Sunday 26 January 2014

அது ஒரு கனாக் காலம் .

" Delhi Shivers in Cold " செய்தியைப் படித்ததும் ,எனக்கும் டெல்லிக் குளிர் நினைவில் வந்து மோதியது. நினைத்ததுமே, குளிரத் தொடங்கி விட்டது.

சென்னையிலேயே பிறந்து, வளர்ந்து,  சிங்காரச் சென்னையிலேயே  திருமணத்திற்கு பின்னும், வாழ்வதைப் பாக்கியமாகவே, நினைத்துக் கொண்டிருந்தேன்.திருமணமாகி  ,ஆறு மாதக் காலத்திற்குள்ளாகவே   அதற்கு  வேட்டு வைத்து விட்டனர், என் கணவர் வேலை பார்க்கும் , வங்கியினர்.

ஒரு நாள் மாலை  ஆபிசிலிருந்து வரும் போதே  சந்தோஷத்துடன் வந்தார், என் கணவர். என்ன என்று கேட்டதற்கு  , "ஐயாவை டெல்லிக்கு  மாற்றி விட்டார்கள் " என்று சொன்னவுடன்  முதலில் எனக்குத் தோன்றியது, "பிறந்த வீட்டை விட்டு அவ்வளவு தூரம்  நம்மால் போயிருக்க முடியுமா " என்பது தான். ( அதனால் தான் என்னவருக்கு  மகிழ்ச்சி என்று நினைக்கிறேன்.)

இப்பொழுது போல், போன்  வசதியில்லாத நாட்கள் அவை. பிறந்த வீட்டுடன் தொடர்பு  என்பது, தபாலகாராரின்  வீசியெறியும்  கடிதத்தில்  அல்லவா இருக்கும்.   ஆனாலும் வேறு வழியில்லை . அதனால் டெல்லி வாழ்க்கைக்கு என்னைத் தயார் படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.  டெல்லி போய்  வந்தவர்கள், அங்கே குடித்தனம் செய்தவர்கள், செய்கிறவர்கள் என்று எல்லோரிடமும்  டெல்லியைப்  பற்றிக் கேட்க ஆரம்பித்தேன்.

நான் கேள்விப் பட்டவரையில், பெருவாரியாக என்னைப் பயமுறுத்திய விஷயங்களில் ,ஹிந்தியைத் தவிர ,இன்னொன்று  டெல்லிக் குளிர் .

அட......போ........ மார்கழி மாதத்தில் , காலை  நாலு மணிக்கெழுந்து,  பச்சைத் தண்ணீரில் குளித்து, திருப்பாவையும்,திருவெம்பாவை  சொல்லி விட்டு  பிறகே சூடாக காபிக் குடிப்பவள் தானே நீ. . . டெல்லிக் குளிர் அதைவிடவா அதிகம்? இதற்கெல்லாமா பயப்படுவது? என்று  தைரியம் கொடுத்தது   என் மனசாட்சி. நானும் அதையே நம்பினேன்.

ஆனாலும், எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஸ்வெட்டர், ஷால்  என்று  கவசங்களுடன் தான், டெல்லியில் இறங்கினோம் . நாங்கள் குடித்தனம் ஆரம்பித்தது  நவம்பரில் .

என் கணவர் வீடு பார்த்திருந்ததோ  கரோல்பாகில், W.E.A .6A பிளாக்கில். ஐந்து நிமிட  நடையில் ,பக்கத்திலேயே அஜ்மல்கான் ரோட்.  ஒரு சின்ன  " மால்  " ஒன்றைத் தெருவில் பிரித்துப் போட்டது போலிருக்கும்  அஜ்மல்கான் ரோடில்  பெரும்பாலும் எல்லாமே கிடைக்கும்.

டெல்லியின் பல பாகங்களிலிருக்கும் தமிழர்களை,   கரோல்பாக்கில் காணலாம். இங்கு தான் தேங்காய், காபிப் பொடி, அப்பளம்,சாம்பார் வெங்காயம் ,தினத்தந்தி, விகடன், குமுதம்  போன்ற  நம்மூர்  விஷயங்கள்  எல்லாமே  கிடைக்கும். இங்கு தெருவில், கடை வைத்திருக்கும்   ,ஸ்வெட்டர்  வாலாக்கள் நம் தமிழ் முகத்தைப் பார்த்தால், நம் அருகிலேயே வந்து, பத்திரிகை வைக்காத குறையாக,அவர்கள் ஸ்வெட்டர்  கடைக்கு  அழைத்தப் போவார்கள்.

