ராசி காலை எழுந்ததும் அன்று ஒரே பரபரப்பாக இருந்தாள் . காலை எழுந்ததும் தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டு விட்டு நிமிர்ந்தாள் . பக்கத்து வீட்டிலிருந்து மாமி ," ராசி......என்ன ஆச்சு ருக்குவிற்கு ? இன்றைக்கு . வரவில்லையா? " என்று கேட்கவும், சோகமாக " இல்லை மாமி :" என்று சொல்லி விட்டு உள்ளே நகர்ந்தாள் .
உள்ளே நுழைந்ததும் விஷ்ணு எதிர்பட்டார். " என்ன ஆச்சு ? நீ கோலம் போடுகிறாய்? ருக்கு வரவில்லையா ? " என்று கேட்கவும் இ....ல்....லை......என்று சலிப்பாகப் பதில் வந்தது ராசியிடமிருந்து .
" அதற்கு ஏன் இப்படி சலித்துக் கொள்கிறாய். ? ஒரு நாள் தானே.....நாளை வந்து விடுவாள். முடிந்த வேலைகளை செய். இல்லையெனில் விட்டு விடு. நாளை அவளே வந்து செய்யட்டும் ." என்று விஷ்ணு சொல்லவும்,
" இல்லை... இனி அவள் வரவே மாட்டாள் " என்று ராசி சொல்லவும் திடுக் என்று தூக்கி வாரிப் போட்டது விஷ்ணுவிற்கு.
" நேற்றுக் கூட நல்லாத் தானே இருந்தாள் ..... வீடு பெருக்கினாளே. என்ன உடம்பு வந்தது அவளுக்கு ? " என்று விஷ்ணு கேட்கவும் .
ராசி அவரைப் பார்த்து, " அவள் இப்பவும் சௌக்கியமாகத் தான் இருக்கிறாள்.
நம் வீட்டிற்குத் தான் இனிமேல் வரமாட்டாள் என்று சொன்னேன்." என்று எரிந்து விழுந்தாள்.
" ஏன் ? அவளுக்கு புது டிகாக்ஷனில் காபிப் போட்டுக் கொடுப்பதென்ன, இருவருமாக டிவி சீரியல் பற்றிய சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதென்ன? கடைக்கு அவளைத் துணைக்கு அழைத்துப் போவதென்ன .... என்று ஓருயிரும் ஈருடலும் போலல்லவா இருந்தீர்கள். என்ன சண்டை உங்களுக்குள் ? " என்று கேட்கவும் பயங்கரக் கோபம் ராசிக்கு.
" என்னைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா உங்களுக்கு.....'சிங்க்' பாத்திரமாகப் பொங்கி வழிகிறது . அத்தனைப் பாத்திரங்களையும் தேய்க்க வேண்டும். அது கூட நின்ற படியே செய்து விடலாம். ஆனால் வீடு பெருக்கித் துடைப்பது என்பது.....ஹப்பா....உதவி செய்யா விட்டாலும் இந்தக் கிண்டலுக்கு ஒன்னும் குறைச்சலில்லை."என்று ராசி கோபப் பார்வை வீசவும் ...விஷ்ணு அவளை சமாதானப் படுத்த முயன்றார்.
" சரி, இவள் போனால் என்ன? வேறு யாரையாவது பிடி. பக்கத்து பிளாட்டிற்கு வருபவளைக் கேட்டுப் பார்ப்பது தானே. "
"அவள் வர மாட்டாளாம்."
" ஏன்? " விஷ்ணு ஆச்சர்யமாய் பார்க்கவும் ,
" என் கணவன் என் தோழன்" பார்ப்பியாஅப்படின்னு என்னை அவள் கேட்டதற்கு , நான் பார்ப்பதில்லை என்று சொன்னதும். அப்படின்னா என்னால் வேலைப் பார்க்க முடியாது என்று பட்டென்று சொல்லி விட்டாள் ," என்று ராசி சொல்லவும்.....
இப்படியெல்லாம் கூடவா கண்டிஷன் போடுவார்கள். நான் கூட ஆபிசில் எனக்கு ஸ்போர்ட்ஸ் சேனல் பார்த்தால் தான் வேலை பார்க்க வரும் என்று சொல்லலாமோ ... நினைத்துக் கொண்டே ஆபீஸ் போனார்.
அன்று மாலை வரும் போதே ராசியைப் பார்க்க பாவமாயிருந்தது. " வேறு ஒருவரும் உதவிக்குக் கிடைக்கவில்லையா " என்று கேட்டுக் கொண்டே காபிக் குடித்தார்.
" எதிர் வீட்டிலிருப்பவர்களுக்கு வேலை செய்யும் சாந்தி, நாளைக் காலை ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாக சொல்லியிருக்கிறாள் ." என்று ராசி நம்பிக்கையுடன் சொல்வதைப் பார்த்த விஷ்ணுவிற்கு, நாளையாவது ராசிக்கு உதவி கிடைக்கட்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டார்.
மறு நாள் காலை விஷ்ணு, காபிக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் போது ,
"டிங் டாங் " வாசல் மணி இசைத்தது.
விஷ்ணு தான் போய் கதவைத் திறந்தார். இரண்டு பெண்மணிகள் நின்றிருந்தார்கள்.
" அம்மா இல்லையா ? " என்றார்கள்.
" ராசி...... " குரல் கொடுத்தார் விஷ்ணு.
"யாரோ உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள் " சொல்லி விட்டு ஹாலில் உடகார்ந்து, பேப்பரை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.
ராசி வந்தவர்களுடன் உரையாடுவது காதில்விழுந்தது.
