சம்மர் கேம்ப் என்றதும் நான் எதோ சம்மர் கேம்ப்
ஆரம்பிக்கிறேன் , அதைப் பற்றி எழுதுகிறேன் என்றோ இல்லை எங்கோ கேம்ப் அடிக்கப் போகிறேன் என்றோ யாரும் அவசரப்பட்டு யோசிக்க வேண்டாம்.
நான் சம்மர் கேம்பிற்கு சென்று கற்றுக் கொண்டு அனுபவித்து ஆனந்தித்தது பற்றி தான் இந்தப் பதிவு.
குழப்பம் அதிகமாயிருக்குமே! நான் சொல்வது என் சிறு வயது நினைவுகளை.
விடுமுறை விட்ட அன்று, பள்ளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும் போதே புத்தகப்பை மூலையை நோக்கிப் பறக்கும். அதற்காக முதுகில் அடியும் பழுக்கும். பின்னே, புக்கைஎல்லாம் எறிந்தால்.............
மறுநாள் காலையிலிருந்து தெருவில் சிறுவர் சிறுமியர் படை கூடும். ஒவ்வொரு நாளும் இன்றைக்கு எந்த வீட்டை அதகளம் பண்ண வேண்டும் என்பதை முடிவெடுப்போம்........ ஹூம் ....... அதற்குப் பிறகு அந்த வீட்டில் இருப்பவர்கள் தான் பாவம்.!
பெரும்பாலும் பக்கத்து வீட்டு விஜி வீடு தான் ,டார்கெட் .காலை பத்து மணிக்கு விஜி வீட்டிற்குள் நுழைவோம். விஜி அவள் அண்ணன் முரளி,நாங்கள் மூன்று பேர் , அடுத்த வீட்டு இந்து ,அதற்கடுத்த வீட்டு பிரேமா , இன்னும் பிற.......எழுதிக்கொண்டே தான் போகணும். எல்லோருமாக விஜி வீட்டில் கூடுவொம்.
அதற்குப் பிறகு களை கட்டி விடும் அவர்கள் வீடு. ஒரு பக்கம் கேரம் போர்டு
கன ஜோராய் நடக்கும். காணவும் ஜோர் தான். நன்றாக விளையாடிக் கொண்டேயிருப்போம். திடீரென்று "முரளி, நீ போங்கு அடிக்கிறாய் . என்று மெதுவாக சண்டை ஆரம்பித்து அடிதடி சண்டையில் முடியும். அதெல்லாம் சும்மா கொஞ்ச நேரம் தான். உடனே சமாதானப் புறாவும் பறக்க விட்டு உடன் படிக்கையும் வாயாலேயே கையெழுத்திடப்படும்.
சரி கேரம் வேண்டாம் ,என்று எல்லோருமாக ரவுண்டு கட்டி உட்கார்ந்து Trade
விளையாட ஆரம்பிப்போம். அது கொஞ்ச நேரம் .நீ டில்லியில் வீடு வாங்கினாயா? நான் கௌஹாத்தியில் வீடு வாங்கி விட்டேன். ஓ விஜி பாப்பர்.(திவால்) .என்று ஒரே கூச்சலும் குழப்புமுமாய் ஆகி விடும் . அவர்கள் வீட்டு மாமியின் தக்க நடவடிக்கையின் பேரில் கூட்டம் அமைதியாய் பிரிந்து செல்லும். அது சும்மா கொஞ்ச நேரத்திற்கு தான்.
பிரிந்து போவது போல் பிரிந்து ,இந்துவின் வீட்டில் கூடும்.அந்த வீட்டு மாமி," பசங்களா, என்ன இன்றைக்கு நாங்கள் மாட்டிக் கொண்டோமோ? " என்பார்.அவர்கள் வீட்டில் என்ன charm என்றால் அவர்கள் வீட்டில் ஹாலில் ஊஞ்சல் இருக்கும்.
இந்த ஊஞ்சலையே கப்பலாக நினைத்துக் கொண்டு இந்த சிறுவர் சேனை "row row row a boat " கப்பலோட்டிய தமிழனாவார்கள். பின் அதே ஊஞ்சல் விமானமாகி " சர் சர் "என்று பறந்து பறந்து ஆடும். யாராவது ஒருவருக்கு தலை சுற்றி வாந்தி வரும் வரை ஆடி விட்டு அந்த மாமியின் திட்டு quota முடிந்த பின்னர் எல்லோரும் அவரவர் வீட்டிற்கு சென்று ,மிச்ச வசவுகளை வாங்கிக் கொள்வோம்.
(பெரியவர்கள் எங்கள் மேல் பாசமாய்த்தான் இருப்பார்கள். இத்தனைகலாட்டாசெய்தால் திட்டாமல்..... அவ்வளவு தான் )
அப்பொழுதெல்லாம் ரோடில் மாலை வேளைகளில் கிரிக்கெட் விளையாட எந்த தடங்கலும் கிடையாது. இவ்வளவு டிராபிக் கிடையாது. மூன்று விறகு கட்டைகள் ஸ்டம்ப் ஆகிவிடும் . இதில் யாராவது ஒருவர் கமென்ட்ரி வேறு கொடுக்கும் அலப்பறை எல்லாம் நடக்கும்.
பல்லாங்குழி, நாலு மூலை தாச்சி (இதனுடைய modern version தான் musical chair என்று நினைக்கிறேன்), கில்லி, கபடி, கோ என்று எதையும் விட்டு வைத்ததில்லை.
எல்லாம் எட்டாம் கிளாஸ் வரை தான்.
ஆனால் இவை கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம் ஏராளம்.
வாழ்க்கையின் அரிச்சுவடிகளைக் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையில்லை.
எதிர்பார்ப்புகள்,ஏமாற்றங்கள், ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம், வெற்றியைப் போன்றே தோல்வியையும் ஏற்கும் மன்ப்பாண்மை எல்லாவற்றையும் விளையாட்டிலேயே கற்றுக் கொண்டோம்.
பல விதமான குணாதிசயங்கள் உள்ள மனிதர்கள் அவர்களை எதிர்கொள்ளும் பாங்கு எல்லாவற்றையுமே கற்றுக் கொடுத்தது இந்த எங்களுடைய
Summer Camp.
அப்பாடி........ தலைப்பை கொண்டு வந்து விட்டேன்.
இந்த சம்மர் கேம்ப் ஒரு செலவில்லை. யாரும் அழைத்துப் போக வேண்டாம்.
கலர் பென்சில் வேண்டாம், சார்ட் பேப்பர் வேண்டாம், பெவிகால் இல்லை,கலர் பேப்பர் இல்லை..........
ஆனால் கற்றுக் கொண்டதோ அதிகமோ அதிகம்.
இந்த காலத்து சம்மர் கேம்புகளில் கிடைப்பது என்ன?
குழந்தைகளுக்கு சுமையாகி விட்டதோ?
கொஞ்சம் சொல்லி விட்டுப் போங்களேன்......
paatti stories இல் இப்போது Harichandran
image courtesy----google