எப்படித் தமிழர்களை  அடையாளம்  காண்கிறார்கள் ? என்று கேட்காதீர்கள். அது தான் ஹிந்தியில் தட்டுத் தடுமாறி ' கம்பள் சாயியே ' என்று கேட்கிறோமே. .அது போதாதா?
குளிர் என்று சொல்லிக் கொண்டே டெல்லி அஜ்மல்கான் ரோட்டை சுற்றிக் காட்டுகிராளே  என்று சலித்துக் கொள்ள வேண்டாம். அங்கு தான் நாங்களும்  " கம்பள்  ஸ்வெட்டர் " வாங்கிக் கொண்டோம்.

நவம்பர் மாதம் அவ்வளவாக குளிரவில்லையா, இல்லை எங்களுக்கு குளிர் தெரியவில்லையா என்பது புரியவில்லை. அதனால் நாங்கள் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளாமலே  சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கள் பக்கத்து வீட்டிலிருக்கும் "  மிண்டு " ," பாபிஜி , இப்படியே ஸ்வெட்டர் போடாமல் இருக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும்  " என்று  ஹிந்தியிலேயே  இலவச ஆலோசனை கொடுப்பார்.

இதைப்போல் பக்கத்து வீட்லிருப்பவரை  , அண்ணனின்  மனைவியாக பாவித்து  முப்பது வருடங்கள் முன்பு தான். இப்போதோ ' பாபிகள் ' எல்லாம் ' ஆன்டி'களாகி விட்டார்கள். (வயதானதால்  ஆன்டிகளாகவில்லை) ஹிந்தியிலிருந்து , ஆங்கிலத்திற்குத் தாவி விட்டதை சொல்கிறேன்.  பாபியில் இருக்கும்  அன்பு கலந்த மரியாதை, கண்டிப்பாக அன்னிய மொழியில் இல்லையே .

ஆமாம், இந்தப் பாசமான பக்கத்து வீட்டுக் காரர்களை ,  டெல்லியில் மட்டுமல்ல ,சென்னையிலும் ,இப்போதெல்லாம்  பார்க்க முடிவதில்லையே.!
எங்கே சென்றிருப்பார்கள் இவர்கள் எல்லோரும்?

இந்தக் குளிரில் எல்லோர் உடையும்  பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக   இருக்கும். உள்ளே அரை பனியன்  சைசில் ஒரு  ஃஆப் ஸ்வெட்டர் , பிறகு நாம் போட்டுக் கொள்ளும் டிரெஸ் . அதற்கு மேல் ஃ புல்  ஸ்வெட்டர். , தலையில் குரங்கு குல்லாய், பெண்களாயிருந்தால் இந்த அலங்காரங்களுடன்  ஒரு ஷால் ஒன்று போர்த்திக்  கொண்டு தான் அலைவார்கள். எல்லோருமே பார்ப்பதற்கு ,' ரோஜா 'படத்தில் வரும்  தீவிரவாதிகள், போலவே இருக்கும்.

ஆனால் , எல்லாப் பெண்களின் கையிலும், இரண்டு ஸ்வெட்டர் ஊசியும், ஒரு நூல் கண்டும்  அவசியம் உண்டு. எப்பவும், போகும் போது , வரும் போது , என்று எப்பவுமே  ஸ்வெட்டர் பின்னிக் கொண்டேயிருப்பார்கள். வாய் பேசும், கண்  வேறெங்கோ பார்க்கும், ஆனால் ஸ்வெட்ட்டர் பின்னுவது   மட்டும் நிற்காது.கரெக்டாக ஒரு ஊசி மேல் இன்னொரு ஊசி தவறாது மேலும் கீழுமாக ஓடிக் கொண்டுஇருக்கும்.  கையை நல்ல சூடாக  வைத்துக் கொண்டிருக்கும் வழி என்று நினைப்பதுண்டு.

அந்த ஊர் பெண்களின்  சுறுசுறுப்பு  நம்மை அசத்தும் . ஏகப்பட்ட துணி மூட்டையை(குளிருக்காக) உடையாய்  உடுத்திக் கொண்டு   எல்லா வேலையும் சர்வ சாதரணமாக  செய்து கொண்டிருப்பார்கள். எனக்கோ ரஜாயை  விட்டு  வெளியே வரவே மனம் வராது. எப்படித்  தான் இவர்களெல்லாம் வேலை செய்கிறார்களோ என்று தோன்றும்.

