Friday, 12 July 2013

வீட்டில் விசில் .


ஒரு ஏழெட்டு வருடம் முன்பாக முதல் முறையாக பெண் வீட்டிற்கு நியு ஜெர்சிக்கு  போயி ருந்தேன்.
 சென்னையிலிருந்து  இரண்டு ஃ ளைட்.
இந்தியாவிலிருந்து வத்தல், வடாம், புளி , பலகாரம் எல்லாவற்றையும்     இமிக்ரேஷன்  ஆபிசர் கண்ணில்படாமல் , எப்படியோ கடத்திக் கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாயிற்று.

வெளியே வந்தவுடன் மாப்பிள்ளை , காரில்   வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் .

வந்து சேர்ந்து விட்டேன் என்று டெல்லியில் இருக்கும்  என்னவருக்கு போனில் சொல்லியாகி விட்டது.

பெண், மாப்பிள்ளை, பேரன் எல்லோருடனும் கதை  பேசி, கண்ணா பின்னா வென்று தூங்கி  " ஜெட் லேகிங் " கிலிருந்து  விடு படுவதற்குள்  கிட்டத்தட்ட பத்து நாள் ஆகிவிட்டது.
பெண் மாப்பிளை இருவரும் வேலைக்கு போய் விடுவார்கள். ஒன்றாம் கிளாஸ் படிக்கும்  பேரன் ஸ்கூல்.
நான் மட்டும் தனியாக  ........வீட்டில்.

தினம் பேரனை ,ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விடும் வேலை மட்டுமிருந்தது . பக்கத்தில்  ஐந்து நிமிட நடையிலிருந்தது  பஸ் ஸ்டாப்.

அப்புறம் முழு நேரமும் எப்படி போக்குவது? அப்பொழுது இந்தப் பதிவுலகம் எனக்குப் பரிச்சியமாகவில்லை.

கொஞ்ச நேரம் வாக்கிங். சுற்றியிருக்கும் வீடுகளில், எங்காவது  இந்திய முகம் தெரிகிறதா, அதுவும் தமிழ் பேசுபவர்களாக  இருக்குமா.?என்றெல்லாம் யோசனை செய்தபடி இருப்பது ,மற்றும் மீண்டும் இந்தியா திரும்பும் நாளை எண்ணிக் கொண்டே இருப்பது. இதைத்  தவிர வேறெதுவும் தோன்றாது.

இங்கிருக்கும் வீடுகள் எல்லாமே மரத்தால் செய்யப் பட்டவை தான்.  பல மாடிகள்  இருக்கும் .எப்படித்தான்  ஸ்ட்ராங்காக இருக்குமோ ! என்று ஆச்சர்யப்பட வைக்கும்
.
பல வசதிகள் இருந்தாலும் இரண்டு இந்திய பெற்றோர்கள் பார்த்துக் கொண்டு பேசினால், அவர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்ளும் கேள்வி அநேகமாக "நீங்கள் எப்பொழுது இந்தியா திரும்புகிறீர்கள் "என்பது தான்.

நான்   அடித்த  கூத்திற்கு வருகிறேன்.

வீடுகள் எல்லாம் மரத்தால் ஆனதால்  எல்லோர் வீட்டிலும்" ஸ்மோக் அலாரம் " என்று ஒன்றிருக்கும்.

வீட்டில் அதிகமாக புகை வந்தால் இது ஒரு விசில் சத்தத்தைக் கொடுத்து நம்மை எச்சரிக்கும்.

ஒரு வாரத்தில் வீடடை தோண்டித் துருவி பார்க்கும் போதே ," இதென்ன ஏதோ ஒன்று ,குங்குமச்சிமிழைத் தலைகீழாகத் தொங்க விட்டாற்போல் தெரிகிறதே  இது என்னடி?  "பெண்ணிடம் கேட்டேன்.

ஒரே வார்த்தையில்," அது தான்  ஸ்மோக் டிடெக்டர் " என்று சொல்லி விட்டு அடுத்த வேலைக்குப் போய் விட்டாள் .

