Saturday 23 August 2014

Happy Birthday Chennai!

 


சிங்காரச் சென்னையில் பிறந்து வளர்ந்த எனக்கு சென்னை போல் ஒரு சொர்க்க பூமி எங்குமில்லை என்றே சொல்வேன். தென்னகத்தின்  நுழைவாயில்  மட்டுமல்ல  சென்னை . வந்தோரை வாழவைக்கும் நகரமுமாகும் சென்னை. 375வது பிறந்த நாளை சென்னை கொண்டாடும் இவ்வேளையில்  என் மனம்  நான் சென்னையை விட்டுப் பிரிந்திருந்த  நாட்களுக்குப் பறந்து போனது.

திருமணத்திற்குப் பிறகு  சென்னையை விட்டு  வேறு மாநிலங்களுக்கு சென்ற போது நான் சென்னையை மிகவும் மிஸ் செய்தேன் என்று தான் சொல்ல வேண்டும். சென்னையை விட்டு முதன் முதலாக நான் சென்று  வாழத் தொடங்கிய இடம் டெல்லி. டெல்லி மாநகரம்  எனக்கு ஒட்டவே இல்லை. குளிரும், பாஷையும் என்னை அன்னியப்படுத்தின என்றே சொல்ல வேண்டும். எங்காவது பொட்டு வைத்த பெண்கள் முகம் தெரியாதா ( அப்பொழுதெல்லாம் வட இந்தியப் பெண்கள்  வகிட்டில்  சிந்தூர்  மட்டுமே இட்டுக் கொள்வார்கள்.)என்று  அலை பாய்வேன்.  யாராவது தமிழில் பேசினால்  உடனே அடுத்த கேள்வி ," நீங்கள்  சென்னையா? " என்பது தான்.

டெல்லியிலிருந்து  வர வேண்டுமென்றால் பெரும்பாலும ஜிடி எக்ச்பிரச்சில் தான் வருவோம். இரண்டு இரவுகள்  ரயிலில் கழித்த பிறகே அடுத்த நாள் காலை சென்னை வந்து சேருவோம். நாங்கள் சென்னை வந்து சேரும் மூன்றாவது நாள்  அதிகாலை  ஐந்து மணியிலிருந்தே தேவுடு காக்க ஆரம்பித்து விடுவேன். கம்பார்ட்மெண்டில் அனைவரும் உறக்கத்திலிருக்க  நான் மட்டும் ஸ்டேஷன் ஸ்டேஷனாக பார்த்துக் கொண்டே.......

மீஞ்சுரில்  ரயில் நிற்கும் போது ," பூ ....பூ ..." என்று பூ விற்பவர்களும்,  "காபி காபி " என்று காபி விற்பவர்களும்  தமிழில் விற்பது காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும். இது தமிழின் மேலுள்ள காதல் என்றுத் தோன்றலாம்.  அது சென்னை மேலிருக்கும்  காதல்( சென்னை அருகில் வந்து விட்டோமே ) என்பது எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம். வட இந்தியாவில் இருந்த போதெல்லாம் யாராவது  தமிழில் பேசினால், யோசிக்காமல் அவர்களை சென்னை வாசி என்றே நினைத்து விடுவேன்..

வெளி மாநிலங்களில் எந்தப் பண்டிகை கொண்டாடினாலும்., அன்றைய தினத்தில் சென்னை எப்படி இருக்கும் என்று என்னால் கற்பனை  செய்து பார்க்காமல் இருக்க முடியாது.
வினாயக் சதுர்த்தசியன்று, சீர்காழி கோவிந்தராஜனின் ," விநாயகனே , வினை தீர்ப்பவனே"  என்கிற குரல் சென்னையில் முக்கிற்கு முக்கு அமர்ந்து அருள் பாலிக்கும் பிள்ளையார்  கோவில்களில்  ஒலிப்பதை  கற்பனையில் கேட்டு மகிழ்வேன்.

நவராத்திரி  வந்தால்  பெண்கள்  அழகழகாக அலங்கரித்துக் கொண்டு எல்லோர் வீடுகளிற்கும் விஜயம் செய்து கொண்டு ,  வெற்றிலைப் பாக்கு  வாங்கும் அழகு  வேறு எங்கு காணக் கிடைக்கும் என்று தோன்றும்.
இது மட்டும் தானா ? தீபாவளியும், பொங்கலும் வரும் போதும், நான் சென்னையில் இல்லை என்பது புரிய கண்ணில் நீர் தளும்பும் .