இந்தக் குளிரில் தண்ணீரைப் பற்றி சொல்லவே வேண்டாம்.  குழாயைத் திறந்து கைகளில் தண்ணீர் படும் போதே , வலி உயிர்போகும். அத்தனை ஜில்லென்று இருக்கும் இந்தத் தண்ணீரில் எப்படி குளிப்பது? இப்பொழுது போல் அப்பல்லாம்  கீய்சர்  கிடையாது. இம்மர்ஷன் ஹீட்டர் தான்.  அதில் தண்ணீரை எவ்வளவு தான் சூடு செய்தாலும் குளிக்கும் போது நடுங்கிப் போய்
விடுவோம்.
அந்த ஊரில் தான் ஷாம்பு  குளியல் என்றால், நிஜமாகவே  வெறும் தலையை மட்டும் குழாயடியில் காண்பித்துக் குளிக்கும் அதிசயம் கண்டேன்.(குளிரினால் தான்)

டிசம்பர் இறுதியிலும், ஜனவரியிலும்   வெளியே பார்த்தால் , இரண்டடிக்கு மேல்  உங்கள் கண்ணிற்குத் தெரு  தெரியாது. பேசுவதற்காக வாயைத் திறந்தால் , சிகரெட் எதுவுமில்லாமலே  வாயிலிருந்து புகைப் புகையாக காற்று வரும். பள்ளி சிறுவர்களுக்கு இது ஒரு பெரிய விளையாட்டு.

உணவு முறையோ சொல்லவே வேண்டியதில்லை. கனவில் தான் இட்லி சாப்பிட வேண்டும். மாவு ஒரு வாரமானாலும் புளிக்காது. டெல்லியில் ,தயிர் உறைய வைப்பதைப் பற்றி, ஒரு புராணமே எழுதியிருக்கிறேன்.அதைப் படிக்க இங்கே 'க்ளிக்'கவும்.கேரட்டும், தக்காளியும், உருளைக்கிழங்கும், பச்சை காய்கறிகள் எல்லாமே  ரொம்ப சல்லிசாக கிடைக்கும். அடிக்கடி ' காஜர் அல்வா ' சாப்பிடலாம், டையாபிடிஸ் இல்லையானால் .. நாம் வில்லன் ரேஞ்சில் வைத்திருக்கும், உருளைக்கிழங்கு அவர்களுக்கு  ஹீரோ .மூட்டை மூட்டையாக வாங்குவார்கள். பழங்கள், அதிலும்' சேப் ' ,  பயங்கர ' சீப்'. (ஆப்பிள்).


இப்படிப் பட்ட ஒரு குளிரில் நான் மாட்டிக் கொண்டு  அவஸ்தைப் பட்டது ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை  சுமார் ஐந்து வருடங்கள்.. குளிர் காலம் தான் இப்படியிருக்கும் என்றால், வெயில் காலமோ, அவ்வப்போது  ஆந்தி வந்து  பாடாய் படுத்தும்.

இதையெல்லாம்  சுமார் ஐந்து வருடங்கள் அனுபவித்த நான் , அந்த ஐந்து  வருடங்களும் சென்னையை நினைத்து ஏங்காத நாளேயில்லை.
டெல்லிக் குளிரை நினைத்தால் இப்பவும் ஒரே நடுக்கம் தான். ஆனாலும்  அது என் இளமைக்காலம் அல்லவா? கண்டிப்பாக கனாக்காலம் தான்.

image courtesy--google.

Thursday 16 January 2014

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!


அன்று  சூப்பர்  மார்கெட்டில்  ,  என்னருகில் நின்றிருந்த பெண்மணியைக்  கவனித்தேன்.எங்கோ பார்த்த நினைவு.

அந்தப் பெண்மணியும் அந்த சமயத்தில் என்னைப் பார்க்க ," ராஜி, நீயா? எப்படி இருக்கிறாய்?" என்று கேட்க நான் குழம்ப  "என்னைத் தெரியவில்லையா . நான் மாலா . உன்னோடு  ஸ்கூலில்  படித்தேனே! "  என்றதும்  நினைவில்  வந்து மோதியது  , இவள் நினைவு மட்டுமல்ல பள்ளி நாட்களும் கூடத்தான்.
அவளுடன் கொஞ்ச நேரம் அளவளாவி விட்டு வீடு திரும்பினேன்.
மனம் என்னைவோ பழைய நாட்களை  விட்டு வர மறுத்து விட்டது.

யூனிஃபார்மில் பள்ளிக்கு  சென்றது. ஆறாம் கிளாசில் பேனாவில்  எழுத ஆரம்பித்தது.  அதற்கு போடும் இங்க்  . Bril  Ink , Camlin Ink, Chelpark......... .பேனா லீக்காகி  கையில், தலையில்,..............

