ராசி மணியைப் பார்த்துக் கொண்டே சாம்பார் தாளித்துக் கொண்டிருந்தாள் கடுகு வெடிப்பதன் மணமும், கறிவேப்பிலை மணமும் சேர்ந்து வீடே சாம்பார் மணத்தில் மிதந்து கொண்டிருந்தது.
தயிர் வடைக்கு , கொத்தமல்லி நறுக்கி வைத்துக் கொண்டாள். சாப்பிடும் முன்பாக போட்டுக் கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்..
" பார்க்க சகிக்கவில்லை இப்பொழுது " என்று நினைத்துக் கொண்டாள்.
"எப்பொழுது நீ பார்க்கும்படியாக இருந்திருக்கிறாய் " என்று கேட்ட மைண்ட் வாய்சை அலட்சியம் செய்தபடி லைட் மேக்கப்புடன், வந்து டீவி முன்னால் அமர்ந்தாள் .
ஜன்னல் வழியாக, விஷ்ணுவின் கார் வருகிறதா என்று டிவியில் ஒரு கண்ணும், வெளியே ஒரு கண்ணுமாக இருந்தாள் .
விஷ்ணு தன் நண்பர்களை மாலை தேநீருக்கு அழைத்து வருவதாக சொல்லியிருந்தார்.(விஷ்ணு ராசியின் கணவர் என்பது
முந்தைய பதிவைப் படித்தவர்களுக்குத் தெரியும் )
அதற்குத் தான் ராசி தயார் செய்து காத்திருந்தாள் .
டிவியின் "முந்தானை முடிச்சில் " அவள் சிக்கியிருக்கும் போது. ,கார் ஹாரன் சத்தம் கேட்டது.
டிவியின் " அழுகையை " நிறுத்தி விட்டு கதவைத் திறந்தாள் .
உள்ளே விஷ்ணுவும் அவர் நண்பர்களும் நுழைந்தனர்.
எல்லோரும் சக அலுவலர்கள். இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள்.
எல்லோரையும் ராசிக்கும் , ராசியை எல்லோருக்கும், அறிமுகப் படுத்தி வைத்தார் விஷ்ணு .
எல்லோருக்கும் , ஐஸ் வாட்டர் எடுத்து வர உள்ளே சென்றாள் ராசி. இரண்டு பெண்களும் அவள் பின்னோடியே வந்தனர்.
"ஷைபி , நீ இதை எடுத்து வா" என்று டம்ளரை பிரியா கொடுத்தாள்.
உன் பேர் என்ன சொன்ன ? விசாரித்தாள் ராசி.
ஷைபியா , ஆனால் எல்லோரும் என்னை ஷைபி என்று தான் செல்லமாக கூப்பிடுவார்கள் ஆண்டி(aunty) என்றாள் அவள்.
(அத்துடன் அவள் நிறுத்தியிருக்கலாம். விதி விளையாட ஆரம்பித்தது அவள் நாவில்.)
ஏன் "விஷ் " சார் கூட அப்படித் தான் கூப்பிடுவார் என்ற போது
ராசி "ஓ ..........."
நான் ஆண்டி(aunty) ....... ஆனால் அவர்..... "விஷ் " ....... ஷாமே........ " விஷ் ".
ஷைபியாவை சற்றே உற்றுப் பார்த்த ராசிக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது. பருவப் பெண். அழகாக இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டாள்.
சற்று நேரத்திற்கு முன்பாக" பாக்க சகிக்கலை "என்று சொன்ன மைண்ட் வாய்ஸ், இப்ப சமாதானப் படுத்தியது , பருவத்தில் எல்லாமே அழகு தான் .நீயும் ஒரு காலத்தில் அப்படித் தான் இருந்தாய் என்று.
பெண்ணிற்கே உரிய ஜாக்கிரதை உணர்வு ,சற்று தூக்கலாகத் தெரிய ஆரம்பித்தது ராசியிடம்
.
