Monday 11 November 2013

கோல்டன் " Zero "







" 49 O "என்ற தேர்தல் ஒட்டுக் கருவியின்  கடைசி பட்டனைப் பற்றிய  பதிவு என்று நினைக்கிறீர்களா?  

 இல்லை.

 ஆசிரியையாய்  இருந்ததால் ,எனக்கு  பூஜ்யத்தின் மேல் தனி அபிமானமோ  என்றும்  நினைக்க வேண்டாம்.

இணையத்தில் படித்த ஒரு விஷயத்தைப் பற்றித் தான் இது.
உண்மைச்  சம்பவம் என்கிறது மெயில் .

ஆஸ்திரேலியாவில் ஒருவருக்கு மாதாந்திர  ' கேஸ் '(cooking gas)  பில்  வருகிறது. நம்மைப் போல் சிலிண்டர் இல்லை போலிருக்கிறது.' கேஸ் 'பைப்ப்பில் வரும் என்று நினைக்கிறேன். அதனால் மாதாந்திர பில்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது வரை அவர் ' கேசை ' உபயோகிக்கவில்லை  என்பது தான். அதனால்  'ஜீரோ டாலருக்கு ' பில் வருகிறது.நண்பர் சும்மா இருந்து விடுகிறார். இது அறியாமல் நடந்த தவறு. அதனால் அவர்களே சரி செய்து விடுவார்கள் என்று.

அடுத்த மாதமும், அதற்கடுத்த மாதமும் அதே ' ஜீரோ  டாலருக்கு 'பில் வருகிறது. அதுவும் உடனே கட்டணத்தை செலுத்த சொல்லி.
(அவர் வீட்டில் சமைக்கவே மாட்டாரா? காபி  .... இல்லையில்லை  வெந்நீர்.......அது கூட  வைத்துக் கொள்ள மாட்டாரா? என்று கேட்காதீர்கள்.
அவருக்கு திருமனமாகவில்லையோ என்னவோ? உடனே ,இளகிய  மனதுடையவர்கள் , பாவப்பட்டு அவருக்குப்  பெண் பார்க்க கிளம்பி விடப் போகிறீர்கள்.. நம்மூர்  பையன்களே,  பெண் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். இதில் அவருக்கெல்லாம் நம் ஊர் பெண் எதற்கு?. )

இப்பொழுது அந்த நண்பர்  கேஸ் கம்பெனிக்கு போன் செய்ய , அவர்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்து, சரி செய்கிறோம் என்று சொல்லி விட்டனர். நண்பரும் நிம்மதி பெருமூச்சு விட்டார். ஆனால் அந்த நிம்மதி அடுத்த மாத பில்  வரும் வரை  தான். அடுத்த மாதமும் இதே கட்டணத்திற்கு பில்.

அவர் எரிச்சலாகி இந்தத் தொல்லையிலிருந்து எப்படி விடுபடலாம் என்று யோசித்தார்.இதற்கு  ஒரே வழி  'கேஸை ' கொஞ்சமாவது உபயோகப் படுத்துவது தான்  என்று தீர்மானித்து, 'கேஸை 'உபயோகிக்க போனால் , இவர் பில் பணம் கட்டாததால்  இவர் 'கேஸ் 'இணைப்புத் துண்டிக்கப் பட்டிருந்தது.அதோடு இன்னும் பத்து நாட்களில் பணம் கட்டும்படி ஒரு கடிதமும் வந்திருந்தது.

சரி, இவர்கள் மொழியிலேயே நாமும் பேசலாம் என்று    'ஜீரோ' டாலருக்கு செக் எழுதி 'கேஸ்' கம்பெனிக்கு அனுப்பி விட்டார்.'கேஸ்' கம்பெனியும் உங்கள் பில் செட்டிலாகி விட்டது என்று செய்தி அனுப்பி விட்டது.
(காமெடியாயில்லை!)

பிறகு தான்  விஷயமே இருக்கிறது.

