Sunday, 30 June 2013

காபி with விஷ்ணு






சமையலா......என் கணவருக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாது. நான் இல்லாமல் அவரால் இருக்க முடியாது. என்று பெருமை பட சொல்லும்
 மனைவிகள் நிறைய.


இப்படி தான் ராசியும்  அடிக்கடி சொல்வாள். "என்னவருக்கு சமையலறைக்கு  எந்தப் பக்கம் போக வேண்டும் என்று கூடத் தெரியாது " என்று பெருமையடிப்பாள் .


இத்தனை நாள்  ,'மேடம் 'இப்படியே பெருமையில் ஓட்டிக் கொண்டிருந்தாள் .

விஷ்ணு ,ஒருமுறை காபி போட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது .
அவர் பட்ட பாடு  இருக்கிறதே ..........படியுங்கள்.....

படிக்க  படிக்க காபி போடுவதில்  இருக்கும் சிரமங்கள் எல்லாம் உங்களுக்குப்  புரியும்..

ஒரு நாள் காலையில்  எழுந்திருக்கும் போது லேசான தலைவலியாயிருந்தது ராசிக்கு. அந்த வலியுடனே காபி ,டிபன், மத்தியான  சாப்பாடு எல்லாம் விஷ்ணுவிற்கு கொடுத்தனுப்பி விட்டு, இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டுப்  போய் படுத்தவள் தான்  . மாலை மணி ஐந்திற்கு விஷ்ணு ஆபிஸிலிருந்து வரும் போது தான் எழுந்தாள் .
ஊரெல்லாம் பரவியிருக்கும்  ஃளு  ஜுரம்   ராசியையும்  ' விஸிட் 'அடிக்க  வந்திருப்பது.., அவள்  முகத்திலே  தெரிந்தது .

" காலை ஓரளவு உடம்பு சரியாகிவிடும் "என்ற நினைப்பில்  ஒரு லாரி  மண்ணையள்ளிப் போட்டது,  இறங்காத ஜுரம்.

காலை  மணி 7.30 க்கு  தான் முழிப்பே வந்தது ராசிக்கு.
" இவர் என்ன செய்கிறார் '"  பார்த்தாள்  ராசி.

நியுஸ் பேப்பரில்  தலை அமுங்கியிருந்தது.

" கொஞ்சம் காபி குடித்தால் தேவலாம் " முனகினாள் ராசி.
( அவள் நாவில் சனி  "டென்ட் ' அடித்திருந்தார்  போலிருக்கிறது)

' காபி கேட்கிறாளே " நினைத்தார் விஷ்ணு.

காபி போடுவது  என்ன பெரிய  விஷயம்.  (இது............இது தான்...இந்த நினைப்பு  தான்   அவர்  காபிக்கு உலையாய் வந்தது. )    " இதோ போட்டுக் கொண்டு வருகிறேன்." என்று  சொல்லிக் கொண்டே  லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு  போர் வீரனைப் போல் சென்றார்.,அடுக்களைக்குள்.
எங்கிருந்து ஆரம்பிப்பது..............?
ஸ்டார்டிங்  ட்ரபிள் .

முதலில் எது ?
டிகாக்ஷன் போடுவதா? பால் காய்ச்சுவதா?
மாபெரும் சந்தேகம்.
ஆரம்பமே  இப்படி  தன்னம்பிக்கையில்லாமல் இருந்தால்  எப்படி....யோசித்துக் கொண்டே,  டிகாக்ஷனில் ஆரம்பிப்போம் என்ற மிக முக்கியமான  முடிவையெடுத்தார்.

முதலில் அதற்குத் தேவையான சாமான்களை எடுத்தார்.
தண்ணீர் ஒரு பாத்திரத்தில்..
காபிபொடி .....எங்கே ...? தேட ஆரம்பித்தார்.
" எங்கேயோ ஒளித்து வைத்திருக்கிறாள்  ராட்சசி "   செல்லமாக திட்டிக் கொண்டே தேடினார்.

