Monday 7 December 2015

மாமழை விட்டுச் சென்ற செய்தி!

google image 
சென்னை வெள்ளத்தில் ,மக்கள் படும் துயரங்கள், அவர்கள்  கண்களில் தெரிந்த அதீத பயம் , பதைபதைக்க செய்தது .  இயற்கை நம்மை வஞ்சம் தீர்த்துக் கொண்டது என்றே சொல்லலாம்.

" என்னோடு விளையாடுகிறாயா ? என்ன செய்கிறேன் பார்  உன்னை ." என்கிற பெரும் ஆக்ரோஷத்துடன்  சீறிப் பாய்ந்து தான் ராட்சதக்  கைகளால்  நம்மை உள்ளே   இழுத்துக் கொள்ள முயற்சித்தப்  போது செய்வதறியாது முதலில் திகைத்துத் தான் போனோம். தண்ணீர் ஒவ்வொரு அடியாக மேலே ஏறிக்  கொண்டேயிருக்க ,  கண்களோ  வானத்தைப் பார்த்து  இம்மழை  நிற்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இயற்கை மனம் இரங்கவில்லை. .
இயற்கை நம்மிடம் தயைக் காட்ட மறுத்து விட்டது என்பதை உணர்ந்த வினாடியிலிருந்து  மீட்புப் பணிகள் தொடங்கி விட்டன என்றே சொல்ல வேண்டும்.

தன்னார்வத் தொண்டர்கள் , அரசாங்கம், மற்ற மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் பாகுபாடு இல்லாமல்,  ராணுவம், NDRF, போலீஸ், திரையுலகத்தினர்
, விளையாட்டு  வீரர்கள்  என்றே பல இடங்களிலிருந்தும் உதவிக் கரம் நீட்டப் பட்டது.
 இவர்கள் படகில், ஹெலிகாப்டரில்  என்று  விரைந்து வந்து  வீர   தீர செயல்கள் புரிந்து  காப்பாற்றியதை எத்தனைப் பாராட்டினாலும்  போதாது.எவ்வளவு நன்றிகள் சொன்னாலும்  பத்தாது.

நம் முதல்வரும், நாட்டின் பிரதமரும் நம்பிக்கைத் தரும் விதமாக பேசியது ஆறுதலான செய்தி.

தண்ணீரில் குதித்துத் தன்  சக  மனிதரைக் காப்பாற்றத் துணிந்த  இளைஞர்கள் பாராட்டிற்கு உரியவர்கள் .  இவர்கள் கையில் இருந்ததோ வெறும் நைந்துப் போகத் தயாராயிருந்தக்  கயிறு மட்டுமே. , அதை நீளப் பிடித்து , ஒரு கரையிலிருந்து, மறு கரைக்கு  எல்லோரையும் பத்திரமாக கொண்டு சேர்த்தவர்களை என்னவென்று சொல்வது. கழுத்தளவு நீரில் நீந்திச்  சென்று காப்பாற்றியவர்கள்,  படகுகள் மூலம் காப்பாற்றியவர்கள், படகு கிடைக்காத இடங்களில்,  மரக்கட்டைகள்,  இவற்றை படகாக மாற்றிக் காப்பாற்றியவர்கள் என்று  அடுக்கிக் கொண்டே போகலாம்....... பக்கம் பத்தாது.  அவர்களுக்கு 'நன்றி' என்கிற ஒற்றை சொல்லை சொல்லி விட்டு நடையைக் கட்ட மனம் ஒப்பாது.

உயிர் காப்பற்றப்பட்ட பிறகு, வயிறு சும்மாயிருக்குமா? பசியும் தன்  பங்கிற்கு உபத்திரவம் கொடுக்க, உடனே, 'ஜீபூம்பா'  சொல்லியது போல் , கொட்டத் தொடங்கி விட்டன உணவுப் பொட்டலங்கள் .
இவையெல்லாம் யார் தயாரித்தது? -- தெரியாது.
எந்த மதத்தைச் சேர்ந்தவர் சமைத்தது--தெரியாது.
இதை நம்மிடம் கொண்டு வந்து  கொடுப்பவர் யார் என்றாவது தெரியுமா--தெரியாது. ஆனால் வயிறு நிரம்பியது . அவர்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று புரியவில்லை.

தாகம் வாட்டாமல் இருக்குமா என்ன ? சுற்றிலும் தண்ணீர். ஆனால் குடிக்க ஒரு துளியில்லை.  அதற்கும் பாட்டில் பாட்டிலாக வந்து சேர்ந்தது குடிநீர்.
இருக்க மேலே ஒரு கூரை  வேண்டுமே. கோயில், மசூதி, சர்ச் எல்லாமே மத பாகுபாடு இல்லாமல்  எல்லோரையும் இரு கரம் நீட்டி வரவேற்றுக் கொண்டிருந்தது.  அவர்களுக்கும் நாம் நன்றி சொல்லியேயாக வேண்டும்.

உங்களுக்கு சளைத்தவர்கள்  இல்லை நாங்கள் என்று தனி மனிதனும் , என் வீட்டிற்கு ஐந்து பேரை அனுப்புங்கள், என் வீட்டில் பத்து பேர் இருக்கலாம், இங்கே ஐம்பது பேர் , அங்கே  ஆயிரம் பேர் ...... என்று முக நூல் பக்கங்களில் கூவிக் கூவி  சொல்லிக் கொண்டிருந்தார்கள் . எல்லோரும் எல்லோருக்கும் அடைக்கலம் கொடுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் அன்பை என்னவென்றுசொல்வது!

முக நூல் பக்கங்கள் எல்லாம் உதவிக் கேட்டோ, உதவிகரம் நீட்டுபவர் பற்றிய செய்திகளால் மட்டுமே நிரம்பி வழிந்துக்  கொண்டிருந்தது.. அங்கெல்லாம் பொழுது போக்கு  விவாதங்கள் இல்லை, வெட்டி அரட்டைகள் இல்லை. வாட்ஸ் அப்பிலும்   தேவையற்ற உரையாடல்கள் இல்லை.  தொழில் நுட்பம் இவ்வளவு உதவியாக இருக்குமென்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க முடியாது. எல்லோரிடமும், முக்கியமாக  வயதானோர்களின்   கண்டனத்திற்குள்ளாயிருந்த  தொழில் நுட்பம் ,சுயமரியாதையை  தேடிக் கொண்ட நேரம் இது என்றால்  அது மிகையில்லை.

மாமழை  குப்பையை மட்டும் நம்மிடம் விட்டு , விட்டுப் போகவில்லை. சில   ரகசியங்களையும் அம்பலமாக்கி விட்டுப் போயிருக்கிறது.

 அவற்றில் சில

  • இயற்கையோடு இணைந்து வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். இயற்கையை எதிர்த்து  அல்ல என்கிற பேருண்மை வெளிப்பட்டது.
  •  நமக்கேத் தெரியாமல் நம்மிடையே  அடி மனதில் மூழ்கிப் போயிருந்த   மானுடத்தை  மேலே கொண்டு வந்து மிதக்க வைத்திருக்கிறது. 
  •  மதம் நம்மைப் பிரிக்க முடியாது  என்கிற மாபெரும்  செய்தியை உணர வைத்தது.
  • உதவும் மனப்பாண்மை  தீயைப் போல் வேகமாகப் பரவக் கூடியது. சூழ்ந்திருந்த வெள்ளத்தாலும்  அந்தத் தீயை அணைக்க முடியாது  என்று புரிய வைத்திருக்கிறது.
  • வன்முறையை விட  வேகமாகப் பரவக்கூடியது அன்பு   என்று சொல்ல வைத்தது.
  • "எப்பொழுதும் போனைக் கையில் வைத்துக் கொண்டு என்ன தான் செய்கிறாயோ?" என்று வசவுகளை மட்டுமே வாங்கிக் கொண்டிருந்த இளைய சமுதாயத்தினர்  சட்டென்று  ஹீரோவாகிப் போனார்கள். உண்மையும் அதுவே. 
  • இளையத் தலைமுறையினர் மீது அளவற்ற நம்பிக்கையைக் கொண்டு வந்து சேர்த்தது.
  •  பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறக்கடிக்கப் பட்டன .
  •  உதவி என்பது அரசாங்கம் மட்டுமே தரவேண்டும் என்கிற நியதி உடைந்தது.
  • நமக்கு  உதவித் தேவைப் பட்ட முக்கியமான நேரத்தில், இந்தியா முழுதும் வியாபித்திருந்த  ஆங்கிலச்  சேனல்கள் சென்னை வெள்ளத்தைப் புறக்கணித்தன  என்கிற கசப்பான உண்மை புரிய வந்தது.. பின்னர் வந்து சேர்ந்துக் கொண்டார்கள்  என்பது வேறு  செய்தி.
  •  ஆனால் சோஷியல் நெட்வர்க்கிங் மீடியா  பெரிதாய் உதவியது.முக நூலிற்கும், வாட்ஸ் அப்பிற்கும், டிவிட்டருக்கும்  நன்றி.

இதிலும் அரசியல் செய்தவர்கள்  எத்தனையோ பேர் இருக்கலாம். அவர்களை விட்டுத் தள்ளுங்கள். அவர்களெல்லாம் எப்பவுமே அப்படித் தான்.

கடைசியாக , ஒன்று....
  இந்தியர்களா ... அவர்களுக்குள் எப்பவும் ஏதோவொரு சண்டை இருக்கும் என்று சொல்பவர்களுக்கு ,
நம்மிடையே கருத்து வேறு பாடுகள் உண்டு . ஒத்துக் கொள்கிறேன். ஆனால்  எங்கேயில்லை, யாரிடமில்லை  கருத்து வேறுபாடுகள்? சொல்லுங்கள்.
ஆனால்...... " கார்கில் போர்" ஆனாலும்,, "கரை புரளும் வெள்ளமா"னாலும்   எதிர் கொள்ள ,  அதையெல்லாம் கடந்து,  நாங்கள்   ஒன்று சேர்ந்து கொள்வோம்.

                                                       இது தான் இந்தியா!!

சென்னை வெள்ளத்தில் உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் இப்பதிவு சமர்ப்பணம்.

Saturday 28 November 2015

கொத்தங்குடியின் வில் வண்டி--1

google image 
பள்ளிக்கு லீவு விட்டாச்சு என்றால் எங்களுக்கு ஜாலி தான். பின்னே .....எங்கள்  தாத்தா  ஊருக்கு செல்வோமே !  வருடம் முழுக்க  பரபரப்பு நிறைந்த சென்னை  நகர வாழ்க்கையும், படிப்பின் சுமையும் இந்த கிராமத்து வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். வருடத்தில் சில நாட்கள் மட்டும் தான் இந்த விடுதலை என்கிற போதிலும்,  நினைவுகள் இன்னும் மனதில் பசுமை குறையாமலே   இருக்கிறது

தாத்தா ஊர் எங்கே என்று சொல்லவில்லையே! அழகிய சிறு கிராமம். மாயவரம் வரை  ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து கோமல் வரை பஸ் பயணம். பிறகு அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணித்தால் அரை மணிநேரத்தில்  கொத்தங்குடி  என்கிற மிக சிறிய கிராமத்தை அடையலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த   தேரழந்தூரிலிருந்து  பதினைந்து நிமிட பயணத்தில் கொத்தங்குடி   சென்றடையலாம்.

ரயில் பயணம் என்று நினைத்தால்  இப்பொழுதும், இந்த வயதிலும் எனக்கு  மிகவும் விருப்பமான ஒன்று. சிறு வயதில் சொல்லவா வேண்டும். அந்தக் கால  ரயில் பயணம்  சில சங்கடங்கள் இருந்தாலும், மிகவும்  ரசிக்கத்தக்கதாய் இருக்கும்.

இரவு கிளம்பினால்  மறு நாள் காலை மாயவரம் போய் சேரும் ரயில் வண்டி. .
அப்பொழுதெல்லாம் டீசல் வண்டி தான். அது போல் ஏசி  பெட்டி எல்லாம் கிடையாது.  அதனால் தனித்தனி தீவுகளாய் திரை சீலைக்குள் பயணிக்கும் பரிதாபம் கிடையாது.

ரயில் பயணம் என்றாலே எல்லோர் கையிலும், ஒரு தோல் பெட்டி, ஒரு டிரங்க் பெட்டி, ஹோல்டால், எல்லாம் உண்டு. கையில் கூஜா மிக மிக அவசியம். ரயிலில் குடி தண்ணீர் கிடைக்காது. ஸ்டேஷனில் இறங்கி இறங்கி கூஜாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ரயிலில் கேட்டரிங் வேன் எதுவும் இருக்காது.அதனால் கையில் எல்லோருமே  சாப்பாடு கொண்டு வந்து விடுவார்கள். எதிர் சீட்டில் சாப்பிடும் புளியோதரை  நம் நாவில் நீர் வரவழைக்கும். நமக்கும் தாராளமாகக் கிடைக்கும் .நாமும் அச்சமின்றி  சாப்பிடலாம். அந்த நாளில் பிஸ்கட் திருடர்கள் கிடையாதே!
  
