Friday 26 September 2014

தூய்மையாக்குவோம் இந்தியாவை!

பதிவை ஆரம்பிப்பதற்கு முன் ,

செவ்வாய் கிரகத்திற்கு  செயற்கைக்கோளை  வெற்றிகரமாக செலுத்தி , இந்தியாவை பெருமையடையச் செய்த  ISRO விஞ்ஞானிகளுக்கு  என்  சல்யூட்!  



விஷயத்திற்கு  வருகிறேன்.

மாலை நடை பயிற்சிக்கு அருகில் இருக்கும் பூங்காவிற்கு செல்வது வழக்கம்.
இன்று மாலையும்  சென்றேன்.    ஓரளவு   சுத்தமாகவே இருக்கும் பூங்காவில்  இன்று என்னவோ ஒரே குப்பை . அங்கங்கே  குப்பைகளை போடுவதற்கு  பெரிய பெரிய பெங்குயின்கள்  நின்று கொண்டிருந்தாலும் , தரையெங்கும் ஒரே பிளாஸ்டிக் கவர்களும், அங்கங்கே பேப்பர்களும், பழத் தோல்களும் காண சகிக்கவில்லை.  டூரிஸ்ட்  பஸ்ஸில்  வருபவர்கள்  பார்க்கை  தற்காலிக  தங்குமிடமாக,  சாப்பிடும் இடமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது புரிந்தது.  உண்ட பின் ,குப்பைகளைப் போட்டு விட்டு அவர்கள் சென்றிருக்கிறார்கள். கொஞ்சமே கொஞ்சம் சிரமபட்டிருந்தால் போதுமே, வாயைத் திறந்து கொண்டு நிற்கும் பெங்குயின்கள் வாயில் போட்டிருக்கலாம். பார்க்கவும்  சுத்தமாயிருக்கும். 'பார்க்'கும் சுத்தமாக இருந்திருக்கும் . "சுற்றுப்புறத்தைத் தூய்மையாக  வைத்துக் கொள்ளலாமே ! " என்று சொல்வது என்பது பூனைக்கு மணி கட்டுகிற வேலை தான்.


அப்பொழுது தான் தோன்றியது வெளியே குப்பையை தாறு மாறாகப் போடுபவர்கள்  தங்கள் வீட்டை எப்படி வைத்துக் கொளவார்கள் . என்று சிந்தித்தேன். அதைப் பற்றி  என்னவரிடம்  ஆதங்கப் பட்டுக் கொண்டிருந்தேன்.
" இப்பொழுதெல்லாம் பெரும்பாலான அதுவும் 90சதவிகிதம்   வீடுகள் மிக சுத்தமாக இருக்கின்றன.  யோசித்துப் பார்  "என்று  ஒரு சில எங்களுக்குத் தெரிந்த வீடுகளைப் பற்றி அவர் சொன்னது யோசிக்க வைத்தது.

 அவர் சொல்வதும் சரி தான் .பெரும்பாலானவர்கள்  தங்கள் வீட்டை என்னவோ கண்ணாடி போல் தான் வைத்திருக்கிறார்கள். தெருவில் குப்பை கொட்டிக் கொண்டே,  ' யாருமே பெருக்குவதில்லை. எப்படி இருக்கிறது தெரு? ' என்று அங்கலாய்க்கிறார்கள்.

அதனால் தான் மற்ற நாட்டவர்களின் கண்களுக்கு , நம் பாரத தேசம்  அழுக்காகவும்,  குப்பையாகவும் காட்சியளிக்கிறது. நாடு என்பதும்  ஒரு வகையில் பார்த்தால் பெரிய வீடு தானே! அதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பக்குவம் எப்பொழுது வருமோ தெரியவில்லை.

உலகமே அன்னாந்து பார்க்கும் உயர்ந்த கலாச்சாரம்.
குதித்து உயர்ந்து கொண்டிருக்கும் பொருளாதாரம்.
விண்ணை ஆக்கிரமிக்கும்  நம் செயற்கைக் கோள்கள் .....
இப்படி நம் தேசத்தைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . ...

