Sunday 25 May 2014

ராசியும் அமெரிக்காவும்.

மாலை ஐந்து மணிக்கு  ஆபிசிலிருந்து வீடு திரும்பிய விஷ்ணுவிற்கு  ஆயாசமாயிருந்தது.  வெயிலின் தாக்கம் மிக அதிகம்.
" அக்னி நட்சத்திரம்  ஆரம்பித்தவுடன்  எப்படி கொளுத்துகிறது வெயில்.
உஸ்........அப்பாடா......கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாயேன் ராசி. " என்று சொல்லிக் கொண்டே கண்ணாடியைக் கழட்டி டீபாயின் மேல்  வைக்கப் போனார்.

 " இதென்ன  புல் மாதிரி ஏதோ இருக்கிறதே " என்று எண்ணிக் கொண்டே கழட்டிய கண்ணாடியைப் போட்டுக் கொண்டு அதைக் கையில் எடுத்துப்  பார்த்தார் விஷ்ணு. புல்  மாதிரியும்  இல்லையே என்னவாயிருக்கும் என்று யோசிக்கும் போதே  தண்ணீருடன் ஆஜரானாள்  ராசி.

" அது மூங்கில் செடி " ராசி சொல்ல,

' அதை ஏன்  டீபாயின்  மேல் வைத்திருக்கிறாய்? வெளியில் அல்லவா மண்ணில் வைக்க வேண்டும் ' என்று விஷ்ணு கேட்க ,

" இல்லை இது வீட்டில் இருந்தால்  சுபிட்சம் வரும்."  ராசி பதில்சொன்னாள் .

" ஏன்  இப்போ சுபிக்ஷத்திற்கு  என்ன குறைச்சல்?  நாம் நன்றாகத்தானே இருக்கிறோம்." என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார் விஷ்ணு.

அதைப் பற்றி பிறகு மறந்தும் போனார் என்றே சொல்ல  வேண்டும். அன்று இரவு படுக்கப் போகு முன் கண்ணில் பட்ட மூங்கில் செடியை அலட்சியம் செய்தபடி  படுத்தார். ஆழ்ந்த உறக்கம்.

அவர் அலட்சியமாய் பார்த்த மூங்கில் செடிகளெல்லாம்  ஒங்கிஉயர்ந்து பெரிய மரங்களாய் , கண்ணிமைக்கும் நேரத்தில் மூங்கில் காடாய் மாறியிருந்தன.உய் .....உய் ....என்று மூங்கில்கள்  உராயும் சத்தம் கேட்டது.

ஆமா. ஏன் இந்த மூங்கில் தோப்பு  நம் வீட்டிற்குள் இருக்கிறது. டிவியும், டீபாயும், சோபாவும்  மூங்கில் காட்டுக்குள் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாகி இருந்தன .  ஏசி குளிர்ச்சியையும் தாண்டி குப்பென்று வியர்த்து முழித்து விட்டார் விஷ்ணு.

ஓ ............ இத்தனையும் கனவா? ஆங்கிலப்படம் Jumanji யில் வருவது போலல்லவா  இருக்கிறது. இந்த சின்ன முங்கில்  செடிகளா இவ்வளவு பயமுறுத்தியது.  ராசியைப் பார்த்தார் விஷ்ணு. சன்னமான குறட்டை  சத்தம் வந்தது. எழுந்து போய் ஜில்லென்று  ஐஸ் வாட்டர் குடித்து  விட்டு வந்து படுத்தார்.  அயர்ந்து தூங்கியும் விட்டார்.

மறு நாள் மாலையில் சாதரணமாக ராசியை விசாரித்தார் விஷ்ணு," யார் உனக்கு இந்த ஐடியா கொடுத்தார்கள்? "

" எந்த ஐடியா ? "

"அதான் மூங்கில் காடு ஐடியா "

" மூங்கில் செடி தானே. அது எப்போ காடானது? "   ராசி திருப்பிக் கேட்க ,

" சரி , காடோ செடியோ ? யாரோட பரிந்துரை? " விஷ்ணு எரிச்சலானார்.

" அதுவா? குக்கர் கேஸ்கட் வாங்கப் போன போது  கல்லாவருகில் இதைப் பார்தேன். விசாரித்ததில் கடைக்காரார் தான் சொன்னார். ,இது வைத்தால் அதிர்ஷ்டமாம் .அதற்காகத் தான் வாங்கினேன்." ராசி விஷ்ணுவை சமாதானப் படுத்த முயன்றாள் .

