Tuesday 23 June 2020

குலசேகராழ்வாரும், Total Surrenderம்


குலசேகராழ்வார் கேட்டப் பிறவிகளை எல்லாம் ஒரு ரவுண்ட் பார்த்து விட்டு  வருவோமா?

கொக்கு, மீன், பொன் வட்டில், பாரிஜாதம், மலை, சுழித்து ஓடும் ஆறு, நடக்கும் பாதை, என்று ஒன்று மாற்றி ஒன்று கேட்டுக் கொண்டே வந்தவர், "படியாய் கிடந்து பவள வாய் காண்பேனே" என்று கேட்கவும்,

வேங்கடவனும் ," இதை விட ஒரு நல்ல பிறவி இருக்க முடியுமா. குல சேகரனும் என்னருகில் இருப்பான். நானும் அவனருகில் இருப்பேன்." என்று பெருமாள் பெருமூச்சு விடுவதற்குள்....

குலசேகராழ்வார் மீண்டும் மறுதலித்து விடுகிறார்.
ஏன் ?
படியாய் கிடக்கலாம். ஆனால், யாராவது தங்க முலாம், வெள்ளி முலாம் பூசுகிறேன் பேர்வழியென்று செய்து விட்டால்.... அப்புறம் நான் எப்படி பெருமானது செம்பவள வாயைக் காண்பது? என்று யோசித்து அப்பிறவியும் வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.

"பிறகு என்ன பிறவி தான் இந்த குலசேகரான் கேட்கப் போகிறான்?" வேங்கடவன் புதிருடன் ஆழ்வாரைப் பார்க்க....

ஆழ்வார், வரம் என்று எதுவும் கேட்காமல், " வேங்கடவா! பெருமாளே! எனக்கு திருமலையில் ஏதாவது ஒரு பிறவி கொடுத்து விடேன். உனக்குத் தெரியாதா  எனக்கு எது நல்லது என்று."

பெருமாள் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு," குலசேகரா! இப்பொழுது நீ total surrender செய்து விட்டே இல்லையா? இனி நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எது நல்லதோ அதை நானே செய்கிறேன்." என்று அருள் செய்திருப்பார்.

உம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்
அம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்
செம்பவள வாயான் திருவேங் கடமென்னும்
எம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே


ஒரு கொற்றக் குடையின் நிழலிலே அரசாண்டு, அழகிய ஊர்வசியையே அடையப் பெறினும்,அதனை நான் விரும்ப மாட்டேன்.சிவந்த பழம் போன்ற வாயையுடைய எனது அப்பனுடைய திருவேங்கடமென்கிற அழகிய திருமலையின் மேல் ஏதேனும் ஒன்றாகப் பிறக்கக் கடவேன்.

நாமும் பெருமாளிடம் total surrender செய்து கொண்டால், தீர்ந்தது பிரச்சினை. நமக்கு எது நல்லதோ அதை வேங்கடவனே செய்து விடுகிறான். கோவிந்தா!கோவிந்தா!

இறுதிப் பாசுரம் இதோ:

மன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன
பன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

கூர்மையான வேலாயுதத்தையுடைய  குலசேகராழ்வார், நிலைப் பெற்ற குளிர்ச்சியுள்ள சாரல்களையுடைய வட வேங்கடமலையில் எழுந்தருளியிருக்கிற பெருமானது, பொன் போன்ற சிறந்த சிவந்த திருவடிகளை சேவிப்பதற்கு ஆசைப் பட்டு வணங்கி, அருளிச் செய்த தமிழ் பதிகத்தை கற்று வல்லவர் அப்பெருமானது திருவுள்ளத்துக்கு இனிய பக்தர்களாவர்.

இத்தொடருடன் பயணித்த/பயணிக்காத  அனைவரும், எல்லா நலங்களும், வளங்களும் பெற திருவேங்கடவனை வேண்டுகிறேன்.



4 comments:

  1. சிறப்பாக எழுதி வந்த உங்களுக்கு நன்றி.

    கடைசியில் ஆண்டவனினிடமே விட்டது நல்லதாகப் போயிற்று! அவனுக்குத் தெரியாதா, பக்தனுக்கு எது நல்லதென....

    ReplyDelete
    Replies
    1. என் தொடரை படித்து, ஊக்குவித்துக் கொண்டே வந்த உங்களுக்கு என் மன்மார்ந்த நன்றிகள் வெங்கட்ஜி.

      Delete
  2. ஏன் முடித்து விட்டீர்கள்? இன்னும் கம்பன் கடலில் திளைக்கலாமே

    விஸ்வநாதன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார். நீங்கள் சொல்வது போல் கம்பன் பாடல்கள் என்னை விடுவதாய் இல்லை. கம்பனின் தேன் தமிழ் பாடள்களை நான் ரசித்த விதத்தை தொடர்ந்து எழுதுவதாய் தான் உத்தேசம். அதற்குக் கடவுள் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
      நன்றி ஐயா.

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்