அப்பாடி..........சாம்பார்  பொடி பாட்டிலுக்குப் பின்னே ஒளிந்து கொண்டிருந்த காபிப் பொடி பாட்டிலை ஒரு வழியாய்   கண்டு பிடித்தார்.

3 ஸ்பூனா?..... 4 ஸ்பூனா ?......
 யோசித்து  ஒரு வழியாக  " குன்ஸா "வாக போடத் தீர்மானித்தார்.
அவசரத்திற்கு ஸ்பூன் கிடைக்காததால்  ஒரு கரண்டியை " சிங்க் "லிருந்து  அரை குறையாய் கழுவி  பாட்டிலுக்குள்  ஒரு ஈராக் ....இல்லை ...இல்லை....ஈரக்  கரண்டியால்   எடுத்தார்.
எடுத்தபின் தான் எங்கே போடுவது  என்ற நினைப்பு வந்தது.

கீழே குனிந்து காபி பில்டரை எடுக்கப் போனார்.

இதென்ன? கும்பகோணம் அடுக்கு கேள்விப் பட்டிருக்கிறோம் . காபி பில்டரில் கூடவா
எடுக்கப் போனவர் கையில் பட்டு எல்லாம் உருண்டோடியது. காபி பில்டரின் டாப்பும், பாட்டமும்  உறவு முறித்துக் கொண்டன.

காபி பில்டரை ஜோடி சேர்ப்பதற்குள்  இவர் ஜோடி   குரல் கொடுத்தாள்.
" இன்னுமா காபி போடலை? "

"இதோ....  இரண்டு நிமிஷம்....... கொண்டு வருகிறேன்."  என்றார் விஷ்ணு.

ஒரு வழியாக ஜோடி சேர்த்த பில்டரில் காபி பொடியைப்  போட்டு தண்ணீரை எடுத்து கேசில் வைத்து  தண்ணீர்  கொதிக்க காத்துக்  கொண்டிருந்தார்.

"ட்ரிங்,..... ட்ரிங் "

மீண்டும்  "ட்ரிங்,.... ட்ரிங்".
சமையலறையிலிருந்து  வேகமாகப்  போய் போனை எடுத்தார். போனில் அவர் நண்பர் அப்பாசாமி.

 "இன்னைக்கு நியுஸ்  படித்தீர்களா விஷ்ணு?"
தேர்தல் கூட்டணி  பக்கம்  பேச்சுத் திரும்பியது.

சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது உரையாடல்.

சமயலறையிலிருந்து ஒரே கமறும் வாசனை . விஷ்ணுவிற்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது ' கேஸ் 'ல் தண்ணீர் வைத்தது. விழுந்தடித்து ஓடினார்.

அதற்குள் எல்லாமே கைமீறிப் போய்விட்டது  தெரிந்தது.பாத்திரம் தீய்ந்து போயிருந்தது.

அடுக்களையில் ஏதோ  ஏ .பி. நாகராஜன்  பட ஷூட்டிங்க்   நடப்பது போலிருந்தது . ஒரே புகை மண்டலம்.

சாவித்திரி ,"கோமாதா......எங்கள் குலமாதா......என்ற பாட்டு பாடிக் கொண்டே வருவார்   போலிருந்தது  .

அதற்குள் ராசி வேறு ," ஒரு காபி போடுவதற்குள்  என்ன பாடு இது? " என்ற புலம்பல்.

ஜன்னலைத் திறந்து எல்லா புகையையும் விரட்டு ,விரட்டு. என்று விரட்டி விட்டு.
மீண்டும் " கேசில் "வேறு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து விட்டு
மணியை நிமிர்ந்து பார்த்தார் விஷ்ணு.
 மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. தண்ணீரை பில்டரில்  ஊற்றி விட்டு  ஹாலிற்கு வந்து ஆபிசிற்கு போன் செய்து ,   அரை நாள் விடுமுறை எடுத்துக் கொண்டார்.

பின்னே.... காபி போட வேண்டாமா? அதற்குத் தான்.

டிகாக்ஷண்  இறங்கியிருக்கும். அதை வைத்து காபி கலந்து விட்டு,  குளிக்கப் போகலாம் என்று அடுக்களைக்கு சென்றார்.

