![]() |
Image Courtesy ; Google. |
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது, கண்ணிற்குத் தெரியாத ஒரு எதிரி.
ஆமாங்க... கொரோனா தான்.
நம்பிக்கையுடன் தக்கப் பாதுகாப்புடன் இருப்போம்.
இதுவும் கடந்து போகும்.
அதே சமயம், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவைகள் நம்மைக் காப்பாற்றும்.
இப்பல்லாம் வீட்டுக்குள்ளே வரும் போது, முதலில் மாஸ்க்கைக் கழட்டி எறிந்த பின், கையுறை கழட்டி, ஸ்பெக்ஸ், செல் போன் எல்லாவற்றையும் sanitiserல் குளிப்பாட்டி விட்டு,..." வெறுங்கையுடன் வீட்டுக்குள் நுழைகிறோம்
ராவணனும் இதையே தான் செய்தானாம். (கொரோனாவுக்காக நாம் செய்வது போல்)
எப்படி? எங்கே?
போர்க்களத்தில் ராமன்," இன்று போய் நாளை வா" என்று ராவணனிடம் சொல்லவும், ராவணன் இலங்கைத் திரும்பிய காட்சியை கம்பர் படமெடுத்திருக்கிறார் பாருங்கள்..
அரசச் சின்னமான மணிமுடி பத்து, சிவபெருமான் கொடுத்த வாள், எப்பொழுதும், அவனுடனேயே இருந்த வெற்றித் திருமகள், வீரத் திருமகள் என்று அனைவரையும் விட்டு விட்டு வெறுங்கையுடன் இலங்கைத் திரும்பினான் இலங்கை வேந்தன். என்று சொல்கிறார் கம்பர்.
அவர் வடித்த வரிகள் இதோ...
கும்பகர்ணன் வதைப் படலம். பாடல் எண் 7272
வாரணம் பொருத மார்பும்,
|
வரையினை எடுத்த தோளும்,
|
நாரத முனிவற்கு ஏற்ப
|
நயம்பட உரைத்த நாவும்,
|
தார் அணி மவுலி பத்தும்,
|
சங்கரன் கொடுத்த வாளும்,
|
வீரமும் களத்தே போட்டு,
|
வெறும் கையோடு இலங்கை புக்கான்
திசை யானைகளின் எதிர் சென்று போரிட்டுத் தந்தங்கள் துளைத்த மார்பும், கைலாய மலையை அள்ளி எடுத்த வலிமிகு தோளும், நாரத முனி பாராட்டி ஏற்குமாறு, சாமவேதத்தை இசை நயத்தோடு பாடிய நாவும்,பத்துத் தலைகளில் அணிந்திருந்த அரசச் சின்னமான மணிமுடி பத்தும், தவ ஆற்றல் கண்டு சிவபெருமான் கொடுத்த வாளும், தன்னிடம் என்றும் நீங்காமல் இருந்த வீரப் பண்பினையும், போர்க்களத்திலே போட்டு விட்டு,தன்னிடமிருந்த பொருட்கள், உறுப்புகள், ஆகியவற்றை இழந்து, வெறுங்கையனாய் இலங்கை நகருக்கு மீண்டும் போனான்.
இதைப் படிக்கும்போது "நாம் இந்தக் கொரோனா காலத்தில் வீட்டுக்குள் நுழைவதைப் போல் அல்லவா ராவணன் இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான்." என்று நீங்கள் நினைப்பது மிகவும் சரியே.
படித்துக் கொண்டிருங்கள்...
மீண்டும் வேறொரு கம்பன் பாடலுடன் வருகிறேன்.
|