சாதனைகளைஅனாயாசமாகப் புரிந்து கொண்டே வரும் நமக்கு  நாட்டைத் தூய்மையாய் வைத்துக் கொள்வது பெரிய வேலையா என்ன?
சற்றே சிரத்தை எடுத்துக் கொண்டால்  போதுமே .
இதைத்தான் நம் பாரதப் பிரதமரும்  நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

காந்தி ஜெயந்தி அன்று ஆரம்பிக்கப் போகும் " Swachh Bharat "  இயக்கத்திற்கு ,  நம் பாரதப் பிரதமர்  திரு. நரேந்திர மோடி  அவர்கள்  மக்களிடம்  என்ன எதிர் பார்க்கிறார்  என்பதை  பார்ப்போமா?அவர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தை அப்படியே  கொடுக்கிறேன்.

அன்பு  நண்பர்களே,

' தெய்வீகத்தன்மைக்கு அடுத்து  வருவது தூய்மைத்தன்மை ' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பீர்கள் . ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை.

வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று  'ஸ்வச்ச பாரத்' - 'தூய்மையான பாரதம்' - எனும் இயக்கத்தைத் துவக்க உள்ளோம். இது தூய்மையான இந்தியாவை உருவாக்கும்  மாபெரும் மக்கள் இயக்கமாகும். தூய்மைத் தன்மை என்பது  மகாத்மா காந்தி மனதில் கொண்டிருந்த ஆழ்ந்த ஒரு கருத்தாகும் . வரும் 2019 -ல் பாபுவின் 150-வது பிறந்த ஆண்டுக் கொண்டாட இருக்கும் தருணத்தில் 'தூய்மையான இந்தியா 'என்பது நாம் அவருக்கு செலுத்தும் மிகச் சிறந்த மரியாதையாக இருக்கும்.

இந்தியா சுயராஜ்யம் அடைவதற்காக மகாத்மா  காந்தி தனது வாழ்வையே  அர்பணித்தார் . நமது   தாய்த்திருநாடு தூய்மை அடைய  நாம் அனைவரும் நம்மை அர்பணித்துக் கொள்ள வேண்டிய நேரமிது .

நீங்கள் ஒவ்வொருவரும்  ஆண்டொன்றிற்கு  200 மணி நேரம் - அதாவது ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் -  தூய்மைப்  பணிக்கென  அர்ப்பணிக்க  வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியா தூய்மையற்றதாக  இருக்க நாம் இனிமேலும் அனுமதிக்க இயலாது. வரும் அக்டோபர் 2ம்  தேதியன்று, கையில் வாருகோலுடன் நானே இந்தப் புனிதப் பணியில் களமிறங்க உள்ளேன்.

உங்களது  இல்லங்கள், பணியிடங்கள்,  கிராமங்கள், நகரங்கள், சுற்றுப் பகுதிகளை முழு மனதுடன் முறைமையாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என இன்று நான் உங்கள் அனைவரையும். குறிப்பாக அரசியல்-மதத் தலைவர்கள், நகர மேயர்கள், கிராமத் தலைவர்கள், தொழிலதிபர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தூய்மையான பாரத்தத்தை உருவாக்கும் நமது இந்த ஒட்டு மொத்த முயற்சியில் உங்களது உதவியையும்  துடிப்பான பங்காற்றலையும்  நான்  கோருகிறேன்.



                                                                                                                                  உங்களது,
                                                                                                                             நரேந்திர மோடி .


வாருங்கள் பிரதமரின் கோரிக்கையை ஏற்போம்.
தூய்மையான பாரதத்தை உருவாக்குவதில் நம் பங்கும் இருக்கட்டும்.

நன்றி: www.narendramodi.in
PM's Message on Swachh Bharat



image courtesy--google.

Sunday 21 September 2014

கவியரசர் கண்ணதாசனால் கிடைத்த பாராட்டு !








ஒரு சில மாதங்களுக்கு முன்பு, வல்லமை மின்னிதழில்  " என்  பார்வையில்   கண்ணதாசன் " என்னும் தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி கவிஞர் திரு. காவிரி மைந்தன்  அவர்களால் நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். பரிசு  கிடைக்கவில்லை. ஆனால் நடுவரின் பாராட்டு   என் கட்டுரைக்குக் கிடைத்தது. கட்டுரையை  இங்கே பகிர்கிறேன்.

படித்து உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்களேன்.

                                         


                                       
                                           என் பார்வையில் கண்ணதாசன்.