எல்லோரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
ராசி எல்லோர் குடும்பங்களையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தாள் .
"ஷைபி " உன் கணவர் எங்கே வேலை பார்க்கிறார் ? -- ராசி
ஏதோ ஜோக்கைக் கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்து விட்டு
"தெரியாது. கேட்டுத் தான் சொல்ல வேண்டும் "என்றாள் ஷைபி
ஓ .............இன்னும் திருமணமாகவில்லை , நினைத்தாள் ராசி.(அதற்கென்ன இவ்வளவு சிரிப்பு)
அதற்குள் பிரியா "இவள் இப்படித் தான் .எப்பவுமே ஒரே "கல கல" தான்.ஒரே சிரிப்பு தான். இவள் கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது " என்று பிரியா சொன்னதை ராசி அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது விஷ்ணுவிற்கு புரிந்து விட்டது.
எதையாவது சொல்லி அவர் சமாளிப்பதற்குள் ஷைபியா தொடர்ந்தாள் ."நானும் பார்க்கிறேன். ஒருவர் கூட மாட்டுவதாகத் தெரியவில்லை .ஏன் " விஷ் "ஷிடம் கூட என் லவ் அப்ளிகேஷன் இருக்கிறது. ஆனால் அவர் தான் ஏக பத்தினி விரதத்தை முறிப்பதாக இல்லை என்று தோன்றுகிறது."என்றாள் .
விஷ்ணு ராசி முகத்தைப் பார்க்கத் தாயாராகவேயில்லை.
புயல் சின்னம் மையம் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.
" விஷ் சார் ,, நீங்கள் இப்ப சொல்லுங்கள் நான் ரெடி " இது ஷைபியா .
" உஷ்......உஷ்........ " இது பிரியா.
" அதெல்லாம் ஆண்டி(aunty ) தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்." மீண்டும் ஷைபியா .
"சரி , எல்லாம் ரெடி செய்து வைத்து விட்டு சொல்கிறேன். சாப்பிடலாம் " என்று சட்டென்று உள்ளே சென்றாள் ராசி.
உள்ளே சென்று, எல்லோருக்கும் மசால் தோசை , சுடச்சுட ரெடி செய்து விட்டு எல்லோரையும் சா ப்பிடக் கூப்பிட்டாள் .
"aunty" உங்கள் சாம்பார் வாசனை , சும்மா கமகம , என்று ஊரையே தூக்கியடிக்கிறதே என்று சொல்லிக் கொண்டே எல்லோரையும் முந்திக் கொண்டு ஷைபியா டேபிளில் உட்கார்ந்தாள் .
எல்லோரும் மெல்லிய உரையாடலுடன் சாப்பிட , ஷைபியா மட்டும் வெங்கலக் கடையில் யானை புகுந்தாற்போல் ஒரே சத்தம்.
எல்லோரையும் பேர் சொல்லி சார் என்றாள் .
யாரும் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை.
ஆனால் ராசிக்கு என்னவோ அவள் மூச்சுக்கு முன்னூறு முறை" விஷ் விஷ் "என்று சொல்வதும் எல்லோரும் அவளை "ஷைபி ஷைபி " என்று கூப்பிடுவதும் , என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு என்று தான் தோன்றியது ராசிக்கு.
விஷ்னுவிற்கு தெரியும் இன்று ராசியிடம் மையம் கொண்டிருக்கும் புயல் கரையை கடக்க இன்னும் ஒரு வாரமாவது ஆகும் என்று.
எல்லோரும் அவள் சிற்றுண்டியை வானளாவ புகழ்ந்து தள்ளி விட்டு விடை பெற்றனர்.ராசி மிச்சம் இருக்கும் வேலையெல்லாம் முடிக்க போனாள் .
" டமால் டமால் " என்று ஒரே சத்தம்.
விஷ்ணு கண்டுகொள்ளவேயில்லையே.சைனாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் aftershocks தம் வீடு வரை இருக்குமோ என்னமோ!
