Sunday, 7 June 2020

குலசேகராழ்வாரும், குலசேகரப்படியும்.














திருமலையிலேயே சுழித்து ஓடும் ஆறாய்ப் பிறந்தால் வேங்கடவன் பாதத்த்தின் அடியிலேயே கிடக்கலாம் என்று நினைத்தவர் அதிலும் குறை கண்டு.....

என்ன குறை கண்டிருப்பார் என்று தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்கவும்.

 வேறென்ன பிறவி கேட்கலாம்? யோசிக்கிறார் ஆழ்வார்.


"நான் இத்திருமலையில் ஒரு பாதையாகக் கிடந்து விடுகிறேனே. உன் பக்தர்கள் உன்னைத் தரிசிக்க நடந்து வருகின்ற போது, அவர்களுடைய பாதம் படும் பாக்கியத்தையும் , உன் அருகில் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றவனாவேன் . " வேங்கடவனிடம் வேண்டிக் கொள்கிறார்.

அப்பாடி..... "2 in 1" வேண்டுதலை  முடித்து விட்டோம்  என்று பெருமூச்சும் விட்டிருப்பார்.

பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே.

இளம் பிறையை உடைய ஜடா முடியைக் கொண்ட சிவனும், பிரமனும், இந்திரனும், செய்கின்ற யாகங்களின் பயனாக, அவர்களின் கோரிக்கையை தீர்த்து வைப்பவனும், வேதங்களில் பரம்பொருளாய் கூறப் படுகின்ற எம்பெருமானுடைய , திருவேங்கட மலை மேல் (போகிற) வழியாய் கிடக்கின்ற நிலையை உடையவனாகக் கடவேன்.

ஆனால் இந்த 2 in 1  வேண்டுதலும் அவருக்குத் திருப்தி தரவில்லை போலும்.

"வேண்டாம்! வேண்டாம்!  பெருமாளே ஒருவேளை உன் பக்தர்கள் தாங்கள் நடந்து வரும் பாதையை மாற்றிக் கொள்ளலாம். அல்லது, அரசாங்கத்தார் பாதையையே அடைத்து விடக் கூடும்.. அப்பொழுது நான் உன்னை விட்டுப் பிரிய நேரிடுமே பெருமாளே. அதனால் இப்பிறவியும் வேண்டாம் ."

என்று யோசிக்கிறார்.யோசித்து ஒரு முடிவுக்கும் வந்து விடுகிறார்.

பக்தர்கள் கால் படும் படி கிடக்க வேண்டுமென்றால் ஏன் மலை மேல் இருக்க வேண்டும் ? வேங்கடவன் அருகிலேயே இருந்து விட்டுப் போகிறேன். .  தேவர்களும், ஞானியர்களும், ரிஷிகளும் , பக்தர்களும் , "கோவிந்தா! கோவிந்தா!" என்று கோஷமிட்டுக் கொண்டே மிதிக்கும்,உன் சன்னிதியின் உள் வாயிற் படியாய் கிடந்து விடுகிறேனே. பக்தர்கள் பாதங்கள் படும் பாக்கியமும் கிடைக்கும். உன் செம்பவள அதரத்தை தரிசித்துக் கொண்டேயிருக்கும்  பாக்கியமும் எனக்குக் கிடைத்து விடும் என்கிற நோக்கில்...

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே

செடி போல் அடர்ந்து மண்டிக் கிடக்கின்ற பாவங்களைப் போக்கும் திருமாலே, பெரியோனே, வேங்கடவா! உன் கோயிலின் உள் வாசற்படியில், பக்தர்களும், தேவர்களும், அப்ஸரஸ் போன்ற ஸ்திரீகளும், இடைவிடாது சஞ்சரிக்கப் பெற்ற படியாய் பொருந்தி உன் செம்பவழம் போன்ற அதரத்தைக் காண்பேனாகக் கடவேன். 

ஆனால், இந்த வேண்டுதலிலும் அவருக்குத் திருப்தியாகவில்லை என்று அவருக்கே புரிய வர," வேண்டாமப்பா...வேண்டாம்" என்று சொல்லி விடுகிறார்.

ஏனாம்?

"அதான் உபயதாரர்கள் ரெடியாக இருப்பார்களே. வாசற்படிக்கு பொன் முலாம் , வெள்ளி முலாம் பூசுகிறேன் பேர்வழியென்று படியை மூடி விட்டால்...நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறதே! அருகில் இருந்தும் உன் தரிசனம் கிடைக்காமல் போய் விடுமே. அதனால் எனக்கு இதுவும் வேண்டாம்."

(நல்ல வேளை.அவர் சந்தேகப்பட்டது போல் எதுவும் நடந்து விடவில்லை. பெருமாள் கோவில்களில் முலாம் பூசப்படாத 'குலசேகரப்படி'யை இன்றும் காணலாம். திருமலையிலோ 'குலசேகர துவாரம்' என்கிற நாமத்துடன் ஒரு வாயில் விளங்குகிறது.)

பெருமாளுக்கும் சலிக்கவேயில்லை போலும். நீயாச்சு உன் வேண்டுதலுமாச்சு என்று சலித்துக் கொள்ளாமல் பொறுமையாய் மாறாப் புன் முறுவலுடன் சேவை சாதிக்கிறார்.

அடுத்து என்ன?                                                        (தொடரும்)


3 comments:

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்