Saturday 22 March 2014

அப்பாவி விஷ்ணு --மின்னூல்

விஷ்ணுவின்  அனுதாப மன்றத் தலைவரும், ராசியின்  ரசிகைகளும் ,கேட்டுக் கொண்டதன் பேரில் நான் இந்தத் தம்பதி பற்றி எழுதியதை  ஒரு மின்னூல் வடிவத்தில் இங்கே  சமர்ப்பிக்கிறேன்.

விஷ்ணு  ரசிக, ராசி ரசிகை மன்றங்களா ......... இதெல்லாம்   எங்கிருக்கு என்று நீங்கள்  கேட்பது எனக்குக் கேட்கிறது.  இருக்கு என்று சொன்னால் கேட்டுக் கொள்ளுங்கள்.  ஆராயக் கூடாது ..............

சரி. விஷயத்திற்கு வருகிறேன்.இது வரை இவர்களைப் பற்றி சில பதிவுகள் எழுதியிருப்பது நீங்களெல்லாம் அறிவீர்கள். அதை  நூல் வடிவம் ஆக்கினால் என்ன என்கிற விபரீத ஆசை வந்தது. இதைப்பற்றிய விவரங்களுக்காக  www.freetamilebooks.com  என்கிற  தளத்தைத் தொடர்பு கொண்ட போது  திரு. சீனிவாசன் அவர்கள்  மின்னூல்  வடிவத்தில் கொடுக்க  சம்மதித்தார்.

ஒரு நூல் வெளியிட எத்தனை பேர்கள் உழைக்க வேண்டும் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நூலை வடிவமைப்பதில் தொடங்கி, அதற்கு அட்டைபடம் போட்டு அதில் அழகாக தலைப்பு எழுதி, உள்ளே  என் போட்டோவையும்  அழகான  முறையில்,   போட்டு  எனக்கு அளித்துள்ளார்கள்.

freetamilebooks teamஇல் இருக்கும் அத்துணை பேருக்கும்.,மின்னூல் ஆக்கம் செய்த திரு. சீனிவாசன் அவர்களுக்கும், அழகான அட்டைபடத்தை வடிவமைத்துக் கொடுத்த திரு. ப்ரியமுடன் வசந்த்  அவர்களுக்கும் என் நன்றிகள்.


இந்த நூலை  உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். படித்து உங்கள் மேலானக் கருத்துக்களைத் தெரிவியுங்களேன்.

": அப்பாவி விஷ்ணு  " நூலைப் பதிவிறக்கம் செய்து படிக்க இங்கே க்ளிக்  செய்யவும்.
AVhttp://freetamilebooks.com/ebooks/appavi-vishnu/

படித்து உங்கள் மேலான் கருத்துக்களை சொல்லத் தவறாதீர்கள்.

Monday 17 March 2014

குழந்தைகள் பத்திரமாக இருக்கிறார்களா?(வல்லமையில் என் கட்டுரை)

வல்லமை  மின்னிதழில்  இன்று மார்ச் 17 வெளியாகியிருக்கும் என் கட்டுரை 

                              
                         குழந்தைகள்  பத்திரமாக இருக்கிறார்களா?


"என் பிரென்ட்  நாளை சர்க்கஸ் போகிறாள். நீ எப்பொழுது என்னை அழைத்துப் போகிறாய்? "

"எனக்கு அந்த பொம்மை வேணும்."
நீங்கள்  யூகித்தது சரியே.  இது ஒரு சின்னஞ்சிறு குழந்தையின்  சிறிய ஆசைகள்.


எத்தனை அழகான சந்தோஷமான   உலகம் இந்தக் குழந்தைகளுடையது. பேராசைகள் அற்ற, கள்ளம் கபடமில்லாத, பொறாமைகள் இல்லாத உலகம் அவர்களுடையது.

அவர்களுடைய ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான். நாம் அதையெல்லாம் நிறைவேற்றி  வைக்கிறோமா என்பது கேள்விக்குறியே . ஆசைகள் நிறைவேற்றுவதைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்.அவர்களைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும் என்று தோன்ற வைக்கிறது இப்பொழுது நடக்கும் சம்பவங்கள் எல்லாம். 