துலக்க வேண்டிய பாத்திரங்கள் தான் பெரும் சத்தத்துடன் சிங்கில் விழுந்து கொண்டிருந்தது.
யார் மேல் கோபித்து கொள்வது என்று புரியவில்லை.
விஷ் ....விஷ்...... என்று விசிலடித்தார் போல், பேசிய ஷைபியா வை கோபித்துக் கொள்வதா அல்லது விஷ்ணுவையா?
சாமான்கள் "விஸ்.... விஸ்......" என்று பறந்தன
இப்பவும் ஒரு ரியாக்ஷனும் இல்லை, கணவரிடமிருந்து.
நேராக ஹாலிற்கு வந்தாள் .
டிவியிலிருந்து கண்ணை எடுக்காமலே
" என்ன சொல்லு ?" என்றார்.
"ஒன்றும் இல்லை. ஏன் ஒருத்தரும் உங்கள் ஆபிஸில் அந்தப் பெண்ணை கண்டிக்க மாட்டீர்களோ?"
' இப்படித் தான் "விஷ் விஷ்" என்று விசிலடித்துக் கொண்டிருப்பாளோ?'
"ஐயோ !.... அவள் சும்மா கல கல என்று பேசுவாள். மற்றபடி நல்ல பெண் ," என்று சர்ட்டிபிகேட் கொடுத்தது தான் தாமதம் , தொம் தொம் என்று குதித்தாள் ராசி.(வார்த்தையில் குதித்ததை நிஜமாகவே குதித்தால்.......நினைத்தாலே நடுக்கமாயிருந்தது விஷ்ணுவிற்கு )
அவள் நல்லவள் என்றால்...............அப்ப, நான்.. என்று முறைத்தாள்
நான் ஒன்றும் பேசவில்லை, என்று எழுந்து போய் விட்டார் விஷ்ணு .
மறு நாளிலிருந்து வீட்டில் மௌன யுத்தம் ஆரம்பமானது.
காபி டேபிளிற்கு வந்தது. ஒரு" நங் "
(நீராகாரமாயிருந்தது. ஈ விழுந்தால் சுதாரித்து எழுந்து ' கேட் வாக் ' செய்யும்.)
சிறிது நேரத்தில் இன்னொரு" நங்". இட்லியும் சட்னியுயம்.
சாப்பிட்டால் காது மூக்கிலிருந்தெல்லாம் நீர் வந்தது.(சட்னியில் ராசியின் கோபம் காரமாயிருந்தது)
அவருக்கு பிடிக்காத பாகற்காய், வாழைத்தண்டு .. இத்யாதி......... சமையலில்.இது சாம்பாரா , இல்லையில்லை ,ரசம்....இல்லை.....
பட்டிமன்றமே நடத்திவிடலாம் !
மயான அமைதி வீட்டில்.
ஒரு விதத்தில் இது விஷ்ணுவிற்கு சௌகர்யமாயிருந்தது.
இது தான் சாக்கென்று அவர் பாட்டிற்கு ஆபீஸ் ,டிவி, பேப்பர் என்று நிம்மதியாக இருந்தார் .
ராசிக்கோ கோபம் கொஞ்சமும் குறைவதாய் இல்லை.
எப்படி சமாதானம் செய்வது, என்றே புரிய வில்லை ,விஷ்ணுவிற்கு
இத்தனை வயதிற்கு மேல் இதென்னடா தொல்லை என்று தோன்றியது
அவருக்கு.
இவ்வளவு வருடங்களாகியும் இவளைப் புரிந்து கொள்ள முடியவேயில்லையே என்று தன்னையே கடிந்து கொண்டார்.
இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ஒரு வாரம் ஓடியது.
ஞாயிற்றுக் கிழமையும் வந்தது. கொஞ்சம் வீடு சகஜ நிலைக்குத் திரும்பும் போலிருந்தது.
