Saturday 28 November 2015

கொத்தங்குடியின் வில் வண்டி--1

google image 
பள்ளிக்கு லீவு விட்டாச்சு என்றால் எங்களுக்கு ஜாலி தான். பின்னே .....எங்கள்  தாத்தா  ஊருக்கு செல்வோமே !  வருடம் முழுக்க  பரபரப்பு நிறைந்த சென்னை  நகர வாழ்க்கையும், படிப்பின் சுமையும் இந்த கிராமத்து வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். வருடத்தில் சில நாட்கள் மட்டும் தான் இந்த விடுதலை என்கிற போதிலும்,  நினைவுகள் இன்னும் மனதில் பசுமை குறையாமலே   இருக்கிறது

தாத்தா ஊர் எங்கே என்று சொல்லவில்லையே! அழகிய சிறு கிராமம். மாயவரம் வரை  ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து கோமல் வரை பஸ் பயணம். பிறகு அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணித்தால் அரை மணிநேரத்தில்  கொத்தங்குடி  என்கிற மிக சிறிய கிராமத்தை அடையலாம். கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த   தேரழந்தூரிலிருந்து  பதினைந்து நிமிட பயணத்தில் கொத்தங்குடி   சென்றடையலாம்.

ரயில் பயணம் என்று நினைத்தால்  இப்பொழுதும், இந்த வயதிலும் எனக்கு  மிகவும் விருப்பமான ஒன்று. சிறு வயதில் சொல்லவா வேண்டும். அந்தக் கால  ரயில் பயணம்  சில சங்கடங்கள் இருந்தாலும், மிகவும்  ரசிக்கத்தக்கதாய் இருக்கும்.

இரவு கிளம்பினால்  மறு நாள் காலை மாயவரம் போய் சேரும் ரயில் வண்டி. .
அப்பொழுதெல்லாம் டீசல் வண்டி தான். அது போல் ஏசி  பெட்டி எல்லாம் கிடையாது.  அதனால் தனித்தனி தீவுகளாய் திரை சீலைக்குள் பயணிக்கும் பரிதாபம் கிடையாது.

ரயில் பயணம் என்றாலே எல்லோர் கையிலும், ஒரு தோல் பெட்டி, ஒரு டிரங்க் பெட்டி, ஹோல்டால், எல்லாம் உண்டு. கையில் கூஜா மிக மிக அவசியம். ரயிலில் குடி தண்ணீர் கிடைக்காது. ஸ்டேஷனில் இறங்கி இறங்கி கூஜாவை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ரயிலில் கேட்டரிங் வேன் எதுவும் இருக்காது.அதனால் கையில் எல்லோருமே  சாப்பாடு கொண்டு வந்து விடுவார்கள். எதிர் சீட்டில் சாப்பிடும் புளியோதரை  நம் நாவில் நீர் வரவழைக்கும். நமக்கும் தாராளமாகக் கிடைக்கும் .நாமும் அச்சமின்றி  சாப்பிடலாம். அந்த நாளில் பிஸ்கட் திருடர்கள் கிடையாதே!
  
 சக பயணிகள் எல்லோருமே வாயாரப் பேசிக் கொண்டு , உறவினர் போல் ஒருவர் மேல் ஒருவர் அன்போடும், அக்கறையோடும் பயணிப்பார்கள். இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேளை  இது போல் இனிமையான சம்பவங்களினால் தான் ரயில் பயணம் என்றதும் மனம் துள்ளலாட்டம் போடுகிறதோ !

ஆமாம் ! அந்த  அன்பைக்  கலந்து செய்த ரயில் பெட்டிகள் எல்லாம் எங்கே போச்சு ! காணாமல் போய் விட்டதோ!
கண்டு பிடித்துக் கொடுப்பவர்களுக்கு  தக்க சன்மானம் வழங்கப் படும்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன்.  இந்த இனிமையான  ரயில் பயணத்தில், எனக்கும் என் தம்பிக்கும் அந்த ஜன்னலோர சீட்டிற்கு அடிதடியே நடக்கும்.

எதிர் சீட்டுப் பயணி," ஏம்மா இப்படி ரெண்டு பெரும் சண்டை போடுகிறீர்கள். இந்த இருட்டில்  என்ன தெரியப் போகிறது.  கண்ணில் கரி விழும். அது தான் நடக்கும்.' என்று சொன்னாலும் நாங்கள் கேட்கப் போவதில்லை.

வரும் ஸ்டேஷனில் எல்லாம்  கண் கொட்ட கொட்டப் பார்த்துக் கொண்டு நீராவி எஞ்சின் புகையில் கலந்து  வந்து , கண்ணில் விழும் கரித் துகளை தேய்த்து விட்டுக் கொண்டே  பயணிப்போம்., அதிகாலையில் மாயவரத்தில் எங்களை இறக்கி விடும் ரயிலுக்கு பிரியாவிடை கொடுக்கத் தவற மாட்டோம்..