இரண்டு மூ ன்று நாட்களுக்குப் பிறகு வங்கி மேனேஜர் நண்பரை போனில் தொடர்பு கொண்டு  "எதற்கு  ஜீரோ டாலருக்கு செக் கொடுக்கிறீர்கள் ?"என்று கோபப்பட  , இவர் விவரத்தை சொல்லியிருக்கிறார்.
அதற்கு அந்த மேனேஜர், " உங்கள் "செக்"கால் எங்களுக்கு அன்றைய  அலுவல்கள் எதையும் செய்ய முடியாமல் கம்ப்புட்டார்  க்ரேஷ்  ஆகிவிட்டது . எங்கள் வாடிக்கையாளர்கள் நிறைய பேரின்  செக்  திருப்பியனுப்பும்படியாகி விட்டது. அதற்காக உங்கள் மேல் நாங்கள் நஷ்ட ஈடு  வாங்க கோர்டுக்குப் போகலாம் ," என்று பொரிந்து தள்ளி  விட்டார்.

இப்படியும் ஒரு தொல்லையா? முன்னே போனால் முட்டுகிறது, பின்னே வந்தால் உதைக்கிறது என்று நினைத்திருப்பாரோ நம் நண்பர்.

'கேஸ்' கம்பெனியும்  ஒரு வாரத்திற்குப் பிறகு இவருடைய  செக்   திரும்பி விட்டது என்கிற  காரணத்தைக் காட்டி , உடனே பணத்தைக் கட்டாவிட்டால் கோர்ட்டிற்கு இழுப்பதாக மிரட்டியது.

"நீங்களெல்லாம்  என்ன என்னை  கோர்டுக்கு இழுப்பது. நானே போகிறேன் " என்று நண்பர் சட்டத்தின் உதவியை நாடியிருக்கிறார். முதலில் இவருக்காக வாதாடுவதற்கே  எந்த வக்கீலும் தயாராகயில்லை  .('ஜீரோ டாலருக்கு'  ஒரு கேசா ? என்கிற இளக்காரம் தான் ). பெரும் முயற்சிக்குப் பிறகே இவர் கோர்ட்டில் வக்கீல் வைத்து வாதாடி  வெற்றி பெற்று, கேஸ் கம்பெனியிடமிருந்து  நஷ்ட ஈடு  பெறுவதற்கான கோர்ட் ஆர்டர் வாங்கியிருக்கிறார்.

கோர்ட் ஆர்டர் ,  கேஸ் கம்பெனிக்கு  ,
1. அவர்களுடைய கம்ப்யுட்டரின் தானியங்கி  பில்  போடும்  முறையை சீரமைக்கவும் ,
௨. நண்பருக்கு  அவருடைய  செக் திருப்பட்டதற்கான செலவையும்,
3.வங்கி  வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட  கஷ்டத்திற்கான நஷ்ட ஈடும்,
4.நண்பரின்  கோர்ட்  செலவையும்,
5. நண்பரின்  மன உளைச்சலுக்காக  கணிசமான  பணம் கொடுக்கும்படியாகவும்  
அறிவுறுத்தப் பட்டிருந்தது.

இத்தனையும்  "ஜீரோ" டாலருக்காகத் தான்.   அந்த ஜீரோ  " கோல்டன் ஜீரோ " தானே!

இதைப் படித்ததும்  உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
"நமக்கு கேஸ் , சிலிண்டரில் தானே வருகிறது. நாம் பணமாகத்தானே சிலிண்டர்  போடுபவரிடம்  கொடுக்கிறோம்.அதனால் இந்தத் தகராறு  எல்லாம் இங்கே வராது.இந்த  மாதிரி  நாம் கோர்டுக்கு  செலவு செய்வோமா ?
 நேரமும் , பணமும் இங்கே கொட்டியா கிடக்கிறது?
மேலும் இந்த  ஜீரோவைக் கண்டு பிடித்ததே இந்தியர்களாகிய நாம் தானே .அதனால் இந்த ஜீரோ எல்லாம் நம்ம கிட்டே ஒன்றும் வாலாட்டாது.நம்மவர்கள் அவ்வளவு மோசமும்  இல்லை. இப்படிப் பட்ட பில் எல்லாம் நமக்கு வராது . அப்படியே தவறுதலாக  வந்தாலும்  கோடிக்கணக்கில் தானே இருக்கும் ." என்று தானே நினைத்தீர்கள்.