" சரி எவ்வளவு  தண்டம் செய்தாய் இதற்கு? " என்று கோபத்தோடு விஷ்ணு கேட்க,

" நான் எதையும் புதிதாக செய்தால்  உங்களுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விடுகிறதே?  நான் என்ன என் நல்லதுக்காகவா செய்தேன் இதை? நம் குடும்பத்தினரின் நல்லதுக்குத் தானே செய்தேன்? "ராசியின்  கோபம் அழுகைக்கு மாறும் அபாய விளிம்பில்  நின்றதைப் பார்த்து, விஷ்ணு ,

" எவ்வளவு என்று தானே கேட்டேன். சொல்லி விட்டுப் போயேன்.?"என்று மீண்டும் கேட்க,

" இருநூறு ரூபாய் " பட்டென்று பதில் வந்தது ராசியிடமிருந்து .

அன்று இந்த விவாதத்திற்கு அத்துடன்  முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.

ஒரு வாரம் ஆகியிருக்கும்.  வீட்டின் முன் வாசல்  அருகில் டிசைன் போட்ட கண்ணாடி வந்திருந்தது. இதென்ன முகம் பார்க்கும் கண்ணாடி  வீட்டின் முன் வாசலில்.  யோசித்துக் கொண்டே  உள்ளே நுழைகையில் ராசியின் குரல் தடுத்தது.

" அதைப் பார்த்து விட்டே உள்ளே வாங்க. " ஆர்டர் போட்டாள் ராசி.

இது வேறேயா....நினைத்துக்கொண்டேவிஷ்ணு," எதற்குவம்பு?பார்த்து விட்டே உள்ளே போவோம்.இல்லையென்றால்  அதற்கு வேறு ராசி கண்ணைக் கசக்குவாள்  " என்று  நினைத்துக் கொண்டே உள்ளே போனார் விஷ்ணு.

" கண்ணாடி  எதற்கு என்று கேட்க மாட்டீர்களா? " ராசி கேட்க,

"சரி சொல்லு தெரிந்து கொள்கிறேன்." விஷ்ணு சொல்ல, திருமபவும் ராசிக்குக் கோபம் தலைக்கேறியது. எதையோ முணுமுணுத்துக் கொண்டே உள்ளே சென்றாள்  ராசி.

இது எங்கோ பெரிய வம்பில் போய் முடியப் போகிறது என்பது மட்டும் விஷ்ணுவிற்குப் புரிந்தது. வரும் போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று டிவியில் தேர்தல் செய்திகளில் ஆழ்ந்தார்.

எல்லாம் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு ராசி  ஒரு வாரத்திற்கு  ஒன்றும்  செய்யவில்லை. சமாதானமானார் விஷ்ணு.

மறு நாள் மாலையில் ஆபிசிலிருந்து  உள்ளே நுழையும் போது  " முகம் பார்க்கும் கண்ணாடியில்  பார்த்து விட்டு வாங்க " என்று அவள் சொன்னது நினைவிற்கு வந்து  கேலியான புன்சிரிப்பு ஒன்று அவர் முகத்தில் தோன்றி மறைந்தது.

கதவு திறந்தே இருந்தது.  உள்ளே வரவேற்பறையில்,  தூக்க முடியாமல் மூட்டையைத் தூக்கிக் கொண்டு "தக தக"வென  , ஒரு குள்ள மனிதன் தங்க நிறத்தில் சிரித்தபடி நின்றிருந்தான். " Money Back Happy Man " ற்கு எவ்வளவு செலவு செய்தாளோ  என்று பெரும் கோபத்துடன், " ராசி ராசி " என்று குரல் கொடுக்கவும்.

தொந்தியும்  தொப்பையுமாய்  ஒரு மனிதன் இவரை ஏற  இறங்கப்  பார்த்து விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தான். " நான் நாளை உங்களுக்கு போன் செய்கிறேன்.  பிறகு நீங்கள் மீன் தொட்டியை இங்கே  வைக்கலாம். " என்று சொல்லி அந்த ஆளை வழியனுப்பிக் கொண்டிருந்தாள் ராசி..


" யார் இந்த மனிதர்?  நீ என்ன செய்கிறாய் ? வாஸ்து பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறாய் ராசி. இதெல்லாம் நல்லதுக்கில்லை."என்று விஷ்ணு  அதட்டவும்,

": இவர் வாஸ்து நிபுணர்."என்றாள்  ராசி.

" உனக்கு எப்படித் தெரியும் அவரை? " கேட்டார் விஷ்ணு.

" மூங்கில் செடி விற்ற கடைக் காரர் தான் இவர் அட்ரெஸ் சொன்னார். நான் தான்  அவரை போன் செய்து வரவழைத்தேன். " என்றாள்  ராசி.

கடைக்காரரும். இந்த டுபாக்கூர்  வாஸ்து நிபுணரும்  ராசியை நன்றாகவே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்  என்பது விஷ்ணுவிற்கு புரிந்தாலும் , தான் என்ன சொன்னாலும் எடுபடாது என்றும் புரிந்தது.

