Saturday 6 April 2013

ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள்.

வழக்கம்   போல் இன்றும்   இரவு  ஒன்பது மணிக்கு  டின்னர்   கடையை முடித்து விட்டு  கணினியைத்  திறந்து   மெயில் செக்  செய்ய உட்கார்ந்தேன்.
மிகவும்  மெதுவாக  ,என் பொறுமையை சோதித்தப் பிறகு தான்  மெயில் ஓபன்   ஆனது. எல்லாம் இந்த ரோடு  தோண்டுபவர்கள் உபயம்  internet slow down .

unread  பகுதியில் பார்த்தால்  அமரிக்கையாய் ஒரு மெயில் 
From  Rasi  என்றிருந்தது. தன்  மகன் வீட்டிற்கு   அல்லவா  சென்றிருக்கிறாள்,  என்று நினைத்துக் கொண்டே மெயிலை ஓபன் செய்தேன்.

நல விசாரிப்புகளுக்குப்   பிறகு,  தன்  கணவரின் பிறந்த நாளைப் பற்றி சொல்லியிருந்தாள் . வரும் ஏப்ரல் 8ந்தேதியன்று   அவருக்குப் பிறந்த நாள்  என்றும்  , அதற்குத்  தான்  அருமையான பரிசொன்றும்  அவருக்காக  வைத்திருப்பதாகவும்  சொன்னாள் . ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு வாங்கிக் கொடுப்பது எனக்கும் தெரியும். அதை மாதிரித் தான் என்று நினைத்தேன். தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு சஸ்பென்ஸ்  வைத்திருந்தாள் . அடுத்த  மெயிலில்  அதைப் பற்றிய விவரங்கள் இருப்பதாக  சொன்னாள் .
சஸ்பென்ஸ்  ஆயிற்றே! தெரிந்து கொள்ளவில்லையென்றால் மண்டை வெடித்து விடும்  போலிருந்தது.உடனே அடுத்த மெயிலைப் பார்த்தேன்.

அது  என்னவோ  to  Vishnu    என்றிருந்தது. cc இல் என் பெயர்.
இது என்ன என்ற குழப்பத்துடன்  திறந்தால்  ' பிரியமானவருக்கு  "  என்று ஆரம்பித்திருந்தது.

கவனக் குறைவாக  cc இல்  என் பெயர் வந்து விட்டதோ  என்ற நினைப்புடன்   மெயிலை மூடினேன். ,  டீப்பாயில்   பூனைக் குட்டியாய்  படுத்திருந்த    போனை   எடுத்து ராசியின் நம்பரை விரல்களால்  ஒற்றி  எடுத்தேன்.மறு முனையில் ராசி . எடுத்தவுடன் " படித்து விட்டாயா? " என்றாள் .
"நீயென்ன லூஸா? உன்  கணவருக்கு எழுதிய மெயிலில்  எதற்கு என்னை cc இல் சேர்த்தாய்?அது சரி. அவருக்கு மெயில்  அனுப்ப வேண்டிய அவசியமென்ன? அவரும் உன்னுடன் தானே  அங்கிருக்கிறார்? " என்றேன்.

"ஆமாமாம் . அவர் இங்கு தானிருக்கிறார்.உணர்ச்சிகளின்  ஆதிக்கத்தினாலோ, தயக்கத்தினாலோ, எதுவோ ஒன்று போயேன்  , சொல்ல விடாமல் தடுக்கும்  விஷயங்களை  அழகாக கோர்வையாக  எழுதி விடலாம் இல்லையா? " என்றாள் .உண்மைதானே  என்றது மனம்.
" நீயும் படித்துப் பார்.  இது  ஒன்றும்  அந்தரங்கமான காதல் கடிதம் இல்லை."

அவள் சொன்னாலும்  கொஞ்சம் தயக்கத்துடனேயே  படிக்க ஆரம்பித்தேன். ஆனால் போகப்போக  இதுவல்லவோ காதல்  கடிதம்   என்று தோன்ற ஆரம்பித்தது.

நீங்களும் கொஞ்சம் படித்து தான் பாருங்களேன்.

ராசியின் கடிதம் இப்படி  செல்கிறது.

" நான் உங்கள்  கரம் பற்றிய பொது எனக்கு  19 வயது தான். அந்த வயதிற்கே உரிய  immaturity  என்னிடம்  fevicol  போட்டு  ஒட்டிக் கொண்டிருந்தது எனலாம் .அதனால்  சில சங்கடங்கள் . 