கண்ணதாசன் பாடல்கள், கவிதைகள் பற்றிய கட்டுரைப் போட்டியில் சேர்ந்து கொள்வது என்று தீர்மானமான பின்  தான் யோசிக்க ஆரம்பித்தேன். கவியரசைப் பற்றிய கட்டுரையை  நான்  எழுதுவதா........ ......சற்றே தயங்கி ஓடி ஒளிந்து கொண்ட மனசாட்சியைப் பிடித்து இழுத்து வைத்து ,
 " கவிதை என்பது  மெத்தப்படித்தவர்கள் மட்டுமே படித்து  ரசிப்பது என்கிற நிலைமையை மாற்றி பாமரரையும் சேரும் விதமாய்  கவிதை எழுதியவர் நம் கவிஞர்.அதனால் நீ ரசித்த அவருடைய கவிதைகள் பற்றி எழுத என்ன  தயக்கம்?" என்று மனசாட்சியை சமாதானப்படுத்தி விட்டு எழுத அமர்ந்தேன்.
அடுத்த  பிரச்சினை தலை தூக்கியது.
எந்த விதமான கண்ணதாசன் பாடல்களைப் பற்றி கட்டுரை வடிப்பது  என்று அலைபாய்ந்து கொண்டிருந்தேன். காதலா, வீரமா, ஆன்மீகமா, தத்துவமா,.தேசப்பற்றா, சமுதாய அக்கறையா .... ....எதைப் பற்றி எழுதுவது எதை விடுவது .கவியரசு எழுதிக் குவித்திருப்பவை  எண்ணற்றவை.ஏராளமோ ஏராளம். அத்தனையும் முத்துக்களே. அதில்  தனியாக ஒரு  தலைப்பை  எடுத்துக் கொண்டால் மற்றவை விடும்படி ஆகிவிடுமே  என்று தோன்ற  நாம் ஏன் என்னைப் பாதித்த , பிடித்த, நான் மயங்கிய பாடல்கள் என்று எடுத்துக் கொண்டால் என்ன என்று தோன்ற அப்படியே கட்டுரை எழுத ஆரம்பிக்கிறேன்.

மீண்டும் ஒரு சுணக்கம். எனக்குப் பிடித்த கவிஞரின்  பாடல்களோ ஏராளம். எதைச் சொல்ல.... எதை விட.....மிகசிலப்  பாடல்களை  பற்றி எழுத நினைத்தேன்.

ஒரு சில பாடல்கள் என்னுள்  ஏற்படுத்திய தாக்கத்தைத்  தொகுத்துக் கட்டுரையாக சமர்ப்பிக்கிறேன்.

நான் பள்ளி செல்லும் வயதில் , சினிமா  பார்ப்பதும், சினிமா பாட்டு கேட்பதும் இமாலயக் குற்றம் என்கிற நிலை இருந்த நாளில் கூட  என் மனதில் புகுந்த கொண்ட பாட்டு,

அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
கவலையில் வருவதும் அம்மா அம்மா.

அன்றைய சிறு வயது  சங்கடங்களுக்கு மட்டுமா "அம்மா அம்மா ". இன்றும் கூட நான் சவால்களை எதிர் கொள்ளும் போதும் ,கவலைகளில் நான் மூழ்கும் போதும் , தெம்பு தருவது " அம்மா " என்கிற வார்த்தை தான்.  எத்தனை நிதரிசனமான உண்மை . அதை அழகிய பாட்டாய்  வடித்து நமக்குள் ஊற்றெடுக்கும்   தாய் பாசத்தை  நாமே உணரும்படி செய்தது இந்தப் பாட்டு என்று சொன்னால் மிகையாகாது.அந்த சிறு வயதில் என்னைப் பாதித்த மற்றுமொரு பாட்டு என்று சொன்னால் அது இந்தப்பாட்டு .

"அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உயர வைத்தாய் தேவி "

சரஸ்வதி சபத்தத்தில் வரும் இந்தப் பாட்டு  நம் மனதை உருக வைத்தப் பாடல்களில் ஒன்று. இந்தப் பாட்டுக் காதில் விழுந்தாலே  நம் கண் முன் சரஸ்வதியின்   உருவம்  வருவதைத்  தடுக்க முடியாது. அத்தனை வலிமை வாய்ந்த வரிகள் .இருபது முப்பது வருடங்களுக்கு முன் இந்தப் பாட்டு  மிக மிகப் பிரபலம். பல சிறுவர் சிறுமிகளின்  மனதைத் தொட்ட பாட்டு என்றே சொல்ல வேண்டும்.