நானும் அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.(எவ்வளவு பெரிய அவஸ்தை இதனால்  வரப் போகிறது என்று எனக்கு அப்போது தெரியவில்லை)

அன்று  காலை, பெண்ணும், மாப்பிளையும்  ஆபீஸ் போன  பின்  அரவிந்தை(first  grade ) ஸ்கூல் பஸ்ஸில்  ஏற்றி விட்டுத் திரும்பும் வழியில்  தமிழ் பேசும் ஒரு  பெண்மணியை  நட்பு பிடித்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

வந்து, கொஞ்சம்  வீட்டை  எனக்குத் தெரிந்த வகையில் சுத்தம் செய்த பின், சன்  டி .வி. பார்த்துக் கொண்டிருந்தேன் . அப்படியே தூங்கியும் விட்டேன்.

திடீரென்று  தூக்கம் கலைந்தது.   கடிகாரம் மணி  ஒன்றைக் காட்டியது.

பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட டேபிளிற்கு சென்று  தட்டை எடுத்து வைத்து விட்டு ,ஊரிலிருந்து எடுத்துக் கொண்டுவந்திருந்த ,அப்பளம் பொரிக்க ஆசை வந்தது.

கேசை ஆன் செய்து வாணலியை எடுத்துப் போட்டு எண்ணெய் ஊற்றி வைத்தேன். சூடாகக் காத்திருந்தேன்.

திடீரென்று  யாரோ விசிலடிக்கிராற்போல் ஒரு  ஊய்...சத்தம்.

கதவு தாழ்ப்பாள் போட்டிருக்கிரதா   என்று உறுதி செய்து கொண்டேன். புது ஊராயிற்றே. யார் .....எப்படி ..... ஒன்றும் தெரியாதே!

மீண்டும் ,  ஊய்...........விசில் சத்தம் தான்.

இன்னும்  அதிக  ஓசையுடன்  வந்தது சத்தம்.

ஒன்றும் தெரியவில்லை. இது என்ன  ? நம்மூர்  விட்டலாச்சார்யா படத்தில் வரும்   மர்ம மாளிகை போலிருக்கிறதே,   இந்த வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே  ..........ஊய்.....ஊய்.......இரண்டு விசில் சத்தம்.

அதற்குள் அப்பளம் பொரிப்பதற்காக வைத்த எண்ணெய் புகை வீடு முழுதும் நிறைக்க ,  அவசர அவசரமாக கேசை  ஆப்  செய்தேன்.

அதற்குள் இந்த விசில் சத்தம் ஊய்....................................................................................................................தொடர்ச்சியாக  இன்னும் பெரிதாக  .............  {காதை  கிழித்தது சத்தம்}. எங்காவது மெயின் பாக்ஸ் இருந்தால் எதையாவதுஆப் செய்து பார்க்கலாம் என்றால்  ஒன்றும் புரிய வில்லை.

என்னடா இது ........அப்பளத்திற்கு ஆசைப்பட்டு இப்படி மாட்டிக் கொண்டேனே  நினைத்தேன்.(இப்பொழுது  புரிந்தது  இது ஸ்மோக் டிடெக்டர்  சத்தம் என்று}

ஜன்னலைத் திறக்கவே பயமாயிருந்தது. {சத்தம் வெளியே கேட்குமே}சரி மெதுவாக கதவைத் திறந்து ,(மறக்காமல்  வீட்டு சாவியை எடுத்துக் கொண்டு தான் )வெளியே யாராவது வருவார்களா...உதவிக்கு கூப்பிட பார்த்தேன்.

ஒருவர்........யாராவது........ம்ஹூம்.........காணவேயில்லையே.
(இது என்ன அமானுஷ்யமாக இருக்கிறதே)

ஒன்று புரிந்தது. தருமமிகு சென்னையில் ,என் வீட்டிற்கு  ராணியாய் கோலோச்சிக் கொண்டிருந்த எனக்கு இது தேவையா?

சரி. மணியைப் பார்த்தால்  3 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.

அரவிந்தை அழைத்துக் கொண்டு வரணுமே  ! ஓடினேன் பஸ்  ஸ்டாப்பிற்கு.

பஸ் வர காத்திருந்த பெண்மணிகளில் ,காலையில் நான் நட்பாகிக் கொண்ட பெண் மணியைப் பார்த்தேன்.

எனக்கு தெய்வத்தையே பார்த்தது போலிருந்தது.

சிநேகமாக சிரித்துக் கொண்டே பிரச்சினையை  சொன்னதற்கு  கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல்  , நீங்கள் 911 ஐ கூப்பிடுங்கள் . " என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். (நமக்கெதற்கு வேண்டாத வம்பு என்று நினைத்திருப்பாரோ என்னவோ )

அதற்குள் பஸ்  வந்தது  . அரவிந்தும் இறங்கினான். அவன் என் கண்களுக்கு சாக்ஷாத்   விஷ்ணுவாகவே(மைனஸ் சங்கு சக்கரம் )  காட்சியளித்தான்.