 சக பயணிகள் எல்லோருமே வாயாரப் பேசிக் கொண்டு , உறவினர் போல் ஒருவர் மேல் ஒருவர் அன்போடும், அக்கறையோடும் பயணிப்பார்கள். இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை  இது போல் இனிமையான சம்பவங்களினால் தான் ரயில் பயணம் என்றதும் மனம் துள்ளலாட்டம் போடுகிறதோ !

ஆமாம் ! அந்த  அன்பைக்  கலந்து செய்த ரயில் பெட்டிகள் எல்லாம் எங்கே போச்சு ! காணாமல் போய் விட்டதோ!
கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப் படும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  இந்த இனிமையான  ரயில் பயணத்தில், எனக்கும் என் தம்பிக்கும் அந்த ஜன்னலோர சீட்டிற்கு அடிதடியே நடக்கும்.

எதிர் சீட்டுப் பயணி," ஏம்மா இப்படி ரெண்டு பெரும் சண்டை போடுகிறீர்கள். இந்த இருட்டில்  என்ன தெரியப் போகிறது.  கண்ணில் கரி விழும். அது தான் நடக்கும்.' என்று சொன்னாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை.

வரும் ஸ்டேஷனில் எல்லாம்  கண் கொட்ட கொட்டப் பார்த்துக் கொண்டு நீராவி எஞ்சின் புகையில் கலந்து  வந்து , கண்ணில் விழும் கரித் துகளை தேய்த்து விட்டுக் கொண்டே  பயணிப்போம்., அதிகாலையில் மாயவரத்தில் எங்களை இறக்கி விடும் ரயிலுக்கு பிரியாவிடை கொடுக்கத் தவற மாட்டோம்..

அதற்குப் பிறகு பஸ்  பயணம் அத்தனை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது . குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டில்  போகும் பஸ் போகும் போது , நம் இதயம்  குதித்து , குதித்து வாய்க்குள் வந்து விடும் அபாயம் உண்டு.

கோமலில்  பஸ் எங்களை  இறக்கி விட்டவுடன், அடுத்து நாங்கள் மிகவும் ஆவலாய் எதிர் பார்த்திருந்த போக்குவரத்து  மாட்டு வண்டி.
அதை வில்வண்டி என்று கிராமத்தில் சொல்லும் வழக்கம் உண்டு. வில்லைப் போன்று வளைந்து  மூடியிருப்பதால்  இந்தப் பெயரா தெரியவில்லை. கிராமத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பயணிப்பதற்கு ஒரு வண்டியும், மற்ற விவசாய  பணிகளுக்கு வேறு  வண்டியும்  இருக்கும். சட்டென்று அடையாளமாக சொல்வதற்கு இந்தப் பெயரை  உபயோகித்தார்களா தெரியவில்லை.

இந்த வில் வண்டி பயணம்  முடியம் போது , அங்கு எங்களுக்கு முன்பாக எங்கள் சித்தியின்  பெண், பிள்ளை, மாமா வீட்டுப் பெண் பிள்ளை என்று பலரக வயதில்  காத்திருக்கப் போகிறார்கள்.

ஆகா ஒரு பெரிய கூட்டம் கொட்டமடிக்கக்  காத்திருக்கிறது.

இதோ  அந்த வண்டி ஓட்டுபவர் எங்கள் பெட்டி, பைகள் எல்லாம் உள்ளே அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.  வில் வண்டியில் நாங்கள் ஏறி   உட்கார்ந்தால்  அந்த இரட்டை மாட்டு வண்டி  "ஜல் ஜல்" என்று கிளம்பப் போகிறது ....

வண்டி ஓட்டுபவர்  மாடுகளை  அவிழ்க்கப் போயிருக்கிறார்.
அந்த "ஜல், ஜல்" மாட்டு வண்டிப் பயணத்திற்கு  சற்றே காத்திருப்போம்........

Saturday 17 October 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --6

" தென்றல் " பத்திரிகையில்  ராசி-விஷ்ணு  தம்பதி

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --5 படிக்க இங்கே கிளிக்கவும்

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் " தென்றல் " மாத இதழில் ராசி-விஷ்ணு   தம்பதியினர்  டிஷ் வாஷருடன் செய்த  அலப்பறை  இம்மாதம் வெளியாகியிருக்கிறது.

சிரிக்க சிந்திக்க  என்கிறப் பிரிவில் ," என்ன சத்தம் இந்த நேரம்" என்கிறத்  தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள்.

என் நெடுநாளையக் கனவைப் பூ ர்த்தி செய்த தென்றல் இதழிற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்களும் படித்து உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

                                                                                

ராசி இரவு சாப்பிட்டு விட்டு, படுக்கக்  கிளம்பியவள், மருமகள் ஆர்த்தி  டிஷ் வாஷரில்  எல்லா சாமான்களையும் போட்டு விட்டு  பட்டனை அமுக்கி விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் .

சற்று நேரம் டிஷ் வாஷரையே  பார்த்துக் கொண்டிருந்தாள்  ராசி. " இந்த ஊரில்(அமெரிக்காவில்) இருப்பதைப் போல் நம் ஊரில்  'டிஷ் வாஷர்' இன்னும் ஏனோ பிரபலமாகவில்லை. அதனால் தான் வாங்க யோசனையாயிருக்கிறது .பிரபலாமாகியிருந்தால், பாத்திரம் துலக்க  இந்த அஞ்சலைக்காக, நாம் வழி மீது விழி வைத்துக் காத்திருக்க வேண்டியிருக்காதே "  என்று நினைத்துக் கொண்டே  ஆ........வ்...........என்று பெரிதாகக்  கொட்டாவி  விட்டாள் .

திடீரென்று கும்...கும் .....என்று மெலிதான சத்தம் கேட்டது.
" என்ன சத்தம் இது ?" என்று ராசி கேட்க,
ஆர்த்தியோ , நிதானித்துக் கூர்ந்து கவனித்து விட்டு ," ஒன்றுமில்லையே மாமி " என்று சொன்னாள் .

" ஓ .......நம் வயிறு தான் ஒரு மாதிரி சத்தம் போடுகிறதோ?
இன்றைக்கு என்ன சாப்பிட்டோம்? வயிறு " ஒரே கடமுட " என்கிறதே என்று  நினைத்துக் கொண்டு  நல்ல சூடாக ஒரு டம்ளர் வெந்நீரை  குடித்து  விட்டுப் படுக்கக் கிளம்பினாள் .

மறு நாள், ஞாயிற்றுக் கிழமைப்  பொழுது விடிந்ததும் , காபிக்  கலந்து தானும் குடித்து விட்டு விஷ்ணுவிற்கும்  கொடுத்து விட்டு,  ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே, காபியை சுவைக்க ஆரம்பித்தாள் .

திடீரென்று நினைவிற்கு வந்தது "ஆமாம்...... நேற்றிரவு நமக்கு வயிறு சற்று மந்தமாக இருந்தாற் போலிருந்ததே. அப்பாடி ......இப்பொழுதாவது  சரியாகி தொலைத்ததே  " என்று நிம்மதியானாள்  ராசி. வெந்நீர்  நன்றாகவே  வேலை செய்திருக்கிறது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்  ராசி.

அதற்குப் பிறகு அவளுக்கு எதைப் பற்றியும் நினைக்க நேரமில்லை . அன்றைக்கு  ராஜேஷ் அவனுடைய நண்பர் குமாரை மதிய உணவிற்கு  வரவழைத்திருந்தான். அதற்காக ஆர்த்தியும் அவளுமாக சேர்ந்து  காய்கறிகளை நறுக்கவும், சமைக்கவும்  என்று சுறு சுறு ப்பாக  நாள் ஓடிக் கொண்டேயிருந்தது.

மதிய விருந்திற்கு வந்த  நண்பர் குமார் ரசித்து ,ருசித்து சாப்பிட்டு முடித்தார்.

குமார் சாப்பிட்டு முடித்து விட்டு," அம்மா.... உங்கள் சமையல் சூப்பர்.  இந்த மாதிரி சமையலை சாப்பிட்டு,  எத்தனை மாதங்களாகி விட்டன. நான் சென்ற வருடம் ஊருக்குப் போயிருந்த போது  அம்மா கையால் சமைத்து  சாப்பிட்டது. பிறகு இப்ப தான் அதே சுவையுடன்  சாப்பிடுகிறேன். அதுவும் உங்கள் அவியலுக்கு  ஈடு இணையே இல்லை எனலாம். " என்று சொல்லவும்  ராசிக்குப்  பெருமை பிடிபடவில்லை.

அதற்குள் விஷ்ணு," குமார், அதான் நீங்களே  சொல்லி விட்டீர்களே. வீட்டு சாப்பாடு சாப்பிட்டு  பல மாதங்களாகி விட்டன என்று. அதனால் தான் சாதாரண சமையல் கூட உங்களுக்கு  சூப்பர் சமையலாகி விட்டது "என்று  சொல்லவும்,
ராசி, விஷ்ணுவைப் பார்த்து ஒரு முறை முறைத்தாளே  பார்க்கணும். ஆனால்  விஷ்ணு,... ம்ஹூம்....இதற்கெல்லாம்  அவர் பயந்து விடுவாரா என்ன? கண்டு கொள்ளாமல்  நகர்ந்தார்.
பிறகு எல்லோருமாக அருகிலிருக்கும் Menlo  parkற்கு சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது மணி எட்டரை ஆகியிருந்தது..

வீட்டிற்கு வந்ததும்  இரவு உணவு முடிந்ததும்  மீண்டும் டிஷ்வாஷரில்  பாத்திரங்களை அடுக்கி, ஆர்த்தி ஸ்விட்ச்சை ஆன் செய்வதைப்  பார்த்தாள்  ராசி.

"நாளையிலிருந்து நானே   இந்த வேலையே செய்கிறேன்  ஆர்த்தி"  சொல்லி முடிக்கவில்லை,
" திரும்பவும்  வயிறு "கடமுட" என்பது போல் இருந்தது. அவியல் நமக்கு ஒத்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. வயதாவதின்  அறிகுறி இது என்று  நினைத்துக் கொண்டாள் . மீண்டும் ஒரு டம்ளர்  வெந்நீர் உள்ளே இறங்கியது.

சில வினாடிகளில் வயிறு உறுமல் அடங்கி விட்டது.

" ராசி நல்ல கை வைத்தியம் உன் வசம்." என்று தன்னைத் தானே மெச்சிக் கொண்டே   தூங்கி விட்டாள்  ராசி.

ஆனால் அவள் வயிறு  அப்படியெல்லாம் அவளை விட்டு விடவில்லை.மறு நாள்  மீண்டும் வயிறு ஓலமிட ஆரம்பித்தது.

மீண்டும்  வெந்நீர் வைத்தியம். பிறகு தூங்கச் சென்றாள் .

" இன்றைக்கும் உனக்கு வயிறு பிரச்சினையோ" என்று படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து  கண்களை எடுக்காமலே நக்கலாக விசாரித்தார் விஷ்ணு.

" ஆமாம் ஆனால் சரியாகி விடும்" சொன்ன சிறிது நேரத்தில், சன்னமான குறட்டை ஒலி   கிளம்பியது ராசியிடமிருந்து.

மறு நாள் காலை மணி ஆறு இருக்கும் . ராசி எழுந்து குளிர்ந்த நீரில் பல் துலக்கி விட்டு  , காபி போடக்  கிச்சனிற்குள்  நுழைந்தாள் .

காலை வைத்ததுமே , காலில் 'கொழ கொழ' என்று தட்டுப் பட , லைட்டைப் போட்டு  என்னவென்று பார்த்தாள்  ராசி.

புஸ்...புஸ் என்று நுரைத்  தள்ளிக்  கொண்டு   இருந்த  டிஷ் வாஷர், பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
"ராஜேஷ்......" இரைந்தாள் ராசி.

"இங்கே வந்துப் பாருடா. டிஷ் வாஷர்  ரிப்பேர்  போலிருக்கிறது.
'மாந்தம்' வந்தாற்  போல் நுரை தள்ளி, வாந்தி எடுத்து வைத்திருக்கிறது பார்."

 கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த விஷ்ணு ," அட.....மாந்தம் என்று சொல்லாதே. நீ தானே நேற்று 'ஆன்' செய்தாய்?  சரியாக செய்யவில்லையோ என்னமோ  ? அதான் உன்  தொல்லைத் தாங்காமல்  டிஷ் வாஷர் தற்கொலை முயற்சியில் இறங்கி விட்டதோ?" நக்கலடித்துக் கொண்டே அருகில் போக முயற்சிக்க

 ராசியோ," இந்த ரணகளத்திலும்  என்னை வம்புக்கு இழுக்கவில்லைன்னா .....  உங்களுக்குத் தூக்கம் வராதே.  " சொல்லிக் கொண்டே விஷ்ணுவைப் பார்த்து   " வேண்டாம்.....வேண்டாம்.....இங்கே வராதீர்கள் . வழுக்குகிறது. " என்று கத்திக்  கொண்டே  அடுத்த அடி எடுத்து வைக்கவும், சர்ரென்று சறுக்கிக்........................ கொண்டே. சுவற்றைப் பிடித்துக் கொண்டு   கீழ் அமர்ந்து விட்டாள்  ராசி.

விஷ்ணுவை ஜாக்கிரதையாக இருக்க சொன்னவள் தானே விழப் பார்த்தாள் .
நல்ல வேளை  விழவில்லை ராசி. சமாளித்துக் கொண்டாள்.

பதறியடித்துக் கொண்டு வந்த, ராஜேஷும், ஆர்த்தியும், ராசியை மெதுவாகக் கைத்தாங்கலாகப் பிடித்து  சோபாவில் அமர வைத்தனர்.பிறகு இருவருமாக சேர்ந்து கிச்சனை  சுத்தம் செய்து விட்டு, பாத்திரத்தையெல்லாம்  சுத்தம் செய்தனர்.

பின்னர்  டிஷ் வாஷர்  ரிப்பேர்  செய்பவருக்கு போன் செய்து விட்டு, " அம்மா , டிஷ் வாஷர் ரிப்பேர் செய்பவர் வந்து ரிப்பேர் செய்து விட்டுப் போவார். உன்னால்  சமைக்கக் முடியுமென்றால்  சமைத்து  சாப்பிடுங்கள் "

" ரொம்பவும்  அலட்டிக்காதே  அம்மா. கீழே  விழப் பார்த்தாய்  . ஜாக்கிரதை." பிறகு அப்பாவைப் பார்த்து," இல்லைன்னா  நீங்களே  தோசை வார்த்து விடுங்களேன் அப்பா."

என்று ஆயிரம் ஜாக்கிரதைகள் சொல்லி விட்டு , "நானோ , இல்லை ஆர்த்தியோ சீக்கிரமே வந்து விடுகிறோம் ." என்று சொல்ல, ஆர்த்தி பங்கிற்கு அவளும் " ஜாக்கிரதை " என்று சொல்லி விட்டுப் போனாள்.

ராசிக்கு அடி எதுவும் படவில்லை. அவள் சுருக்கமாக சமையலை செய்து முடிக்கவும், மெல்லிசையாய்  வாசல் மணி ஒலிக்கவும் சரியாயிருந்தது. கதவைத் திறந்தாள் ராசி.

ஆஜானுபாகுவாய் ஒரு மனிதர் நின்றுக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் கார் ஒன்று நின்றுக் கொண்டிருந்தது.

யார் ? என்பது போல் ராசி அவரைப் பார்க்கவும்,  அவரோ  ராஜேஷ் பெயரைச் சொல்லி உறுதிப் படுத்திக் கொண்டு , டிஷ் வாஷர்  ரிப்பேர்  செய்ய வந்திருப்பதாக சொன்னதைப்  புரிந்து கொண்டு அவரை உள்ளே விட்டனர்.

ராசிக்கு நம்பவே முடியவில்லை." ரிப்பேர் செய்பவர்....... காரிலா..........? "

"இருக்காது...... கடை ஓனராக இருக்கும். ! அதான் அக்கறையுடன் காரில் வந்து விட்டார் போலிருக்கிறது "  என்று ராசி நினைத்துக் கொண்டாள் . (இங்கிருக்கும் பெரும்பான்மையோருக்கு கார்  தான்  போக்குவரத்திற்கு என்பது  அப்போது ராசிக்குத்  தெரிய நியாயமில்லை.). " அமெரிக்காவில் கார் வைத்திருப்பவரெல்லாம்  முதலாளியாயிருக்க வேண்டிய அவசியமில்லை " என்கிறப் பேருண்மைப் புரிய சில நாட்களானது.

 அந்த ஆஜானுபாகு மனிதர் பின்னால் சென்றனர் ராசி விஷ்ணு தம்பதி. அவர்  டிஷ் வாஷர் அருகில் போய்  தன்  பெரிய  பையைத் திறந்து , அதனுள்ளிருந்து ஏதேதோ  உபகரணங்களை  எடுத்து  டிஷ்வாஷரின் நாடி பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்..

பிறகு  தடாலென்று  ராசியிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நெடுஞ்சாண்கிடையாக கீழே டிஷ் வாஷர் அருகே படுக்கவும், அருகில் நின்றுக் கொண்டிருந்த ராசியோ  பதறி நகர்ந்தாள் . அதை சற்றும் லட்சியம் செய்யாமல்  டிஷ் வாஷரின்  அடிப் பாகத்தில் ரிப்பேர்  செய்ய ஆரம்பித்தார் அந்த மகானுபவர். .  ஒரு  மணி நேரத்திற்கு மேலானது ரிப்பேர்  செய்து முடிக்க .

நடுவில் ராசிக்கு,  இவர் பாட்டிற்குக் காலை  நீட்டிப் படுத்துக் கொண்டு,  டிஷ் வாஷர் ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி, என்று தூங்கி விட்டாரோ  என்கிற சந்தேகம் கூட வந்தது. எழுப்பலாம் என்றால் எப்படி எழுப்புவது என்று குழம்பிய நேரத்தில்,   நல்ல வேளை  அவரே   எழுந்து , டிஷ் வாஷரை  ஆன் செய்து விட்டு  வேலை செய்கிறது என்று சொல்லி விட்டு 'பில்' எழுத ஆரம்பித்தார்.

ராசி தானே அதை  ஆன் செய்து ,ஓடுகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் .
அதைப் பார்த்த ஆஜானுபாகு மனிதர் ,எழுதிக் கொண்டிருந்ததை விட்டு விட்டு ,விறு விறு என்று அருகில் வந்தார்  .

வந்தவர் டிஷ் வாஷரை  ராசியை விட்டே ஆன் செய்ய சொல்லி , அழுத்தி மூடினார் .
பிறகு................? என்பது போல்  அவரையே ராசி பார்க்க . டிஷ் வாஷர்  மேடை மேல்  காதை  வைத்து சத்தம் வருகிறது பார் என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

சத்தமா.....குழம்பிக் கொண்டே காதை  வைத்தாள்  ராசி.

பில்  வாங்கிக் கொண்டு  அவரை அனுப்பிய விஷ்ணு, ராசி என்ன செய்கிறாள்  என்று பார்க்க வந்தார்.
ராசியோ ,காதை டிஷ் வாஷர் மேடை மேல்  வைத்துக் கேட்டு விட்டு ,
"அட  .......இங்கிருந்து தான் "கடமுடா" சத்தம் வருகிறதா?"என்று  சத்தமாக  (தனக்குள்)சொல்லிக் கொண்டிருந்தாள்  .

" வேறு எங்கிருந்து வருவதாய் நீ நினைத்துக் கொண்டிருந்தாய் ? " விஷ்ணு கேட்க

' ஒன்றுமில்லை ' என்று பதில் வந்தது ராசியிமிருந்து.

"உண்மையை சொல்வானேன்.  அதுவும் இவரிடம் ......சொல்வது, பிட் நோட்டீஸ் அடித்துப் நியுஸ் பேப்பர் நடுவில்  வைத்து வீடு வீடாக  விநியோகிப்பதற்கு சமம்  "நினைத்துக் கொண்டாள் ராசி)

விஷ்ணுவிற்கு உண்மைப்  புரியவில்லையோ.......
ஆனால் உங்களுக்குப் புரிந்திருக்குமே.

Wednesday 19 August 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு--5







" அம்மா,  இன்றைக்கு  பிசிபேளா செய்யேன் " என்று ராஜேஷ்  சொல்லவும் ராசியும்  அதற்கு  வேண்டிய   சாமான்கள் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள

" சாம்பார் வெங்காயம் இல்லையேடா .  கிடைக்குமா? " என்று  ராசி கேட்க அதெல்லாம் கிடைக்கும் . அப்புறம் .....என்று ராஜேஷ் கேட்கவும், முருங்கைக்காய் இருந்தால் நன்றாக வாசனையாக இருக்கும் .
"  என்று ராசி சொல்லவும் ,

 " எல்லாமே இருக்கும்மா .ஒன்று செய்யேன்.... என்னவெல்லாம் வேணும் என்று எழுதிக் கொடு . நான் வாங்கி வந்து விடுகிறேன். "  ராஜேஷ் சொல்ல

ஆர்த்தி முந்திக் கொண்டு " பேசாமல் மாமியை அழைத்து சென்று விடுங்கள் அவர்களும்  இந்த ஊர் கடையைப் பார்த்தால் போலிருக்கும் . வேண்டுமென்பதை வாங்கிக் கொள்வார்கள் " என்று சொல்ல ராசியும் கிளம்ப ஆயத்தமானாள் .

பேரன் அர்ஜுன் ," நானும் தான் வருவேன் " என்று அடம் பிடிக்கவும், ராஜேஷ் அவனுக்கான பூஸ்டர்  சீட், ஸ்ட்ராலர், எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பினான். "

" இதெல்லாம் எதுக்குடா "-ராசி கேட்க ,

" அம்மா இந்த ஊரில் குழந்தைகளைத் தனியாகவோ, நம் மடியிலோ உட்கார வைத்துக் கொண்டு செல்வது குற்றம். அதனால் அவனுடைய இந்த சீட்டில் தான் உட்கார வேண்டும். "

" நம் குழந்தையை நம்  மடியில் வைத்துக் கொண்டால் ................ குற்றமா?   என்ன அமெரிக்காவோ போ ! " என்று அலுத்துக் கொண்டாள் .

குழந்தைகளை  மடியில் உட்கார வைத்துக் கொண்டு  , ஆசையாசையாய்  வேடிக்கைக் காட்டிக் கொண்டு  போகாமல் இதென்ன  கூத்து " நினைத்துக்  கொண்டாள் ராசி.

ஏறி  உட்கார்ந்ததும், அர்ஜுனை சீட்டில் உட்கார வைத்து பெல்ட் எல்லாம் போட்டு விட்டதும்  அவனும் சமர்த்தாக உட்காரவும், காரை ஸ்டார்ட் செய்தான் ராஜேஷ்.

ராசியோ வெளியே பார்க்காமல் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருந்தாள் . 
என்ன பாத்தி பாக்கறே " என்று ஆர்ஜுன் மழலையில்  கேட்க ," "ஒண்ணுமில்லேடா" என்று சுரத்தேயில்லாமல் பதிலளித்தாள் . அர்ஜுனை  இப்படி  அழைத்து செல்வது ராசிக்கு சுத்தமாகப் பிடிக்கவேயில்லை.

அப்பப்போ அர்ஜுன் வேறு தன்  சீட் பெல்ட்டை  கைகளால் இழுத்து இழுத்து லூஸ் செய்து கொண்டே வந்தான். இதை கவனித்துக் கொண்டே வந்த ராசி, சட்டென்று ரோட்டைப் பார்க்க  , வெறிச்சோடிக் கிடந்தது போகும் வழி. "சர் சர் என்று கார்கள் தங்களைத் தாண்டி,  வேகமாக போய்க் கொண்டேயிருந்தது.

ஒருவருக்கும் ஒருவரைக் கவனிக்கவும் நேரமேயில்லை என்று புரிந்தது.

பார்த்தாள்  ராசி. சட்டென்று சீட் பெல்ட்டை சத்தமில்லாமல் கழற்றி விட்டு , அர்ஜுனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு ஆசையாய் அணைத்துக் கொண்டாள்.  அர்ஜுன்  உதட்டின் மேல் சுட்டு விரலை  வைத்து ,உஷ்.........  என்று  சொல்லவும் , ராஜேஷ் திரும்பிப் பார்க்கவும் சரியாயிருந்தது.
பார்த்த ராஜேஷ் அரண்டு விட்டான்.
" அம்மா  ஏன் அவனை  இறக்கி விட்டாய்? மாட்டப் போறேன் நான் ......"

" பாவமாய் இருந்ததுடா ....."

" இப்போ எங்கே நான் நிறுத்துவது?......என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே  , பல கலரில்  லைட்டுகள்  டாலடிக்க ஒரு கார் இவர்கள்.  காரை மறிப்பது  போல் நின்றது.

" என்னடா ஆச்சு? "

" போலீஸ்  வந்திருக்கிறார்கள்."

" போலீசா? எதுக்கு?"