ஆசிரியரே, தன மாணவியிடம், தவறாக நடந்து கொள்வது,  சில சமயங்களில்,  அப்பாவே தன பெண்ணிடம்  முறை தவறி நடப்பது , என்று அவ்வப்பொழுது கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் நம்மால் என்ன செய்ய முடிகிறது  என்கிற ஆதங்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பதை  மறுக்க முடியாது.பெரும்பாலும்  பெண் குழந்தைகள் தான் இதில் பலியாகிறார்கள். இங்கொன்றும், அங்கொன்றுமாக ஆண் குழந்தைகளும் இப்படி பாதிக்கப் படுவதுண்டு. அவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல உளரீதியாகவும்  பாதிக்கப் படுகிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் இந்த சமுதாயத்தை திருத்த முடியுமா? எல்லோருக்கும் நம்மால் பாடம் எடுக்க முடியுமா என்ன? அதெல்லாம் நடவாதக்  காரியம் தான்.ஆனால் நம் வீட்டுக் குழந்தைகளைக்  காப்பாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவர்களுக்கு எது நல்லது என்பதை எவ்வளவுக்கெவ்வளவு  ஜாக்கிரதையாக தேர்வு  செய்கிறோமோ ,அதைவிடவும் அதி ஜாக்கிரதையாக  அவர்களுக்கு எது கெடுதல் விளைவிக்கக் டியது என்பதை ஆய்ந்தறிந்து, அதிலிருந்து அவர்களை காப்பாற்றுவது  மிக மிக  அவசியம்.

அந்தக் காலத்தில், பெண்பிள்ளைகளும், ஆண்களும் தனித்தனியாக  படித்து வந்தகாலம். இப்பொழுது காலம் மாறி விட்டது எனலாம்.ஆண்களும், பெண்களும் சேர்ந்து படிப்பது  என்பது காலத்தின் கட்டாயம்.  பல சமயங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களை தாக்க வரும் மனித மிருகங்களிடமிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி என்பதை நாம் தானே அவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.இதில் பெற்றோர்களின் பங்கு மிகப் பெரியது என்று சொல்லலாம். அதே சமயத்தில், ஆசிரியர்களின் பங்கும்  முக்கியமானதே! இருவரும், ஒருவரைஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை நிறுத்திவிட்டு   தங்கள் கடமையை சரிவர  செய்தோமானால் , நம் குழந்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் காப்பாற்றி விடலாம்.

இதென்ன பிரமாதம் என்று தோன்றலாம்."  குட் டச் "  "பேட்  டச் " என்று சொல்லிக் கொடுத்து விட்டால் ஆச்சு. அது எவ்வளவு கடினம் என்பது பல பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிக நன்றாகத் தெரியும். 

அந்தக் கால்த்தில்,  நம் பாட்டிகள் சொல்வதுண்டு,  சொந்த சகோதரனேயானாலும்  பத்து , பன்னிரெண்டு வயதிற்கு மேல் தன்  சகோதரியை அடிப்பதோ, தொட்டு விளையாடுவதோ கூடாது. இப்பொழுது யோசித்துப் பார்த்தால் எத்தனை எத்தனை உண்மை அதில் அடங்கியிருக்கிறது என்று தெரியும்.
ஆனால் அதையெல்லாம்  எங்கே கேட்கிறோம் நாம். அதெல்லாம் பத்தாம் பசலித் தனம் என்று நினைத்து நமக்கு நாமே குழி வெட்டிக் கொள்வது தான் இப்பொழுது நடந்தேறுகிறது.

பெற்றோர்களும்  இப்பொழுது தங்கள் குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கிற பெயரில்  அவர்களை  பலவித ஆபத்துகளில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் படித்தது நினைவிற்கு வருகிறது. தன தோழியின்  வீட்டிற்குப்  போய் விளையாடிவிட்டு அங்கேயே  தோழியுடன்  இரவைக் கழித்து விட்டு வரும்(Sleep Over), ஒரு பதின்மூன்று வயதுப் பெண்ணை , தோழியின் தந்தையே  சீரழித்து கர்ப்பமாக்கி விட்டது நினைவிற்கு வந்து வேதனைப் படுத்துகிறது. இது நடந்தது நம் நாட்டில் இல்லை என்று பெரு  மூச்சு விடலாம் . ஆனால்  அந்த நிம்மதி அதிக நேரம் நீடிக்காது. இந்த sleep over மேற்கத்தியக் கலாசாரம் நம் நாட்டிலும் இப்போது   புகுந்து விட்டது என்பது  அங்கொன்றும்  இங்கொன்றுமாக  குழந்தைகள் பேசுவதிலிருந்துத் தெரிய வருகிறது. எதைத்தான் மேலை நாட்டிலிருந்து காப்பியடிப்பது என்கிற விவஸ்தை வேண்டாமா? இதைப் பெற்றோர்கள் முளையிலேயே கிள்ளி  எரிந்து விட்டால் நலம்.