இறங்கியதும், அவனுடைய  பையை வாங்கிக் கொண்டு ,"அர்விந்த் 911ற்கு  போன் செய்தால் யாரடா வருவார்கள்?  உனக்குத் தெரியுமா?என்றேன்.

" அய்யய்யோ ..........எதற்கு அங்கெல்லாம்  போன் செய்கிறாய். நீ ஏதாவது கஷ்டத்தில் மாட்டிக் கொண்டால்   காப்பாற்ற போலீஸ் வருவார்கள்.
எங்கள் ஸ்கூலில் சொல்லிருக்கிறார்கள். இப்பொழுது உனக்கு என்ன கஷ்டம். நம்மை யாராவது கடத்தப் போகிறார்களா?" என்றான் பயந்து கொண்டே..

ஓ.........இது நம்ம 100 (இப்பொழுது 108) போல் என்பது ஒரு வழியாகப் புரிந்தது.

வீட்டிற்குள் வந்தோம்.
ஊய்.................................................................கொஞ்சம் குறைந்தார் போலிருந்தது.

என் பெண்ணிற்கு போன் செய்து விஷயத்தை சொன்னேன். அவளோ"ஒன்றும் பயப்படாதே. நம்முடைய ஸ்மோக் அலாரம்  fire  dept  உடன் கனெக்ட் ஆகவில்லை. அப்படி கனெக்ட் ஆகியிருந்தால் ஃபயர்  என்ஜின்  இவ்வளவு நேரத்திற்குள்  வந்திருக்கும்." என்று பயமுறுத்தி விட்டு

ஜன்னலைத் திறந்து வை. அடுப்பிற்கு மேலிருக்கும் vent ஐ  ஆன் செய் .என்று கட்டளைகள்  பிறப்பித்த வண்ணம் இருந்தாள் .
கொஞ்ச நேரத்தில் பீப் சத்தம் குறையும் என்றாள் .ஜன்னலைத் திறக்க
எனக்குப் பயமாக இருந்தது. இதில் என் பேரன் அரவிந்த் வேறு.
" சும்மா இரு பாட்டி ஜன்னலை திறக்காதே  .இந்த சத்தம் கேட்டு  யாராவது போலிசிற்கு போன் செய்து  விடப் போகிறார்கள் "என்று மழலையில் பயமுறுத்த  ஆனது ஆகிறது  என்று ஜன்னலைத் திறந்து வைத்தேன்.

ஜன்னலைத் திறந்தால், மெயின் ரோடு தெரியும். காரில் போகும் எல்லோரும் எங்கள் வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை எனக்குத் தான் அப்படித் தோன்றியதா? யாரவது போலிசிற்கு சொல்லி விடுவார்களோ?
அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்  தானே!

கொஞ்சம் கொஞ்சமாக புகை குறைந்ததும்  ,சத்தமும் குறைந்து ஒரு வழியாக நின்றது.

அப்பாடி.........என் வாழ்  நாளில் ,விசில் சத்தத்திற்கு,  இந்த மாதிரி நான் பயந்ததேயில்லை.

மத்தியான சாப்பாடு இல்லாமலே ,பசி காணாமல் போயிருந்தது.
காபி போட்டு குடித்தேன்  பயந்து கொண்டே தான் கேசை ஆன் செய்து காபி போட்டேன்.அரவிந்திற்கும் பால் காய்ச்சி கொடுத்தேன்.

கொஞ்ச நேரத்தில்  என் பெண், மாப்பிள்ளை எல்லோரும் வீடு வந்து சேர அன்றைய பொழுதிற்கு  இது தான் டாபிக்.

என் மாப்பிள்ளை சொன்னது" ஒரு "துண்டை" எடுத்து ஸ்மோக் டிடெக்டர் முன்னால்   ஆட்டி, புகை அண்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினை வராது "

நான் அப்பளத்தை பொரிப்பேனா. இவர்கள் வீட்டு ஸ்மோக் டிடெக்டறிற்கு
 " ஃபங்கா " போட்டுக் கொண்டு நிற்பேனா சொல்லுங்கள்.

ஒரு அப்பளத்திற்கே ,இத்தனை  தாஜா செய்ய வேண்டுமென்றால் தீபாவளியை நினைத்தேன்  .......கலங்கிப் போனேன்.