இது போல்  எத்தனை விஷயங்கள்  நினைவடுக்குகளில் இருந்து மீட்டேன். சிலவற்றை லிஸ்ட்  போட்டிருக்கிறேன் பாருங்கள்.  .படித்த பின்னர்,
உங்களுக்கும்  நினைவுகள் மலரும்  என்பதில் சந்தேகமேயில்லை.GoldSpot the Zing  thing  என் நாவிலேயே  இன்னும்  உள்ளது.  
இந்தியா  உலகமயமானதில் , இது  காணாமல் போய்விட்டது .நம்புங்கள். இது நம் அண்ணா சாலையே தான். அறுபதுகளில் , எழுபதுகளில்  இப்படித் தான்.அப்பொழுதெல்லாம் இந்த  மகாராஜாவின்  வாகனத்தை ,  வானத்தில் பறப்பதைப்   பார்த்து  ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.  இப்பொழுது ,அதில் பயணம்  செய்யவும்   சாத்தியமானது  நம்மில் பலருக்கு.வருடத்தில்  இரண்டு முறை  சினிமா பார்க்க செல்வோம். டிக்கெட்  விலை
Rs. 1.66 .  நீளமான வரிசையில் நின்று  "ஹவுஸ் ஃ புல் " போர்டு  போட்டு விடக் கூ டாதே  என்று கடவுளிடம் வேண்டிய நாட்கள்  நினைவுக்கு வருகிறது. எதற்கெல்லாம் கடவுளை டிஸ்டர்ப்   செய்திருக்கிறேன் !

ராமனும் சீதையும்  எத்தனை மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் பாருங்கள்.இந்த காமிக்ஸ்  கதைகள்  மனப்பாடம் ஆன் பின்பும்  திரும்ப திரும்பப்  படித்திருக்கிறேன். அது ஒரு கனாக் காலம் தான்!


இதையும்  படிப்பதுண்டு.  பீர்பாலின் அறிவுக்  கூர்மை வியக்க வைக்கும். பீர்பாலின் அறிவுக் கூர்மை  இருக்கட்டும்  . உனக்கு .......என்று கேட்காதீர்கள்  ப்ளீஸ்......


ஜியோமெட்ரி  பெட்டி ,பள்ளி நாட்களின் மிகப் பெரிய பொக்கிஷம் எனக்கு. உங்களுக்கு?


பிடிவாதம்  மிகவும் பிடித்திருந்தது   கருப்பு வெள்ளை டிவியில் .எனக்கு.
சொல்கிறேன்   Junoon பற்றி.கூரையின் மேல்  ஏறி நின்று கொண்டு, அவ்வப்போது ஆடி அசைந்து ,நாமும்  கூரை மேல்  ஏறினால்   மட்டுமே  படம்  காண்பிக்கும்  கம்பி.இந்தக் காணொளியை  பாருங்கள். உங்கள் மனம்   பின்னோக்கி சென்று கொண்டிருப்பதை  தடுத்துப் பாருங்கள்.   முடியாதே .
டிவி முன்னால்  அமர்ந்து  இந்த ஒலிஒளி  பார்ப்பதற்கு தவமான தவம் இருந்திருக்கிறோமே!             அப்போதெல்லாம் இது  இல்லாத  வீடுகளே இல்லை எனலாம் .
இதைப் பார்க்கும் போது  என் நினைவிற்கு வருவது ,"நிலவும் மலரும்பாடுது".
இப்பொழுது நிறைய பேர், இதை  பூ  கட்ட உபயோகித்து வருகிறார்கள். என்று கேள்வி.                     இதில்  பயணம் செய்வது  ஒரு "Pleasure"  தான் அப்பொழுது.இது நினைவிருக்கிறதா? நம் ட்ரெயின் டிக்கெட் .  சிறு வயது ரயில் பிரயாணத்தை  நினைவு படுத்தியது. டிக்கெட் விலையைப் பாருங்கள். அங்கிருந்து நாம் எவ்வளவு தூரம்  பயணித்து  விட்டோம். திரும்பிப் போக முடியாத தூரம் வந்து விட்டோம் .

ஹலோ!  என்ன  பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டீர்களா?   உங்களுக்கு நினைவில்  வந்து  மோதுவதைப் பற்றி  பின்னூட்டத்தில்  குறிப்பிடுங்களேன் . எல்லோருக்குமே  பழைய நினைவுகள்  சுகமான  ராகங்கள் தான் 

images courtesy---google.