காலை ஒரு எட்டு மணியிருக்கும் .போன் சிணுங்கியது . எடுத்தது ராசி.
எதிர் முனையில் ஷைபியா .
"ஆண்டி எப்படி இருக்கீங்க.
நான் இப்ப அங்கே வரணுமே என்றாள் ."விஷ் சார்" இருக்கிறாரா " என்று கேட்டு ராசியின் BP யை எகிற வைத்தாள் .
ம் ம் .........ராசி சொன்னது.
"அப்படிஎன்றால் கதவை திறங்கள்."
ஓ .............. வந்தே விட்டாளா? என்று நினைத்துக் கொண்டே போய் கணவரிடம்
உங்கள் " விஷ்..... "(அழுத்தமாக) வந்திருக்கிறாள் "என்று கடுகடுத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் .
விஷ்ணு தான் போய் கதவை திறந்தார்.
புயலாக நுழைந்தாள் ஷைபியா .
"ஆண்டி" எங்கே சார் ?.இருவரும் ஒன்றாக நில்லுங்கள்.நமஸ்காரம் செய்ய வேண்டும் "என்று கூறிக் கொண்டே கல்யாணப் பத்திரிக்கையை நீட்டி விட்டு "சஸ்பென்சாக இருக்கட்டுமே என்று தான் யாரிடமும் சொல்லவில்லை.உங்களுக்குத்தான் முதல் இன்விடஷன்" என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,
ராசி உள்ளேயிருந்து எட்டிப்பார்த்து கூலாக "ஒரு நிமிடம் இரும்மா .இதோ வருகிறேன் " என்று உள்ளே சென்றவள் வெற்றிலை பாக்கு ஒரு ப்ளவுஸ்பிட் சகிதம் தாம்பூலம் கொடுத்து ஆசீர்வதித்தாள் .
பத்திரிக்கையை படித்து , கண்டிப்பாக கல்யாணத்திற்கு வருகிறேன் என்று சொன்ன ராசியை ஆச்சர்யமாகப் பார்த்தார் விஷ்ணு.
" விஷ் சார் நான் கிளம்புகிறேன் "என்று சொன்ன ஷைபியாவிற்கு ராசி " பாத்து ஜாக்கிரதையாக போய்ட்டு வாம்மா " என்று சொன்னதும் விஷ்ணுவிற்கு மயக்கம் வராத குறை தான்.
அவள்போனவுடன் ராசி ரொம்பவும் சகஜமாக" சரி வாங்க சாப்பிடலாம் என்றாளே பார்க்கலாம் ,,,,விஷ்ணு கீழே விழாமல் இருக்க சுவற்றை பிடித்துக் கொண்டார்.
இப்ப " விஷ் " டர்ன் .
முறைத்துக் கொண்டார்.
என்னை நம்பாமல் தானே இத்தனை கலாட்டா செய்தாய்"
"இதற்கு பெயர் வெறும் " possessiveness " உங்களுக்குப் புரியவேயில்லை "விளக்கம் கொடுத்தாள் ராசி.
இதற்கெல்லாம் மசியவேயில்லை விஷ்ணு .
முகம் கொடுத்தும் பேசவேயில்லை .
ஆனால் மனதிற்குள் "ஆமாம். புரியவேயில்லை தான் . கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும் ........." சொல்லிக் கொண்டார்.
இந்த ஊடல் எப்ப முடியும்?
இன்னொரு பதிவில் நாம் ராசி தம்பதியை சந்திக்கும் போது கண்டிப்பாக ராசியாகி விடுவார்கள் .
அடுத்த கலாட்டா என்னவாயிருக்கும்...........
பி .கு. விஷ்ணுவின் மேல் பரிதாபப் பட்டு யாரும் அவருக்கு அனுதாப மன்றம் ஆரம்பிக்க வேண்டாம்.
விஷ்ணுவும் ராசியும் கற்பனை கதாபாத்திரங்களே.
image courtesy-----google.