அன்றிரவு கனவில்  நீல சட்டைப்    போலீஸ்காரர்கள்  (நம்மூர் போலீஸ்காரர்களைப் போல் ஒன்றரைமடங்கு உயரத்தில், அகலத்தில், இடுப்பில் ஒட்டியானமாக வாக்கி டாக்கி, போன், கன் ...  இத்யாதி.... இத்யாதிகளுடன்........} என்னைப் பார்த்து,"  you are creating nuisance. can we take you for interrogation" என்று மிரட்ட  திடுக்கிட்டு விழித்தேன்.

ஒரு அப்பளம் பொரித்து  நிம்மதியாக சாப்பிட முடியவில்லை.
டாலரில் சம்பாதித்து என்ன வேண்டியிருக்கு? என்ன அமெரிக்காவோ?
ஊரெல்லாம் சுத்தம் தான், எல்லாவற்றிலும், ஒழுங்கு தான்,ஒரு பட்டனைத் தட்டினால் தட்டில் இட்லியும் ,காபியும்  கூட  வரவழைக்கும்  சக்தி படைத்த வாழ்க்கை வசதிகள்  உண்டு .....

ஆயிரம் இருந்தும்...இருந்தும்........அப்பளம் கூட ........பொரிக்க முடியவில்லையே  !

இந்தியாவிற்குத் திரும்ப மனம் கிடந்து துடித்தது. வெளியே சொல்ல முடியவில்லை.
என் பெண் வருத்தப்படுவாளே  !!!!!!



image courtesy--google




54 comments:

  1. பூரி பொரிப்பதாக இருந்தால் அலாரத்தை முதலில் ஆஃப் செய்து விட்டு பிறகு பூரி செய்யவேண்டும் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் தப்பித்தேன் ..

    இருந்தும் மசாலா வாசனை எதிர்வீட்டுக்காரரை அழைத்துவந்துவிட்டது ,,!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீங்கள் சொல்வது போல் வெளிநாடுகளில் நம் சமயல் செய்ய கொஞ்சம் பயம் தான். வாசனை காட்டிக் கொடுத்து விடுமே!

      இன்று மாலை நீங்கள் சொல்வது போல் பூரியும் மசாலாவும் செய்ப் போகிறேன். இப்பொழுதெல்லாம் இந்த ஸ்மோக் டிடெக்டரை ஐஸ் வைப்பது எப்படி என்று தெரிந்து வைத்திருக்கிறேன். அதனால் பயமில்லை.

      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  2. என்னவொரு சிரமம் அப்பளம் பொரிக்க...!

    ReplyDelete
    Replies
    1. அப்பளம் பொரிப்பதே பெரிய மலையாகத் தான் இருந்தது தனபாலன் சார்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
  3. நானும் இந்த fire alarm ற்கு பயந்த அனுபங்களும் உண்டு சகோதரி. ஆரம்பத்தில் மிகவும் பயப்பட்டு, எவரேனும் ஏதேனும் சொல்லி விடுவார்களோ என்றெல்லாம் எண்ணியதுண்டு. இப்போது பழகி விட்டது. பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் உங்கள நுபவங்காலி எழுதுங்களேன். படிக்கக் காத்திருக்கிறேன்.
      நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

      Delete
    2. விரைவில் எழுதுகிறேன் தோழி...

      Delete
    3. எனது அனுபவங்களை இந்தப் பக்கத்தில் எழுதியுள்ளேன் தோழி.

      எதிர்பாரா நேரத்திலோர் பதட்டம் !!!

      படித்து, தங்களது மேலான கருத்துகளை தெரிவிக்கவும்.

      நன்றி.

      Delete
  4. பாவம் நீங்க! :(

    அந்த ஸ்மோக் டிடக்டர்ல பாட்டரியை எடுத்துவிட்டால் சத்தம்போடாமல் இருக்குமா என்னணு தெரியலை. That "tamil-speaking friend" could have helped you little bit more.

    That alarm noise is very annoying one. I cant stand that. It drives me crazy!

    ReplyDelete
    Replies
    1. அந்த அனுபவம் அன்று என்னை மிகவும் பயமுறுத்தி விட்டது . உண்மையே!
      உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. ஆயிரம் இருந்தும்...இருந்தும்........அப்பளம் கூட ........பொரிக்க முடியவில்லையே !