என்னை அமர வைத்து, உங்கள் தரப்பு நியாயங்களை எனக்கு அழகாய்  சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் இன்றளவும் கடைபிடிப்பது  என்னை சார்ந்தவர்களிடையே  உங்களை எங்கோ உயரத்தில் வைத்திருக்கிறது .   சில உறவுகள்  என்   மனதை நோகடித்து  வேடிக்கைப் பார்த்த போது  கூட  "இது எல்லோர் வீட்டிலும் உள்ளது தான். யார் உன்னைப் புண்படுத்தினாலும்  நான் உன்னை என்றுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் "என்று  எனக்கு இமாலய  நம்பிக்கை கொடுத்து   உற்சாகப் படுத்தியது,  எனக்கு இன்னும் நினைவில் உள்ளது.

வீடு என்றாலே  வாசற்படி இருக்கத்தானே இருக்கும். அதை  பெரிது படுத்தாமல் இருக்கும்  மனநிலையை  உண்டாக்கியது நீங்கள் . மாமியார், மருமகள்    மாற்று சிந்தனைகளை   நீங்கள் எப்பவுமே  பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  பார்ப்பதற்கு நீங்கள் என்னவோ  அம்மாவை  சப்போர்ட்  செய்கிறார் போல் தோன்றினாலும் என்னை  விட்டுக் கொடுத்ததேயில்லை.

என்னைத் திருமணம் செய்தபோது  நான்  B.Sc., இரண்டாம் வருடத்தில் இருந்தேன். உங்களுக்கோ வேலையில் உடனே ஊர்  மாற்றல். நீங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் கேட்காமல் ,நான் பாதியிலேயே தான் பட்டப் படிப்பை விட்டேன்.

ஆனால் நான் மீண்டும் படிப்பைத் தொடர ஆரம்பித்த போது  உங்களின்  ஒத்துழைப்பைக் கண்டு நான்  அசந்து தான் போனேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு பிறகு   நான் வெற்றிகளாகத் தான் குவித்தேன் என்று தான்  சொல்ல வேண்டும்.

பெயருக்கு பின்னால் பல பட்டங்கள். அருமையான  பள்ளியில் ஆசிரிய உத்தியோகம். அன்பான குழந்தைகள் . அழகாய் கொண்டு சென்றீர்கள் குடுமபத்தை. பொறுப்பான உத்தியோகம். தலைமை வேறு.அந்த அதிகாரம் எதனாலும்  நீங்கள் வழி தவறியதில்லை. நேர்மை ஒன்றே லட்சியமாக  பனி புரிந்ததைப், பார்த்து வளர்ந்த  நம் பெண்ணும் பிள்ளையும்  அப்படியே அவர்கள் வாழ்விலும் கடைபிடிக்கிறார்கள்.. அன்று நம் மருமகள்  என்னிடம், " என்ன மாமி உங்கள் பிள்ளையை  இப்படி  ரூல்ஸ்  ராமானுஜமாக வளர்த்து இருக்கிறீர்கள்." என்று  பெருமையாகக் குறைபட்டுக் கொண்டபோது , நான் சொன்னது," அவனுக்கு எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை. நாங்கள்  வாழ்ந்ததைப் பார்த்து வளர்ந்திருக்கிறான்."என்றேன்.

நம்  பொருளாதாரமும்  வளர்ந்தது. கார் ,பங்களா, விமானப் பயணம் எல்லாமே சாத்தியமாயிற்று  உங்களால்   எனக்கு.அது மட்டுமா? பல் மாநிலங்கள், பல மொழிகள் ,பலகலாசாரங்கள்  எல்லாமே அறிமுகமாயிற்று.   wife eats half the cake என்று ஆங்கிலத்தில் சொல்வது போல் உங்களால், சமுதாயத்தில்   எனக்கு மரியாதையும்  கிடைத்தது.

எனக்குத் தைரியத்தை  கொடுத்து  வந்தது நீங்கள் தான். எத்தனை பெரிய விஷயமானாலும்   "trial costs nothing" என்று  ஊக்குவித்து  எந்த ஒரு சவாலையும்
எதிர் கொள்ளும்  மனப்பக்குவத்தை  என்னுள்    வளர்த்தது நீங்கள் தான் .

எந்த சவாலையும்  எதிர் கொள்ளும் தைரியம் என்னுள்  இப்போது  இருப்பது உண்மை தான்.

