விஷ்ணு காபி போட்டது படித்திருப்பீர்கள்.
கணக்குப் போட்டது தெரியுமா?
படியுங்கள்........
" இந்த வருடம் எப்படியாவது ராசியின் பிறந்தநாளை நினைவில் வைத்து, அவளுக்கு நல்ல பரிசுப் பொருள் ஒன்றைக் கொடுத்து ,அசத்தி விட வேண்டியது தான் " என்று நினைத்துக் கொண்டார் விஷ்ணு.
ஆமாம். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நினைத்துக் கொள்வார் விஷ்ணு.
ஆனால் கரெக்டாக மறந்து விடுவது, சகஜமாகிப் போனது விஷ்ணுவிற்கு.
முதலில் எல்லாம் ராசிக்கு ஏமாற்றமாய் இருந்தது. போகப் போக பழகி விட்டது.
ஒரு மாதம் முன்பிருந்தே தனக்குத் தானே நினைவு படுத்திக் கொண்டேயிருந்தார்.
என்ன வாங்குவது? யோசித்து யோசித்து மண்டை குழம்பியது தான் மிச்சம்.
சரி, அதற்குத் தான் இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே என்று எப்பொழுதும் போல் நினைத்துக் கொண்டார்.
அந்த நாளும் வந்தது.
காலை எழுந்ததும் சொல்ல வேண்டாம். மாலை வரை சஸ்பென்ஸை நீட்டித்து விட்டு , பிறகு அவள் எதிர்பாராத சமயத்தில் சொல்லலாம், என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
காலை எழுந்ததும் ,அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் போல் தானிருந்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டார். வேண்டாம் ,அவளை அவள் விரும்பும் சேலையை வாங்கிக் கொடுத்து விட்டு ,சொல்லலாம் என்று அமைதி கொண்டார்.
"காலை எழுந்ததிலிருந்து பார்க்கிறேன். ஒரே சிந்தனையில் இருக்கிறீர்களே! "
என்றாள் ராசி.
" அதெல்லாம் ஒன்றுமில்லை,........... ஒன்றுமில்லை " விஷ்ணு பதட்டமானார்..
அவரை பார்த்து ," என்ன என்றைக்குமில்லாமல் ஒரு மாதிரி பதட்டத்துடன் இருக்கிறார் போல் தெரிகிறார். " நினைத்துக் கொண்டு,
" உடம்பிற்கு ஒன்றுமில்லையே! " கேட்டாள் ராசி.
" நான் நன்றாகத்தான் இருக்கிறேன் " என்று சொல்லியும் சற்றே நம்பிக்கையில்லாமலே தான் , கவலயுடன் , தன் வேலைகளை பார்க்கச் சென்றாள் ராசி.
" அவருக்கு BP செக் செய்து நாளாகி விட்டதே.டாக்டரிடம், செக் அப்பிற்கு போக வேண்டுமோ ?" சின்ன வருத்தம் எட்டிப் பார்த்தது ராசி மனதில்.
" சிறிது நேரத்திற்கெல்லாம் ஆபிஸ் கிளம்பினார் விஷ்ணு. போகும் போது
," இன்று மாலை நான் சீக்கிரம் வந்து விடுகிறேன். மாலை வடபழனி போய் வருவோம். " என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்.
"சரி , என்ன திடீர் கரிசனம் இவருக்கு. ? எவ்வளவு நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். திடீரென்று இன்றைக்குப் போகலாம் என்கிறாரே!"
எப்படியோ இன்றைக்காவது போகலாம் என்கிறாரே. முருகன் தரிசனம் கிட்டப் போகிறது நமக்கு என்று மகிழ்ந்து கொண்டாள் ராசி.
மத்தியானம் ஒரு மணியிருக்கும். போன் அலறி ,ராசியின் மதியத் தூக்கத்தைக் கெடுத்தது.
போனை காதருகில் கொண்டு போனதும் "ஹலோ" என்றார் விஷ்ணு.
" இவர் ஏன் இந்த நேரத்தில் பொன் செய்கிறார்.நானே போன் செய்தால் கூட ஆபீஸ் நேரத்தில் ஏன் தொல்லை செய்கிறாய் " என்று தானே எரிந்து விழுவார்.
என்று சற்றே ஆச்சர்யபட்டாள் ராசி.
" இன்றைக்கு ஏதாவது உனக்குப் பிடித்த ஸ்வீட் செய்யேன் " என்று விஷ்ணு கேட்க , நன்றாகவே குழம்பினாள் ராசி.
"என்ன ஆச்சு இவருக்கு? சென்ற வாரம் நான் டாக்டரிடம் " ஹெல்த் செக் " செய்தேனே.அதில் ஏதாவது வில்லங்கமோ?
எனக்கு ஏதாவது வியாதி வந்து முற்றி விட்டதோ? அது தான் என் மேல் கரிசனமாய் பேசுகிறாரோ?. எனக்குப் பிடித்த ஸ்வீட் செய் என்கிறாரே. எல்லாமே நார்மல் என்று டாக்டர் சொன்னதாய் தான் நினைவு.
என்னையே தானே ஸ்வீட் செய்ய சொல்கிறார். நாம் நினைப்பது போலெல்லாம் இருக்காது" என்று சமாதானபடுத்திக் கொண்டாலும்,
தன் மேல் சுய பச்சாதாபம் , மேலோங்கியது ராசிக்கு.திரும்பவும் எல்லா மெடிக்கல் ரிபோர்ட்ஸ் எல்லாம் எடுத்துப் பார்த்ததில் , எல்லாமே நார்மல் என்று தான் சொல்லியது ரிப்போர்ட் .