    சிவாஜி குரலில் சொல்லிப் பார்த்து
    சிரித்துக் கொண்டோம்
    உண்மையில் தாங்கள் எவ்வளவு அவஸ்தை அப்போது
    பட்டிருப்பீர்கள் என நீங்கள் நகைச்சுவையாய் சொல்லிப்போனாலும்
    புரிந்து கொள்ள முடிகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி சார். உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.
      மிகவும் ரசித்ஹ்டுப் படித்து இருக்கிறீர்கள்.
      நன்றி.

      Delete
  6. எல்லா "முதல்" அனுபவங்களும் சுவாரசியம்தான்! :) நான் வந்த புதிதில் ஒரு நாள் இரவு மறுநாள் சுற்றுலா செல்வதற்காக சப்பாத்தி செய்தபோது கிட்டத்தட்ட நள்ளிரவில் அலாரம் அடிச்சு பாடாப் படுத்திச்சு! :)) அதுக்கப்புறம் புகை வராம சமைக்கப் பழகிட்டேன் ராஜி மேடம்! :) அவசரப்படாம நிதானமா செய்தால் ஒரு தொந்தரவும் வராது. அடுப்பை வேகமா எரிச்சு புகை மூட்டமானால் இதெல்லாம் நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மகி, நிஜமாகவே பெரிய தொல்லையாகி விட்டது அன்று. இப்பொழுதெல்லாம் நானும் ஜாக்கிரதையாக சமைக்கிறேன்.
      நன்றி மஹி, உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  7. முதல் 'திக்' அனுபவத்தை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறீர்கள். இந்தப் பதிவையும், பின்நூட்ட்டங்களையும் படித்தவுடன் 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?' பாடல் நினைவுக்கு வருகிறது!

    அந்தப் பாட்டுல சொல்ற மாதிரி வெத்திலைய போட்டு துப்ப இடம் வேண்டாம் - ஒரு அப்பளாம் பொரிச்சு சாப்பிட முடியலேன்னா எப்படி?

    சூப்பர் அனுபவம்!

    ReplyDelete
    Replies
    1. நான் அடிக்கடி சொல்வதும் இது தான் சொர்க்கமேயானாலும் சென்னை போலாகுமா . இங்கே வந்து இந்த மாதிரி திகிலனுபவங்கள் பட்ட பிறகு சென்னையைப் பற்றிய என் அபிப்பிராயம் இன்னும் எங்கோ உயரத்தில் போய்விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

      Delete
  8. //ஒரு அப்பளம் பொரித்து நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. டாலரில் சம்பாதித்து என்ன வேண்டியிருக்கு? என்ன அமெரிக்காவோ? ஊரெல்லாம் சுத்தம் தான், எல்லாவற்றிலும், ஒழுங்கு தான்,ஒரு பட்டனைத் தட்டினால் தட்டில் இட்லியும் ,காபியும் கூட வரவழைக்கும் சக்தி படைத்த வாழ்க்கை வசதிகள் உண்டு .....

    ஆயிரம் இருந்தும்...இருந்தும்........அப்பளம் கூட ........பொரிக்க முடியவில்லையே !//

    தங்கள் ஆதங்கம் மிக அருமை. டாலரில் சம்பாதித்து டாலராகத்தான் சாப்பிட முடியும். வெளிநாடுகள் எல்லாமே சாப்பாடு விஷயத்தில் தண்டம் தான்.

    வாய்க்கு ருசியானதை உடனடியா செய்து சாப்பிட நம்ம ஊர் மாதிரி வருமா என்ன?

    மிகவும் நல்ல பதிவு. ரஸித்துப்படித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வைகோ சார். நீங்கள் சொல்வது போல் தமிழகத்தைத் தாண்டி விட்டாலே போதும் நம் நாக்கு, வற்றல் குழம்பும், சுட்ட அப்பளமும் கேட்க ஆரம்பித்து விடுகிறது.
      உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்.

      Delete
  9. ''...ஆயிரம் இருந்தும்...இருந்தும்........அப்பளம் கூட ........பொரிக்க முடியவில்லையே !..''
    அருமை!...நல்ல அவத்தை.
    இங்கும் இப்படித் தான். (புகையென்றால்.டென்மார்க்)
    ரசித்தேன்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. தற்பொழுது நான் பெரும் இன்பம் நீங்களும் பெறுகிறீர்களா?
      ஆனால் இது தற்காலிகம் தான். எப்ப இந்தியாவிற்குத் திரும்பப் பறக்கலாம் என்று காத்திருக்கிறேன்.