"நாளை ஃபிஷ்  டாங் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். Black Molly  fish வீட்டில் நம் கண்ணெதிரில் நீந்திக் கொண்டிருந்தால் நமக்கு  நல்லது நடக்குமாம். "

" என்னவோ போ ? நல்லது நடக்காவிட்டாலும், பரவாயில்லை. கெட்டது எதுவும் நடக்காவிட்டால் சரி " என்று அலுத்துக் கொள்ள மட்டுமே முடிந்தது விஷ்ணுவால்.

" நீங்கள் எப்பவுமே இப்படித்தான். நாம் பாசிட்டிவ் ஆகவே நினைத்தால் நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி  இருக்கும் " என்று லெக்சர் கொடுத்த  ராசியை ஆச்சர்யத்துடன் பார்த்து  விஷ்ணு கிண்டலாய் , " அப்புறம் "....என்று சொல்ல ,

" நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்தால் ராஜ களை  தெரிகிறது . வீட்டு வாஸ்து சரியில்லை. அதற்கு தான்  நிவர்த்திகள் தேவை.. அப்புறம் பாருங்கள்  நீங்கள் தான் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி என்று வாஸ்து நிபுணர் சொல்லி விட்டு சென்றிருக்கிறார் " என்று ராசி முடிக்க , விஷ்ணுவிற்கு தலை சுற்றியது.

ராசி....... அமெரிக்க ஜனாதிபதியா?  இவள் அமெரிக்காவை  உலகவரை படத்திலாவது  பார்த்திருப்பாளா?  இவள்  ஆட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்கிற ஆராய்ச்சியில்  இறங்கினார் விஷ்ணு.எவ்வளவு செலவாகப் போகிறதோ தெரியவில்லையே  என்று தலையில் கை வைத்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துள்ளார் .

"இன்னும் எவ்வளவு செலவு வைக்கப் போகிறாளோ? இதிலிருந்து எப்படி  விடுபடுவது.? "என்கிற பலத்த யோசனையில்  விஷ்ணு.

 அவருக்கு இப்போது தேவை இதிலிருந்து ராசி விடுபட ஒரு யோசனை.
 ராசி மட்டுமா விடுபட வேண்டும். விஷ்ணு பர்சும்  கூடத்  தான்.

உங்களின் எந்த யோசனையானாலும்  விஷ்ணு அதை பரீசிலிக்கும்  மனநிலையில் தான் உள்ளார்.

உங்கள் யோசனைகளை தாரளமாக  சொல்லுங்கள் விஷ்ணுவைக் காப்பாற்றுங்கள்.


image courtesy---google

Monday 19 May 2014

அழைப்பு தந்த வெகுமதி


பிரபல பதிவர் திரு.வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால்  நடத்தப்படும்  கதை விமரிசனப் போட்டி  யாவரும் அறிந்ததே .  அனைத்து வாரமும் அந்த்ப போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடிவதில்லை என்றாலும் சில கதைகளுக்கு விமரிசனம் எழுதி வருகிறேன்.அதில்  'அழைப்பு ' என்கிற அவருடைய சிறுகதைக்கு  நான் எழுதியுள்ள விமரிசனம்  முதல் பரிசைத் தட்டிச்  சென்றுள்ளது.மகிழ்ச்சியடைந்தேன். முதல் பரிசினை என்னுடன் திரு. ரவிஜியும் வென்றுள்ளார்   என்பது கூடுதல்  மகிழ்ச்சியே!

பரிசு பெற வாய்ப்பளித்த கோபு  சாருக்கும், என் விமரிசனத்தைப்  பரிசுக்குரியதாய் தேர்ந்தெடுத்த நடுவருக்கும்  என் மனமார்ந்த நன்றிகள்.


பரிசு பெற்ற என்னுடைய விமரிசனம் இதோ:

மங்களகரமான  திருமண அழைப்பிதழ் பற்றி  எழுதியிருப்பதைப்   படிக்கும் போது , வாசகர்கள் பலரும்  அவரவர் வீட்டில் நடந்த திருமண சம்பவங்களின்
தொகுப்பை  நினைவடுக்குகளிலிருந்து  உருவி எடுத்திருப்பார்கள்  என்பதில்
சந்தேகமேயில்லை. வாசகர்களை மகிழ்ச்சியான மன நிலைக்குக் கொண்டு போகும்  ஆசிரியருக்கு முதலிலேயே ஒரு பெரிய ' சபாஷ் '.

