Monday 24 August 2020

கம்பரும், ஐஸ்வர்யா ராயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-25)

Image Courtesy:DeviRajaraman.
"கம்பனும், மிளகாயும்" படிக்கலாம் இங்கே..

பக்கத்து வீட்டு ஜானுவின் திருமண வரவேற்பு.

நானும், என்னவரும் ஆஜர்.

மேடையில் பெண்ணும், மாப்பிள்ளையும் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளிக்க நின்று கொண்டிருந்தனர்.

"ஆமாம்.. அது யாரது. ஜானுவின் பக்கத்தில்? தெரிந்த முகமாய் இருக்கு." சட்டென்று நினைவிற்கு வரவில்லை." மனம் குழம்பியது.

சில வினாடிகள் தான். கண்டு பிடித்து விட்டேன்.

ஜானுவின் அம்மா பட்டுப் புடைவை சரசரக்க , என்னருகில் வந்து ," வாங்கோ!" என்று சொன்னவுடன் , சிரித்துக் கொண்டே ,ஜானுவின் அருகில் நிற்பது உங்கள் தங்கை சுபா தானே. அடையாளமே தெரியல " என்றேன்.

சாதரணமாகவே நல்ல அழகு தான் இந்த சுபா. இப்ப மேக்கபின் கை வரிசையில் தேவதையாக ஜொலிக்கிறாள்.

மணப்பெண்ணுக்கு மட்டுமில்ல...இப்ப உறவினர்களுக்கும் பார்லர் பெண்மணி தேவையாயிருக்கு போலிருக்கு. 

இதெல்லாம் உலக அழகி திருமதி ஐஸ்வர்யா ராய் உபயம். காஸ்மெடிக் இண்டஸ்ரிக்கு நல்ல பிஸினஸ் நம் நாட்டில். நினைத்துக் கொண்டேன்.


"மேக்கப் " கலை ஒன்றும் நமக்குப் புதிது இல்லை. ராமாயணக் காலத்திலேயே இருந்திருக்கிறது.
இங்கே நான் சீதையைப் பற்றிப் பேசவில்லை. நான் சொல்வது சூர்ப்பணகைதான்.

சூர்ப்பணகை மேக்கப் போட்டுக் கொண்டேன் என்று உன்னிடம் வந்து சொன்னாளா? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார். எப்படி என்று பார்ப்போமா?

காட்டில் ராமனைப் பார்க்கிறாள் சூர்ப்பணகை. ராமனின் அழகில் மதி மயங்கி எப்படியாவது ராமனைத் தன் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைக்கிறாள். 
"ஆனால்,திருமகளின் வடிவமான சீதையோ ராமனின் பக்கத்திலேயே இருக்கிறாளே.
இவ்வளவு அழகான சீதையை விட்டு விட்டு அரக்கியான என் பக்கம் ராமன் எப்படித் திரும்புவான்." நினைத்துக் கொண்டவள் தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறாளாம்.

அரக்க குலத்திற்கு  உருவத்தை மாற்றிக் கொள்வது பெரிய விஷயமா என்ன... நினைத்தவுடன் அழகிய பெண் உருவெடுக்கிறாள் சூர்ப்பணகை. மேக்கப் போட்டுக் கொண்டிருப்பாளோ? 

அழகாக மேக்கப் போட்டுக் கொண்டு, எப்படி நடக்கிறாளாம்?

டங்...டங் என்று பூமியே அதிரும்படி அரக்கியாக  நடப்பாளா என்ன?

இல்லையாம். 

மெல்ல...மெல்ல ஒயிலாக நடந்து வருகிறாளாம்.

அவள் நடந்து வருவது, வின்னுலகில் இருந்து இறங்கி வரும் தேவ கண்ணிகைப் போல் (ஒப்பனை செய்து கொண்டு) வருவதைப் போலிருந்தது என்று கம்பர் சொல்கிறார். 