மாலை ஆறு மனிக்கு ,. " கோவிலுக்கு போக ஏன் கிளம்பவில்லை ?" என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் விஷ்ணு.
பதிலே சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள் ராசி.
"என்ன யோசனை? கிளம்பி வாயேன் . எத்தனை நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறாய். போய் முருகனிடம் நீ வேண்டுமென்கிற நேரம் , பேரம் பேசி, வேண்டி ,விண்ணப்பித்து விட்டு வா. நான் உன்னை அவசரப்படுத்தவே மாட்டேன் .ஆமாம். உன்னை ஸ்வீட் செய்ய சொன்னேனே ? என்ன ஆச்சு ? "என்று விஷ்ணு கேட்க.
(விஷ்ணுவிற்கு மனதில் நம் 'டேமேஜ்' ஆன பெயர் இன்று 'ரிப்பேர்' செய்யப்பட்டு விட்டது என்கிற பெருமிதம் தோன்றியது.)
"இல்லை ஒன்றும் செய்ய வில்லை. அலுப்பாக இருந்தது . அதனால் தான் செய்யவில்லை." ராசி.சொல்ல.
" சரி வா, முருகனை நீ பேட்டி கண்டு விட்டு வா. நாம் அப்படியே சரவண பவனில் சாப்பிட்டு விட்டு வருவோம்." என்று ராசியை கிளப் பி அழைத்துக் கொண்டு போனார்.
காரில் ,எப்பொழுதும் வீணை காயத்ரியின் " raga waves ' அலை அடித்துக் கொண்டிருக்கும்.இன்றோ ராசிக்கு மிகவும் பிடித்தமான சூலமங்கல சகோதரிகள் " காக்க காக்க " என்று பாடிக் கொண்டிருக்க , ராசிக்கு தன் ஆரோக்கியத்தின் மேல் சந்தேகம் வலுத்தது.கோவிலுக்குப் போய் அர்ச்சனைத் தட்டு வாங்கிக் கொண்டு ,
இருவரும் உள்ளே சென்றனர். .
"இன்றைக்கு அர்ச்சனை உன் பேரில் தான் " இது விஷ்ணு.
" ஏன் ? என் பெயருக்கு? " குரல் நடுங்கக் ராசி கேட்கவும், விஷ்ணு ,
"நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்.எப்பவும் போலவேயில்லையே நீ.
என் மேல் கோபமோ? உன் பிறந்தநாளை மறந்து விட்டேன் என்று தானே! உனக்கு சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று தான் காலையிலிருந்து வாழ்த்த்து சொல்லவில்லை.. இப்பொழுது சொல்கிறேன்," பிறந்தநாள் வாழ்த்துக்கள் "
என்று சொன்னவுடன், தன்னுடைய பயம் பொய்யான திருப்தியில், 'கலகல'வென்று சில்லறையைக் கொட்டியது போல் சிரித்தாள் ராசி.
" பார்த்தியா இந்த வருடம் கரெக்டாக நினைவில் வைத்து உன்னை வாழ்த்திவிட்டேனே . அது மட்டுமில்லை. உனக்குப் பிடித்த புடைவை வேண்டுமானாலும் வாங்கிக் கொள் ,இன்று" என்று சொல்லவும்.
தெரு என்பதையும் மறந்து ,சிரிப்பை அடக்க மாட்டாமல், ராசி சிரிக்க விஷ்ணு குழம்பினார்.
"என்ன ஆச்சு சொல்? எதற்கு சிரிக்கிறாய்?" விஷ்ணு கேட்க,
"சிரிக்காமல் என்ன செய்ய? மனைவியின் பிறந்த நாளை கரெக்டாக ஒரு மாதம் கழித்துக் கொண்டாடுகிற கணவர் நீங்களாகத் தான் இருக்க முடியும் . என் பிறந்த நாள் ,போன மாதம் இதே தேதி.. .(என் அர்த்தமற்ற பயம் பொய் ஆனது ஒரு பெரிய சந்தோசம் என்று மனதில் நினைத்துக் கொண்டு), நீங்கள் இன்று தான் என் பிறந்தநாள் என்று சொல்வதும் எனக்கு சந்தோஷமே! ஏன் சொல்லுங்கள் பார்க்கலாம்?" ராசி வினவ ,
விஷ்ணு முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழிய, தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்க, ராசியே சொன்னாள் ,
" இன்று கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள். அவருடையதைப்போல் என் பிறந்த நாளும் இன்றே என்று சொன்னதற்காகத் தான் " என்று சொல்லிக் கொண்டே , ராஜ அலங்காரத்தில் கம்பீரமாய் வேலுடன் நின்ற வடிவேலனை பார்த்து ,இனம் புரியாத நிம்மதியுடன் ,கன்னத்தில் போட்டுக் கொண்டாள் ராசி.
ஆக ,விஷ்ணுவின் கணக்கு இந்த வருடமும் தப்பு தான்.
ராசிக்கோ, தன் கணக்கு தப்பானதில் பெரு மகிழ்ச்சியே!
சரி, ராசிக்கு "Belated Wishes" சொல்லி விட்டு அந்தத் தம்பதியை , தனிமையில் விட்டு விட்டு நாமும் நகர்வோம்.
image courtesy--google.