நானும் அப்படித் தான் நினைத்துக் கொண்டு  , லாப்டாப்பை  மூடி விட்டு காபி போட, உள்ளே செல்ல எழுதேன்.

டிவி மேலிருந்த ,செல்போனிடமிருந்து   செல்லமாய் ஒரு சின்ன சினுங்கல் .
பார்த்தால்  எஸ்.எம்.எஸ். வங்கியிலிருந்து.

அலட்சியமாய் திறந்து பார்த்தால்  ," உங்கள் க்ரெடிட்  கார்டுக்கு நீங்கள் கட்ட வேண்டிய தொகை Rs.0.00. "அதோடு  இதைக் கட்ட வேண்டிய கடைசி தேதியையும் குறிப்பிட்டிருந்தது.

வங்கியும் , செல்போனும் என்னைப் பார்த்து  ,"இப்ப என்ன  செய்வே ? இப்ப என்ன செய்வே? " என்று  நக்கலடிக்கிறதோ !
                                                           


images courtesy---google.                                                         

22 comments:

  1. வங்கியும் , செல்போனும் என்னைப் பார்த்து ,"இப்ப என்ன செய்வே ? இப்ப என்ன செய்வே? " என்று நக்கலடிக்கிறதோ !

    திரும்பவும் முதலிலிருந்து.....

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது போல் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  2. தொகை Rs.0.00.
    >>
    இது என்ன மாளாத தொகையா!? ஒரு எட்டு போய் கட்டிட்டு வாங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த மாதிரி கட்ட முடியுமானால் இப்படி ஒரு பதிவே போட்டிருக்க மாட்டேனே!
      அது தானே பிரச்சினையே!\
      நன்றி ராஜி.

      Delete
  3. ஹா...ஹா... நல்ல ஜீரோ அனுபவம்தான். ஆனால் Gas என்றாலே எனக்கு ஆதார் கார்ட் ஞாபகம் வந்து அஸ்தியில் ஜுரம் காண்கிறது! எங்கள் ஏரியாவுக்கு ஆதார்க் காரர்கள் வருவதாகவே தெரியவில்லை. 3 மாதத்துக்குள் ஆதார் எண் தராவிட்டால் சமையல்வாயு மானியம் கிடையாது என்று மெசேஜ் வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் சார்,
      நீங்கள் எங்கு வேண்டுமானாலும் ஆதார் கார்டுக்கு பதிவு செய்யலாம் என்று தான் நினைக்கிறேன். அதற்கெனசில சென்டர்கள் இருக்கிறதே! உதாரணத்திற்கு, பண்டி பஜார் போஸ்ட் ஆபிசில் செய்கிறார்கள். நானே பார்த்தேன். அவர்களுக்கு வேண்டியது நீங்கள் சொல்லும் விவரங்களுக்கு ஒரு ப்ரூஃப் அவ்வளவு தானே! நீங்கள் ரொம்பவும் கவலைப் படுவதால் சொன்னேன்.

      என் பதிவை ரசித்துப் படித்து கருத்திட்டதற்கு நன்றி சார்.

      Delete
  4. ஜிரோவால் ஹீரோ ஆகிவிட்டாரோ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா உங்கள் கருத்திற்கு.

      Delete
  5. ஹா...ஹா... நல்ல ஜீரோ அனுபவம்தான். தொகை Rs.0.00. "உங்களுக்கு இந்த தொகையை எப்படி செலுத்துவது சென்று தெரியவில்லையா அப்படியானால் 0 க்கு முன்னால எத்தனை நம்பர் வேணுமுனாலும் சேர்த்து எனக்கு அனுப்பிவிடுங்கள். அந்த எஸ் எம் எஸ் அனுப்பியது நான் தான்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தான் எஸ்.எம்.எஸ் அனுப்பியதா? நான் அங்கு வரும் போது கண்டிப்பாக Rs.0.00 கொடுத்து விடுகிறேன் MTG.
      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  6. இதெல்லாம் இந்தியாவில் நடக்காது அம்மணி! ஜீரோ வந்தால் ஏற்றுக்கொள்ளாதே என்று புரோக்ராம் எழுதியிருக்கிறோம்! (எனக்கும் கம்ப்யூட்டர் கொஞ்சம் தெரியுமாக்கும்!) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

    ReplyDelete
    Replies
    1. தேசிய மயமாக்கப் பட்ட வங்கியிலிருந்து வந்த எஸ்.எம்.எஸ் Rs,0.00 கட்டுவதற்கு கடைசி தேதியை வேறு குறிப்பிட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் தான் இந்தப் பதிவு எழுதத் தோன்றியது.
      நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  7. மிகவும் அருமையான நகைச்சுவைக்கதை. பல இடங்களில் நான் வாய்விட்டுச் சிரித்தேன்.