"  நீ அர்ஜுனை  அவன் சீட்டிலிருந்து  தூக்கி மடியில் வச்சிருக்கியே . அதுக்குத் தான். "

" அது ஒரு குத்தமா? ? என் பேரனை நான் மடியில் வச்சுக்கக் கூடாதா ?"

" அதெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. பேசாமல் இரு. செய்யறதையும் செஞ்சுட்டு......." ராஜேஷ் அலுத்துக் கொள்ள.

" அப்பொழுதுப் பார்த்து "கிணுங்....கிணுங்......"என்று செல்லமாய்  செல்போன்  சிணுங்க , அதைக் கவனியாதவன் போல்  ராஜேஷ் ஸ்டியரிங் மேல் வைத்தக் கையை  எடுக்காமல்  போலீஸ் காரையே   வெறித்துப்  பார்த்துக் கொண்டிருந்தான்.


 " ராஜேஷ் போன் அடிக்குதுடா " ராசி  சொல்ல

" எனக்கும் கேக்குது.  ஆனால்   நான் கையை  எடுத்தால் போலீஸ்  என் மேல் நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு  " என்று சொல்லவும்......அமைதியாகி விட்டாள்  ராசி.

அதற்குள் ஆஜானுபாகுவான போலீஸ்காரர் ஒருவர் நீல நிற உடையில் இவர்கள் காரைப் பார்த்து சர்வ அலட்சியமாக நடந்து வந்துக் கொண்டிருந்தார்.  தன்  இடுப்பில் ஒட்டியாணம் போல்  கட்டிக் கொண்டிருந்த உபகரனங்களை  சரி செய்து கொண்டே ராஜேஷைப் பார்த்து ," எதற்காக  உங்களை  நிறுத்தினேன் தெரியுமா? " என்று கேட்கவும், ராஜேஷ்  சமாதானமாக எதையோ சொல்ல  முயற்சிக்கவும், பின்னாலிருந்த ராசி சும்மா இல்லாமல்," தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில், " வாட் இஸ்  ராங்  ராஜேஷ் ?" என்று   கேட்கவும்,  போலீஸ்காரருக்கு  வந்ததே கோபம்.

போலீஸ்காரரின்  சிவந்த முகம் மேலும் ஜிவுஜிவுத்தது. 

அவர் கோப முகத்தைப் பார்த்து  , அர்ஜுன்  அழ  ஆரம்பிக்க, ராஜேஷ் ராசியை அடக்கி விட்டு போலீஸ்காரரிடம் மன்றாடிக் கொண்டிருந்தான்.

ஒரு வழியாக  அவனிடம்   ஃ பைனைத்  திணித்து விட்டு ,ராசியைப் பார்த்து, " நீங்கள் இருவரும் செய்திருக்கும் குற்றத்திற்கு என்ன தண்டனை என்று தெரியுமா?
 இவ்வளவு பெரிய குற்றம் செய்து விட்டு,  என்னைப் பார்த்து" வாட்  இஸ் ராங் ?  என்று வேறு கேட்கிறீர்கள் . இவர் செய்யும் முதல் தவறு என்பதால்  பாயிண்ட்ஸுடனும் ,  ஃபைனுடனும் மட்டும் விட்டு   விடுகிறேன் . என்று  ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளி விட்டு  "முதலில் அவனை (அர்ஜுனை)அவன் சீட்டில் உட்கார  வைக்கவும்" என்று  கம்பீரமான தொனியில்  மிரட்டி  விட்டு நகர்ந்தார்.

ராஜேஷ் இப்பொழுது ராசியைப் பார்த்து, " உன்  வாய் சவுடாலை எல்லாம் கொஞ்ச நாளைக்கு  நிறுத்தும்மா.  ஏதோ  அவருக்கு நல்ல மூட்  போலிருக்கிறது. நீ கேட்ட கேள்விக்கு அவர்  உன்னை  அவர் போலீஸ்  ஸ்டேஷனிற்கு  அழைத்துக் கொண்டு போயிருந்தால் என்ன செய்வே?" என்று கோபமாக  கத்தி விட்டு ," பிசிபேளாவும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம்   ." சொல்லி விட்டு அர்ஜுனைத் தூக்கி  அவன் சீட்டில் உட்கார வைத்து பெல்ட்டைப் போட்டு விட்டு வீட்டை  நோக்கி காரை செலுத்தினான்.


வீடு வந்து சேர்ந்ததும், இருவர் முகத்தைப் பார்த்ததுமே, விஷ்ணுவும் ஆர்த்தியும் அரண்டு போய்  " என்ன ஆச்சு , என்ன ஆச்சு ?" என்று பதறவும் ,  அர்ஜுன்  தன் மழலையில், போலீஸ்.........  கார்.......... என்று  புரிய வைக்க முயல...... ."

ராஜேஷ் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அவன்  அமைதியாக சிறிது நேரம் பிடித்தது. பிறகு விவரமாக எல்லாவற்றையும் ஆர்த்திக்கும் விஷ்ணுவிற்கும் விளக்கினான்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த ராசியோ தனக்கும் இதற்கும்  சம்பந்திமில்லாதது போல்  யாரிடமும் பேசாமல் அவள் பாட்டிற்கு சமையலறைக்கு சென்று  டிஷ் வாஷரில்  பாத்திரங்களை  லோட்  செய்ய ஆரம்பித்தாள் .

" அம்மாவிற்கோ  பட்லர்   இங்கலீஷ் தான் தெரியும். இதில் இந்த ஊர் போலீஸ்காரரிடம் வாக்கு வாதம் வேறு. இன்றைக்கு நாங்கள் தப்பியது எப்பவோ செய்த புண்ணியா பலன் தான் " என்று   ராஜேஷ் அலுத்துக் கொள்ளவும்.

விஷ்ணு," சரி எப்படியோ ஃ பைனுடன் கதை சுபமாக முடிந்ததே . அதை சொல்லு. " 
பிறகு தொடர்ந்தார்,"உனக்கு உங்கம்மாவின்  இங்க்லீஷ்  புலமை பற்றி இன்னும் விவரமாகத் தெரியணுமா? சொல்கிறேன்,கேள் அவள் ஹோட்டலில் காபி குடிக்கப் போன கதையை?

ஆர்த்தி எல்லா வேலையும்  அம்போ என்று விட்டு விட்டு கதை கேட்கும்  ஆவலுடன் (அதுவும் தன்  மாமியார் பற்றி)  என்னாச்சு மாமா ? என்று கேட்டுக் கொண்டே உட்கார,

" என்ன ஆச்சுத் தெரியுமா? " என்று சொல்ல ஆரம்பிக்கவும், போன்  கிணு கிணுக்கவும் சரியாயிருந்தது.  இந்திய நண்பருடன் விஷ்ணு போனில் பேச ஆரம்பித்தார்..

ராசியோ எதுவுமே நடக்காதது போல்  அர்ஜுனிற்கு  ராமர் கதையை  சொல்லி , சாதம் ஊட்டிக் கொண்டிருந்தாள்

அர்ஜுனும்  " அப்புறம்........................ என்ன ஆச்சு ? ராவணன்  சீதாவை  விட்டானா இல்லையா ? என்று வாய் நிறைய சாதத்துடன்  கேட்டுக் கொடிருந்தான்.

ஆர்த்தியோ , தன் மாமனார் போன் பேசி முடித்து விட்டு வர  ஆவலுடன் காத்திருக்க ..........

நானும் தான் .......ஏன்  நீங்களும் தான் என் அடுத்த பதிவிற்கும் வாங்களேன். ராசி காபி குடிக்க செய்த கலாட்டா தான்  என்ன என்று  தெரிந்து கொள்வோமே .........

image courtesy--google.

Friday 8 May 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு--4


 தொடர்ந்து  படிக்க / பார்க்க 

"விட்டலாச்சார்யா  வீடு "

விஷ்ணு பயந்து விட்டதாக ராசி சொல்ல
இதென்ன புதுக் கதையாய் இருக்கிறதே என்று ஆர்த்தி  நினைத்துக் கொண்டே,
" ஏன் ? என்னாச்சு? " என்கிற கேள்வியுடன்  தன கணவன் ராஜேஷைப் பார்த்துக் கேட்டாள் .

அதுவா ... ஒண்ணுமில்ல...........  என்ற ராஜேஷ் ஏதோ சொல்ல  முயல ...ராசி  விடுவதாயில்லை.

விஷ்ணுவிடம், " நிஜமாவே எனக்குப் புரியல. எதைப் பார்த்து நீங்கள் பயந்தீர்கள் "?

"நீ காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தால் , உனக்கும் அந்தப் பயம் வந்திருக்கும்."

" ஏதோ  பிசாசைக் கனடாப் போலேல்ல  உங்க முகம் வெளிறிப் போயிருந்தது  "

விஷ்ணு  கேட்டார் " ராசி நீ காரில் உட்கார்ந்திருக்கும் போ து என்ன வேடிக்கைப்   பார்த்தாய் சொல்லு ?

ரிவர்ஸில் ஓடிக் கொண்டிருந்த மரங்களை ,    டிராபிக் அதிகம் இல்லாத ரோட்டை ,  அப்புறம்............கால்படியளவு சைஸில்  இருக்கும் டம்ளரில்  இருந்த கோல்ட்  காபியை  சிப்பிக் கொண்டிருந்த ராஜேஷை , ...  அவன் ஓட்டிக்  கொண்டு வந்த பயமுறுத்தும்  வேகம் எல்லாம் தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

" இதையெல்லாம் பார்த்தே  சரி .......  காரில் ராஜேஷ் எந்தப் பக்கம் உட்கார்ந்து கார் ஓட்டினான் என்று பார்த்தாயா? "

ராசி  விரலை கன்னத்தில் வைத்ததுக் கொண்டு "ஆமாமில்ல.....  என்னவோ  வித்தியாசமாக இருக்கே ன்னு நினைத்தேன்.
அட... ஆமாம்  . இந்தியாவில்  வலப்பக்கம்  இருக்கும் டிரைவர் சீட் இடப் பக்கம் இருக்கு இல்ல . இப்ப தான் புரியுது.  சரி ....அதுக்கு ஏன் நீங்க பதற வேண்டும்."

"அது மட்டும் தான்  வித்தியாசமாகத் தோன்றுகிறதா? இந்தியாவில் " Always drive left " என்பது இங்கே " Drive Right " . அதை கவனிக்கவில்லையா ராசி."

"  ஜன்னல் வழியாக  ப்ராக்குப் பார்த்துக் கொண்டு ஜாலியாக உட்கார்ந்திருந்தாயே  , எதிர்த்தாற்  போல் நீ பார்த்திருந்தால்.......  அரண்டு போயிருப்பாய் "

 " வலப்பக்க டிரைவிங் என்பதை ஒரு நிமிஷம் மறந்து விட்டு , இந்தியாவில் இருப்பதாக நினைத்துக் கொண்டு , ராஜேஷ்  'ராங்' சைடில் ஓட்டுகிறானே   என்று நான் குழம்பி  நிமிர்ந்தால் ,மிகப் பெரிய டிரக் ஒன்று தூரத்தில்  எதிரே வருவது தெரிந்தது .  என் குழப்பத்தில் நம் காரின் மேல் மோதப் போகிறதோ என்று கலங்கிப் போனேன்.. உனக்கு  என் பயம் புரியல  அவ்வளவு தான்."


ராஜேஷ்," அப்பா, உங்கள் பயம் ரொம்ப சகஜம். போன வாரம் என் நண்பன்  ஒருவரின் அம்மா இப்படித்தான்  பயந்து போனார்கள். " சொன்னான் .

அப்பொழுது ,"எல்லோரும் சாப்பிடலாம் வாங்க என்று கூப்பிட்ட ஆர்த்தியிடம்  ராசி விஷ்ணு இருவரும்," நாங்கள் பிறகு சாப்பிடுகிறோமே  கொஞ்சம் படுத்தால் தேவலை போல் இருக்கிறது" என்று சொல்லவும் ,

ராஜேஷும், ஆர்த்தியும் , " நீங்கள் இரண்டு பேரும் தூங்குங்கள் . நாங்களும் அர்ஜுனை அழைத்துக் கொண்டு வாராந்திர பர்ச்சேஸ்   முடித்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டு  சென்றனர்.

பாவம்...... இருவருக்கும் நல்ல அசதி. சரியான தூக்கத்தில் சட்டென்று ஆழ்ந்து விட்டனர்  ராசியும், விஷ்ணுவும்.. சன்னமான குறட்டை ஒலி விஷ்ணுவிடமிருந்து வந்து கொண்டிருந்தது. ஏசி சத்தம் அறையை நிரப்பிக்கொண்டிருந்தது.

சற்று நேரம் கழித்து........