அதற்குப் பிறகு பஸ்  பயணம் அத்தனை சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது . குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டில்  போகும் பஸ் போகும் போது , நம் இதயம்  குதித்து , குதித்து வாய்க்குள் வந்து விடும் அபாயம் உண்டு.

கோமலில்  பஸ் எங்களை  இறக்கி விட்டவுடன், அடுத்து நாங்கள் மிகவும் ஆவலாய் எதிர் பார்த்திருந்த போக்குவரத்து  மாட்டு வண்டி.
அதை வில்வண்டி என்று கிராமத்தில் சொல்லும் வழக்கம் உண்டு. வில்லைப் போன்று வளைந்து  மூடியிருப்பதால்  இந்தப் பெயரா தெரியவில்லை. கிராமத்தில் ஒவ்வொருவர் வீட்டிலும் பயணிப்பதற்கு ஒரு வண்டியும், மற்ற விவசாய  பணிகளுக்கு வேறு  வண்டியும்  இருக்கும். சட்டென்று அடையாளமாக சொல்வதற்கு இந்தப் பெயரை  உபயோகித்தார்களா தெரியவில்லை.

இந்த வில் வண்டி பயணம்  முடியம் போது , அங்கு எங்களுக்கு முன்பாக எங்கள் சித்தியின்  பெண், பிள்ளை, மாமா வீட்டுப் பெண் பிள்ளை என்று பலரக வயதில்  காத்திருக்கப் போகிறார்கள்.

ஆகா ஒரு பெரிய கூட்டம் கொட்டமடிக்கக்  காத்திருக்கிறது.

இதோ  அந்த வண்டி ஓட்டுபவர் எங்கள் பெட்டி, பைகள் எல்லாம் உள்ளே அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்.  வில் வண்டியில் நாங்கள் ஏறி   உட்கார்ந்தால்  அந்த இரட்டை மாட்டு வண்டி  "ஜல் ஜல்" என்று கிளம்பப் போகிறது ....

வண்டி ஓட்டுபவர்  மாடுகளை  அவிழ்க்கப் போயிருக்கிறார்.
அந்த "ஜல், ஜல்" மாட்டு வண்டிப் பயணத்திற்கு  சற்றே காத்திருப்போம்........

33 comments:

  1. சுவாரஸ்யமான நினைவுகள்தான்.

    ReplyDelete
    Replies
    1. பதிவைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      Delete
  2. அந்தக்கால ரயில் பயணங்களில் ரயில் ஏறும்போது நன்கு சலவை செய்து பெட்டியிட்ட துணிகள் பயண முடிவில் ஒரே அழுக்காய்ப் புகை படிந்து... அதைஎல்லாம் யார் கவனித்தார்கள்?அந்தக்காலத்த்கில் ரயிலில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு, இண்டர் வகுப்பு மூன்றாம் வகுப்பு எல்லாம் இருக்கும். இண்டர் வகுப்பில் பயணிப்பதே பெருமைக்குரிய விஷயமாகும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாலு சார் . நீங்கள் சொல்வது போல் , ரயிலிருந்து இறங்கியிருக்கிறோம் என்பதை நாம் சொல்ல வேண்டாம். நம் உடைகளே எல்லோருக்கும் சொல்லி விடும். அஆனாலும் சுவாரஸ்யமாக , இனிமையான பயணங்கள் தான் அவை.
      மூன்று வகுப்புகள் தெரியும், இன்டர் வகுப்பு என்று ஒரு பிரிவு இருந்ததா ? சுவாரஸ்யம் தான்.
      உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  3. நீடாவி இஞ்ஜினின் தடங்.. தடங்.. சத்தமும்
    வண்டிமாடுகளின் சலங்.. சலங்.. சத்தமும் - நெஞ்சை விட்டு நீங்காதவை..

    ReplyDelete
    Replies
    1. சிறு வயது நினைவுகள் நம்மை விட்டு நீங்காதவை. உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  4. Replies
    1. நன்றி தனபாலன் சார். உங்களுக்கு நன்றி சொல்லாமல் விட்டிருக்கிறேன். அதற்காக டபுள் நன்றி இப்பொழுது.