ஆனால், உங்கள் உடல் நிலை  சற்றே பாதிக்கப் பட்டபோது,ஹாஸ்பிடலில்   பெண்,பிள்ளை,பேரன்,பேத்தி எல்லோரும் என்னை சுற்றி இருந்தும் நான் அனாதை ஆனது போல் இருந்தேன்.மீண்டும்   நீங்கள்  வீட்டிற்கு  வந்தபிறகு தான்  நான் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தேன்.

இன்று உங்களுக்கு  பிறந்த  நாள். உங்களை  வாழ்த்துவதோ , பரிசு தருவதோ  
எதுவுமே  எனக்கு சரியாகத் தோன்றவில்லை.அதற்குப் பதிலாக இந்த மெயில்.


சற்றே  திரும்பிப்  பார்க்கிறேன். ஓடிய 36 வருடங்களும்  அவ்வளவும் இனிமை .
வரப் போகும்  வருடங்களிலும்  இந்த இனிமைத் தொடர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
 இத்தனை அருமையான ,சந்தோஷமான  வாழ்க்கையை  அமைத்துக்  கொடுத்ததற்கு    நன்றியை  எப்படி சொல்வது? 

எத்தனை பிறவிகள்  எடுத்தாலும்  அத்தனையிலும்  உங்களையே என் கணவராக  அடைய  கடவுளை  வேண்டிக்  கொள்கிறேன்."

  ராசியின் கடிதம்  முடிந்தது.என்னையறியாமல்  கண்களில்  வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு  பதில் எழுதினேன்.

" இந்த இனிய  தம்பதிக்கு  வாழ்த்துக்கள் " என்று மட்டுமே என்னால் டைப் அடிக்க முடிந்தது. 

நீங்களும் உங்கள் எண்ணங்களை , வாழ்த்துக்களை, அல்லது  ஆசீர்வாதத்தை  சொல்லி விட்டுப் போங்களேன்.  ராசி  மகிழ்வாள்.



Paatti Stories இல்  இப்பொழுது  Sage Narada and  a cup of oil.

image courtesy---google

35 comments:

  1. //ஆனால், உங்கள் உடல் நிலை சற்றே பாதிக்கப் பட்டபோது, ஹாஸ்பிடலில் பெண், பிள்ளை, பேரன், பேத்தி எல்லோரும் என்னை சுற்றி இருந்தும் நான் அனாதை ஆனது போல் இருந்தேன். மீண்டும் நீங்கள் வீட்டிற்கு வந்தபிறகு தான் நான் இயல்பு நிலைக்கு வர ஆரம்பித்தேன்.//

    இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதே தான் என் மனைவியின் நிலையும் சமீபத்தில் ஒருநாள் நான் மருத்துவமனையில் இரண்டே இரண்டு மணி நேரங்கள் மட்டும் அட்மிட் ஆகியிருந்த போது.

    என்னிடம் அழுது புலம்பிவிட்டாள்.

    ஆனால் அவளுக்கு எதையும் இது போல கோர்வையாக சொல்லவோ எழுதவோ வரவே வராது.

    தங்கள் தோழி நீடூழி வாழ்க!

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வைகோ சார்,

      உங்கள் வாழ்த்துக்களுக்கும, ஆசிகளுக்கும் ராசியின் சார்பாக நன்றி .
      நீங்கள் சொல்வதுபோல் கணவருக்கு உடல் நலமில்லைஎன்றால் மனைவி ஆடிப் போய் விடுவாள்.

      நன்றி.

      Delete
  2. // எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனையிலும் உங்களையே என் கணவராக அடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்."//

    வாழ்த்துக்கள். ஆசிகள் .

    ஒரு பின்னூட்டம். இங்கிலீஷிலே ஃபுட் நோட்.

    இத எங்க ஊட்டுக்காரி கிழத்துட்டெ காமிச்சு என்னாடி சொல்றே இதுக்கு......? அப்படின்னு கேட்டேன்.

    நான் சொல்றது கிடக்கட்டும். நீங்களும் நினைக்கணும்லே...

    நான் அப்படி நினைச்சா....

    நான் வேற எப்படி நினைக்கமுடியும் ?

    நான் அப்படி நினைக்கல்லேன்னா..

    கிழவா...ஒனக்கு கொடுத்து வச்சது அவ்வளவு தான் ஒரு பெருமூச்சு விட்டுப்பேன். ....என்றாள்.