"The temperature outside is......." என்கிற  ஏர் ஹோஸ்ட்ஸ் குரல்  காதில் விழ  ,  எதிரே வந்த டரக் டிரைவர் லாவகமாய் வண்டியைத் திருப்பிக்  கொண்டு செல்ல ...... ஒரே 'மச மச' என்கிறக் குழப்பமான கனவில் விஷ்ணு தவித்துக் கொண்டிருக்கும் போது,
 ,ஊ.....ய் ........ஊ.........ய்.........., என்கிற சத்தம் அவரை எழுப்பி  விட்டது.  பதறியடித்துக் கொண்டு எழுந்தார் விஷ்ணு.

 ராசி படுக்கையில் இல்லை . இவள்  தான் ஏதோ கலாட்டா செய்திருக்கிறாள் . என்று புரிய  பதட்டத்துடன் எழுந்து கீழே இறங்கி சென்றார் விஷ்ணு.

ராசி சமையலறையில் அப்பளம் பொரித்துக் கொண்டே  "திரு திரு " என்று பயந்து போய்  சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள் .

விஷ்ணு " ராசி  என்ன ஆச்சு ?" என்று பதற , ராசியோ கேசை சிம்மில் வைத்து விட்டு  , ஸ்விட்ச்  ஒன்றைத்  தட்டிக் கொண்டிருந்தாள் .

விஷ்ணுவோ எங்கோ மேலே பாரத்து, சத்தம் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்.

" என்ன செய்கிறீர்கள்?" என்று ராசி விரட்ட அவர் பங்கிற்கு அவரும் ஏதேதோ ஸ்விட்சைத் தட்டி  விசில் சத்தத்தை  நிறுத்த முயன்றனர்.

" என்னமோ போங்க என்ன அமெரிக்காவோ ? பாருங்களேன்.... ஸ்விட்சை 'ஆன்' செய்தால் லைட் 'ஆப்' ஆகிறது. 'ஆப்' செய்தால்  'ஆன்' ஆகிறது. எந்த புத்திசாலி எலக்ட்ரீஷியன்  வீட்டிற்கு  வயரிங்  செய்தானோ....... ஒரு ஸ்விட்ச் பாக்கியில்லாமல்  எல்லாமே உல்டா செய்திருக்கிறான் " ராசியின் குரலில் இருந்தது அலுப்பா, கோபமா புரியவில்லை விஷ்ணுவிற்கு . 

என்னென்னவோ  செய்தும் , ராசி விஷ்ணு இருவராலும்  விசில் சத்தத்தை  அடக்க முடியவில்லை. 


கடைசியாக விஷ்ணு  மேலே இருக்கும் 'ஸ்கை லைட் ' டைப்  ( சூரிய வெளிச்சம் வருவதற்காக மேற் கூரையின்  கண்ணாடி ஜன்னல் ) பார்த்து " யாருடா அது என் ராசியைப் பார்த்து  விசிலடிக்கிறது? தைரியம் இருந்தால்  என் முன்னாடி வாடா " என்று தன்  சட்டைக் கைகளை மடித்துக் கொண்டு ,சண்டைக்குத் தயாராவது போல் கிண்டலடிக்க ....

"ஆமாம் . இது ஒண்ணு தான் குறைச்சல். இந்த விசிலை எப்படியாவது நிறுத்தப் பாருங்கள் என்று சொன்னால் ...... இந்த ரணகளத்திலும்  உங்களுக்குக் கிண்டலடிக்கத் தோன்றுகிறது ......?" என்று ராசி பல்லைக் கடித்துக் கொண்டு முறைக்க ......

திடீரென்று " The traffic in Route I-27 is heavy and...... " என்கிற ஆண்  குரல் ஒன்று ஒலிக்க, ராசி விஷ்ணு இருவருமே அரண்டு  போய் திரும்ப , டிவியில்  ஒருவர் பேசிக் கொண்டிருந்தார்.. ( இருக்கிற ஸ்விட்சையெல்லாம் தட்டி விட்டுக் கொண்டிருந்ததன் விளைவு).

ராசி ஸ்விட்சை  அணைக்க முயல......விஷ்ணு ," வேண்டாம்  ராசி. வேண்டாம்  எதையாவது தட்டப் போக  விட்டலாச்சார்யா படம் போல் யாராவது மேலேருந்து சட்டென்று குதித்து விடப் போகிறார்கள்  ......" என்று மீண்டும் கிண்டலடிக்கவும்,  ராஜேஷ் ஆர்த்தி உள்ளே வரவும் சரியாயிருந்தது.


உள்ளே நுழைந்தவுடன், இருவரும்  சர்க்கஸ் கூடார உதவியாட்கள் போல் களத்தில் இறங்கினார்கள்.
ஆர்த்தி  சமையல்;அறைக்குள்  நுழைந்து முதலில் கேசை அணைத்து, புகை போக்கியை ஆன் செய்து, ஜன்னலேல்லாம் திறந்து வைத்தாள் . 
அதற்குள் ராஜேஷ்  ஒரு துண்டை எடுத்து  ஸ்மோக் டிடெக்டர் அருகில் விசிறிக் கொண்டே, ஸ்டுலை  இழுத்துப் போட்டு மேலேறி  ஸ்மோக் டிடெக்டரின் பேட்டரியை கழட்டவும், விசில் சத்தம் நிற்க, ...  ராசியும், விஷ்ணுவும், எல்லாவற்றையும் ஆச்சர்யமாகப் பார்க்க, பிறகு இருவருக்கும் ஸ்மோக் டிடெக்டர்  பற்றிய  தகவலை இருவருக்கும் சொல்ல, 

ராசி," புகையை  கண்டறியும் கருவி தானா எங்களைப் பாடாய் படுத்தியது." என்று பெருமூச்சு விட்டாள் .  .

பிறகு ராஜேஷைப் பார்த்து," ஏண்டா ... உங்கள் வீட்டு வயரிங் செய்த  எலக்ட்ரிஷியன் கைகளுக்கு தங்கக் காப்பு தான் போட வேண்டும் . "

"ஏன்மா?"  ராஜேஷ் கேட்க,

" பின்னே ஒரு ஸ்விட்ச் விடாமல் எல்லாவற்றையும் தலை கீழாக போட்டு வைத்திருக்கிறானே . அதற்கு சொல்கிறேன்."

ராஜேஷும், ஆர்த்தியும் வாய் விட்டு சிரித்து விட்டு,

"அப்படி நீங்கள் தங்கக் காப்பு போடுவதானால் இங்கே இருக்கும் எலக்ட்ரிஷியன்கள் எல்லோருக்கும் நீங்கள் போட வேண்டும்" என்று ஆர்த்தி சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு , சுவிட்ச் ரகசியத்தைப் புரிய வைத்தாள் .

இன்னும் என்னென்ன ஆச்சர்யங்கள் இருக்கோ தெரியலியே என்று ராசி முணுமுணுக்க , ஆர்த்தியோ , இவர்கள் இங்கு இருக்கும் வரை நமக்குக் கொண்டாட்டத்திற்குக் குறைவிருக்காது போலிருக்கிறதே  என்று நினைத்துக் கொண்டாள்.

ஆமாம். ஆர்த்தி நினைப்பது உண்மை தான் என்று நீங்களும் போகப் போக உணர்வீர்கள் பாருங்களேன்.
தொடர்ந்து வாருங்கள்....


Sunday 19 April 2015

"வலை"யைக் காப்பாற்றுவோம்!




google image 

" ராசி  இங்கே பார் உன் ஆட்டம் க்ளோஸ்." காலையில் ராசியின் சூடான காபியை குடித்துக் கொண்டே  விஷ்ணு  கத்தினார்..

ராசிக்கு ஒன்றும் புரியவில்லை. தனக்கும் காபியை  கலந்து கொண்டு வந்து விஷ்ணு அருகில் அமர்ந்து பேப்பரில் எட்டிப் பார்த்தாள். பேப்பரில் என் பேர் வந்திருக்கிறதா? எதற்கு இவர் இப்படிக் கத்துகிறார்.. பதிவுலகில் ஓரளவிற்கு  என்னைத் தெரியும். பேப்பரில் வரும் அளவிற்கு நான் பிரபலமாகி விட்டேனா? என்ன செய்தோமோ தெரியவில்லையே! இது தான் விபரீத ராஜயோகம்  என்பதோ   என்று நினைத்துக் கொண்டே ,விஷ்ணுவைப் பார்த்து,

" எங்கே என் பெயர் வந்திருக்கு? "

" அவ்வளவு ஆசையா உனக்கு ? உன் பேர் பேப்பரில் வேற வரணுமா? இப்ப தானே சொன்னேன் உன் ஆட்டம் க்ளோஸ்னு "

" சொல்றதை கொஞ்சம் புரியும்படியா  சொன்னாத் தானே ."

 "நல்லாவே புரியும்படியா சொல்றேன்."

" நேற்று உன் தோழி  சுருதி வீட்டில் என்ன சாம்பார்? " விஷ்ணு கேட்க

" வெண்டைக்காய் சாம்பாரும் சேப்பங்கிழங்கு   ரோஸ்டும் " பதில் சொன்னாள்  ராசி.

எப்படித் தெரியும்?

நாங்க தான் " Whats app, viber, facebook " எல்லாத்திலேயும் இருக்கோமே. ஒன்றில் அவளை  ஆன்லைனில் காட்டலைனா  இன்னொரு  சோஷியல் நெட்வொர்க்கில் பார்த்துக்  கேட்டு விடுவோமே."

" அதற்குத் தான்  வேட்டு என்கிறேன். "

" எப்படி? "

" இனிமேல் இதுக்கெல்லாம் காசு "

" என்ன உளறுகிறீர்கள்? அதெல்லாம் ஒன்னும் இருக்காது. "

" நிஜமாத்தான் ராசி. "

" Whats app, facebook, skype, viber, facetime  எல்லாத்தையும் உபயோகிக்க வேண்டுமானால் இனிமேல் பணம் கட்ட வேண்டியிருக்கும் . நான் சொல்லவில்லை. நம்  Trai  அமைப்பை  ISP (Internet service providers)  கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ."

" அட......ராமா....! "

" கூப்பிடு ,ஸ்ரீராமனை , அவர் தான் இதெயெல்லாம் சரிபடுத்தியாகனும்.
இன்னும் இருக்கு . உனக்கு வயிற்றில் புளி  கரைக்கும் செய்தியை சொல்கிறேன்."

" இன்னுமா....?. "

" ஆன்லைனில்  வாங்கித் தள்ளுகிறாயே  அவர்களும் இனிமேல் காசு கேட்பார்கள். "

" யாரு ...Flip Kart, Jabong, Askme Bazaar......etc போன்றவர்களா? "

" நாம் என்ன இலவசமாவா  வாங்குறோம்.அதான் credit card இல்லைனா   COD அப்படித் தானே வாங்குகிறோம்.  காசு கொடுத்து தானே வாங்கறோம்."

இரு ராசி உனக்கு புரிய வைக்கிறேன்.

" நீ எப்படி இணையம் வருகிறாய் ? internet  வழியாகத் தானே "

" ஆமாம் . நம் வீட்டில் தான் ஏர்டெல் கனெக்ஷன் இருக்கிறதே ."

" கரெக்டா பாயிண்டிற்கு வந்துட்டியே  ராசி. லேப்டாப்பை திறந்தவுடன்  எந்த சைட்டிற்குப் போகிறாய் ? உதாரணத்திற்கு  " google " என்று வைத்துக் கொள்வோமே. google எந்த ISPஇல், எந்த பேக்கேஜில்   வாங்கினால் கிடைக்கும் என்று பார்த்து  கனெக்ஷன் வாங்க வேண்டும்  இல்லையென்றால் எதை எடுத்தாலும் googleஇடம்  பஞ்சாயத்திற்கு செல்கிறோமே  அது நடக்காது."

இதே சட்டம் தான் flipkart, jabong எல்லாவற்றிற்கும் .


" Flipkart , amazon, jabong  போன்றவைகளும்  இது போல் ஒரு குறிப்பிட்ட   ISP இல் நீ இன்டர்நெட் கனெக்ஷன் வாங்கினால் தான் கிடைக்கும் . ஏன்னா  அவர்கள் அந்த ISPயுடன் உடன்படிக்கையில் இருப்பார்கள்.  "

" என்ன பெரிய உடன்படிக்கை ? எல்லாம் பணம் படுத்தும் பாடு. " அலுத்துக் கொண்டாள்  ராசி.

 " அப்படின்னா  ஓசை படுத்தாமல் ஆன்லைனில் வாங்கும் பொருட்களின் விலை ஏறுமே ."

"  இந்தப் பக்கம் இன்டர்நெட் கணெக்ஷனிற்குப்  பணம் . அந்தப் பக்கம் வாங்கும் பொருட்களுக்குக் கூடுதல் காசு. இதைத்  தான்  மத்தளத்திற்கு இரு பக்கமும் இடிஎன்று சொல்வதோ?என்னமோ போங்கள் " என்று சொல்லி விட்டுத்  திரும்பியவள்,

" ஆமாம் ... பொழுதுக்கும் பாட்டுக்கும்  உட்கார்ந்து உங்கள் நண்பர்களுடன் அரட்டை  அடிக்கிறீர்களே  அதற்கு ஒன்றும் ஆகாதா ?"