சகோதரப் பாசம் பற்றி எழுதியுள்ள பாடல்கள்  உணர்ச்சி மிகுதியால் கண்கள்  குளமாகும்.பாசமலர்  படத்தில்   வரும் அண்ணன் தங்கைப்  பாசத்தை கவியரசர் சொல்லும் விதமே அலாதி தான்.

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…

என்று ஒரு தங்கை தன் சகோதரன் மேல் கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பை  விளக்கும் வரிகளில் ,  நாம் நம்மையே தங்கையாகவோ அண்ணனாகவோ  நினைக்கத் தவறுவதில்லை  என்பது உண்மையே!


பதின்ம வயதிலோ  சொல்லவே  வேண்டியதில்லை. காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  திருட்டுத் தனமாய்  மனதில் போய் ஒளிந்துக் கொண்டு இன்றளவும்  வெளியே வர மறுக்கும் பாடல்கள் பட்டியலிட்டால்  பக்கம் போதாது.  "அத்திக்காய் அத்திக்காய் " பாடல்  மிகவும் மென்மையாக அதே சமயத்தில் காதலர்களிடையே  இருக்கும் காதலின் மகத்துவத்தை  அருமையாய் விளக்கும் பாடல்.
"மாலைப் பொழுதின் மயக்கத்திலே " பாடல் திருமதி சுசீலா குரலின்  இனிமையுடன் ஒலிக்கும் போது  மயங்காதவர்கள் யார் ? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சிவகங்கை சீமையில் வரும் " கனவு கண்டேன்  நான் கனவு கண்டேன் "  என்கிற பாடலைக் கேட்கும் போது  மனம் கண்டிப்பாய் அவரவர் திருமண நிகழ்வை  மீண்டும் மனதிற்குள் பார்த்து மகிழாமல் இருக்க முடியாது. நம்மை மீண்டும் இளமைக்குத் திருப்பும் சக்தி வாய்ந்தவை இந்தப் பாடல்கள்.
பாடலுக்கும், கவிதைக்கும் இந்த சக்தி உண்டா என்கிற  வியப்பு மேலிடுகிறது. கண்ணதாசனின் பேனா மை  செய்யும் விந்தையல்லவா  இது.

சிறுவர்களுக்கும், வாலிப வயதினருக்கும் மட்டுமா  கவியரசு பாடல்கள் புனைந்துள்ளார்.எல்லா வயதினருக்கும், எல்லா வித நிலையிலும் நாம் ஆறுதல் தேடிக் கொள்ள உதவியாய் பாடல்கள் வந்து விழுந்திருக்கின்றதே! வாழ்வின் ஓர் அங்கமான  சோகத்தையும் விடவில்லை கவிஞர் . சோகப் பாடல்களில் சோகத்தை பிழிந்ததோடு இல்லாமல்  ஆறுதலும் தரவல்லவர்  கவியரசர்.

காலம் ஒருநாள் மாறும் - நம்
கவலைகள் யாவும் தீரும்
வருவதை எண்ணி சிரிக்கின்றேன்
வந்ததை எண்ணி அழுகின்றேன்
சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் - நான்
அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.

கவலைகள் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து விடலாகாது என்பதை எவ்வளவு எளிதாய் காலம் மாறினால்  கவலைகளும் நீங்கும் என்பதில் அழகாய் விளக்குகிறார்.

சோதனைமேல் சோதனை போதுமடா சாமி
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி

என்கிறப் பாட்டை கேட்கும் போது மனம் கனத்துப் போவதைத் தடுக்க முடியவில்லை. சோதனைகள் பார்க்காத மனிதர்கள் உண்டா?  சவால்களும் வாழ்க்கையின் அங்கமே என்கிற ஆறுதல் உணர்வைத் தரும் பாடல்  . கண்டிப்பாக அவர் எதிர் நோக்கிய  சவால்களே இப்பாடலின் ஆதாரம் என்றே நான் நம்புகிறேன்.