Wednesday 8 January 2014

தலைவலியும், காய்ச்சலும்...தலைப்பையும், படத்தையும் பார்த்து,    இதென்ன தலைவலிக்கும் காய்ச்சலுக்குமே ஆம்புlலன்சை  கூப்பிட்டு ,  கலாட்டா செய்து விட்டேனோ என்று பதற வேண்டாம். பின் வரும் உரையாடலைக் கவனியுங்களேன் ;

அம்மாவுக்கும்,  அவளுடைய  ஏழு   வயது பிள்ளைக்கும்  நடந்த உரையாடல்.

" அம்மா, இது என்ன  சத்தம் அம்மா? "

"அதற்குப் பெயர் சைரன்  . " அம்மாவின் பதில்.

மீண்டும் மகன்," எதற்கு அந்த  வேன்  சைரனுடன் போகிறது? "

" அது வேன்  இல்லைடா கண்ணா ...அதற்குப் பெயர் ஆம்புலன்ஸ்  " அம்மா சொல்ல ,மகன்

"அப்படின்னா?" ஆர்வம் தாங்காமல் கேட்க

" யாருக்கோ அவசரமாக  மருத்துவ உதவி  தேவையிருக்கு என்று அர்த்தம்.அவசரமாக ஆஸ்பிடலுக்குப் போக வேண்டும். அதனால் ரோட்டில் எல்லோரும் ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும்.  யாரும்  ஆம்புலன்ஸை முந்தி செல்லக் கூடாது , என்ற எச்சரிக்கைக்கு   தான் அந்த சைரன் .  உடனடியாக  மருத்துவ உதவி தேவைப் படுவதால்,  வண்டியில் செல்பவர்கள் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்டதும் ஒதுங்கி வழி விட வேண்டும் "என்று சொல்லி முடித்தவுடன் , புரிந்தது  என்று   தலையை  ஆட்டி விட்டு , ஆம்புலன்ஸ்  போன  வழியையே  சிந்தனையுடன்  பார்த்துக்  கொண்டிருந்தான்  அந்தச்  சிறுவன்.

சிறுவன்  என்  .மகன் . நான்  தான் அவனுக்கு  லெக்சர்  கொடுத்துக் கொண்டிருந்தேன். இதில்  என்ன  இருக்கு என்கிறீர்களா? எல்லோரும் தானே இதை செய்கிறோம்    என்று  உங்கள்   மனசு  சொல்வது  எனக்குக் கேட்கிறது. இதைப் போய் பெரிதாக எழுத வந்து விட்டாயே என்று யாரும்  கோபிக்க வேண்டாம்.

சில அம்மாக்கள் , இந்த  வேலையை  சரிவர  செய்யவில்லையோ  ,என்று தோன்றும் அளவிற்கு  இருந்தது ,நேற்று   முகனூலில்   நான் படித்தது .

நெரிசல்   மிகுந்த  சென்னைப்  போக்குவரத்தில்  நடந்த
சம்பவம்   பற்றிய செய்தி. ஆம்புலன்ஸ் பெருங்குரலுடன்  சத்தமிட்டுக் கொண்டே  அந்த நான்கு  முனை சந்திப்பை நோக்கிப் பயணிக்கிறது. போக்குவரத்து  ஓட்டுனர்கள் , இப்படியும் ,அப்படியுமாக ,நகர்ந்து ஒரு மாதிரி  வழிவிட  வேகமாக பயனித்து வருகிறது ஆம்புலன்ஸ் .
அதற்குப் பின்னாடியே ,ஒரு டாடா சுமோ வந்து கொண்டேயிருந்தது  சட்டென்று  ஆம்புலன்சை  ஓவர்டேக் செய்தது. சிக்னல்  விழுவதற்கு முன் சென்று விட வேண்டும் என்று டாடா  சுமோ எடுத்தது   முயற்சி . ஆனால்  அப்பொழுது பார்த்து   சிவப்பு  சிக்னல் விழ, அதற்காகவே  ரெடியாக காத்துக் கொண்டிருந்த , எதிர் ரோட்டில் நின்றிருந்த வாகனங்கள் பறக்க ஆரம்பிக்க.,
செய்வதறியாது  சுமோ ஓட்டுனர் முழிக்க , எல்லோரும் அவரை வசை பாடிக் கொண்டிருந்தார்கள். ஆம்புலன்ஸ் அலற, அலற  சுமோவோ  ஆம்புலன்ஸ் முன்பு   நந்தியாய்.... நின்றிருந்தது.

சுமோ  ஓட்டுனர் எலோரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார்.தாமதித்த  வினாடிகளில், உள்ளே இருந்த நோளியாயின் நிலைமையும்,, அவரை விடவும், நோயாளிக்கருகில்  இருந்த உறவினர் நிலைமையையும், எண்ணிப் பார்த்ததில் நடுங்கிப் போனேன். உயிர் காக்கும் வேளையில் ஒவ்வொரு வினாடியும்  பொன்னானது  ஆயிற்றே!