      நன்றி கவி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  10. சின்ன அப்பளம் உங்களை இந்தப்பாடு படுத்தி விட்டதே. பகிர்ந்த விதம் ரசனை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பால கணேஷ் சார், உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

      Delete
  11. Ha ha ha. We had this problem when we had a trip to LA to visit our daughter. Cooking in Indian style is not possible there.

    ReplyDelete
    Replies
    1. cooking in indian style in US poses great hardships . But we do take those tasks lightly as our tongue needs all that stuff.

      thankyou for enjoying reading my post.

      Delete

  12. துபாயில் என் மகனுடன் சிறிது நாட்கள் தங்கி இருந்தோம்
    இரவு நேரத்தில் பல சமயங்களில் இந்த புகை( ஃபைர்) அலார்ம் அபார்ட்மெண்டில் உள்ள அனைவரையும் எழுப்பிவிடும். இரண்டு மூன்று முறை இம்மாதிரி ஃபால்ஸ் அலார்ம் கேட்டுப் பழகிவிட்டதால் சிலர் அலார்ம் அடித்தும் ஏதும் செய்ய மாட்டார்கள்.புலி வந்த கதையாகக் கூடாதே என்று நினைத்ததுண்டு.

    ReplyDelete
    Replies
    1. என்னைப் போலவே உங்களுக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதே .
      பகிர்ந்து கொள்ளுங்களேன். படிக்கக் காத்திருக்கிறேன்.
      நன்றி GMB சார் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் .

      Delete
  13. ஆயிரம் இருந்தும்...இருந்தும்........அப்பளம் கூட ........பொரிக்க முடியவில்லையே !//:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸாதிகா உங்கள் முதல் வருகைக்கும், ரசித்துப் படித்ததற்கும்.
      தொடர்ந்து என் தளத்திற்கு வருகை புரிந்தால் மகிழ்வேன்.

      Delete
  14. எல்லாம் முதல் அனுபவத்தின் வேதனை தான்.
    சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு பாட்டு வருமில்லையா-“ஆரம்பக் காலத்தில் துன்பம் இருக்கும்; ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்” என்று?

    புகைவேட்டைக் கருவியை ஏமாற்ற என்‘அவள்’ இப்படித்தான் செய்கிறாள்: முதலில் பால்கனிக் கதவைத் திறப்பது. அடுத்து எல்லா சன்னல்களையும் திறப்பது. ‘அவனி’ல் உள்ள காற்றுக் குழாயைத் திறப்பது. அடுப்பைக் குறைந்த வெப்பனிலையில் மூட்டுவது. கொஞ்ச நேரம் ஆகும். ஆகட்டுமே!

    அதன் பிறகு வடை என்ன, போண்டா என்ன, அப்பளம் என்ன, எதை வேண்டுமானாலும் பொரிக்கலாம்.-நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா. (ஜவ்வரிசி பாயசம் செய்த அனுபவம் பற்றியும் எழுதலாமே!)

    ReplyDelete
    Replies
    1. செல்லப்பா சார்
      ஜவ்வரிசி பாயசம் இன்னும் நியு ஜெர்சியில் செய்ய வில்லை. செய்த பிறகு ஒரு பதிவு எழுதிவிட்டால் ஆச்சு.
      உங்கள் வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் நன்றி சார்.

      Delete
  15. அப்பளம் இப்படி பாடாய் படுத்தி விட்டதே.....

    இப்போது படிக்கும் போது நகைச்சுவையாக இருந்தாலும், அந்த நேரத்தில் நீங்கள் நிச்சயம் கஷ்டப்பட்டு இருப்பீர்கள் எனப் புரிகிறது.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்ஜி, உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மட்டுமல்ல,
      நான் அன்று பட்ட கஷ்டத்தை புரிந்து கொண்டதற்கும் தான்.

      Delete
  16. வெளிநாட்டுக்கு வருபவர்களின் முதல் அனுபவம் இதுவாகத்தான் இருக்கும். அதை நகைச்சுவையுடன் சொல்லியிருப்பதில்தான் உங்கள் திறமை பளிச்பளிச் என்கிறது.பதிவு முழுவதும் ரசிக்கும்படி இருக்கிறது.