"அம்மா.... நீங்கள் வேலைக்கு ஆள் வேணும் என்று கேட்டிருந்தீர்களே. இவங்க பேர் கவிதா . இனிமே நீங்க பேசிக்குங்க அம்மா. நான் போறேன் ." என்று சொல்லி விட்டு நகரவும்.
ராசி எப்படி இன்டர்வியு செய்கிறாள் என்பதை ஆர்வத்துடன் கவனிக்கலானார் விஷ்ணு.
" கவிதா தானே உன் பேரு ....நல்லாருக்கு பேரு " ஐஸ் வைக்க ஆரம்பித்தாள் ராசி.
அதற்குள் கவிதா பேச ஆரம்பித்தாள் .
"நீங்கள் எத்தனை பேர் வீட்டில் ?" சென்சஸ் எடுப்பவர் மாதிரி கேட்டாள் கவிதா.
"இரண்டு பேர் தான் கவிதா " பதில் சொன்னாள் ராசி.
" டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் இருக்கா? " அடுத்தக் கேள்வி வந்து விழுந்தது.
" இருக்கே. நான் சீரியல் எல்லாம் கூட பார்ப்பேன்." என்று முந்திக் கொண்டாள் ராசி.
" பாத்திரம் எவ்வளவு போடுவீர்கள்? "
" ஜாஸ்தி இல்லை "
" காலையில் என்ன டிபன் தினமும். ? "
" இட்லி, தோசை பூரி,......" இழுத்தாள் ராசி.
அடுத்தக் கேள்வி....
" கெசட் உண்டா ? "
புரியவில்லை ராசிக்கு. விஷ்ணுவிற்கும் தான்.
என்ன கேசட் ? ஒருவேளை டிவிடி எல்லாம் போட்டுக் காட்ட வேண்டுமோ. என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு.
" அதாம்மா விருந்தாளிகள் அதிகம் வருவார்களா ? ஓ ...கெஸ்ட் என்பதைத் தான் அப்படி கேட்டிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள் ராசி.
"அதிகம் எல்லாமில்லை. எப்பவாவது தான் வருவார்கள் " சமாளித்தாள் ராசி.
அப்பவே விஷ்ணுவிற்குப் புரிந்துப் போனது ," இவள் சரிப்பட மாட்டாள் " என்று. அவள் சம்பள விவர எல்லையைத் தொடுவதற்குள் .....
கேட் சத்தம் பெரிசாக கேட்டது. வந்தது எங்கள் வீட்டுப் பழைய உதவிப்பெண்மணி ருக்கு ......
இதென்ன இவள் இத்தனை ஆக்ரோஷமாக வருகிறாள் என்று ஜன்னல் வழியே பார்த்தவாறு இருந்தார் விஷ்ணு.
வந்தவள் முதலில் கவிதாவைப் பார்த்துக் கத்தினாள் ," த.....எந்திரி. நான் வேலை செய்ற ஊட்டுலே உனக்கென்ன வேலை. ஒரு வாரம் அவசரமாய் ஊருக்குப் போனால் நீ உடனே என் வயிக்கு வருவியா. உன்னை .,....என்ன செய்யறேன் பார். வூட்டாண்ட வந்து உன்னை கவனிச்சிக்குறேன்....." என்று மிரட்டவும். பதிலுக்கு கவிதா ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்,
" வாயை மூடிக்கினு, கம்முனு போ .." என்று மிரட்டி அனுப்பி வைத்தாள் ருக்கு.
இப்ப ராசியைப் பார்த்து, " ஒரு வாரம் லீவு போட்டால் உடனே ஆளை மாத்திடுவாயா? அவசரமா ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மூத்தாருக்கு கை கால் உயிந்துருச்சுன்னு ஓரகத்தி போன்ல ஓன்னு அய்வுது . தாங்க முடியாம போய் கண்டுகினு வந்தேன்.. அதுக்குள்ள.....இன்னா கலாட்டா பண்ணிகினே நீய . அய்ய...... இன்னா ? " என்றதும் தான் ராசிக்கு மூச்சே வந்தது.
"ஒரு வாரம் முன்னாடி நீ தானே கோச்சுகிட்டு நான் வந்தேன்னா என் பேரு ருக்கு இல்லன்னு சொல்லிட்டுப் போனே. அதுக்குப் பிறகு வரவேயில்லையே . அதனால் தான் ..."தடுமாறினாள் ராசி.
"அன்னைக்கு இன்னாவோ கோபம். அதுக்காவ வராமலே நான் இருந்தா
உட்டுடுவியா. வூட்டாண்ட வந்து என் தல மேல நாலுப் போட்டு என்னை நீ இஸ்துகினு வரதாவல ....இன்னா ஐயா நான் சொல்றது " என்று விஷ்னுவைப் பார்த்துக் கேட்க.....
விஷ்ணுவோ , " நீயாச்சு....... உன் அம்மாவாச்சு " என்று பிரச்சினை தீர்ந்த
நிம்மதியில் குளிக்கக் கிளம்பினார்.
ராசிக்கும், விஷ்ணுவிற்கும் ஒன்று நன்றாகப் புரிந்தது. உதவிக்கு ஆள் கிடைப்பதுக் கஷ்டம் என்று . நல்ல ஆட்களாக கிடைப்பது அதை விடவும் கஷ்டம்.
மீண்டும் பாசமான ருக்கு வந்தாளோ பிழைத்தாள் ராசி ........கவிதா மாதிரி ஆட்களை உதவிக்கு வைத்துக் கொண்டால் ., ராசி தான் கவிதாவிற்கு உதவ வேண்டியிருந்திருக்கும்.
image courtesy---google.