"அதான்....சிட்டுக் குருவி  தூது போவதைத் தான் சொல்கிறேன்."

" சிட்டுக்குருவி தூதா ....ஓ  ட்விட்டரைத் தானே சொல்கிறாய்? அதற்கு மட்டும் விதி விலக்கா என்ன " என்று விஷ்ணு சொல்லி விட்டு நண்பர்களுடன் வம்படிக்காமல் எப்படி இருப்பது  என்கிறக் கவலையில் ஆழ்ந்தார்.

" போச்சு ..... பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் எல்லாம் போச்சா ? " கவலையில் ஆழ்ந்தனர்  ராசி விஷ்ணு தம்பதி.

 " குக்கூ ...... " நீண்ட விசில் சத்தம் விஷ்ணுவின் செல்பேசியிலிருந்து .

" ரமேஷிடமிருந்து  செய்தி வந்திருக்கு என்று சொல்லிக்கொண்டே whatsapp செய்தியைப் படிக்க ஆரம்பித்தார் விஷ்ணு."

" ராசி இங்கே பார் நம்முடைய  வலையை சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்ற ஒரு உபாயம் இருக்கிறதாம்  . ரமேஷ் செய்தி அனுப்பியிருக்கிறார். "

என்னவாம் ?
"ஒரு பெட்டிஷன் போட வேண்டுமாம். இது வரை இரண்டு லட்சத்திற்கு மேலான இணையப்  பயனீட்டாளர்கள்   கையெழுத்து இட்டுள்ளார்கள். நாமும் போட்டு விடலாமா ராசி. "

ஆஹா ... எங்கே  போட வேண்டும் .

" இதோ இங்கே தான்  Net Neutrality petition . "

" இன்னும் விவரம் தெரிய வேண்டுமென்றால் http://savethe internet.in க்ளிக் செய்து படிக்கலாமாம் . அங்கேயும்  TRAI க்கு நம் கருத்துக்களைப் பதியலாமாம். "

எதற்கும் படித்துப் பார்த்து விட்டே கையெழுத்திடுவோம்  என்று தீர்மானித்தனர் ராசி விஷ்ணு தம்பதிகள்.

ஆமாம். ... இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் பெட்டிஷன் போட்டாச்சா.?
சீக்கிரம் பெட்டிஷன் போடுங்கள் ,TRAI ற்கும் உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.  விரைந்து  செயலாற்றுவோம். 

எல்லோரும்  ஒன்று கூடினால்   கண்டிப்பாக "வலை"யைக்  காப்பாற்றி விடலாம்.

வாருங்கள்.....ஒன்று கூடுவோம் ! வலையைக் காப்பாற்றுவோம்.!

Friday 27 March 2015

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --3.

அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு --2  படிக்க இங்கே க்ளிக்கவும்.

தொடர்ந்து  படிக்க:  
இதோ  ட்ராலி  ட்ரபிள் ?
 
google images

" என்னடா ராஜேஷ் இது? தரையெல்லாம் மரமா? " கேட்டுக் கொண்டே மகன்  வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்  ராசி.

" தரை மட்டுமில்லைம்மா,  வீடே  மரம் தான் ." என்று மகன் சொல்லி முடிப்பதற்குள்,  பேரன் அர்ஜுன்,  ராசியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அவனுடைய  பொம்மைகளை  காட்ட அழைத்து சென்று விட்டான்.

மருமகள் ஆர்த்தி, காபிப் போட்டு விஷ்ணுவிடம் கொடுத்து ," மாமா காபி சூடாக இருக்கிறது  சாப்பிடுங்கள்." என்று சொல்லவும் விஷ்ணு  காபியை வாங்கி மெதுவாக குடிக்க ஆரம்பித்தார்.  

" அப்பாடி  ... இந்தக் காபி குடித்து இரண்டு முழு நாட்களாகி விட்டன ."என்று சொல்லவும்,

ஆர்த்தி  ," ஆமாம் மாமா.  ப்ளைட்டில் காபி, வாயில் வைக்க வழங்காது " என்று சொன்னாள் .
ராஜேஷ் அவர்களின் பயண  சௌகர்யங்களைப் பற்றிக் கேட்கவும் ,

விஷ்ணு மகனிடம்," ஏண்டா  இங்கே ஏர்போர்ட்டில்  ட்ராலிகளுக்கு  பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல மாட்டியோ? " கேட்டார். 

" ஏன் என்ன ஆச்சு? "

" அதை ஏன் கேட்கிறாய்? உன்  அம்மா அடித்த லூட்டி இருக்கிறதே .....  

" என்ன ஆச்சு மாமா "என்று ஆர்த்தி கேட்டுக் கொண்டே   சோபாவில் அமர ....

" கன்வேயர் பெல்ட்டில் மௌன ஊர்வலமாய்  நகர்ந்த பெட்டிகளிலிருந்து எங்களுடையதைப் பார்த்து எடுத்து தரையில் வைத்து விட்டு ட்ராலி  தேடினோமா...."

ஒரு ஓரமாய் ட்ராலிகள், நான்கைந்து தான், அதிகமில்லை  கைகோர்த்துக் கொண்டு  ஜாலியாய்  நின்று கொண்டிருந்ததைப் பார்த்தோம்.

உடனே  ராசி ," நீங்கள் பெட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள் நான் போய் எடுத்து  வருகிறேன் " சொல்லி விட்டு  ட்ராலியை  எடுக்கப் போனாள் .

அங்கே போய் ட்ராலியை இழுத்தால்  வர மாட்டேன் என்று அடம் பிடித்தது  ட்ராலி.

அதற்குள் ," ஐயையோ, $5 /- நோட்டைப் போட்டால் தானே வரும் . செக்யுரிட்டி  பார்த்திருந்தால் வம்பாயிருக்குமே."  ராஜேஷ் இடை மறிக்க..

" ஆமாம்......அதையெல்லாம் இப்போ வந்து சொல்லு, எல்லாம் முடிந்த பிறகு. " என்றார் விஷ்ணு.

" கேளு முழு கதையையும் ... " தொடர்ந்தார்  விஷ்ணு. 

" ராசி ட்ராலியை இழுக்க, அதுவோ  தன்  நண்பர்களை விட்டு விட்டு வர மாட்டேன் என்பது போல்  அசைந்து கொடுக்காமல் இருக்க , உன் அம்மா விடுவாளா ? இன்னும் வேகமாய் இழுக்க , அப்போ நீ பார்த்திருக்கணும். உன் அம்மாவுக்கும்  ட்ராலிக்கும்,அங்கே  ஒரு " டக் ஆஃப்  வார் "  நடந்துக் கொண்டிருந்ததை .

 (மாமனாரின் நகைச்சுவை  சிரிப்பை  வரவழைக்க ... , ஆனாலும் ஆர்த்தி   சற்று அடக்கியே  சிரித்தாள்.)

 அந்த சமயம் பார்த்து , ஆஜானுபாகுவாக  இடுப்பில் ஒட்டியாணம் போல் வாக்கி டாக்கி, துப்பாக்கி , சகிதமாய்  போலீஸ்  என்று நினைக்கிறேன் வந்து ," மே ..........ம் " என்று  கத்தினாரே பாக்கணும்  உன் அம்மா வெலவெலத்துப் போய்  விட்டாள் . 

" மாமா , நீங்கள்  மாமியின் உதவிக்குப் போயிருக்கலாமே " சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு  கேட்டாள்  ஆர்த்தி.

" என்னைத் தான்  அவள் பெட்டிக்குக் காவலாக  நிறுத்தி வைத்து விட்டாளே . இங்கேருந்து என்னால் பார்க்க மட்டுமே முடிந்தது."

" அப்புறம் என்ன ஆச்சு? " கதை கேட்கும் ஆர்வத்துடன் சிரித்துக் கொண்டே ஆர்த்தி  கேட்க,

" உன் மாமி வெல  வெலத்துப் போனாள்  என்பது நிஜம் தான்.  ஆனால் மிரட்டின போலீசிடம் தைரியமாக  " ட்ராலி  .... " என்று இழுக்க ,

அவர் " யு வாண்ட் ட்ராலி ? கிவ்  5 டாலர் ." என்று சொல்ல இவள் கொடுக்க வேண்டியது தானே . அதை  விட்டு விட்டு
அவரிடம்  போய் " வை ?"(why) என்று கேட்டாளே  பார்க்கனும்.

" என்னென்ன கேஸ் இவள் மேல் பாயப் போகிறதோ? எந்த ஜெயிலில் களி........ இல்லையில்லை சீரியல் திங்கப் போகிறாளோ " என்று நான்  பயந்த நேரத்தில்

ஆபத் பாந்தவனாய் அங்கு வந்த நம் சென்னை வாசி ஒருவர்  உன் அம்மாவிடம்  எல்லாம் விளக்கி உன் அம்மாவைக் காப்பாற்றினார்னா  பாத்துக்கோ  என்று சொல்லி முடிக்கவும் 

ஆர்த்தி  தன சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு போவதை  விஷ்ணு கவனித்தார்.  

" எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு தான் இருந்தேன். நீங்க என் புகழ் பாடியது இருக்கட்டும்....." என்று ராசி சொல்லிக் கொண்டே வந்தாள் .
,
ராஜேஷ் ," ஏம்மா...ட்ராலிக்குப்   பணம் கேட்டால் கொடுக்க வேண்டியது தானே. அதை விட்டு விட்டு  அவரிடம் என்ன வாக்குவாதம் ? என்று கேட்க ..

"நான் கண்டேனாடா  இங்கேயெல்லாம் ட்ராலிக்குப்  பணம் கட்ட வேண்டும் என்று .அவர் லஞ்சம்  கேட்கிறார் என்று நினைத்தேன் ."

" ட்ராலிக்கு லஞ்சமா ......." ராஜேஷ், ஆர்த்தி, விஷ்ணு எல்லோருமே அசந்து நிற்க விஷ்ணு சொன்னார்," ஆக போலிசிடமிருந்து இன்று  நீ   தப்பியது , நிஜமாவே உன் பூர்வ ஜென்ம புண்ணிய   பலன் என்று சொல்லு. "

உடனே ராசி, " நீங்கள் மட்டும் என்னவாம்?  காரில் உட்கார்ந்துக் கொண்டு   அலறவில்லை.... " 

விஷ்ணு அலறினாரா.......... ?அவர் எதற்கு அலறினார்? .................(நீங்கள் நினைப்பது புரிகிறது)
இந்த ஜோடி  பயங்கர லூட்டி அடிக்கிறதே  என்றும்  தோன்றுகிறதா ?
தொடர்ந்து வாருங்கள்........                               ( சொல்கிறேன் )

Monday 16 March 2015

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை !

இந்தக் கதையை நான் எழுதி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருக்கும். இதை வெளியிடாமல்  தூங்கினாயா என்று கேட்காதீர்கள் . இந்தக் கதையைப் போட்டி ஒன்றிற்கு அனுப்பியிருந்தேன். கதைத்  தேர்வாகவில்லை.
அதனால் என்ன  ? நாமே வெளியிட்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது sirukathaigal.com தளத்தைப் பற்றித்  தெரிய வந்தது.அவர்களுக்கு அனுப்பி வைத்ததில் அவர்கள் தளத்தில் என் கதையை குடும்பக் கதை என்கிறப் பிரிவில்   வெளியிட்டுள்ளார்கள் .
sirukathaigal.com தளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீங்களும் படித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன்.
இதோ

அப்பாவிற்குக் கிடைத்த தண்டனை   


  
google image


மைதிலி  கோலத்தைப்போட்டு விட்டுத் திரும்பினாள் . மைதிலியின் வயது என்னவோ ஐம்பது தான்.. ஆனாலும் வாழ்க்கையின் பாடங்கள் அவளுடைய வயதை அறுபதைத் தாண்டி சொல்லத் தோன்றியது.