    எங்க ஊட்டு கிழவி எப்பவுமே என்ன உட கொஞ்சம் புத்தி சாலி.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in
    www.mymaamiyaarsongs.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. பராவாயில்லையே சுப்பு தாத்தா,
      உங்கள் இருவருக்குமிடையே இருக்கும் நல்ல புரிதலை உங்கள் பின்னூட்டத்தால் உணர்ந்துகொண்டேன்.
      நன்றாகவே பதில் சொல்லியிருக்கிறார்கள் உங்கள் வீட்டம்மா .
      உங்கள் ஆசிகளையும்,வாழ்த்துக்களையும் ராசிக்குத் தெரிவித்து விடுகிறேன்.
      நன்றி.

      Delete
  3. அட! உங்கள் ராசியும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி எங்கள் உணர்வுகளை சொல்லியிருக்கிறோமே! எனக்கும் ராசிக்கும் பல ஒற்றுமைகள். அவர் கடிதம் எழுதினார். நான் பதிவில் என் உள்ளத்தைக் காட்டியிருக்கிறேன்.

    இவர் உடல்நிலை சரியில்லை என்றால் எனக்கும் ராசி மாதிரிதான்.

    திருமதி ராசியும், அவரது கணவரும் இதே புரிதலுடன் பல ஆண்டுகள் வாழ பிரார்த்தனையும், வாழ்த்துக்களும்.

    ஒரு சின்ன சந்தேகம்: ராசி தான் ராஜியோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி உங்கள் வாழ்த்துக்களுக்கும்,பிரார்த்தனைகளுக்கும்.
      ராசியிடம் இந்தத் தளம் முகவரி கொடுத்திருக்கிறேன்.அவளும் உங்கள் எல்லோருடைய கருத்துக்களை படித்து வருகிறாள்.
      அவள் சார்பிலும் நன்றி.

      Delete
  4. I'm greatly moved. There can't be any other gift than this letter of your friend to her husband. For, it underscores that conjugal bliss is nothing but understanding and loving one's spouse. My best wishes to your friend and her hubby.

    ReplyDelete
    Replies
    1. Thankyou sir for your best wishes. i shall convey the same to my friend.

      Delete

  5. " இந்த இனிய தம்பதிக்கு வாழ்த்துக்கள் "

    ராசி தான் ராஜியோ? ///!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி ,ராசியின் சார்பாகவும் என் சார்பாகவும்.

      Delete

  6. 49 வருட வெற்றிகரமான தாம்பத்திய வாழ்வு கண்ட நான் உங்கள் ராசியை வாழ்த்தத் தகுதியானவனே. நீடுழி வாழ்க. நான் என் மனைவிக்கு சூட்டிய அந்தாதிப் பாமாலை படித்துப் பாருங்கள். பெண்ணின் உணர்வுகளை ராசியின் அஞ்சல் சொல்கிறதென்றால், ஒரு ஆணின் உணர்வுகளை ப் “ பாவைக்கு ஒரு பாமாலை “ சொல்லும். சுட்டி இதோ.

    gmbat1649.blogspot.in/2011/09/blog-post_27.html. ராசிக்கு ஏதாவது வலைத் தளம் இருக்கிறதா.?

    ReplyDelete
    Replies
    1. GMB சார்,

      ராசியின் சார்பாகவும்,என் சார்பாகவும் உங்கள் வாழ்த்துக்களுக்கும்,ஆசிகளுக்கும் நன்றி.
      உங்கள்" பாவைக்கு ஒரு பாமாலை " படித்து கருத்திடுகிறேன்.
      நன்றி.

      Delete
    2. நீங்கள் சொல்லியிருக்கும் பாவைக்கு ஒரு பாமாலை சுட்டி திறக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது.
      sorry, the page does not exist என்று சொல்கிறது.
      நீங்கள் எழுதியது எந்த மாதம், வருடம் என்று குறிப்பிட்டால் தேடிப் படிக்க சௌகர்யமாய் இருக்கும்.

      Delete
  7. ராசியின் கணவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    இருவரும் பலகாலம் பல்லாண்டு பல்லாண்டு வாழவேண்டும் இனிமையாய்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி உங்கள் வாழ்த்துக்கு .

      Delete
  8. ராசியான தம்பதிகளுக்கு இனிய நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ராசி தம்பதிகளின் சார்பாகவும்,என் சார்பாகவும் நன்றி.,தனபாலன் சார்.