கவிஞர் மரணத்தை  விட்டு விட்டாரா என்ன?. அதையும்  பாட்டிற்கு கருப்பொருளாக்கும் தைரியம் நம் கவியரசுக்கு மட்டுமே உண்டு என்று நினைக்கிறேன். அந்தப்பாட்டு எவ்வளவு பெரிய ஹிட் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.


வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
ஜனனம் என்பது வரவாகும்; அதில்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.

இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
இல்லை என்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

இந்த வரிகளில் சொன்னவை அத்தனையும் உண்மை தானே! மரணத்தைக் கூட லாவகமாய் கையாளும் தந்திர  வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்  கவியரசே  என்று சொல்லலாம் .

கண்ணதாசன்  பெயருக்கு ஏற்றார் போல் பக்தி மான் கூட." திருமால் பெருமைக்கு நிகரேது " என்கிற பாடலில் பெருமாளின் பத்து அவதாரங்களின் காரணத்தையும், அவதார மகிமையும்  இந்தப்பாடலில் ஒளிர்வதை கண்கூடு.இது போல் இன்னும் நிறைய பாடல்கள் பக்தி மனம் கமழ எழுதிவைத்துள்ளார் கவிஞர். அத்தனையும் எழுத இங்கே எனக்கு இடமில்லை.

கவிஞர் தேன் மழையாய் பொழிந்திருக்கும் பாடல்களில்  ஒரே ஒரு துளி  எடுத்து  சுவைத்ததில்  நான் பெற்ற இனிமையை இங்கே பகிர்ந்திருக்கிறேன். 


இந்தக் கட்டுரை வல்லமை மின்னிதழில் வெளியானது.


image courtesy--google.

Saturday 13 September 2014

விருது* கிடைத்தது !


நான் வலைப்பதிவு  எழுதுவது, இப்பொழுது  சற்றுக்  குறைந்து  விட்டது என்று சொல்லியது ,என்னுடைய டேஷ் போர்ட். பல காரணங்கள்.
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்....... என்று தான் சொல்ல வேண்டும்.

ஆமாம்..........  ஏதோ நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில்,  திருமதி  ரஞ்சனி நாராயணன்  அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம்  வந்திருந்தது. எனக்கு விருது கொடுக்கப்பட்டிருப்பதாக சொன்ன அந்த பின்னூட்டத்தை  சரியாக படிக்கக் கூட  இல்லை. அவர் சொல்லியிருந்த லிங்கிற்கு  ஓடி  விட்டேன்.  எனக்கு  நாட்டின் மிகப்பெரிய விருது வாங்கியதைப் போல் ஒரே மகிழ்ச்சி.

விருதை வாங்க அவர் தளத்திற்குப் போனேன் . விருதிற்கு  பெருமை சேர்க்கும் வலையுலக ஜாம்பவான்களுக்கு நடுவில் எனக்கும் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது .

எல்லாம் சரி . தலைப்பில் விருதிற்கு மேல் நட்சத்திரக் குறி இருக்கிறதே என்று நீங்கள் யோசிக்கலாம்.

இந்த விருது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது (*Conditions Apply)

விருதின் நிபந்தனைகளை திருமதி ரஞ்சனி குறிப்பிட்டிருந்தார்.

என்ன என்று படித்துப் பார்த்தேன்.....
உடனுக்குடன் நிறைவேற்றிக் கொண்டே வந்தேன்.

முதலில்,
விருதைப் பகிர்ந்து கொண்டவருக்கு நன்றி சொல்லி , அவர் தளத்திற்கு இணைப்பு கொடுக்க வேண்டும். மிக்க நன்றி ரஞ்சனி.
அவர் தளத்திற்கு இணைப்பு  இங்கே  ranjaninarayanan.wordpress.com கொடுத்து விட்டேன்.

அடுத்து,
விருதினை  தளத்தில் போட்டுக் கொண்டேயாக  வேண்டுமாம்.
கரும்புத் தின்னக் கூலியா ? போட்டுக் கொண்டு விட்டேன்.