ஒரு வழியாய்  சிக்னலில் பச்சை  விழ,   சைரனுடன் சென்றது ஆம்புலன்ஸ். முகம் தெரியாத ,அந்த மனிதர் நல்லபடியாய் ,சிகிச்சை முடிந்து  வீடு திரும்பியிருக்க வேண்டுமே என்று  கடவுளை வேண்டிக் கொண்டேன்.

இப்பொழுது சொல்லுங்கள் சிலர் ஆம்புலன்ஸ் அவசரம் பற்றி சற்றே  குறைவாகத் தானே மதிப்பிடுகிறார்கள்.

நீங்கள் வாதிடலாம். ஆம்புலன்ஸ் உள்ளே நோயாளி தான் இருந்தார் என்பதற்கு என்ன அத்தாட்சி.என்று.

ஆங்கிலத்தில் சொல்வோமே ,' Benefit of doubt 'என்று. அந்த சந்தேகத்தின் பலனை ஆம்புலன்ஸிற்கே   கொடுத்து வழி விடுவதால்  , ஒன்றும் குறைந்து போய் விடுவதில்லை என்பது என் எண்ணம். ஆம்புலன்ஸ் அவசரத்தை விடவும்  ,வேறு அவசரம்   இருக்க முடியுமா?

அந்த  முக நூல்  செய்திக்கு வந்த விமரிசனத்தைப் பார்த்தேன். அதில் ஒருவர் அசால்டாக எழுதியிருந்தார்.

' தலைவலியும் காய்ச்சலும்  தனக்கு வந்தால் தெரியும்  '.......என்று.

உண்மை தானே !மற்றவர் தலைவலியையும், காய்ச்சலையும்   உணர்ந்து,,உதவ வேண்டாம். உபத்திரவமாகவாவது இருக்க  வேண்டாம்  என்று சொல்லத் தோன்றுகிறது.


          உயிர்  காக்கும் ஆம்புலன்ஸிற்கு  வழி விடுவோம்.!  

image courtesy---google.

Wednesday 1 January 2014

ராசியின் ஆசை

"

பேப்பரிலிருந்து  தலையை
வெளியே எடுத்த  என் கணவர்," இங்கே பார்...எல்லோரும் புது வருடத் தீர்மானம் எடுக்கிறார்களாம் . நாமும்  சில புது வருடத் தீர்மானம்  எடுத்துக் கொள்வோம் " என்று சொல்ல ,

நான் முந்திக் கொண்டு ," இந்த வருடமாவது  டாக்டரிடம் செக்கப்  செய்து  கொள்ள  மறுப்பு சொல்லாமல்  வர வேண்டும் சரியா ?"  என்று அவருக்கு ஆணையிட்டேன்.
அவரோ  என் முன் ஒரு பெரிய லிஸ்ட்  வைத்தார்.

" சரி .நீ சொல்வதை  நான் செய்கிறேன். நான் சொல்வதை  நீ கேட்டால் " என்று அவர் ஆரம்பிக்க  " இவர்   என்ன பெரிதாக  சொல்லி விடப் போகிறார் " என்ற அலட்சியத்தோடு  கவனிக்க  ஆரம்பித்தேன்.

ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போனார்.

" முதலில் , புடவைக் கடைக்குப்  போனால் ஒரே மணி நேரத்தில்  செலக்ஷன்  முடித்து விட வேண்டும் " ( முடிகிற காரியமா அது?...)

அப்புறம்.... என்றேன்.....

" இனிமேல் லேப்டாப்பை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது  நான் மெயில் செக் செய்ய  என் வசம் வேண்டும்  " ( யோசிப்போம்)

பிறகு......

" இனிமேல் சினிமா, சீரியல்  பார்க்கும் போது  உணர்ச்சி வசப்பட்டு அழுவதை நிறுத்த வேண்டும் " என்று அவர் தொடர   நான் பிரேக் போட்டேன்.

"ஸ்டாப்......ஸ்டாப் .... மீதி  தீர்மானங்களை  2015 இல்  பார்த்துக் கொள்ளலாம் "என்று  சொல்லிவிட்டு டைனிங்  டேபிளிற்கு சென்று  சாப்பிட உட்கார்ந்தோம்.

" இன்றைக்கு நன்றாகவே சமைத்திருக்கிறாய் " என்று சர்டிபிகேட் கொடுக்க , அவருக்குப் பிடித்த  முருங்கைக்காய் சாம்பாரும், வெண்டைக்காய் கறியும் . அதனால் தான் எனக்குப் புகழாரம்  என்று நினைத்துக் கொண்டேன்.