      Delete
  9. வாழ்வாங்கு வாழும் உங்களை பல்லாண்டு நன்றாக வாழ ஆசைப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ராசியிடம் உங்கள் வாழ்த்துக்களை சொல்கிறேன் ஐயா,
      நன்றி.

      Delete
  10. உங்கள் ராசிஇன்று போல் என்றும் ராசியானவளாக தன் கணவனுடன் ராசியாக வாழ வாழ்த்துகிறேன் நீங்களும் அழகான நடையில் சொல்லி இருக்கறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ராசியின் சார்பாகவும்,என் சார்பாகவும் நன்றி மலர்.

      Delete
  11. ராசியும் அவரது கணவரும் நல்ல ஆரோக்கியத்துடன்,நீடூழி வாழ‌ என்னுடைய பிராத்தனைகளும் உண்டு.

    சென்ற பதிவில் இருந்தே ராசி யார் என்று ஆராய ஆரம்பித்து,இப்போது ஓரளவு கண்டும் பிடித்துவிட்டேன்.ராசிக்கான உங்கள் பிரார்த்தனைகளும் நிறைவேற எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சித்ரா, உங்கள் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும். ராசியின் நன்றியையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

      Delete
  12. மனநிறைவுடன் சந்தோஷமான தருணங்களை நினைத்து கணவருக்கு அருமையாக பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லிய உங்கள் தோழி ராசியை வியக்கிறேன். ராசியின் கணவர் எத்தனை உன்னதமானவர் என்பதை ராசியின் வார்த்தைகள் மூலமே உணர முடிகிறது. இந்த இனிய தம்பதி என்றென்றும் மகிழ்வுடன் வாழ, என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. count on your blessings என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதைத் தான் ராசி செய்திருக்கிறாள்.
      உங்கள் நல்வாழ்த்துக்கு நன்றி சொல்வது நான் மட்டுமல்ல ராசியும் தான்.

      Delete

  13. பாவைக்கு ஒரு பாமாலை 2011-ம் வருடம் செப்டம்பர் மாதம் எழுதியது திருமதி ரஞ்சனி நாராயணன் அந்தப் பதிவினைப் படித்து ( இந்தப் பின்னூட்டத்தில் இருந்து பதிவு பற்றி அறிந்து )கருத்துமெழுதி விட்டார்கள். சுட்டி திறக்காவிட்டால் உங்கள் மின் அஞ்சல் முகவரி தாருங்கள் அனுப்புகிறேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாவைக்கு ஒரு பாமாலி படித்து பின்னூட்டம் எழுதிவிட்டேன்

      Delete
  14. கணவனைப் பற்றி மனைவி அல்லது மனைவியைப் பற்றி கணவன் என்று குறைகளே சொல்லும் உலகத்தில் இந்த மெயில் என்ன ஒரு பாசிட்டிவ் அப்ரோச்! சந்தோஷமாக இருந்தது. இந்த இனிய தம்பதிகள் பல்லாண்டு வாழ கடவுளிடம் என் பிரார்த்தனைகளும்.

    ReplyDelete
  15. அருமையான பிறந்த நாள் வாழ்த்து, அருமையான பதிவு!! வாழ்த்துக்கள் மேடம் :)

    ReplyDelete
  16. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி.http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_19.html?showComment=1392782733232#c461818290231042950

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. சித்ரா29 May 2015 at 13:20

    ரெண்டு மூணு நாட்கள் முன் தான் உங்கள் வலைத்தளம் எனக்கு அறிமுகம் ராஜி மேடம். கிட்டத்தட்ட எல்லா பதிவையும் பார்க்கும்போது ராசியும் ராஜியும் ஒன்று என்று சந்தேகம். இதில் prove ஆகிவிட்டது. பரவாயில்லை, உங்கள் தோழியின் கணவருக்கு belated பர்த்டே wishesஐ சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
  18. இருவரும் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகள்

    ReplyDelete
  19. I have read your books, "Appavi Vishnu" and "Sirikka Vaikkum Sothappalgal", nice write up. Thanks for sharing it via freetamilebooks.com.

    ReplyDelete
    Replies
    1. Thankyou for downloading and reading my two books. I feel honoured. Thankyou sir for your appreciative comments.
      For the past few months , due to various reasons,I did not feel like writing anything. Bloggers block is one of them. By your kind words, you had thrashed that block. Thankyou again for your motivational words .

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்