    எனக்கும் சமீபத்தில் இதுபோல ஒரு சில நிகழ்வுகள் மிகவும் வேடிக்கையாக ஓர் வங்கியில் டெபாசிட் செய்ததில் நடந்தது.

    அதைப்பற்றி பதிவு எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் ஏனோ வணங்கவே இல்லை.

    மெயில் மேல் மெயில் அந்த வங்கியின் உயர் அதிகாரிகள் [Top to Bottom ] எல்லோருக்கும் கொடுத்து வங்கி மேலாளரை அலற வைத்து விட்டேன்.

    நேராக என் வீடு தேடி வந்து என்னை சமாதானம் செய்து, புகாரை திரும்பப்பெற்றுக்கொள்ளுமாறு கெஞ்சினார்.

    நானும் போனாப்போறார் என்று விட்டுக்கொடுத்து விட்டேன்.

    இது 0 Balance Case. அது அப்படியல்ல மிகச்சிறிய தொகைதான். Smallest Amount only.

    -=-=-=-
    Computer Programming & Calculation Mistakes in Rate of Interest Offered & Actually Allowed for Fixed Deposits.
    -=-=-=-

    பாராட்டுக்கள். நகைச்சுவைப்பதிவுக்கு நன்றிகள். கடைசியில் உங்களுக்கே அப்படி ஆகிவிட்டதாக எழுதியிருப்பது தான் மிகவும் சிரிப்பாக உள்ளது. ;)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கோபு சார். நிஜமாகவே எஸ்.எம்.எஸ் வந்து கொண்டிருக்கிறது. அதை பதிவாக்க சரியாக இந்த மெயிலும் வந்து சேர்ந்தது. ஒரு பதிவு தேற்றி விட்டேன்.
      நன்றி சார், உங்கள் வருகைக்கும், உங்கள் கருத்துக்கும்.
      ஆனாலும் வங்கி அதிகாரிகளை இப்படி பயமுறுத்தி விட்டீர்களே!

      Delete
  8. பூஜ்ஜியத்திற்கு, ஒரு எண்ணிற்கு பின்னால் மட்டுமல்ல, $ 0 பில் என்றாலும் மதிப்பு உண்டுபோல் தெரிகிறது. வம்பாயிடப்போவுது, எதுக்கும் சீக்கிரமே Rs 0.00 பில்லை கட்ட ஏற்பாடு செஞ்சிருங்க!.செய்தியை நகைச்சுவையுடன் பகிர்ந்துகொண்டது சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அந்த பிள்ளை கட்டுவதன் வழி தெரியாமல் தான் பதிவாக்கியிருக்கிறேன் சித்ரா.
      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  9. சைபருக்கு எத்தனை மதிப்பு பாருங்கள்! உண்மையிலேயே கோல்டன் ஜீரோ தான்!!

    ReplyDelete
    Replies
    1. சைபரின் மதிப்பை பார்த்தீர்களா?
      நன்றி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  10. வித்தியாசமான அனுபவமும்செய்தியும்
    அதை அருமையான பதிவாக்கித்
    தந்தவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார் உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

      Delete
  11. வித்தியாசமான அனுபவம் தான்.... சில சமயங்களில் கணினிகள் கட்டளைகளை ரொம்பவே வித்தியாசமாக எடுத்துக் கொண்டுவிடுகின்றன! - சில வங்கிகளில் க்ரெடிட் கார்டுக்கான பில் அனுப்பும்போது கட்டவேண்டிய தொகை 0.00 எனில் பில் generate ஆகாதபடி வைத்திருப்பார்கள்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .

      Delete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்