சாப்பிட்டு முடித்தவுடன்  நேராக லேப்டாப் பக்கம் வந்தேன்.
" பார்த்தியா.....இப்ப தானே சொன்னேன். நான் எப்பொழுது மெயில் செக்  செய்வது? " என்று அவர்  பிடிவாதம்  பிடிக்க, ' கொஞ்ச நேரம் தான்... ' என்று அவரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு , பிரவுசரைத் திறந்தேன்.

சிறிது நேரத்திற்கெல்லாம் ,

" டிங்..டாங் "

கதவைத் திறந்தேன்.

அரக்குக் கலரில் பச்சை நிற பார்டர்  போட்ட மைசூர் சில்க் சாரியில். ஒரு பெண்மணி, கையில்  ஹேண்ட்பாக்,  காதுகளில்  வைரத்தோடு  மின்ன, கைகளில் பவுன் வளையல்கள்  அடுக்காய்  குலுங்க நின்றிருந்தார். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும்  பணத்தின் ' பள  பள '

" யார் நீங்க? உங்களுக்கு என்ன வேண்டும்? " என்றேன்.

" இங்கே ராஜலக்ஷ்மி பரமசிவம் என்பது........."என்று இழுத்தார் 

" ஏன்? நான் தான் ....." என்றேன்.


" ஓ .......நீங்கள் தான் அரட்டை அடிப்பவரா?" 
" நீங்கள்  யார்?  நான் என்ன அரட்டை அடிக்கிறேன்.........ஒன்றும் புரியவில்லையே  " என்று குழப்பத்தோடு ," உள்ளே வாங்க ...உட்காருங்கள் " 

வரவேற்றேன்.

" நான் ராசி. என் கணவர் பேர் விஷ்ணு  " என்று அந்தப் பெண்மணி சொல்லவும் 
மொத்தமாய்  அதிர்ச்சியில் உறைந்தேன்.
 " இதென்ன கலாட்டா? நான் கற்பனையில் உருவாக்கிய  கதாபாத்திரங்கள் பெயரில்  நிஜமாகவே ஒரு  தம்பதியா?  என் போதாத காலம்  ,என் பதிவை வேறு படித்து விட்டு  சண்டைக்கு வந்தார் போல் தெரிகிறார்.
 
கேஸ் போட்டு விடுவாரோ ? ஓய்வு  காலத்தில் கோர்ட் படியேற வேண்டுமோ?என் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல்  அவரிடம்," ரொம்பவும் சூடாக இருக்கிறீர்கள். ஏதாவது ஜூஸ் குடிக்கிறீர்களா?  என்று ஐஸ் வைக்க முயற்சித்தேன்.


அந்தப் பெண்மணியோ  , முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ," எனக்கு ஒன்றும் வேண்டாம். உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்  . உட்காருங்கள் ."
என்று சொல்லவும் எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது.

வக்கீலுக்குக் கொடுக்கும் ஃ பீஸ், மான  நஷ்ட ஈடு  , எல்லாம்  கன ஜோராய் என் முன்னே நாட்டியமாட, என்ன சொல்லப் போகிறாரோ? கவலையுடன் அமர்ந்தேன்.

" ஆமாம். உங்களுக்கு எழுத ஒன்றுமே கிடைக்கவில்லையா? நானும் என் கணவரும் தான் மாட்டினோமா ?" என்று ஆரம்பித்தார்.

" இல்லையே நான் ராசி--விஷ்ணு பற்றி அவ்வப்போது தானே எழுதுகிறேன். அது மட்டுமில்லாமல் அவர்கள் இருவரும் என் கற்பனையே! உங்கள் பெயர்  ராசி என்பது, நீங்கள் இப்ப சொல்லித் தான் எனக்குத் தெரியும் " என்று என் நிலைமையை பக்குவமாக சொல்ல  ஆரம்பித்தேன்.

பெண்மணியோ இடை மறித்து, " நான் நம்ப மாட்டேன். எங்கள் வீட்டிற்கு வந்து நடப்பதைப்  பார்த்து எழுதுவது போல் தெரிகிறது . " என்று உஷ்ணமானார்.

" நான் ஒரு நாள் ஜுரத்தில் படுத்தது கூடத் தெரிந்திருக்கிறதே! அன்று என் கணவர் அதான் விஷ்ணு  அவரே அதிசயமாய் தான் அடுக்களைக்குள் நுழைவார். அவரே என் மேல் பரிதாபப்பட்டு  காபி போட முயற்சித்தால் அதைக் கிண்டல் செய்வது போல் ஒரு பதிவு."
 