"good touch, bad touch   ஆகியவற்றை சொல்லிக் கொடுப்பதில் இருக்கும்  சங்கடங்கள்  ஏராளம் . குழந்தைகள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொல்லி மாளாது. ஆனாலும் நாசுக்காக சொல்லித் தான் தீர வேண்டும்.

பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்  உதவுவதற்காக  உங்களுடன் ஒரு காணொளியைப் பகிர்கிறேன். இதைத் தைரியமாக குழந்தைகளுக்கு  போட்டுக் காட்டலாம். எந்த சங்கடமான  காட்சிகளும்  இல்லாதப் படம். குழந்தைகள், அவர்களின் பெற்றோர்   ஆகியோர் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய காணொளி.
Child Line India வெளியிட்டுள்ள  காணொளி இது.

உங்கள் நண்பர்களுடனும், உறவுனர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Wednesday 5 March 2014

காதல் ,காதல், காதல், போயின்.......

திரு.GMB அவர்களின் வலைத் தளத்தில் வெளியிட்டிருந்த  போட்டிக் கதையை  என்  பாணியில் முடித்திருக்கிறேன்.

கதையின் முதல் பகுதியைப படிக்க  லிங்க் இது....  http://gmbat1649.blogspot.in/2014/02/blog-post_13.html

கதையைத் தொடர .......


' இப்படிக் கண்டதும் காதலில் உனக்கு உடன் பாடா ? ' என்கிற கேள்வியை பாபு கேட்டதும், சந்தியா சட்டென்று  நிமிர்ந்து பார்த்தாள் . " இவன் என்ன லூசா ?  இல்லை நாம் எப்படிப் பட்டவள்? என்பதையறிய  இந்தக் கேள்வி  கேட்கிறானோ.... என்கிற சந்தேகம் சந்தியாவின் மனதுள் ஓடியது.  சந்திக்கலாம்  என்று சொன்னவுடன்  வந்தது தவறோ? நம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்திற்கு  இடம் கொடுத்து விட்டோமோ என்று   தன் மேலேயே கோபம் கொண்டாள் சந்தியா.

ஆனாலும் ,தன்  எண்ண  ஓட்டங்களை மறைத்துக் கொண்டு, " எதற்குக் கேட்கிறீர்கள்? " என்று கேட்க

பாபுவோ," சும்மா தான். " என்று சொல்ல

சந்தியா  பதில் சொல்ல ஆர்மபித்தாள்," உங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால்  கண்டதும் காதல் என்பதில் எனக்கு உடன்பாடெல்லாம் இல்லை. நான் இங்கு வந்தது , இனி  என்னை நீங்கள் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளத் தான். அதோடு  இல்லாமல்  என்னைப் பற்றிய உங்கள்  எண்ணம்  தவறானது என்று சொல்லவும் தான். என் குடும்பம் மிகவும் கட்டுக்கோப்பானக் குடும்பம்.  என்  பெற்றோர் சம்மதம் இல்லாமல் நான்  திருமணம் செய்வதாயில்லை.

உங்கள் படிப்பு, வேலை , குடும்பம்  இதைப் பற்றியெல்லாம் விவரமாக என் பெற்றோரிடம் சொல்லி  பெண் கேளுங்கள் . அவர்கள் சம்மதித்தால் , திருமணத்திற்குப் பிறகு காதலைப்  பற்றி யோசிப்போம் .

உங்களுக்கென்று ஒரு எதிர்கால லட்சியம்  இருக்குமே! அதை மனதில் வைத்து  வேறெதுவும் உங்களை  திசை திருப்பாமல்  அதிலேயே முனைந்து வெற்றி பெறுங்கள்.  அதற்குப் பிறகு  என் பெற்றோரைப் பார்த்து பெண் கேட்டால்  வெற்றி நிச்சயம் "என்று முடிக்க

பாபு சந்தியாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து க்கொண்டிருந்தான். இப்பொழுது  அவன் ,அவளைப் பார்த்த பார்வையில் அவள் மேல் இருக்கும் காதலைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மரியாதை தான் வெளிப்பட்டது.