அனுபவங்கள்  தான் கதையாய்  மலர்கின்றன போலும்.. " அழைப்பு " படிக்கும்
போது இந்த என் எண்ணம் மேலும் வலுப்பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
அழைப்பிதழ் நாமே அச்சிட்டு  வினியோகிக்கும்  போது, அதற்குக் கொடுக்கும்
மரியாதையும், அதுவே நாம் அந்த அழைப்பிதழை பிறரிடமிருந்து பெறும் போது அதற்குக் கொடுக்கும்  முக்கியத்துவமும்  வேறு படும். .அதை நாம் இல்லை  என்று மறுக்க முடியாது. அதையே ஆசிரியரும் அழகியக் கதையாய்
பின்னியிருக்கிறார்.

ஆசிரியர் சொல்வது போல் , திருமணத்திற்கான வேலைகளை செய்வதற்கு,
காண்ட்ராக்டர்கள் இருக்கலாம். ஆனால் அழைப்பிதழ் கொடுக்க வேண்டியது நாம் தானே. நண்பர் சந்திக்கும் கஷ்டங்கள் மிக அழகாக,  யதார்த்தமாக  எடுத்து சொல்லியிருக்கும் விதமே அலாதி தான்.அவர் சொல்வது போல்  வெளியூரில் இருப்பவர்களுக்கு தபாலில்  அனுப்பி விடலாம். அருகிலிருப்பவர்களுக்கு, நெருங்கிய உறவினர்களுக்கு என்று நேரில் அழைப்புக் கொடுக்க செல்லும்  போது  ஏற்படும்  சங்கடங்களை, அழகாய் நேரே பார்ப்பது போல் எழுதியிருப்பதற்குப்  பாராட்டியே ஆக வேண்டும்.

பட்டுப்புடைவை நகை நட்டுடன் மனைவியை  அழைத்துக் கொண்டு போய் எல்லோரையும் அழைக்க மனம் விரும்பினாலும்,வயது, டிவி நிகழ்ச்சிகள், என்று பல தடைகளைத் தாண்டி ,நண்பர் அழைப்பு கொடுக்கப் போகும்  நிகழ்ச்சி விவரிப்பு படு யதார்த்தம்.மாடி, பிளாட், என்று லிப்ட் இல்லாத வீடுகளுக்கு  செல்லும் போது படும் அவதிகள் , வீட்டில் இருப்பவர்கள், கதவைத் திறக்க
தாமதாக்குவது, அப்படியே உடனேயே திறந்தாலும், டிவியில் ஒரு கண் வைத்துக் கொண்டே,  விளம்பர இடைவேளையில்  நம்மிடம் திருமணத்தைப் பற்றி  விசாரிப்பது , அப்படியே அவர்கள் வீட்டு பெண் அல்லது பிள்ளை கல்யாணத்திற்கு அஸ்திவாரம் போடுவது  என்று  உலக நடப்பை  அப்படியே கண் முன் நிறுத்தி விட்டார் ஆசிரியர்.ஆனால்  சங்கடங்களுக்குப் பின்னாடி ஒரு சந்தோஷம் இழையோடுவதை வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதமாக எழுதியதற்குப்   பாராட்டுக்கள்!.

 முன்னொரு சமயம் கடை நிலை ஊழியராயிருந்த ஒருவர் வீட்டிற்கு சென்ற போது தனக்குக் கிடைத்த வரவேற்பைப்  பற்றியும், அவர் கொடுத்த அழைப்பிதழை எப்படி உபயோகித்தார் என்பது பற்றியும் ஆசிரியர் உணர்வுபுர்வமாக எழுதியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பல வீடுகளில் அழைப்பிதழ்கள் படும்  அவதிகளை  வார்த்தைகளால் சொல்லி மாளாது. அதை உள்ளது உள்ளபடி காட்டியிருக்கிறார் ஆசிரியர். அழைப்பிதழ்களுக்கு வாய் இருந்தால் புலம்பித் தீர்த்திருக்கும். அழைப்பிதழ்களின் உள்ளக் கிடைக்கையை வெளியிட்டதற்கு நன்றிகள் பல.

அழைப்பிதழுக்கு நடுவில் ஒரு சின்ன வம்பும் வைத்திருக்கிறார் ஆசிரியர்.
அழைப்பிதழ் கொடுக்கப் போன இடத்தில்  , போனோமோ, அழைத்தோமா என்றில்லாமல் அதுவும் வீட்டிற்கு உரியவர்கள் இல்லாத நேரத்தில், நண்பர் செய்கிற ஆராய்ச்சி நல்ல நகைச்சுவை. முதல் மனைவியா, இரண்டாவது மனைவியா......என்று ஆராய்வது............ ம்........ மனித மனத்தின் இயல்பை  பிட்டு பிட்டு வைத்து விட்டார் ஆசிரியர் என்றே சொல்ல வேண்டும்.

