில் .


ஒரு ஏழெட்டு வருடம் முன்பாக முதல் முறையாக பெண் வீட்டிற்கு நியு ஜெர்சிக்கு  போயி ருந்தேன்.
 சென்னையிலிருந்து  இரண்டு ஃ ளைட்.
இந்தியாவிலிருந்து வத்தல், வடாம், புளி , பலகாரம் எல்லாவற்றையும்     இமிக்ரேஷன்  ஆபிசர் கண்ணில்படாமல் , எப்படியோ கடத்திக் கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்தவுடன் மாப்பிள்ளை , காரில்   வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் .

வந்து சேர்ந்து விட்டேன் என்று டெல்லியில் இருக்கும்  என்னவருக்கு போனில் சொல்லியாகி விட்டது.

பெண், மாப்பிள்ளை, பேரன் எல்லோருடனும் கதை  பேசி, கண்ணா பின்னா வென்று தூங்கி  " ஜெட் லேகிங் " கிலிருந்து  விடு படுவதற்குள்  கிட்டத்தட்ட பத்து நாள் ஆகிவிட்டது.
பெண் மாப்பிளை இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள். ஒன்றாம் கிளாஸ் படிக்கும்  பேரன் ஸ்கூல்.
நான் மட்டும் தனியாக  ........வீட்டில்.

தினம் பேரனை ,ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விடும் வேலை மட்டுமிருந்தது . பக்கத்தில்  ஐந்து நிமிட நடையிலிருந்தது  பஸ் ஸ்டாப்.

அப்புறம் முழு நேரமும் எப்படி போக்குவது? அப்பொழுது இந்தப் பதிவுலகம் எனக்குப் பரிச்சியமாகவில்லை.

கொஞ்ச நேரம் வாக்கிங். சுற்றியிருக்கும் வீடுகளில், எங்காவது  இந்திய முகம் தெரிகிறதா, அதுவும் தமிழ் பேசுபவர்களாக  இருக்குமா.?என்றெல்லாம் யோசனை செய்தபடி இருப்பது ,மற்றும் மீண்டும் இந்தியா திரும்பும் நாளை எண்ணிக் கொண்டே இருப்பது. இதைத்  தவிர வேறெதுவும் தோன்றாது.

இங்கிருக்கும் வீடுகள் எல்லாமே மரத்தால் செய்யப் பட்டவை தான்.  பல மாடிகள்  இருக்கும் .எப்படித்தான்  ஸ்ட்ராங்காக இருக்குமோ ! என்று ஆச்சர்யப்பட வைக்கும்
.
பல வசதிகள் இருந்தாலும் இரண்டு இந்திய பெற்றோர்கள் பார்த்துக் கொண்டு பேசினால், அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி அநேகமாக "நீங்கள் எப்பொழுது இந்தியா திரும்புகிறீர்கள் "என்பது தான்.

நான்   அடித்த  கூத்திற்கு வருகிறேன்.

வீடுகள் எல்லாம் மரத்தால் ஆனதால்  எல்லோர் வீட்டிலும்" ஸ்மோக் அலாரம் " என்று ஒன்றிருக்கும்.

வீட்டில் அதிகமாக புகை வந்தால் இது ஒரு விசில் சத்தத்தைக் கொடுத்து நம்மை எச்சரிக்கும்.

ஒரு வாரத்தில் வீடடை தோண்டித் துருவி பார்க்கும் போதே ," இதென்ன ஏதோ ஒன்று ,குங்குமச்சிமிழைத் தலைகீழாகத் தொங்க விட்டாற்போல் தெரிகிறதே  இது என்னடி?  "பெண்ணிடம் கேட்டேன்.

ஒரே வார்த்தையில்," அது தான்  ஸ்மோக் டிடெக்டர் " என்று சொல்லி விட்டு அடுத்த வேலைக்குப் போய் விட்டாள் .

நானும் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.(எவ்வளவு பெரிய அவஸ்தை இதனால்  வரப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை)

அன்று  காலை, பெண்ணும், மாப்பிளையும்  ஆபீஸ் போன  பின்  அரவிந்தை(first  grade ) ஸ்கூல் பஸ்ஸில்  ஏற்றி விட்டுத் திரும்பும் வழியில்  தமிழ் பேசும் ஒரு  பெண்மணியை  நட்பு பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

வந்து, கொஞ்சம்  வீட்டை  எனக்குத் தெரிந்த வகையில் சுத்தம் செய்த பின், சன்  டி .வி. பார்த்துக் கொண்டிருந்தேன் . அப்படியே தூங்கியும் விட்டேன்.

திடீரென்று  தூக்கம் கலைந்தது.   கடிகாரம் மணி  ஒன்றைக் காட்டியது.

பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட டேபிளிற்கு சென்று  தட்டை எடுத்து வைத்து விட்டு ,ஊரிலிருந்து எடுத்துக் கொண்டுவந்திருந்த ,அப்பளம் பொரிக்க ஆசை வந்தது.

கேசை ஆன் செய்து வாணலியை எடுத்துப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தேன். சூடாகக் காத்திருந்தேன்.

திடீரென்று  யாரோ விசிலடிக்கிராற்போல் ஒரு  ஊய்...சத்தம்.

கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கிரதா   என்று உறுதி செய்து கொண்டேன். புது ஊராயிற்றே. யார் .....எப்படி ..... ஒன்றும் தெரியாதே!

மீண்டும் ,  ஊய்...........விசில் சத்தம் தான்.

இன்னும்  அதிக  ஓசையுடன்  வந்தது சத்தம்.

ஒன்றும் தெரியவில்லை. இது என்ன  ? நம்மூர்  விட்டலாச்சார்யா படத்தில் வரும்   மர்ம மாளிகை போலிருக்கிறதே,   இந்த வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே  ..........ஊய்.....ஊய்.......இரண்டு விசில் சத்தம்.

அதற்குள் அப்பளம் பொரிப்பதற்காக வைத்த எண்ணெய் புகை வீடு முழுதும் நிறைக்க ,  அவசர அவசரமாக கேசை  ஆப்  செய்தேன்.

அதற்குள் இந்த விசில் சத்தம் ஊய்....................................................................................................................தொடர்ச்சியாக  இன்னும் பெரிதாக  .............  {காதை  கிழித்தது சத்தம்}. எங்காவது மெயின் பாக்ஸ் இருந்தால் எதையாவதுஆப் செய்து பார்க்கலாம் என்றால்  ஒன்றும் புரிய வில்லை.

என்னடா இது ........அப்பளத்திற்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக் கொண்டேனே  நினைத்தேன்.(இப்பொழுது  புரிந்தது  இது ஸ்மோக் டிடெக்டர்  சத்தம் என்று}

ஜன்னலைத் திறக்கவே பயமாயிருந்தது. {சத்தம் வெளியே கேட்குமே}சரி மெதுவாக கதவைத் திறந்து ,(மறக்காமல்  வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு தான் )வெளியே யாராவது வருவார்களா...உதவிக்கு கூப்பிட பார்த்தேன்.

ஒருவர்........யாராவது........ம்ஹூம்.........காணவேயில்லையே.
(இது என்ன அமானுஷ்யமாக இருக்கிறதே)

ஒன்று புரிந்தது. தருமமிகு சென்னையில் ,என் வீட்டிற்கு  ராணியாய் கோலோச்சிக் கொண்டிருந்த எனக்கு இது தேவையா?

சரி. மணியைப் பார்த்தால்  3 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.

அரவிந்தை அழைத்துக் கொண்டு வரணுமே  ! ஓடினேன் பஸ்  ஸ்டாப்பிற்கு.

பஸ் வர காத்திருந்த பெண்மணிகளில் ,காலையில் நான் நட்பாகிக் கொண்ட பெண் மணியைப் பார்த்தேன்.

எனக்கு தெய்வத்தையே பார்த்தது போலிருந்தது.

சிநேகமாக சிரித்துக் கொண்டே பிரச்சினையை  சொன்னதற்கு  கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல்  , நீங்கள் 911 ஐ கூப்பிடுங்கள் . " என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். (நமக்கெதற்கு வேண்டாத வம்பு என்று நினைத்திருப்பாரோ என்னவோ )

அதற்குள் பஸ்  வந்தது  . அரவிந்தும் இறங்கினான். அவன் என் கண்களுக்கு சாக்ஷாத்   விஷ்ணுவாகவே(மைனஸ் சங்கு சக்கரம் )  காட்சியளித்தான்.

இறங்கியதும், அவனுடைய  பையை வாங்கிக் கொண்டு ,"அர்விந்த் 911ற்கு  போன் செய்தால் யாரடா வருவார்கள்?  உனக்குத் தெரியுமா?என்றேன்.

" அய்யய்யோ ..........எதற்கு அங்கெல்லாம்  போன் செய்கிறாய். நீ ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக் கொண்டால்   காப்பாற்ற போலீஸ் வருவார்கள்.
எங்கள் ஸ்கூலில் சொல்லிருக்கிறார்கள். இப்பொழுது உனக்கு என்ன கஷ்டம். நம்மை யாராவது கடத்தப் போகிறார்களா?" என்றான் பயந்து கொண்டே..

ஓ.........இது நம்ம 100 (இப்பொழுது 108) போல் என்பது ஒரு வழியாகப் புரிந்தது.