" பள்ளி படிக்கும் வயதில் சரித்திரத்தில் நான் வீக் என்று தெரிந்து கொண்டு  நக்கலடிக்கிறீர்கள்."


"நான் ஸ்மார்ட் போன் வாங்கி  அதை உபயோகிக்கத தெரியாமல் விழி 
பிதுங்கியது  எப்படித் தான் உங்களுக்கு எட்டியதோ......உடனே ஒரு பதிவு.
அவரும் நானும் சின்ன செல்ல சண்டை போட்டால் அதை  படம் போட்டுக் கதை சொல்லாதது தான் பாக்கி. "


" இதெல்லாம் கூட  போகட்டும். எனக்குப் பாட்டுப் பாட ஆசை, சந்தர்ப்பம் தான் வாய்க்கவில்லை  என்று அவரிடம் நான்  அங்கலாய்த்துக்  கொண்டிருந்ததை 

சூப்பர் சிங்கராகிறேன் என்ற பெயரில்  தாறுமாறாய்  என்னைப்பற்றி எழுதி எதற்கு அவமானப் படுத்துகிறீர்கள் ? "என்று கண் நிறைய நீருடன் கலங்க , எனக்குப்  பார்க்க பாவமாயிருந்தது. 
"தீபாவளிக்கு மைசூர்பாக் செய்தால் ஒரு கிண்டல், விஷ்ணு  என் பிறந்தநாளை  மறந்தது   உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆயிற்று. அதையும்
 காமெடியாக்கி எழுதிவிட்டீர்களே!"
"அதோடு மட்டுமல்லாமல் எல்லாப் பதிவுகளிலும்  விஷ்ணு பாவமாய் என்னிடம்  மாட்டிக் கொண்டாற்  போல் ஒரு தோற்றம் உருவாக்கி வைத்திருக்கிறீர்கள்."


" நீங்கள் இப்படி எழுதுகிறீர்கள் என்றால் உங்கள் நண்பர்கள் வட்டம் இருக்கிறார்களே  அவர்கள் ஒரு படி மேலே போய் விடுகிறார்கள்." விஷ்ணு பாவம்....விஷ்ணு பாவம்...... என்று எழுதி அவருக்கு ஒரு அனுதாபமன்றமே  ஆரம்பித்து விட்டார்கள்.அது போதாதென்று, ஒருவர் தன்  வீட்டு காம்பவுண்ட் சுவர் கட்ட .நான் செய்த மைசூர்பாக் ஒரு லோடு  வேண்டும்  என்று சொல்கிறார். இன்னொருவரோ "பொறுத்தது போதும். பொங்கி எழுங்கள் விஷ்ணு " என்று கருத்திடுகிறார். என்ன தான் நீங்களும் உங்கள் வாசகர் வட்டமும் என்னைப்பற்றி  நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்  என்று புரியவில்லை. " என்று" படபட 1000வாலா " பட்டாசாக  வெடித்து முடித்தவுடன் எனக்கு ராசியின் விருப்பம் என்ன என்று புரிந்து விட்டது.

" ராசி.... கவலையே படாதீர்கள். உங்கள் வருத்தம் எனக்கு விளங்கி விட்டது. இந்தப் புது வருடத்தில்  உங்களைப்பற்றி நான் எழுதப்போவதைப்  படிப்பவர்கள்., உங்களுக்கு ரசிகர் மன்றம்  ஆரம்பிப்பது உறுதி. கவலையை விடுங்கள்..... "என்று சொல்லும் போதே......

" காபி போடுகிறாயா? " குரல் கேட்டது.
என் கணவர் போலிருக்கிறதே. இவ்வளவு நேரம் எங்கே போனார் என்று யோசிக்கும் போதே யாரோ என்னை அசைப்பதை உணர முடிந்தது. 

ஓ .....விரலை லேப்டாப்பில் வைத்ததுக் கொண்டே  சோபாவில் கண்ணசந்திருக்கிறேன். அதில் ராசி கனவு வேறு.  என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வந்தது.

'என்ன சிரிக்கிறாய்? பகலிலேயே தூக்கமா? " என்றவரின் கேள்விக்கு பதிலாக          " ஒன்றுமில்லை "சொல்லிக் கொண்டே   காபி போடப் போனேன் .

(ராசிக்குத் தேங்க்ஸ் சொல்லவேண்டும்  ராசி கனவில் வந்தது புத்தாண்டு பதிவுக்கு ஆச்சே )

             உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!! 
image courtesy-----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்