எத்தனை  சங்கடங்கள் வந்தாலும்,   அதை எல்லாம் சுகமான சுமைகளாக  எண்ணி மகிழ்ச்சியுடன் அழைப்பு கொடுக்கிறார் நண்பர் என்று சொல்லும் போது ஆசிரியரின் மகிழ்ச்சியும் அங்கே வெளிப்படத் தவறவில்லை.
திருமண நாளன்று , நண்பர் வீட்டுத் திருமணத்திற்கு சென்ற அனுபவத்தை  மிக சுவையாக ஒரு ஓவியமாக, வண்ணமாய் தீட்டி விட்டார் என்றே சொல்ல வேண்டும்,

முகப்பில் செண்ட் அடிப்பதில் ஆரம்பித்து, வணக்கம் என்று தெரிந்தவர்கள்
தெரியாதவர்கள் என்று எல்லோரும் சொல்வது, ..என்று நம்மையும் கல்யாண
மண்டபத்திற்குள் அழைத்து சென்று விட்டார் ஆசிரியர். கல்யாண மண்டபத்திற்குப் போய்  விட்டோம். சரி. யாராவது நம்மை சாப்பிடக்
கூப்பிடுவார்களா என்று பார்த்தால். ம்ஹூம்......யாரையுமே  யாரும்
கூப்பிடக் காணோமே. அவரவர்களாகவே சென்று சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில்  நம் விருந்தோம்பல் கலாசாரம் மெது மெதுவாக  மறைந்து வருவதை, ஆசிரியர் சாடுவதாகவே தோன்றுகிறது  எனக்கு.

அதற்குப் பிறகு நடப்பது  ஒரு சின்ன , ஆனால் செல்லமான சண்டை என்றே சொல்ல வேண்டும். மைத்துனர்களிடையே  நடக்கும் சண்டையை, செல்லச் சண்டை என்று சொல்ல வைத்தது ஆசிரியரின் சாமர்த்தியம். வீடு என்றால் சண்டை வம்பு எல்லாமே உண்டு .அன்பு இருக்கும் இடத்தில்  தானே உரிமை எடுத்துக் கொள்ளலாம்.அங்கே தான்  கோபப்படவும் முடியும். அப்படித் தான் சண்டை சம்பவத்தைக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். சின்ன சின்ன உரசல்கள் சகஜமே என்பதைத்தான் ஆசிரியர் சொல்ல விழைகிறார். " குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை " என்பதை   இந்த சம்பவத்தின் மூலமாக ஆசிரியர் வலியுறுத்துகிறார் என்றே நான்  நினைக்கிறேன். .  இரு பக்கத்திற்கும் சேதாரம் இல்லாமல் தீர்ப்பும் சொல்கிறார் ஆசிரியர்.

ஆனால் தன நண்பருக்காக காலில் விழுந்து  மன்னிப்பு கேட்பது  தான் கொஞ்சம் இடிக்கிறது எனக்கு.இந்தக் காலத்தில் இப்படி நடக்குமா? சந்தேகமே..... ஆனால் ஔவையார்  தன நண்பன்  பாரி வள்ளலுக்காக , பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்ய உதவியது ஏனோ  என்
நினைவிற்கு  வருகிறது.

எப்படியோ திருமணம் பெரிய  சச்சரவில்லாமல்  முடிந்தது திருப்தியே.
அதற்குப் பிறகு வருவது தான்  ஆசிரியர் கொடுத்திருக்கும் பன்ச்.
வளைக்காப்பிற்காக திருமபவும் அழைப்புக் கொடுக்க  வேண்டிய  சூழ்நிலைக்குத்  தள்ளப்படப் போகிறார் என்பது  நண்பர்களுக்கு மட்டுமல்லாமல், படிக்கும் வாசகர்களுக்கும் மகிழ்ச்சித் தருவதாய் அமைகிறது.

மேலும் பல  மங்கள  அழைப்புகள் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்
கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாமல் , படிக்கும் வாசகர்களுக்கும்  வளர
வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

பாராட்டுக்கள் கோபு சார்.

இப்படிக்கு,
RajalakshmiParamasivam.
http://rajalakshmiparamasivam.blogspot.com

Monday 12 May 2014

சிரிக்க வைக்கும் சொதப்பல்கள்

நான் சொதப்பிய  சம்பவங்கள் சிலவற்றை, சிலவற்றைத் தான் (சொல்லாத  சொதப்பல்கள்  ஏராளம்) கட்டுரைகளாக   பதிவிட்டேன்.  அதைத் தொகுத்து  மின்னூல்  வடிவமைக்கலாமே என்று தோன்ற  அதை செயல் படுத்தி விட்டேன்.