      Delete
  5. நானும் இந்த மாட்டுவண்டிப் பயணம் செய்திருக்கேன். கல்யாணம் ஆகிப் புக்ககம் செல்லும்போது கும்பகோணம் வரை ரயில், அங்கிருந்து பேருந்து, அதன் பின்னர் மாட்டு வண்டிப் பயணம்! :)

    ReplyDelete
    Replies
    1. கீதாமேடம், உங்களுக்கும் நன்றி சொல்ல மிக மிக தாமதாகிவிட்டது. அதற்காக உங்களுக்கும் டபுள் நன்றி.

      Delete
  6. அந்த "ஜல், ஜல்" மாட்டு வண்டிப் பயணத்திற்கு நாங்களும் சற்றே காத்திருக்கிறோம்........

    மிகச்சுவையான அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள்.

    அந்தக்காலத்திலெல்லாம் கிராமங்களில் ஒற்றை மாட்டு வண்டி, இரட்டை மாட்டு வண்டி, குதிரை வண்டி இவைகளில்தான் நம் இனிய பயணங்களே. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான சுவாரஸ்யம் மட்டுமே.

    நானும் இவை எல்லாவற்றிலும் பயணம் செய்துள்ளேன். நான் சின்னப் பையனாக இருந்தபோது (ஒரு 10 வயதுக்குள் தான் இருக்கும்) முதன் முதலாக குதிரை வண்டியில், குதிரையோட்டி அருகே என்னை அமர வைத்துவிட்டார்கள். அது நல்ல முரட்டுக்குதிரை.

    அதை சாட்டையால் இவர் சொடுக்க, சாட்டை என் கண்களில் பட்டுவிடுமோ என்ற பயத்தில் நான் இருக்கும்போது, அந்தக் குதிரையும் சும்மா இல்லாமல் தன் மஹா முரடான வாலால் என் முகத்தில் அடிக்கடி BRUSH அடித்துக்கொண்டே வந்தது. :)

    இனிய அனுபவங்களை மீட்டுக்கொடுத்த தங்களின் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய குதிரை வண்டிப் பயணம் மிக மிக சுவாரஸ்யமாக இருக்கும் போலிருக்கிறதே. ஒரு பதிவு எழுதுங்கள் கோபு சார். படித்து மகிழ்கிறோம்.
      என் பதிவு உங்களுடைய நினைவலைகளை மீட்டியிருப்பது எனக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் வருகைக்கும், விரிவான ஊக்கமான கருத்துரைக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  7. அந்தக்கால இரட்டை மாட்டு வில் வண்டிகளை இந்தக்கால சொகுசுக்கார்களுடன் நாம் ஒப்பிடலாம். இவை இரண்டுமே அலுங்காமல் குலுங்காமல் பயணம் செய்ய நல்லது.

    அந்தக்காலக் குதிரை வண்டிகளும், இந்தக்கால ஆட்டோக்களும் ஒன்று என்றே சொல்லலாம். இரண்டுமே நம்மை குலுக்கி எடுத்துவிடும்.

    அப்போதெல்லாம், நிறை மாத கர்ப்பிணிப்பெண்களை, வேக வேகமாகச் செல்லும் குதிரை வண்டியில் ஏற்றி அனுப்பவே மாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இரட்டை மாட்டு வில்வண்டிப் பயணம் நல்ல சுவாரஸ்யம் . பல் நாட்களாக எழுத நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது ஆரம்பித்திருக்கிறேன். நல்ல பயணமாக அமைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  8. //கையில் கூஜா மிக மிக அவசியம்.//

    //எதிர் சீட்டில் சாப்பிடும் புளியோதரை நம் நாவில் நீர் வரவழைக்கும். நமக்கும் தாராளமாகக் கிடைக்கும் .நாமும் அச்சமின்றி சாப்பிடலாம். அந்த நாளில் பிஸ்கட் திருடர்கள் கிடையாதே!//

    // சக பயணிகள் எல்லோருமே வாயாரப் பேசிக் கொண்டு , உறவினர் போல் ஒருவர் மேல் ஒருவர் அன்போடும், அக்கறையோடும் பயணிப்பார்கள். //

    இரயில் சினேகிதம் ......... மிகக்குறுகிய காலமே ஆனாலும் நீண்ட நாட்கள் நெஞ்சினில் நிற்கும்தான். :)))))

    ReplyDelete
    Replies
    1. இப்பொழுது எங்கே கோபு சார் அன்பான சக பிரயாணிகளைப் பார்க்க முடிகிறது. எல்லோர் கையிலும் ஒரு பொன். ஏறி அமர்ந்ததும், உடனே குறு குறு என்று போனையே பார்த்துக் கொடிருப்பார்கள்.
      இரயிலில் பேசவே ஆளில்லை. இதில் எங்கே சிநேகமாகப் போகிறோம் . சொல்லுங்கள்.
      பலமுறை வந்து பின்னுட்டமிட்டு ஊக்கப் படுத்துவதற்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  9. எதிர் சீட்டில் சாப்பிடும் புளியோதரை நம் நாவில் நீர் வரவழைக்கும். நமக்கும் தாராளமாகக் கிடைக்கும் .நாமும் அச்சமின்றி சாப்பிடலாம். அந்த நாளில் பிஸ்கட் திருடர்கள் கிடையாதே

    உண்மையான வார்த்தை நானும் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கில்லர்ஜி ! முன்பு போல் பயணங்கள் சுகமாக அமைகின்றனவா என்பது சற்றே சந்தேகத்திற்குரியது தான்.