செம்பஞ்சும், தளிரும் நாணும்படி இருந்ததாம் அவள் பாதங்கள். தாமரை மலர் போன்ற பாதங்களை மெல்ல அடியெடுத்து வைத்து, மயில் போல்..அன்னம் போல்... என்று வர்ணித்துக் கொண்டே வந்த கம்பரை யாரோ தடுத்து நிறுத்துவது போல் தெரிகிறது.

"யார் என் சிந்தனையக் கலைப்பது? என்று உற்று கவனிக்கிறார் கம்பர்.

அட.. அவரின் மைண்ட் வாய்ஸ்.

அவரின் மைண்ட் வாய்ஸ், "கம்பரே...ஸ்டாப்...ஸ்டாப்.... கொஞ்சம் ஓவரா சூர்ப்பணகையை வர்ணிக்கிறாப் போல் தெரிகிறதே.  அவள் வில்லி என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா.. இல்லையா?" கேட்டிருக்கும்.

சட்டென்று சுதாரித்துக் கொள்கிறார் கம்பர்.." ஆமாம்...ஆமாம்.. சூர்ப்பணகையை ரொம்பவும் வர்ணித்து வைத்து விடப் போகிறேன். அங்கு ராமன் உட்கார்ந்திருக்கிறான். ராமன் ஏகப் பத்தினி விரதன் ஆயிற்றே.கொஞ்சம் அடக்கி வாசிப்போம்." நினைத்துக் கொண்டார்.

வர்ணிப்பை  off-set செய்ய வேண்டுமே...என்று மனம் நினைத்தவுடன்...அவருக்கு வார்த்தை வந்து விழுகிறது. மனம் நினைப்பதை,எழுத்தாணி கொண்டு செலுத்துகிறது. 

"நஞ்சம்"- என்கிற வார்த்தையைப் போடுகிறார். இத்தனை அழகான சூர்ப்பணகை, கொடுமையான விஷம் போல் வந்தாள் என்று சொல்லி முடித்து விட்டால் போதுமே!  ஆனால் அவர் மனம் ஒப்பவில்லைபோலும். இன்னும் கடுமையாக சூர்ப்பணகையை சாட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

கம்பர் ஆச்சே...

"வஞ்ச மகள் " என்று சொல்லி வஞ்சனை நிறைந்தவளான சூர்ப்பனகை நடந்து வந்தாள் என்று முடிக்கிறார்.


அவரின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்...

பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்.

செம்பஞ்சும், விளங்குகின்ற மிகச் செழித்த தளிர்களும் நாணும்படி, சிறந்த அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள் ஆகி, அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும்,
அன்னம் போலவும்,விளங்குகின்ற வஞ்சிக் கொடி போலவும், கொடிய விடம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.
அவர் எழுதிய அந்த நான்கு வரிகளையும், சற்றே வாய் விட்டுப் படித்து, சந்த நயத்தை அனுபவியுங்கள்.  ஓசை நயம் சூர்ப்பணகை அடி எடுத்து வைப்பது போலவே இருக்கும்.




சந்தத்தையும், பொருளையும், சூர்ப்பணகை நடந்து வருவதையும் பார்த்துக் கொண்டிருங்கள். வேறொரு கம்பன் காவியப் பாடலுடன் வருகிறேன்.

நன்றி.

Tuesday 4 August 2020

கம்பனும், மிளகாயும்.(கம்பன் என்ன சொல்கிறான்?-24)




Image Courtesy : Wikkimedia Commons

ஷாப்பிங் முடித்து விட்டு  நானும், என்னவரும் ஹோட்டலுக்கு சென்றோம்..

"சமூக இடைவெளி கடைப் பிடித்தீர்களா? மாஸ்க் அணிந்து கொண்டீர்களா?" அடுக்கடுக்காக நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது..

"இப்ப எதுக்கு உனக்கு இந்த ஹோட்டல் ஆசையெல்லாம் "என்று  நட்புடன் நீங்கள் கோபித்துக் கொள்வதும் சரியே...

ஆனால், நாங்கள் ஹோட்டல் போனது இப்ப இல்லிங்க..