நீ சொதப்பினாலும், நாங்கள் அதை அழகாக  வடிவமைப்போமே என்று freetamilebooks.com குழுவினர்  அதை போர்க்கால அடிப்படையில்  எடுத்துக் கொண்டு  வடிவமைத்துள்ளார்கள்.


புத்தக வடிவமைப்பும்,  அட்டைப் படமும்  நான்  பதிவிட்ட சொதப்பல்களை மிகவும்  அழகாக  அமைத்து விட்டன என்று சொல்லலாம். அதற்காக  freetamilebooks,com குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். திரு.சீனிவாசன், திரு, ப்ரியமுடன் வசந்த்,  திருமதி ப்ரியா அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்தப் புத்தகத்தைத் தரவிறக்கி படிக்கப் போகும் உங்களுக்கும் என் நன்றிகள்.
படித்த பின் உங்களின் மேலானக் கருத்துக்களை  என்னோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.
                          http://freetamilebooks.com/ebooks/sirikka-vaikkum-sothappalgal.  புத்தகத்தைத் தரவிறக்கிப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் .

Thursday 1 May 2014

கலிபோர்னியாவின் தங்க வேட்டைதங்க வேட்டையா? அப்படியென்றால்............
தங்க நகைக் கடைகளை அட்சயத் திரிதியை அன்று பார்த்தால்   நம் மக்கள் தங்க வேட்டையாடும்  காட்சியை கண்ணாரப் பார்க்கலாம்.  ஓடி ,ஓடி  வேட்டையாடுவார்கள்.

தங்கத்தின் மீது மனிதனுக்கு எப்பவுமே காதல் அதிகம் தான்.

 "மாற்றம் ஒன்றே மாறாதது " என்கிற சொல்லாடல் தங்கத்தின் விஷயத்தில் பொய்யாகி விட்டது.பின்னே பாருங்களேன். நமக்கு இருக்கும்  ஆசைகளில் மிகப் பெரிய ஆசை " பொன்னாசை "  .மனிதனுக்கு இந்த மஞ்சள் உலோகத்தின் மீது இருக்கும் அளவற்ற காதல் எத்தனயோ  நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.

"இந்தியர்கள் தான் அதிகமாக  தங்கம்  வாங்குகிறார்கள் ." என்பது பொதுவான கருத்து. ஆனால் நம் ஊரில் எப்பவும் தங்கத்தைக் கடையில் இருந்து தான் வாங்குவோம். ஏன் பிற  நாட்டினர் எல்லாம் திருடுகிறார்களா? என்று கேட்க வேண்டாம்.  நான் சொல்வது கூட்டம் கூட்டமாய்  கலிபோர்னியாவில்  தங்க வேட்டையாடின  வெளி நாட்டினரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

கலிபோர்னியாவில் தங்க வேட்டை நடந்த வருடம் 1848. 1848ற்கு முன்பாக அதிகம் பேசப்படாத ஊராக  இருந்த கலிபோர்னியாவிற்கு, ஸ்டட்டர் என்பவர்
சுவிஸ்  நாட்டிலிருந்து பெரிய  விவசாய சாம்ராஜ்யம் அமைக்கும் முயற்சியில்   வந்து இறங்குகிறார். . அங்கிருக்கும்  மக்களை வேலைக்கு  வைத்துக் கொண்டு விவசாயத்தில் இறங்கினார்.  இவருடைய மரம் அறுக்கும் மில்லை கவனித்து க் கொள்ள   மார்ஷல் என்பவரை   வேலைக்கு அமர்த்தினார்.

ஒரு நாள்  மரம் அறுக்கும் மில் அருகில் இருக்கும் ஆற்று மணலில்  மஞ்சளாய் என்னவோ மின்னுவதைப் பார்த்து கையில் எடுத்துப் பார்த்த  மார்ஷல் ஆச்சர்யத்தில் உறைந்திருக்க வேண்டும். அவருக்கு அது தங்கம் என்று புரிந்தது.  திரு. ஸ்டட்டர்   கவனத்திற்கு கொண்டு சென்றார். இருவரும் விஷயத்தை மிக மிக ரகசியமாக வைக்க முயன்றார்கள்.

ரகசியம் என்றாலே  அது எப்படியாவது வெளியே பிய்த்துக் கொண்டு வருவது  இயல்பு தானே. அப்படியே இந்த ரகசியமும் இவர்கள் இருவரைத் தவிர  திரு. Sam Brannan என்பவருக்கு எப்படியோ தெரிந்து போயிற்று.

தங்கம்  கட்டி கட்டியாகக் கிடைக்குமிடம்  தெரிந்தால்  முதல் வேலையாக அங்கே  எவ்வளவு கிடைக்கும் என்று தேடத் தானே பார்ப்போம். அதைத் தானே திரு..Sam Brannan செய்திருப்பார் என்று நினைப்போம். அவர் சிந்தனை வேறாக இருந்தது.