கோலத்தின் அழகைப் பார்த்ததும்  தன்னைப் பிரிந்த  கணவனின் நினைவு ,மைதிலியை  அழுத்தியது.அவனுக்கு இவள் கோலத்தையும் பிடிக்கும், இவள் கோலம் போடும் அழகும் படிக்கும். மைதிலிக்குத் திருமணம் ஆன போது அவளுக்கு வயது பத்தொன்பதைத் தாண்டவில்லை. இயற்கை அவளுக்கு அழகை வாரி வழங்கியிருந்தது. எழுதி வைத்தாற்  போலிருந்த கண்ணும், ஒற்றைக்கல் ஜொலிக்கும் மூக்குத்தியும்  அவள்  அழகை இன்னும் கூட்டிக் காட்டின. கணவன்  ராமனுக்கு, அவன் மனைவி மேல் தாங்கொணாக் காதல், மற்றும் பெருமை என்றே சொல்ல வேண்டும். ராமன் மிகப் பெரிய வேலையில் இல்லை என்றாலும், கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தான். அந்தச் சம்பளத்தில் சிக்கனமாய் குடித்தனம் செய்து கொண்டிருந்தாள்  மைதிலி. மைதிலியின் மாமியாரும் கூடவே தான் இருந்தாள். மைதிலியின் அழகு  அவள் கண்ணை உறுத்தினாலும், தான் பார்த்து வைத்த பெண்  என்பதால்  சகித்துக் கொண்டாள். ராமனுக்கு  ஒரு தங்கை . அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி அதே ஊரில் வசித்து வந்தாள் . அவளுக்கு தன அண்ணியின் அழகும் , கைவேலை நேர்த்தியும் , கண்ணை உறுத்தி அவளைப் பொறாமைத் தீயில் தள்ளியது.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் , " அழகாக இருந்தாலே ஆபத்து தான் " என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். அவள் தன்னைத் தான் சொல்கிறாள் என்று மைதிலிக்குப் புரிந்தாலும்  , சிரித்துக் கொண்டே நகர்ந்து விடுவாள் மைதிலி. அழகில் மட்டுமல்ல வாய் பாட்டிலும்  வித்தகி மைதிலி. " தாரமர் கொன்றையும் " என்று அபிராமி அந்தாதி பாட ஆரம்பித்தாளானால்,  வீடே  அந்த சங்கீதத்தில் லயித்து விடும். மைதிலி மேல் ராமன் பெருமை கொள்வதில்  ஒன்றும் அதிசயமில்லை.அவ்வப்பொழுது அவளை இழுத்து அணைத்துக் கொள்வதிலும், சட்டென்று சமயலறைக்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவள் கன்னத்தில் இதழ் பதிப்பதுமாக  இருப்பான். நாணத்தினால் மைதிலி  முகம் சிவந்து  அவள் அழகைப்  பல மடங்குக் கூட்டும்.

அன்று, காலை எழுந்ததிலிருந்து  தலை  சுற்றுவது போலிருந்தது. கோலம்போட்டு விட்டு உள்ளே நுழையும் போது அப்படியே  வாசற்கதவில் தலையை   சாய்த்துக் கொண்டு கீழே அமர்ந்து விட்டாள் . உடனே அவளை  டாக்டரிடம் அழைத்து சென்றதில்  அவள்  தாயாகப் போகிறாள் என்கிற மகிழ்ச்சி செய்தி கிடைத்தது.  ஆனால்.....அதற்குப் பிறகு நடந்தவை எல்லாமே  கசப்பான நிகழ்வுகள்  தான். இந்த  அன்யோன்யமானத்  தம்பதிகள் மேல் யார் கண் பட்டதோ?

மைதிலி வாந்தியும், மயக்குமுமாய் இருந்த நாளில், ஒரு நாள் ராமன் ஆபீசிற்கு சென்று விட்டான். அவள் மாமியாரோ  கோவிலுக்கு.இவள் அப்பாடா என்று சற்றே கண்ணை  மூடிப்   படுத்திருந்தாள் .

" டிங் டாங் " காலிங் பெல் அடித்தது.

மெதுவாக மைதிலி நடந்து  போய் கதவைத் திறந்தாள். வெளியே நின்றிருந்தது  அவள் நாத்தனார், ஜெயாவின்  கணவன்  விஜய் .

" வாங்க " என்று கூப்பிட்டு விட்டு உள்ளே சென்றாள் . தலை  " கிறு  கிறு "  என்று சுற்றியது. தள்ளாடியபடியே சேரை இழுத்துப் போட்டு,  அவரை   உட்காரச் சொன்னாள் . விஜய்  கதவைத் தாளிட்டுக் கொண்டிருந்தான். மைதிலி  " சாத்த வேண்டாங்க.  அத்தை கோவிலுக்குப் போயிருக்கிறார்கள். இதோ வந்து விடுவார்கள் " என்று சொல்ல , அதற்கு விஜய் ," எனக்குத் தெரியும். அத்தை  அங்கே என் வீட்டில் தான் இருக்கிறார்கள்.அவர்களை அங்கேயே இருக்க சொல்லி விட்டுத் தான் வந்தேன் .ஜெயாவிற்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அவர்கள் அங்கு தான்  இருப்பார்கள். " என்று சொல்லி விட்டு," " உன் துணைக்கு நான் ".......என்று சொல்லும் போது தான் விஜய் இங்கு வந்தது, வேறு நோக்கத்தில்  இருக்குமோ  என்கிற சந்தேகம் தோன்றியது மைதிலிக்கு. அரண்டு போய்  விட்டாள்  மைதிலி. எதை சாக்கு வைத்தாவது, வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று நினைத்து  , " காபிப் போட  பால் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து பால் வாங்க வேண்டும், கொஞ்சம் நகருங்கள் " என்று சொல்ல, விஜய் அவள் கையை அழுத்தமாகப் பிடித்து," இந்த சந்தர்ப்பத்திற்காக  எவ்வளவு நாட்கள் காத்திருப்பேன், இப்பொழுது பாலும், காபியும் முக்கியமா? வா... உன் கணவன் வர எப்படியும் மாலை ஆகும் " என்று சொன்னவுடன் மைதிலி, தான் நன்றாக அவனிடம் அகப்பட்டுக் கொண்டது புரிந்தது.

பக்கத்து வீட்டிலிருப்பவர்களை கத்தி அழைக்கலாம் என்று நினைத்தால்,
 " கூப்பாடுப் போட்டுத்  தகராறு செய்தால், நீ தான் என்னை இங்கே  வரச் சொன்னாய் " என்று உன் மேலேயே பழி போடுவேன் என்று சொல்ல  மைதிலி செய்வதறியாது திகைக்க,  விஜய் அவளை நோக்கி நகர்ந்தான்.

மைதிலி சட்டென்று கையை உதறி விட்டுச்  சமையலறை நோக்கி ஓட , விஜய்  பின்னாடியே சிரித்துக் கொண்டே வர, அவள் கையில் கிடைத்தக் காய்கறிக் கத்தியால்  அவனைக் குத்துவது போல்  கையைக் கொண்டு போகவும், மீண்டும் அழைப்பு மணியின் சத்தம். மைதிலிக்கு  அது அழைப்பு மணியாக ஒலிக்கவில்லை.கோவில் மணியாகவே இருந்தது  . விஜய்யும் சட்டென்று சுதாரித்துக் கொண்டு கதவைத் திறக்கவும், வெளியே அவள் மாமியாரும், ஜெயாவும், நின்றிருக்க  , மைதிலி ஓவென்று   மாமியாரைப் பார்த்து அழுது கொண்டே சொல்ல ஆரம்பிக்கவும் , விஜய் முந்திக் கொண்டான்.

" உங்களை  எல்லாம்  பார்த்ததும் அழுது புலம்புகிறாள் . இவள் தான்  என்னை யாரும் இல்லாத சமயத்தில் வரச் சொன்னாள்  " என்று பழி சொல்ல , அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று  உங்களால் யூகிக்க முடியும்.  ராமன் அவசரமாக ஆபிசிலிருந்து வரவழைக்கப் பட , மைதிலிக்கு  எதையும்  சொல்ல சந்தர்ப்பம் அளிக்காமல் , வேசி என்று தீர்மானித்து , ராமனைக்  கொண்டே மைதிலியை அவள் அண்ணன் ஊருக்கு அனுப்பி வைக்கப் பட்டாள் .கணவன்  ராமன்  தன்னை சந்தேகப்படுவது தான் மைதிலியை மிகவும்  பாதித்தது.

அதற்குப் பிறகு மைதிலி, அவள் அண்ணன் வீட்டில் வேண்டாத விருந்தாளியானாள் . அக்ஷயா பிறந்தாள் .அக்ஷயாவிற்கு ஒரு வயது வரை பல்லைக் கடித்துக் கொண்டு  காலம் தள்ளிய   மைதிலி  தனக்கு அப்பா, அம்மா இல்லாத சங்கடத்தை பூரணமாக உணர்ந்தாள் .  சமையல் வேலைக்கு வக்கீல் வீட்டில் ஆள் வேண்டும் என்று கேட்கவும், அங்கே அக்ஷயாவுடன் சென்று விட்டாள் . அண்ணனிடம் தன் முடிவைப் பற்றி சொல்லிவிட்டுத்  தான் கிளம்பினாள் . அதிகம்  மறுப்புத் தெரிவிக்கவில்லை அவள் அண்ணன்.

" திக்கற்றவருக்குத் தெய்வமே துணை  ". அந்தத் தெய்வமே  வக்கீலின் மனைவி ரூபத்தில்  இருந்தது அவள் செய்த புண்ணியமே. அதுவும் அவர்களுக்கு குழந்தையில்லாதக் குறையை  அக்ஷயா  தீர்த்து வைக்க  இருவரையும் அவர்கள் வீட்டு  அவுட் ஹவுஸில்  தங்க வைத்துக் கொண்டார்கள். அக்ஷயா படிப்பு,  உடை என்று சகலமும்   வக்கீல் வீட்டு மாமி  உபயத்தில்  சிரமமில்லாத வகையில் முடிந்தது.ஆனால் அவ்வப்பொழுது " அப்பா எங்கே " என்கிற அக்ஷயாவின்  கேள்விக்கு மட்டும் மைதிலியால் விடையளிக்க முடியவில்லை.அப்பாவின் பாசத்திற்கு மிகவும் ஏங்கித் தான் போனாள்அக்ஷயா.பள்ளியில் பெற்றோர் தினம், பிறந்த நாள்  என்று அவள் அப்பாவை  நினைவு கொள்ளாத  நாளேயில்லை எனலாம்.   அவ்வப்போது அவள் அண்ணன் அவளை வந்து பார்த்துப்  போகவும், மைதிலி வாழ்நாள் கரைந்து கொண்டிருந்தது. ராமனின் நினைவு  வராமல் இருக்குமா என்ன?  சில  சமயம் அவள் அண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்கவும் செய்தாள் .ஆனால் ராமன் இவளை சுத்தமாக  மறந்தே விட்டான் போலும்.


சிறிது நாள் கழித்து , அவனுக்கு வேறு திருமணம் ஆன செய்தியும் கிடைத்தது. அவள் அண்ணனோ , "  வக்கீல்   நோட்டீஸ் அனுப்பலாமா? . அதெப்படி முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணமா? "என்று குதிக்க , மைதிலி  தான் இனிமேல் அவனுடன் வாழப்போவதில்லை என்று சொல்லி அவனை  அடக்கி விட்டாள் .

வருடங்கள் பல ஓடி மறந்தன....

சரியான வயது வந்தவுடன் அக்ஷயா தன் அப்பா யாரென்றும், தங்களுக்கு இந்த நிலைமை ஏன்  என்றும் ஒருவாறு புரிந்து கொண்டாள். 


இப்போது ,அக்ஷயா  அழகிய இளம் பெண்ணாக, அம்மாவின் அழகையெல்லாம்  பிரதி எடுத்தாற்  போலிருந்தாள் . பொறியியல் படிப்புப் படித்துக் கொண்டே  வக்கீலுக்கு கணினியில்  உதவி செய்வாள் . அப்படி  அவள் கணினியில்  உதவும் போது,  வக்கீலின்  நண்பர் கண்ணில் பட, அவருடைய மகனிற்கு , அமெரிக்காவில் இருப்பவனுக்கு திருமணம் செய்து கொள்ள அக்ஷயாவும்  அமெரிக்கா  சென்றாள்.நல்ல குடும்பத்தில் அவள் வாழ்க்கைப் பட்டத் திருப்தியில்   , மைதிலி நிம்மதியாக வக்கீல்  வீட்டில் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள் . அவ்வப்பொழுது போனில் மகளின் குரல் வயிற்றில் பால் வார்க்கும்.

இப்பொழுது ஒரு மாதமாக முதுகு வலி, இடுப்பு வலியெல்லாம் தனக்கு வயதாவதை மைதிலிக்கு தெரியபடுத்துகிறது. அன்று எல்லா வேலையையும் முடித்து விட்டு, டிவியில் தனக்குப்ப் பிடித்த சீரியலைப் பார்க்க உட்காரும் போது, வாசலில் நிழலாடியது. யாரென்று பார்க்கப் போனாள் . தாடியும், மீசையுமாய், ஒட்டிய வயிறுமாய்,  ராமன் நின்றிருந்தான். மைதிலிக்கு, என்ன செய்வது, சொல்வது என்று புரியாமல்...திகைத்து நிற்க , மைதிலி ... என்று அவன் சொன்னவுடன் உருகித் தான்  விட்டாள்  மைதிலி. கண்களில் கண்ணீர்  ஆறாய்  பெருக அவனை உள்ளே உட்காரச்  சொல்லி, அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்து , விசாரிக்க ஆரம்பித்தாள்.