டிகாக்ஷன் இறங்கியிருந்தது. ஆனால் சமையல் மேடையில் தான்.  இவர் பில்டரை சரியாக ஃ பிட்  செய்யவில்லையா? இல்லை ஜோடி மாற்றம் செய்து விட்டாரா என்பது  புலனாகவில்லை.

சரி, முதலில் டிகாக்ஷ்ணாய் பெருக்கெடுத்து ஓடும் காவிரிக்கு(?) அணைகட்ட தீர்மானித்து, பிடி துணியை தேடினார்.
கண்டு பிடித்தார் .
போட்டு துடைத்தார்.

பிடிதுணி என்று தாம் போட்டது"ராசியின்  பிளவுஸ்" என்பது பிறகு தான் அவருக்குப் புரிந்தது.

" இருக்கு தனக்கு மண்டகப்படி "என்று புரிந்தது விஷ்ணுவிற்கு. " என் பிளவுஸ் உங்களுக்குப்   பிடி துணியா " என்று பொசுக்கி விடுவாள். என்ன செய்வது?  சட்டென்று அந்தத் துணியை அழகாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு   குப்பைத் தொட்டியில் போட்டார்.
(" கொலைக்கான  துப்பை"  மறைப்பது போல்).

சரி.'  காபி என்னாச்சு"
மீண்டும் ராசியின் கேள்வி .அவளால் முடியவில்லை. இல்லையென்றால்
இவ்வளவு நேரம் சமயலறையில் ஆஜர் ஆகியிருப்பாள்.

"இருக்கும் டிகாக்ஷனில் முதலில் ராசியின்  வாயை அடைத்து விடுவோம்" என்று பிரிட்ஜில் இருந்த பாலைஎடுத்து காய்ச்ச அது  விஷ்ணுவை அன்னப் பறவை என்று நினைத்ததோ என்னவோ , தண்ணீரும் பாலுமாய்  கட்டி கட்டியாக பிரிந்து போனது.

இப்ப என்ன செய்வது? யோசித்தார்.
அதற்குள்
" டிங் டாங் "

போய் கதவைத் திறந்தார் விஷ்ணு.

'வாசலில் கொரியர். கையெழுத்து போட்டு வாங்கிவிட்டு  கதவை மூடப் போன விஷ்ணுவின் கண்களில் பட்டது   பால் பை.
ஓ .........இன்றைய பாலை எடுக்கவேயில்லையோ?பிரிந்தது பழைய பாலா ..... நினைத்துக் கொண்டே ,
புது பாலை  காய்ச்சி  டிகாக்ஷனை எடுத்து  ஊற்றப் போனார். மெதுவாக சாய்த்தார்..........இன்னும் கொஞ்சம்..இன்னும் கொஞ்சம்.... என்று கவிழ்த்தே விட்டார்.
ம்ஹூம்.......ஒன்றுமே  வரவில்லை . எல்லாம் தான் மேடையில்
ஆறாகப் பிரவாகமெடுத்து ஓடி விட்டதே !

இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை.

சூடான பாலில் பூஸ்ட்  கலந்து  ராசிக்கு கொடுத்து விட்டு , குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல் " உனக்கு உடம்பிற்கு நல்லது என்று  பூஸ்ட் போட்டிருக்கிறேன் "என்று கூறினார்.

ராசி குடித்து விட்டு , அவர் தடுத்தும் கேட்காமல் " இப்ப கொஞ்சம் பரவாயில்லை. நானே  போய்  மற்ற வேலைகளை  பார்க்கிறேன்  " என்று போனாள்  ராசி."

வெகுநேரமாகியும் வரவில்லை ராசி. (மயங்கி விழுந்து விட்டாளோ ?)
பின்னே குருக்ஷேற்ற யுத்தம் நடந்த ரண பூமி போலல்லவா இருக்கிறது   சமையல் மேடை?