எத்தனையோ  மாறுதல்கள், கலாசார மாற்றங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பூரிப்புடன் நிற்கிறது சென்னை. கலாசாரம்  மாறத் தொடங்கினாலும் , பழமையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகரங்களில்  நம் சென்னையும் ஒன்று. பழைமையை  விடாத புதுமை நகரம் சென்னை எனலாம்.

சென்னை பீச்சில்  அமர்ந்தால், காற்று நம் முகத்தில் மெதுவாக மோத நம்மை சுற்றி அங்கங்கே காதல் ஜோடிகள் கிசுகிசுக்க  சுற்றுப் புறமே ரம்மியமாகத் தோன்றும். காணும் பொங்கலன்று பீச்சில் காணும் கூட்டம் , சினிமாத் தியேட்டர்களிலும்  இருக்கும்.

சென்னை வாசிகளை  வெறும் பொழுது போக்குப் பிரியர்கள் என்று எண்ணி விடப் போகிறீர்கள். வைகுண்ட ஏகாதேசியன்று , திருவல்லிக்கேணி பார்த்தசாரதியைப் பார்க்க அலை போல் கிளம்பும். கந்த சஷ்டியன்று வடபழனி முருகனைப் பேட்டி காண நீள  வரிசையில் காத்துக் கிடக்கும்.

மால்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே  கடைகள் என்றால்  சென்னை நகரம் தான். இங்கிருக்கும் புடவைக் கடைகள்  ஏராளம்.அதில் இருக்கும் வகைகளோ  ஏராளமோ ஏராளம். நகைக் கடைகளுக்கும் பஞ்சமில்லையே. ஸ்பென்சரில்  கிடைக்காத  பொருளும் உண்டோ? இங்கேயும்  கூட்டம் காணலாம்.
 சென்னையில் புத்தகத் திருவிழாவா? கோவில் திருவிழாவைப்  போல் கொண்டாடுபவர்கள்  சென்னை வாசிகள்.

பொழுது போக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை , படிப்பிற்கும் கொடுக்கும் பொறுப்பானவர்கள் சென்னை வாசிகள் .அவர்கள் ஆதரவு இல்லாமலா இவ்வளவு பள்ளி, கல்லூரிகள்  சென்னையில் இருக்கின்றன.

அடுக்கிக் கொண்டே போகிறாயே.......  உங்கள் சென்னை என்ன அவ்வளவு உயர்த்தியோ ? என்று நீங்கள் புருவம் உயர்த்துவது புரிகிறது. என் கண்ணோட்டத்தில்   சென்னை பிரும்மாண்டமாக என்னைக் கவர்கிறது என்றே சொல்வேன்.
 
 நானும்  சென்னை வாசி என்கிற  பெருமிதத்துடன் வாழ்த்துகிறேன்,
                           Happy Birthday Chennai !

image courtesy---google.

23 comments:

  1. சிங்காரச் சென்னை பற்றி சிறப்பாகவே மலரும் நினைவுகளாகச் சொன்னீர்கள். முத்ன் முதல் மெட்ராஸில் நுழைபவர்களை வரவேற்கும் அந்த மெட்ராஸ் பஷையைப் பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாம். பதிவுக்கு நன்றி!

    HAPPY CHENNAI 375 . வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. உடனடியாக வந்து கருத்திட்டதற்கும், தமிழ் மண வாக்கிற்கும் நன்றி தமிழ் சார்.

      Delete
  2. சென்னையிலேயே பிறந்தூ வளர்ந்த உங்களுக்குச் சென்னை பிடிப்பதில் ஆச்சரியம் இல்லை. :))) அருமையான பகிர்வு. மக்கள் அந்நியோந்நியமாகப் பழகுவதில் சென்னை மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டால் கொஞ்சம் குறைவு தான். மதுரையில் அக்கம்பக்கத்தினரோடு உறவினர் மாதிரிப் பழகிய எனக்குச் சென்னை வாழ்க்கை நிறையக் கசப்பான அனுபவங்களையே தந்தது. :)))

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் பிறந்த ஊர் பாசம் தான்.
      உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா மேடம்.

      Delete
  3. //பழைமையை விடாத புதுமை நகரம் சென்னை!..//

    தாங்கள் சொல்வது சரியே!.. இனிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு!..

    வாழ்க சென்னை!..

    ReplyDelete
    Replies
    1. சென்னையின் சிறப்பாக நான் கருதுவது பழைமையை விடாத புதுமை என்பதை.
      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும், நன்றி துரை சார்.