"சரி , உங்கள் லட்சியம் தான் என்ன ?' என்று சந்தியா கேட்கவும்,

பாபு " லட்சியமா? " என்று திணறிக்  கொண்டே  நான்  M .COM .,  முடித்து விட்டேன் என்று சொல்லவும்.

சந்தியா." மேலே  என்ன செய்வதாய்  உத்தேசம்? என்று கேட்க  , "ஒரு வேலைத் தேடிக் கொள்ளப் போகிறேன்  "என்று பாபு சொல்ல ,

" வேலையே  இனிமேல் தானா? எந்தத் தைரியத்தில் என்னிடம் காதல் கடிதம் கொடுத்தீர்கள்?பிடியுங்கள் உங்கள் கடிதத்தை.உங்களை நம்பி  உங்கள் பின்னால்  நான் எப்படி வருவேன் ? உங்களுக்கு என்று ஒரு லட்சியம்  தேடிக் கொண்டு அதை அடைய முயற்சி செய்யுங்கள். பிறகு தான் மற்றதெல்லாம்  "என்று சொல்லிக் கொண்டே  திரும்பி நடக்க ஆரம்பித்தாள் . பாபு  பிரமிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. அப்படியே சீட்டில் உட்கார்ந்தான். எதிரே இருந்த விளம்பரப் பலகை ஒன்றையே வெகு நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

" நீங்கள் I.A.S ஆக வேண்டுமா?  நாங்கள் பயிற்சித் தருகிறோம்" என்று  அழைத்தது விளம்பரம்.

" லட்சியமாம், லட்சியம். பெரிய கலெக்டர் லட்சியம் "என்று மனதுள் சலித்துக் கொண்டான். .

சட்டென்று தோன்றியது. ஏன்  கலெக்டர்  ஆவதே  இலட்சியமாக்கிக் கொண்டால்  என்ன?  பயிற்சிக் கல்லூரிக்கு சென்று , விவரங்கள் சேகரித்துக் கொண்டு , வீட்டில்  தன்  தந்தையுடன்  ஆலோசித்தான். மறு நாளே பயிற்சி வகுப்பில் சேர்ந்தான்.

பகலென்றும், இரவென்றும் பாராமல்  உழைத்தான். முதல் முறை  அவன் வெற்றி பெறவில்லை. அதற்காகத் தடுமாறவில்லை பாபு . மீண்டுமொரு  முறை  எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று, ட்ரெயினிங் சென்று  சென்னைக் கருகில் கலெக்டர்  பதவியில் அமர்ந்தான்.
சந்தியாவின் நினைவுகள்  மெதுவாக உள்ளேயே கரைந்தன.

சந்தியாவும் அந்த ஊரில் அதிக நாட்கள் இருக்கவில்லை வேறு ஊருக்கு அவள் அப்பாவிற்கு மாற்றலாகி  போய்  விட்டாள் .

வருடங்கள் பல ஓடி விட்டன.  பாபுவிற்கும்  ஆர்த்திக்கும்  திருமணமாகி  இரண்டு குழந்தைகள் .. அன்று  தன்  தோழி   நித்யாவை  வீ ட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்   பாபுவின்  மகள் நிஷா  .

"எங்கோ பார்த்த  முகமாயிருக்கிறதே"  என்று நினைத்துக் கொண்டிருக்கையில் பாபுவிற்கு  சந்தியா நினைவில் வந்து மோதினாள் .

ஆனாலும் எப்படித தெரிந்து கொளவது? என்று  யோசித்துக் கொண்டிருக்கும் போது , ஆர்த்தி பாபுவின் மனைவி, ' இந்தப் பெண் நித்யா   நம் நிஷாவின் கிளாஸ்மேட்.
இவர்கள் வீடு இதே தெருவில் தான். அவர்கள் வீட்டில் இன்று அவளுடைய  பிறந்த நாள் விழா. இதோ பாருங்கள்  இன்விடேஷன். நாமும் போகலாமா? "என்று கேட்க பாபு அவசரமாக ," நான் வரவில்லை. நீயும் நிஷாவும் போங்கள்  " என்று சொல்லி விட்டு  ஆபீஸ் கிளம்பினான்.