      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  10. ஆஹா....
    ரசனையான நினைவலைகள் அம்மா..
    ஜல்... ஜல் மாட்டு வண்டியில் பயணிக்கக் காத்திருக்கிறேன் அம்மா....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருக்கும், ரசித்துப் படித்துக் கருத்திட்டதற்கும் நன்றி குமார்.

      Delete
  11. இனிய நினைவுகள் அம்மா... காத்திருக்கிறோம்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி அபிநயா உங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  12. நினைவுகள் என்றுமே இனிமையானவைதான்
    காத்திருக்கிறேன்
    அடுத்த பகிர்விற்கு
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி சார்.

      Delete
  13. என்னதான் நவீன வசதிகள் இருந்தாலும் அந்தக்கால அனுபவங்கள் என்றாலே தனி மகிழ்ச்சிதான். தோல்பெட்டி, ட்ரங்கு பெட்டி, ஹோல்டால் பேக், கையில் கூஜா ( இதனை வைத்துக் கொள்லும்படி பெரியவர்களிடம் தள்ளி விடுவார்கள்0 , ரெயில் பெஞ்சில் கட்டு சாதம், கண்ணில் கரிப்புகை – என்று அந்தக்கால ரெயில் பயண அனுபவத்தை ரசித்து எழுதியதற்கு நன்றி. ‘ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி’ சரோஜாதேவி வந்து போனார். வில்லுவண்டி என்பது கிராமத்திற்கு அந்தக்கால அம்பாசிடர் கார் போல. – சுவாரஸ்யமான உங்கள் தொடரினைத் தொடர்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், விரிவான் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார். வயது ஏற ஏற மனம் என்னவோ பின்னோக்கி செல்வதைத் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.நல்ல வேலை நாம் டேக்னால்கியைப் பயன்படுத்துகிறோம் , இல்லையென்றால் நம் இளைய தலைமுறையினரிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களுடைய பொன்னான நேரத்தை வீணடித்து, கெட்ட பெயர் வாங்கிக் கொள்வோம். தொழில்நுட்பத்திற்கு எங்கள் வீட்டு இளைய தலைமுறையினர் சார்பாக நன்றி சொல்லிக் கொள்கிறேன்.உங்களுக்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு.....

      நன்றி தமிழ் சார்.

      Delete
  14. நான் கொல்லுமாங்குடி. நம்ம ஊர் பக்கந்தான். (நான் கொல்லுமாங்குடி போய் 20 வருடம் ஆகிறது).

    ReplyDelete
    Replies
    1. நான் பள்ளி லீவு நாட்களுக்கு மட்டும் கொத்தங்குடி வந்திருக்கிறேன். அதனால் கொல்லுமாங்குடி கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை. ஆனாலும், நம் ஊர்காரர் ஒருவர் முதல் முறையாக என் தளத்திற்கு வந்து கருத்திட்டதற்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வந்து கருத்திட்டால் மேலும் மகிழ்வேன்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி சார்.

      Delete
  15. ஆஹா! உங்களுக்கு எங்கள் ஊர் பக்கமா? ரயில் பிராயண அனுபவம், வில்வணடி பயணம் ஜல் ஜல் , பதிவு சூப்பர். ஊரில் இல்லை அதனால் படிக்க வில்லை நிறைய பதிவுகள். இப்போது கொஞ்சநாள் தான் ஊரில் இருப்பேன் இருக்கும் போது படித்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோமதி. தஞ்சை மாவட்டம் என்னுடையப் பூர்வீகம். ஜல் ஜல் வண்டியில் என்னுடன் பயணம் செய்யக் காத்திருக்கும் உங்களுக்கு என் நன்றிகள் பல.

      Delete
  16. சுவாரஸ்யமாக எழுதும் ஆற்றல் உள்ளது. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருக்கையும், உங்கள் பாராட்டும் என்னை மகிழ்விக்கிறது, தொடர்ந்து வாருங்கள் சார்.
      நன்றி.

      Delete
  17. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சாம். இதோ வருகிறேன் உங்கள் மனிதம் மலரட்டும் பதிவிற்கு.

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்