ஒரு நான்கைந்து, வருடம் முன்பாக இருக்கும். கொரோனா என்கிற பெயர் நம் அகராதியிலேயே இல்லாத (சொர்க்கமான)நாட்கள் அவை.

விஷயத்திற்கு வருகிறேன்...

சர்வரிடம் இட்லியும், காபியும் ஆர்டர் செய்து விட்டு அமர்ந்திருந்தோம்.

இட்லியும், அதற்குக் கம்பெனி கொடுக்க சட்னியையும், சாம்பாரையும், 'டங்'என்று டேபிளில் வைத்து விட்டு  சர்வர் நகர்ந்தார்.

சலவைக்குப் போய் விட்டு வந்த மாதிரி இருந்த இட்லியின் ஒரு விள்ளலை சட்னியில் முக்கி உள்ளே தள்ளி விட்டு, " சர்வர் லேட்டாக கொண்டு வந்தாலும், இட்லியும் சட்னியும் லேட்டஸ்டாகத் தான் இருக்கு. சட்னி சூப்பர் இல்ல?" என்னவரிடம் கேட்க....

பதிலே வரவில்லை அவரிடமிருந்து..

என்னாச்சு என்று அவரைப் பார்க்க... அவரோ," உஸ்...ஆ...என்று சொல்லிக் கொண்டே டம்ளர்,டம்ளராக தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தார்.. சர்வரிடம்," இன்னும் கொஞ்சம் தன்னீர் வேணும்." என்று  கேட்க...

"சட்னி ஒன்றும் அப்படியொன்றூம் காரமில்லையே?" இது நான்.

"சட்னி காரம்  இல்லை. சாம்பார் பயங்கரக் காரம்" அவர் சொல்ல...

நானும் சாம்பாருடன் இட்லியை சாப்பிட்டு..." ஆமாம்...கொஞ்சம் காரமாகத் தான் இருக்கு,"  ஆமோதித்தேன்.

அவரோ..." கொஞ்சம்.... காரமா? என்ன சொல்றே?

"கடைகளில் மிளகாய் ஏதாவது மீதம் இன்னும் இருக்குமா? இல்லை ஊரிலிருக்கும் எல்லா மிளகாயையும் ஒன்று விடாமல் சாம்பாரில் பொடியாக்கி போட்டு விட்டார்களோ?"கிண்டலாக கேட்டுக் கொண்டே சட்னியும் இட்லியுமாக சாப்பிடத் தொடங்கினார்.

"நீங்கள் சொல்வது எப்படியிருக்குத் தெரியுமா? இலங்கையில் ராவணன், அனுமனைக் கட்ட... கயிறு தேடினானாம். அது போல் இருக்கு."

"சரி,..சாம்பாருக்கும் ராவணனுக்கும் என்ன சம்பந்தம்?"

நான் சொல்லவில்லை. கம்பர் சொல்கிறார்.

"அனுமன் சீதா பிராட்டியைக் காண சமுத்திரத்தைத் தாண்டி, இலங்கைக்கு வந்தாரா?"

அப்போ ராவணன், அனுமன் வாலில் தீ வைக்க ஆணையிடுகிறான்.

அதற்கு, முதலில் அனுமனைக் கட்ட வேண்டுமே!

அனுமனைக் கயிற்றால் கட்ட முடியுமா சொல்லுங்கள். ஆனாலும் ராவணன் பணியாளர்கள் கட்ட ஆரம்பிக்கிறார்கள்.

"கயிறு இன்னும் நீளமாக வேண்டும்" 

கயிறு கொண்டுவரப் படுகிறது.

பழைய கயிற்றுடன் இதுவும் சேர்க்கப்படுகிறது. 

இப்ப....கட்ட முடிகிறதா? ம்...ஹூம்.....முடியவில்லையே.

அனுமன் மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார்," என்னை யாரென்று நினைத்தீர்கள்? சாட்சாத் பரந்தாமனின அருள் பெற்ற தூதுவனடா. என்னைக் கயிற்றால் கட்டுகிறார்களாம் இந்த மடையர்கள் ."