நாம் தங்கம் தேடிப் போனால் எப்படியும் எல்லோருக்கும் தெரிந்து எல்லோரும் நம்முடன் தங்கம் தேடி வருவார்கள் என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. இந்தப் போட்டியில் நாம் எதற்கு இறங்க வேண்டும். தங்கத்திற்குப் போட்டி என்றால் அடிதடி , கொலை என்று இல்லாமலா இருக்கும் .ஆனால் அதே சமயத்தில்  இந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துப்  பெரும் பணக்காரராக  வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்காக அவர்  போட்ட பிளான்  அருமை.

சான்பிரான்சிஸ்கோவிலும், அதை சுற்றிலும் இருக்கும் கடைகளில் இருக்கும்   மண்வெட்டி, மண் அள்ளும் பாண்டு, கடப்பாரை  என்று தங்கம் வெட்டும் உபகரணங்கள்  எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கிக் கொண்டார்.

எந்தக் கடையிலும் இந்த சாமான்கள் இல்லை. அத்தனையையும் இவரே  வாங்கிக் கொண்டார்.. சான்பிரான்சிச்கோவிற்கும்,   தங்கம் கிடைக்கும் இடத்திற்கு நடுவில் மண் வெட்டும் உபகரணங்கள் கடையை அமைத்துக் கொண்டார். பின்னர்,  அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் ,தெருத்தெருவாக  கையில் தங்கத்தை ஒரு பாட்டிலில் போட்டு க் கொண்டு ,
" தங்கம் வாங்கலையோ தங்கம் " என்று கூவி கூவி  விற்பதைப் பார்த்த நகரத்தினர்  முதலில் நம்பத்தான் இல்லை.  ஆனால்  சிலரின் ஆர்வம் சும்மா விடுமா என்ன? அவர் சொன்னது உண்மை  என்று புரிய ஆரம்பித்த பின்னர்  தங்க வேட்டை ஆரம்பமானது. முதலில் ஆற்று மணலில் கிடைத்த தங்கம், பின்னர் தோண்டினால் மட்டுமே கிடைக்க ஆரம்பித்தது. அவர்களுக்கு தோண்டுவதற்கு வேண்டிய உபகரணங்கள் நம்   Sam Brannan கடையில் தானே வாங்க  வேண்டும்.15 செண்டிற்கு வாங்கிய மண்வெட்டியை  30 டாலருக்கு விற்க ஆரம்பித்தார் Brannan. எல்லோரும் தோண்டி , உழைத்து, போட்டியிட்டு பல் சங்கடங்களை வென்று  தேடிய தங்கத்தை  விடவும் அதிக பணம்  சம்பாதித்தார் Brannan . கலிபோர்னியாவில் இந்தத் தங்க வேட்டையின் முதல்  கோடீஸ்வரர்  இவர் தான்.

அதற்குப் பிறகு தங்க வயலானது கலிபோர்னியா மாகாணம் எனலாம்..  தங்க வயல் பற்றிய செய்தி மிக வேகமாக தீயாய் பரவ, எல்லோரும் படையெடுக்க ஆரம்பித்தனர். உலகம் முழுதும் இருந்து கிடைக்கும் கப்பலக்ளில் எல்லாம் பயணிக்க ஆரம்பித்தனர். ஆஸ்திரேலியா, சீனா,  ஐரோப்பா என்று பல நாட்டவர்கள்  தங்க வயலில் வந்திறங்கினர்.

வெறும் 200 பேர்களை மட்டுமே கொண்டிருந்த சான்பிரான்சிஸ்கோ நகரம்  தீடீரென்று  3,00,000  மக்கள் (ஒரு வருடத்தில்)   தங்க வேட்டை நடத்துவதை
 மூச்சு முட்ட பார்த்துக் கொண்டிருந்தது எனலாம்.

தங்க வேட்டையால்  தங்கம் கிடைத்ததோ  இல்லையோ, அந்த ஊரின் பொருளாதார  வரை கோடு   மிக மிக வேகமாக ஒரே வருடத்தில் சரேலென உயர்ந்தது . இந்தத் தங்க வேட்டைக்கு வந்தவர்களை  48ers என்றும் , 49ers என்றும்  அழைத்தார்கள். (தங்க வேட்டை  நடந்த வருடம் 1848,1849 )
பல உப தொழில்கள் வேகமாக வளர்ந்தன. ஒரு நேரத்தில் சான்பிரான்சிஸ்கோ  நகரம் பேயடித்த இடம் போல் தென்பட்டது என்றும்  தெரிய வருகிறது. வெறும் உடைந்த கப்பல்கள் மட்டுமே இருந்ததாம். எல்லாம் அங்கு வந்த தங்க வேட்டைக் காரர்கள் பயணித்ததோ , அல்லது உணவு, உடை விற்பதற்காக வந்த கப்பல்களோ எதுவோ ஒன்று.  ஆக தங்கம் என்கிற மஞ்சள் உலோகம் பல வெளி நாட்டவரை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது .

முதலில் அங்கு வந்தவர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை . ஒருவரையொருவர் அடித்துக் கொள்வது, இடத்தை வளைத்துக் கொள்வதில் போட்டி   என்கிற  சிரமங்கள்.  பலர் தங்கள் குடும்பங்களை  தங்கள் ஊர்களிலேயே விட்டு விட்டு வந்தவர்கள். பின்னால் சிலர் திரும்பிக் கூட போக முடியாத நிலைமை. எல்லோருக்கும் தங்கம் கட்டி கட்டியாக கிடைத்து விடுமா என்ன? சிலருக்கு குந்து மணியளவு கூட  கிடைக்கவில்லை என்பதும் நிஜம். ஆனால் அதற்காக அவர்கள் தங்கள் உடைமைகளை விற்று, அடகு வைத்து  என்று  பெரும் கடனாளியானவர்கள் ஏராளமோ ஏராளம்...... குடுமபத்தோடு வந்தவர்களில் சிலரின் நிலைமை இன்னும் மோசம் . போட்டி ச்  சண்டையில்  விதவையான பெண்கள் ஏராளம்.பெரும் செல்வ சீமாட்டிகள்  இப்போது வறுமையில்... தங்கம் மேலுள்ள மோகம் இதற்கெல்லாம்  காரணம்.  இப்படி சொல்ல முடியாத  சங்கடங்கள் இருந்தாலும், சிலர் பெரும்  பணக்காரர்களானதும் உண்மையே!

வருடங்கள் செல்ல செல்ல அங்கு தங்கம் கிடைக்கும் அளவும் குறைய ஆரம்பித்தது எனலாம். அதற்குப் பிறகு மக்கள் தங்க வேட்டைக்கு வந்தவர்களும் எண்ணிகையில் குறைந்தது

ஆனால்  Gold Rush  San Franciscoவை  பெரிய நகரமாகவும், கலிபோர்னியா மாகாணத்தை   மிகப் பிரபலமாகவும் ஆக்கியது   எனலாம்.

கலிபோர்னியாவில்  நடந்த தங்க வேட்டைப் பற்றிப் பார்த்தோம்.
நம் ஊரில் நடந்த தங்க வேட்டை பற்றி சொல்லாமல் விடலாமா?

ஒரு சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலும் , உத்தரபிரதேசத்தில்  தங்கம் இருப்பதாக ஒரு சாமியாருக்குக் கனவு வர, அதைத தோண்டியெடுக்க  அரசாங்கமே குதித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன. ஆனால் இங்கு ஒன்றுமே கிடைக்க வில்லை. ஆயிரம் டன் தங்கம் என்றால் சும்மாவா? ஒரே நாளில்  வல்லரசாகி விட்டிருப்போம்.  நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை போலிருக்கிறது.  ஆனாலும் பரவாயில்லை.  தங்கம் கிடைக்காவிட்டால் தான் என்ன?  நம் இளைஞர்கள் தான் புடம் போட்ட தங்கமாய் இருக்கிறார்களே.  இவர்கள் உழைப்பினால் அதிவிரைவில் இந்தியா வல்லரசு ஆகி விடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.அப்புறம் எதற்கு ஆயிரம் டன் தங்கம் நமக்கு?.....

நம் ஊர் அட்சயத் திரிதியை கதைக்கு வருகிறேன்.....
 
பக்கத்து வீட்டு  நந்தினியை இன்று  கடைக்குப் போகும் போ து பார்த்து கேட்டேன்,.

" நாளை  அட்சயத் திரிதியை ஆயிற்றே. என்ன வாங்குவதாய் இருக்கிறீர்கள்? "

"எனக்கு இதிலிலெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் என் தம்பி மனைவிக்கு  இதில் நம்பிக்கை அதிகம் அவளுக்குத் துணையாகப் போக வேண்டும் அப்படியே ஏதாவது வாங்கி விட வேண்டியது தான்." நந்தினி சொன்னார்.

இப்படித் தான் நிறைய பேர்.......

ஏதாவொரு காரணம் சொல்லிக் கொண்டு நகைக் கடைக்காரர்களை   வளமாக்கப் போகிறோம் என்று மட்டும் புரிகிறது.

image courtesy---google.
facts---wikkipedia.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்