    உங்களின் நட்புப் பெண்ணும் ஊருக்கு புதியவராய் இருந்திருக்கலாம்.நமக்கு விசிறிக்கொள்ள தேவையே இல்லாத இந்த ஊரில் யாருக்கெல்லாம் (ஸ்மோக் டிடெக்டர்) விசிறிவிட வேண்டியிருக்கு,எல்லாம் ஒரு அனுபவம்தான்.

    முதல் பயணத்தில் அப்பளம் சுட பயந்த நீங்கள்தான் இப்போது என்னென்ன சுட்டு தள்ள‌றீங்கன்னு ஜாலியா ஒரு பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சித்ரா மூதல் அனுபவம் தான் இப்படி பயமுறுத்தி விட்டது. இப்பொழுதெல்லாம் நான் வெள்ளைத் துண்டு வைத்து சமாதானக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறேன் ஸ்மோக் டெடேக்டருக்கு.

      நன்றி சித்ரா உங்கள் வருகைக்கு, என் பதிவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளியதற்கு. உங்களைப் போன்று பலருடைய பின்னுட்டங்கள் தரும் பாராட்டுக்கள் அடுத்த பதிவு எழுதுவதற்கு பெரிய ஊக்க போனஸ் தான் .

      நன்றி சித்ரா.

      Delete
  17. இங்கு வருபவர்களுக்கு யாராக இருந்தாலும் முதலில் சொல்லித் தருவது இது போன்ற விஷயங்கள் ஆனால் உங்கள் பெண் சொல்லித் தர மறந்துவிட்டார்கள் போல இருக்கிறது...அதுவும் நல்லதுதான் இல்லையென்றால் இது போன்ற ஒரு நல்ல பதிவு எங்களுக்கு கிடைத்திருக்குமா என்ன....


    உங்களிடம் ஒரு சிறு விஷயத்தை அழகாகவும் தெளிவாகவும் நகைச்சுவையாகவும் சொல்லும் திறமை இருக்கிறது சபாஷ்.... தொடர்ந்து எழுதுங்கள்

    ///இப்பொழுதெல்லாம் நான் வெள்ளைத் துண்டு வைத்து சமாதானக் கொடி காட்டிக் கொண்டிருக்கிறேன் ஸ்மோக் டெடேக்டருக்கு///

    இந்த வரிகள் என்னை மிகவும் சிரிக்க வைத்தன.


    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. இங்கு வந்தவுடன் இந்த ஸ்மோக் டிடெக்டர் என்னை அசத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
      இப்ப்ப்ழுது பதிவுலகம் பரிச்சயமானதால் இதைப் பற்றி எழுத நினைத்தேன். அதனால் கற்பனை கலந்த உண்மைப் பதிவு தேறி விட்டது.
      நன்றி MTG என் எழுத்தைப் புகழ்வதற்கு .

      Delete
  18. ஹாஹா ஹாஹா:-)))))))))))

    ஸ்மோக் டிடெக்டருக்கு இப்படிப் பயப்படலாமா? அப்பளம் எண்ணெய் எல்லாம் உடலுக்கு நல்லதில்லைன்னு அதுக்கும் தெரிஞ்சுருக்கு!

    நேரம் இருந்தால் இங்கே பாருங்க.

    http://thulasidhalam.blogspot.co.nz/2009/01/all-because-of-uthappa.html

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி டீச்சர்!
      உங்கள் முதல் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள். வருகை புரிந்ததற்கும், ரசித்துப் படித்ததற்கும் என் நன்றிகள்.
      உங்கள் ஊத்தப்பத்தைப் பற்றிய கருத்தை உங்கள் தளத்தில் எழுதியிருக்கிறேன்.
      மீண்டும் மீண்டும் என் தளத்திற்கு வருகை புரிய்மாறு அழைக்கின்றேன்!

      Delete
  19. வெளிநாடுகளுக்குப் போகும் பெற்றோருக்கு அங்கே வசிக்கும் குழந்தைகள் இதெல்லாம் முதல்லயே சொல்லித்தருவது நல்லது.

    இப்ப வாசிக்கறப்ப நகைச்சுவையா இருந்தாலும் அப்போ எப்படிக் கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு உணர முடியுது.

    ReplyDelete
    Replies
    1. அந்த சமயத்திற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் , நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். எப்படி தான் நாமும் கற்பது சொல்லுகள்.....
      நன்றி உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

      Delete
  20. அப்பளத்தினால் வந்த சோதனை! சுவாரஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார், உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  21. இப்படித்தான் சின்னச் சின்ன விசயங்கள் எல்லாம் முதலிலே விளக்கம் இல்லாத காரணத்தால் பயத்தை ஏற்ப்படுத்துகின்றது

    ReplyDelete
    Replies
    1. நன்றி திருமதி சந்திர கௌரி உங்கல் வருகைக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும்.