மறு நாள் அம்மாவும் பெண்ணும் லேப்டாப்பில் எதையோ ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருக்க  ,என்ன என்று எட்டிப் பார்த்தான் பாபு.

 நித்யாவின் பிறந்த நாள் விழா புகைப் படங்கள். ஒரு போட்டோவில்  நித்யா  அவள் அம்மா அப்பா அருகில் .  வாய் நிறைய சிரித்துக் கொண்டிருக்கும் அவள் அம்மா  சந்தேகமில்லாமல் சந்தியா தான்.

சந்தியாவின்  மேல் இருந்த அன்பு  காதலெல்லாம் இல்லை. வெறும் இனக் கவர்ச்சி.  அப்பொழுதே  அதுக் கருகிப் போனது என்று சொன்னால் ஆர்த்தி நம்புவாளா? இல்லை  சந்தியாவின் கணவர் தான்  ஒத்துக் கொள்வாரா?

எப்படி தானும் , சந்தியாவும் சங்கடத்திலிருந்து விடுபடுவது என்று யோசித்துக் கொண்டே  அலுவலகத்திலிருந்து எடுத்து  வந்த சில  கடிதங்களை  பிரித்து படித்துக் கொண்டிருந்தான். அவன் பிரச்சினைக்கு  தீர்வு கடிதத்தில்  இருந்தது.
ஆமாம் அவனுக்கு  மாற்றலாகியிருந்தது மதுரைக்கு.

மாற்றிய அரசாங்கத்திற்கு நன்றி சொன்னதுடன், சந்தியாவிற்கும் மனதார பெரிய நன்றி சொல்லிக் கொண்டான். M.Com., படித்திருந்தவனை    I.A.S  ஆக்கியது அவள் தானே!

பாபுவிற்கு வந்திருந்தது இனக் கவர்ச்சி மட்டுமே ! தெரிந்தோ ,தெரியாமலோ  சந்தியா  அவனை  சரியான சமயத்தில்  சரியான  வழியில்  திசை திருப்பி விட்டாள் .

Saturday 1 March 2014

மார்கெட்டில் பரிசு (பரிசு-3)
தலைப்பைப்  பார்த்து மார்கெட்டிற்குப் போய்  பரிசு வாங்கி வந்ததைப் பற்றி  எழுதுகிறாள் என்று நினைத்து  விட வேண்டாம் மார்கெட்டை மையமாய் வைத்த கதையின்விமரிசனத்திற்கு க்  கிடைத்த பரிசு.

 திரு. வை கோபாலகிருஷ்ணன்  அவர்கள் நடத்தும்  விமரிசனப் போட்டியில்  மூன்றாவது  முறையாக  பரிசு  கிடைத்துள்ளதைப் பற்றிய செய்தியை  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்  எனக்குப்  பெரு மகிழ்ச்சி.
விமரிசனத்திற்கு  கொடுக்கப்பட்ட கதை " காதலாவது, கத்திரிக்காயாவது. "
இதோ  லின்க்   http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html.

இந்தக்  கதைக்கு நான் எழுதிய  இரண்டாம் பரிசு பெற்ற விமரிசனம் கீழே.. இந்தப் பரிசை  திரு.அர்விந்த் குமார் அவர்களுடன்  பகிர்ந்து கொள்வதில்  மகிழ்சியடைகிறேன். விமரிசனம் இதோ......
                                   

                 கத்திரிக்காய்களுக்கு நடுவில்  காதலும்,  கரை புரண்டோடும் என்று விளக்கும் அழகிய காதல் கதை. ஆசிரியருடைய " வங்கிக்காதல் "கதை போலவே இந்தக் கதையிலும்  வில்லன் என்று யாரையும்  நடுவில் கொண்டு வராமல்  கதை எழுதிய கதாசிரியரை  எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதே  வில்லனின்  செயல்கள் தான். ஆனால் வில்லனே இல்லாமல் அதே சமயத்தில் கதையை தொய்வு இல்லாமல்  எழுதியிருக்கும் நடை  ஆச்சர்யப்பட வைக்கிறது.