அப்புறம்,
என்னைப் பற்றி 7 விஷயங்களை  சொல்ல வேண்டும்.
இதோ அதையும்  சொல்லி விடுகிறேன்,.
  • ஓய்வு  பெற்ற ஆசிரியை.
  • எழுத வேண்டும்  என்று ஆசை. முயற்சி செய்கிறேன்.
  • அதுவும் பத்திரிக்கைகளில் எழுத வேண்டும் என்கிற  பேரவா உண்டு..  முயற்சிக்கிறேன்.இன்னும் அந்த ஆசை நிறைவேறவில்லை. 
  • எழுதாத நேரங்களில் படித்துக் கொண்டிருப்பேன்.
  • இசையின் மேல் காதலே  உண்டு. ஆனால் அது  கேட்க மட்டுமே .
  • இனிய மனைவி, பொறுப்பான தாய். அது  மட்டுமல்ல  செல்லமான பாட்டியும் கூட .
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...........

பிறகு,
விருதினை  ஐந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதோ என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு விடுகிறேன். எனக்குத் தான் இது முதல் விருது. இவர்களுக்கு  இது மேலும் ஒன்று.

(உங்கள் பின்னூட்டங்களின் மூலமாக என்னை ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நன்றியைச்  சொல்லும் விதமாக  இந்த விருதினை  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சார்.. உங்களிடம் ஏற்கனவே இருக்கும் எண்ணற்ற விருதுகளுடன் இதையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.)



  • எங்கு சென்று  வந்தாலும் , அதைப் பற்றிய முழு விவரங்களை , நம்மோடு பகிர்ந்து கொள்ளும் திருமதி கோமதி அரசு.


  • தீதும் நன்றும் பிறர் தர வாரா, என்று சொல்லும் திரு. ரமணி .


அப்பாடி ........எல்லா நிபந்தனைகளும்   நிறைவேற்றியாச்சு.

இனிமேல் நானும் ஒரு Versatile Blogger .

இந்த விருதினை நான் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் , உங்கள் தளத்தில்  உங்களுக்குப்  பிடித்த நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லா நிபந்தனைகளும் நினைவில் இருக்கட்டும். அதிலும் முக்கியமாக அரட்டைக்கு வரச்  சொல்ல மறக்க வேண்டாம்.

திருமதி ரஞ்சனி  நாராயணனுக்கு மீண்டும் என் நன்றிகள் பல.


image courtesy--google.


  

Friday 5 September 2014

டாக்டரும், ஆசிரியரும்.
















 யார் இந்த டாக்டர் ?
ஆசிரியர் தினத்தன்று டாக்டர் பற்றி எழுதுகிறேனே ! இந்த டாக்டரின்  கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.......இல்லையில்லை .....மனத்தைத் தொடும்  கதை. நீங்கள் நெகிழ்ந்து போகப் போவது உறுதி.
அதுவுமில்லாமல் உங்கள் ஆசிரியர்களை நினைவிற்குக் கொண்டு வரும் என்பதில் சந்தேகமில்லை.

இதோ கதைக்கு வந்து விடுகிறேன். டாக்டர் தியோடர் பற்றியக் கதை இது. டெடி என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட இவர் சிறு வயதில்  எதிர் கொண்ட சவால்களுக்கு எப்படி அவர் ஆசிரியர்  உறுதுணையாக இருந்தார் என்பதை  நான் சொல்வதை விட  காணொளியைப பாருங்கள் உங்களுக்கேப் புரியும். நான் சொன்னால்  அதன்  சாரம் நீர்த்துப் போகும் அபாயம் உள்ளது.





 சிலருக்கு இந்தக்  காணொளி பார்த்ததுப் போல் தோன்றும். நானே சென்ற வருடம் இதைப் பதிவு செய்திருந்தேன். நிறைய நண்பர்கள் இதைப் படித்து  அவரவர் ஆசிரியர்களை  நன்றியுடன் நினைவு கூர்ந்திருந்தார்கள் .

ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக , யார் யாரெல்லாம் அவரவர் ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லியிருந்தார்கள்  என்று பார்க்கலாமா?( அவர்களுடைய பின்னூட்டத்தை அப்படியே காபி பேஸ்ட்
 செய்திருக்கிறேன்.)
திரு. ஸ்ரீ ராம்
ஆர் ஜே எர்னஸ்ட் - எனக்கு உடனே நினைவுக்கு வந்த என்னுடைய ஆசிரியர் பெயர். கண்ணில் நீரை வரவழைப்பது வெங்காயம் மட்டுமில்லை சில பழைய நினைவுகளும்தான்!! :))))

திரு.வை .கோபாலகிருஷ்ணன்.