"முயன்று பார்க்கட்டும். " மனதிற்குள் சிரித்துக் கொள்கிறார் அனுமன்.


ஒரு பக்கம் சில பணியாட்கள் கயிறை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் அனுமனை கயிறுடன் சுற்றி வந்து கட்டப் பார்க்கிறார்கள். அடப் பாவமே ! கயிறு போதவில்லையே. அனுமன் தன் உருவத்தை வளர்த்துக் கொண்டே போவது புரிபடவில்லை அவர்களின் மரமண்டைகளுக்கு.

இன்னும்....இன்னும்...இன்னும்.... என்று அரண்மனையிலிருந்த எல்லா கயிறும் தீர்ந்து போக... எங்கெல்லாம் கயிறு கண்ணில் படுகிறதோ, அங்கேயிருந்தெல்லாம் கயிற்றை உருவி வருகிறார்கள் பணியாட்கள்.

தேரில் கட்டியிருந்த கயிறு, குதிரைகளைக் கட்டியிருந்த கயிறு, யானைகள் கட்ட பயன் படுத்தப்பட்டக் கயிறு, என்று அனைத்துக் கயிறுகளையும் உருவிக் கொண்டாகி விட்டது.

அவ்வளவு ஏன்? பெண்கள்  மரத்தில் ஊஞ்சலாட கட்டி வைத்திருந்த கயிற்றைக் கூட விட்டு வைக்கவில்லையாம். 

அப்படியென்றால் இலங்கையில் கயிற்றுக்குப் பஞ்சம் வந்து விட்ட்தோ?கயிறே இல்லாமல் போய் விட்டதோ?

இல்லை ....இல்லை... கயிறு இருந்ததாம் .  எங்கேயாம்?

கம்பர் குறும்புடன் இதற்குப் பதில் சொல்கிறார்....

இலங்கையில் இருந்த பெண்கள் கழுத்தில் இருந்த "தாலிச் சரடு" என்கிற மஞ்சள் கயிறு மட்டும் தான் மிஞ்சியதாம்.

என்னவொரு குறும்பு! என்னவொரு குசும்பு! கம்பனின் குறும்பானப் பாடல் இதோ...

பிணி வீட்டுப் படலம்.பாடல் எண் 6008
மண்ணில் கண்ட, வானவரை
    வலியின் கவர்ந்த, வரம் பெற்ற,
எண்ணற்கு அரிய ஏனையரை
    இகலின் பறித்த, தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில்
    பிணித்த கயிறே இடை பிழித்த;
கண்ணில் கண்டவன் பாசம்
     எல்லாம் இட்டுக் கட்டினர்.

நிலவுலகில் கண்ட கயிறு வகைகளும், தேவர்களைத் தன் வலிமை காட்டி அபகரித்துக் கொண்டு வந்த பாசங்களும், வரங்களால் பெற்றிருந்த தெய்வத்தன்மைப் பாசங்களும்,  எண்ண முடியாத மற்றயோரிடத்தினின்று போரிட்டுப் பறித்துக் கொண்ட பாசங்களும் ஆக தம் கண்ணால் பார்த்த வலிய கயிறுகள் எல்லாம் கொண்டுவந்து போட்டு  அரக்கர்கள் அனுமனைக் கட்டினார்கள். தங்களுக்கு மனைவியராய்ப் பொருந்தியிருந்த பெண்களுக்கு அமைந்த ,திருமாங்கல்யம் என்னும் தாலியில் பிணித்துக் கட்டியிருந்தக் கயிறே, அந்த சமயத்தில் அறுத்துக் கொண்டு போகப்படாமல் தப்பின.

இதைப் படிக்கும் போது, கம்பர் லேசுப்பட்ட ஆளில்லை, என்றே தோன்றுகிறது.
சிரிக்காமல் நக்கலடிப்பது என்பது இது தானோ!

கம்பனின் நக்கலை ரசித்துக் கொண்டிருங்கள்.. 
வேறொரு பாடலுடன் உங்களை சந்திக்கிறேன்..


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்