இந்தக் கதையில் பரமுவும், காமாட்சியும், நாயகன் நாயகிகள். வில்லன் என்பது  பரமுவின் உள்ளுணர்வு மட்டுமே. பரமு தன காதலை சொல்லாமல் விட்டு விடுவானோ என்கிற எதிர்பார்ப்பை ஏகத்துக்கு  அதிகமாக்கிக் கொண்டே போய், இறுதியில் அவன் காதலை   வெளியிட வைத்து கதையை  முடித்திருப்பது  நல்ல விறுவிறுப்பு. 

காமாட்சி , மற்றும் பரமு இருவருமே  நாம் தினசரி சந்திக்கும் மனிதர்கள்..  அவர்கள் இருவருடைய எண்ணங்கள்  எல்லாம் மிக உயர்ந்தவை.  காமாட்சியின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியும், அதைக் கண்டு பயந்து பரமு தன காதலை தன மனதிற்குள்  பூட்டி வைத்து விடுவதும்  அதற்குச் சான்று. இருவரும் ,ஒழுக்கத்தில்,குணத்தில் ஒருவரை ஒருவர்  விஞ்சி நிற்கிறார்கள்  என்றே சொல்லலாம்.எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல்  பரமு , காமாட்சிக்கு உதவுவது  அவன் காதலினால் தான் என்று  நமக்குத் தோன்றுகிறது.. ஆனால் அது  உதவும் மனப்பான்மை   அதிகமாக  இருப்பதனால் தான் என்பதே என் கணிப்பு.. அதை தன் கதையில் அவர் சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. 

பரமுவை நமக்கு அறிமுகப்படுத்தும் போது அவனை ஒரு கதாசிரியராக அறிமுகப்படுத்தி இருப்பது, ஆசிரியரின் எழுத்தார்வத்தைக்  குறிக்கிறது.


காமாட்சி தானாகட்டும், தன்னுடைய நெடுநாளைய ஆசையான  சேலை, நகை வாங்குவதற்காக சேர்த்து வைத்த பணத்தை,, பரமுவின் உடல் நலத்திற்காக செலவிடுவது நெகிழ்ச்சியளிக்கிறது.அங்கே காமாட்சியின் கருணையும், காதலும் வெளிப்பட்டு விட்டது.
பரமு  விபத்தில் சிக்கும் வரை, காமாட்சிக்கு பரமு மேல் காதல் உண்டா இல்லையா என்று வாசகர்களை யூகிக்க வைக்கும் கதாசிரியர் , ஆஸ்பத்திரிக்கு  அழைத்து சென்ற அவசரத்திலும், பரமுவை  நன்கு கவனித்துக் கொண்டதாக சொல்லும் போதும் தான் காமாட்சியின் காதலை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார் .பெண்ணின் இந்தத்  தற்காப்பு  குணத்தை  மனதில்  வைத்துக் கதை புனைந்து   யதார்த்தை  சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
"இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வெளிப்படுத்தி விடக் கூடாதா .".. என்கிற வாசகர்களின் ஆர்வத்தை எகிற வைக்கிறார் ஆசிரியர்.
பரமுவும் குணமாகி  , வங்கி வேலையும் கிடைத்து , இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொள்ளும் போது  அப்பாடி...என்றிருக்கிறது.

எனக்கு இந்தக் கதையில் ஒரு சின்னக் குறை. இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதை  வெளிப்படையாகச்  சொல்லி  கதையை முடித்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்.  அதனால் என்ன?

பரமு-காமாட்சி இருவருக்கும் விரைவில் திருமணம் முடிந்து, வங்கியில் மிகப்பெரிய பதவியை பரமு எட்டிப் பிடித்து, கண்ணிற்கு அழகாய் இரு குழந்தைகள் பிறந்து , பல்லாண்டுக் காலம் இந்தக் குடும்பம் எல்லா செல்வமும், நலமும் பெற்று நீடுழி வாழ  என் ஆசிகள் பல!

பாராட்டுக்கள் கோபு  சார் !

                                          --------------------------------------------------
பரிசுக்கு என் விமரிசனத்தைத் தேர்ந்தெடுத்த  நடுவருக்கும், வாய்ப்பளித்த  கோபு சாருக்கும் நன்றி.

image courtesy-----google.

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்