வீட்டிற்குள் வந்தோம்.
ஊய்.................................................................கொஞ்சம் குறைந்தார் போலிருந்தது.

என் பெண்ணிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவளோ"ஒன்றும் பயப்படாதே. நம்முடைய ஸ்மோக் அலாரம்  fire  dept  உடன் கனெக்ட் ஆகவில்லை. அப்படி கனெக்ட் ஆகியிருந்தால் ஃபயர்  என்ஜின்  இவ்வளவு நேரத்திற்குள்  வந்திருக்கும்." என்று பயமுறுத்தி விட்டு

ஜன்னலைத் திறந்து வை. அடுப்பிற்கு மேலிருக்கும் vent ஐ  ஆன் செய் .என்று கட்டளைகள்  பிறப்பித்த வண்ணம் இருந்தாள் .
கொஞ்ச நேரத்தில் பீப் சத்தம் குறையும் என்றாள் .ஜன்னலைத் திறக்க
எனக்குப் பயமாக இருந்தது. இதில் என் பேரன் அரவிந்த் வேறு.
" சும்மா இரு பாட்டி ஜன்னலை திறக்காதே  .இந்த சத்தம் கேட்டு  யாராவது போலிசிற்கு போன் செய்து  விடப் போகிறார்கள் "என்று மழலையில் பயமுறுத்த  ஆனது ஆகிறது  என்று ஜன்னலைத் திறந்து வைத்தேன்.

ஜன்னலைத் திறந்தால், மெயின் ரோடு தெரியும். காரில் போகும் எல்லோரும் எங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை எனக்குத் தான் அப்படித் தோன்றியதா? யாரவது போலிசிற்கு சொல்லி விடுவார்களோ?
அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்  தானே!

கொஞ்சம் கொஞ்சமாக புகை குறைந்ததும்  ,சத்தமும் குறைந்து ஒரு வழியாக நின்றது.

அப்பாடி.........என் வாழ்  நாளில் ,விசில் சத்தத்திற்கு,  இந்த மாதிரி நான் பயந்ததேயில்லை.

மத்தியான சாப்பாடு இல்லாமலே ,பசி காணாமல் போயிருந்தது.
காபி போட்டு குடித்தேன்  பயந்து கொண்டே தான் கேசை ஆன் செய்து காபி போட்டேன்.அரவிந்திற்கும் பால் காய்ச்சி கொடுத்தேன்.

கொஞ்ச நேரத்தில்  என் பெண், மாப்பிள்ளை எல்லோரும் வீடு வந்து சேர அன்றைய பொழுதிற்கு  இது தான் டாபிக்.

என் மாப்பிள்ளை சொன்னது" ஒரு "துண்டை" எடுத்து ஸ்மோக் டிடெக்டர் முன்னால்   ஆட்டி, புகை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினை வராது "

நான் அப்பளத்தை பொரிப்பேனா. இவர்கள் வீட்டு ஸ்மோக் டிடெக்டறிற்கு
 " ஃபங்கா " போட்டுக் கொண்டு நிற்பேனா சொல்லுங்கள்.

ஒரு அப்பளத்திற்கே ,இத்தனை  தாஜா செய்ய வேண்டுமென்றால் தீபாவளியை நினைத்தேன்  .......கலங்கிப் போனேன்.

அன்றிரவு கனவில்  நீல சட்டைப்    போலீஸ்காரர்கள்  (நம்மூர் போலீஸ்காரர்களைப் போல் ஒன்றரைமடங்கு உயரத்தில், அகலத்தில், இடுப்பில் ஒட்டியானமாக வாக்கி டாக்கி, போன், கன் ...  இத்யாதி.... இத்யாதிகளுடன்........} என்னைப் பார்த்து,"  you are creating nuisance. can we take you for interrogation" என்று மிரட்ட  திடுக்கிட்டு விழித்தேன்.

ஒரு அப்பளம் பொரித்து  நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.
டாலரில் சம்பாதித்து என்ன வேண்டியிருக்கு? என்ன அமெரிக்காவோ?
ஊரெல்லாம் சுத்தம் தான், எல்லாவற்றிலும், ஒழுங்கு தான்,ஒரு பட்டனைத் தட்டினால் தட்டில் இட்லியும் ,காபியும்  கூட  வரவழைக்கும்  சக்தி படைத்த வாழ்க்கை வசதிகள்  உண்டு .....

ஆயிரம் இருந்தும்...இருந்தும்........அப்பளம் கூட ........பொரிக்க முடியவில்லையே  !

இந்தியாவிற்குத் திரும்ப மனம் கிடந்து துடித்தது. வெளியே சொல்ல முடியவில்லை.
என் பெண் வருத்தப்படுவாளே  !!!!!!image courtesy--google
உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்