      Delete
  22. இந்தப் பதிவில் தாங்கள் பட்ட அவஸ்தையை விட - ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ..... என்று ஆதங்கத்தின் - முத்தாய்ப்பு வைத்திருக்கின்றீர்களே!.... அது தான் எங்களையும் உங்களோடு சேர்ந்து வருத்தப்பட வைத்தது!...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்,
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
      மீண்டும் மீண்டும் வந்து உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

      Delete
  23. // ஒன்று புரிந்தது. தருமமிகு சென்னையில் ,என் வீட்டிற்கு ராணியாய் கோலோச்சிக் கொண்டிருந்த எனக்கு இது தேவையா? //
    // நான் அப்பளத்தை பொரிப்பேனா. இவர்கள் வீட்டு ஸ்மோக் டிடெக்டறிற்கு " ஃபங்கா " போட்டுக் கொண்டு நிற்பேனா சொல்லுங்கள். //

    நல்ல நகைச்சுவை! படிக்க அலுப்பு தட்டவில்லை. எங்கே தொடரும் என்று போட்டு சஸ்பென்ஸ் வைத்து விடுவீர்களோ என்று நினைத்தேன்.


    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழ் இளங்கோ சார். என் பதிவை ரசித்துப் படித்ததற்கும் உங்கள் கருத்துக்களை, பாராட்டுக்களை இங்கு எழுதியதற்கும் மிக்க நன்றி .

      Delete
  24. இந்தியாவிலிருந்து வத்தல், வடாம், புளி , பலகாரம் எல்லாவற்றையும் இமிக்ரேஷன் ஆபிசர் கண்ணில்படாமல் , எப்படியோ கடத்திக் கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாயிற்று.//
    நானும் அப்படித்தன் குழந்தைகளுக்கு கொண்டு வந்து விட்டேன், மூன்று வருடங்காளுக்கு முன் இப்படித்தன் பயந்து கொண்டு வந்தேன். இன்று பழகி விட்டது. ஏதாவது மசாலா பொருள் வைத்து இருக்கிறாயா என்று கேட்கும் இமிக்ரேஷ்னில் இல்லை என்று தலையாட்டிவிட்டு வந்து அப்பாடி தப்பித்தோம் என்று பெருமூச்சு விட்டது நமக்கு தன் தெரியும்.இப்போது இங்கு வந்து இருக்கிறேன்.(நியூஜெர்சி)
    உங்கள் அனுபவங்களை நன்றாக நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முதலில் லேட்டாக நன்றி சொல்வதற்கு மன்னிப்பீர்களா?
      பதினேழு மணி நேரம் பயணம் செய்வது கூட அலுப்புத் தட்டாது. இந்த ஆபிசர் கண்ணில் நம் ஊறுகாய், உப்புகாய் பட்டு விடக் கூடாதே என்கிற கவளி தான் எனக்கும் மேலோங்கியிருக்கும்.
      நன்றி கோமதி உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும்.

      Delete
  25. 'இந்தியாவிலிருந்து வத்தல், வடாம், புளி , பலகாரம் எல்லாவற்றையும் இமிக்ரேஷன் ஆபிசர் கண்ணில்படாமல் , எப்படியோ கடத்திக் கொண்டு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்தாயிற்று.'

    'நான் அப்பளத்தை பொரிப்பேனா. இவர்கள் வீட்டு ஸ்மோக் டிடெக்டறிற்கு
    " ஃபங்கா " போட்டுக் கொண்டு நிற்பேனா சொல்லுங்கள்.'
    Ha ha ha வாய் விட்டு சிரித்தேன் ராஜி மேடம் :D

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஹா,
      நன்றாகவே என் எழுத்தை ரசித்திருக்கிறீர்கள் என்று புரிகிறது.
      உங்கள் வருகைக்கும், படித்து வாய் விட்டு சிரித்ததற்கும் நன்றி மஹா.

      Delete
  26. விசில் சத்தம் - என்னை சிரிக்க வைத்தது...பகிர்விற்கு நன்றி..

    ReplyDelete
  27. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

நீங்கள் நினைப்பதை சொல்லுங்களேன்

உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்