"காபி  போடுவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை" புரிந்தது விஷ்ணுவிற்கு .
ராசியின் காபியை  என்னவெல்லாம் பேர் சொல்லி கிண்டலடித்திருக்கிறோம்.
சுடு தண்ணீர், கழனித் தண்ணீர் , பானகம்......என்றெல்லாம் சொல்லியிருக்கிறோமே.

"அதற்கு சரியான தண்டனை  தான்."  நினைத்துக் கொண்டார் விஷ்ணு.

ஒன்றை விஷ்ணு மட்டுமல்ல,   நாமெல்லோரும் கூட  மறந்து விட்டோமே?
ஆனால் ,ராசி.........தேடிக் கொண்டிருக்கிறாள்  அவளுடைய   மயில் கழுத்து கலர் பட்டுப்புடவைக்கான பிளவுசை.

ராசியிடம் நான் சொல்ல மாட்டேன் அவள் பிளவுஸ் பிடிதுணியான ரகசியத்தை.
உஷ்..........நீங்களும் யாரும் சொல்லி விடாதீர்கள்.
குடும்பத்தில் நம்மால் குழப்பம் வர வேண்டாம். .





image courtesy---google.


37 comments:

  1. விஷ்ணுவிற்கான மண்டகப்படி விரைவில் ..!

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணுவின் மண்டகப்படி ஒரு பதிவா?
      பாவம் அவரை விட்டு விடுவோம். அதான் இன்னும் ராசிக்குத் தெரியாதே!
      நன்றி ராஜராஜேஸ்வரி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

      Delete
  2. நல்ல நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    அவரை என்னிடம் அனுப்புங்கோ. ஜோராக சீக்கரமாகக் காஃபி போடக் கற்றுக்கொடுக்கிறேன்.

    //ஒன்றை விஷ்ணு மட்டுமல்ல, நாமெல்லோரும் கூட மறந்து விட்டோமே?

    ஆனால் ,ராசி.........தேடிக் கொண்டிருக்கிறாள் அவளுடைய மயில் கழுத்து கலர் பட்டுப்புடவைக்கான பிளவுசை.//

    ;)))))

    ReplyDelete
    Replies
    1. விஷ்ணு ஒரு கற்பனை கதாபாத்திரமே! நம்புங்கள் வைகோ சார்.
      நன்றி வைகோ சார் உங்கள் பாராட்டிற்கு...

      Delete
  3. நான் ராசியை தேடிக் கொண்டிருக்கிறேன் அவரிடம் போட்டு கொடுப்பதற்காக

    ReplyDelete
    Replies
    1. ??நான் ராசியை தேடிக் கொண்டிருக்கிறேன் அவரிடம் போட்டு கொடுப்பதற்காக// எத்தனை பெரிய மனது உங்களுக்கு MTG.
      நன்றி MTG உங்கள் வருகைக்கும் குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கத் துடிப்பதற்கும் தான்.

      Delete
  4. :) நகைச்சுவையாக ஒரு உண்மையை நச்சுன்னு சொல்லிட்டீங்க! ஆண்களும் கொஞ்சமாவது கிச்சன்ல அவசர ஆத்திரத்துக்குக்கு உதவத் தெரிந்திருக்கணும், இல்லன்னா இப்படித்தான்! :)

    ப்ளவுஸ் பிடித்துணியான கதைய நானும் ராசிகிட்ட சொல்ல மாட்டேன்! :)

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தானே மஹி .ஆண்களும் உதவ வேண்டும் தானே.
      நன்றி மஹி, உங்கள் வருகைக்கு, பாராட்டிற்கு, முக்கியமாய் ரகசியத்தை காப்பாற்றும் எண்ணத்திற்கு..

      Delete
  5. வரிக்குவரி நகைச்சுவையுடன் சூப்பரா இருக்குங்க.

    ம்ம்,அல்ரெடி ராசியிடம் போட்டுக் கொடுத்தாச்சே,ஹா,ஹா !

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கு நன்றி சித்ரா.
      இப்படி போட்டுக் கொடுத்து விட்டீர்களே!நல்ல மனது தான்.....
      என் நகைச்சுவையைப் பாராட்டியதற்கு நன்றி சித்ரா....