      Delete
  4. சென்னை எனக்கும் பிடித்த நகரம் தான். படித்தது எல்லாம் வேற ஊரில் வாழவந்தது சென்னையில். பாட்டிவீடு சென்னை என்பதால் இன்னும் மோகம் நிறைய..நீங்கள் எழுதி இருக்கும் அத்தனை விஷயங்களையும் நானும் அனுபவித்திருக்கிறேன்.சென்னைக்காகவே. இப்பொழுது நாகரீகச் சென்னை நிறைய மாறிவிட்டது. பழைய அந்நியோன்யம் காணகி கிடைப்பது அரிது. இருந்தும் நம் ஊர் என்பதால் சென்னைக்கு வாழ்த்துகள் சொல்வதில் பெருமைதான் ராஜி சிவம். மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விரிவான . கருத்துரைக்கு மிக்க நன்றி மேடம். பழைய அன்னியோன்யம் என்பது மக்களிடையே இப்பொழுதெல்லாம் குறைந்து தான் விட்டது . சென்னை என்று இல்லை. பரவலாகவே இந்தக் குறை இருக்கிறது. டிவியும், கணினியும் தான் காரணம் என்று சொல்ல வேண்டும். காலம் மாறும் ....காத்திருப்போம்.
      வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி வல்லி மேடம்.

      Delete
  5. அருமையான நினைவுப் பதிவு

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி டாக்டர் சார்.

      Delete
  6. மிக அருமையான செய்திகள்
    பகிர்வுக்கு நன்றிகள்.
    Happy Birthday Chennai !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோபு சார்.

      Delete
  7. சென்னையை சிறப்பிக்கும்செய்திகளுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. எல்லோருக்குமே சொந்தஊர் சொர்க்கமே அதற்கு தாங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன ? சென்னைக்கு எனது வாழ்த்துக்களும், அம்மா கவிதைப்போட்டிக்கு நான் அனுப்பிய கவிதையை காணவும் நன்றி.
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி சார். உங்கள் கவிதையை வந்துப் படித்துக் கருத்திடுகிறேன் சார்.

      Delete
  9. சென்னையில் இருப்பவர்களுக்கு தனியாக சொர்க்கம் தேவையில்லை.. நான் தஞ்சாவூரில் தங்கி படித்துக்கொண்டிருந்த போது "சென்னை"எனும் பலகை தாங்கி பைபாசில் பறந்து கொண்டிருக்கும் பேருந்துகளைக் கண்டு "நம்ம ஊரு பஸ்சு" என பெருமைபட்டுக்கொள்வேன்.. அருமையான பதிவு அம்மா... தலை நகரத்தில் தாங்கள் அனுபவித்த துயரங்களை தங்களின் "சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்" மூலம் முன்பே அறிந்திருந்தேன்..

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் சென்னை வாசியா? சென்னைப் பாசம் தெரிகிறது. . மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான் விக்னேஷ்.. பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் சொல்லிப் பெருமை பட்டுக் கொள்கிறோம் நாம்.
      நான் தலைநகரில் சந்தித்தது எல்லாமே என்னுடைய சொதப்பல்கள்.தான், துயரங்கள் இல்லை விக்னேஷ்.
      என்னுடைய சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் உங்களுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது போல் தெரிகிறதே! இந்தப் பதிவைப் பாராட்டியதற்கும், என் சொதப்பல்களை பாராட்டியதற்கும் மிக்க நன்றி விக்னேஷ்.

      Delete
  10. சென்னை பற்றி சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்.

      Delete
  11. உங்களுடன் சேர்ந்து நானும் சென்னையை வாழ்த்துகிறேன் ராஜலக்ஷ்மி!

    அருமையாக மலரும் நினைவுகளை எழுதியிருக்கிறீர்கள்! ' சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. தஞ்சையைச் சேர்ந்தவள் என்றாலும் 40 வருட வெளிநாட்டு வாழ்க்கையில் விமானம் வந்து இறங்க வேண்டிய இடம் என்பதால் அந்தக் காலத்தில் இருந்து சென்னை வழியில் ஒரு இளைப்பாறும் இடமாகவே இருந்து விட்டது. பிறந்த ஊர் ஒன்று, வளர்ந்த ஊர் ஒன்று, புகுந்த ஊர் ஒன்று என்று பல ஊர்கள் மனதுக்கு நெருக்கமாக இருந்தாலும் வெளி நாட்டில் வாழ்பவர்களுக்கு தமிழ்நாட்டின் எல்லா ஊர்களும் சொர்க்கம் தான் எப்போதும்!!

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்