ஒன்றாம் வகுப்பு: பட்டம்மா டீச்சர் [மடிசார் புடவையுடன்]
இரண்டாம் வகுப்பு: லெக்ஷ்மண வாத்யார்
மூன்றாம் வகுப்பு: கந்த சுப்ரமணிய வாத்யார்
நான்காம் வகுப்பு: ஐயங்கார் வாத்யார்
ஐந்தாம் வகுப்பு: நாடார் வாத்யார்
ஆறாம் வகுப்பு: N. சுந்தரம் வாத்யார்
ஏழாம் வகுப்பு: பட்டாபிராமன் சார்
எட்டாம் வகுப்பு: S.M. பசுபதி ஐயர்
ஒன்பதாம் வகுப்பு: V. துரைராஜ் வாத்யார்
பத்து + பதினொன்றாம் வகுப்புகள்: R. ஸ்ரீனிவாஸன் என்பவர் [ஆர்.ஸ்ரீ]


 திரு. Ramani
அருமையான காணொளி
எனக்கும்
மும்தாஜ்
சுப்ரமணியம்
ஆசிரியர்கள் நினைவுக்கு வந்து போகிறார்கள்
அவர்கள் குறித்த நினைவுகளில் சில நேரம்
மூழ்கிப் போகும்படியான காணொளிப்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
 திருமதி RanjaniNarayanan
எனக்கு எங்கள் தலமைஆசிரியர் திருமதி ஷாந்தா நினைவுக்கு வந்தார். அவர் பின்னால் மற்ற எல்லா ஆசிரியர்களும்!

அருமையான காணொளி வெங்காயம் உரிக்காமல் கண்களில் நீரை வரவழைத்து விட்டது.
முதல் வகுப்பில் இருந்து திறந்தவெளி பல்கலைகழகத்தில் படித்தவரை எனக்கு பிடித்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் வை,கோ சார்ப்பொல்.
ஜானகி டீச்சர், உமா டீச்சர், பிரேமா டீச்சர். ஞானஒளி டீச்சர் மிக மிக முக்கியமான அன்பான டீச்சர்கள்.
திரு. பால கணேஷ்
என் பள்ளிக்கால ஆசிரியர்கள் நினைவை வரவழைச்சுட்டீங்க டீச்சர் உங்கள் எழுத்தின் மூலம்! அருமை!

 .திருமதி.Tamizhmukil Prakasam
கண்களில் நீர் திரள்கிறது தோழி. எனது மாணவப் பருவமும், எனது ஆசிரியப் பணிக் காலமும் கண்களின் முன் நிழலாடின. எனக்கு கணிதப் பாடம் கற்பித்த என் தாய் தொடங்கி, எனது ஆங்கில ஆசிரியர் திரு.வரதன் அவர்கள், எனது தமிழ் ஆசிரியர் திருமதி.சரோஜா அவர்கள், எனது இயற்பியல் ஆசிரியர் திரு.ரகுநாதன் அவர்கள், எனது வேதியல் ஆசிரியர் திரு. சங்கரன் அவர்கள், எனது உயிரியல் ஆசிரியர் திருமதி.மனோரமா அவர்கள், அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

மேலே நண்பர்கள் குறிப்பிட்டுள்ள ஆசிரியர்களுக்கும்,  என் ஆசிரியர்களுக்கும்  ஆசிரியர் தினமான இன்று   நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எனக்கு ஆசிரியராயிருந்த திருமதி சீதா , திருமதி நளினி, திருமதி Betty,
திருமதி Fellow, திருமதி சுந்தரி, திருமதி இந்திரா, திருமதி லலிதா, திருமதி விஜயலட்சுமி , திருமதி கமலா..... ஆகிய  அனைத்து ஆசிரியைகளுக்கும்  நான் சொல்வது 
                                          
                                   " Thankyou Teachers."

 உங்கள் ஆசிரியர்களுக்கு...... நீங்கள் நன்றி சொல்லி விட்டீர்களா? இதோ இங்கே பின்னூட்டம்  வழியாக அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு  உங்கள் நன்றியை சொல்லலாமே!

image courtesy--google.
video courtesy---You tube.


உலகமெங்கும் Arattai

Flag Counter

எனது மின்னூல்