      Delete
  6. ஹா... ஹா... காஃபி போடுவதற்குள் ஒரு டீ சாப்பிடணும் போலிருக்கே...! ரசிக்க வைக்கும் எழுத்து நடைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஹா ...ஹா... ஹா..... இது நல்லாருக்கே. காபி போடுவதற்கு டி சாபிடனுமா?
      நன்றி தனபாலன் சார் உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  7. நல்ல நகைச்சுவை...

    அடடா இப்படி காபி கூடப் போடத்தெரியாதவரா இருக்காரே.... வை.கோ. சார் சொல்ற மாதிரி அங்கே அனுப்பிடுங்க! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி, உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும்.

      Delete
  8. காப்பி புராணம் , விஷ்ணு புராணம் எல்லாம் நல்ல நகைச்சுவை.
    ப்ளவுஸ் பிடித்துணியான கதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. பிளவுஸ் பிடிதுநியானது என்றே பெயர் வைத்திருக்கலாம் போலிருக்கிறதே
      உங்கள் வருகைக்கும்,பாராட்டிற்கும் நன்றி கோமதி.

      Delete
  9. Ha ha ha. That's nice rib tickling humor. Is coffee making an art or science.? To me, it's 'Kamba Sutram'; that's why I don't go over tor the side of the kitchen and make coffee.

    ReplyDelete
    Replies
    1. this idea of yours will relieve your wife of the trouble of drinking your coffee and of course cleaning the kitchen.
      thanks for your appreciation.

      Delete

  10. நகைச்சுவைக்காக இப்படி ஒரேயடியாக விஷ்ணுவை வார வேண்டுமா.? அவரிடம் பதிவைப் படிக்கச் சொல்லுங்கள். அவர் என்ன சொல்கிறார் என்று தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. யாருமே நம்ப மாட்டீர்களா? விஷ்ணு ராசி தம்பதி கற்பனையே!
      நன்றி GMB சார் உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  11. காபி போட்டும் முயற்சிக்கே பிளவுஸ்காணாமல் போச்சுன்ன இவர் சமைக்க முயற்சி செய்தால் நல்ல பட்டுவையில் இரண்டு அல்லது மூன்று புடவைகள் காணாமல் போயிருக்குமோ???

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதையும் ஒரு பதிவாக்கினால் என்ன?
      உங்கள் மீள்வருகைக்கும்,கருத்துக்கும்,ரசித்துப் படிப்பதற்கும்.

      Delete
  12. kalaiyile kaappi pOttu,
    paththu manikku bread kothuthu,
    koodave teepyum pottu koduthu

    mathiyanathile saatham koduthu, saambar poriyal sethu koduthu,
    thaiyir konjam sariya ooththi,
    nannaa irukka ennu kettu,

    saayanthiram tea koduthu,
    corn pops konjam koduthu,

    iravukku thaiyir sadham,
    appapaa chappatthi,
    thuttukka sambar,

    tv vijay oru kodi, office paathunde irukkanum.

    appathaan thookam varum.

    ithanaiyum senja pirakum.

    ungallukku samaikka valla

    ennu sollum anbu manaiviyai

    adaya naanum enna bhagiyam seithen.

    enna thavam seythen.

    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. ஏன் இப்படி மீனாக்ஷி மாமியை வாருகிறீர்கள்.

      கவிதையை மீனாக்ஷி மாமிக்கு அர்ப்பணம் செய்யும்

      இப்படிக்கு,
      (மகள் ஸ்தானத்தில் உகளிருவரின் ஆசீர்வாதம் எதிர்பார்க்கும் )
      ராஜி

      Delete
  13. என்னிடம் எதையாவது சமைக்கத்தெரியுமா என்று கேட்டுவிடாதீர்கள்.என் மனைவி வருத்தப்படுவாள்

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் சமைக்கத் தெரியுமா என்று கேட்டு பாவம் உங்கள் மனிவியை கஷ்டபடுத்த விரும்பவில்லை.
      நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு.