மைதிலியைத் துரத்திவிட்டு வேறு திருமணம் செய்து கொண்டதற்கு  நல்ல தண்டனை தனக்குக் கிடைத்து விட்டது என்றும், வந்தவளுடைய  நடத்தை சரியில்லாததால் , அவள் வேறு யாருடனோ சென்று விட்டதாகவும், அதற்குப் பிறகு தனக்கு, வாழ்க்கையில்  பிடிப்பு இல்லாமல் போகவும், வேலை  போய்,அவன் அம்மாவும் இறக்க இவன் அனாதையாயிருக்கிறான். 

மைதிலியின் இருப்பிடத்தை எப்படியோ தேடிக் கண்டு பிடித்து வந்து விட்டான். அவனுக்கு வயிறார சாப்பாடு போட்டு, பேனைப் போட்டு  தூங்கச் சொல்லி விட்டு  வக்கீல் வீட்டிற்கு சென்று விவரம் தெரிவிக்க சென்றாள் மைதிலி.


வக்கீலின்  மனைவி  அதற்குள் வந்து," மைதிலி, உனக்கு ஒரு நல்ல செய்தி. நீ அமெரிக்கா செல்ல விசா வந்து விட்டது. அக்ஷயா  அடுத்த  மாதத்திற்கு டிக்கெட் வாங்குவதாக சொல்லி  விட்டாள் . " என்று சொன்னதும், இவள் ராமனைப் பற்றிய விவரங்கள் சொல்லவும், அக்ஷ்யாவிற்கு உடனடியாகத் தெரிவிக்கப் பட்டது.

அக்ஷயா உடனே அவள் அம்மாவுடன் போனில் பேசி விவரம் அறிந்து கொண்டாள். " நீ தாய்மை அடைந்திருப்பதை கூட பொருட்படுத்தாமல்  உன்னை வெளியே அனுப்பியவரை என் அப்பா என்று சொல்லவே எனக்குப் பிடிக்கவில்லை..இவருக்காக நீ அமெரிக்கா வர மாட்டேன் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் டிக்கெட் வாங்கி அனுப்புவது உறுதி. நீ வந்து தான் தீர வேண்டும் " என்று முரண்டு பிடிக்க. , மைதிலி ராமனைப் பார்த்தாள் .

அவனோ அலமாரியில் இருந்த அக்ஷயா திருமண போட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தான். போனில் மைதிலி பேசிக் கொண்டிருந்ததையும் பார்த்தான். மகளுடன் பேச அவன் நினைத்தாலும் , அவள் அப்பா என்று ஏற்றுக் கொள்வாளா?இத்தனை நாட்கள் இவர்களைத் தவிக்க விட்டுவிட்டு  இப்பொழுது அவர்களுடன் வாழ்க்கையைக் கொண்டாட, அவன் மனது இடம் கொடுக்கவில்லை.என்ன  செய்வது? யோசித்தான்.

அன்றிரவு, சாப்பிட்டு முடித்தவுடன், மைதிலி உறங்கி விட்டாள்  என்று தெரிந்து கொண்டு  ஒரு பேப்பரை எடுத்து, " உன்னிடம்  நான் மன்னிப்பு கேட்கவே வந்தேன்,. இனி உன் வாழ்க்கையில் எந்த  சங்கடமும் என்னால் வர வேண்டாம்  ,அதனால் நான் முதியோர் இல்லம் ஒன்றிற்குப் போகிறேன்.  என்னைப் பார்க்க நினைத்தால் அங்கு வந்து பார்க்கலாம். உன் மகளுடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்துக் கொண்டே என் மீதி நாட்களைக் கழிக்கப் போகிறேன். அது தான் நீ என்னை மன்னித்ததற்கு அடையாளம் என்று சொல்லி  கடித்தத்தை முடித்திருந்தான். " அவள் முகம் திருத்தும் கன்னாடிக்கும் சுவற்றிற்கும் நடுவில் செருகி ,வைத்து விட்டு  போய் விட்டான்.

காலை எழுந்ததும், மைதிலியின் கண்ணில் இந்தக் கடிதம் தென்பட்டது. படிக்க, படிக்க  கண்ணீர் தரை தாரையாக  வழிந்துக் கொண்டிருந்தது. கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டேயிருந்தாள் . போன் மணியடித்து அவள் கவனத்தைத் திருப்பியது. போனில் அக்ஷயா," என்ன டிக்கெட் வாங்கிடலாமா ?"
என்று கேட்க, இவள் நடந்ததை சொன்னாள் . " அம்மா கவலைப் படாதே,நானும் ,அங்கு வரும் போது இருவருமாக அவரைப் போய் பார்க்கலாம்." என்று சொன்னாள் . அப்பா என்று சொல்வதை அவள் தவிர்த்தது மைதிலிக்குப் புரிந்தது. அக்ஷயா , அப்பா இல்லாததால்  பட்ட சிறு வயது அவமானங்கள் ,சங்கடங்கள் எல்லாம் தான் , அப்பா என்கிற வார்த்தையையே   அவள் வெறுக்கக் காரணம்,என்று மைதிலிக்குத் தெரியும்.   இந்தளவாவது இங்கு வரும் போது அவரைப் பார்க்கலாம் என்று சொல்கிறாளே என்று  சமாதானப் பட்டுக் கொண்டாள்.  

ஆனால் அக்ஷயா  அவள் அப்பாவை இந்தியா வரும் போது பார்ப்பாளா?

அக்ஷயா "அப்பா அப்பா "என்று ஏங்கும் போது ,அக்ஷயா எட்டி பிடிக்க  முடியாதத் தூரத்திலிருந்தான் ராமன். இப்போது அக்ஷயா,  ராமனின் கைக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கிறாள். ஆனாலும் அவளிடம் பேசக் கூட முடியாத நிலைமை அவனுக்கு.  

ஒரு அப்பாவிற்கு  இதை விடப் பெரிய தண்டனை இருக்க முடியுமா?

Tuesday 3 March 2015

காக்காக் கூட்டத்தைப் பாருங்க.........




அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க....

இந்தப்  பதிவைப் படித்து முடிக்கும் போது  உங்கள் மனதிலும்  மேற்கண்ட  கேள்வி  எழாமல் போகாது.

நான்கைந்து நாட்களுக்கு முன்பாக  முக நூலில்  காக்கையைப் பற்றிய ஒரு குட்டி விவாதம்  படிக்க நேர்ந்தது.
காகம்  ஏமாற்றுமா ?......... இல்லை  ஏமாறுமா  என்பதைப் பற்றித் தான் அந்த விவாதம் .

சின்ன வயதில் நாம் கேட்ட காக்கா கதையில் பாட்டியை  ஏமாற்றி விட்டு வடையைத்  திருடிய காக்கை , நரியிடம் ஏமாந்து விடுகிறது.  அதன் குணம் என்ன? ஏமாற்றுமா?....இல்லை ...... ஏமாறுமா? இதில் சற்றுக் குழம்பினேன் . இருக்கவே இருக்கிறாரே  நம் கூகுள் ...அவரிடம் கேட்போம் என்று பஞ்சாயத்திற்கு  அவரிடம் சென்று கேட்டதில்  எனக்குப் பதில் கிடைத்தது. ஆனால் அதைவிட  ஆச்சர்யங்கள் நிறைந்ததாய் இருந்தது நான் படித்த காகத்தின் உலகம். ஏழெட்டு வருடங்களே வாழும் காகங்கள்  எத்தனை புத்திசாலிகள்  என்பது வியக்க வைக்கும் விஷயம்.

காகத்தைப் பற்றி நான் அறிந்து அதிசயித்த சில விவரங்கள் இதோ :
எங்களுக்குத் தெரியாததா நீ எழுதி விடப் போகிறாய்  என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது. ஆனாலும் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. அதனால் பொறுத்தருளுங்கள்.


  • நம்முடைய இயற்கை அலாரம் டைம்பீஸ்  காக்கை தான் என்பதை எல்லோரும்  ஒத்துக் கொள்வீர்கள் தானே.
  • அதே போல் காலை  எழுந்தவுடன் அவசியம் ஒரு குளியலும் போட்டு விடும் காக்கை என்பது ஆராய்ச்சியாளரின்  கருத்து. காகமே, காக்காய்    குளியல் தான் குளிக்கும்  என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
  • மூளை, உடல் விகிதாசாரம்  பறவையினங்களிலேயே காகத்திற்குத் தான் அதிகமாம்.  என்ன தான் சொல்ல  வருகிறாய்? கொஞ்சம் புரியும்படியாக சொன்னால் தான் என்ன  என்று நீங்கள் கோபப்படுவது புரிகிறது. காகத்தின் மூளையின் அளவு மற்ற எல்லாப் பறவையைக் காட்டிலும் சற்றே பெரிது  என்று தான் சொல்ல வருகிறேன்.
  • பன்றி இறைச்சியை விடவும் காகத்தின் இறைச்சி ஆரோக்கியமான உணவாகும். ( பலருக்கும் விவேக்கின் ஜோக் நினைவிற்கு வரலாம்.)
  • காகத்தின்  கரைதலுக்கு  அர்த்தம் இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. சில  மனிதர்களைப் பார்க்கும் போது  நம்மைக்  கண்டுக்கொண்டதற்கு அடையாளமாக    தனித் தன்மையுடன்  கா....கா..... என்று கரைகிறது என்று  சொல்வது சற்றே வியப்பளிக்கும்  விஷயமாகும் .
  • காக்கை மற்ற விலங்குகளின்  உடம்பில் இருக்கும் அழுக்கை நீக்கும் என்பதுத் தெரியும்.  அது  பேன்  போன்ற ஒட்டுண்ணிகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள  என்ன செய்கிறது தெரியுமா? எறும்புகளைத் தன்  காலால் தேய்த்துக்  கொன்று, அதைத்  தன்  உடம்பு முழுதும்  சென்ட்டைப் போல் பூசிக் கொண்டு தன்னைக் காத்துக் கொள்கின்றன. .  
  • .ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக் காகங்கள்  மிகவும் அருமையாய் கடைப் படிக்கின்றன  என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.  விதி விலக்குகள் இருக்கலாம் .ஆனால் அது சொற்பமே. ஆக, அங்கே விவாகமும் இல்லை, விவாகரத்தும் இல்லை. குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லை. குழந்தைகள்  அனாதைகளாக ஆக்கப்படுவதில்லை. அத்தனை உன்னதமான ஒழுங்குக்குள் அவை வாழ்கின்றன.  குடும்ப ஒற்றுமை நம்மிடையே   சீர்குலைந்திருக்கும் இத்தருணத்தில் கண்டிப்பாக நாம் காகத்தைப் பார்த்துக்  கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று இது.  
  • அதே போல்  கருணைக் கொலைகளும் அவைகளிடையே சர்வ சகஜம் . என்ன ஒன்று.......... அது ஒரு கருணைக் கொலை என்று நமக்குப் புரிவதில்லை. அவ்வளவே. ஒரு காகம் அடிபட்டோ , அல்லது மரணிக்கும்  தருவாயில் இருக்கும் போதோ  நூற்றுக் கணக்கில் காகங்கள் அங்கே சூழ்ந்துக் கொள்வதைப் பார்த்திருப்போம். முதலில் காப்பாற்றவே முயல்கின்றன.  காப்பாற்ற முடியாத சமயத்தில், மரணிக்கும் தருவாயில் இருக்கும் காகத்தை மற்றக் காகங்கள் சேர்ந்து அலகாலேயே குத்திக் கொன்று சீக்கிரமே வைகுண்டத்திற்கு அனுப்பி  வைக்கின்றன.கருணைக் கொலைக்கு எந்த நீதிமன்றத்திலும் அவைகள் அனுமதி வாங்க வேண்டியதில்லை.

காகம் பானைக்குள் கல்லைப் போட்டு  நீர் மேலேழும்பியதும் தன் தாகம் தீர்த்துக் கொண்டக் கதை நமக்குத் தெரியும். 
இதை ஆராய்ச்சி செய்வதற்காக, ஆராய்ச்சியாளர்கள் காகத்திற்குத்   தண்ணீர்,  புழு , கல் எல்லாம் கொடுத்து  என்ன செய்கிறது என்பதை  வீடியோ எடுத்திருக்கிறார்கள். என்ன தான் செய்கிறது என்று பாருங்களேன். 




இந்த வீடியோவைப் பார்த்ததும்  என்   மனதில் தோன்றிய  கேள்வி,
" அதுக்கு சொல்லிக் கொடுத்தது யாருங்க? "


image &video courtesy--google 

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்