      Delete
  14. இன்னொரு விஷயம் சொல்ல மறந்திட்டேனே, எங்க வீட்டில் ஃபில்டர் காபி வழக்கம் கிடையாது, சமீபமா நாந்தான் பழகிருக்கேன். மோஸ்ட்லி சன்ரைஸ், ப்ரூ மாதிரி இன்ஸ்டண்ட் காஃபி பவுடர்தான் உபயோகிப்போம். எனக்கு ப்ரூ காஃபி சரியாக கலக்கத் தெரியாது, என்னவர் (இப்பவும்) சூப்பராக ப்ரூ காஃபி போடுவார் ராஜி மேடம்! :) கல்யாணத்துக்கு முன்பே இவர் நண்பர்கள் எல்லாம் "உன் வைஃப் ரொம்ப லக்கி-டா!!" என்று (முகம் தெரியாத) என் மேல் பொறாமைப் படுவாங்களாம்! இது எப்படி இருக்கு?! :)))))

    ReplyDelete
    Replies
    1. சரி, அப்படிஎன்றால் உங்கள் வீட்டிற்கு வந்தால் ஒரு நல்ல காபி கிடைக்கும் என்று சொல்லுங்கள்.

      உங்கள் மனதையும் உங்களவரின் காபியையும் ,மலரும் நினைவுகளையும் பகிருவத்ர்காக மீள் வருகை புரிந்தமைக்கு நன்றி மஹி.
      நன்றாகவே ரசித்திருகிறீர்கள் என் காபியை.

      Delete
  15. எங்கள் வீட்டிலும் இது போன்ற கூத்துகள் நடக்கும், ராஜி! 'என்னமா பண்ணியிருக்கேன் பாரு' என்பார். சமையலறையை சுத்தம் செய்வதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிடும்.
    என் ப்ளவுஸ் எதுவும் மாட்டியதில்லை!
    வெகு இயல்பாக நகைச்சுவையுடன் 'காபி with விஷ்ணு' சுவையாக இருக்கிறது.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரஞ்சனி உங்கள் வருகைக்கும், என் காபியின் சுவையை ரசித்துப் பாராட்டியதற்கும். நீங்கள் சொல்வதுபோல் எல்லோர் வீட்டிலும் எப்பவாவது நடக்கும் கலாட்டாதான் இது.
      நன்றி.

      Delete
  16. பாவம் உங்கள் தோழி. நல்ல பிளவுஸ் போய் விட்டதே.... ஆனால் வெந்நீர் கூடப் போடத் தெரியாதவர்கள் இருக்கிறார்கள்தான்! நானெல்லாம் பத்து வயசிலேயே சமையல் வேலை ஆரம்பித்து விட்டேனாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் . எல்லோர்க்கும் சமையல் கலை அவசியம் தெரிய வேண்டும்.
      நீங்கள் நன்றாகவே சமைப்பீர்கள் போலிரூக்கிறது.
      என் காபியை ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி சார்.

      Delete
  17. நகைச்சுவையான பதிவு. பல வீடுகளில் ஆண்களுக்கு சுடுதண்ணீர் வைப்பது கூட மலை போன்ற காரியம் தான் போலிருக்கிறது. அழகாய் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தமிழ் முகில் பல் வீடுகளில் சமையலறை என்பது பெண்களின் ராஜ்ஜியம் அங்கு நமக்கென்ன வேல என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள்.

      நன்றி சகோதரி உங்கள் பாராட்டிற்கு.

      Delete
  18. ஹா ஹா ஹா!! விழுந்து விழுந்து சிரித்தேன் ராஜி மேடம்!! எனக்கு சிரித்து சிரித்து கண்ணுல தண்ணியே வந்துருச்சு பாத்துகோங்க!!இன்னிக்கு தேடி பிடித்து வந்தேன், நாளைக்கும் வருவேன் :D

    ReplyDelete
    Replies
    1. மஹா,
      நீங்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது , என்னை மகிழ்விக்கிறது. நன்றி மஹா உங்கள் பாராட்டிற்கும், ரசித்து சிரித்ததற்கும்..
      நன்றி

      Delete
  19. madam first I want to say abt ur topics. how u selecting this type of topic? really nice .thanks for ur postings

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்